பட்டிபுரோலு (BHATTIPROLU) தென்னாட்டுப் பிராமி எழுத்துகள் முன்னுரை இணையவழி நண்பர் (கல்வெட்டுகளில் நாட்டமுடையவர்) அண்மையில் சென்னை அருங்காட்சியகம் சென்றபோது அங்கே காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த பட்டிபுரோலு பிராகிருதக் கல்வெட்டுகளைப் பார்த்துப் படத்தை அனுப்பியிருந்தார். பட்டிபுரோலு தொல்லியலில் கல்வெட்டுகளைப்பற்றிப் படிக்கையிலேயே, பிராமி எழுத்துகள் இந்திய நாடு முழுமையிலும் வழக்கில் இருந்தமையும், தென்னாட்டில் தமிழுக்கென்று தனியே பிராமி எழுத்துகள் வழக்கில் இருந்தமையும் அறிந்தோம். தென்னாட்டில் மிகப்பழைய பிராமி எழுத்துகள் ஆந்திரப்பகுதியில் குண்டூர் மாவட்டத்தில், தெனாலி வட்டத்தில் அமைந்துள்ள பட்டிபுரோலு என்னும் இடத்தில் கிடைத்துள்ளன. புத்த விகாரையும் தூபியும் குண்டூருக்கு அருகில் உள்ள ஊர் பட்டிபுரோலு. இதன் பழம்பெயர் பிரகதிபுர(ம்) இங்கு ஒரு புத்த தூபி இருந்துள்ளது. ஆந்திரப்பகுதியில் கட்டப்பெற்ற பழமையான புத்த தூபிகளில் இது ஒன்று என்று கருதப்படுகிறது. இங்குள்ள புத்த மதத்தைச் சேர்ந்த கட்டுமான எச்சங்கள் த்ற்போது மேடுகளாக உள்ளன. இதை விக்கிரமார்க்க கோட்டை திப்பா என்த் தற்போது மக்கள் அழைக்கிறார்கள். பாஸ்வெல் என்னும் ஆங்கிலேயர் கி.பி. 1870-இல் இங்கு வந்தபோதுதான் புத்த தூபி பற்றித் தெரியவந்துள்ளது. பின்னர், கி.பி. 1890-இல் தொல்லியல் துறைத் தலைவர் அலெக்சாண்டர் ரே என்பார் இங்கு அகழாய்வு செய்த பின்னரே இங்கு ஒரு புத்த சைத்தியம் இருந்த செய்தி வெளியானது. சைத்தியத்தில் இருந்த பொருள்களாக கற்பேழைகள் எழுத்துப் பொறிப்புகளோடு கிடைத்தன. இவ்வெழுத்துகள், அசோகனின் பிராமி எழுத்துகளுக்கும் முந்தியவை. சர்.வால்டெர் எலியட், இராபர்ட் சிவெல் ஆகிய ஆய்வறிஞர்களும் இங்கு அகழாய்வு செய்துள்ளனர். 20-ஆம் நூற்றாண்டில், 1969-70 ஆண்டுகளில் தொல்லியல் துறை ஆய்வதிகாரி ஆர். சுப்பிரமணியம் என்பவர் ஆய்வு செய்து, இங்கு விகாரையும், 65 அடி உயரமும், 148 அடி விட்டமும் உள்ள தூபியும் இருந்துள்ளதாகக் கண்டறிந்தார். பின்னர் அத் தூபி 18 அடியாகக் குறைந்தது. தூபியின் உச்சியில் சக்கரம் போன்ற அமைப்பு இருந்துள்ளது. குபிரகா என்னும் அரசன் காலத்திய துப்பி என்று அறியப்பட்டுள்ளது. தற்காலம், 2007-இல் இச்சின்னங்கள் பொது மக்கள் பார்வைக்கு விடப்பட்டன. பட்டிபுரோலு பிராமி எழுத்துகள் பட்டிபுரோலுவில் கிடைத்த கற்பேழைகளில் இந்த பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்டிருந்தன. இந்த எழுத்துகளஇலிருந்துதான் கன்னட, தெலுங்கு மொழி எழுத்துகள் தோற்றம் பெற்றன எனக் கருதப்படுகிறது. இக்கல்வெட்டின் மொழி பிராகிருதம் ஆகும். பிராகிருதம், சமற்கிருதத்துக்கு முன்னர் வழங்கிய மொழியாகும்.
கிருஷ்ணா மாவட்டத்திலுள்ள பட்டிபுரோலு (BHATTIPROLU) கிராமத்தில் கிடைத்த பிராமி எழுத்து, வட இந்தியாவில் வழக்கிலிருந்த அசோகர் பிராமி எழுத்துகளின் தென்னிந்திய வடிவ வகைக்கு எடுத்துக்காட்டாக விளங்கியது எனவும், இவ்வகை வடிவம் அசோகனின் கல்வெட்டு எழுத்துகளினின்றும் தனித்து இயங்கியதோடல்லாமல், கி.பி. 3-ஆம் நூற்றாண்டு அளவில் பல்வேறு முறைகளில் எழுதப்பெற்று வந்தது என்றும் பூலர் குறிப்பிடுகிறார். அதில் ஒரு கல்வெட்டுப்படமும் சில விளக்கங்களும் சி.சிவராமமூர்த்தி அவர்களின் நூலில் காணப்படுகின்றன. எழுத்துப்பொறிப்பு பிராகிருத மொழியில் எனத் தெரிகிறது. ஏனெனில், இக்கல்வெட்டில் உள்ள சொற்களுக்குச் சமமான சமற்கிருதச் சொற்கள், நூலில் குறிக்கப்பட்டுள்ளன. அந்தக் கல்வெட்டுப்படம் கீழ் உள்ளவாறு: பட்டிபுரோலு- பிராமிப் பொறிப்பு
கல்வெட்டின் பாடம் - நடுவில் உள்ளது: நெக3ம வசொ சகொ4 ஜதொ ஜபொ4 திஸொ ரெதொ அசிநொ ஷபி4கொ அக2க4 கெலொ கெஸொ மாஹொ ஸெட்டா சதிகொ ஒக்2பூ4லொ ஸொணுதரொ ஸமணொ ஸமணதாஷொ ஸாமகொ கமுகொ சீதகொ கல்வெட்டின் பாடம் - வட்டச்சுற்றில் உள்ளது: அரஹதி3நாநம் கோ3டி2யா மஜூஸ் ச ஷமுகொ ச தேந கம் யேந குபி3ரகொ ராஜா அகி பிராகிருதம் சமற்கிருதம் வச வத்ஸ ஜத ஜயந்த ஜப4 ஜம்ப4 திஸ திஸ்ய அக2க4 அக்சக்3ந ஸொணுதர ஸொணத்தர ஸமண ஸ்ரமண ஸமணதாஷ ஸ்ரமணதா3ஸ ஸாமக ஸ்யாமக அரஹதி3நா அரஹத3த்தா கல்வெட்டில் வரும் மேற்படிப் பெயர்கள் யாவும் ”நிக3ம” என்னும் குழுவைச் சேர்ந்தவர்களின் பெயர்கள். இவர்களே கொடையாளிகள். கொடைப்பொருள், CASKET AND BOX எனக்குறிக்கப்படுகிறது. பேழை எனக்கொள்ளலாம். குபி3ரகா என்பது அரசனின் பெயர். -------------------------------------------------------------------------------------------------------- து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை. அலைபேசி : 9444939156.