Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கீழடி நோக்கி….. துரை.சுந்தரம்


Guru

Status: Offline
Posts: 7329
Date:
கீழடி நோக்கி….. துரை.சுந்தரம்
Permalink  
 


 

கீழடி நோக்கி…..
 
முன்னுரை
 
கோவை வாணவராயர் அறக்கட்டளையினர், வரலாற்று ஆர்வலர்களை மாதந்தோறும் கொங்குப்பகுதியில் அமைந்துள்ள, வரலாற்றுச் சிறப்பும் தொடர்பும் உள்ள இடங்களுக்கு அழைத்துச் செல்வது  ”வரலாற்று உலா” என்னும் பெயரில் நடைபெற்றுவருகிறது. கடந்த 26-08-2018 ஞாயிறன்று நடைபெற்ற உலா -  இருபத்தோராவது பயணம் - கீழடியில் தற்போது நடைபெற்று வரும் அகழாய்வினைக் கண்டுவருகின்ற பயணமாக அமைந்தது. ஏறத்தாழ இருநூற்றைம்பது கி.மீ. தொலைவுக்கு மேல் பயணம் அமைய இருப்பதால், காலை எட்டு மணியளவில் புறப்படத்திட்டமிட்டு, எட்டரை மணியளவில் கோவையை நீங்கினோம். வழக்கமாக இது போன்ற வரலாற்றுலாவுக்குக் குழுமுகின்றவர் எண்ணிக்கையை விடக் கீழடிப்பயணத்துக்கு எண்ணிக்கை இருமடங்காக இருக்கவே, அறுபது பேர் பயணம் செய்யும் வகையில் பெரியதொரு பேருந்து ஏற்பாடானது. ஆர்வலர்கள் பெருகிக்கொண்டிருக்கிறார்கள்.
 
பயணம்
 
கோவை, பல்லடம், ஒட்டன்சத்திரம் ஆகிய ஊர்களைக் கடந்த பின்னர், திண்டுக்கல் அருகில் நாடு தழுவிய பெருவழியில் பேருந்து சென்றது. வழியில், சற்றே இளைப்பாறலும் தேநீர் அருந்துதலும். பிற்பகல் இரண்டு மணியளவில் மதுரை நகரை அடைந்தோம். வைகையில் ஆற்றோட்டம் இல்லை. சிற்றோடையாக ஆங்காங்கே ஓடாத நீர்.  கீழடிச் சாலையில் பயணம் தொடர்ந்தது. மதுரை நகரைக் கடந்து ஊரகப் பகுதியில் பேருந்து சென்றுகொண்டிருந்தது. உணவு வேளையும் கடந்ததால் அனைவரும் பசியின் வாட்டத்தில் இருந்தோம். ஊரகப்பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, வழியில், சிலைமான் என்னும் பெயரில் தொடர்வண்டிப்பாதை குறுக்கிட்டது. அதைக் கடந்து வயல்வெளிகளையும் தென்னந்தோப்புகளையும் கடந்து கீழடி கிராமத்தை அடைந்தோம். சிலைமான் ஊர், மதுரை மாவட்டத்துத் திருப்பரங்குன்றத்து மண்டலத்தில் அமைந்திருந்தாலும் அதனை அடுத்து எட்டு கி.மீ. தொலைவில் அமைந்துள்ள கீழடி சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தது. கீழடியில் அகழாய்வு நடைபெறும் இடம் ஒரு தென்னந்தோப்பாகும். தோப்பை அடைந்ததும், உணவு முடித்து அகழாய்வுக் குழிகளைப் பார்வையிட்டோம்.
 
 
கீழடி அகழாய்வுக் களம்
 
நாங்கள் சென்றது ஞாயிற்றுக் கிழமையாதலால் அகழாய்வுக் களத்தில் பணியேதும் நடைபெறவில்லை. ஓரிரு பெண் பணியாளர்கள் இருந்தனர். எங்கள் பயண மேலாளர் திரு. ஜெகதீசன் (கல்வெட்டு ஆய்வாளர்), தொல்லியல் துறை அலுவலரைத் தொடர்புகொண்டு பேசியிருந்ததால், ஆய்வுப்பணியில் உள்ள இளநிலை அலுவலர் ஒருவர் அங்கு வந்தார். நாங்கள் சென்ற நேரத்தில் மழை இல்லாவிடினும், அண்மையில் இப்பகுதியில் பெய்த மழை காரணமாகக் குழிகள் அனைத்தும் “தார்ப்பாலின்” போன்ற துணிகளால் மூடி வைக்கப்பட்டிருந்தன. இளநிலை அலுவலர் ஓரிரு குழிகளைத் திறந்து காட்டினார். ஒரு பகுதியில், பாத்தி பாத்தியாகப் பிரித்து ஆய்வுக்குழிகளில் எடுத்த பானைச் சில்லுகளைக் குவித்து வைத்திருந்தனர். ஒளிப்படம் எடுக்கத் தடை இருந்ததால் யாரும் ஒளிப்படம் எடுக்கவில்லை.  காட்சிகளை மனத்தில் பதித்துக் கொள்ள வேண்டியதாயிற்று. இளநிலை அலுவலர் கூறிய சில செய்திகள் வருமாறு:
 
                                           ஆய்வுக் களத்துக்குப் போகும் பாதை
IMG_20160529_141315.jpg
 
 
                                                     அகழாய்வு முகாம் - நுழைவிடம் 
P1130518.JPG

                                    
                                                              அகழாய்வு முகாம்

P1130519.JPG
 

                                                       அகழாய்வுக்குழிகள்
P1130494.JPG
 
 
IMG_20160529_141402.jpg
 
 
P1130454.JPG
 
 
                                                            பானை ஓடுகள்- பாத்திகளில்
P1130457.JPG
 
தற்போதைய பணியின்போது, மொத்தம் முப்பத்தாறு ஆய்வுக்குழிகள் தோண்டப்பட்டுள்ளன. கீழடி கி.மு. 3-ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 10-ஆம் நூற்றாண்டு வரையிலான கால எல்லையைச் சேர்ந்த சான்றுகளைக் கொண்டுள்ளது. முதலாம் இராசராசனின் நாணயங்கள் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. கீழடிப் பகுதி மக்களின் வாழ்விடமாக இருந்துள்ளது. தமிழ்நாட்டில் பெருபாலான பகுதிகளில் கிடைக்கும் கருப்பு சிவப்பு நிறப் பானை ஓடுகள் இங்கும் கிடைத்துள்ளன. இந்தக் கருப்பு சிவப்புப் பானைகளை 1500 வெப்ப அலகு வரையிலான வெப்பத்தில் சுட்டிருக்கிறார்கள். அப்போது, வைக்கோல் போன்ற எரிபொருளின் பயன்பாட்டால் கரிப்பொருள் படர்ந்து பானைகளின் உட்புறம் கருப்பு நிறத்தையும், வெளிப்புறம் சிவப்பு நிறத்தையும் பெற்றதாகக் கூறப்படுகிறது.  ஆய்வின்போது, உறை கிணறுகள் கிடைத்துள்ளன. (உறை கிணறுள்ள குழிகளைத்திறந்து எங்களுக்குக் காட்டினர்) வட்ட வடிவச் சுடுமண்ணாலான அந்த உறைகள் 90 செ.மீ. விட்டம் கொண்டவை. 180 செ.மீ. உயரம் கொண்டவை. ஆறு அடி ஆழத்துக்குள் அக்கால மக்களுக்கு நீர் கிடைத்துள்ளது. கீழடி வாழ்விடமென்றால். அருகிலுள்ள மணலூர் ஈமக்காடாக இருந்துள்ளது. 


                                                      கட்டிடப்பகுதிகள்
P1130463.JPG

 

P1130470.JPG

 

 
உறை கிணறுகளின் பகுதிகள்
P1130515.JPG
 
 
                                                 அடுப்பு போன்ற தொழிற்கூட அமைப்புகள்
P1130488.JPG



P1130491.JPG
 
செங்கற்களாலான, நான்கடிக் கட்டுமானம் கிடைத்துள்ளது. செங்கற்கள், தற்போதுள்ள செங்கற்கள் மூன்றினை உள்ளடக்கும் அளவு பரப்பில் பெரியவை. கீழடி நாகரிகம், “கார்பன்” கணக்கீட்டு முறையில் 2200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என அறியப்பட்டுள்ளது. ”கிரிஸ்டல்” (CRYSTAL), ”அகேட்” (AGATE)  ஆகிய வகைக் கற்களை ஆபரணக்கற்களாகப் பயன்படுத்தியுள்ளனர்.  சென்ற முறை நடந்த அகழாய்வின்போது, ஆதன், திஸன், சேந்தன் ஆகிய பெயர்கள் பிராமி எழுத்தில் பொறித்த பானை ஓடுகள் கிடைத்தன. தற்போதும் எழுத்துப்பொறிப்புள்ள பானைப்பகுதிகள் கிடைத்துள்ளன.
 
கொந்தகை என்னும் குந்திதேவிச் சதுர்வேதிமங்கலம்
 
பயண அமைப்பாளரும் கல்வெட்டு ஆய்வாளருமான திரு. ஜெகதீசன் கீழடியைப் பற்றிக் குறிப்பிடுகையில், கீழடியில் உள்ள அர்ச்சுனேசுவரர் கோயில் கல்வெட்டுகளில், தற்போது கீழடியை அடுத்துள்ள கொந்தகை என்னும் பெயரில் உள்ள கிராமம் கி.பி. 12-13-ஆம் நூற்றாண்டில், குந்திதேவிச் சதுர்வேதிமங்கலம் என்னும் பெயரில் வழங்கியது என்று கூறினார்.  “வேளூர்க் குளக்கீழ் நாட்டுக் குந்திதேவிச் சதுர்வேதிமங்கலம்” என்பது கல்வெட்டு வரி.  இந்தக் குந்திதேவிச் சதுர்வேதிமங்கலம் என்னும் பெயர் காலப்போக்கில் சதுர்வேதிமங்கலம் என்னும் அடைமொழியை இழந்து மருவிக் கொந்தகையாக மாற்றம் பெற்றுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
 
மேலே குறிப்பிட்டவாறு, அகழாய்வு நடக்கும் பகுதிகளையும், குழிகளில் காணப்பட்ட உறைகிணறுகள் மற்றும் செங்கல் கட்டுமான எச்சங்களையும் ஒளிப்படம் எடுக்கத் தடையிருந்ததால் இம்முறை நாங்கள் சென்று பார்த்ததை இப்பயணத்தில் கலந்துகொள்ளாத நண்பர்களோடும், உறவினர்களோடும் அளவளாவிப் பகிர்ந்து கொள்ள இயலாத  ஒரு சூழ்நிலை ஏற்பட்டது. ஆனால், இந்தியத் தொல்லியல் ஆய்வுத்துறை சார்பாக 2016-ஆம் ஆண்டு மே மாதம் கீழடியில் அகழாய்வு நடந்துகொண்டிருந்தபோது, இதே வரலாற்று உலாவில் நாங்கள் கலந்துகொண்டோம். அப்போது, ஆய்வுப் பொறுப்புத் தலைமை அலுவலரான அமர்நாத் இராமகிருஷ்ணன் எங்கள் குழுவினருக்குத் தாமே அகழாய்வு பற்றிய செய்திகளை எடுத்துரைத்தார். நேரடியாகக் கண்ணுற்ற காட்சிகளைப் படம் எடுத்துக்கொள்ளும் வாய்ப்பும் கிட்டியது. அகழாய்வுக்குழிகளின் மண்ணடுக்குகள் பல்வேறு காலச் சுவடுகளைத் தம்முள் வைத்துக்காட்டியதுபோல், ஒரு வரலாற்று நிகழ்வின் நினைவுகளை நெடுங்காலம் தேக்கிவைத்து வேண்டும்போதெல்லாம், நம் நினைவடுக்கின் மேற்புறத்துக்குக் கொணர்ந்து மகிழவும், நம் வழித்தோன்றல்களும் அவர்கள் காலத்தில் கண்டு மகிழவும் காட்சிப்படங்கள் நம்மிடம் இருப்பதில் ஒரு பெருமிதம்!  அந்த ஒளிப்படங்களை இப்போது இக்கட்டுரை வாயிலாகப் பகிர்ந்துகொண்டுள்ளேன்.  அமர்நாத் அவர்கள், வேண்டிய அளவு, நாளிதழ்கள் வாயிலாகவும், காணொளிகள் வாயிலாகவும் தமிழகத்தின் தொன்மைச் சான்றுகளை எளிய மக்களும் அறிந்துகொள்ளும் வகையில் செயலாற்றியதால் கீழடி பற்றிய பல்வேறு செய்திகளும் ஏற்கெனவே எல்லாரும் அறிந்தவை என்பதில் ஐயமில்லை. இருப்பினும், தற்போதைய பயணத்தில் ஒளிப்படம் எடுக்க இயலாத குறையைப் பழைய படங்களைக்கொண்டு போக்கிக்கொள்ளலாம் என்ற கருத்தில் அப்படங்களை மேலே பகிர்ந்துகொண்டுள்ளேன்.
 
 


__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

ஆய்வுச் செய்திகள்
 
ஆய்வுப் பொறுப்புத் தலைமை அலுவலரான அமர்நாத் இராமகிருஷ்ணன், தொல்லியல் துறை அறிஞர்களான சாந்தலிங்கம், வேதாசலம் ஆகியோர் கீழடி ஆய்வு பற்றிப் பகிர்ந்துகொண்ட சில செய்திகளையும் காண்போம்.  ஒரு நதிக்கரை நாகரிகத்தைப் பற்றி விரிவாக ஆராய்வதன்மூலம் தமிழகத்தின் வரலாற்றை அறியமுடியும் என்ற நோக்கத்துடன் இந்த ஆய்வு தொடங்கப்பட்டது.  மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களில், வைகை ஆறு தொடங்கும் வள்ளிமலையிலிருந்து அது கடலில் கலக்கும் ஆற்றங்கரை வரை உள்ள 209 கி.மீ. தொலைவு நீளும் பரப்பில், ஆற்றுக்கு இருபுறமும் 8 கி.மீ.  தொலைவுப் பரப்பில் அமைந்துள்ள அனைத்து ஊர்களையும் ஆய்வு செய்து, கிட்டத்தட்ட 293 இடங்களில் பல்வகை ஆதாரங்களையும் கண்டுபிடித்து ஆவணப்படுத்தி இறுதியாகக் கீழடிப்பகுதி தெரிவு செய்யப்பட்ட ஒரு பெரிய திட்டப்பின்னணி கொண்டது இந்த ஆய்வு. 110 ஏக்கர் நிலப்பரப்பும், நாலரை கிலோ மீட்டர் சுற்றளவுள்ள ஊர் - மக்கள் வாழ்விடப்பகுதி – ஆய்வுக்கான இடமாகக் கிடைத்தது மிக அரிதானது. அதுவும், மதுரைக்கருகில் 15 கி.மீ. தொலைவு என்பது கூடுதல் நிறை. மதுரையைப் பற்றி ஆய்வு செய்ய இந்த இடம்தான் தகுதியான இடம். முதல்கட்ட ஆய்வின்போதே நிறைய ஆதாரங்கள் கிடைத்தன. ஒரு நகரம் இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இரண்டு முறை நடந்த ஆய்வுகளின்போதும் மொத்தம் 102 குழிகள் தோண்டப்பட்டன. தமிழ்நாட்டிலேயே முதன்முறையாகக் கட்டிடப்பகுதிகள் கிடைத்த இடம் கீழடி என்றுதான் கூறவேண்டும்.   


                          அமர்நாத் இராமகிருஷ்ணன் அவர்கள்-விளக்கம் தருதல்
P1130501.JPG

P1130510.JPG


                        தற்போது மழை காரணமாக மூடி வைத்த குழிகள்-படம் உதவி: தினமலர்
Keezhadi-Dinamalar%2Bphoto.jpg
கீழடியின் முதன்மைக் கண்டுபிடிப்பு கட்டுமானம் ஆகும். சதுரம், செவ்வகம் ஆகிய வடிவில் கட்டிடப்பகுதிகள் கிடைத்துள்ளன. இவற்றைத்தவிர வடிகால்களும், சுடுமண்ணால் செய்யப்பட்ட குழாய்களும் குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்பு. கட்டிடங்கள் சங்க காலத்தொடர்புடையவை. ஹரப்பாவுக்கு நிகராகக் கருதப்படுகின்றன. சீராக அடுக்கப்பட்ட செங்கற்களால் ஆன கட்டிடப்பகுதிகள். செங்கற்களை இணைக்கக் களிமண்ணைப் பயன்படுத்தியுள்ளனர். குறிப்பிட்டுச் சொல்லும் வகையில் தொட்டிகள் கிடைத்துள்ளன. தொட்டிகளோடு சேர்ந்த அடுப்புகளும் உண்டு. தொழிற்சாலை போன்ற அமைப்பு இருந்துள்ளதை இவை சுட்டுகின்றன எனலாம்.
 
அடுத்து, எழுத்துச் சான்றுகள். எழுத்துப் பொறிப்புகள் உள்ள பானைப் பகுதிகள் கிடைத்துள்ளன. ”முயன்”  என்னும் தூய தமிழ்ப் பெயரும், ”திஸன்”  என்னும் பிராகிருதப்பெயரும் மற்றும் ”சேந்தன் அவதி”  என்னும் பெயரும் பொறிக்கப்பட்ட பானைகள் குறிப்பிடத்தக்கன. இவை கி.மு. 2-ஆம் நூ.ஆ. -  கி.பி. 2-ஆம் நூ.ஆ. காலத்தைச் சேர்ந்தவை.
 
வரிச்சியூர் சமணக் குகைத்தளமும் குடைவரைக்கோயிலும்
 
கீழடியில் அகழாய்வுப்பகுதியைப் பார்வையிட்டு ஊர் திரும்பும் வேளை மாலைப் பொழுதாகியிருந்தது. அன்று முழுதும் மதுரையை நெருங்கும்போதும், கீழடியைச் சென்றடையும் வரையும் வானிலையில் வெப்பமே நிலவியது. ஆனால் கீழடியை விட்டு அகலும்போது மேகங்கள் கவிந்து மாலைப்பொழுதின் ஒளியையும் மங்கச் செய்தன.  எந்த நொடியும் மழை வரலாம் என்னும் சூழ்நிலை. வரலாற்று உலா அமைப்பாளர் ஏற்கெனவே, உலாத் திட்டத்தில் நேரம் கிடைத்தால் வழியில் உள்ள வரிச்சியூரைக் கண்டு திரும்பலாம் எனக்கூறியிருந்தார். வரிச்சியூர் என்னும் ஊர், பொதுமக்கள் பார்வையில் பலருக்கும் தெரிந்திராத ஓர் ஊர். தொல்லியல் பற்றிச் சிறிது தெரிந்தவர்க்கு அது வரலாற்றுச் சிறப்பு மிக்க ஊர். அங்கு சமணத்துறவிகள் தங்கியிருந்த குகைத் தளம் உள்ளது. தமிழின் தொல்லெழுத்தான தமிழி (தமிழ் பிராமி) எழுத்துகள் குகைத்தளத்தின் புருவப்பகுதியில் பொறிக்கப்பட்டுள்ளன. 1908-ஆம் ஆண்டு இந்த பிராமிக் கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டு இந்தியத் தொல்லியல் ஆண்டறிக்கையில் வெளியிடப்பட்டன. இவை தவிரப் பாண்டியர் காலக் குடைவரைக் கோயில் ஒன்றும் உள்ளது. இத்துணைச் சிறப்புள்ள இடத்தைப் பார்த்துவிட்டே ஊர் திரும்பவேண்டும் என்னும் ஆவல் அனைவர்க்கும் ஏற்பட்டது. இவ்வூர், மதுரையிலிருந்து சிவகங்கை செல்லும் பாதையில் அமைந்திருந்ததால், கீழடியிலிருந்து  திரும்பும் வழியில் இவ்வூரை எளிதில் அடையமுடிந்தது. (கீழடியும் சிவகங்கை செல்லும் வழியில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது)
 
கீழடியிலிருந்து வரிச்சியூர் வருவதற்குள் மழை பெய்யத் தொடங்கி, வரிச்சியூர் குடைவரைக்கோயிலை அடைந்ததும் மழை வலுக்கத்தொடங்கியது. எதிர்பாராமல் ஒரு தடை. போதிய வெளிச்சமும் இல்லை. மழையினூடே, குடைவரைக் கோயிலையும், குகைத்தளத்தையும் பார்த்து மகிழ்ந்தோம். குடைவரைக் கோயில் சாலையின் ஓரத்திலேயே அமைந்துள்ளது. மதுரையிலிருந்து 15 கி.மீ. தொலைவு என்னும் குறிப்பைத் தாங்கிய சாலைக்கல் ஒன்றும் அருகிலேயே இருந்தது. இப்பகுதி குன்றத்தூர் என்பதாகத் தொல்லியல் துறையினர் வைத்துள்ள செய்திப்பலகை குறிப்பிடுகிறது. இக்கோயில் உதயகிரீசுவரர் கோயில் என வழங்கப்படுகிறது. குன்றின் கிழக்குச் சரிவில் கிழக்கு நோக்கி ஞாயிறு தோன்றும் திசையில் அமைந்துள்ளதால் இப்பெயர் பெற்றது. குன்றுப்பகுதியைக் குடைந்து எழுப்பப் பெற்ற கருவறையில் ஒரு சிவலிங்கத் திருமேனி சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது. தனிக்கல்லில் வடித்து நிறுவப்படாமல் பாறையைக்குடையும்போதே, சிவலிங்க வடிவத்தை அமைத்துச் சுற்றிலும் கருவறை அமையுமாறு குடைந்திருக்கிறார்கள். இதே அமைப்பைக் கழுகுமலையில் உள்ள வெட்டுவான் கோயிலிலும் காணலாம். இக்கோயில் கி.பி. எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியர் பணியாகக் கருதப்படுகிறது. கருவறைக்கு வெளியே ஒரு சிறிய முக மண்டப அமைப்பும், அதன் இரு புறங்களிலும் இரண்டு வாயிற்காவலர் (துவார பாலகர்) சிற்பங்களும், இன்னொரு பக்கப்பகுதியில் பிள்ளையார் சிற்பம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளன. 

                                                    வரிச்சியூர் குடைவரை - சில தோற்றங்கள்
P1010791.JPG
 
 
P1010783.JPG
 
                                                   தொல்லியல் துறையின் அறிவிப்புப் பலகை
P1010777.JPG


                                                       குடைவரைப்பாறை-சிவலிங்கத் திருமேனி
Varichiyur%2BKudaivarai%2BKoil4.JPG
 
                                                    சமணக் குகைத்தளம் - சில தோற்றங்கள்
P1010792.JPG
 
 
P1010794.JPG



P1010795.JPG



P1010806.JPG



                                              கல்வெட்டு அமைந்துள்ள நீர் வடி விளிம்புப்பகுதி

P1010807.JPG
 
மழையில் நனைந்துகொண்டே  குகைத்தளத்துக்குச் சென்றோம்.  குன்றின் சரிவுப்பாறை பாம்புபோல் நீண்டிருந்த நிலையில் நிலத்தை நோக்கிக் கவிந்து குகையமைப்பாய் மாறியிருந்தது.  பாறையின்  மேற்பகுதியில் மழை நீர் குகையின் உட்புறம் நுழையாமல் வடிந்து போவதற்காக நீர்வடி விளிம்பு வெட்டப்பட்டிருந்தது. இந்த விளிம்புகளின் மேற்புறமும் கீழ்ப்புறமும் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன. மொத்தம் மூன்று கல்வெட்டுகள். மூன்றும் கி.பி. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை.  கல்வெட்டுகள் பார்வைக்குத் தெளிவாகப் புலப்படவில்லை. தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் வெளியீடான “தமிழ்-பிராமி கல்வெட்டுகள்” நூலில் உள்ள கல்வெட்டுப் பாடங்களையும் விளக்கங்களையும் கீழே காணலாம்.
 
முதல் கல்வெட்டு:
 
ப(ளி)ய் கொடுபி…….
 
இப்பள்ளியை அமைத்தவரின் பெயர் சொல்லப்படுகிறது. ஆனால், கல்வெட்டின் இறுதிப்பகுதி சிதைந்துவிட்டதால் பெயரைத் தெரிந்துகொள்ள இயலவில்லை.
 
இரண்டாம் கல்வெட்டு:
 
அடா . . .  றை ஈதா வைக . . . ஒன் நூறு
 
இப்பள்ளிக்கு நூறு கலம் நெல் வழங்கப்பட்டமையைக் கல்வெட்டு குறிக்கிறது. கொடை வழங்கியவரின் பெயர் சிதைவுற்றிருக்கலாம். ’ஈதா’ என்ற சொல் மகிழ்ச்சி விளிச்சொல்லாகக் கருதப்படுகிறது.
 
மூன்றாம் கல்வெட்டு:
 
இளநதன் கருஇய  நல் முழ உகை
 
இச்சிறந்த (நல்ல) குகை இளநதன் என்பவரால் குடைவிக்கப்பட்டது என்பது இதன் பொருள்.
 
 
 
 
முடிவுரை
 
மதுரையை விட்டு அகலும் வரை மழையும் எங்களுடன் பயணம் செய்தது. சங்ககாலத்தை எட்டிப்பார்த்த ஓர் உணர்வுடன் கோவை திரும்பினோம். ஊர் திரும்ப நள்ளிரவாயிற்று என்பது ஒரு பொருட்டாகத் தெரியவில்லை. வரலாற்றை அறிந்துகொள்வோம்; வரலாற்று எச்சங்களைப் பாதுகாப்போம் என்ற எண்ணம் மனத்தில் நின்றது.
 
 
 
 
 துரை.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர்,  கோவை.
அலைபேசி:  9444939156
.
 
 


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard