Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பரிபாடலில் அந்தணரும் வேதமும் ச.நாகராஜன்


Guru

Status: Offline
Posts: 7474
Date:
பரிபாடலில் அந்தணரும் வேதமும் ச.நாகராஜன்
Permalink  
 


பரிபாடலில் அந்தணரும் வேதமும் – 1                             ச.நாகராஜன்

 பரிபாடல்- எட்டுத்தொகை நூல்களில் ஒன்று பரிபாடல். அதில் 70 பாடல்கள் இருந்தன. நமக்குக் கிடைத்திருப்பது இருபத்துநான்கு பாடல்களே. மகாமகோபாத்தியாய உ.வே.சாமிநாதையர் அவர்களின் பெருமுயற்சி காரணமாக இந்த பாடல்கள் நமக்குக் கிடைத்துள்ளன. அதைப் பதிப்பித்து தமிழுக்குத் தந்தவர் அவரே.

 பரிபாடலின் பாடல்களில் திருமாலுக்கு உரியவையாக எட்டும், முருகனுக்கு முப்பத்தொரு பாடல்களும், கொற்றவைக்கு ஒன்றும் வைகை நதிக்கு இருபத்தாறும் மதுரைக்கு நான்கு பாடல்களும் உள்ளன. ஆனால் நமக்குக் கிடைத்திருப்பதோ திருமாலுக்கு ஏழு, முருகனுக்கு எட்டு, வைகைக்கு ஒன்பது

 25 அடி முதல் 400 அடிகள் வரை பரிபாடல் கொண்டிருக்கும் என்கிறது இலக்கணம். பரிபாடல அரிய இசையைக் கொண்டிருக்கும் ஒன்று. ப்ரிபாடலில் உள்ள ஒவ்வொரு பாடலையும் எழுதியவர் யார், அதற்கு இசை அமைத்தவர் யார் என்ற குறிப்பும் பாடலின் அடியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 பரிபாடலின் காலத்தை நிர்ணயிக்க விழையும் அறிஞர்கள் அது சங்க காலத்தின் இறுதியில் தோன்றியிருக்கலாம் என்று  கருதுகின்றனர்.  இதில் தொட்ட இடங்களிலெல்லாம் இறை  ம்ணம் கமழும்.அற்புதமான பக்தி வரிகள் மின்னும். ஹிந்து தத்துவங்கள் தவழும்.பாடலை நாமே ரசித்துப் படிக்க வேண்டும், அப்போது தான் அதன் பெருமையை உணர முடியும்.

 வேதத்தின் பல பெயர்கள்

 வேதத்தை நான்மறை, மறை, வேதம், சுருதி,கேள்வி, வாய்மொழி, முதுமொழி, புலம் என்றெல்லாம் பரிபாடல் கூறி அதன் பெருமையை எடுத்துரைக்கிறது.பரிபாடலின் முதல் பாடல் திருமாலின் பெருமையை விளக்குகிறது.

 ஆயிரம் விரித்த அணங்குடை அருந்தலை என ஆதிசேஷனைக் குறிப்பிட்டு ஆரம்பிக்கும் பாடலில் இறுதி மூன்று வரிகள் வேதத்தையும் அந்தணரையும் பற்றிக் கூறுகிறது.

  “சேவல் அம் கொடியோய் நின் வல் வயின் நிறுத்தும்

           மேவலுள் பணிந்தமை கூறும்

நாவல் அந்தணர் அரு மறைப் பொருளே” (வரிகள் 11 12 13)

  சேவல் அம் கொடியோய் – கருடனைக் கொடியில் கொண்டவனே!

மேவலுள் – உன் கருணையுடன்

நின் வல் வயின் நிறுத்தும் – உன் வலது பக்கத்தில் நிறுத்தப்பட்டுள்ள மனிதர்கள்

பணிந்தமை கூறும் –  உன்னை வழிபடும் தன்மை அறிந்து வழிபடுவோர்.

 நாவல் அந்தணர் –  நாவில் மிகத் திறமை கொண்ட அந்தணர்கள் ஒதுகின்ற

அருமறைப் பொருளே – அரிய வேதத்தின் அர்த்தமாக விளங்குகின்றவனே!

அந்தணர்கள் வேதத்தை ஓதுகின்ற நல்ல திறன் உடையவர்கள் என்பதை  மிக மிக அழகாக நாவல் அந்தணர் என்ற சொற்றொடர் விளக்குகிறது

திருமால் அரிய வேதத்தின் உட்பொருளாய் விளங்குகிறான் என்பதையும் அருமறைப் பொருள் என்ற அழகிய சொற்றொடர் விளக்குகிறது.

இப்படி முதல் பாடலிலேயே அந்தணரின் புகழையும் அவர் நாவில் தவழும் வேதத்தின் பெருமையையும் பரிபாடல் விளக்குகிறது.

 இந்தப் பாடலை இயற்றிய புலவர் பெயரும் இதற்கு இசை அமைத்தவர் பெயரும் நமக்குக் கிடைக்கவில்லை.

  

பரிபாடலில் அந்தணரும் வேதமும் – 2         ச.நாகராஜன்

  பரிபாடலின் இரண்டாம் பாடல் 76 அடிகளைக் கொண்டுள்ளது.இதைப் பாடியவர் கீரந்தையார். இந்தப் பாடலுக்கு இசையமைத்தவர் நன்னாகனார். பாடல்  முழுவதும் திருமாலின் பெருமையைக் காணலாம்.

  திருமாலின் பெருமையில் ஊழிகளின் தோற்றம், வராக கற்பம், திருமாலின் நிலைகள், திருமாலின் சிறப்பு, படைச் சிறப்பு, திருமாலின் திருமேனியின் ஒளி முதலிய சிறப்புகள், பல் புகழும் பரவலும் என பல அரிய செய்திகளைக் கண்டு பிரமிக்கிறோம்.

  வடு இல் கொள்கையின் உயர்ந்தோர் ஆய்ந்த

  கெடு இல் கேள்வியுள் நடு ஆகுதலும் (வரிகள் 24, 25)

  வடு இல் கொள்கையின் உயர்ந்தோர் என்று மாசில்லாத உயர்ந்த கொள்கையை உடைய முனிவர்கள் குறிப்பிடப்படுகின்றனர். அவர்கள் ஆய்ந்தது கெடு இல் கேள்வி. கெடு இல் கேள்வி என்பதால் ஒரு பிழையும் தவறும் இல்லாதது உயர்ந்த வேதம் என்பது பெறப்படுகிறது. நடு ஆகுதலும்என்பதால் அந்த அற்புதமான வேதத்தின் நடுவாக உட்பொருளாக அமைபவன் திருமால் என்பது பெறப்படுகிறது.

  சாயல் நினது, வான் நிறை-என்னும்

நாவல் அந்தணர் அரு மறைப் பொருளே:

அவ்வும் பிறவும் ஒத்தனை; உவ்வும்

எவ் வயினோயும் நீயே.  (வரிகள் 56 முதல் 60 முடிய)

  சாயல் நினது, வான் நிறை  என்பதால் வானம் பொழிவது போன்று உனது அருள் ஒவ்வொருவரின் மீதும் பொழிகிறது என்கிறார் புலவர். நாவன்மை பொருந்திய அந்தணர் ஓதும் அருமறையின் – வேதத்தின் – பொருளே என்ற பொருளில் நாவல் அந்தணர் அருமறைப் பொருளே என திருமாலை இங்கு விளிக்கிறார் புலவர் பெருமான்.

 அதுவும் அதற்கு மேலாகவும் இருப்பவன் நீ என்பதை அவ்வும் பிறவும் ஒத்தனை என்பதால் குறிப்பிடும் புலவர் உவ்வும் எவ்வயினோயும் நீயே என்பதால் நீயே இதர அனைத்துப் பொருள்களிலும் இருப்பவன் என்று முத்தாய்ப்பாகக் கூறி விடுகிறார்.

  கேள்வியுள் கிளந்த ஆசான் உரையும்,

படி நிலை வேள்வியுள் பற்றி ஆடு கொளலும்,

புகழ் இயைந்து இசை மறை உறு கனல் முறை மூட்டித்

திகழ் ஒளி ஒண் சுடர் வளப்பாடு கொளலும்,

நின் உருபுடன் உண்டி;

பிறர் உடம்படுவாரா

நின்னொடு புரைய

அந்தணர் காணும் வரவு.  (வரிகள் 61 முதல் 68 முடிய)

   இந்த வரிகளின் பொருள் :- நீயே வேதத்தின் சாரம். அந்தணர்களுக்கு, பசுக்கள் பிடிக்கப்பட்டு, ஜ்வாலை உள்ள அக்னியுடன் உள்ள ஹோமத்தில் உணவுகள் படைக்கப்பட்டு வேதங்கள் ஓதப்பட்டு செய்யப்படும் சடங்குகள் உள்ள வேதங்களில் காணப்படும் பல்வேறு வடிவங்களாய் இருப்பவன் நீயே. நம்பாதவர்கள் கூட நம்பி ஒப்புக் கொள்ளும்படி உடன்பட வைப்பவன் நீ.

  அனைத்தும் அறிந்த புலவர் பிரான் திருமாலின் பெருமையை அருமையாகத் தக்க விதத்தில் இப்படிப் புகழ்ந்துரைக்கிறார்.

 

ஆகவே உன்னை தலை உற வனங்கினேம், உன்னை ஏத்தினேம், வாழ்த்தினேம் என்று பாடலை முடிக்கிறார்.

 

பரிபாடலில் அந்தணரும் வேதமும் – 4                        ச.நாகராஜன்

 பரிபாடலில் நான்காம் பாடல். பரிபாடலின் நான்காம் பாடல் 73 அடிகளைக் கொண்டுள்ளது.

 இதைப் பாடியவர் கடிவன் இளவெயினனார்.  இந்தப் பாடலுக்கு இசையமைத்தவர் பெட்ட நாகனார். திருமாலைப் பற்றிய அழகான பாடல் இது.  இதில் இரணியனைக் கொன்று பிரகலாதனைக்  காப்பாற்றிய வரலாறு வருகிறது. பிரகலாதன் என்ற பெயரையும் இதில் காணும் போது புராணங்கள் பாரதம் முழுவதிலும் பரவி இருந்தமை தெரிய வருகிறது. வராக அவதாரத்தின் சிறப்பு, கருடக் கொடியின் பெருமை போன்றவை சிறப்பு வாய்ந்த சொற்களால் வர்ணிக்கப்படுகிறது.

   நின்னோர் அன்னோர் அந்தணர் அருமறை (வரி 65)

 என்ற இந்த வரியால், “திருமாலின் பெருமை அளப்பதற்கு அப்பாற்பட்டது. அது அந்தணர் ஓதும் வேதத்தால் உரைக்கப்படுகிறது” என்பது விளக்கப்படுகிறது.

  ஐந்தாம் பாடல்-அடுத்ததாக, பரிபாடலின் ஐந்தாம் பாடல் 81 அடிகளைக் கொண்டுள்ளது.இதைப் பாடியவர் கடிவன் இளவெயினனார்.  இந்தப் பாடலுக்கு இசையமைத்தவர் கண்ணகனார். முருகனைப் பற்றிய அழகான பாடல் இது. முருகனிடம், “யாம் இரப்பவை பொருளும் பொன்னும் போகமும் அல்ல; அருளும் அன்பும் அறனும் மூன்றும்” மட்டுமே யாம் வேண்டுவது என்னும் வரிகள் மனதை உருக்குபவை.இதில் வரும்,

  “ஆதி அந்தணன் அறிந்து பரி கொளுவ

வேத மா பூண் வையத் தேர் ஊர்ந்து”  (வரிகள் 22,23)

 என்பதன் பொருள் :

 ஆதி அந்தணன் என்பது புராதன பிராமணனான பிரம்மம்.அந்த ஆதி அந்தணன் புவி என்னும் ரதத்தில் எப்படி நன்கு ரதத்தை நடத்துவது என்பதை அறிந்து வேதத்தை குதிரைகளாகக் கொண்டு புவி மீது நடத்துகிறான்.

  ஆறாம் பாடல்- அடுத்ததாக, பரிபாடலின் ஆறாம் பாடல் 106 அடிகளைக் கொண்ட நீண்டதொரு சுவையான பாடல்..இதைப் பாடியவர் ஆசிரியர் நல்லந்துவனார்.  இந்தப் பாடலுக்கு இசையமைத்தவர் மருத்துவன் நலலச்சுதனார். வையையின் பெருமையை மிக அழகுற விளக்கும் பாடல் இது. வையையில் வெள்ளம் கரையையும் உடைத்துக் கொண்டு ஓட மகளிரும் ஏனையோரும் புனலாடுதல் உள்ளிட்ட பல காட்சிகளை அழகுறப் படம் பிடித்துக் காட்டும் பாடல் இது.

 ஓடி வரும் வெள்ளத்தால் அந்தணர் கலக்கம் அடைகிறார்களாம். அதைப் பாடல் அழகுறச் சொல்கிறது இப்படி:

  நாறுபு நிகழும் யாறு கண்டு அழிந்து

 வேறுபடு புனல் என விரை மண்ணுக் கலிழை

புலம் புரி அந்தணர் கலங்கினர் மருண்டு(வரிகள் 43-45)

  புலம் என்றால் வேதம். புலம் புரி என்பதால் வேதம் ஓதும் அந்தணர் என்பது சொல்லப்படுகிறது.  அவர்கள் மணத்துடன் கரை புரண்டோடும் ஆறு கண்டு (நாறுபு நிகழும் யாறு கண்டு) இது வேறு பல மணம் கொண்டு அழிந்தது என்று (வேறுபடு புனல் என விரை மண்ணுக் கலிழை) வேதம் ஓதும் அந்தணர் மருண்டு கலங்கினர் (புலம் புரி அந்தணர் கலங்கினர் மருண்டு)

 அழகான வையைப் பற்றி விளக்கும் அற்புதமான பாடல் இது.

  எட்டாம் பாடல்- அடுத்ததாக, பரிபாடலின் எட்டாம் பாடல் 130 அடிகளைக் கொண்ட நீண்டதொரு அழகிய பாடல்..இதைப் பாடியவர் ஆசிரியர் நல்லந்துவனார்.  இந்தப் பாடலுக்கு இசையமைத்தவர் மருத்துவன் நலலச்சுதனார். திருப்பரங்குன்றின்  மாண்பினை இதை விடச் சுவையாகக் கூற முடியாது என்ற அளவில் பரங்குன்றின் சிறப்பை விளக்கும் அற்புதப் பாடல் இது.

இமய மலையை ஒக்கும் சிறப்புடைய குன்று எது தெரியுமா?பதிலைப் பாடல் தருகிறது இப்படி:

 “பரங்குன்று இமயக் குன்றம் நிகர்க்கும் 

 இமயக் குன்றினில் சிறந்து”    (வரிகள் 11,12)

 முருகன் உறைந்து அருள் புரியும் மலை இமயத்தில் சிறந்ததாக இல்லாமல் இருக்க முடியுமா என்ன?

 “யாவரும் பிறரும் அமரரும் அவுணரும்

 மேவரு முதுமொழி விழுத் தவ முதல்வரும்”                                   (வரிகள் 8,9)

  தேவர்கள், அசுரர்கள், முதுமொழி எனப்படும் வேதம் ஓதுவதில் நிபுணர்களான தவ முதல்வரும் வந்து சேரும் இடம் திருப்பரங்குன்றமே!

 பரங்குன்றின் அருமை பெருமைகளை தேர்ந்தெடுத்த தமிழ்ச் சொற்களால் உரைக்கும் இந்தப் பாடலை அனைவரும் படித்தல் வேண்டும்.

  அரு மறை, வேதம், புலம், முது மொழி என்று இப்படி, பல சொற்களால் வேதம் புகழப்படுவதையும் அதை ஓதும் அந்தணர் மேன்மை உரைக்கப்படுவதையும் இந்தப் பரிபாடல் பாடல்கள் நமக்கு உணர்த்துகின்றன



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
RE: பரிபாடலில் அந்தணரும் வேதமும் ச.நாகராஜன்
Permalink  
 


பரிபாடலில் அந்தணரும் வேதமும் – 5                       by ச.நாகராஜன்

   பரிபாடலில் ஒன்பதாம் பாடல். பரிபாடலின் ஒன்பதாம் பாடல் 85 அடிகளைக் கொண்டுள்ளது. குன்றம்பூதனார் என்ற புலவர் பாடிய இந்தப் பாடலுக்கு மருத்துவன் நல்லச்சுதனார் இசை அமைத்துள்ளார். குன்றம்பூதனார் முருகனைப் பற்றி இரு பாடல்கள் பாடியுள்ளார். இரண்டும் சுவை பயப்பவை. வள்ளிக்கும் தேவசேனைக்கும் நடந்த மோதலை சுவைபட இவர் விவரிக்கும் பாங்கு ப்டித்தால்  இன்பத்தைத் தரும்.

 நான்மறை விரித்துநல் இசை விளக்கும்                            

வாய்மொழிப் புலவீர் கேண்மின் (வரிகள் 12,13)

   என்ற வரிகளில் நான்மறையை ஓதி அதை விளக்கும் நாவன்மை படைத்த புலவர்க்ளேகேளுங்கள் என்று புலவர் அழைத்து காமத்தின் காதல் காமம் சிறந்தது என்றும் அதிலும் சிறந்தது காதலர் இருவரும் மனமொத்து விரும்பும் புணர்ச்சி என்றும் விளக்குகிறார். பிறகு முருகன்வள்ளிதேவசேனை கதை விளக்கப்படுகிறது.

   பரிபாடலில் பதிமூன்றாம் பாடல்- பரிபாடலின் பதிமூன்றாம் பாடல் 64 அடிகளைக் கொண்டுள்ளது. நல்லெழுதியார் என்ற புலவர் இந்தப் பாடலை இயற்றியுள்ளார். இதற்கு இசை அமைத்தவர் யர்ர் என்று தெரியவில்லை. திருமாலைப் பலவாறாகப் புகழும் அருமையான பாடல் இது.

  படர் சிறைப் பல் நிறப் பாப்புப் பகையைக்

கொடியெனக் கொண்ட கோடாச் செல்வனை

ஏவல் இன் முது மொழி கூறும்   (வரி 40)

சேவல் ஓங்கு உய்ர் கொடிச் செல்வ நல் புகழவை  

கார் ம்லர்ப் பூவை கடலை இருளமணி

அவை ஐந்தும் உறழும் அணி கிளர் மேனியை

வலம்புரி வாய்மொழி அதிர்பு வான் முழக்கு செல்

அவை நான்கு உறழும் அருள் செறல் வயின் மொழி (வரி 45)

  என்ற வரிகளில் முதுமொழி என்றும் வாய்மொழி என்றும் வேதம் கூறப்படுகிறது.

  மேற்கூறிய வரிகளில் பாம்புக்குப் பகைவனான விரிந்த சிறகுகளைக் கொண்ட கருடனைக் கொடியெனக் கொண்ட (படர் சிறைப் பல் நிறப் பாப்புப் பகையைக் கொடியெனக் கொண்ட) கடவுள் (கோடாச் செல்வனை) ஏவல் இன்றி தானாகவே முதுமொழியான வேதத்தை ஓதும் (ஏவல் இன் முதுமொழி கூறும்) ஓங்கு உயர் கொடியான கருடக் கொடியினை உடைய கடவுள் (சேவல் ஓங்கு உயர் கொடிச் செல்வ) என்ற பொருளை பெறலாம்

  பின்னர் திருமாலை வர்ணிக்கும் வரிகளில் வலம்புரி வாய்மொழி என மறுபடியும் முதுமொழி என வேதம் கூறப்படுகிறது. அடுத்து (56ஆம் வரியில்)வேள்வி’ என்ற வார்த்தையால் மறுபடியும் சடங்குகள் குறிப்பிடப்படுகிறது.

   பரிபாடலில் பதினைந்தாம் பாடல்-பரிபாடலின் பதினைந்தாம் பாடல் 66 அடிகளைக் கொண்டுள்ளது இளம் பெரு வழுதியார் இயற்றிய இந்தப் பாடலுக்கு இசை அமைத்தவர் மருத்துவன் நல்லச்சுதனார். அழகர்கோவில் என்று இன்று அழைக்கப்படும் மாலிருஞ்சோலை குன்றம் பற்றிப் பாடல் புகழ்கிறது. திருமாலின் பெருமையை ஓங்கி உயர்த்திச் சொல்கிறது.

  .நலம் புரீஇ அம் சீர் நாம வாய்மொழி                          இது என உரைத்தலின்

 எம் உள் அமர்ந்து இசைத்து இறை

 இருங்குன்றத்து அடி உறை இயைக என                                பெரும் பெயர் இருவரைப் பரவுதும் தொழுதே (வரிகள் 63 முதல் 66)

  என்று பாடல் இப்படி முடியும் போது.சிறப்பான பலன்களைத் தரும் சீரான அழகிய வேதம் என்ற பொருளில் (நலம் பூரீஇ அம் சீர் நாம வாய் மொழி)என வேதம் புகழப்படுகிறது திருமாலையும் பலதேவனையும் தொழுது பாடல் முடிகிறது.

  பரிபாடலில் பதினெட்டாம் பாடல்- பரிபாடலின் பதினெட்டாம் பாடல் 56 அடிகளைக் கொண்டுள்ளது குன்றம்பூதனார் இயற்றிய இந்தப் பாடலுக்கு இசை அமைத்தவர் மருத்துவன் நல்லச்சுதனார். இப்பாடலில்இமயம் நிகர் குன்றமான (நிரந்து ஏந்திய குன்றொடு நேர் நிரந்து) திருப்பரங்குன்றத்தையும் அதில் உறையும் முருகனையும் வாயார மனதாரப் புகழ்ந்து போற்றித் துதிக்கிறார் புலவர்.

 இதில்

 சுருதியும் பூவும் சுடரும் கூடி  (வரி 52)

 என்று பாடிவேதம்மலர்கள்சுடர் ஆகியவையுடன் கூடிய முருகனை சுற்றமொடு பிரியாது திருப்பரங்குன்றத்தில் இருந்துவரும் வரத்தை வேண்டி பாடலை முடிக்கிறார் மாபெரும் முருக பக்தரான குன்றம்பூதனார்.

  இப்படி தொட்ட இடம் தோறும் பக்தி மணம் கமழும் பரிபாடல் தமிழுக்குச் சூட்டப்பட்ட மணியாரம். சங்க காலத்தில் அந்தணரும் வேதமும்  உயர்ந்த இடத்தில் வைக்கப்பட்டிருந்ததற்கு பரிபாடலின் பாடல்கள்  ஒரு சிறந்த சான்று என்பதில் ஐயமில்லை!

 அடுத்து பரிபாடல் திரட்டு’ நூலுக்குள் நுழைவோமா?

 

பரிபாடல் திரட்டில் அந்தணரும் வேதமும் !                        ச.நாகராஜன்

   பரிபாடல் திரட்டில் முதலாம் பாடல்-  பரிபாடல் திரட்டு 13  பாடல்களைக் கொண்டுள்ள நூல். முதலாம் பாடல் திருமாலைப் பற்றியது. இருந்தையூர் அம்ர்ந்த இறைவனின் புகழ் பாடும் இந்தப் பாடலில் அந்தணர் இருக்கை பற்றிய வரிகள் வருகின்றன.  இந்தப் பாடல் தொல்காப்பியம் 121ஆம் சூத்திரத்தில் பேராசிரியர் நச்சினார்க்கினியர் உரையில் கண்டெடுக்கப்பட்டது.

  ஒருசார்- அறத்தொடு வேதம் புணர் தவம் முற்றி

விறல் புகழ் நிற்பவிளங்கிய கேள்வித்

திறத்தின் திரிவு இல்லா அந்தணர் ஈண்டி  (வரிகள் 18-20)

 இதன் பொருள்: ஒரு சார் – ஒரு பக்கத்தில்,அறத்தொடு வேதம் புணர் தவம் முற்றி – தர்மத்தொடு  வேதத்தினைப் பின்பற்றித் தவம் புரியும்.விறல் புகழ் நிற்பவிளங்கிய கேள்வித் திறத்தின் திரிவு இல்லா அந்தணர் புகழ் வாய்ந்த புனித நூல்களில் நன்கு புலமை பெற்றோர்நீதியின்று திறம்பாத அந்தணர்.ஈண்டி – சேர்ந்து வாழ்வோர்

 என இப்படி அந்தணர் வாழ்க்கை வேதத்தின் அடிப்படையில் விளங்கும் வாழ்க்கை என்று புகழ்ந்து உரைக்கப்படுகிறது.

 அடுத்து வையையில் அந்தணர் நீராட விரும்பாததை கீழ்க்கண்ட வரிகள் காரணத்துடன் தெரிவிக்கின்றன.

  பார்ப்பார் நீராட மாட்டார்கள் 

ஈப்பாய அடு நறாக் கொண்டது இவ்யாறு என்ப

 பார்ப்பார் ஒழிந்தார் படிவு

மைந்தர் மகளிர் மண விரை தூவிற்று என்று 

அந்தணர் தோயலர் ஆறு    

வையை தேம் மேவ வழுவழுப்பு உற்றென

ஐயர்வாய்பூசுறார்ஆறு (வரிகள் 58-63)

  இந்த ஆற்றில் ஈக்களும் மதுவும் உள்ளது. என்று அந்தணர் அந்த ஆற்றை விட்டு நீங்கினர். மைந்தர் மற்றும் மகளிர் இதில் நீராடியதால் அவர்களின் நறுமணம் இதில் கலந்துள்ளதால் இது தூய்மை அற்றது என்று கூறி அந்தணர் அதில் நீராடவில்லை. – நீரானது பூக்களின் மதுவால் வழுவழுப்பாகியுள்ளது என்று கூறி அவர்கள் தங்கள் வாயையும் நீரால் கழுவ மறுத்தனர்

 அந்தணர்கள் தங்களின் தூய்மையைக் காக்கும் விதத்தை இந்தப் பாடல் தெரிவிக்கிறது.

  பரிபாடல் திரட்டில் மூன்றாம் பாடல். பரிபாடல் திரட்டு மூன்றாம் பாடல் வைகை நதியைப் பற்றியது. இதுவும் தொல்காப்பியம் 121ஆம் சூத்திரத்தில் பேராசிரியர் நச்சினார்க்கினியர் உரையில் கண்டெடுக்கப்பட்டதேயாகும்.

 அறவோர் உள்ளார் அரு மறை காப்ப (முதல் வரி)

 என்ற வரியில் அருமறை காப்பதைப் பற்றிக் குறிப்பிடப்படுகிறது. அறவோர் உள்ளார் என்பதால் தர்ம வழியில் நிற்பவர் அந்தணர் என்பது உரைக்கப்படுகிறது. அவர்கள் வேதத்தைக் காத்து வருபவர்கள் என்பதையும் பாடல் வரி தெரிவிக்கிறது.

  பரிபாடல் திரட்டில் எட்டாம் பாடல்.  இந்தப் பாடல்  புறத்திரட்டில் நகர் என்னும் பகுதியில் வருகிறது.

 நான்மாடக்கூடல் என்னும் மதுரையம்பதியின் சிறப்பை பாடல் வர்ணிக்கிறது.                                                        பூவினுள் பிறந்தோன் நாவினுள் பிறந்த 

நான்மறைக் கேள்வி நவில்குரல் எடுப்ப

ஏம இன்றுயில் எழுதல்   (வரிகள் 7,8,9)

  என்னும் வரிகளில் பிரம்மாவையும் அவன் நாவில் வந்த வேதம் பற்றியும் சிறப்புறக் குறிப்பிடப்பட்டிருப்பதைக் காணலாம்.பூவினுள் பிறந்தவனான ப்ரம்மாவின் நாவினுள் பிறந்த வேதத்தின் குரல் எழுப்புதல் அல்லாது சேரனின் வஞ்சியும் சோழனின் கோழி எனப்படும் உறையூரும் கோழி கூவி எழுவது போல மதுரை மா நகரம் கோவி கூவி எழாது என்பது பாடலின் பொருள்.

  அதாவது சேரனின் நகரமும் சோழனின் நகரமும் சாதாரணமாக கோழி கூவி எழும். ஆனால் பாண்டியனின் மதுரை மாநகரமோ அந்தணர் வேதத்தை ஓதும் குரல் கேட்டே எழும். புலர்காலைப் பொழுதில் அந்தணர்கள் வேதம் ஓத அந்த இனிய ஓசையிலேயே மதுரை தன் காலைப் பொழுதைத் தொடங்கும் என்று அழகுறப் புலவர் விளக்குகிறார். 

 

 



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard