தமிழ் முச்சங்கம் பற்றிய கட்டுக்கதை
தமிழில் இலக்கிய வரலாறு -கார்த்திகேசு சிவத்தம்பி
அடுத்து, இறையனார் அகப்பொருளுரையிலே தரப்பட்டிருக்கும் முச்சங்கம் பற்றிய ஐதீகக் கதையிலேயே, கடந்தகால இலக்கியத்துக்கான நிகழ்கால அர்த்தத்தை மதிப்பிடும் முயற்சியினை எதிர்நோக்குகின்றோம். இவ்வுரையின் காலம் கி.பி. ஏழாம் நூற்றாண்டின் இறுதியே என்பதை இராம.சுந்தரம் முடிவாக நிறுவியுள்ளார்.21 அதனைப் பொதுவில், கி.பி.7 ஆம் 8ஆம் நூற்றாண்டுக்குரிய ஒரு படைப்பாகவே கொள்வது வழக்கு.
இவ்வுரையிலேயே மூன்று சங்கங்கள் பற்றிய ஐதீக நிலைப்பட்ட முழு விவரங்கள் அடங்கிய, நன்கமைந்த விவரமான 'அறிக்கை' காணப்படுகின்றது. முச்சங்கம் பற்றிய அவ்விவரங்கள் எல்லோர்க்கும் நன்கு தெரிந்தனவே.22 அவற்றினை இங்கு மீட்டும் கூற வேண்டிய தேவையில்லை. ஆனால் அக்கதையிலே கூறப்பட்டுள்ள சில தகவல்கள் பற்றி இங்குக் குறிப்பிடுவது அவசியமாகின்றது.
மேலும் இரு விவரங்களை நினைவூட்டிக் கொள்ளல் வேண்டும்.
அ. இந்த மூன்று சங்கங்களும் மதுரையிலேயே நடத்தப் பெற்றன23 மதுரை, பின்னர் இந்துக்களின் புனிதத் தலங்களுள் ஒன்று ஆகின்றது என்பதனை மனத்திருத்தல் வேண்டும்.
ஆ. முதற் சங்கத்திற் பங்கு கொண்டோரென அக்கதையிலே குறிப்பிடப்பட்டிருக்கும் புலவர்களின் பெயர்கள், இந்துத் தெய்வங்கள் சிலவற்றின் பெயர்களாகும்.
இந்து ஐதீகக் கதைகளில் அடிக்கடி வரும் அகத்தியர், முதலிரு சங்கங்களினதும் அங்கத்தினராகவிருந்தாரென்று குறிப்பிடப்படுகின்றது.
இவ் ஐதீகம், தமிழிலக்கியத்திற் சமணத்தின் நடவடிக்கைகள் மிகச் சிறப்பாகத் தொழிற்பட்ட காலத்தின் பின்னரே, சமண நோக்குச் சார்புடைய அற இலக்கியங்கள் எழுதப்பட்டதன் பின்னரே எடுத்துக் கூறப்படுகின்றது.
சமண மத நிறுவனங்கள் இயங்கிய முறைமை, அந் நிறுவனம் இலக்கியத்தைப் பயன்படுத்திய முறைமை, அவர்களால் (சமணர்களால்) எழுதப்பெற்ற இலக்கியங்கள் அதற்கு முந்தித் தோன்றிய இலக்கியச் செல்நெறிகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டிருந்த முறைமை ஆகியன இப்பொழுது நிலையான இலக்கிய வரலாற்றின் அங்கங்களாகிவிட்டன.24 சமணர்களின் 'மிசனறி' (தேவ ஊழிய) நடவடிக்கையில் வச்சிர நத்தியின் திராவிட சங்கத்துக்குரிய இடம் ஏற்கனவே குறிப்பிடப்பட்டுள்ளது.25
பாண்டிய, பல்லவ அரசுகள், ஒன்றுக்கொன்று போரிட்டுக் கொண்டிருந்தனவெனினும், பக்தி இயக்கத்துக்கு அரசு ஆதரவு வழங்கின.26 பக்தி இயக்கத்தின் முன்னணியில் நின்ற, சைவர்கள், வைஷ்ணவர்கள் ஆகிய இரு பகுதியினருமே தமிழ் என்பது சைவத்துக்கு அல்லது வைஷ்ணவத்துக்குத்தான் உரியது எனக் கொண்டிருந்தனர் என்பதனையும், திருஞான சம்பந்தர், திருமங்கை ஆழ்வா‘ர் போன்றவர்கள் சமணத்தினைக் குரோதத்துடன் எதிர்த்தனர் என்பதனையும் நாம் இவ்வேளை மனத்திருத்திக் கொள்ளல் வேண்டும்.27
இப் பின்னணியிலேயே இறையனார் அகப்பொருளுரையாசிரியரின் தெளிநிலையான இந்துச் சார்பினைக் கண்டு கொள்ளல் வேண்டும்.
ஐதீகவாக்கம் என்பது வரலாற்றினைத் 'தயாரிக்கும்' ஒரு வகைமுறையாகும். இறையனார் களவியலுரையிலே தரப்பட்டுள்ள சங்கம் பற்றிய கட்டுக்கதை, தமிழை இந்துசமயப்படுத்துவதற்கான, முக்கியமாக அதனைச் சைவ மரபின் ஓரங்கமாக ஆக்குவதற்கான ஒரு முயற்சியேயாகும். இவ்வாறு நோக்கும்பொழுது, தமிழிலக்கிய வரலாற்றில் இவ் ஐதீகத்துக்குரிய இடம் பெருமுக்கியமுடைய ஒன்றாகும். வெளிப்படையாகச் சமண, பௌத்தச் சார்புள்ள ஒரு நிறுவனத்தினை ('சங்க'த்தினை) எடுத்துக்கொண்டு அதற்கு ஓர் இந்து உருவும் பொருளும் கொடுக்கும் முயற்சியினை இக்கதையிலே காணலாம். இதனிலும் பார்க்கச் சுவாரசியமானது. அக்கதைக்குள் அரசர்கள் கொண்டு வரப்படும் முறைமையாகும். கதையின் அமைப்பை நோக்கும்பொழுது, அவ்வச் சங்கங்களின் காலத்திலே ஆண்ட அரசர்களின் தொகையும் இலக்கிய நடவடிக்கைகளில் (பாட்டுக் கட்டுவதில்) ஈடுபட்ட அரசர்களின் தொகையும் கதையோட்டத்துக்கு அத்துணை முக்கியமானவையல்ல. ஆனால் அதுவே கதையின் சீவாதாரன பகுதியாக்கப்பட்டுள்ளது. உண்மையில்ல, சங்கம் பற்றிய கதை தொடங்கும் பகுதி பின்வருமாறு தொடங்குகின்றது.
'தலைச் சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம்
என மூன்று சங்கம் இரீஇயனார் பாண்டியர்'
என மூன்று சங்கம் இரீஇயனார் பாண்டியர்'
கடவுளர்களே பங்கு கொள்ளும் ஒரு சங்கத்திற்கு ஓர் அரச தளத்தை கற்பிப்பதன் மூலம், அப்பொழுது மேற்கிளம்பும் பாண்டிய ஆட்சியை, சந்தேகத்துக்கு அப்பாலான ஒரு முறைமையில் முறைவழிப்பட்ட தாக்குவதற்கான முயற்சி இக்கதையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முச்சங்கம் பற்றிய கதை, தமிழிலக்கிய வரலாற்றை சைவத்தின் வரலாற்றுடன் இணைப்பதற்கான முதல் முயற்சியாகும்.
நாயன்மார்கள் தமிழுக்கு முற்றிலும் சைவச் சார்பான தோற்றம்பற்றிக் குறிப்பிடுவதும், தமிழை வடமொழிக்கு இணையாகக் கொள்வதும், இம்முயற்சியின் அடுத்தபடிகளாகும். இவற்றினைப்பற்றிப் பேசும் இவ்வேளையில், தமிழைச் சிவனுடன் தொடர்புபடுத்தும் இம்முயற்சிக்கான பௌத்த பதிற் குறிப்பினைப்பற்றி இங்கு குறிப்பிடலாம்.
'ஆயுங் குணத்து அவலோகி தன் பக்கல் அகத்தியன் கேட்டு
ஏயும் புவனிக்கு இயம்பிய தண் தமிழ் ஈங்க உரைக்க
நீயும் உளையோ எனில் கருடன் சென்ற நீள் விசும்பின்
ஈயும் பறக்கும் இதற்கு என் கொலோ சொல்லும் ஏந்திழையே'
ஏயும் புவனிக்கு இயம்பிய தண் தமிழ் ஈங்க உரைக்க
நீயும் உளையோ எனில் கருடன் சென்ற நீள் விசும்பின்
ஈயும் பறக்கும் இதற்கு என் கொலோ சொல்லும் ஏந்திழையே'
- வீரசோழியம்-பாயிரம் (11)
வீரசோழிய ஆசிரியர் மகாயான பௌத்தத்தைச் சார்ந்தவராகவிருத்தல் வேண்டும். அவர் தமிழை அவலோகி தேஸ்வரரே அகத்தியருக்கு உபதேசித்தார் என்கின்றார் (இது சொல்லப்பட்ட காலம் சைவத் தமிழ் மரபைக் காக்க இராஜராஜன் முதல் சேக்கிழார் வரையுள்ள சோழப் பேரரச ஆட்சியுறுப்பினரே முன்னின்று உழைத்த காலமாகும்). இதே போன்று ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள் பற்றிய மரபும் தமிழ் இலக்கியத்தின் பௌத்த சமணக் கூறுகளை முதன்மைப்படுத்துவதற்கான முயற்சிகளேயாகும். தமிழ்நாட்டில் அவர்களது பண்பாட்டுச் செல்வாக்கு ஒங்காதிருந்த காலத்தில் (9-ம் நூற்றாண்டு முதல் 11-அம் நூற்றாண்டு வரை) தாங்கள் எழுதிய இலக்கியக் கூற்றுக்குத் தனியான ஒரு முக்கியத்துவத்தைக் கொடுக்க முனைந்தது ஆச்சரியத்தைத் தருவதன்று.
குறித்த அப்பண்பாட்டுச் சூழல்களில் வரலாறெழுது முறையியல் தொழிற்பட்ட முறையினை நோக்கும்பொழுது, இந்த ஐதீகங்களை உண்மையில் வரலாழெழுதுவதற்கான முயற்சிகளாகவே கொள்ளல் வேண்டும். எந்த ஒரு மதமும், தனது இலக்கியப் படைப்புக்கள் வெளிவரும் மொழி மீது தனக்குள்ள உரிமையினை முன்வைப்பது அத்தியாவசியமே. அதன் காரணமாக அம்மொழியின் இலக்கியப் பாரம்பரியத்தையே அது தனதாக்கிக் கொள்ள முயல்வது இயல்பே. நமது பண்பாட்டுச் சூழலில் இலக்கிய வரலாறு தொழிற்பட்ட ஒரு சிறப்பான அமிசமாக இதனைக் கொள்ளுதல் வேண்டும்.
மூன்று சங்கங்கள் சரித்திர ரீதியில் இருந்ததா-இல்லையா ?
தொல்காப்பியம், எட்டுத்தொகை நூல்களை கி..பி.8ம் நூற்றாண்டில் படித்த நீலகண்டன் என்பவரால் கட்டிவிடப்பட்ட கதையே முச்சங்க கதையாகும். பாண்டியர்கள் தென்மதுரையிலும் கபாடபுரத்திலும் வாழ்ந்ததாகவோ அவற்றை கடல் கொண்டதாகவோ சங்கப் பாடல்கள் கூறவில்லை.
தொல்காப்பியம், எட்டுத்தொகை நூல்களை கி..பி.8ம் நூற்றாண்டில் படித்த நீலகண்டன் என்பவரால் கட்டிவிடப்பட்ட கதையே முச்சங்க கதையாகும். பாண்டியர்கள் தென்மதுரையிலும் கபாடபுரத்திலும் வாழ்ந்ததாகவோ அவற்றை கடல் கொண்டதாகவோ சங்கப் பாடல்கள் கூறவில்லை.
முச்சங்க கதையை நம்பி சங்க காலத்தை கணிக்க முயல்வது, மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்குவது போல் ஆகும்.
- பக்-30 சங்க கால மன்னர் வரலாறு
வி.பி.புருஷோத்தம்,
தமிழ அரசு உதவித் தொகையோடு வெளியிடப்பட்டது,
Published with TN Govt ASSISTANACE
- பக்-30 சங்க கால மன்னர் வரலாறு
வி.பி.புருஷோத்தம்,
தமிழ அரசு உதவித் தொகையோடு வெளியிடப்பட்டது,
Published with TN Govt ASSISTANACE