ஐங்குறுநூறு-எட்டுத்தொகை நூல்களில் உள்ள ஐங்குறுநூறு மருதம், நெய்தல், குறிஞ்சி, பாலை, முல்லை என்னும் ஐந்து நிலம் சார்ந்த திணைகளில் ஒவ்வொன்றிற்கும் நூறு பாடல்கள் வீதம் 3 அடி முதல் 6 அடி வரை உள்ள மொத்தம் ஐநூறு பாடல்களைக் கொண்டது.
தோழி ஒருத்தி தலைவனிடம் சொல்லும் பாடலாக அமைவது நான்காம் பாடல். ஓரம்போகியார் என்ற புலவர் பாடியது. ஆதனையும் அவினியையும் வாழ்த்தி ஆரம்பிக்கும் இப்பாடல் பகைவர்கள் புல்லைத் தின்னட்டும் பார்ப்பார் .வேதம் ஓதட்டும் என்று கூறுகிறது.
வாழி ஆதன் வாழி அவினி
பகைவர் புல் ஆர்க பார்ப்பார் ஓதுக
என் வேட்டோளே யாயே யாமே
பூத்த கரும்பின் காய்ந்த நெல்லில்
கழ்னி ஊரன் மார்பு
பழனம் ஆகற்க என் வேட்டேமே
இதன் பொருள் ஆதன் வாழ்க! அவினி வாழ்க! பகைவர்கள் புல்லைத் தின்னட்டும். பார்ப்பார் வேதம் ஓதட்டும். என்று விரும்பினாள் தாய்.
கரும்பு பூத்து காய்ந்த நெல் உடைய விளை நிலம் உடையவனின் மார்பு அனைவருக்கும் உரிய சொத்தாக ஆகாமல் (எனக்கு மட்டும்) இருக்கட்டும் என்பது என் ஆசை!
அடுத்து 387ஆம் பாடலைப் பார்ப்போம். இதைப் பாடியவர் ஓதலாந்தையார்.
அந்தணர் செவிலியிடம் சொன்னதாக அமைகிறது இந்தப் பாடல்.
அறம் புரி அருமறை நவின்ற நாவில்
திறம் புரி கொள்கை அந்தணர் தொழுவல் என்று
ஓண் தொடி வினவும் பேதையும் பெண்டே
கண்டனெம் அம்ம சுரத்திடை அவளை
இன் துணை இனிது பாராட்டக்
குன்று உயர் பிறங்கல் மலல இறந்தோளே
அறத்தைப் புரியும் வேதத்தைச் சொன்ன நாவைக் கொண்ட நல்ல கொள்கையை உடைய அந்தணரை மிக்க மரியாதையுடன் தொழுகிறேன் என்று சொல்லி வளையலை அணிந்த என் மகளைக் கண்டீரா என்று வினவுகின்ற பேதைப் பெண்ணிடம், அவர்,“கேள்! சுரத்திடை (வீணான நிலத்தின் ஊடே செல்லும் வழியில்) சிகரங்கள் உடைய மலையைக் கடந்து அவளைப் புகழும் அவளது இன் துணையுடன் கண்டேன்!” என்றார்.
அற நூலான வேதமோதும் அந்தணரை மரியாதையுடன் தொழுவது இங்கு குறிப்பிடப்படுகிறது. அவர் உண்மையை மட்டுமே உரைப்பவர் என்பதால் அவரிடம் தன் மகளைப் பற்றி வினவும் தாயை இப்பாடலில் காண்கிறோம்.
வேதம் உரைக்கும் நா பொய் சொல்லாது அல்லவா!
பதிற்றுப்பத்து
எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான பதிற்றுப்பத்து சேர மன்னர்கள் பத்துப் பேரைப் பற்றி பத்துப் புலவர்கள் பத்துப் பத்தாகப் பாடிய பாடல்களைக் கொண்ட நூல் இதில் இரண்டு பத்துகள் கிடைக்கவில்லை. மீதம் 80 பாடல்கள் கிடைத்துள்ளன.
பாடல் 74 சேர மன்னனைப் புகழ்ந்து பாடும் ஒரு பாடல்.
கேள்வி கேட்டுப் படிவம் ஓடியாது
வேள்வி வேட்டனை உயர்ந்தோர் உவப்ப
ஆரம்ப வரிகளிலேயே மன்னனை கேள்வி கேட்பவன் என்று புகழ்கிறார் புலவர். வேதத்தின் இன்னொரு பெயர் கேள்வி.
அந்த இன்னொரு பெயரால் வேதம் இங்கு குறிப்பிடப்படுகிறது.
படிவம் ஒடியாது என்பதன் மூலம் எந்த வித விதிமுறைகளையும் விடாது என்பது சொல்லப்படுகிறது
வேள்வி வேட்டனை என்பதால் விதி முறையின் படி வேள்விகளை இயற்றியவன் சேர மன்னன் என்பது கூறப்படுகிறது உயர்ந்தோர் உவப்பஎன்பதால் மேல் உலகில் உள்ளோர் அதனால் உவந்தனர் என்கிறார் புலவர். அதாவது வேள்வியினால் தேவர்கள் மனம் மகிழ்ந்தனர் என்பதை புலவர் வலியுறுத்துகிறார்.
ஆக சங்க இலக்கியத்தில் அறம் கூறும் வேத வழியில் நிற்பவன் மன்னன் என்பதும் வேள்விகளை முறைப்படி நடத்துபவன் என்பதும் அப்படிப்பட்ட மன்னனைப் புலவர் புகழ்ந்து போற்றுவதையும் பல இடங்களில் காண்கிறோம்.
நமஸ்தே ருத்ர மன்யவ உதோ த இஷவே நம:
நமஸ்தே அஸ்து தன்வனே பாஹுப்யாமுத தே நம:
என்று கம்பீரமாக கோவிலக்ளிலும் இல்லங்களிலும் இன்று ஓதப்படும் ருத்ரம் உள்ளிட்ட வேத ரிக்குகள் அன்றும் சங்க காலத்தில் மிகுந்த மதிப்புடனும் மரியாதையுடனும் பக்தியுடனும் மன்னர்களாலும் புலவர்களாலும் மக்களாலும் போற்றப்பட்டு வந்திருக்கிறது என்பதை அனைத்து சங்க இலக்கியங்களும் வலியுறுத்துகின்றன.
பரம்பரை பரம்பரையாக தொன்று தொட்டு வழங்கி வரும் வேதம் அதே விதிமுறைகளின் படி இன்றும் ஓதப்பட்டு வருவது, அழியாத ஒரு பாரம்பரியத்தைச் சேர்ந்தவர்கள் பாரத மக்கள் என்பதை வலியுறுத்துகிறது, இல்லையா?!
********
வேதமும் அதை ஓதுகின்ற அந்தணரும் உயரிய இடத்தைப் பெற்றிருப்பதை சங்க இலக்கியம் ஒவ்வொன்றும் அழுத்தம் திருத்தமாக வலியுறுத்துகிறது.