Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: புறநானூற்றில் அந்தணரும் வேதமும் ! – 1 BY ச.நாகராஜன்


Guru

Status: Offline
Posts: 7474
Date:
புறநானூற்றில் அந்தணரும் வேதமும் ! – 1 BY ச.நாகராஜன்
Permalink  
 


 புறநானூற்றில் அந்தணரும் வேதமும் ! – 1                         BY ச.நாகராஜன்                        

சங்க இலக்கிய நூல்களில் ஒன்றான புறநானூறு 158 புலவர்களால் பாடப்பட்ட 4  அடி முதல் 40 அடிகள் வரி கொண்ட நானூறு பாடல்களைக் கொண்ட அழகிய நூல். இதில் சங்க காலத் தமிழர்களின் பொதுவான வாழ்க்கை முறை, நம்பிக்கை, சடங்குகள் ஆகியவற்றைக் காணலாம். முக்கியமாக தமிழர்களின் வீரம், அனைவரும் வாழ வேண்டும் என்ற மிகச் சிறந்த உயர்ந்த கொள்கை, கல்வி, கொடை, அறப் பண்புகள் ஆகியவை பற்றி நேரடியாகத் தெரிந்து கொள்ளலாம். மன்னர்களைப் பற்றிய வியத்தகு செய்திகள் சுவையானவை. அதைப் பாடியவர்களோ தமிழின் அருமைச் செல்வங்கள் என்பதையும் உணரலாம்.

  மிக உயரிய பண்புகள் உடையவர்களே மன்னனாக இருக்க முடியும் என்பதும் அவனது அறம் கூறும் அவையில் ஆன்றவிந்தடங்கிய  கொள்கைச் சான்றோருக்கே முதலிடம் என்பதும், ப்ழி எனின் உயிரையும் கொடுத்து அதை நீக்குவர், புகழ் எனின் உலகையும் கொடுத்து அதைக் கொள்வர் என்பன போன்ற் செய்திகள் நம்மை மெய் சிலிர்க்க வைக்கும்.

 அந்தப் பழைய காலத்தில் அந்தணருக்கும் அவர்க்ள் ஓதும் ஆதிநூலாம் வேதத்திற்கும் கொடுக்கப்பட்ட முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளலாம்.ஏராளமான யாகங்கள் மக்களின் நலனுக்காக மன்னனால் செய்யப்பட்டதையும் பாடல்கள் தெரிவிக்கின்றன.

 மன்னர்களைப் பற்றிய செய்திகளைத் தனிக் கட்டுரைகளில் படிக்கலாம்.

 நமது ஆய்வுக்கான கருப்பொருளுக்கு உரித்த பாடல்கள் என்ற விதத்தில் புறநானூறில் 2,15,26,93,166,224,361,362,400 ஆகிய ஒன்பது பாடல்கள் உள்ளன. இரு பாடல்களை இந்தக் கட்டுரையில் காணலாம்.வேதம் அந்தணர் பற்றிய செய்திகளை மட்டும் இங்கு ஆய்வுக்கு எடுத்துக் கொள்வோம்.

 

பாஅல் புளிப்பினும் பகல் இருளினும்

நாஅல் வேத நெறி திரியினும்

திரியாச் சுற்றமொடு முழுது சேண் விளங்கி

நடுக்கின்றி நிலியரோவத்தை – அடுக்கத்து

சிறுதலை நவ்விப் பெருங் கண் மாப் பிணை

அந்தி அந்தணர் அருங் கடன் இறுக்கும்

முத்தீ விளக்கின் துஞ்சும்

பொற்கோட்டு  இமயமும் பொதியமும் போன்றே!  புறநானூறு பாடல் 2 (வரிகள் 17 முதல் 24 முடிய)

 முரஞ்சியூர் முடிநாகராயர்  சேரமான் பெருஞ்சோற்று உதியஞ் சேரலாதனைப் புகழ்ந்து பாடிய பாடலில் வரும் வரிகள் இவை.

 பால் புளிக்கலாம். பகல் இரவாகலாம் நான்கு வேத நெறியும் திரிந்து போகலாம், ஆனால் உன்னைச் சேர்ந்தோர் மாற மாட்டார்கள். ஒழியாது நெடுங்காலம் விளங்கி துளக்கமின்றி நிற்பாயாக! சிறிய தலை, பெரிய கண் கொண்ட பெண் மான்கள், அந்தணர்கள் அந்தி வேளையில் செய்யும் கடமையில் ஆகுதியைச் செய்யு எழும் முத்தீ விளக்கில் உறங்கும். பொற்சிகரங்களை உடைய இமயமும் பொதியமும் போல நீ நீடூழி வாழ்வாயாக!

 இதில் வேதநெறி ஒருநாளும் திரிந்து போகாது என்பதையும் அந்தணர் மாலை சந்தியாகாலத்தில் ஆற்றும் கடமையைப் பற்றியும் அழகுறச் சொல்கிறார் புலவர். ஆகுதியைச் சொரியும் முத்தீ பற்றிய செய்தியும் இங்கு சொல்லப்படுகிறது. இமயமும் பொதியமும் ஒரே பாடலில் அடுத்தடுத்து வருவது சங்க இலக்கியம் சுட்டிக் காட்டும் பாரத தேச ஒருமைப்பாட்டைச் சுட்டிக் காட்டுகிறது.

 பொதியமும் ஆல்ப்ஸும் போல் வாழ்க என்று சொல்லவில்லை. ஒரே தேசத்தில் இருக்கும் போற்றப்படத் தக்க இரு மலைகள் நீடூழி காலம் இருப்பது போல நீ புகழுடன் வாழ்வாயாக என்கிறார் சங்கப் புலவர். அவர் நாக்கு தங்க நாக்கு. அந்த மன்னவன் அழியாமல் இன்றும் நம் உணர்விலும் உயிரிலும் தமிழ் வழியே  கலந்து நிற்கிறான்!

 பண்டு தொட்டு இருந்து வரும் புகழத் தக்க நல்ல பழக்கங்களே உண்மையே பேசும் புலவர் நாக்கில் வந்து துள்ளி விழும் என்பதற்கான எடுத்துக்காட்டுப் பாடலும் ஆகும் இது!

 இந்தப் பாடலில் ம்காபாரத சம்பவமும் வருகிறது. அதை ஆய்வின் உரிய இடத்தில் காண்போம்.இன்னொரு பாடலைக் காண்போம்:பாடல் 93இல்  வரும் வரிகள் இவை:

 அறம்புரி கொள்கை நான்மறை முதல்வர்

திறம்புரி பசும்புற் பரப்பினர் (வரிகள் 7,8)

 இங்கு அறத்தை விரும்பிய கொள்கையை உடைய நான்குமறைகளை உடைய அந்தணர் நல்ல கூற்றிலே பொருந்திய பசுமையான தர்ப்பைப் புல்லைப் பரப்பினர் என வருகிறது.அதியமான் நெடுமான் அஞ்சியின் வீரத்தைப் போற்றிப் பாடும் பாடலில் வரும் வரிகள் இவை.

 அந்தணர்கள் வாழ்க்கை என்பதே அறத்தைப் போற்றி கடைப்பிடிக்கும் வாழ்க்கை என்பது அந்தக் காலத்திலேயே தர்ப்பையைப் பயன்ப்டுத்தும் பயன்பாடு இருந்ததும் இதிலிருந்து தெரிய வருகிறது.

 இன்றும் அந்தணர் பவித்ரம், கூர்ச்சம் ஆகிய தர்ப்பையிலான விசேஷ பசும்புல்லைப் பயன்படுத்துவது தொன்று தொட்டு இருந்து வரும் பழைய பண்பாட்டுச் சடங்குகள் அறுதலின்றித் தொடர்கிறது என்ற வியப்பூட்டும் செய்தியை விளக்குகிறது.

 இந்த அந்தணர், அற வாழ்க்கை, தர்ப்பைப் பயன்பாடு என்பதெல்லாம் தமிழர் வாழ்க்கை ஏற்றுக் கொண்ட ஒரு அங்கம். அது பொய்யில் புலவர்கள் போற்றும் பொருளாக இருந்ததையும் சங்க இலக்கியம் உணர்த்துகிறது.

 இரண்டு பாடல்களிலேயே சில வரிகளிலேயே இவ்வளவு செய்திகள். இன்னும் சில பாடல்களை அடுத்துக் காண்போம்.



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

புறநானூற்றில் அந்தணரும் வேதமும் ! – 2     ச.நாகராஜன்

 சங்ககாலத்தில் வாழ்ந்த அற்புதமான ஒரு பெரும் மன்னனைப் பற்றிய சுவையான பல செய்திகளைத் தரும் பாடல் புறநானூறில் உள்ள 15ஆம் பாடல்.

 பாடியவர் நெட்டிமையார். பாடப்பட்ட பாட்டுடைத் தலைவனோ  மாமன்னன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி. பெயரே இம்மன்னனின் பெயரே புகழுக்கான காரணத்தை விளக்குகிறது.

 பல யாகங்கள் செய்த அரும் புகழைப் பெற்ற பெரு வீரன் இவன். பாடலில் வரும் வரிகள் இவை:-

  புரையில்

நற்பனுவ னால்வேதத்

தருஞ்சீர்த்திப் பெருங்கண்ணுறை

நெய்ம்மலி யாவுதி பொங்கப் பன்மாண்

வீயாச் சிறப்பின் வேள்வி முற்றி

யூப நட்ட வியன்களம் பலகொல் ?  (வரிகள் 16 முதல் 21 வரை)

  புரையில் நற் பனுவல் நால் வேதம் என்பதன் மூலம் ஒப்புயர்வில்லாத நல்ல அற நூலாகிய நான்கு வேதங்களாகிய ரிக். யஜுர், சாமம், அத்ர்வணம் ஆகியவை சுட்டிக் காட்டப்பட்டு  புகழப்படுகிறது

  அருஞ்சீர்த்தி என்று  மீண்டும் சொல்லப்படுவதால் அருமை வாய்ந்த புகழுக்குரிய யாகங்கள் என்பது சொல்லப்படுகிறது.

 யாகங்களின் பெருமையானது அடுத்து, “பெருங்கண்ணுறை நெய்ம்மலை ஆஹுதி பொங்க என்பதால் சுட்டிக் காட்டப் படுகிறது. ஆல், அரசு, அத்தி, இத்தி, மா, பலாசு, வன்னி, நாயுருவி,கருங்காலி ஆகிய ஒன்பது வகை சுள்ளிகள் சமித் என்பப்படும். இவை நெய்யுடன் கூடி ஹோம குண்டத்தில் இடப்படும்.

 பல மாண் என்பதால் பல மாட்சிமை உடைய என்பதும் வீயாச் சிறப்பு என்பதால்  குறைவில்லாத அழியாச் சிறப்புடன் கூடியது என்பதும் சுட்டிக் காட்டப்படுகிறது.

  வேள்வியில் யாக யூபங்கள் நடப்படுவது வழக்கம். அப்படிப்பட பல யாகங்களை நடத்திய யாகசாலைகள் பலவோ என புலவர் வியக்கிறார்.

 அவனது வீரச் செயல்களை அடுக்கிய புலவர் தருமச் செயல்களை அடுக்கிக் கூறும் வகையில் இப்படிப் பொழிந்து தள்ளுகிறார்.

 மிகுந்த புகழை உடைய நால் வகை வேதங்கள் கூறும் வேள்விகள் பலவற்றை நடத்தி முடித்து விட்டாயோ என புலவர் வியந்து பாடுகிறார். இந்த மன்னனின் புக்ழ எழுதி  மாள முடியாது.

  யாகசாலைகள் பற்றிய விரிவான கட்டுரைகளை திரு ச.சுவாமிநாதன் எழுதியுள்ளார். அவற்றை மீண்டும் இங்கு விளக்கத் தேவை இல்லை. அதை இக்கட்டுரையின் தொடர்ச்சி விளக்கமாகப் படித்துணர்க.

  இன்னொரு பாடல். தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் என்ற புகழ் பெற்ற பாண்டிய மன்னனைப் போற்றி புலவர் மாங்குடி மருதனார் பாடிய பாடல் இது.

 பாடல் எண் 26. அதில் வரும் வரிகள் இவை:

 போர்ச் செழிய

ஆன்ற கேள்வி அடங்கிய கொள்கை

நான்மறை முதல்வர் சுற்றமாக

மன்னர் ஏவல் செய்ய மன்னிய

வேள்வி முற்றிய வாய்வாள் வேந்தே

நோற்றோர் மன்ற நின் பகைவர் நின்னொடு

மாற்றார் என்னும் பெயர் பெற்று

ஆற்றார் ஆயினும் ஆண்டு வாழ்வோரே.                                                             (வரிகள் 11 முதல் 18  முடிய)

 போர்ச் செழிய என்று மன்னனை விளிக்கும் புலவர் அவர் கடும் போரில் பகைவனை வாட்டுபவன் என்பதைச் சுட்டிக் காட்டுகிறார்.

 அவனுக்குச் சுற்றம் யார்?

 ஆன்ற கேள்வி அடங்கிய கொள்கையோர் தான் சுற்றம். மிகச் சிறப்பான வேதத்தில் உள்ள அடங்கிய” – அனைத்தையும் கொண்டுள்ளவர்களை அவன் சுற்றமாகக் கொண்டவன்.

 நான்மறை முதல்வர் என்பதால் நான்கு வேதங்களிலும் வ்ல்ல அந்தணர்கள் என்பது பெறப்படுகிறது.

  மன்னர் ஏவல் செய்ய என்பதால் நெடுஞ்செழியனுக்கு ஏவலாளர்கள் பல  மன்னர்களே என்பது தெரிய வருகிறது.

 வேள்வி முற்றியவன் அவன். பல யாகங்களைச் செய்து முடிந்த முடிபைக் கண்டவன் அவன்.

  வாய் வாள் என்பதால் அவனது வாள் ஒரு நாளும் தோல்வியைக் காணாத வாள் என்பது சுட்டிக்  காட்டப்படுகிறது.

 அப்படிப்பட்ட மன்னவனை எதிர்த்துத் தோற்ற பகைவரும் கூட, ‘உன்னிடம் பொருதி நிற்கும் பெருமை பெற்றதால் அவர்களும் நீடு வாழ்வர் என்று கூறி அற்புதமாகப் பாடலை முடிக்கிறார் புலவர்.

 இன்னும் ஒரு அருமையான பாடல் 166ஆம் பாடல். இதைப் பாடியவர் ஆவூர் மூலங்கிழார். பாட்டுடைத் தலைவன்  சோணாட்டுப் பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான் கௌணியன் விண்ணந்தாயன். இந்தப் பாடலின் துறை: பார்ப்பன வாகை..

  பார்ப்பன வாகையில் புறநானூற்றில் இரு பாடல்கள் உள்ளன. பாடல் 166-உடன் இதே வாகையில் உள்ள இன்னொரு பாடல் புறம் 305 ஆகும். இதில் பாடப்பட்டவன் பூணூலை அணிந்தவன்.

 பார்ப்பான்.

 வேதங்களைக் கற்றுணர்ந்தவன். நான்கு மறைக்ள ஆறு அங்கங்களைக் கொண்டது. ஷட் அங்கமே மருவி இங்கு நாம் தமிழ் நாட்டில் இன்றும் தினமும் கூறும் சடங்கு ஆக நிற்கிறது.

  நன்று ஆராய்ந்த நீள் நிமிர் சடை

முது முதல்வன் வாய் போகாது

ஒன்று புரிந்த ஈர் இரண்டின்

ஆறுணர்ந்த ஒரு முது நூல்

இகல் கண்டோர் மிகல் சாய்மார்

மெய் அன்ன பொய் உணர்ந்து

பொய் ஓராது மெய் கொளீஇ

மூவேழ் துறைபும் முட்டின்று போகிய

உரை சால் சிறப்பின் உரவோர் மருக

வினைக்கு வேண்டி நீ பூண்ட

புலப் புல்வாய்க் கலைப் பச்சை

சுவல் பூண் ஞான் மிசைப் பொலிய                                                                               ( 1 முதல் 12 வரிகள்)

  மேற்கூறிய வரிகள் காழ்ப்புணர்ச்சி அற்ற ஆழ்ந்த ஆராய்ச்சிக்குரிய வரிகள். பாடல் சுட்டிக் காட்டும் முது முதல்வன் யார்?சிவ் பிரான் என்பர் உரையாசிரியர்கள்.  ஆறுணர்ந்த என்பதால் ஆறு அங்கம் பெறப் படுகிறது. சிக்ஷா, சந்தஸ், வியாகரணம், நிருக்தம், கல்பம். ஜோதிடம் ஆகியவை வேதங்களின் ஆறு அங்கங்களாகும்.

 முது நூல் என்பது வேதம்.

 பொய்களை அகற்றி மெய்யையே கொள்வார் பெரியோர்.

 

உரை சால் சிறப்பின் உரவோர் என்பதால் சொல்லற்கு அரிய புகழுடைய சிறந்த கற்றோர் என்பது சொல்லப்படுகிறது.

 பாடலுக்குரிய தலைவன் ஆண் மானின் தோலை அணிந்தவன். (புலப் புல்வாய்க் க்லைப் பச்சை)

 தோளில் பூணூலை அணிந்தவன்.(கவல் பூண் ஞான்)

 இப்படி வேதமும் அதன் அங்கங்களும் அந்தண்ர் அணியும் பூணூல் உட்பட அனைத்தும் இந்தப் பாடலில் போற்றிப் புகழப்படுகிறது.

 அடுத்து இடம் பெறும் வரிகள் (20,21) இவை:

  ஈர் ஏழின் இடம் முட்டாது

நீர் நாண நெய் வழங்கியும் 

 

 என்ற வரிகள் ஈரேழு அதாவது பதிநான்கு இடங்களில் நீரே வெட்கப்படும் வகையில் அதிக நெய்யைச் சொரிபவன் என்ற குறிப்பு பெறப்படுகிறது.

  தண்ணீர் பட்ட பாடு என்று சொல்கிறோமே, அது அந்தத் தலைவனைப் பொருத்த ம்ட்டில் நெய் பட்ட பாடு.

 எத்துணை வேள்விகளை, எத்துணை இடங்களில் நட்த்தி இருக்க வேண்டும்.

  மழை அண்ணாப்ப நீடிய நெடு வரைக்

கழை வளர் இமயம் போல

நிலீஇயர் அத்தை நீ நில மிசையானே.

  என்று இந்தப் பாடல் முடிகிறது.மேக்ம் உயர்ந்து பார்க்கும் நீண்ட நெடும் மலையான இமயம் போல நீ நீடூழி வாழ்வாயாக என்று பாட்டுடைத் தலைவனை வாழ்த்திப் பாடல் முடிகிறது.

  இமயம் முதல் குமரி வரை உள்ள அனைத்து மன்னர்களையும்  அதாவது 56 தேச மன்னர்களையும்  புலவர் பெருமக்கள் வாழ்த்தும் போது இமயம் போல வாழ்க என வாழ்த்துவது ஒன்றே ஒரே நாடு பாரதம் என்பதை உணர்த்துகிறது.

  பொதுவான பண்பாடு, பொதுவான தொன்மம், பொதுவான நம்பிக்கை, பொதுவான பழக்க வழக்கங்கள், பொதுவான வாழ்க்கை மதிப்புகள், ஒரு  குறிப்பிட்ட பரந்து பட்ட எல்லைக்குள் இருக்கும் மக்களால் கடைப்பிடிக்கப்படும் போது அது தேசம் எனச் சொல்லப்படுகிறது. இதை ராஷ்ட்ரம் என்று அன்றே வேதம் வ்ரையறுத்துக் கூறி விட்டது!

  இந்த வரையறைக்குள் பாரதத்தின் எந்த இலக்கியத்தையும் வைத்து உரசிப் பாருங்கள்.

 ஒரே விதமான தங்கம் தான் தெரியும்.

அது பத்தரை மாத்துத் தங்கமே!



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

 புறநானூற்றில் அந்தணரும் வேதமும் ! – 3                         ச.நாகராஜன்

 சங்ககாலத்தில் வாழ்ந்த அற்புதமான ஒரு சோழ மன்னன் கரிகாலன். இவனது அறிவுத் திறனும் சிறு வயதிலேயே நீதியை நிலை நாட்டிய நிகழ்வும் தமிழ் வரலாற்றில் பொன் ஏட்டில் பொறிக்கபட்டவை.

 இவனைப் புகழ்ந்து கருங்குழல் ஆதனார் பாடிய பாடல் 224ஆம் பாடலாக புறநானூற்றில் இடம் பெறுகிறது. மன்னன் கரிகாலன் வேள்விகளை இயற்றி வேதமுறைப்படி அரசாண்டதை நினைவு கூர்கிறார் புலவர்.

 பாடல் வரிகள் இதோ:

 பருதி உருவின் பல் படைப் புரிசை

எருவை நுகர்ச்சி யூப நெடுந்தூண்

வேத வேள்வித் தொழில் முடித்ததூஉம்  (வரிகள் 7 முதல் 9 முடிய)

  சூரியனைப் போன்ற வட்ட வடிவமான (பருதி உருவின்) பல சுவர்களை அமைத்து (பல் படைப் புரிசை) பருந்துகள் நுகரும்படியான (எருவை நுகர்ச்சி) பல யூபத் தூண்களை நாட்டி (யூப நெடுந்தூண்) வேதம் அறைந்த வழியில் வேள்விகளைச் செய்தவன் (வேத வேள்வித் தொழில்  முடித்ததூஉம்) என்று புலவர் இவனைப் புகழ்கிறார்.

 தூய்மையான மகளிர் சுற்றி இருத்தல்அறநெறி வழுவாத நடுநிலைமையுடன் கூடிய நீதி வழங்கு நெறிமுறை கொண்டிருத்தல்வேத வேள்வியை இயற்றுதல் ஆகியவை கொண்டவன் என புலவர் சொல்வதால் சங்க கால மக்களின் வாழ்வில்  மிகுந்த மேன்மையுடையவை என கற்புநீதிவேத முறை ஆகியவை போற்றப்பட்டதை அறியலாம். வேள்வியை முறைப்படி செய்து முடிக்கும் அந்தணரும் குறிப்பால் உணர்த்தப்படுகின்றனர்.

  அடுத்து 361, 362 ஆகிய இரு பாட்லகளைப் பார்ப்போம். க்யமனார் என்னும் புலவர் பாடிய பாடலாக இடம் பெறுகிறது பாடல் எண் 361.

 பாட்டுடைத் தலைவன் யாரெனத் தெரியாவிட்டாலும் கூடஅவன் கூற்றுவனுக்கு அஞ்சா நல்லவன் என்பது புரிகிறது. அவன் தாயின் நல்லன்.

 வேத வேள்வியைச் செய்யும் கேள்வி முற்றிய அந்தணருக்கு  தொன்று தொட்டு இருந்து வரும் நடைமுறைப்படி கையில் நீர் வார்த்து ஏராளமான பொன்குவியலை அள்ளிக் கொடுத்தவன். அவன் பெருமையை அள்ளித் தெளிக்கிறார் இந்தப் பாடலில் பெரும் புலவர்.

 நன் பல

கேள்வி முற்றிய வேள்வி அந்தணர்க்கு

அருங்கலம் நீரொடு சிதறிப் பெருந்தகை (வரிகள் 3 முதல் 5 முடிய)

  அடுத்து வரும் 362ஆம் பாடலைப் பாடியவர் சிறுவெண் தேரையார்.

 பாட்டுடைத் தலைவன் சாதாரணமானவன் அல்லன். அவனைப் புகழ வந்த புலவர் சூரியனையும் சந்திரனையும் இணைக்கிறார். ர்ஞாயிறு அன்ன ஆய மணி மிடைந்தவன்.மதி உறழ ஆரம்  மார்பில் கொண்டவன். (சந்திரனைப் போன்று திகழும் முத்து மாலை மார்பில் அணிந்தவன்.)   பாடலில் வரும் சில வரிகளைப் பார்ப்போம்: .

  தாக்குரல் காண்பின் அந்தணாளர்

நான்மறை குறித்தன்று அருளாகாமையின்

அறம் குறித்தன்று பொருளாகுதலின்

மருள் தீர்ந்து மயக்கு ஒரீஇக்

கை பெய்த நீர் கடற்பரப்ப    (வரிகள் 8 முதல் 12 முடிய)

 பிராமணர்களே! தாக்குகின்ற குரல்களைக் (தாக்கி வரும் பகைவர்களின் ஒலிகளைக்) கேளுங்கள்! இது நான்கு வேதங்களிலும் குறிப்பிடப்பட்ட ஒன்று அல்ல! இது அருள் இல்லாதது என்பதால் இது அறம் சார்ந்த ஒன்று அல்ல. இது பொருள் குறித்தது. அதாவது materialism குறித்தது. அறத்திற்கும் அருளுக்கும் சம்பந்தமில்லாத ஒன்று.

 அடுத்து வரும் வரி அற்புதமான வரி!

 மருள் தீர மயக்கம் ஒழிய அந்தத் தலைவன் அந்தணர்களின் கையில் நீர் பெய்து வாரி வழங்குகிறான்.

 அவன் இப்படிக் கொடுத்து கீழே விழும் நீர் எவ்வளவு தெரியுமா?

 கை பெய்த நீர் கடற் பரப்ப”-அவன் கையிலிருந்து வழிந்த நீர் கடலாக ஆயிற்று.

 அடேயப்பா!எத்துணை பேருக்கு அவன் நீர் வார்த்திருந்தால் ஒரு கடல் உருவாகி இருக்கும்.!

 தமிழர்களின் நெஞ்சங்களில் வேரூன்றி இருக்கும் நேர்மையான கற்பனைத் திறனைத் தூண்டி விடும் புலவர் அவன் அந்தணரை ஓம்பி அறம் காத்த பான்மையைச் சிறப்பாகச் சொல்லி விடுகிறார்!!

 புலவர் ஒரு கோடிட்டுக் காட்டி அவன் அறம் வளர்த்த பான்மையைச் சொற்களால் சுற்றி வளைத்துக் காட்டுகிறார். வாழ்க அந்தணர்! வாழிய அறம் வளர்த்த மன்னர் குலம் !!

 அடுத்து இறுதியாக 400ஆம் பாடலைப் பார்ப்போம்.

 பாடலைப் பாடியவர் மிக அற்புதமான அரும் புலவரான கோவூர் கிழார். பாடப்பட்ட பாட்டுடைத் தலைவனோ புகழ் பெற்ற சோழன் நலங்கிள்ளி!

 கேட்கவா வேண்டும். சொற்கள் கும்மாளம் போட்டுக் குதித்து வருகின்றன. பாடலைப் படிப்பதே ஒரு தனி சுகம்.

  சோழன் நலங்கிள்ளி இருக்கிறானே அவன் உலகு காக்கும் உயர் கொள்கையாளன். பலர் துஞ்சும் போது (உறங்குகையில்) தான் துஞ்சான் அவன் தன் எதிரிகளை மட்டும் கடிதல் அல்லன்.

  அவன் தன் எதிரிகளை வெல்வதோடு பசிப்ப்கையையும் வெல்பவன். அவனது நாட்டில் பசி என்று சொன்னால் அந்தப் பகைவனை உடனே அவன் வென்று விடுவான். பசியைக் கொன்று விடுவான்.

 இத்துணை சிறப்புடைய அவனைப் பற்றி புறநானூற்றில் மட்டும் 12 பாடல்கள் இருப்பதில் வியப்பில்லையே!!

 அவன் கேள்வி மலிந்த வேள்வியையும் செய்பவன். பாடல் வரிகள் இதோ:

 கேள்வி மலிந்த வேள்வித் தூணத்து

இருங்கழி இழிதரும் ஆர்கலி வங்கம்

தேறு நீர்ப் பரப்பின் யாறு சீத்து உய்த்துத்

துறை தொறும் பிணிக்கும் நல்லூர்

உறைவின் யாணர் நாடு கிழவோனே. (வரிகள் 19 முதல்23 முடிய)

 கேள்வி மலிந்த வேள்விக்கான பல தூண்கள் நிறுவப்பட்டு யாகஙகள் நடை பெறும் நாடு.

 ஆர்கலி கப்பல்கள் அகன்ற நீர்ப்பரப்பின் முகவாய் வழியே வருகின்ற நாடு.

 அது தேறு நீர்ப்பரப்பை நனகு சுத்தம் செய்ய கடற்கரையில் அழகிய நகரங்கள் உள்ள நாடு.

 அந்த நாட்டை ஆளும் அற்புதன் யார்?

 யாணர் நாடு கிழவோன்! வளம் கொழிக்கும் நாட்டின் மன்னன் அவனே நலங்கிள்ளி!

 இப்படிப்பட்ட பாடல்களை முழுதுமாக நாமே பாடிப் பொருளை நன்கு ஓர்ந்து உணர்ந்து அறிந்தால் தமிழ் நாடு வேத தேசமாக இருந்ததை நன்கு அறிந்திடுவோம்மகிழ்ந்திடுவோம். 

இங்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை நினைவு  கூர்ந்து மகிழலாம். தென்னகத்தில் இருக்கும் ராமநாதபுரம் சேத்பதி மன்னர் முதல் கர்நாடகத்தில் இருக்கும் மைசூர் மஹாராஜாவிலிருந்து வடக்கே நெடும் தொலைவில் இருக்கும் ராஜஸ்தானில் உள்ள மன்னர்கள் வரை இன்றும் வேத வேள்விகளை வளர்த்து அந்தணர்களைப் போற்றி வருகின்றனர்.

 



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

புறநானூற்றில் அந்தணரும் வேதமும் ! – 4                        ச.நாகராஜன்                     

 சங்ககாலத்தில் வாழ்ந்த அற்புதமான மன்னனான பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைப் போற்றி காரிக்கிழார் என்ற புலவர் பாடிய பாடல் புறநானூற்றின் 6வது பாடலாக அமைகிறது.

 பாடலின் முதல் நான்கு அடிகளே பாரத தேச ஒருமைப்பாட்டை நன்கு விளக்குகிறது.

  வடக்கில் பனி படு நெடிதுயர்ந்த மலை.

தெற்கிலோ உருகெழு குமரி முனை

கிழக்கிலும் க்டல்; மேற்கிலும் கடல்!

 “வாடாஅது பனி படு நெடு வரை வடக்கும்

தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும்

குணாஅது கரை பொரு தொடு கடல் குணக்கும்

குடாஅது தொன்று முதிர் பொளவத்தின் குடக்கும்”                                               (1 முதல் 4 வரிகள்)

  அடுத்து புலவர் மன்னனின் தலை யாருக்கு மட்டும் தாழலாம் என்பதைக் குறிப்பிடுகிறார் இப்படி:-

  “அத்தை நின் குடையே முனிவர்

முக்கண் செல்வர் நகர் வலஞ் செயற்கே

இறைஞ்சுக பெரும நின் சென்னி சிறந்த

நான்மறை முனிவர் ஏந்து கை எதிரே

வாடுக”                                                                          (வரிகள் 17 முதல் 21 முடிய)]

  உனது குடை மூன்று கண்ணுடைய சிவபிரானின் கோவிலை வலம் செய்யும் போது தாழட்டும்;(முனிவர் முக்கண் செல்வர் நகர் வலஞ் செயற்கே அத்தை நின் குடையே)  நான்கு வேதங்களைச் சொல்லும் அந்தணர் கைகளைத் தூக்கி இருக்க அவர்கள் முன்னர் உன் தலை வணங்கட்டும்! (நின் சென்னி சிறந்த நான்மறை முனிவர் ஏந்து கை எதிரே இறைஞ்சுக)

  சிவபிரானின் கோவிலிலும் சிவபிரானை மகிழ்விக்கும் வேதங்களைச் சொல்லும் அந்தணர் முன்னும் பாண்டியனின் தலை பணியலாம்; வேறு யாருக்கும் அவன் தலை தாழாது!

 என்ன ஒரு பக்தி பாண்டிய மன்னனுக்கு!

 வேள்வி பல நடத்திப் பெரும் புகழ் கொண்ட பல்யாகசாலை முது குடுமிப் பெருவழுதியைப் போற்றிய அருமையான இப்பாடலில் சங்க காலச் சூழ்நிலை தெளிவாகத் தெரிகிறது.

   அடுத்து பாடல் எண் 122ஐப் பார்ப்போம். இதைப் பாடியவர் கபிலர். பாடப்பட்ட பாட்டுடைத் தலைவன் மலையமான் திருமுடிக்காரி. காரி கடை ஏழு வள்ளல்களில் ஒருவன்.

 .இப்பாடலில் புலவர், காரியின் நாடு அக்கினி வளர்த்து யாகம் செய்யும் அந்தணரின் நாடு என்று சொல்கிறார்.தன் நாட்டையே ஈந்து உவந்த பெரும் வள்ளல் காரி என்பது இதனால் பெறப் படுகிறது!

  நின் நாடே

அழல் புறம் தரூஉம் அந்தணர் அதுவே (வரிகள் 2  மற்றும் 3)

  அடுத்து உன்னுடையது என்று சொல்லிக் கொள்ள என்ன இருக்கிறது என்று கேட்டு அதற்கு பதிலையும் தருகிறார் இப்படி: நின் மனைவி வடமீனான அருந்ததி அன்ன கற்புடையாள். மிக மிருதுவாகப் பேசும் இயல்பினள் (வடமீன் புரையும் கற்பின் மடமொழி அரிவை). அவளது தோள் அல்லாது வேறு எதையும் உன்னுடையது என்று நினைக்காதவன் நீ; அதனாலேயே நீ பெரியோனாகிறாய்! (தோள் அளவு அல்லதை நினது என இலை நீ பெருமிதத்தையே)

  வட மீன் புரையுங் கற்பின் மட மொழி

அரிவை தோள் அளவு அல்லதை

நினது என இலை நீ பெருமிதத்தையே. (வரிகள் 8 முதல் 10 முடிய)

 பத்தே வரிகள் கொண்ட பாடலில் மனதை நெகிழ வைக்கிறார் கபிலர். உருக வைக்கும் சொற்கள். உன்னதமான கருத்துக்கள்!

 கற்பில் அருந்ததி போன்ற மனைவியைத் தவிர வேறு எதையும் தனக்கெனச் சொந்தம் கொண்டாடாத மாமன்னன் காரியைப் போல உலகம் கண்டதுண்டா!

 பெரும் ஈகையாளன் காரியைப் போல் வேறு ஒரு மன்னனைக் காண முடியுமா?

  நாட்டையே அந்தணருக்கு ஈந்த் காரியின் பெருங்கொடை ஒரு புறம் இருக்க அதற்குத் தகுதியான பாத்திரமாகத் திகழ்ந்த அந்தணரின் புகழ் குறைவானதா என்ன?

  அருந்ததி என்று சொல்லப்படும் கற்பில் சிறந்த ரிஷி பத்தினியை ஒவ்வொரு திருமணத்திலும் மணமகன் மணமகளுக்குக் காட்டுவது வழக்கம். வசிஷ்டர் – அருந்ததி போல வாழ்வோம் என்பது அவர்கள் அந்தச் சமயத்தில் எடுக்கும் உறுதி மொழி!

  இப்படிப் பண்பாட்டாலும், சடங்காலும், வேத மந்திரத்தாலும், அதற்கு உரிய தெய்வத்தாலும் ஒன்றாக இணைந்த ஒரு உயரிய தேசத்தையே சங்க இலக்கியம் சுட்டிக் காட்டுகிறது. சொற்களை அனுபவித்துப் படிக்க புறநானூறு நூலை எடுப்போம்!



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

புறநானூற்றில் அந்தணரும் வேதமும் ! – 5                      ச.நாகராஜன்                      

 ஔவையார் பாடிய பாடல் ஒன்று (வாழ்த்தியல் துறை) புறநானூற்றில் 367ஆம் பாடலாக மலர்கிறது.  பாடப்பட்டோர் : மூன்று தமிழ் மன்னர்கள்! சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளிபாண்டியன் கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதிசேரமான மாவெங்கோ!

  மிகுந்த மகிழ்ச்சியுடன்  மூவேந்தர் மூவரையும் வாழ்த்திப் பாடுகிறார் பெரும் புலவர் ஔவையார்.

  ஏற்ற பார்ப்பார்க்கு ஈர்ங்கை நிறையப்

பூவும் பொன்னும் புனல் படச் சொரிந்து

  அந்த மன்னர்கள் எப்படிப்பட்டவர்கள்தகுந்த பிராமணர்களுக்கு (ஏற்ற பார்ப்பார்க்கு) நீரினால் ஈரம் நிறைந்த கையினால் (ஈர்ங்கை நிறைய) பூபொன் ஆகியவற்றை கைவழியே நீரினால் சொரிந்து (பூவும் பொன்னும் புனல் படச் சொரிந்து) தருகின்றனர்!

  பாடலின் பின் பகுதியில் வரும் வரிகள் இவை:

 ஒன்று புரிந்து அடங்கிய இரு பிறப்பாளர்

முத்தீப் புரையக் காண்தக இருந்த

  மூன்று தமிழ் மன்னர்களையும் ஒரு சேரப் பார்ப்பது எப்படி இருக்கிறதுபுலவருக்கு அந்தணரும் அவர்களது தீ வளர்ப்புமே ஞாபகத்திற்கு வருகிறது – உவமையாக.

  அறம் ஒன்றையே கூறும் வேதத்தை நன்கு உணர்ந்து (ஒன்று புரிந்து) நன்கு புலன்களை அடக்கிய இரு பிறப்பை – தாயின் கருப்பை வழியே பூமியில் பிறக்கையில் முதல் ஜனனம்பூணூல் போடும் போது அடையும் ஞானப் பிறவி இரண்டாம் பிறப்புஆக இரு பிறப்பு (அடங்கிய இரு பிறப்பாளர்) அடைந்தோர்மூன்று அக்கினிகளை வளர்த்து ஹோமம் செய்வது போல (முத்தீப் புரையக் காண் தக) இருக்கிறது. (முத்தீ விளக்கம் முந்தைய கட்டுரையில் தரப்பட்டு விட்டதால் இங்கு மீண்டும் தரப்படவில்லை).

   ஔவையார் மனதார வாழ்த்தும் இந்தப் பாடலை முழுதுமாகப் படித்து அனுபவிக்க வேண்டும்! அத்துடன் சோழ மன்னனின் பெயரில் உள்ள ராஜசூய யாகம் என்ற வார்த்தை அவன் அந்தப் பெரிய யாகத்தை முறைப்படி நடத்திப் பெரும் புகழ் பெற்ற்வன் என்பதை அறிவிக்கிறது என்பதையும் அறிந்து மகிழலாம். சங்க காலத்தில் இப்ப்டிப்பட்ட பிரம்மாண்டமான யாகங்களை மன்னர்கள் செய்வது அவர்களின் வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே இருந்திருக்கிறது!

  இன்னொரு பாடலைப் பார்ப்போம். ஏற்கனவே பார்ப்பன வாகையில் ஒரு பாடலைப் பார்த்தோம். இன்னொரு பாடல் எண் 305 இதைப் பாடியவர் மதுரை வேளாசான் என்னும் புலவர்.

  வயலைக் கொடியின் வாடிய மருங்கின்

உயவல் ஊர்திப் பயலைப் பார்ப்பான்

எல்லி வந்து நில்லாது புக்குச்

சொல்லிய சொல்லோ சிலவே அதற்கே

ஏணியும் சீப்பும் மாற்றி

மாண் வினை யானையும் மணி களைந்தனவே.

  அடும் போர் ஒன்று நடைபெற இருக்கிறது. அதைத் தடுக்க வேண்டும்.

 போர் நடக்கப் போகிறதே என்ற துக்கத்துடன் இரவு நேரத்தில் இளம் வயதுப் பார்ப்பனன் ஒருவன் வருகிறான். சில வார்த்தைகளையே சொல்கிறான். உடனே முற்றுகைக்காக இருந்த ஏணியும் வாயிலில் இருந்த கதவின் அடைப்பும் நீக்கப் பட அவனது விஜயம் வெற்றிகரமாக ஆனது.

  தூதனாக வந்த தூயவன் சில சொற்களைச் சொல்ல – ஆம்   போர் நின்று விட்டது.

  அந்தணனின்  சில சொற்களுக்கு அவ்வளவு மஹிமை!

 மெலிதான வயலைக் கொடியைப் போன்ற (வயலைக் கொடியின் வாடிய மருங்கின்) அந்தண இளைஞன் (பயலைப் பார்ப்பான்) துக்கத்துடன் வந்து (உயவல ஊர்தி) யாருக்காகவும் காத்திருக்காமல் (நில்லாது) உள்ளே நுழைந்து (புக்கு) சொல்லிய சொற்கள் சில தான்! (சொல்லிய சொல்லோ சிலவே). அதன் பின்னர் உடனேயே (அதற்கே) கதவில் இருந்த முற்றுகைக்கான ஏணியும் கதவடைப்பும் நீக்கப்பட்டன. ((ஏணியும் சீப்பும் மாற்றி)

 போருக்குக் கிளம்பும் தருணத்தில் இருந்தஅழகிய போர் புரியும் யானைகளின் மீதிருந்த ரத்தினங்களும் களையப்பட்டன! (மாண் வினை யானையும் மணி களைந்தனவே.

  சண்டை என்றவுடன் மன வேதனை அடைந்து சில சொற்களால் பெரும் போரை நிறுத்திய தூதுவனான ஒரு இளம் பார்ப்பானைப் போற்றிப் பாடப்படும் பாடல் இது!

 போர் என்றால் அந்தக் காலத்திலும் வேதனையே மிகுந்திருந்தது என்பதை இது சுட்டிக் காட்டுகிறது. அதை நிறுத்துவதில் தான் அந்தணர் உள்ளம் இருந்தது.

  ஸர்வே ஜனா: ஸுகினோ பவந்து”-  எல்லா மக்களும் சுகத்துடன் இருக்கட்டும்!

  அந்தணர் வாழ்த்தும் வாழ்த்தில் தான் எத்தனை உயரிய சிந்தனை! சுகமான சிந்தனையும் கூட!!



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

தானத்தால் பெருகிய நீரும், துக்கத்தால் பெருகிய நீரும்! (Post No.3357)

WRITTEN BY S NAGARAJAN  Date: 15 November 2016   by ச.நாகராஜன்

  கடல். அதைப் பார்த்து வியக்காத மனிதர் உண்டா, என்ன?  அதைப் பாடாத கவிஞர் உண்டா என்ன? ஒவ்வொரு கவிஞரும் கடலை ஒவ்வொரு பார்வையில் பார்க்கும் விதமே சுவையானது.

 திருவள்ளுவர், வால்மீகி, கம்பன், திருத்தக்க தேவர், சிறுவெண்தேரையார், பாரதியார், ரவீந்திரநாத் தாகூர் உள்ளிட்ட நம் நாட்டுக் கவிஞர்களும் மேலை நாட்டுக் கவிஞர்களும் கடலை பல்வேறு பார்வைகளில் பார்த்துத் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்திருக்கிறார்கள்.

 அனைத்துமே அருமை தான்!

இரு பாடல்களை இங்கு பார்ப்போம்.

சிறுவெண்தேரையார் என்ற சங்க காலப் புலவர் பாடிய பாடல் புறநானூற்றில் 362ஆம் பாடலாக மலர்கிறது.

 ஞாயிற்று அன்ன ஆய் மணி மிடைந்த

மதி உறழ் ஆரம் மார்பில் புரளப்
பலி பெறு முரசம் பாசறைச் சிலைப்பப்
பொழிலகம் பரந்த பெருஞ்செய் ஆடவர்
செருப்புகன்று எடுக்கும் விசய வெண் கொடி
அணங்கு உருத்தன்ன கணங்கொள் தானை
கூற்றத்து அன்ன மாற்றரு முன்பின்
தாக்குரல் காண்பின் அந்தணாளர்
நான்மறை குறித்தன்று அருளாகாமையின்
அறம் குறித்தன்று பொருளாகுதலின்
மருள் தீர்ந்து மயக்கு ஒரீஇக்
கை பெய்த நீர் கடற்பரப்ப
ஆம் இருந்த அடை நல்கிச்
சோறு கொடுத்து மிகப் பெரிதும்
வீறு சான் நன் கலம் வீசி நன்றும்
சிறு வெள் என்பின் நெடு வெண் களரின்
வாய் வன் காக்கை கூகையொடு கூடிப்
பகலும் கூவும் அகலுள் ஆங்கண்
காடு கண் மறைத்த கல்லென் சுற்றமொடு
இல் என்று இல் வயின் பெயர மெல்ல
இடஞ் சிறிது ஒதுங்கல் அஞ்சி
உடம்பொடும் சென்மார் உயர்ந்தோர் நாட்டே.

பாட்டுடைத் தலைவன் சாதாரணமானவன் அல்லன். அவனைப் புகழ வந்த புலவர் சூரியனையும் சந்திரனையும் இணைக்கிறார். ஞாயிறு அன்ன ஆய மணி மிடைந்தவன்.மதி உறழ ஆரம்  மார்பில் கொண்டவன். பலி பெற்ற முரசுகள் போர்க்களப் பாசறையில் முழங்குகின்றன. விஜய வெண்கொடியை ஏந்தி பெரும் செயலைச் செய்யும் வீரர்கள் நாடெங்கும் பரந்துள்ளனர். அவர்களைப் பார்க்கவே கூற்றுவன் போல உள்ளது.

 ஓ, பிராமணர்களே! தாக்குகின்ற குரல்களைக் (தாக்கி வரும் பகைவர்களின் ஒலிகளைக்) கேளுங்கள்! இது நான்கு வேதங்களிலும் குறிப்பிடப்பட்ட ஒன்று அல்ல! இது அருள் இல்லாதது என்பதால் இது அறம் சார்ந்த ஒன்று அல்ல. இது பொருள் குறித்தது. அறத்திற்கும் அருளுக்கும் சம்பந்தமில்லாத (மெடீரியலிஸம் குறித்த) ஒன்று. மருளும் தீர்ந்தது. மயக்கமும் ஒழிந்தது.

தலைவன் அந்தணர்களின் கையில் நீர் பெய்து வாரி வழங்குகிறான்.

அவன் இப்படிக் கொடுத்து கீழே விழும் நீர் எவ்வளவு தெரியுமா?

“கை பெய்த நீர் கடற் பரப்ப

 அவன் கையிலிருந்து வழிந்த நீர் கடலாக ஆயிற்று.அவன் வளம் கொழிக்கும் நிலங்களைக் கொடுத்தான். சோறு கொடுத்தான். விலையே மதிக்க முடியாத நல் பரிசுகளை அளித்தான். வெள்ளை எலும்புகள் சிதறிக் கிடக்க, வன் வாய் உள்ள காக்கை மற்றும் ஆந்தைகள் ஆகியவை இருக்கும் பகலிலும் நிரம்பியுள்ள காட்டில் உள்ள அவனது வீடு பேச்சுச் சத்தம் நிறைந்த சுற்றத்தாரால் நிரம்பி உள்ளது. ஆகவே இடம் சிறிது தான் இருக்கிறது என்று பயந்து அங்கிருந்து தன் உடலுடன் கிளம்பி பெரும் வீரர்கள் உள்ள நாட்டை நோக்கிச் சண்டையிட அவன் விரும்பிக் கிளம்புகிறான்.

    இந்தப் பாடலில் கடலை உவமையாகச் சொல்ல வருகிறார் கவிஞர். தலைவன் கையினால் நீர் சொரிந்து தானம் வழங்க அந்த நீர் கடல் எனப் பெருகிற்றாம்!

 கடலைத் தானத்தால் கொடுத்த நீர் பெருக்கிற்கு சங்கப் புலவர் இப்படி ஒப்பிட்டார் என்றால் இன்னொரு புலவர் துக்கத்தால் பெருகிய நீருக்கு கடலை ஒப்பிடுகிறார்.

 இரு வேறு பார்வைகள்; ஆனால் கடல் ஒன்று தான்!

 திருத்தக்க தேவர் இயற்றிய சீவக் சிந்தாமணியில் வரும் பாடலைப் பார்ப்போம். பதுமையார் இலம்பகத்தில் அழகியான பதுமைக்கு அவளது தோழி கூறுவதாக அமைந்துள்ள பாடல் இது:

“பிரிந்தவர்க்கு இரங்கிப் பேதுற்று அழுத நம் கண்ணின் நீர்கள்

சொரிந்தவை தொகுத்து நோக்கில் தொடுகடல் வெள்ளம் ஆற்றா

முரிந்த நல் பிறவி மேனாள் முற்றிழை இன்னும் நோக்காய்

பரிந்து அழுவதற்குப் பாவாய் அடியிட்டவாறு கண்டாய்!

                          (சீவக சிந்தாமணி பாடல் எண் 1391)

 பேதுற்று – வருத்தமடைந்து

தொடுகடல் – தோண்டப்பட்ட கடல்

ஆற்றா – அள்விடமுடியாது

முரிந்த –  கெட்ட

 பாடலின் பொருள் :

 பிரிந்து சென்ற கணவர்களை நினைத்து வருந்தி அழுதவர்கள் விட்ட கண்ணீரைக் கணக்கெடுத்துப் பார்த்தால் விண்ணைத் தொடவிருந்த கடல் நீரும் அதற்கு உவமை சொல்லப் பொருந்தாது. இழைமணி அணிந்தவளே! இன்னும் கேட்பாய்! முற்பிறவியில் அப்படி நாம் அழுது சிந்திய கண்ணீர்ரே, இப்பிறவியில் நாம் அப்படி வருந்தி அழுவதற்கு அடிக்கல் இட்டது போல அமைகிறது என்பதை அறிவாயாக!

    ஒவ்வொரு பிறவியிலும் பிரிந்த கணவனை எண்ணி அழுத கண்ணீர் வெள்ளம் கடலை விடப் பெரியது எனச் சொல்லி திருத்தக்க தேவர் கடல் நீரை கண்ணீர் வெள்ளத்திற்கு ஒப்பிடுகிறார்.

    அத்தனை பிறவிகள்! அத்தனை கணவர்கள்! அத்தனை பிரிவுகள்! அத்தனை ஆற்ற ஓண்ணா அழுகை ஓலம்!

   கடலைக் கண்டவுடன் பிறவிகளின் எண்ண முடியாத் தொடர்ச்சியும் அதில் பிரிவின் வேதனையும் அதனால் விளைந்த கண்ணீரும் கவிஞருக்கு நினைவில் வருகிறது; கவிதை மலர்கிறது.

 பிறவிப் பெருங்கடல் என்றார் வள்ளுவரும்.

பிற ஆழி நீந்தல் அரிது என்ற அவர் யாருக்குப் பிற ஆழி நீந்த முடியாத ஒன்று என்பதையும் விளக்கமுறச் சொல்கிறார்.

அற ஆழி அந்தணன் தாள் சேர்ந்தாருக்கு அல்லால் — பிற ஆழி நீந்தல் அரிது.

 அற ஆழி என்பதை தர்ம சக்கரம் என்று விளக்குகிறார் பரிமேலழகர்.

தர்ம சக்கரம் ஏந்திய அறமுடைய இறைவனின் அடி சேர்ந்தவர்க்கு அல்லால் பிற ஆழி நீந்தல் முடியாது..

 கடலை மட்டும் எடுத்துக் கொண்டு உலக இலக்கியங்களை அலச ஆரம்பித்தால் நாம் தெரிந்து கொள்ளும் உண்மைகள் ஏராளம். நூற்றுக் கணக்கான சுவையான பாடல்கள் உள்ளன.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard