பட்டினப்பாலை-பத்துப்பாட்டில் உள்ள பட்டினப்பாலையைப் பாடியவர் கடியலூர் உருத்திரங்கண்ணனார். பாட்டுடைத் தலைவன் பெரும் புகழ் பெற்ற கரிகால் சோழன். திருமாவளவன் என்ற இயற்பெயரைக் கொண்டவன். இதில் உள்ள அடிகள் 301.
அங்குள்ள உழவர் பெருமக்கள் அந்தணர் பெருமையைப் பரப்புகின்றனர். இதை விளக்கமுற நூலில் காணலாம்.
நான்மறையோர் புகழ் பரப்பியும் (வரி 202)
சங்க காலத்திலேயே நான்கு மறைகளான ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்கள் புகழ் பெற்று விளங்கியமையும், அதை ஓதும் அந்தணர்கள் அனைவரிடமும் நன் மதிப்புப் பெற்றவர்கள் என்றும் இதனால் நன்கு தெரிய வருகிறது.
மதுரைக் காஞ்சி
பத்துப்பாட்டில் உள்ள மதுரைக் காஞ்சி இருக்கின்ற பாடல்களிலெல்லாம் மிகப் பெரியது. 783 அடிகளைக் கொண்டது. இதைப் பாடியவர் மாங்குடி மருதனார். பாட்டுடைத் தலைவன் தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியன்.
இளைஞன் தானே என்று அவனைத் தலையாலங்கானத்தில் தாக்க வந்தனர் பகைவர்கள். அவர்களை ஒடுக்கித் தன் ஆற்றலைக் காட்டினான் அவன். அவனை வியந்து பாடினார் புலவர்.
மதுரையின் சிறப்பைத் தேர்ந்த தமிழ்ச் சொற்களால் கவினுறு கவிதை வடிவில் படிக்க வேண்டுமெனில் அதற்கென இருக்கும் அழகிய நூல் மதுரைக் காஞ்சியே. சங்க கால் மதுரையை அப்படியே படம் பிடித்துக் காட்டுகிறார் மாங்குடி மருதனார். இப்புலவரின் சிறப்பு சொல்லி மாளாது.
மதுரையில் அந்தணர் பள்ளியை விவரிக்கிறார் புலவர் இப்படி :
சிறந்த வேதம் விளங்கப் பாடி
விழுச்சீர் எய்திய ஒழுக்கமொடு புணர்ந்து
நிலம் அமர் வையத்து ஒருதாம் ஆகி
உயர்நிலை உலகம் இவண்நின்று எய்தும்
அறநெறி பிறழா அன்புடை நெஞ்சின்
பெரியோர் மேஎய் இனிதின் உறையும்
குன்று குயின்றன்ன அந்தணர் பள்ளியும் (வரிகள் 468 முதல் 474 முடிய)
குன்றையே குடைந்து செய்தது போல விளங்குகிறது அந்தணர் பள்ளி. (குன்று குயின்றன்ன அந்தணர் பள்ளி).
அவர்கள் சிறந்த வேதத்தைப் பொருள் விளங்க ஓதுகின்றனர். (சிறந்த வேதம் விளங்கப் பாடி)
அவர்கள் மிகச் சிறந்த ஒழுக்கத்துடன் வாழ்கின்றனர். (விழுச்சீர் எய்திய ஒழுக்கமொடு புணர்ந்து)
வெவ்வேறு வகையான நிலங்களை உடைய உலகில் அவர்கள் ஒப்பற்றவராக வாழ்கின்றனர் இருந்த இடமான இங்கிருந்தே உயர் நிலை உலகத்தை எய்துபவர்கள் அவர்கள். (நிலம் அமர் வையத்து ஒருதாம் ஆகி, உயர்நிலை உலகம் இவண்நின்று எய்தும்)
இந்தப் பகுதியை விளக்க வந்த நச்சினார்க்கினியர், அவர்கள் இங்கேயே பிரம்மமாக விளங்குகின்றனர் என்று விளக்குகிறார்.
அவர்கள் அறநெறி வழுவாதவர்கள். அன்புடைய நெஞ்சத்தவர் (அறநெறி பிறழா அன்புடை நெஞ்சின்)
அவர்கள் உயர்ந்த உள்ளம் கொண்டவர்கள். எப்பொழுதும் இனிதாக வாழ்கின்றனர் (பெரியோர் மேஎய் இனிதின் உறையும்)
இப்படி அந்தணரின் சிறப்பும் வேதத்தின் சிறப்பும் மாங்குடி மருதனாரால் நன்கு விளக்கப்படுகிறது.
இனி மதுரையில் காலைப் பொழுது எப்படி மலர்கிறது என்பதைப் பார்ப்போம். இனிய காலைப் பொழுதை அவர் வர்ணிக்கிறார் இப்படி:
போது பிணி விட்ட கமழ் நறும் பொய்கைத்
தாது உண் தும்பி போது முரன்றாங்கு
ஓதல் அந்தணர் வேதம் பாடி (வரிகள் 654 முதல் 656 முடிய)
பொய்கைகளில் போதுக்கள் நல்ல வாசனையோடு மலர்வதால் தேனை உண்ண வரும் வண்டுகள் அங்கு வந்து ரீங்கர்ரம் செய்கின்றன. (போது பிணி விட்ட கமழ் நறும் பொய்கைத்
தாது உண் தும்பி போது முரன்றாங்கு)
அப்போது அந்த புலர்காலைப் பொழுதில் அந்தணர்கள் வேதம் பாடுகின்றனர்.(ஓதல் அந்தணர் வேதம் பாடி)
வேத கீதத்துடன் தினமும் மதுரையின் காலைப் பொழுது மலர்கிறது!
மதுரைக் காஞ்சியில் தொல் முது கடவுள் என்று சிவபிரான குறிப்பிடப்படுகிறார். (வ்ரி 41) அந்த சிவபிரானின் வழியில் வ்ந்த சான்றோன் நெடுஞ்செழியன் என்று புலவர் பிரான் அவனை அடையாளம் காட்டுகிறார்.
அத்துடன் பரந்த பாரத தேசம் ஒன்றே என்பதை விளக்கும் விதமாக
தென் குமரி வட பெருங்கல்
குணகுட க்டலா எல்லை
என்று தேசத்தின் பூகோளப் பரப்பு சுட்டிக் காட்டப் படுகிறது. தெற்கே குமரி (தென் குமரி) வடக்கே பெரிய இமயமலை ( வட பெருங்கல்) கிழக்கிலும் மேற்கிலும் கடல் இவற்றை எல்லையாகக் கொண்ட நாடு( குண குட க்டலா எல்லை)
சிவனே தெய்வம். இமயம் முதல் குமரி வரை ஒரே நாடு. ஒரே பண்பாடு. இப்படி சொல்ப்வர் பாண்டியனின் புகழ் பாடும் சங்க காலப் பெரும் புலவர்!
ஆக இமயம் தோன்றிய நாளிலிருந்து வேதமும் அந்தணரும் புகழ் பெற்று இருந்தமை தெரிய வருகிறது.