Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இந்து சம்ஸ்காரங்கள்


Guru

Status: Offline
Posts: 7329
Date:
இந்து சம்ஸ்காரங்கள்
Permalink  
 


இந்து சம்ஸ்காரங்கள்


annaprasnam

சம்ஸ்காரத்தின் பொருள்

சம்ஸ்காரம் என்ற சொல்லுக்கு பல பொருள் உண்டு. அவற்றில், “நினைவுச் சுவடு”, “சுத்திகரிப்பு”, “ஏதோ ஒரு நன்மை செய்வது” என்ற அர்த்தத்தில் சம்ஸ்காரங்கள் அதிகம் பேசப்படுகின்றன.

தத்துவம் பேசும்போது, இந்தச் சொல் சமூக, சமய சடங்குகளைக் குறிக்கிறது. வாழ்வின் ஒரு பருவத்திலிருந்து வேறொரு பருவத்துள் நுழையும்போது செய்யப்படும் சடங்குகள், சம்பிரதாயங்கள் இவை. உடல், உள்ளம், புத்தி முதலானவற்றை சுத்திகரித்து புனிதமாக்கும் நோக்கம் கொண்ட பழக்க வழக்கங்களே சம்ஸ்காரங்கள். இவை தவிர, சம்ஸ்காரம் என்ற சொல், ஒரு கலாசார பாரம்பரியத்தின் ஒட்டுமொத்த தொகுப்பையும், தனி மனித வளர்ப்பையும் பேசப் பயன்படுகிறது.

ஒரு மனிதனின் வாழவினூடாக அவனை ஒரு உயர் வாழ்வுக்குத் தகுதி கொண்டவனாகச்\ செய்து, ஆதர்ச இலக்குக்கு இட்டுச் செல்லும் புனிதச் சடங்குகள், சம்பிரதாயங்கள், பழக்க வழக்களின் தொடரே சம்ஸ்காரங்கள்.  வாழ்வின் ஒவ்வொரு கட்டத்துக்கும் உரிய குறிப்பிட்ட ஒரு சம்ஸ்காரம் அல்லது ஒருசில சம்ஸ்காரங்கள் உண்டு.

சாதி, சமய நம்பிக்கை, சமூக நிலை எதுவாக இருந்தாலும் ஒவ்வொரு இந்துவும் ஒருசில சம்ஸ்காரங்களைத் தன் வாழ்நாளில் செய்தாக வேண்டும் என்று விதிக்கப்பட்டுள்ளது. நூற்றாண்டுகளாய்தொடரும் மாற்றத்தில், இன்று இந்து சமூகத்தில் ஒரு சிலருக்கே உரியவை என்று இந்த சம்ஸ்காரங்கள் கருதப்படுகின்றன; ஆனால் உண்மையில், தாமறியமாலே நம்மில் ஏராளமானவர்கள் இந்த சம்ஸ்காரங்களை இப்போதும் செய்து கொண்டுதான் இருக்கிறோம்.

சம்ஸ்காரங்களின் நோக்கம்

வெளியிலிருந்து பார்க்கும்போது, சமூக-சமயச் சடங்குகள் போல் தெரிந்தஆம், சம்ஸ்காரங்கள் அடிப்படையில் ஆன்மிக சாதனையின் நடைமுறைத் தொகுப்பாக இருக்கிறது. ஒரு மனிதனின் ஆன்மீக வளர்ச்சிக்கு வழிகாட்டுவதாகவும் இருக்கின்றன.

சமஸ்காரங்க்ளின் நடைமுறைப் பயன்பாடு என்ன என்று பார்ஹ்டால், ஒரு மனிதனின் வளர்ச்சிப் பாதையில் மிகப் பெரிய தாக்கத்தையும் பாதிப்பையும் இவை ஏற்படுத்துகின்றன. தனி மனித அளவில் ஆன்மீக நெறிப்படுத்துதலை அளித்து, ஒரு சமூகத்தின் முதிர்ச்சியடைந்த கலாச்சாரத்தின் உறுப்பினன் ஆகும் தகுதியை அவனுக்குக் கொடுக்கிறது. சூல் கொண்ட நாள் முதல் துவங்கும் இந்த சம்ஸ்காரங்கள் ஒரு மனிதனின் உடலிலும் உள்ளத்திலும் தொடர்ந்து தேவைக்குத் தகுந்த நற்பண்புகளைத் தோற்றுவித்து, வாழ்நாள் முழுமையும் தொடர்ந்து அவனது ஆளுமை வளர்ச்சியடையத் துணை செய்கின்றன.

நவீன உலகில் சடங்குகளும் சம்பிரதாயங்களும் தீவிர மதநம்பிக்கை மற்றும் மூட நம்பிக்கைகளின் தொகுப்பு என்று இழிவு செய்யப்பட்டாலும் அவற்றுக்கு ஆழமான, மிக உயர்ந்த அர்த்தம் உள்ளது. அது, வெளிப்பார்வைக்கு எளிதில் புலப்படாது.

கடந்த சில நூற்றாண்டுகளில் தோன்றியவற்றைத் தவிர பிற அனைத்து இந்து சமயச் சடங்குகளுக்கும் சமூக, பண்பாட்டு, ஆன்மீக, மறைஞான முக்கியத்துவம் உள்ளது- மனிதனின் மன வளர்ச்சியின் தேவைகளையும் இவை பெரும்பாலான சமயம் நிறைவு செய்கின்றன.

ஆனால் துரதிருஷ்டவசமாக, தெய்வங்களைப் ப்ரீதி செய்யவும் பரிகாரம்  செய்யவுமே சடங்குகள் நிறைவேற்றப்படுகின்றன என்ற ஒரு நம்பிக்கை தற்காலத்தில் இருக்கிறது. சம்ஸ்காரங்களும் இப்படிதான் பார்க்கப்படுகின்றன. இதனால், மிகச் சிலரே சம்ஸ்காரங்களை முறையான வகையில் கடைபிடிக்கின்றனர்.

எந்த ஒரு கடவுளையோ அல்லது குறிப்பிட்ட சில கடவுளரையோ திருப்தி செய்வதற்காக சம்ஸ்காரங்கள் செய்யப்படுவதில்லை. இன்னும் மேலான ஒரு வாழ்வை நோக்கிச் செல்லும் தகுதி பெரும் வகையில் மனிதனின் உடலையும் உள்ளத்தையும் சுத்திகரித்து புனிதப்படுத்தும் நோக்கத்தில் செய்யப்படும் சடங்குகள் இவை. உடலின் இயக்கத்தைக் கொண்டு உடலிலும் உள்ளத்திலும் தாக்கம் ஏற்படுத்தி, மனிதனுள் மறைந்திருக்கும் ஆற்றலை வெளிப்படுத்தி, சமூகத்தில் அவனுக்குரிய இடத்தை அவன் வெற்றிகரமாக அடையச் செய்து, அவனுக்குச் சாத்தியப்படும் ஆன்மீக வளர்ச்சியையும் சம்ஸ்காரங்கள் அளிக்கின்றன. எனவே, குறிப்பிட்ட சில அடிப்படை நம்பிக்கைகள் மற்றும் சடங்குகளின் தொகையே சம்ஸ்காரங்கள் என்று சொல்லலாம். இவை ஒரு மனிதனின் வளர்ச்சிக்கு துணை நிற்கின்றன, மனிதன் கற்றுத்தேரும் வாழ்வனுபவங்களுக்குச் செறிவு செய்து, அவனுக்கு ஊட்டம் அளிக்கின்றன.

உபநயனம் அல்லது பூணூல் அணிவித்தல் போன்ற சம்ஸ்காரங்கள் ஆன்மீக தேவைகளையும் பண்பாட்டு தேவைகளையும் நிறைவு செய்கின்றன. நாமகரணம், அல்லது பெயர் சூட்டுதல், அன்னபிரச்னம் அல்லது குழந்தைக்கு முதல் முறை திட உணவு ஊட்டுதல், போன்ற சில சம்ஸ்காரங்கள் அன்பு, நேசம், நல்லிணக்கம் முதலான உணர்வுகளை வெளிப்படுத்தும் கருவிகளாகச்  செயல்படுகின்றன. கர்ப்பதானம் போன்ற சம்ஸ்காரங்கள் ஆழமான மறைஞான, ஆன்மீக அர்த்தம் பொதிந்தவை. விவாகம், அல்லது, திருமணம் இரு உடல்களும் ஆளுமைகளும் இணைவதைச் சமயச் சடங்காக அங்கீகரிக்கின்றன, இது சமூக அமைப்பின் இடையறாத தொடர்ச்சியையும் உறுதி செய்ய உதவுகிறது.

சம்ஸ்காரங்களின் துவக்கமும் தொடர்ச்சியும்

முற்கால சம்ஸ்கிருத பனுவல்களில் உள்ள தகவல்களை இங்கு விவரிக்கிறேன். ஆனால், சம்ஸ்கிருத மொழியில் துவங்கி, அதனால் முறைமைப்படுத்தப்படுபவை என்று சம்ஸ்காரங்கள் குறித்து கூறுவதாகப் புரிந்து கொள்ளக் கூடாது. இந்தியாவெங்கும் உள்ள பிராந்திய மொழி நூல்கள் ஏராளமானவற்றில் சம்ஸ்காரங்கள் விரிவாக விளக்கபப்ட்டுள்ளன, வெவ்வேறு வடிவங்களில் அவை கடைபிடிக்கப்படுகின்றன. இங்கு சொல்லப்படுவது சம்ஸ்கிருத நூல்களை மட்டும் கொண்டு அடையப்பட்ட பார்வையில்ல, பரவலான வழக்கத்தில் இருக்கும் சடங்குகளின் அடிப்படை நம்பிக்கைகள் இவை. வேறெந்த பொருளும் இங்கு கற்பிக்கப்பட வேண்டியதில்லை.

சடங்குகளும் சமயச் சம்பிர்தாயங்களுமாக தொகுத்துப் பார்த்தால் சம்ஸ்காரங்கள் தொன்மையானவை. உலகின் மிகப் புராதான சடங்குகளாகக்கூட இவை இருக்கலாம். ஏனெனில், காலத்தில் மிக முற்பட்ட ரிக் வேத சம்ஹிதையில் இவை பேசப்படுகின்றன. சந்தேகத்துக்கிடமின்றி இவை மிகப் பெரும் மாற்றங்களை எதிர்கொண்டிருக்கின்றன, ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முற்பட்ட மக்களைக் காட்டிலும் இன்று இன்னும் பல சமூகக் குழுவினருக்கு உரியதாய் வளர்ந்தும் உள்ளது.  முதல் நூல்களிலேயே இவை ஓரளவு விரிவாக விளக்கப்படுகின்றன என்பதைப் பார்க்கும்போது, இந்த நூல்கள் எழுதப்படுவதற்கும் முன்னதாகவே இவை நடைமுறையில் இருந்தன என்று தெரிகிறது.

அனைத்து பழக்க வழக்கங்களையும் சடங்குகளையும் போலவே சம்ஸ்காரங்கள் எழுத்தில் விதிக்கப்பட்ட சட்டதிட்டங்களின் அதிகாரத்தைக் காட்டிலும் முன்னோர்களின் வழிவந்த, பழக்கத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட வடிவில்தான் கடைபிடிக்கப்படுகின்றன.

துவக்க கால நூல்கள் பலருக்கும் பழக்கப்பட்ட பல்வேறு சடங்குகளை மட்டுமே விவரிக்கின்றன. இப்படிச் செய்ய வேண்டும் என்பது போன்ற விதிமுறைகளோ கட்டுப்பாடுகளோ அவற்றில் இல்லை. ஆனால், இதற்கு மாறாக, அதர்வ வேதத்தில் சமூகச் சடங்குகளும் நடைமுறை சமயமும் மிக விரிவாக விவரிக்கப்படுகின்றன.

வேதங்களுக்குப் பின்னர் எழுதப்பட்ட நூல்களில், கிருஹ்ய சூத்திரங்களும் புராணங்களும் சம்ஸ்காரங்கள் குறித்து நேரடியாகவும் விரிவாகவும் பேசுகின்றன. இல்லறத்துடன் தொடர்புடைய சடங்குகளைப் பேசுவதால், சம்ஸ்காரங்கள் குறித்த முதன்மை நூலாக  கிருஹ்ய சூத்திரங்களே கருதப்படுகின்றன.

எனினும் பதினான்காம் நூற்றாண்டு முதல் பதினெட்டாம் நூற்றாண்டு வரையிலான மத்திய காலகட்டத்தில்தான், வாழ்வின் ஒவ்வொரு பகுதிக்கும் தொடர்புடைய சடங்குகளை நெறிப்படுத்தும் விதிமுறைகளின் தொகுப்பாக சம்ஸ்காரங்கள் முழுமையான உருவம் பெற்றன. நடைமுறை தர்மத்தை விவரிக்கும் தொகுப்பான நிபந்தன கிரந்தம், சடங்குகளையும் பழக்கவழக்கங்களையும் தொகுத்து அளிக்கும் மிக விரிவான, பல பகுதிகள் கொண்ட மிகப்பெரும் தொகை நூல். அதில் அனைத்து வகைப்பட்ட சடங்குகளும் அவற்றுக்குரிய வெவ்வேறு தலைப்புகளில் குறிப்பிடப்படுகின்றன.

ஆனால் அக்காலத்துக்கும் இக்காலத்துக்கும் மிகப்பெரிய கால வேறுபாடு உள்ளது. அதுதவிர, பிராந்திய வேற்றுமைகளும் உள்ளன. எனவே, அந்த அந்த பகுதியின் தேவைக்கு ஏற்ற வகையில் வெவ்வேறு தலைப்புகளும் விதிமுறைகளும் அவ்வப்போது ஒவ்வொரு கிரந்தத்திலும் சேர்த்துக் கொள்ளப்பட்டிருக்கலாம்.ஆனால் ,அவையே, சடங்குகளின் தொகுப்பாக சம்ஸ்காரங்கள் எவ்வாறு வடிவம் பெற்றன என்பதை வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன.

சடங்குகளை விவரிக்கும் இந்த உரைகளின் மிக முக்கியமான சிறப்பு, தற்போது நடைமுறையில் உள்ள பல பழக்க வழக்கங்கள்  மற்றும் அவற்றின் மூலம் குறித்து இவற்றில்  தகவல்கள் கிடைக்கின்றன என்பதுதான். அதிலும் குறிப்பாக, சமூகத்தின் தாழ்த்தப்பட்ட அடுக்குகளில் உள்ளவர்களின் மூடநம்பிக்கைகள் என்று ஒதுக்கப்படும் பழக்கவழக்கங்கள் இந்த கிரந்தங்களில் சம்ஸ்காரங்களாய் தொகுக்கப்பட்டிருக்கின்றன. உதாரணத்துக்கு ஒன்று சொல்லலாம். இந்தியாவெங்கும் உள்ள பல்வேறு சமூகங்கள் சிலவற்றில், சகோதரன் இல்லாத பெண்ணை யாரும் மணம் முடிப்பதில்லை. இந்தப் பழக்கம் இன்றும் உள்ளது. நிபந்தன கிரந்தங்களைக் கொண்டு நாம் இந்த பழக்கத்தின் மூலத்தை மகாபாரதத்தில் காண முடியும். அதற்கும் அப்பால், மூடநம்பிக்கை என்று நாம் கருதும் இந்தப் பழக்கத்தின் வேர்களை மகாபாரதத்துக்கு முந்தைய வேதங்களிலும் காரணம் கண்டு விளக்க முடியும். இந்தப் பழக்கவழக்கங்கள் நல்லவையா அல்லவையா என்ற கேள்வியை இப்போது பேசவில்லை. உள்ளபடியே இன்றுள்ள ஒரு பழக்கத்தைச் சுட்டி, அதன் நம்பிக்கையின் ஆதாரம் எங்கிருந்து வந்திருக்கக்கூடும் எனபதைச் சுட்டிக் காட்ட மட்டுமே செய்கிறேன்.



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

சம்ஸ்காரங்களின் எண்ணிக்கை

இர்ண்டாயிரம் ஆண்டுகாலமாக, எந்த எந்த சடங்குகள் சம்ஸ்காரங்களாக மதிக்கப்பட வேண்டும், எவை கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும் என்று தீவிரமான விவாதங்கள் நடைபெற்று வந்திருக்கின்றன. கௌதமர் தன் தர்ம சூத்திரங்களில் நாற்பது சம்ஸ்காரங்களைப் பட்டியலிடுகிறார். அந்த நாற்பதோடு எட்டு ஆன்ம குணங்களையும் தன் பட்டியலில் சேர்த்துக் கொள்கிறார். பிற எழுத்தாளர்களும் நூல்களும் பன்னிரெண்டு முதல் நாற்பத்து இரண்டு சம்ஸ்காரங்களைக் குறிப்பிடுகின்றன. சில நூல்கள் எண்ணிக்கை கணக்கு சொல்லாமல், கௌதம தர்ம சூத்திரங்களில் உள்ள சம்ஸ்காரங்களில் பெரும்பாலானவற்றைக் குறிப்பிடுகின்றன.

இன்றைய சூழலில் கடைபிடிக்கப்படும் பதினாறு சம்ஸ்காரங்களின் பட்டியல் இது. சோடஷ சம்ஸ்காரங்கள் என்று இவை அழைக்கப்படுகின்றன. இதுவே முடிவான பட்டியல் என்று சொல்ல முடியாது. இந்தப் பட்டியலில் உள்ளவையும் சடங்கு, வழக்கம் என்ற அளவில் கடந்த இரு samskara2நூற்றாண்டுகளாக நசிந்து வருகின்றன. அதிலும் கடந்த முப்பது ஆண்டுகளில் இந்தப் பதினாறையும் கடைபிடிப்பவர்களின் எண்ணிக்கையும் வெகு வேகமாக குறைந்து வருவதைக் காண முடிகிறது. சொடஷ சம்ஸ்காரங்களைக் கைவிடுபவர்க்ளில் பலர் பிராமண வகுப்பைச் சார்ந்தவர்களாகவும் இருக்கின்றனர். எனவே, இந்தப் பதினாறும் இனிவரும் காலங்களிலும் தொடர்ந்து கடைபிடிக்கப்படும் என்று யாராலும் உறுதியாகச் சொல்ல முடியாது, இவை வேறு வடிவில் கடைபிடிக்கப்படவும் வாய்ப்பு உள்ளது. சாதி வேறுபாடின்றி அனைவர்க்கும் பொதுவான இந்த சம்ஸ்காரங்கள் இந்து சமூகத்தின் படிநிலையில் எங்கு இருப்பினும், அனைவருக்கும் பொதுவானவை.

பதினாறு சம்ஸ்காரங்கள் அல்லது சோடஷ சம்ஸ்காரங்கள்

கர்ப்பதானம்– கருவுறுதலுக்கு சமய அங்கீகாரம் அளிக்கும் சடங்கு இது. இந்தச் சடங்கு குறித்து வேறுபட்ட பல கருத்துகள் உண்டு. புதிதாய் மணமான தம்பதியர் முதல்முறை ஒருவரையொருவர் கூடுவதற்கு முன் சொல்ல வேண்டிய மந்திரங்களின் தொகுப்பு இவை என்று சிலர் கருதுகின்றனர், வேறு சிலர், இந்த மந்திரங்களைக் முதல் சம்போகத்தின்போது சொல்ல வேண்டும் என்று கூறுகின்றனர். இன்னும் சிலர், ஓவ்வொரு முறை கலவியில் ஈடுபடும்போதும் கணவன் இந்த மந்திரங்களை ஜபிக்க வேண்டும் என்று கருதுகின்றனர். ஹோமம் வளர்த்து ஆகுதி அளித்து இந்த மந்திரங்கள் பிரயோகிக்கப்படுவது வழக்கம் என்று சொல்பவர்களும் உண்டு. எது எப்படியானாலும், பாலுறவு அனுபவத்தை ஒரு புனிதச் செயலாக இந்தச் சடங்கு துவக்கி வைக்கிறது.

பும்சவனம் – கருவில் உள்ள குழந்தையை இவ்வுலகில் பிணைத்து, அதற்கு ஊட்டம் அளிக்கும் நோக்கத்தில், கர்ப்பம் தரித்த மூன்றாம் மாதத்தில் இந்தச் சடங்கு செய்யப்படுகிறது. இந்தச் சடங்கில் கருத்தரித்த அன்னை, வேத மந்திரங்களைக் கேட்டபடியே ஒரு மணி பார்லியையும், இரு மணி கருப்பு எள்ளையும் சிறிது தயிரையும் உட்கொள்கிறாள். அரச மர வேரைக் குழைத்தும் அதிலிருந்து எடுக்கப்பட்ட சிறிது பாலையும்  வலது நாசிக்குள் பூசுவதும் உண்டு.

சீமந்தம்– கர்ப்ப காலத்தின் முக முக்கிய கட்டத்தில் தாயையும் கருவையும் பாதுகாக்கச் செய்யப்படும் சடங்கு இது. வழக்கமாக, கர்ப்ப காலத்தின் நான்காம் மாதத்தில் வளர்பிறை நாட்களில், குறிப்பிட்ட சில நட்சத்திரங்களில் சந்திரன் பிரவேசிக்கும்போது இந்தச் சடங்கு நடத்தப்படுகிறது. ஓம் என்ற பிரணவ மந்திரம், அல்லது பூஹ், புவஹ், ஸ்வஹ் என்ற வியாகரங்கள் ஒலிக்க, ஒன்றாய்க் கட்டப்பட்ட மூன்று தர்ப்பை புற்களைக் கொண்டு அன்னையின் உச்சியில் வகிடெடுத்தல் இந்தச் சடங்கு.

ஜாடகர்மம்– குழந்தை பிறந்தபின் ஒன்றை நாட்களுக்குள் நிகழ்த்தப்படும் சடங்கு இது. பூஹ், புவஹ், ஸ்வஹ் என்ற வியாகரங்கள் பிறந்த குழந்தையின் நாவில், சிறிது பொன், நெய், மற்றும் தேன் கலந்த கலவையைத் தந்தை தடவுவது உண்டு.

நாமகரணம்– இது குழந்தைக்கு பெயர் சூட்டும் சடங்கு. பஞ்சாங்கத்தின் துணையோடு குழந்தைக்குப் பொருத்தமான பெயர் தேர்ந்தெடுக்கப்படுகிறது. அதன்பின், அந்தப் பெயரை, தாயின் வலது செவியில், தந்தை மும்முறை கூறுகிறார். தாய், குழந்தையை எடுத்து வைத்துக் கொண்டு, அந்தப் பெயரை மும்முறை கூறுகிறார். குழந்தை பிறந்த நாள், அல்லது அது பிறந்த பத்தாம் அல்லது பன்னிரண்டாம் நாள் இந்தச் சடங்கு நடைபெறுவது வழக்கம்.

நிஷ்க்ரமணம்– குழந்தை முதல் முறை வீட்டைவிட்டு வெளியே எடுத்துச் செல்லப்படும்போது செய்யப்படும் சடங்கு. இதை நான்காம் மாதம் செய்வது வழக்கம்.

அன்னப்பிரசனம்– குழந்தைக்கு ஆறு மாதம் ஆனபின் செய்யப்படும் சடங்கு இது. சமைக்கப்பட்ட உணவு, முதல் முறையாகக் குழந்தைக்கு ஊட்டப்படுகிறது. வேக வாய்த்த அரிசியை நெய்யிலும் தேனிலும் பிசைந்து தந்தை குழந்தைக்கு ஊட்டுக்கிறார்,  அதன்பின் தாயும் அதை உட்கொள்வார். தற்காலத்தில், குழந்தை ஒரு கோவிலுக்கோ திருத்தலத்துக்கோ அழைத்துச் செல்லப்பட்டு, அங்குள்ள அர்ச்சகர்களின் முன்னிலையில் இந்தச் சடங்கு நிறைவேற்றப்படுகிறது.

சூடாகரணம்– குழந்தையின் தலைமுடியை முதல்முறையாக மழிக்கும் சடங்கு இது. இதை, சௌலம் அல்லது முண்டனம் என்றும் சொல்வதுண்டு. குழந்தைக்கு ஒன்று, அல்லது மூன்று அல்லது ஐந்து வயது ஆனபின் இந்தச் சடங்கு செய்யப்படுகிறது. புனர்வசு நட்சத்திரத்தில் இந்தச் சடங்கு நடைபெறுவது வழக்கம். அதைவிட முக்கியமாக, இந்தச் சடங்கு நவமி, அல்லது அமாவாசையை அடுத்த ஒன்பதாம் நாளில் நடைபெறுகிறது.

கர்ணவேதனம்– காது குத்தும் சடங்கு. ஆண் குழந்தைகளின் வலது காதிலும், பெண் குழந்தைகளுக்கு இடது காதிலும் முதலில் துளை இடப்படுகிறது. தந்தை தன் மடிவில் குழந்தையை வைத்துக் கொண்டு காது குத்துவது வழக்கம். ஆனால், தற்போது, ஆசாரி ஒருவரைக் கொண்டு இது செய்யப்படுகிறது.

வித்யாரம்பம்– குழந்தைக்கு நான்கு அல்லது ஐந்து வயதானதும், அதன் கல்வியைத் துவக்கும் சடங்கு இது. குழந்தைக்கு அகரமுதலியின் முதல் சில எழுத்துக்கள் கற்றுத் தரப்படுகின்றன. உலோகத்தாலான ஒரு பாத்திரத்தில் அரிசி குவிக்கப்பட்டு, அதில் இந்த எழுத்துக்களையும் சில மந்திரங்களையும் உரக்கச் சொல்லிக்கொண்டே, குழந்தை எழுதுகிறது.

உபநயனம்–  யக்ஞோபவீதம் என்று அழைக்கப்படும் பூணூல் அணிவிக்கப்படும் சடங்கு இது. ஐந்து வயது அடைவதற்குமுன் ஆண் குழந்தைக்கு உபநயனம் செய்யப்படுகிறது. முடியிடப்பட்ட முப்புரி நூலொன்று இடம் வலமாக தோளில் அணிவிக்கப்படுகிறது. பிரம்மோபதேசம் என்று சொல்லப்படும் காயத்ரி மந்திரோபதேசமும் அளிக்கப்படுகிறது. உபநயனம் என்ற சொல்லின் வேரசைகள், உப என்பதன் பொருள் அருகில், நயனம்- கொணர்தல், என்ற பொருள் உள்ளவை. எனவே உபநயனம் என்றால் குழந்தையை குரு அல்லது ஆசிரியரிடம் அழைத்துச் சென்று முறையான கல்வி புகட்டுதல் என்று பொருள்படும். பிரம்மோபதேசம் முடிந்தபின் உபநயனம் அளிக்கப்படுகிறது. இது அவனுக்கு இன்னொரு கண் கொடுத்து, புதிய பிறவி அளிப்பதாக நம்பப்படுகிறது.

ப்ரைஸார்த்தம்– வேதக்கல்வியின் துவக்கம். இந்தச் சடங்குக்குப்பின் குழந்தைக்கு வேதங்களும் உபநிடதங்களும் கற்பிக்கப்படுகின்றன. குருகுலவாசமும் இனி துவங்குகிறது.

ருதுசுத்தி– பெண்ணின் முதல் மாதவிடாயின்போது நடத்தப்படும் சடங்கு. இது தொடர்பாக எண்ணற்ற சடங்குகளும் பழக்க வழக்கங்களும் உண்டு.

சமாவர்த்தனம்– பிரம்மச்சரிய ஆசிரமம் என்று சொல்லப்படும் மாணவ பருவம் நிறைவடைவதைக் குறிக்கும் சடங்கு இது.

விவாகம்– திருமணச் சடங்கு. ஆணும் பெண்ணும் மனதளவிலும் உடலளவிலும் கூடுவதற்கு சமய அந்தஸ்து கொடுக்கும் புனிதச் சடங்கு இது. வாழ்வில் வளர்ச்சி காண இது ஒரு தளம் அமைத்துக் கொடுக்கிறது. திருமணம், புலன் இன்பங்களைத் துய்ப்பதற்கு மட்டமான ஏற்பாடு அல்ல. காம விழைவுக்கு நிறைவு காணும்போதே, இல்லற வாழ்வின் பொறுப்புகளையும் கடமைகளையும் சமபங்கு பகிர்ந்து கொள்ளவும் அறிவுருத்தப்படுகிறது. மிருக இச்சைகளைக் கட்டுப்படுத்தி உயர்வான நோக்கங்களையும் அனுபவ யதார்த்தங்களையும் நோக்கித் திருப்பி, நான்கு புருஷார்த்தங்கள், அல்லது இந்து சமூகத்தின் நான்கு இலட்சியங்களை அடைய விவாகமே முதல் படி. . சமூக ஒழுங்கு நலனைக் காக்கவும் திருமண அமைப்பு உதவுகிறது.

அந்த்யேஷ்டி– நீத்தார்களுக்காகச் செய்யப்படும் சடங்கு. மரணதின சடங்குகள் மட்டுமல்ல, இறந்தவர்களுக்கும் பிற தேவதைகளுக்கும் அளிக்கப்பட வேண்டிய ஸ்ராத்த்ங்கள் என்னென்ன என்று வெவ்வேறு சாஸ்திரங்களில் இந்த சம்ஸ்காரம் குறித்து விளக்கமாக விவரிக்கப்படுகின்றன.

ஆதார நூல்கள்

  • P.V. Kane. History of Dharma Shastras, 5 vols, 1962-1975, Pune: Bhandarkar Oriental Research Institute.
  • Rajbali Pandey. Hindu Samskaras, 2002, New Delhi: Motilal Banarsidass.
  • Prem P. Balla. Hindu Rites, Rituals, Customs and Traditions, 2009, New Delhi: Hindology Books.
  • H. W. Bodewitz. The Daily Evening and Morning Offering (Agnihotra) according to the Brahmanas, 1976, Leiden: E.J. Brill.


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard