இந்து சமயங்கள் தனிமனிதனை முன்னிருத்துகின்றன என்பதையும், தனிமனித வளர்ச்சி மற்றும் சுதந்திரத்துக்கு அவை மிக அதிக முக்கியத்துவம் தருகின்றன என்பதையும் சென்ற மூன்று பகுதிகளில் எழுதியிருந்தேன்.
இந்தப் பகுதியிலும் இதே பொருளைத் தொடர்ந்து பேசப்போகிறோம்- ஆனால், இதில் இந்து சமயங்களுக்கும் சம்பிரதாயங்களுக்கும் உரிய மூன்று அடிப்படை கோட்பாடுகளைப் பார்க்கப் போகிறோம். ஒவ்வொரு மனிதனும் செலுத்த வேண்டிய முக்கடன்கள், நிறைவேற்ற வேண்டிய ஐந்து யாகங்கள், மேற்கொள்ள வேண்டிய தீர்த்த யாத்திரைகள்- கடன்கள், யாகங்கள், யாத்திரைகள்- இவையே அந்த மூன்று அடிப்படைக் கோட்பாடுகள்.
பல மதங்களிலும் யாத்திரை செல்லும் வழக்கம் உண்டு. ஆனால் எவற்றைப் புனிதமான இடங்களாகக் கருதி யாத்திரை செல்கிறார்கள் என்பதுதான் இந்து சமயங்களில் மேற்கொள்ளப்படும் யாத்திரையில் உள்ள தனித்தன்மை. பொதுவாக, பல மதங்களிலும் அந்த மதத்தைத் தோற்றுவித்தவரோடு தொடர்புடைய இடங்கள், அல்லது அந்த மதத்தில் பிரதான முக்கியத்துவம் கொண்ட வழிபாட்டுத் தலங்கள்தான் யாத்திரை செல்லும் இடங்களாக இருக்கும். ஆனால் இந்து சம்பிரதாயங்களில் பல்வகைப்பட்ட ஏராளமான இடங்கள் புனிதமாக கருதப்படுகின்றன. அது மட்டுமல்ல, நதிகள், மலைகள், விலங்குகள் என்று இயற்கையில் உள்ளவையும் புனிதமாக வழிபடப்படுகின்றன.
குறிப்பிட்ட சில புனித நதிகளில் நீராடுவது, தொலைவில் உள்ள மலைக்குச் சென்று கிரிவலம் வருவது போன்ற விஷயங்களும் இந்து மரபில் திருத்தல யாத்திரைகளாகக் கருதப்படுகின்றன என்பது விஷயம் தெரியாதவர்களுக்கு ஒரு பெரிய ஆச்சரியமாக இருக்கும்.
ருண த்ரயம்
ஒவ்வொரு மனிதனும் ரிஷிகளுக்கு, கடவுளர்களுக்கு, மூதாதையர்களுக்கு என்று மூன்று கடன்களைச் செலுத்தவேண்டிய கடமையோடு பிறக்கிறான் என்பது இந்து கலாசாரத்தின் பண்டைய நம்பிக்கைகளில் ஒன்று. வேதங்களின் அங்கமான தைத்திரிய சம்ஹிதை இப்படிச் சொல்கிறது-
“எது பிறக்கிறதோ, அது பிறக்கும்போது மூன்று கடன்களைக் கொண்டதாய் பிறக்கிறது, ரிஷிகளுக்கு பிரமச்சரியத்தையும், தெய்வங்களுக்கு யாகங்களையும் பித்ருக்களுக்கு வம்சத்தையும் அளித்தாக வேண்டும்”
(தைத்திரிய சம்ஹிதை, VI. 3. 10. 5). பண்பாட்டுக் கல்வி பெறுதல், யாகங்கள் செய்தல், குழந்தை பெற்றுக் கொள்ளுதல் முதலானவை ஆன்மீக கடமைகளாகக் கருதப்படுகின்றன.
இந்த நம்பிக்கை பரவலாக முக்கடன்கள் அல்லது ருண த்ரயங்கள் என்று அறியப்பட்டாலும், மகாபாரதம் நான்காம் கடன் என்று இன்னொன்றும் சொல்கிறது. அனைத்து உயிர்களுக்கும் நன்மை செய்து, அன்புடன் இருந்துதான் நாம் அவற்றுக்குச் செலுத்த வேண்டிய கடனைத் தீர்க்க முடியும் (மகாபாரதம், ஆதி பர்வம், 120. 17-20). மகாபாரதத்தின் அனுசாசன பர்வம் அதிதிகளுக்குச் செலுத்தப்பட வேண்டிய கடன் என்று ஐந்தாவதாக ஒன்றும் சேர்க்கிறது (37.17)
இரண்டாம் கடனும் மூன்றாம் கடனும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. கல்வி பயின்று முடித்து குறிப்பிட்ட ஒரு வயதுக்கு வரும் மாணவன் யாகங்கள் செய்தாக வேண்டும், இந்த யாகங்களில் சிலவற்றில் அவனது மனைவியும் உடன் நிற்க வேண்டும். ரிஷிகளுக்கு பிரமச்சரியத்தை அளித்து, தெய்வங்களுக்கு யாகங்களை அளிக்கும் பருவத்தை எட்டும் மாணவன் திருமணம் செய்து கொள்வது அவசியமாகிறது. அதன்பின்னரே, மூன்றாம் கடனான, “பித்ருக்களுக்கு வம்சத்தையும் அளிப்பதை” அவன் நிறைவேற்ற முடியும். இந்து சம்பிரதாயங்களில் மூத்தோருக்கு மரியாதை அளிப்பது, முன்னோர்களுக்கு பிண்டம் அளிப்பது போன்றவையும் அவசியமாகக் கருதப்படுகின்றன. எனவே இவற்றைச் செய்பவனுக்கு நேரடி வாரிசு இருக்க வேண்டும்.
மேலும், இந்தக் மூன்று கடன்களுக்கு சமய நோக்கமற்ற வேறொரு காரணமும் இருக்கக்கூடும் – குடும்பத்தைக் காப்பாற்றும் பொறுப்பைத் தன் தந்தையிடமிருந்து மகனோ மகளோ ஏற்றுக்கொள்ளும் வகையில், அவனது மகன் மற்றும் மகளுக்குப் பயிற்சி அளித்து உதவுவதற்காகவும் இந்த சம்பிரதாயங்கள் நடைமுறையில் இருக்கலாம்.
இரண்டாம் கடனும் மூன்றாம் கடனும் பொதுவாகச் சில விமரிசனங்களுக்கு உட்படுத்தப்படுகின்றன. ஆசிரம அமைப்பில் முதல் நிலையான மாணவ பருவத்திலிருந்து நான்காம் நிலையான சந்நியாச பருவத்துக்கு நேரடியாகச் செல்லும் சுதந்திரத்தை வலியுறுத்துபவர்களே இந்த விமரிசகர்கள். ஆசாரிய சங்கரரது நிலைப்பாடும் இதுவே. ஆனால், இதை மறுப்பவர்கள், முன்னோர்களுக்கும் தெய்வங்களுக்கும் உரிய கடனைச் செலுத்தாதவர்கள் மோட்சத்தைக் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாது என்று சொல்கின்றனர். எனவே மிக இளம் வயதில் துறவு மேற்கொள்ளும் பாலசந்நியாசம் சாஸ்திர விரோதமானது என்பது இவர்களது நிலைப்பாடு.
பஞ்சமகா யக்ஞங்கள்
இந்து சமய பண்பாட்டின்படி தொல்காலம் தொட்டே தினமும் கடைபிடிக்க வேண்டும் என்று சொல்லப்படும் ஐந்து கடமைகளும் பஞ்சமகா யக்ஞங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவை அனைத்தும் யாகங்கள் என்று சொல்ல முடியாது, இவை அனைத்தும் அக்னி வளர்த்து ஆகுதி அளிப்பவை அல்ல. ஆனாலும் அவை யக்ஞங்கள் என்று அழைக்கப்பட காரணம், இந்து மதத்தைச் சார்ந்தவனின் வாழ்வில் அவற்றுக்கு அவ்வளவு முக்கியத்துவம் உள்ளது என்பதுதான்.
இவை முறையே
- பிரம்ம யக்ஞம் – பிரம்மத்துக்கு அளிக்கப்படும் யாகம்
- தேவ யக்ஞம் – தெய்வங்களுக்கு அளிக்கப்படும் யாகம்
- பூத யக்ஞம் – அனைத்து உயிர்களுக்கும் அளிக்கப்படும் யாகம்,
- பித்ரு யக்ஞம் – மூதாதையர்களுக்கு அளிக்கப்படும் யாகம்,
- மானுஷ்ய யக்ஞம் – மனிதர்களுக்கு அளிக்கப்படும் யாகம்
என்று ஐவகைப்படும்.
வேதங்கள் முதல் நவீன சாஸ்திரங்கள் வரை பஞ்சமகா யக்ஞங்கள் பேசப்படுகின்றன. ஒவ்வொரு இந்துவும் கட்டாயம் செய்ய வேண்டிய நாற்பது சம்ஸ்காரங்களில் கௌதம ரிஷியும் மனுவும் இவற்றையும் சேர்த்துக் கொண்டிருப்பது பஞ்ச மகா யக்ஞங்களின் தாக்கத்தை உணர்த்துகிறது.
பிற யாகங்களிலிருந்து தினமும் செய்யப்பட வேண்டிய இந்த பஞ்ச மகாயாகங்கள் எப்படி வேறுபடுகின்றன என்றால், இந்த ஐந்தையும் செய்வதில் எந்த பலனும் இல்லை, மிகவும் துவக்க நிலையில் உள்ள உயிர் முதல் சக மனிதர்கள், மூதாதையர்கள், தெய்வங்கள், பரப்பிரம்மம் என்று உலகில் உள்ள அனைத்தையும் நேசிப்பதன் வெளிப்பாடாகவே இவை அமைந்திருக்கின்றன என்பதுதான்.
பிரம்ம யக்ஞம் என்பது, சமய நூல்களைக் கற்பது, பிறருக்குக் கற்றுத் தருவது, புனித மந்திரங்களைச் சொல்வது போன்ற சமயச் சடங்குகள். தர்ப்பணமும் ஒரு பிரம்ம யக்ஞம் என்று சிலர் சொல்கின்றனர்.
தேவ யக்ஞம் என்பது பிரம்மத்தை பல்வேறு தெய்வ வடிவில் வழிபடுவதும், ஹோமம் வளர்த்து வழிபடுவதும் என்று சொல்லப்படுகிறது.
பூத யக்ஞம் என்பது நாய்கள், காகங்கள், எறும்புகள், பூச்சிகள் முதலானவற்றோடு உணவைப் பகிர்ந்து கொள்ளுதல்.
பித்ரு யக்ஞம் என்பது மறைந்தவர்களுக்கு ஆகுதி அளித்தல். தர்ப்பணம், பிண்ட தானம், ஸ்ரார்த்தம் முதலானவை பித்ரு யக்ஞங்கள்.
மனுஷ்ய யக்ஞம் என்பது அதிதிகளை வரவேற்றல். வீட்டைவிட்டு வெளியே சென்று அதிதிகளை வரவேற்று, அவர்களுக்கு அன்னம், தண்ணீர். ஆசனம் முதலியவை அளித்து கௌரவித்து, ஓய்வெடுக்கவும் உறங்கவும் தக்க இடம் கொடுத்து, அவர்களை அருகில் நின்று உபசரித்து, அவர்களோடு சற்று தொலைவு வரை சென்று வழியனுப்புவது என்று மனுஷ்ய யக்ஞம் விதிக்கப்பட்டிருக்கிறது.
இந்து சமயத்தில் தீர்த்த யாத்திரைகள்
பக்தியும் சிரத்தையும் உள்ள ஒருவன் தன் சமயத்தில் விதிக்கப்பட்டுள்ள புனித தலமொன்றுக்கு மேற்கொள்ளும் பயணம் யாத்திரை என்று சொல்லப்படுகிறது. உலகில் அனைத்து சமயங்களிலும் உள்ளவர்கள் புனிதம் என்று கருதப்படும் இடங்களுக்கு தங்கள் வாழ்நாளில் பல யாத்திரைகள் மேற்கொள்கின்றனர். கிருத்தவர்கள் ஜெருசலேமுக்கும் பௌத்தர்கள் கயைக்கும் செல்ல வேண்டும் என்று பல நியதிகளும் உண்டு. இதில் இந்து சமயமும் விலக்கல்ல. ஆனால் இங்கு என்ன விசேஷம் என்றால் இந்து சமயங்களில் ஓர் இந்து சென்று வர வேண்டிய திருத்தலங்கள் அல்லது யாத்திரைத் தளங்கள் ஏராளம் உண்டு. இவற்றில் பல எந்த ஒரு தெய்வம் அல்லது புனிதருடனும் தொடர்பு கொண்டதாக இல்லாமல் இருக்கலாம். ஒவ்வொரு தலத்துக்கும் தனக்கே உரிய தெய்வங்கள், தொல்கதைகள் இருப்பதே வழக்கு. இத்தகைய யாத்திரைகள் தீர்த்த யாத்திரைகள் என்று அழைக்கப்படுகின்றன. தீர்த்தம் என்பது திருத்தலம் என்றும் பொருட்படும்.