பெரும்பாணாற்றுப்படை-பத்துப்பாட்டில் உள்ள திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை,, கூத்தராற்றுப்படை ஆகிய ஐந்தும் ஆற்றுப்படை நூல்களாகும்.
ஆறு என்றால் வழி; படை என்றால் படுத்தல். குறிப்பிட்ட ஒரு வழியில் செல்லும்படி நெறிப்படுத்துவதே ஆற்றுப்படையாக அமைகிறது. இந்த வழியில் சென்று இந்த தலைவனை அடைந்தால் நல்ல நன்கொடை பெறலாம் என புலவர் அறிவுறுத்தும் பாடலே ஆற்றுப்படையாக மலர்கிறது. இந்த வகையில் பெரும்பாணாற்றுப்படையைப் பாடிய புலவர் கடியலூர் உருத்திரங்கண்ணனார்.பாட்டுடைத் தலைவன் தொண்டைமான் இளந்திரையன்.
500 அடிகள் கொண்டது பெரும்பாணாற்றுப்படை..
வறுமையான இசைக் குடும்பம் ஒன்று. அதன் தலைவனை விளிக்கும் புலவர் காஞ்சியை ஆண்டு வந்த தொண்டைமான் இளந்திரையனை அடையும் வழியை விவரிக்கிறார்.
அந்த விவரணத்தில் நாம் பெறுவது அழகிய சங்க காலத் தமிழரின் வாழ்க்கை முறை!
காட்டின் வழியே சென்றால் காண்பது என்ன என்பதை விவரிக்கும் புலவர் அடுத்து பாலை வழி, முலலை நிலம் வழி,மருத நிலம் வழி ஆகியவற்றை விவரிக்கிறார்.
இதை அடுத்து வருவது அந்தணர் குடியிருப்பு.
அங்கே சிறிய பந்தலில் கன்றைக் கட்டி இருப்பர். வீட்டின் முற்றமோ பசுஞ்சாணம் இடப்பட்டு மெழுகப்பட்டிருக்கும். அங்கு கோழியோ நாயோ வராது. அங்குள்ள பசுங்கிளிகள் வேத பாராயணம் செய்யும். அந்த வீட்டில் இருக்கும் பிராம்மணப் பெண்மணி அருந்ததி போன்ற கற்புடையவள். அங்கு சென்றால் நல்ல அரிசிச் சோறும், நல்ல மோரும், கொம்மட்டி மாதுளங்காயின் துண்டுகளை மிளகோடு கறிவேப்பிலல கலந்து மாவடுவோடு பெறுவீர்கள் என்று விவரமாகக் கூறுகிறார் புலவர்.
கவனிக்கவும்: அங்கே போனால், அது பிராம்மணரின் வீடு. உள்ளே விட மாட்டார்கள். ஒன்றும் கிடைக்காது என்று சொல்லவில்லை.மாறாக வேதம் சொல்லும் கிளிகள் சூழ பசுஞ்சாணம் மெழுகிடப்பட்ட அழகிய இடத்தில் அரிசிச் சோறும் மோரும், மாதுளங்காய் கறி மற்றும் மாவடுவும் அந்தணர் தருவர் என்கிறார் புலவர்..
என்ன ஒரு அற்புதமான சூழ்நிலை. என்ன ஒரு அன்பு.பாடல் வரிகளைப் பார்ப்போம்:,
பைஞ்சேறு மெழுகிய – பசுஞ்சாணத்தினால் மெழுகிடப்பட்ட படிவ நல்நகர் – பலவித சடங்குகள் நடக்கும் வீடு
உறி கோழியொடு ஞமலி துன்னாது – கோழி, நாய் அங்கு அண்டாது
வாய்க் கிள்ளை மறை விளி பயிற்றும் – வளைந்த மூக்குகள் கொண்ட கிளிகள் வேத பாராயணம் செய்யும் மறை காப்பாளர் – வேதங்களைக் காத்து வரும் அந்தணர் உறைபதி சேப்பின் – (அவர்கள்) உறையும் இல்லம் சென்றால் வானத்து வடவயின் விளங்கும் சிறுமீன் புரையும் கற்பின் – வானத்தின் வடக்கே திகழும் அழகிய சிறு நட்சத்திரமான அருந்ததி போல
நறுநுதல் வளைக்கை மகடூஉ – நல்ல நெற்றியை உடைய வளையல்களை அணிந்த பெண்கள் இருப்பர் வயின் அறிந்து அட்ட – மிக நன்றாக சமைக்கப்பட்ட
சுடர்க்கடை பறவைப் பெயர்ப்படு வத்தம் – சூரியாஸ்தமனத்தில் உள்ள பறவையின் பெயர் கொண்ட பிரமாதமான உணவு (அரிசிச் சோறு)
கஞ்சக நறுமுறி அளை இ – நறுமணமுடைய கறிவேப்பிலை கலந்த
பைந்துணர் நெடுமரக் கொக்கின் நறுவடி விதிர்த்த – புதிய பெரிய மாமரத்தினின்று எடுக்கப்பட்ட மாவடு விதிர்த்த – கலக்கப்பட்ட
தகைமாண் காடியின் – அருமையான ஊறுகாயுடன் கூட
வகைபடப் பெறுகுவீர் – பல வித வகை உணவைப் பெறுவீர்!
காழ்ப்புணர்ச்சியோ பகையுணர்ச்சியோ இல்லாத ஒரு சமுதாயம். அந்தணரும் இசைக் குடும்பமும் இணைந்து உண்ணும் ஒரு அருமையான விருந்துச் சாப்பாடு!
அடுத்து 315, 316 அடிகளில் அந்தணரும் வேள்வியும் உரைக்கப்படுகிறது.
நீர்ப்பெயற்று என்று ஒரு ஊர். அந்த ஊரின் சிறப்போ சொல்லி மாளாது. அங்குள்ள பெண்டிர் தங்களுக்குத் தெரிந்த நட்புடன் அதிகாலை நேரத்தில் நீரில் விளையாடுகின்றனர். அவர்கள் தங்களது தங்கக் காதணிகளை கரையிலே கழட்டி வைக்க அவ்ற்றை மீனொன்று தன் உணவென எடுத்து தனியே பறவைகள் நிறைந்துள்ள் பனைமரம் அருகே செல்லாது வேதம் சொல்லும் அந்தணர்கள் யாகம் இயற்றும் வேள்வித் தூணத்து அருகில் கொண்டு வைக்கிறது.
கேள்வி அந்தணர் அருங்கடன் இறுத்த
வேள்வித் தூணத்து அசைஇ (வரிகள் 315-316)
எத்தகைய அற்புதமான நடைமுறை வாழ்க்கைச் சித்திரம். வேதத்தின் பெருமையும் அதை உரைக்கும் அந்தணரின் வாழ்க்கையும் விருந்தோம்பும் பண்பும் மாண்புறச் சித்தரிக்கப்படுகிறது!
சிறுபாணாற்றுப்படை- அடுத்து சிறுபாணாற்றுப்படையில் வரும் வரிகளைக் காண்போம்:
இது தொண்டை நாட்டு ஓவியர் குடியில் பிறந்த (ஒய்மான் நாட்டு) நல்லியக் கோடன் மேல் இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடிய பாடல்.
அருமறை நாவின் அந்தணர்க்காயினும்
கடவுள் மால்வரை கண் விடுத்தன்ன
அடையா வாயில் (வரிகள் 204,205,206)
நல்லியக்கோடனின் அரண்மனை வாயில் பொருநர்க்கும் புலவர்க்கும் மூடப்படாத வாயில். அருமறையை நாவிலே கொண்டிருக்கும் அந்தணர்க்கும் கடவுளின் உயர் மலை கண் திறந்து இருத்தாற்போல மூடப்படாத வாயிலாகும்
ஆக சிறப்புடை ஒரு தலைவனுக்கு உள்ள நல்லிணக்கணத்தில் அந்தணரை அவன் வரவேற்று உபசரிப்பதும் ஒன்று என்பது இதிலிருந்து பெறப்படுகிறது! இந்த இரு ஆற்றுப்படை நூல்களிலும் அந்தணரும் அவர் நாவில் உச்சரிக்கும் வேதமும் பற்றிய அருமையான கருத்துக்கள் இடம் பெறுவதைக் காண்கிறோம்; சங்க காலத்தில் வேதம் மற்றும் அந்தணருக்கான சிறப்பான இடம் பற்றி அறிகிறோம்!