உரை: எவ்வம் சூழாது விளங்கிய கொள்கை - பிற வுயிர் கட்குத் தீங்கு நினையாமல் விளக்கமுற்ற கொள்கையாலும்; காலை யன்ன சீர்சால் வாய் மொழி - ஞாயிறு போலத் தப்பாத வாய்மை யுரையாலும்; உரு கெழு மரபின் கடவுள் பேணியர் - உட்குப் பொருந்திய முறைமையினையுடைய முனிவர்களைப் பரவுதற்காக; சொல் பெயர் நாட்டம் கேள்வி நெஞ்சம் என்ற ஐந்துடன் போற்றி - சொல்லிலக்கணமும் பொருளிலக்கணமும் சோதிடமும் வேதமும் ஆகமமும் என்ற ஐந்தினையும் ஒருங்கே கற்று; அவை துணையாக - அவற்றா லெய்திய புலமையைத் துணையாகக்கொண்டு; கொண்ட தீயின் சுடர் எழு தோறும் - எடுத்த வேள்வித் தீயின் கண் சுடர் எழுந்தோறும்; விரும்பு மெய் பரந்த - உள்ளத் தெழுந்த விருப்பம் மெய்யின் கண் பரந்து வெளிப்படுதற்குக் காரணமான; பெரும் பெயர் ஆவுதி - பெரிய பொருளைப் பயக்கும் ஆவுதிப் புகையும் எ-று
உறுநோய் தாங்கல், பிற வுயிர்கட்குத் தீங்கு நினையாமை எனத் தவத்திற் குரு வென்று கூறிய இரண்டனுள், பிறவுயிர்க்குத் தீங்கு நினையாமை யுளதாகியவழி உறு நோய் தாங்கலாகிய ஏனையது தானே கைகூடுதலின், "எவ்வஞ் சூழாமை" யொன்றையே எடுத் தோதினார். எவ்வுயிர்க்கும் எவ்வம் நினையாதாரை மன்னுயி ரெல்லாம் கைகூப்பித் தொழு மென்ப வாகலின், அத் தொழுதகு ஒழுக்கத்தை "விளங்கிய கொள்கை" யென்றார். "குலஞ்சுடுங்கொள்கை பிழைப்பின்" (குறள் 1019) என்பதனால் கொள்கை ஒழுக்கமாதல் காண்க. ஞாயிறு, நாட் காலையில் தோன்றி இருணீக்கி யொளி நல்குவது பற்றிக் காலை யெனப்பட்டது.
ஞாயிற்றின் வாய்மை யுணர்த்துவது அது செய்யும் காலமாதல் பற்றிக் காலையை வாய்மைக்கு உவமையாக்கி, "காலை யன்ன சீர்சால் வாய் மொழி" யென்றார். "வாய்மை யன்ன வைகல்" ( கலி. 35) என்று பிறரும் கூறுப. "பொய்யாமை யன்ன புகழில்லை" ( குறள். 296) என்பதுபற்றி வாய்மொழி "சீர்சால் வாய்மொழி" யெனப்பட்டது. சொல்லும் செயலும் வாய்மை தெளிதற்குக் கருவியா மாயினும். சொல் சிறந்தமைபற்றி, வாய்மை யென்னாது "வாய்மொழி" யெனல் வேண் டிற்று. காலை யன்ன வாய்மொழி யென்றதற்குப் பழைய வுரைகாரர், "ஆதித்தனைப் போல எஞ்ஞான்றும் தப்பாதாகிய மெய்ம்மொழி" யென் றும், "மொழியா னென ஆனுருபு விரிக்க; ஒடு விரிப்பினு மமையும்" என்றும் கூறுவர்.
எவ்வம் சூழாக் கொள்கையும் காலை யன்ன வாய்மையும் உடைய ராதலின், ஏனையோ ருள்ளத்தே அவரைக் கண்டவழி உட்குத் தோன்றுத லால் முனிவரை, "உருகெழு மரபின் கடவுள்" என்றார். பொறி புலன்களின் செயலெல்லையைக் கடந்தமைபற்றி மக்கட் பிறப்பினராகிய முனிவர் கடவுளெனப் பட்டனர் என்றுமாம்; "முத்தேர் முறுவலாய் நாமணம் புக்கக்கால், இப்போழ்து போழ்தென் றதுவாய்ப்பக் கூறிய, அக் கடவுள் மற்றக் கடவுள்" ( கலி. 93) என முனிவர் கடவுளாகக் கூறப்படுமாறு காண்க. பேணிய ரென்னும் வினையெச்சம் கொண்ட வென்னும் வினைகொண்டது.
சொல், சொல்லிலக்கணம். பெயர் - பொருள்; எனவே பொரு ளிலக்கணமாயிற்று. பழையவுரைகாரரும், "பெயர், பொருளிலக்கணம் சொல்லும் நூல்; 'பெற்ற பெரும்பெயர் பலர்கை யிரீஇய' ( பதிற்.90) என இத் தொகையுண் மேலே வநதமையால் பெயரென்பது பொருளாம்" என்பர். நாட்டம், சோதிடம். கேள்வி - வேதம்; வேதம் எழுதப் படாது வழிவழியாய்க் கேட்கப்படும் முறைமை யுடையதாகலின், கேள்வி யெனப்பட்டது. நெஞ்சம், ஆகமம்; சொல் முதலிய நான்கையும் முற்றக் கற்றுணர்வதால் உளதாகும் பயன் இறைவன் றாளை வணங்குத லென்ப வாதலானும், அந்நெறிக்கண் நெஞ்சினை நிறுத்திப் பெறுதற்குரிய ஞானமும் வீடு பேறும் பெறுவிக்கும் சிறப்புடைய அருணூலாதல்பற்றி, ஆகமத்தை "நெஞ்ச" மென்றார். செவி முதலிய அறி கருவிகளால் உணரப்படும் உலகியற் பொருள்களின் பொய்ம்மை யுணர்ந்து கழித்த வழி யுளதாய் நிற்கும் ஞானப் பொருள் நெஞ்சால் உய்த்துணரப்படுவ தன்றிப் பிறிதோராற்றால் அறியப்படுவ தன்மையின், நெஞ்சினை அந் நெறிக்கட் செலுத்தி ஞானக்காட்சி பெறுவிக்கும் சிறப்புடைமைபற்றி, ஆகமத்தை நெஞ்சமென்றா ரென்றுமாம்.இனிப் பழையவுரைகாரர், "நெஞ்ச மென்றது இந்திரியங்களின் வழியோடாது உடங்கிய தூய நெஞ்சினை" யென்பர்; ஏனைச் சொல் பெயர் முதலியன போல நெஞ்சம் நூற்காகாது வேறாயின், ஐந்தென்னும் தொகை பெறுதல் பொருந்தா தாதலால் அது பொருளன்மை யுணர்க. அவை, சொல் முதலிய ஐந்தன் அறிவு. வேதம் முதலியவற்றின் அறிவு பொது அறிவும், ஆகம வறிவு உண்மை யறிவுமாம் எனத் தேர்ந்து கொள்க. "ஆகம மாகிநின் றண்ணிப்பான் றாள்வாழ்க" ( திருவா. சிவபு. 4 ) என மணிவாசகர் கூறுதல் காண்க. முனிவர் கடன் கேள்வியொடு பயின்ற வேள்வியால் இறுக்கப் படு மென்ப வாகலின், கடவுட் பேணியர் கொண்ட தீ யென்றும், இத் தீயினை யோம்புதற்கு மேலே கூறிய சொல் முதலிய வைந்தன் கேள்வியும் துணையா மென்பது பற்றி அவை துணையாகக் கொண்ட தீ யென்றும் கூறினார்; "வேள்வியால் கடவு ளருத்தினை கேள்வியின், உயர்நிலை யுலகத் தைய ரின்பு றுத்தினை" (பதிற். 70) என்று பிறரும் கூறுதல் காண்க. வேள்வித் தீ சுடர் விட்டெழுங்கால், அதனைக் கடவுளர் விரும்பியேற்று வேட்கும் தம் கருத்து நிறைவிப்ப ரென்ற விருப்பந் தோன்றி உள்ளத்தே உவகை மிகுவிப்ப, அது மெய்யின்கண் வெளிப்பட்டு நிற்குமாறு தோன்ற, "விரும்பு மெய் பரந்த" என்றார். விருப்பு, விரும்பென மெலிந்தது; பழையவுரைகாரர், "விருப்பு மெய்யென்னும் ஒற்று மெலிந்தது" என்றார். ஆவுதியால் வேள்வி செய்வோர் தாம் கருதும் பொருள் கருதியவாறு பெறுப வென்னும் நூற்றுணிபு பற்றி, "பெரும்பெய ராவுதி" யென்றார். ஆவுதி வடசொற் சிதைவு.
8-13 வருநர்..................ஆவுதி
உரை:வருநர் வரையார் வார வேண்டி - தம்பால் வரு வோர் வரைவின்றி யுண்ண வேண்டி; விருந்து கண் மாறாது உணீஇய பாசவர் - விருந்தோம்பற் கின்றியமையாத அன்பு மாறாதே உண்பித்த ஆட்டு வணிகர்; ஊனத்து அழித்த வால் நிணக் கொழுங் குறை - ஊனை வெட்டும் மணைமேல் வைத்துக் கொத்தித் துண்டித்த நல்ல நிணம் பொருந்திய இறைச்சி; குய்யிடு தோறும் கடலொலி கொண்டு ஆனாது ஆர்ப்ப - வேக வைத்துத் தாளிதம் செய்யுந்தோறும் கடலொலி போல அமையாது ஒலிக்க; செழு நகர் நாப்பண் - செழுமையுடைய மனையின் கண்ணே; அடும் மை எழுந்த அடு நெய் ஆவுதி - அடுதலாற் புகை யெழுந்த அடி சிலின்கண் பெய்த நெய்யாகிய ஆவுதிப் புகையும் எ- று
ஆயர் முல்லைக்கண்ணி சூடுப வாதலின் "முல்லைக்கண்ணிப் பல் லான் கோவலர்" என்றார்; "புல்லினத் தாய மகன்சூடி வந்ததோர், முல்லை யொருகாழும் கண்ணியும்" (கலி. 115) என்று பிறரும் கூறுவர். ஆயரினத்திற் புல்லினத்தாயர், கோவினத்தாயர், கோட்டினத்தாயர் எனப் பல ருண்மையின், ஈண்டு இவர் கோவினத்தாய ரென்பதுபடப் "பல்லான் கோவலர்" என்றார். ஆ பலவாதலின், அவை நன்கு மேய்தற் குரிய புலம் என்றற்குப் "புல்லுடை வியன்புலம்" என்றார். ஆக்கள் தமக்கு வேண்டிய புல்லை நிரம்பப் பெறு மெனவே, அவற்றையுடைய ஆயர் பெறுவன கதிர்மணி யென்றும், அம் மணிகளும் கடத்திடைப் பெறப்படுகின்றனவென்றும் கூறினார். "கல்லிற் பிறக்கும் கதிர்மணி" (7) என்பது நான்மணிக்கடிகை. மிதியல் செருப்பு, மிதியாகிய செருப்பல்லாத மலையாகிய செருப்பு; எனவே, செருப்பென்னும் மலை யென்றவாறாம். "செருப்பென்பது ஒரு மலை; மிதிய லென்பது அடை; மிதி யென்று செருப்பிற்குப் பேராக்கிச் செருப்பல்லாத செருப்பென்று வெளிப்படுத்தானாக வுரைக்க" என்றும், குவியற்கண்ணி யென்னும் தொடை நோக்கி மிதியற் செருப்பென வலிந்த" தென்றும், "மிதியற் செருப்பென்பதற்குப் பிறவாறு சொல்லுவாரு முள" ரென்றும் கூறுவர் பழையவுரைகாரர். பூழியர், பூழி நாட்டவர். இப் பூழி நாடும் சேரர்க் குரித் தென்பது "பூழியர் கோவே பொலந்தார்ப் பொறைய" (பதிற். 84) என்று பிறரும் கூறுமாற்றா லறியலாம். வெட்சி, கரந்தை, வஞ்சி, உழிஞை, நொச்சி, தும்பை, வாகை எனப் போர்க்கண்ணி பல வாதலால், அவற்றை யணியும் மழவரை, "குவியற் கண்ணி மழவர்" என்றார். பழையவுரைகாரர். "குவியற் கண்ணி யென்றதற்கு வெட்சி முதல் வாகை யீறாய போர்க்கண்ணி யெல்லாம் குவிதலையுடைய கண்ணி யென்க" என்பர். மழவர் ஒருவகை வீரர். இவர் குதிரைப்படைக் குரியராய்ப் போருடற்றும் சிறப்புடையரென மாமூலனார், "வண்டுபடத் ததைந்த கண்ணி யொண்கழல், உருவக் குதிரை மழவர்" (அகம். 2) என்றும், "கறுத்தோர், தெம்முனை சிதைத்த கடும்பரிப் புரவி, வார்கழற் பொலிந்த வன்கண் மழவர்" (அகம். 187) என்றும் கூறுகின்றார்.
25-29. பல்பயம்.........பொருந
உரை: பல் பயந் தழீஇய - பல்வகைப் பயன்களை நல்கும் காடு பொருந்திய; பயங்கெழு நெடுங் கோட்டு - தானும் நல்ல பயன் தருவதாகிய நெடிய உச்சியினையுடைய; நீர் அறல் மருங்கு வழிப்படா - நீர் போதரும் பக்கத்தே மேலேறிச் செல்லுத லில்லாத; பாகுடிப் பார்வல் கொக்கின் பரி வேட்பு அஞ்சா - சேய்மையிலிருந்தே நுனித்து நோக்கும் கொக்கின் பரிவேட்டத் துக்கு அஞ்சுத லில்லாத; சீருடைத் தேஎத்த முனைகெட விலங் கிய - புகழ் படைத்த நாட்டினிடையே பகைவர் போருடற்றா வாறு குறுக்கிட்டுக் கிடக்கும்; அயிரை - அயிரை யென்னும்; நேருயர் நெடு வரைப் பொருந - நேரிதாய் உயர்ந்த நெடிய மலைக்குத் தலைவனே எ-று.
பல் பய மென்றது, மலையைத் தழுவிக் கிடக்கும் காடுபடு பொருள். பயங்கெழு வெனப் பின்னர்க் கூறியது மலைபடு பொருள். நீரறல், இரு பெயரொட்டு. நெடுங்கோட்டு, நேருயர் நெடுவரை அயிரை, நீர் அறல் மருங்கு வழிப்படா, பரிவேட் பஞ்சா அயிரை, முனைகெட விலங்கிய அயிரை என இயையும். அறல் மருங்கு வழிப்படா அயிரை யெனவும், கொக்கின் பரிவேட் பஞ்சா அயிரை எனவும் நின்று மீனன்மை காட்டி நிற்கும் இத் தொடர்கள், அயிரை மலைக்கு வெளிப்படை. நீரோடுங்கால் அயிரை மீன் அதனை எதிர்த் தேறிச் செல்லும் இயல்பிற் றாகலின் அதனை விலக்கற்கு, "நீரறல் மருங்கு வழிப்படா" வென்றும்,அம் மீன் கூர்த்த பார்வையினையுடைய கொக்கிற்கு அஞ்சுவது குறித்துப் "பாகுடிப் பார்வல் கொக்கின் பரிவேட்பு அஞ்சா" என்றும் கூறினார். பரிவேட்பு- விரைந்து குத்தும் கடுமை. இம் மீனைப் பரதவர் அசரை யென்பர். இது பெரும்பான்மையும் நீர் மட்டத்துக்குச் சிறிது உள்ளேயே உலவுவது. அந்நிலையிற் சிறிது பிறழ்ந்தவழி இம் மீன் கொக்கின் பார்வையிற் படுத லின், அது ஞெரேலெனப் பாய்ந்து கவர்தலின், கொக்கின் பரிவேட்புக் கஞ்சுவதாயிற்று. பிறரும், "தண்கடற் படுதிரை பெயர்த்தலின் வெண் பறை, நாரை நிரைபெயர்ந் தயிரை யாரும்" (குறுந். 166) என்பது காண்க. கடலிடத்தே யன்றிச் சிறுசிறு நீர் நிலைகளிலும் பழனங்களிலும் இது வாழ்வதுண்டு. ; "அயிரை பரந்த வந்தண் பழனம்" (குறுந். 178) எனவருமாறு காண்க. பிறாண்டும், *"அயிரைக் கொழுமீ னார்கைய... வெண்குருகு" (பதிற். 29) என்பது ஈண்டு ஒப்புநோக்கத்தக்கது. பாகுடிப் பார்வல், சேய்மையி னின்றே நுனித்துக் காணும் பார்வை. "பரிவேட் பஞ்சா வயிரை யென்று வெளிப்படை கூறுகின்றா னாதலின், அதற்கேற்ப நீரறல் மருங்கு வழிப்படா வென்ற பெயரெச்ச மறையே பாடமாதல் வேண்டும்; இனிப் படாதென்று வினையெச்ச மறையாகிய பாடத்துக்கு நீரற்ற விடத்தில் தான் படாத படியாலே கொக்கின் பரி வேட்புக் கஞ்சா அயிரை யென வுரைக்க" என்பர் பழையவுரைகாரர். பாகுடி யென்பது நாட்டு மக்கள் செலுத்திய வரி வகைகளுள் ஒன்றாக விக்கிரம சிங்கபுரக் கல் வெட்டால் (A.R. No. 297-1916)) தெரி கிறது. கூர்மை போலும் என்றார் உ.வே, சாமிநாதையர்.
பல் பயந் தழீஇய நாடாதலின் இதனைத் தம் வயமாக்கிக்கோடலை விரும்பிப் போதரும் பகைவேந்தர் போர் செய்து எளிதில் மேல் வாரா வாறு குறுக்கே அரண்போல நின்று விலக்கிய நெடுமலை யென்றற்கு "முனைகெட விலங்கிய நேருயர் நெடுவரை" யென்றார்.
30-9 யாண்டு.........பலவே
உரை: பிழைப் பறியாது யாண்டு பய மழை சுரந்து- பெய்யாது பொய்த்தலின்றி யாண்டு தோறும் மழை பெய்து பயன் விளைத்தலால்; மாந்தர்க்கு நோயில் ஊழி யாக-மாந் தர்க்கு யாண்டுகள் நோயில்லாத காலமாய்க் கழிய; மண்ணா வாயின் மணம் கமழ் கொண்டு-மண்ணுதல் செய்யாவிடத்தும் நறுமணமே கொண்டு;கார் மலர் கமழும் தாழிருங் கூந்தல்- மண்ணிய வழி முல்லை மலரின் நறுமணங் கமழும் தாழ்ந்த கரிய கூந்தலையும்;ஒரீஇயின போல-பொய்கையில் நாளத்தின் நீங்கியன போல; இரவு மலர் நின்று-இரவுப் போதிலும் மலர்ந்து நின்று; திருமுகத்து அலமரும் பெருமதர் மழைக்கண்-அழகிய முகத்திடத்தே சுழலும் பூப்போன்ற பெரிய மதர்த்த குளிர்ந்த கண்ணையும்; அலங்கிய காந்தள் இலங்கு நீர் அழுவத்து-அசைந்த காந்தள் பூத்து விளங்கும் கரையையுடைய நீர் யாற்றின் கரை யிடத்தே நின்ற; வேயுறழ் பணைத்தோள் இவளோடு-மூங்கிலை நிகர்க்கும் பெரிய தோளையுமுடைய இவளுடன் கூடி நின்று; பல ஆயிர வெள்ளம் வாழிய-பல்லாயிர வெள்ளம் வாழாவாயாக எ-று.
மழை பிழைப்பறியாது பயன் சுரத்தலால் நாடு வசியும் வளனும் சிறந்து பசியும் பிணியும் முற்றவும் இல்லையாதல் ஒருதலையாகலின், "பயமழை சுரந்து நோயில் மாந்தர்க் கூழியாக" என்றார். மாந்தர்க்கு நோயில் ஊழியாக வென மாறிக் கூட்டுக. மண்ணாக் காலத்தும் தேவி யின் கூந்தல் நறுமணமே கமழ்வ தென்றற்கு "மண்ணா வாயின் மணம் கமழ் கொண்டு" என்றார்; "அரிவை கூந்தலின் நறியவு முளவோ" (குறுந் 2) என்று பிறரும் கூறுதல் காண்க. காவலன் நாடு காவற்கும் வினை செய்தற்கும் பிரிந்தவழிக் கற்புடை மகளிர் தம்மை யொப்பனை செய்துகொள்ளா ராகலின், "மண்ணா வாயின்" என்றார். மண்ணாவாயி னும் என்னும் உம்மை தொக்கது. மண்ணுதல், ஒப்பனை செய்தல். கார்மல ரென்றார், முல்லை கார்காலத்து மலரும் இயல்பிற்றாதலால், மண்ணியகூந்தல் அகிலும் ஆரமும் முதலிய பல விரைப் பொருளின் மணம் கொண்டு கமழு மாயினும், தேவியின் கூந்தல் சிறப்புடைய முல்லை யணிந்து அதன் நறுமணமே சிறக்கு மென்பது தோன்ற, "கார்மலர் கமழும் தாழிருங் கூந்தல்" என்றார். "கமழகில் ஆரநாறு மறல்போற் கூந்தல்" (குறுந். 286) என்பது காண்க. மண்ணாக்கால் நறுமணமும் மண்ணியக்கால் முலை மணமும் என்றது, தேவியின் கற்புச் சிறப் புணர்த்திநின்றது. பொய்கையி லென்பது அவாய்நிலை; எனவே இது தாமரையாயிற்று. பொய்கையில் இரவுப்போதிலும் கூம்புதலின்றி விரிந்து திகழ்வதொரு தாமரைப்பூ வுளதேல் அது நிகர்க்கும் கண்ணெண் றதனால், இஃது இல்பொரு ளுவமை. இனிப் பழையவுரைகாரரும், "ஒரீஇயின போல வென்பதற்குப் பொய்கை யென வருவித்துப் பொய் கையை யொருவினபோல என வுரைக்; இனி மேற்சொன்ன கூந்தலை ஒரீஇயின போல வென்பாரு முளர். இரவு மலர் நின்றென்பது பொய்கைப் பூப்போலன்றி இரவுக் காலத்தும் மலர்ச்சி நிலைபெற் றென்றவா" றென்பர். பொய்கையில் நீங்கியன போல முகத்தே அலமரும் என்றது, பொய்கைக்கண்ணே நாளத்தின் நீங்கி நீர்மேல் அலமரும் பூப்போல முகத்திடத்தே கண் அலமரும் என்க. பெருமை, ,கண்ணிற் கிலக்கணமாகலின், "பெருமதர் மழைக்கண்" என்று சிறப் பித்தார்.
நீரழுவம், ஆழ்ந்த நீருள்ள யாறு. காந்தள் இலங்கும் யாறு எனவே, யாற்றின் இரு கரையும் எய்தும்; அவ்விடத்தே நின்ற வேய் என்றது, அதன் குளிர்ச்சியைச் சிறப்பித்தவாறு. "நீரழுவத்துவே யென்றது, ஒருநாளும் உடல் வெம்மையாற் கொதியாது குளிர்ந்தே யிருக்கும் தோள் என்றற் கென்க" என்பர் பழையவுரைகாரர். காந்தளையுடன் கூறியது, தோளிற்கு வேய் போலக் கைக்குக் காந்தள் உவமநலஞ் சிறந்த தென் றற்கு. வாழ்க்கைத் துணையாதலால், அரசற்கு வாழ்வு வேண்டி வாழ்த்தலுற்ற ஆசிரியர், "இவளோடு ஆயிர வெள்ளம் வாழிய பலவே" என்றார். பல வென்பதை ஆயிரத்தோடு மாறிக் கூட்டுக. வெள்ளம், ஒரு பேரெண்.
இனி, "அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும்" (தொல் பொ. 75) என்ற சூத்திரத்து, "ஐவகை மரபின் அரசர் பக்கமும்" என்பதற்கு, இப்பாட்டினைக் காட்டி, இதன்கண் அரசன் "ஓதியவாறும் வேட்ட வாறும் காண்க." என்றும், "வழக்கொடு சிவணிய வகைமை யான" (பொ. 86) என்ற சூத்திர வுரையில், "மிதியற் செருப்பிற் பூழியர் கோவே....அயிரைப் பொருந" என்ற இது "மலை யடுத்தது" என்றும், நச்சினார்க்கினியர் கூறுவர்.
மண்படு மார்பன், மழவர் மெய்ம்மறை, அயிரைப் பொருநன் என அரசன் சிறப்பும், "மண்ணா வாயின் மணங்கமழ் கொண்டு, கார்மலர் கமழும் தாழிருங் கூந்தல்" என்பது முதலாகத் தேவியின் சிறப்பும் பாடி, "ஆயிர வெள்ளம் வாழிய பலவே" யென வாழ்த்தலின், இது செந் துறைப் பாடாண் பாட்டாயிற்று.
உரை: நெடு வயின் ஒளிறும் மின்னுப் பரந் தாங்கு-நெடிய விசும்பின்கண் விளங்குகின்ற மின்னல் பரந்தாற் போல; புலியுறை கழித்த புலவு வாய் எஃகம்-புலித்தோலாற் செய்த உறையினின்றும் வாங்கிய புலால் நாறும் வாளை; மேவல் ஆடவர் வலனுயர்த் தேந்தி-நாளும் போரை விரும்பும் வீரர் தம் வலக் கையில் விளங்க வேந்தி; ஆர் அரண் கடந்த தார்-பகைவருடைய அரிய அரண்களை யழித் தேகும் தமது தூசிப் படையால்; அருந் தகைப்பின்-கடத்தற்கரிய பகைவரது அணிநிலையுட் பாய்ந்து; பீடு கொள் மாலைப் பெரும்படைத் தலைவ-வென்றி கொள்ளும் இயல்பினையுடைய பெரிய தானைக்குத் தலைவனே எ-று
நிலத்தினும் கடலினும் நெடுமையும் பரப்பு முடைமைபற்றி விசும்பு "நெடுவயி" னெனப்பட்டது. இது நெடிதாகிய இடத்தையுடைய விசும்பென விரிதலின், அன்மொழித்தொகையாய் விசும்பிற்குப் பெயராயிற்று. புலியுறையினின்றும் கழித்த எஃகம், முகிலிடைத் தோன்றும் மின்னுப் போறலின், "நெடுவயின் மின்னுப் பரந்தாங்குப் புலியுறை கழித்த எஃகம்" என்றார். வாள்வாய்ப் பட்டாரது ஊன் படிந்து புலவு நாற்றம் நாறுதலின், "புலவுவா யெஃகம்" எனப்பட்டது. படைவீரர் போரே விரும்பும் புகற்சியினராய் நாளும் அதன்மேற் சென்ற உள்ளத்தாற் சிறந்து நிற்குமாறு தோன்ற "மேவல் ஆடவர்" என்றார். ஏவ லாடவரெனக் கொண்டு வேந்தனது ஏவல்வழி நிற்கும் வீரரென் றுரைப்பினுமாம்; "புட்பகைக் கேவானாகலிற் சாவேம் யாமென, நீங்கா மறவர் வீங்கு தோள் புடைப்ப" (புறம். 68) என்பதனால் வீரர் ஏவல்வழி நிற்குமாறு பெறப்படும். போர், என்பது அவாய்நிலை. இடக்கையில் தோலை யேந்துதலின் "வாளை வல னுயர்த் தேந்தி" யெனல் வேண்டிற்று. புலித்தோலாற் செய்யப்பட்டதனைப் புலியுறை யென்றார்.
இனி, தார்ப்படையின் வன்மை கூறுவார், பல்வகைப் பொறியாலும் காத்து நிற்கும் வயவராலும் நெருங்குதற்கரிய அரண் பலவும் வருத்த மின்றி எளிதிற் கடக்கும் வன்மையுடைய தென்றற்கு, "ஆரரண் கடந்ததார்" என்றார். தார், தூசிப்படை. இதனைத் தாங்கிப் பின்னே அணியுற்று வரும் படை தானை யெனப்படும்.; "தார்தாங்கிச் செல்வது தானை" (குறள் 767) எனச் சான்றோர் விளக்குவது காண்க. போர்க்கருவிகளான வில், வேல், வாள் முதலியனவே யன்றி, படையினது அணி வகுப்பும் நிலையும் வன்மை நல்குவன வாதலின், அச் சிறப்பை விதந்து "அருந் தகைப்பில்" என்றும் அதன் உட்புகுந்து பொருது கலக்கிச் சிதைத்து வென்றி காண்பதே வீரர்க்கு மிக்க வீறு தருவதாதலின், "அருந்தகைப்பிற் பீடுகொள் மாலைப் பெரும்படைத் தலைவ" என்றும் கூறினார். மாற்றாரது அருந்தகைப்புட் புகுந்து கலக்கக் கருதுவோர் முன்பாகக் களிற்றினைச் செலுத்தி இடமகல் வித்து, அதன் வழியே நுழைந்து தாக்குவ ரென்ப; இதனைக் "களிறு சென்ற கள னகற்றவும் களனகற்றிய வியலாங்கண், ஒளிறிலைய வெஃகேந்தி, அரைசுபட வமருழக்கி" (புறம் 26) என்பதனா லறிக. இன்னோ ரன்ன அருஞ்செயல் வழிப்படும் பீடே வீரர் தம் நடுகல்லினும் பிறங்குவதா மென் றறிக. "நல்லமர்க் கடந்த நாணுடை மறவர், பெயரும் பீடுமெழுதி யதர்தொறும் பீலி சூட்டிய பிறங்குநிலை நடுகல்" (அகம். 67) என்புழி "நல்லமர்" என்றது இதனையும் உட்கொண்டு நிற்றலை யுணர்க. இத்தகைய பீடு பெறுதல் நின் படைக்கு இயல்பா யமைந்துள தென்பார், " பீடுகொள் பெரும்படை" யென்னாது, "பீடுகொள் மாலைப் பெரும்படை" யென்றார். மாலையென்ற அடைநலத்தால், பெருமை, படையினது மிகுதி மேற்றாயிற்று. இனிப் பழையவுரைகாரர் "தாரருந் தகைப்பின் பீடுகொள்மாலைப் பெரும்படை யென்றது, தார்ப்படைக்கு அழித்தற்கரிய மாற்றார் படை வகுப்பிலே வென்றி செய்து பெருமை கொள்ளும் இயல்பை யுடைய அணியாய் நிற்கும் பெரும்படை யென்றவா" றென்பர். படையெனவே, அணிநிலையும் தொகை மிகுதியும் கருவிப் பெருமையும் வினைத் தூய்மையும் பிறவும் அகப்படுதல் காண்க.
இப் பெரும் படையை இதன் பெருமைப் பண்பு குன்றாத வகையில் வைத்தாளுந் திறன் தலைமைப் பண்பு முற்றும் நிரம்ப வுடையார்க் கன்றி யின்மையின் பல்யானைச் செல்கழு குட்டுவனைப் "பெரும்படைத் தலைவ" என்றார். திருவள்ளுவனாரும், "நிலைமக்கள் சால வுடைத்தெனினும், தானை, தலைமக்கள் இல்வழி இல்" (குறள் 770) என்பது காண்க
மேலும் குட்டுவனை, பெரும்படை வேந்தே யென்னாது "தலைவ" என்றதனால், அவன் படையினை யேவி யிராதே அதற்குத் தானே முன்னின்று தலைமை தாங்கிப் பொருது பீடு கொள்ளும் செயலுடைய னென்பதும் உய்த்துணரப்படும்.
6-11. ஓதல்...........கணவ
உரை: ஓதல் வேட்டல் அவை பிறர்ச் செய்தல் ஈதல் ஏற்றல் என்று ஆறு புரிந் தொழுகும்-மறை யோதுதல், வேள்வி வேட்டல், அவை யிரண்டையும் பிறரைச் செய்வித்தல், வறியார்க் கொன் றீதல், தமக் கொருவர் கொடுத்ததை யேற்றல் என்ற தொழி லாறும் செய்தொழுகும்; அறம்புரி அந்தணர்- அறநூற் பயனை விரும்பும் அந்தணர்களை; வழிமொழிந் தொழுகி-வழிபட்டொழுகி; ஞாலம் நின் வழி யொழுக- அதனால் உல;கத்தவர் நின்னை வழிபட்டு நிற்ப; பாடல் சான்று- புலவர் பாடும் புகழ் நிறைந்து; நாடு உடன் விளங்கும்-நிலமுழுதும் பரந்து விளங்கும்; நாடா நல்லிசை-விளங்கிய நல்ல புகழையும்; திருந்திய இயல்மொழி-அறக் கேள்வியால் திருந்திய இனிய இயல்பிற் றிரியாத மொழியினையுடைய; திருந்திழை கணவ-திருந்திய இழையணிந்தவட்குக் கணவனே எ-று.
ஓதுவித்தலும் வேட்பித்தலும் அந்தணர்க்குரிய தொழில் ஆறனுள் அடங்குவன வாதலின், "அவை பிறர்ச் செய்தல்" என்றார். செய்தல், பிறவினைப்பொருட்டு. செய்தல், செய்வித்தல் என்ற வினைவகைகளும் செய்தல் வகை நான்கினையும் முன்னும் பின்னும் கூறலின், இடையே செய்வித்தல் வகை இரண்டனையும் ஒன்றாய்த் தொகுத்துரைத்தார், சொற் சுருங்குதல் குறித்து. பழையவுரைகாரர், " அவை பிறர்ச் செய்தல் என் புழிப் பிறரை யென விரியும் இரண்டாவதனை, அவை செய்தல் என நின்ற செய்த லென்னும் தொழுலாற் போந்த பொருளால் செய்வித்தலென்னும் தொழிலாக்கி அதனொடு முடிக்க" என்றார். என்று என்பதனை எல்லாவற்றோடும் ஒட்டுக. ஆறென்புழி முற்றும்மை விகாரத்தால் தொக்கது. இவ் வாறு தொழிலையும் வழிவழியாக வருத்தமின்றிக் கற்றுப் பயின்று வருதலின் அந்தணரை "ஆறுபுரிந் தொழுகும் அந்தணர்" என்ற ஆசிரியர், அவர் தம் உள்ளத்தே அற நூல்களின் முடிபொருளையே விரும்பாநிற்கின்றன ரென்பார். "அறம்புரி யந்தணர்" என்றார்; அறம் அற நூல்களில் முடிபொருண்மேற்று. அது வேத முதலிய நூல்களாற் கற்றுணரப்படாது இறைவனால் உணர்த்தப்படுவது. "ஆறறி யந்தணர்க் கருமறை பல பகர்ந்து" (கலி. கடவுள்) என்றும் "ஒருமுகம், எஞ்சிய பொருள்களை யேமுற நாடித், திங்கள் போலத் திசைவிளக் கும்மே" (முருகு. 96-8) என்றும் சான்றோர் கூறுவது காண்க. சைவ நூல்களும், வேத முதலியவற்றின் ஞானம் கீழ்ப்பட்டதாகிய பாச ஞானம் என்று கூறுவது ஈண்டுக் குறிக்கத்தக்கது.
உலகியற் பொருளையும் அதற்குரிய அறநெறிகளையும் உள்ளவாறுணர்த்தும் உரவோராதலின் அந்தணர் வழிமொழிந் தொழுகுதல் அரசர்க்குக் கடனாதல் பற்றி, "அந்தணர் வழிமொழிந் தொழுக" வென்றார். அவ் வொழுக்கத்தாற் பயன் இது வென்பார், "ஞாலம் நின் வழி யொழுக" என்றும், அதனால் நாடு நாடா வளம் படைத்து நல்லோர் பாராட்டும் நலம் பெறுதலின் "பாடல் சான்று" என்றும் கூறினார். நாட்டின் புகழ் நாட்டின் அரசற்குச் சேறலின், அரசன்மேலேற்றிச் "சான்று" என்றார். இக் குட்டுவனைப் பாடப் போந்த கௌதமனார், "உருத்துவரு மலிர் நிறை" யென்ற பாட்டினை நாடு வாழ்த்தாகவே பாடியிருப்பது காண்க. அவன் புகழ் பரவாத இடம் நாட்டில் ஒரு சிறு பகுதியு மின்மையின் "நாடுடன் விளங்கும் நல்லிசை" யென்றார். இசைக்கு நன்மை, அழியாமை. நல்லிசைக் குரிய குணஞ் செயல்கள் அவன்பால் நன்கு விளங்கித் தோன்றலின், "நாடா நல்லிசை" யென்றார். விளக்கமில்வழியே நாடுதல் வேண்டுதலின், நாடாமை விளக்கமாயிற்று.இனி, நாடாது செய்தாரை நாடியடைதலும் நாடிச்செய்தாரை இனிது நாடாமையும் புகழ்க்கு இயல்பாதலின், "நாடா நல்லிசை" யென்றா ரென்றுமாம்.
அறம்புரி யந்தணர் வழிமொழிந் தொழுகும் ஒழுக்கத்தின் பயன் அவன் சொல்லின்கண் அமைந்து கிடத்தலின் "திருந்திய இயன்மொழி" என்றார். சொல்லிற் றோன்றும் குற்றங்கள் இன்றி இனிமைப் பண்பே பொருந்திய மொழி இயல்மொழி. இனி திருந்திய இயல்மொழி யென்பதற்குப் பிறர் திருத்த வேண்டாதே இயல்பாகவே குற்றத்தினின்றும் நீங்கித் திருந்தியமொழி யென்றும் கூறுவர். திருந்திழை யென்னும் அன்மொழித்தொகை அரசமா தேவிக்குப் பெயராயிற்று.
வில்லை வளைத்துப் பிணித்து நிற்கும் நாணினது நிலை குலை யெனப் பட்டது; "வில்குலை யறுத்துக் கோலின்வாரா வெல்போர் வேந்தர்" (பதிற். 79) எனப் பிறாண்டும் வருதல் காண்க. களை வறியா அம்பென வியைத்து, சாபத்தையும் அம்பையுமுடைய வயவ ரென்றும், வயவரது இருக்கை யென்றும் இயைக்க. இருக்கையும் பாசறையுமுடைய குருசில் என முடிக்க. இன் பொழுது போருண்டாமென் றறியாதே எப் பொழுதும் நாணியேற்றியே கிடக்கும் வில்லென்றற்கு "குலையிழி பறியாச் சாபம்" என்பது பழையவுரை. குலை யிழிபறியாச் சாபமேந்திய வழி, அதற்கேற்ப அம்புகளும் கையகலாது செவ்வே யிருத்தல் வேண்டுமாகலின், "அம்பு களை வறியா" என்றார். பழையவுரைகாரரும், "அம்புகளை வறியா வென்றது, போர் வேட்கையான் எப்பொழுதும் கையினின்றும் அம்பைக் களைத லறியா வென்றவா" றென்பர்.
போர் நிகழ்ச்சியை யெதிர் நோக்குதலால் உள்ளம் பரபரப்பும் துடிப்பும் கொண்டு விரையும் வீரர் சோம்பி ஓரிடத்தே குழீஇயிருக்கவு மாட்டாது, அரசன் ஏவாமையின் போர்க்குச் செல்லவுமாட்டாது இருக்கும் அவர்தம் இருப்பினை "தூங்கு துளங் கிருக்கை" யென்றார். "புட்பகைக் கேவானாகலிற் சாவேம் யாமென, நீங்கா மறவர் வீங்குதோள் புடைப்ப" (புறம். 68) என்பதனாலும் இப் பொருண்மை யுணரப்படும். இனிப் பழையவுரைகாரர், "தூங்கு துளங்கிருக்கை யென்றது, படை இடம் படாது செறிந்து துளங்குகின்ற இருப்பு என்றவா" றென்பர்
இடாஅஏணி என்றது, எல்லையாகிய பொருட்கு வெளிப்படை. இனி, ஏணிக் குருசில் என இயைத்து, போர் வன்மைக் கெல்லையாகிய குருசில் என்றுரைப்பினுமாம். "கற்றோர்க்குத்தாம் வரம்பாகிய தலைமையர் (முருகு 133-4) என்றாற் போல. இடாஅ ஏணியாவது "அளவிடப்படாத எல்லை" என்று பழையவுரை கூறும். பழையவுரைகாரர், "பாசறை அறை யெனத் தலைக் குறைந்த" தென்றும், "இயலென்றது பாசறைக்குள்ள இயல்" பென்றும் கூறுவர். பாசறைக்குரிய நலங்கள், புரிசையும் இருக்கையும் அரணும் மெய் காப்பாளரும் காலக்கணக்கரும் உழையரும் நன்கமைந்த நலங்கள். "காட்ட இடுமுட் பரிசை யே முறவளைஇப், படுநீர்ப் புணரியிற் பரந்த பாடி" (முல்லை 26-8) எனப் புரிசையும் "நற்போர் ஓடா வல்வில் தூணி நாற்றிக், கூடங் குத்திக் கயிறுவாங் கிருக்கை" (39-40) என இருக்கையும், "பூந்தலைக் குந்தம் குத்திக் கிடுகு நிரைத்து, வாங்கு வில்லரணம்" (41-3) என அரணமும், "துகில் முடித்துப் போர்த்த தூங்க லோங்கு நடைப் பெருமூதாளர்" (53-4) என மெய் காப்பாளரும் "பொழுதளந் தறியும் பொய்யா மாக்கள்" (55) எனக் காலக் கணக்கரும் "உடம்பி னுரைக்கு முரையா நாவின் படம்புகு மிலேச்சர் உழைய ராக" (65-6) என உழையரும் பாசறைக்கு நலங்களாக ஆசிரியர் நப்பூதனார் கூறுதல் காண்க.
15-17. நீர் நிலம்........கண்டிகுமே
உரை: நிலம் நீர் தீ வளி விசும்பொடு ஐந்தும் அளந்து கடை அறியினும்-நிலமும் நீரும் நெருப்பும் காற்றும் விசும்புமாகிய ஐந்தனையும் அளந்து முடிவு காணினும்; அளப்பரும் குரையை- அறிவு முதலியவற்றால் அளந்து எல்லை காண்பதற்கரியை யாவாய்; நின் வளம் வீங்கு பெருக்கம்-நின்னுடைய செல்வம் பெருகிய நலத்தை; இனிது கண்டிகும்-யாங்கள் இனிது கண்டறிந்தோம் எ-று.
நிலமுதலிய ஐந்தும் கலந்த மயக்கமே உலக மென்பதைக் கண்ட பண்டைத் தமிழ் நன்மக்கள், நில முதலிய ஒவ்வொன்றின் அளவையும் அளந்து காண முயன்று அளத்தற் கரியவை யெனத் துணிந்தனராதலின், அளப்பரிய பிற பொருள்கட்கு அவற்றை உவமயாக எடுத்தோதுவதை மரபாகக் கொண்டனர்.; அதனால் குட்டுவனுடைய அறிவு, ஆண்மை பொருள் முதலியவற்றாலாகிய பெருமையைச் சிறப்பித்து, "அளப்பருங் குரையை" என்றார். பிறரும் "நிலநீர் வளிவிசும் பென்ற நான்கின் அளப்பரி யையே" (பதிற். 14) என்றும், "நிலத்தினும் பெரிதேவானினு முயர்ந்தன்று, நீரினுமா ரளவின்றே" (குறுய். 3) என்றும் கூறுதல் காண்க. கடை, முடிவு, நிலம் நீர் தீ வளி விசும் பென்றல் முறையாயினும் செய்யுளாதலின் பிறழ்ந்துநின்றன. அறியினும் என்புழி உம்மை எதிர்மறை. குரை, அசைநிலை.
குட்டுவனுடைய செல்வம் முதலிய நலங்கள் நாளும் பெருகுதலால், "வளம் வீங்கு பெருக்க" மாயிற்று. அளத்தற் கரியனாயினும், காட்சிக் கெளிமையும் இனிமையு முடையனாதல் பற்றி, " இனிது கண்டிகும்" என்றும், அவ் வெளிமை யொன்றே அவனது பெருநலத்தை வெளிப் படுத்தலின், "வளம் வீங்கு பெருக்கம்" என்றும் கூறினார்.; "பணியுமா மென்றும் பெருமை" (குறள். 978) என்று சான்றோர் கூறுதல் காண்க. வளம் வீங்கு பெருக்க மெனத் தொகுத்தது மேலே விரிக்கப்படுகிறது.
18-30. உண்மரும்.................வளனே
உரை: வயங்கு கதிர் விரிந்து வானகம் சுடர் வர - விளங்குகின்ற கதிர் வான மெங்கும் பரந்து திகழ; வடக்கு வறிது இறைஞ்சிய சீர் சால் வெள்ளி-வடதிசைக்கண் சிறிதே சாய்ந்து தோன்றும் சிறப்பமைந்த வெள்ளியாகிய கோள்; பயங்கெழு பொழுதொடு அநியம் நிற்ப -பயன் பொருந்திய ஏனை நாண் மீன்களுடனே தனக்குரிய நாளிலே நிற்க; கலிழும் கருவி யொடு நீரைச் சொரியும் மழைத் தொகுதியுடன்; கையுற வணங்கி- பக்கவானத்திற் றாழ்ந்து; மன்னுயிர் புரைஇய-மிக்குற்ற உயிர்களைப் புரத்தல் வேண்டி; வலன் ஏர்பு இரங்கும்-வலமாக எழுந்து முழங்கும்; கொண்டல் தண்டளிக் கமஞ்சூல் மாமழை- கீழ்க்காற்றுக் கொணரும் தண்ணிய மழைத் துளியால் நிறைந்த சூல் கொண்ட கருமுகிற் கூட்டம்; கார் எதிர் பருவம் மறப்பினும்- கார்காலத்து மழைப் பெயலைப் பெய்யாது மறந்தவழியும்; தொடிமழுகிய உலக்கை வயின் தோறு- பூண் தேய்ந்த உலக்கையிருக்கும் இடங்கடோறும்; அடைச் சேம்பு எழுந்த ஆடுறு மடாவின்-அடையினையுடைய சேம்பு போன்ற சோறு சமைக்கும் பெரும் பானையும்; எஃகுறச் சிவந்த ஊனத்து-கூரிய வாள் கொண்டு ஊனை வெட்டுதலால் ஊனும் குருதியும் படிந்து சிவந்து தோன்றும் மரக் கட்டையும்; கண்டு-பார்த்த துணையானே; யாவரும் மதி மருளும்-யாவரும் அறிவு மயங்குதற்குக் காரணமான; உண்மரும் தின்மரும்-உண்பாரும் தின்பாருமாய் வரும் பலரையும்; வரைவுகோள் அறியாது-வரைந்து கொள்வ தின்றாமாறு வழங்கிய வழியும்; வாடாச் சொன்றி-குறையாத சோற்றால்; பேரா யாணர்த்து-நீங்காத புதுமையினை யுடைத்து; நின் வளன் வாழ்க- இதற்குக் காரணமாகிய நின் செல்வம் வாழ்வதாக எ-று.
இடையற லின்றிச் சமைத்தற்கு வேண்டும் அரிசியைக் குற்றிக் குற்றித் தேய்ந் தொழிந்தமை தோன்றக் "குரைத்தொடி மழுகிய உலக்கை" கூறப்பட்டது. குற்றுந்தொறும் ஓசை யெழுப்புவதுபற்றித் தொடி, குரைத்தொடி யெனப்பட்ட தென்றுமாம். உலையிடும் அரிசியைத் தீட்டிக் கோடற்பொருட்டு அட்டிற் சாலைக்கண் மர வுரலும் தொடியிட்ட வுலக்கையும் உளவாதலின், "உலக்கை வயின்றோறும்" என்றார். இலையோடு கூடிய சேம்பு போல அகன்ற வாயையுடைய தாதலால் சோறு சமைக்கும் மடாவினை "அடைச்சேம் பெழுந்த ஆடுறுமடா" வென்றார். சேம்பின் அடி மடாவின் அடிப்பகுதிக்கும் அதன் இலை அகன்ற வாய்க்கும் உவமம். இதுபோலும் வடிவில் இக் காலத்தும் சோறு சமைக்கும் மண் மிடாக்கள் நாட்டுப்புறங்களிற் காணப் படுகின்றன. எழுந்த, உவமப்பொருட்டு. இம் மடாக்களை நேரிற் கண்டறியாதார் தத்தமக்கு வேண்டியவா றுரைப்பர். மடா, மிடா வெனவும் வரும்.
இக்காலத்தவர் முடா வென வழங்குவர். சிவந்த நிறமுடைய வூனைக் கொத்திச் சோற்றோடு கலந்து சமைப்பவாதலின் மடாவொடு ஊனமும் உடன்காணப்படுகின்றன. "கோழூன் குறைக் கொழு வல்சி" (மதுரை. 141) என்பதனுரையில் "ஊனைக்கூட இட்டு ஆக்குதலின் கொழுவல்சி" யென்றார் என நச்சினார்க்கினியர் உரைப்பது காண்க. ஊனம், ஊனைக் கொத்துதற்குக் கொள்ளும் அடிமணையாகிய மரக்கட்டை; ஊனைக் கொத்துதலால் அதன் குருதி படிந்து சிவந்து தோன்றுதலால் "எஃகுறச் சிவந்த வூனத்" தென்றார். இவற்றைக் காணுமிடத்து இவற்றால் ஆக்கப்படும் சோறும் ஊனும் என்ற இவற்றின் மிகுதி, காண்பார் கருத்திற் றோன்றி, அவர் தம் அறிவை மயக்குதலின், யாவரும் கண்டு மதிமருளுவ ரென்றார். "யாவரும்" என்றார், சமைக்கும் மடையர்க்கும் மதிமருட்சி பயக்கும் பெருமை யுணத்தர்க்கு. இவற்றை முறையே உண்ணவும் தின்னவும் வருவாரை வரையா தேற்று வழங்குதலின், குறைவுண்டாகாவாறு இடையறாது சமையல் நிகழ்ந்த வண்ணமிருத்தலின், "உண்மரும் தின்மரும் வரைகோ ளறியாது வாடாச் சொன்றி" யென்றார். அறியா தென்புழி வழக்கவும் என ஒருசொற் பெய்து கொள்க. இனி, வரைகோ ளறியாது ஆடுறு மடாவென வியைத்து, இத்துணைய ரென வெல்லை யறியப்படாது பன்முறையும் சமைத்துக் கொட்டுதலைப் பொருந்திய மடாவென் றுரைப்பினுமமையும். ஏனைக் கோளினும் நாளினும் வெள்ளி மிக்க வொளியுடைய தாதலால், "வயங்குகதிர் விரிந்து வானகம் சுடர்வரு" மென்றார். நேர்கிழக்கில் தோன்றுவதின்றிச் சிறிது வடக்கே ஒதுங்கித் தாழ்ந்து விளங்குதலின், வறிது வடக்கிறைஞ்சிய வெள்ளி யென்றும், அது மழை வளந் தரும் கோள்களிற் றலைமை பெற்றதாதலின், சீர்சால் வெள்ளி யென்றும், தலைமை பெற்றதாயினும் ஏனைக் கோள்களும் கூடி யிருந்தாலன்றி மழை வளம் சிறவாமை தோன்ற, "பயங்கெழு பொழிதொடு ஆநியம் நிற்ப" என்றும் சிறப்புற மொழிந்தார். நாளாவது நாண்மீன் கூட்டம். பொழுது ஆகுபெயர். ஆநியம் மழை பெய்தற்குரிய நல்ல நாள். "பயங்கெழு வெள்ளி ஆநிய நிற்ப" (பதிற். 69) எனப் பிறரும் கூறுவர். இனிப் பழையவுரைகாரர், "வறிது வடக் கிறைஞ்சிய சீர்சால் வெள்ளி பயங்கெழு பொழுதா டாநிய நிற்ப வென்றது, சிறிது வடக் கிறைஞ்சின புகழா னமைந்த வெள்ளி மழைக்குப் பயன்படும் மற்றைக் கோட்களுடனே தான் நிற்கும் நாளிலே நிற்க வென்றவாறு" என்றும் "பொழுதென்றது அதற்கு அடியாகிய கோளை" யென்றும், வறிது வடக்கிறைஞ்சிய வென்னும் அடைச்சிறப்பான் இதற்குச் (இப் பாட்டிற்குச்) சீர்சால் வெள்ளி யென்று பெயராயிற்" றென்றும் கூறுவர்.
மழை பொழியும் முகிற்கூட்டம் பக்க வானத்தே கால் வீழ்த்துப் பெய்தல் இயல்பாதலால், "கையுற வணங்கி" என்றார். கை, பக்கம். மன் மிகுதி குறித்து நின்றது. ஞாயிறுபோல முகிற் கூட்டமும் வலமாக எழுதல் பற்றி, "வலனேர் பிரங்கும் " என்றார். கீழ்க் காற்றாற் கொணரப்படும் மழைமுகில் பெய்யாது பொய்த்தல் அரிதெனற்கு "காரெதிர் பருவம் மறப்பினும்" என்றார். ஒருகால் அது மறப்பினும் இச் சேரமான் வழங்கும் சோறு குன்றா தென்பது இதனால் வற்புறுத்தவாறு.
இதுகாறும் கூறியது, பீடு கொள் மாலைப் பெரும் படைத் தலைவ, திருந்திழை கணவ, இயலறைக் குருசில், நீர் முதலிய ஐந்தினையும் அளந்து முடி வறினும் பெருமை யளத்தற் கரியை; நின் வளன் வீங்கு பெருக்கம் இனிது கண்டேம்; மழை காரெதிர் பருவம் மறப்பினும் நின் வாடாச் சொன்றி பேராயாணர்த்து; நின் வளன் வாழ்க என்பதாம். பழைய வுரைகாரர், "பெரும்படைத் தலைவ, திருந்திழைகணவ, குருசில், நீர் நில முதலைந்தினையம் அளந்து முடி வறினும் பெருமை யளந்தறிதற் கரியை; நின் செல்வ மிக்க பெருமை இனிது கண்டேம்; அஃது எவ்வாறு இருந்த தென்னின் வாடாச் சொன்றி மழை காரெதிர் பருவம் மறப்பினும் பேராயாணர்த்து; அப்பெற்றிப்பட்ட நின் வளம் வாழ்க வென வினைமுடிபு செய்க" என்பர்
நேர் கிழக்கே நில்லாது சிறிது வடக்கண் ஒதுங்கித் தோன்றிய சீர்சால் வெள்ளியை "வறிது வடக் கிறைஞ்சிய" என அடைகொடுத்து, சீர் மாசு பட்டார் வடக்கிருப்பாராக, வடக்கொதுங்கிய வெள்ளியை வடக் கிறைஞ்சிய வென்றதன் மாசின்மை தோன்றச் "சீர்சால் வெள்ளி" யென்றும், வறிது வடக் கிறைஞ்சிய வென்றும் கூறிய சிறப்பால், இப் பாட்டு இவ்வாறு பெயர் பெறுவதாயிற் றென்றறிக. சீர்மாசு பட்டதனால் கோப்பெருஞ் சோழனும் சேரலாதனும் வடக்கிருந்தமை யறிக.
இதனாற் சொல்லியது அவன் பெருமையும் கொடைச்சிறப்பும் கூறி வாழ்த்திய-வாறாயிற்று.
சொல்லிலக்கணம், பொருளிலக்கணம், சோதிடம், வேதம், ஆகமம் ஆகிய
ஐந்தினையும் சேர்ந்து கற்று, அவையே துணையாக,
எவ்வுயிருக்கும் துன்பம் சூழாமல் விளங்கும் கொள்கையுடன்,
ஞாயிற்றைப் போன்ற சிறப்புப் பொருந்திய, வாய்மை உரையால்,
அச்சம் பொருந்திய முறைமையினையுடைய கடவுளைப் போற்றுவதற்காக
மேற்கொண்ட வேள்வித்தீயின் சுடர் மேலெழும்போதெல்லாம்,
உள்ளத்து விருப்பம் உடலிலும் பரவும் பெரும் புகழ் கொண்ட ஆவுதிப்புகையும்;
பரிசில் பெற வருபவர்கள் அளவில்லாமல் தாமே வாரி எடுத்துக்கொள்ளவேண்டியும்,
விருந்தினர் வேறு இடங்களுக்கு மாறிப்போகாமல் உண்ணவேண்டியும், இறைச்சி விற்போர்
இறைச்சி கொத்தும் பட்டைமரத்தில் வைத்துக் கொத்திய வெள்ளை நிற நிணத்தோடு சேர்ந்த கொழுத்த இறைச்சியை
தாளிக்கும்போதெல்லாம் இடைவிடாமல் ஒலிக்க -
கடல் ஒலியைப் போல, செழுமையான இல்லங்களின் மதில்களின்
நடுவில் எழுந்த சமைக்கும் நெய்யால் எழுந்த ஆவுதிப்புகையும்;
இரண்டும் சேர்ந்து கமழும் மணத்தோடு, வானுலகத்தில்
நிலைபெற்ற கடவுளும் விரும்புமாறு வழிபட்டு,
குறையாத வளம் நிறைந்த, குற்றம் நீங்கிய சிறப்பினையுடைய -
மழையாய்ச் சொரியும் கள்ளினையுடைய - போரில் வல்ல யானையின் மேலிருக்கும்
தோலினால் போர்த்தப்பட்ட போர்முரசம் முழங்க, ஆரவாரம் மிகுந்து
பகைவர் திறையாகத் தரும் பெருஞ் செல்வத்தைக் கொண்டுவருகின்ற - சாந்து அணிந்த மார்பினனே!
முல்லைப்பூவால் கட்டப்பட்ட தலைமாலையையுடைய பல பசுக்களையுடைய கோவலர்
புல் நிறைய உடைய அகன்ற வெளியில் அந்தப் பசுக்களை மேயவிட்டு,
கற்கள் உயர்ந்த காட்டுவெளியில் கதிர்விடும் மணிகளைப் பொறுக்கியெடுக்கின்ற
மிதிக்கும் செருப்பு அல்லாத செருப்பு என்னும் மலையினையுடைய பூழியரின் அரசே!
குவியலான தலைமாலைகளை அணிந்த மழவரின் கவசம் போன்றவனே!
பலவகைப் பயன்களைத் தரும் காடுகளைக் கொண்ட, தானும் பயன்களை அளிக்கும் நெடிய உச்சியையுடைய,
நீர் ஒழுகும் பக்கத்தில் செல்லாமல், நீண்ட தொலைவிலிருந்து
உன்னிப்பாகப் பார்க்கும் கொக்கின் விரைவான கொத்தலுக்கு அஞ்சாத,
புகழ் படைத்த நாட்டினிடையே பகைவர் போரிடாதவாறு குறுக்கிட்டுக்கிடக்கும்
நேராக உயர்ந்த நெடிய மலையான அயிரை என்னும் மலைக்குத் தலைவனே!
ஆண்டுதோறும் பொய்க்காமல் பயனைத் தரும் மழை நிறையப்பெய்து,
நோய் இல்லாமல், மக்களுக்கு, நல்ல காலமாகக் கழிய,
நறுநெய் பூசப்படாவிட்டாலும் கமழ்கின்ற மணத்தைக் கொண்டு,
கார்காலத்து மலரின் மணம் கமழும் தாழ இறங்கிய கரிய கூந்தலையும்,
குளத்திலிருந்து நீங்கி வந்ததைப் போல, இரவிலும் மலர்ந்து நின்று,
அழகிய முகத்தினில் சுழல்கின்ற பெரிய அமைதியான குளிர்ச்சியான கண்களையும்,
அசைகின்ற காந்தள் ஒளிவிடும் நீர்ப்பரப்பின் கரையில் நிற்கும்
மூங்கிலைப் போன்ற பெரிய தோள்களையும் உடைய இவளோடு
பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் வாழ்க!
24 பாட்டு 24
நீண்ட விசும்பில் ஒளிறுகின்ற மின்னல் பரந்தாற் போலப்
புலித்தோலால் செய்த உறையிலிருந்து உருவப்பட்ட புலால் நாறும் வாளை
உன் ஏவலுக்கு உட்பட்ட மறவர் வலக்கையில் உயர்த்திப் பிடித்து,
கடத்தற்கரிய அரண்களை அழித்துச் செல்லும் முன்னணிப்படையின் அரிய அணிவகுப்பினையுடைய
பெருமை கொள்ளும் இயல்பினையுடைய பெரும் படைக்குத் தலைவனே!
மறையோதல், வேள்விசெய்தல், இவை ஒவ்வொன்றையும் பிறரைச் செய்வித்தல்
ஈதல், ஏற்றுக்கொள்ளுதல் என்று ஆறினையும் செய்து ஒழுகும்
அறச்செயல்களை விரும்பும் அந்தணர்களை வழிபட்டு நடந்து,
உலகமோ உன் வழியில் நடக்க, புலவர் பாடும் புகழைப் பெற்று
நாடு முழுவதும் விளங்கும் நீ நாடிப்பெறாத நல்ல புகழைக் கொண்ட -
மேன்மையான இயல்புள்ள மொழியினையுடைய திருத்தமான அணிகலன்கள் அணிந்தவளுக்குக் கணவனே!
நாணைக் கழற்றி அறியாத வில்லைக்கொண்ட வீரர்கள்,
அம்பினைக் கீழே போடமுடியாத அளவுக்கு நெருக்கமாக இருப்பதால் அசைகின்ற இருக்கைகளைக் கொண்ட
அளவிடமுடியாத எல்லையைக் கொண்ட இயல்பினையுடைய பாசறையையுடைய குருசிலே!
நீர், நிலம், நெருப்பு, காற்று, விசும்பு ஆகிய ஐந்தனையும்
அளந்து அவற்றின் எல்லையை அறிந்தாலும், உனது அறிவு, ஆற்றல் ஆகியவற்றை அளக்க முடியாது; உன்
செல்வம் பெருகிய வளத்தை இனிதே கண்டறிந்தோம்;
உண்பாரும், தின்பாருமாய் கணக்கில் அடங்காதவாறு உண்டும் -
ஒலிக்கின்ற பூண் மழுங்கிப்போன உலக்கை இருக்கும் இடங்கள்தோறும்
இலையையுடைய சேம்பினைப் போன்ற அடுப்பிலிடப்பட்ட பெரிய பானையினையும்,
வாளால் இறைச்சியை வெட்டும்போது சிவந்துபோன வெட்டுமரத்தையும் யாவரும்
கண்டு வியக்கும் - குறையாத சோறு -
ஒளிரும் கதிர்கள் பரந்து வானகம் ஒளிபெற்றுவிளங்க,
சிறிதே வடக்குப்பக்கம் சாய்ந்துள்ள சிறப்பமைந்த வெள்ளியாகிய கோள்மீன்
பயன் தரும் பிற கோள்களோடு நல்லநாள் காட்டி நிற்க,
ஒளிரும் இடிமின்னலோடு நாற்புறமும் கவிந்து
உலகத்து உயிர்களைக் காக்கும்பொருட்டு வலப்பக்கமாய் எழுந்து முழங்கும்
கீழ்க்காற்றால் கொணரப்பட்ட குளிர்ச்சியான நீர்த்துளிகளைக் கொண்ட நிறைசூலைக்கொண்ட கரிய மேகங்கள்
கார்காலம் எதிர்ப்படுகின்ற தன் பருவத்தை மறந்துபோனாலும் -
நீங்காத புதுமையையுடையது, வாழ்க! உன் வளம்!