இந்த ஆய்வில் சங்க இலக்கியம் மட்டுமே இடம் பெறுகிறது. சங்க இலக்கியம் என்பது : – எட்டுத் தொகை நூல்கள்,பத்துப்பாட்டு நூல்கள்,பதினெண்கணக்கு நூல்கள் ஆகியவையே.
ஈர நெஞ்சத்து அந்தணர் (பரிபாடல் 14) என்பதால் கருணை உள்ளம் கொண்டவர் அந்தணர் என்பது பெறப்படுகிறது
அறவாழி அந்தணன் (குறள் 8)
இமயவில் வாங்கிய ஈர்ஞ்சடை அந்தணன் (கலி 88) என்ற இடங்களில் இறைவனை அந்தணன் என்ற சொல் குறிக்கிறது.
மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கம் குன்றக் கெடும் (குறள் 134)
ஓத்துக் கொளல் என்பது வேதம் ஓதுதல்.
ஒருவேளை வேத்ம ஓதுவதை மறந்தாலும் கூடத் திருப்பி ஓதிக் கொள்ளலாம். ஆனால் ஒழுக்கத்தை இழந்தால் பார்ப்பான் உயர்வு ஒழிந்து இழிவான்.
மறப்பினும் என்று உம் போட்டுச் சொல்லப்படுவதால் வேதம் ஓதுவதை அந்தணன் ஒருபோதும் மறக்க மாட்டான் என்பதை அவர் குறிப்பிடுகிறார்..
மிகக் கடினமான பயிற்சியை மேற்கொண்டிருக்க வேண்டியிருப்பதாலும் தொடர்ந்து தினசரி அதை ஓத வேண்டியிருப்பதாலும் வேதத்தை மாற்றவும் முடியாது. மறக்கவும் முடியாது.
ஜட பாடம், கன பாடம் என்பது எல்லாம் சிக்கல் நிறைந்த ஓதல் பயிற்சிகள். கனபாடத்தில் தேர்ந்தவர்களே கனபாடிகள் ஆவர். ஆனால் இந்த வேதம் ஓதுதல் மறந்தாலும் கூட ஒருவேளை திரும்பப் பெறக்கூடும். ஆனால் ஒழுக்கம் இழந்தாலோ, பிறப்பே கெடும் என அறிவுறுத்துகிறார் வள்ளுவர்.
வேதியர்க்கு அழகு வேதமும் ஒழுக்கமும் என்று இந்த இரண்டையும் இணைத்துப் பின்னாலே வந்த நறுந்தொகை கூறுகிறது.
பார்ப்பான் என்பது மெய்ப்பொருள் அல்லது பிரம்மத்தைப் பார்ப்பான் என்பதைக் குறிக்கும்.
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும் (குறள் 28)
நிறைமொழி மாந்தர் ஆணையில் கிளந்த
மறைமொழி தானே மந்திரம் என்ப என்ற தொல்காப்பிய வரிகளை இங்கு நோக்கினால் அர்த்தம் எளிதாகப் புரியும்.
அந்தணர் நூல் வேதமாகும். அதற்கும் அறத்திற்கும் ஆதியாய் நிற்பது மன்னவனால் செலுத்தப்படும் செங்கோல். ஆகவே அறத்தை அடிப்படையாகக் கொண்டு வேத நூலைப் போற்ற மன்னவன் கோல் செங்கோலாக அமைதல் வேண்டும்.
அருமறை சோரும் அறிவிலான் செய்யும்
பெருமிறை தானே தனக்கு (குறள் 847)
அரிய மறைப்பொருளை உணர்ந்து அதன் வழி நடக்காமல் இருக்கும் அறிவிலாதவர் தனக்குத் தானே பெரும் தீங்கினை இழைத்துக் கொள்வர்.இங்கு உபதேசம் குறிப்பிடப்படுகிறது. கேட்ட மறைப் பொருளை – உபதேசப் பொருளை உட்கொள்ளாதவன் அறியாமையால் தனக்குத் தானே தீங்கு இழைத்துக் கொள்வதை இந்தக் குறள் நன்கு உணர்த்துகிறது.
செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்
ஆன்றாரோ டொப்பர் நிலத்து (குறள் 413)
செவியுணவு என்பது கேள்வி. வேள்வியில் ஆகுதியாக்கப்படும் அவி உணவு தேவருக்கான உணவு. செவி உணவாகிய கேள்வியில் மிக்கார் இங்கு நிலவுலகில் இருப்பினும் கூட அவி உணவைக் கொள்ளும் தேவரோடு ஒப்பாவார்.
கேள்வியையும் வேள்வியையும் வள்ளுவர் கையாளும் பாங்கு நம்மை பிரமிக்க வைக்கிறது.
அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர் செகுத்து உண்ணாமை நன்று (குறள் 259)
இந்தக் குறளில் மாபெரும் அறப் பண்பை வள்ளுவர் வலியுறுத்துகிறார்.ஹவிஸ் என்பது தமிழில் அவி ஆயிற்று. நெய்யை ஆகுதியாக ஹவிஸாகக் கொடுத்து ஆயிரம் வேள்விகளைச் செய்வதைக் காட்டிலும் ஒரு விலங்கின் உயிரைப் போக்கி அதன் ஊனை உண்ணாமை நன்று என்கிறார் வள்ளுவர்.
ஆக, –அந்தணர் அறவோர் எனப்படுவதும் அவர்கள் வேதம் ஓதுதலைச் செய்யும் ஒழுக்கம் உடையவர் என்பதும், இந்த அந்தணர், வேதம், அறம் இவை செழித்திருக்க மன்னவன் செங்கோல் சரியாக இருக்க வேண்டும் என்பதும் வள்ளுவரின் கூற்று.
மறைப்பொருளை உணராமல் இருப்பவன் தனக்குத் தானே கெடுதி செய்து கொள்கிறான் என்பதை வலியுறுத்திய வள்ளுவர் அவி உணவை உட்கொள்ளும் தேவரோடு கேள்விச் செல்வத்தில் மேம்பட்டவர் ஒப்பாவார் என்றும் அவி சொரிந்து ஆயிரம் யாகங்களைச் செய்வதை விட ஒரு உயிரைக் கொன்று அதன் மாமிசத்தை உண்ணாமல் இருப்பது நன்று என்றும் கூறுகிறார்.
வேதம், பார்ப்பான், ஹவிஸ், தேவர், மன்னவன் கோல், அறம் ஆகிய அனைத்தும் சரியான விகிதத்தில் இணைக்கப்பட்ட அறச் சாறை சில குறள்களிலேயே அள்ளித் தருகிறார் வள்ளுவர்.
மிக உயரிய நூலாக வேதம் கருதப்படுவதையும், அதை ஓதுபவர் அறவோர் என்பதையும், அதைக் காப்பதே மன்னவன் கடமை என்பதையும் வள்ளுவர் குறள்களில் நிலை நிறுத்திக் காண்பிக்கிறார்.
இதுவே வேதம் மற்றும் அந்தணர் பற்றிய வள்ளுவர் கொள்கை!
பின்னாலே எழுந்த ஏராளமான தமிழ் இலக்கிய நூல்களில் இந்தக் குறள்களை அடியொட்டிய ஏராளமான பாக்களைப் பார்க்கலாம். அதன் அடியொட்டிய அற்புத வரலாறுகளையும் படிக்கலாம்.
******
சங்க இலக்கியம் குறிக்கும் தெய்வங்களைப் பற்றிய எனது முந்தைய கட்டுரையைப் படித்த தமிழ் ஆர்வலரின் மடலே இந்தக் கட்டுரைத் தொடரை ஆரம்பிக்கக் காரணம். (அவரது மடலைக் கட்டுரையின் விமரிசனப் பகுதியில் காண்க)
பல ஆண்டுகளாக எழுத வேண்டும் என்று நினைத்திருந்த இந்தத் தொடருக்குப் பிள்ளையார் சுழி போட வைத்த அன்பருக்கு நன்றி. சங்க இலக்கியங்களைத் தாமே பயின்றால் இன்று நமக்கு போலியாக ஊட்டப்படும் பல பொய்க்கருத்துக்கள் போகும்; தமிழ்ச் சமுதாயம் மேம்படும்.