Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: நற்றிணை, அகநானூற்றில் அந்தணரும் வேதமும் ! ச.நாகராஜன்


Guru

Status: Offline
Posts: 7468
Date:
நற்றிணை, அகநானூற்றில் அந்தணரும் வேதமும் ! ச.நாகராஜன்
Permalink  
 


 நற்றிணை, அகநானூற்றில் அந்தணரும் வேதமும் !                         ச.நாகராஜன்

                            எட்டுத் தொகை நூல்களை விளக்கும் பாடல் இது:

நற்றிணை, நல்ல குறுந்தொகை, ஐங்குறுநூறு,   

ஒத்த பதிற்றுப்பத்து, ஓங்கு பரிபாடல்,

கற்றறிந்தார் ஏத்தும் கலியே, அகம், புறம் என்று

இத்திறத்த எட்டுத் தொகை

 நற்றிணை ஒன்பது முதல் பன்னிரெண்டு அடி வரையிலுள்ள நானூறு அகவற் பாக்களின் தொகுதி. இதை நற்றிணை நானூறு என்றும் குறிப்பிடுவர்.

 நற்றிணையின் கடவுள் வாழ்த்தை பாரதம் பாடிய பெருந்தேவனார் இயற்றியுள்ளார். அதைப் பார்ப்போம்:

 ‘மா நிலம் சேவடி ஆக, தூ நீர்

வளை நரல் பௌவம் உடுக்கை ஆக,

விசும்பு மெய் ஆக, திசை கை ஆக,

பசுங் கதிர் மதியமொடு சுடர் கண் ஆக,

இயன்ற எல்லாம் பயின்று, அகத்து அடக்கிய

வேத முதல்வன்’ – என்ப-

‘தீது அற விளங்கிய திகிரியோனே’

 முதலில் பரம்பொருளின் திருவடியை நினைவு கூர்கிறார் பெரும் புலவர்.

பெரிய நிலப்பரப்பைத் தன் சிவந்த அடிகளாகக் கொண்ட்வன்; தூவுகின்ற அலை நீரினைக் கொண்டதும்,சங்கினம் ஆரவாரித்துக் கொண்டிருப்பதுமான கடலினையே  தன் இடுப்பில் உடுக்கையாக அணிந்திருப்பவ்ன, நீலவண்ண ஆகாயத்தினையே தன் திருமேனியாகக் கொண்டிருப்பவன், நான்கு திசைகளையே கைகளாகக் கொண்டிருப்பவன் பசுங்கதிர் நிலவையும் ஒளிக் கதிர் கொண்ட சூரியனையும் கண்களாகக் கொண்டிருப்பவன் இவ்வுலகில் உள்ள அனைத்திலும்பொருந்தி நின்றவன், அவற்றைத் தன்னுள்ளே அடக்கிக் கொண்டு அநேகனாய் அதே சமயம் ஏகனாய் இருப்பவன், நான்மறைகளுக்கும் முதல்வனாக இருப்பவன், அந்தத் திருமால் இந்த நூலை உலகிடத்தே இனிது நிலைபெறச் செய்ய அருள்வானாக என்பதே இந்தப் பாடலின் பொருள்.

  திருமாலை வேத முதல்வன் என்று குறிப்பிடுவதை உற்று நோக்கினால் சங்க இலக்கிய காலத்திற்கு முன்பிருந்தே திருமாலை வழிபடுதலும் வேதத்தைப் போற்றுதலும் தமிழகத்தில் நிலைபெற்றிருந்ததை உணர முடிகிறது.

 ரிக், யஜுர், சாம, அதர்வண்ம் ஆகிய நான்கு வேதங்களே நான்மறை ஆகும்.   மறை என்பது இரகசியப் பொருளைக் கொண்டது என்பதை உணர்த்தும். மேலெழுந்தவாரியாக அர்த்தம் பார்க்கக் கூடாது என்பதே இதன் பொருள்.

 சுருதி என்பதால் கேட்கப் படுவது என்ற அர்த்தத்தைத் தரும்,வேதம் என்பது வித் = அறிதல் என்பதிலிருந்த எழுந்த பதம். கேள்வி, எழுதாக் கிளவி, முதுநூல், என்றெல்லாம் சிறப்புற நான்மறை சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படுகிறது

அகப்பொருளில் உள்ள நானூறு பாடல்களின் தொகுப்பே அகநானூறு ஆகும். ஆசிரியப்பாவில் 13 அடிகள் முதல் 31 அடிகள் வரை இப்பாடல்கள் கொண்டிருக்கும்.

 அகநானூறில் 181ஆம் பாடலில் சிவனையும் நான்மறையையும்  பற்றிய குறிப்பைக் காணலாம் முதுபெரும் புலவர் கபிலர் இப்பாடலில் காவிரியாற்றையும் அதன் சுற்றுப்புறத்தையும் அழகுற கவிதைநயம் படச் சொல்கிறார்.

 நான்மறை முதுநூல் முக்கட் செல்வன்

ஆல முற்றம் கவின்பெறத் தைஇய  (வரிகள் 16,17)

இப்பாடலை முழுமையாகப் படித்தால் சங்க கால மக்களின் வாழ்க்கையின் ஒரு அங்கத்தைத் தெரிந்து கொள்ளலாம்.

இங்கு நான்மறை என்ற சொல் ரிக், யஜுர், சாமம், அதர்வணம் ஆகிய நான்கு வேதங்களைக் குறிக்கிறது என்பதும்  முது நூல் என்பதால் அது தொன்று தொட்டு இருந்து வருவதும் ஆழ்ந்த அர்த்தம் கொண்டதுமாகிய  உலகப் புகழ் பெற்ற வேத  நூல் என்பதும் முக்கட் செல்வன் என்பதால் மூன்று கண்களை உடைய சிவன் என்பதும் தெரிய வருகிறது.ஆலமுற்றம் என்பதால் கல்லால மரத்தின் கீழ் தவம் செய்யும் சிவபெருமானைப் பற்றித் குறிப்பாகச் சொல்லப்படுவதை உணர முடிகிறது.

  இந்தக் கட்டுரையின் கருப்பொருளை எண்ணி உரிய பகுதிகள் மட்டுமே இங்கு தரப்பட்டுள்ளது. முழுப் பாடலை தமிழ் அன்பர்கள் தாமே படித்து இன்புறலாம். உண்மை அர்த்தத்தைக் கண்டு மகிழலாம்.

 நல்ல விளக்க உரைகளை மட்டுமே நாடுதல் வேண்டும். திரித்தும், முறித்தும், பழித்தும், இழித்தும், தனது சுயநல நோக்கத்திற்காக நினைத்ததை எழுதும் உரைகளை அறவே நீக்குதல் வேண்டும் சிலர் பாடல்களில் வரும் வேதம், நான்மறை என்ற மூலச் சொற்களைக் கூட விட்டு விட்டு உரை எழுதுகிறார்கள்.

இவர்களின் தீய நோக்கத்தை உண்மை நாடும் தமிழ் அன்பர்கள் உடனே புரிந்து கொள்ளலாம்..



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard