இந்து சமயம் ஓர் அறிமுகம்- பாகம் 3
ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்க வேண்டிய லட்சிய குணங்கள் குறித்து இந்து சமயங்கள் என்ன சொல்கின்றன என்பது பற்றி சென்ற கட்டுரையில் எழுதியிருந்தேன்.
இந்து சமயங்கள் நடைமுறை யதார்த்தத்தைக் கணக்கில் கொள்கின்றன. எல்லாருமே எப்போதுமே இந்த ஆன்ம குணங்கள் அத்தனையும் உள்ளவர்களாக இருக்க முடியாது என்பதை இந்த சமயங்கள் நன்றாகவே உணர்ந்திருக்கின்றன. புருஷார்த்தங்கள் பற்றி பின்னர் பேசும்போதுதான் இது அத்தனையையும் விரிவாக விவரிக்கும் வரைபடம் ஒன்றை நாம் பார்க்கப் போகிறோம்.
அனைவரும் துன்பமின்றி வாழவும், எல்லாரும் வீடுபேறு பெறவும் வழிகாட்டுவதுதான் இவற்றின் அடிப்படை நோக்கம். எனவே, அனைவருக்கும் அவசியமான ஆன்ம குணங்கள் என்று சொன்னாலும் இந்த லட்சிய குணங்கள் இல்லாதவர்களை இந்து சமயங்கள் பாபிகள் என்று கருதுவதில்லை. அதற்காக இந்து சமயங்களில் பாபம் என்ற விஷயமே இல்லை என்று அர்த்தமா? இந்து சமயங்களும் பிற சமயங்களும் பாபத்தை எப்படி எடுத்துக் கொள்கின்றன என்பதில் நிறைய ஒற்றுமை வேற்றுமைகள் இருக்கின்றன. முதல் பகுதியில் எழுதியது போல், இந்து சமயங்களின் மையத்தில் மனிதன்தான் இருக்கிறான். அதனால்தான் பாப புண்ணியங்கள் மனித வாழ்வைச் சரியான பாதையில் கொண்டு செல்லவும் அவனுக்கு வழி காட்டவும் தகுந்த வகையில் பேசப்படுகின்றன. இறைநெறி தவறுவதோ அல்லது ஏதோ ஒரு தத்துவக் கோட்பாட்டுக்கு எதிராக நடந்து கொள்வதோ பாபம் என்று நினைப்பதில்லை.
பாப புண்ணியங்கள் ஒன்றுடன் ஒன்று இணைந்தே இருக்கின்றன, ஆனால் ஒன்றுடனொன்று முரண்பட்டும் நிற்கின்றன. இந்து சமயங்கள் இதை எப்படி புரிந்து கொள்கின்றன என்று பார்ப்பதற்கு முன் கன்மம், மறுபிறவி என்ற இரண்டு நம்பிக்கைகளைப் பற்றியும் கொஞ்சமாவது தெரிந்து வைத்துக் கொள்வது உதவியாக இருக்கும். பின்னால் வேறொரு பகுதியில் இந்த இரண்டைப் பற்றியும் இன்னும் விவரமாகப் பார்க்கலாம், இங்கே ஒரு சிறிய அறிமுகம் மட்டும் தருகிறேன்.
கர்மா என்றால் செயல். ஒவ்வொரு செயலுக்கு ஏதோ சில விளைவுகள் இருக்கும். எவனொருவன் செய்கிறானோ, அவன் தன் ஒவ்வொரு செயலின் விளைவுகளுக்கும் உரியவன் ஆகிறான். அந்த விளைவு நன்மை செய்யலாம் தீமை செய்யலாம்; மகிழ்ச்சி அளிக்கலாம், துன்பம் அளிக்கலாம், அல்லது அவனுக்கு நல்லதாக இருக்கலாம், கெட்டதாக இருக்கலாம்.
இனி மறுபிறவி- ஆன்மாவுக்கு அழிவில்லை என்று இந்துக்கள் நம்புகிறார்கள். அது ஓர் உடலை விட்டு இன்னோர் உடலுக்குப் போவதாகவும் நம்புகிறார்கள். ஆனால் இந்த இரண்டும் எப்படி நடக்கின்றன என்பது பற்றி பொதுவாக பலரும் நினைத்துக் கொண்டிருப்பது சரியல்ல. நான் ஒரு பசுவுக்கு நல்லது செய்தால், அந்தப் பசு அடுத்த ஜென்மத்தில் என்னோடு பிறந்து எனக்கு பதிலுதவி செய்யும் என்று அர்த்தமல்ல. அல்லது, ஒரு புலியை முகத்தில் அடித்தால், அதே புலி வேறெதற்கு உண்டோ இல்லையோ, இதற்காகவே இன்னொரு ஜென்மம் எடுத்து வந்து என்னை முகத்தில் அறையும் என்பது போன்ற நம்பிக்கைகள் பரவலாக இருக்கின்றன. இவை அனைத்தும் தவறு.
நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டியது இதுதான் – அந்த அந்த சமயத்தில் கர்மவினையாக முன்வந்து நிற்பது நம் செயல்களால் பாதிப்படைந்த அல்லது நன்மை பெற்ற தனி நபர்கள் அல்ல. நாம் யாருக்கு என்ன செய்தோம், நமக்கு யார் என்ன செய்தார்கள் என்பதில் உள்ள ஆட்களை மறந்து விடலாம். உண்மையில் நாம் செய்த வினைகளின் பலன்கள் எல்லாம் ஒட்டுமொத்தமாகக் குவிந்து கிடக்கின்றன, அவை அவ்வப்போது தத்தம் வேலையைக் காட்டுகின்றன.
எந்த ஒரு கர்மா செய்தாலும் பிறருக்கோ அல்லது பொதுவில் பலருக்கும் உரிய ஒன்றுக்கோ எதிரான அத்துமீறலாகி, அச்செயலின் விளைவுகள் அவர்களை பாதிக்கும்போது, அந்த வேலையைச் செய்தவனுக்கு மோசமான எதிர்விளைவுகள் ஏற்படுகின்றன. இவற்றை இந்து சமயங்கள் பாபம் என்று அழைக்கின்றன. எப்படிப்பட்ட செயல்கள் இவை என்று பல நூற்றாண்டுகளாக கவனித்து, சாஸ்திரங்கள் அவற்றைத் தொகுத்து வந்திருக்கின்றன.
ஆனால் இந்திய துணைக்கண்டம் மிகப் பெரியது, இங்கு பல பிரதேசங்களும் அவற்றுக்கு உரிய தனித்தனி பழக்க வழக்கங்களும் இருக்கின்றன என்பதால் இது போன்ற சாஸ்திர வகைமைப்பாடுகள் எக்கச்சக்கமாக இருக்கின்றன. அது அத்தனையையும் பேச தனியாக ஒரு புத்தகமே எழுத வேண்டும். இங்கே இருப்பது ஒரு சிறிய அறிமுகம்தான். இவ்வளவுதான் விஷயம் என்று நினைத்துக் கொள்ள வேண்டாம். அத்தனை விஷயங்களையும் தொடவுமில்லை, அவ்வளவு விரிவாக பேசவுமில்லை.
புண்ணியம்
புண்ணியம் என்ற சொல்லுக்கு, “புனிதமானது, மங்களமானது, நல்லது, ஒழுக்கமானது,” என்று பல அர்த்தம் உண்டு. எண்ணம், சொல், செயல் என்று பலவகைகளில் செய்யப்பட்ட நல்வினைகளையும் புண்ணியம் என்று சொல்வார்கள். செயலை மட்டுமல்லாமல் அவற்றின் விளைவுகள் அனைத்தையும் புண்ணியம் என்றும் கொள்வதுண்டு. லௌகீக வாழ்க்கையிலிருந்து நம்மை உயர்த்தி நமக்கு நன்மை செய்யும் செயல்கள் அத்தனையும் புண்ணியம்தான். தான தருமம், பிறருக்கு நல்லது நடக்க வேண்டும் என்று உயர்வாய் நினைப்பது, பிறருக்கு ஆறுதலாய் நாலு வார்த்தை பேசுவது, இது போன்ற செயல்களின் விளைவுகள் புண்ணியம் என்று சொல்லப்படுகின்றன. அதே போல் பிரார்த்தனை செய்வது, தீர்த்த யாத்திரை செல்வது, ஏன், தியானம் செய்வதும்கூட் புண்ணிய காரியம்தான். இது ஒவ்வொன்றுமே புண்ணியம்தான்.
நம் எண்ணம், பேச்சு, செயல் எல்லாம் புண்ணியம் பெற்றுத்தருவதாக இருக்க வேண்டும் என்ற ஊக்கத்தை இந்து சமயங்கள் அளிக்கின்றன. இதனால் நல்ல இணக்கமான ஒரு சூழல் உருவாகிறது என்பது மட்டுமல்ல. இந்த நல்வினைகளின் பயனாய் நிறைய புண்ணியம் சேர்த்துக் கொண்டு இப்பிறவியின் பின்னாட்களிலோ அல்லது மறுபிறப்பிலோ அவற்றுக்கான நற்பயன்களை அனுபவிக்க முடியும் என்ற நம்பிக்கைக்கும் இடம் கொடுக்கின்றன. புண்ணிய எண்ணங்களும் செயல்களும் லௌகீக வாழ்விலிருந்து உயர்த்தி நம்மை மோட்சத்துக்கு இட்டுச் செல்வது மட்டுமல்லாமல், உலக உயிர்கள் எல்லாமே நலமாக இருக்க வேண்டும் என்று நாம் விரும்பவும் உதவுகின்றன.
பிற சமயங்கள் நம்புவது போல், புண்ணியச் செயல்களின் பலன் இறப்புக்குப்பின் சொர்க்கத்தில் போய்ச் சேர்ப்பது மட்டும்தான் என்று இந்து மரபுகள் பிரச்சாரம் செய்வதில்லை. இந்து சாஸ்திரங்களில் சொர்க்கத்தைப் பற்றி பேசப்படுகிறது என்பது உண்மைதான், ஆனால் புண்ணியச் செயல்களின் பல நன்மைகளுள் ஒன்று மட்டும்தான் சொர்க்கம் சென்று சேர்வது. சொர்க்கம் மட்டும்தான் எல்லாம் என்று சொல்வதில்லை.
புண்ணியம் பற்றி பேசும்போது அங்கு சமய உணர்வுகள் வெளிப்படுவது உண்மைதான் ஆனால் மனிதனின் ஒட்டுமொத்த அற, ஆன்மிக வளர்ச்சிதான் இந்து சமயங்களின் மைய நோக்கம். இதன் நீட்சியாய் சமூகம் முழுமையும் நலமாய் வாழ் வேண்டும் என்ற லட்சியம் இருக்கிறது.
பாபம்
கடவுளின் சட்டங்களை வேண்டுமென்றே மீறுவது அல்லது கடவுளுக்கு எதிராக புரட்சி செய்வது பாபம் என்பதுதான் உலகம் தழுவிய பல சமய மரபுகளின் சித்தாந்தம். உதாரணத்துக்கு, கிறித்தவத்தில் ஒரிஜினல் சின் என்று ஒன்று இருக்கிறது. முதல் பாபம் செய்த ஆதாமுக்குப்பின் வந்த அத்தனை பேரும் அந்தப் பாபத்தால் பீடிக்கப்பட்டிருப்பதாக கிறித்தவம் சொல்கிறது. இது போல் எது பாபம், யார் பாபிகள், எது பாப விமோசனம் என்பது பற்றி உலகத்தில் உள்ள ஏறத்தாழ அத்தனை சமயங்களும் தங்களுக்கு என்று ஒரு தத்துவத்தை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன.
இந்து சமயத்தில் பாபம் அல்லது பாதகம் என்ற சொல் பாபத்தை விவரிக்கிறது. ஒரு மனிதனுக்கு எப்படி மோட்சம் கிட்டும், அதற்கு தடைகள் என்ன, அந்தத் தடைகளைக் கடந்து செல்வது எப்படி என்பது போன்ற விஷயங்களை இந்தத் தத்துவம் சொல்கிறது. இருந்தாலும், பாதகம் என்பது மிகவும் தீவிர சமயத்தன்மை கொண்ட சிந்தனை, இறைச் சித்தத்துக்கு எதிராகச் செய்யப்படும் விஷயங்களை அது சொல்கிறது. எனவே பாபம் குறித்து இந்து சமயங்கள் சொல்வது எல்லாம் அற-ஆன்மிக விஷயங்கள்தான். சமயம் அல்லது ஒழுக்கங்களை மட்டும் அவை தனியாகப் பேசுகின்றன என்று சொல்ல முடியாது. பொதுவாகச் சொன்னால் இந்து சமயங்களில் சமயமும் ஒழுக்கமும் ஒன்றுக்கு ஒன்று சம்பந்தமில்லாத தனித்தனி விஷயங்கள் அல்ல.
ஆனால் எந்த ஒரு செயலையுமே ஏன் பாபம் என்று சொல்ல வேண்டும்? அப்படியே பார்த்தாலும், சில செயல்களை பாபச்செயல்கள் என்று சொல்ல முடியுமானால், ஆண்களும் பெண்களும் ஏன் பாபம் செய்கிறோம்? எதெல்லாம் பாபச் செயல்கள், ஏன் அப்படிச் சொல்லப்படுகின்றன? ஒருவன் பாபம் செய்தால், பாப விமோசனம் பெற என்னவெல்லாம் செய்ய வேண்டும்?
இந்து சமயங்களைப் பொறுத்தவரை ஒவ்வொரு மனிதனுக்கும் மூன்று குணங்கள் அல்லது சுபாவங்கள் உண்டு. அவற்றை சத்வம், ரஜஸ், தமஸ் என்று அழைக்கிறோம். ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு வகையில் இந்த மூன்று குணங்களும் கலந்து இருக்கின்றன. இந்தக் கலவைகளில், ரஜோ குணம் மேலோங்கி இருந்தால் அவர்கள் சில கெட்ட காரியங்கள் செய்யக்கூடும். கீதையில் கிருஷ்ணர் இப்படிச் சொல்கிறார், “காமம், கோபம், பேராசை” மனிதர்களை அழிக்கின்றன, எனவே மனிதன் அவற்றைத் தவிர்க்க வேண்டும் (பகவத் கீதை, 15, 21). அதே போல், “காமமும் கோபமும் ரஜோ குணத்தில் தோன்றுகின்றன… இந்த உலகத்தில் அவை மனிதனுக்கு விரோதிகள்” என்றும் சொல்கிறார் (பகவத் கீதை, 3, 37)
ஏதோ ஒரு எண்ணம், சொல், செயல், தொடர்பு, அல்லது சம்பவம் ஒரு மனிதனைச் சீரழிக்கிறது அல்லது அவனது அமைதியைக் குலைக்கிறது என்றால், அது மன அளவில் இருந்தாலும் சரி, உடல் அளவில் இருந்தாலும் சரி, பாபம் என்று சொல்லப்படுகிறது. ஏனென்றால் இது போல் ஒழுக்கம் கெட்டுப் போவது முடிவில் மோட்சம் அடைவதற்குத் தடையாக இருக்கும். இதை இன்னும் கொஞ்சம் விரிவாக யோசித்தால், இது போன்ற ஒரு சீரழிவு அந்த மனிதன் வாழும் சமூகத்தின் சமநிலையைக் குலைக்கும். இந்த அர்த்தத்தில் பார்க்கும்போது, ஒரு மனிதனுக்கு கெடுதல் செய்வது எதுவாக இருந்தாலும் சரி, சமூகத்தில் அமைதியைக் குலைப்பது எதுவாக இருந்தாலும் சரி, இறைவனை நோக்கிச் செல்லும் பாதையிலிருந்து மனிதனையோ அல்லது ஒரு குழுவையோ திசைதிருப்புவதும் சரி, எல்லாமே பாபம் என்றுதான் சொல்லப்படுகிறது.
பாதகங்கள் எத்தனை, அவை என்னென்ன என்ற கேள்விகளுக்கு பதில் மிகப் பழமையான இந்து சாஸ்திரங்களிலேயே இருக்கிறது. காலத்துக்கு ஏற்ப இவற்றின் எண்ணிக்கையும் பெயர்களும் மாறி வந்திருக்கின்றன. ஆனால் இவற்றில் ஐந்து பாபங்களை மாபாதகங்கள் என்று சொல்கிறார்கள், அவற்றின் பெயர் மட்டும் வெவ்வேறு சாஸ்திரங்களில் மாறுபடுகின்றன.
பொதுவாக அனைவரும் இவற்றை பஞ்ச மாபாதகங்களாக ஒப்புக் கொள்கின்றனர்-
களவு
மது அருந்துதல்
கொலை
குரு பத்தினியுடன் உறவு கொள்ளுதல்
மேற்கண்ட நான்கு பாபங்களைச் செயதவர்களோடு நட்பாக இருப்பது
(சாந்தோக்ய உபநிடதம், 5.10.9)
இதில் பலரும் நான்காவது பாபம் ப்ருணஹத்தி அல்லது கருச்சிதைவு என்று சொல்கிறார்கள். வேறு சிலர், கோவதை அல்லது பசுவதை என்று சொல்கிறார்கள்.
பாபங்கள் வெவ்வேறு வகைகளாகப் பிரிக்கப்பட்டு, அவற்றிலிருந்து விடுபட என்ன பிராயச்சித்தம் செய்ய வேண்டும் என்பதெல்லாம் தொகுக்கப்பட்டு இந்து சமய பனுவல்களில் பலவிதங்களில் பட்டியல்கள் இடப்பட்டிருக்கின்றன. பொதுவாக இவற்றில் இரு வகைகள் எல்லாருக்கும் தெரிந்திருக்கும்- மாபாதகங்கள், உபபாதகங்கள். மாபாதகங்கள் கொலைக்குற்றம் போன்றவை, உபபாதகங்கள் அவற்றைவிட கொஞ்சம் சாதாரணமான பாபங்கள்.
சில முக்கியமான மாபாதகங்களும், உபபாதகங்களும் அவற்றுக்கான பிராயச்சித்தங்களும் கீழே கொடுக்கப்பட்டிருக்கின்றன. இந்தப் பட்டியல் முடிவற்றது என்பதால் எல்லாவறையும் பேச முடியாது. ஆனால் குறிப்பிட்ட பாபங்களுக்கு என்ன பிராயச்சித்தம் என்று அறிய விரும்புபவர்களுக்கு உதவுவதற்காக பாதகங்களையும் பிராயச்சித்தங்களையும் விவரிக்கும் வகையில் ஏராளமான புத்தகங்கள் இருக்கின்றன, அவற்றைப் படிக்கலாம்.
மாபாதகங்கள்
ஹத்யம் அல்லது வதம்
ஹத்யம் அல்லது வதம் என்றால் சக மனிதனைக் கொலை செய்தல். மகாபாபங்களில் மிகக் கொடிய பாபமாக இதுவே இந்து சாஸ்திரங்களில் கருதப்படுகிறது. மனிதனை விடுங்கள், எந்த ஒரு பிற உயிரையும் கொல்லும் உரிமை மனிதனுக்குக் கிடையாது என்றுதான் இந்து மரபுகள் சொல்கின்றன. இன்னொருவனை நேரடியாகக் கொன்றாலும் சரி, ஆள் வைத்துக் கொன்றாலும் சரி, கொலைக்கு உடந்தையாக இருந்தாலும் சரி, கொலைகாரர்களுக்கு பாதுகாப்போ புகலிடமோ அளித்தாலும் சரி, கொலை நடக்கும்போது வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாலும் சரி, பிற மனிதனைக் கொன்ற பாபம் சேரும்.
இந்து சாஸ்திரங்களில் சில முக்கியமான கொலைக் குற்றங்கள் பேசப்படுகின்றன. அவற்றில் சில –
ப்ருணஹத்யா
கருச்சிதைவு மகாபாபம் என்று கருதப்படுகிறது. இன்னும் பிறக்கவில்லை என்றாலும், கருவில் இருக்கும் குழந்தைக்கு உயிர் இருப்பதாகவே கருதப்படுகிறது. வளர்ந்துவிட்ட சிசுவைச் சிதைப்பதைக் கொலைக்குச் சமமாக ஹிந்து சமயங்கள் கருதுகின்றன. அதற்காக, ஹிந்து சமயங்கள் கருத்தடைக்கு எதிர்மறையானவை என்று அர்த்தம் கொள்ளக்கூடாது. கருத்தடை, கருத்தடைச் சாதனங்கள் குறித்து அநேக ஹிந்து சாத்திரங்கள் உண்டு. கருத்’தடை’ என்பது கருச்சிதைவுக்கு ஒருகாலும் இணையாகாது.
சிசுஹத்யா
இந்து பண்பாட்டிலும் சமயங்களிலும் பன்னிரெண்டு வயதுக்கு குறைவான குழந்தைகள் எந்த தவறு செய்தாலும் தண்டிக்க அனுமதி கிடையாது. தெரிந்து செய்தாலும் சரி, தெரியாமல் செய்தாலும் சரி, குழந்தைகள் தவறு செய்வதாக எடுத்துக் கொள்ளக்கூடாது. கள்ளமற்ற குழந்தைகளை எக்காரணம் கொண்டும் தண்டிப்பது இந்து சமூகத்தில் கண்டிக்கப்படுகிறது. தண்டிப்பதே தவறு என்று விதிப்பதால், இச்சமயங்கள் குழந்தைகளைக் கொலை செய்வது மாபாதகம் என்றும் விதிக்கின்றன.
கோஹத்யா
பசுக்களின் உடல்களில் சகல இறைவர்களும் உறைவதாக அநேக மரபுகளும், சம்பிரதாயங்களும் நம்பிக்கை கொண்டிருப்பதால், ஹிந்து சமயங்கள் பசுவதை என்பது மாபாதகம் எனக் கொள்கின்றன.
பானம்
மதுபானங்களும் பிற போதைப் பொருட்களும் இந்து சமயங்களில் தடை செய்யப்பட்டிருக்கின்றன. மலர்கள், கனிகள் என்று மூலப்பொருள் எதுவாக இருந்தாலும் உடலுக்கும் மனதுக்கும் கேடு செய்வதால் போதை அளிக்கக்கூடிய எந்த மதுபானத்தையும் உட்கொள்ள அனுமதி கிடையாது. மனதின் சமநிலையைக் குலைத்து பல தீய பழக்க வழக்கங்களுக்கு மனிதனைத் தயார் செய்து, அவனையும் அவன் வாழும் சமூகத்தையும் மதுபானங்கள் நாசம் செய்கின்றன. பொதுவாகவே மதுபானம் மனிதனின் நுண்புலன்களை மழுங்கடித்து விடுவதால் அவனது ஆன்மிக வளர்ச்சியும் தடைபடுகிறது. எனவே மதுபானம் உட்கொள்வது இந்து சாஸ்திரங்களில் மிகப்பெரும் பாபங்க்ளில் ஒன்றாகிறது.
களவு
சிறிய அளவிலானாலும் சரி, நேரடியாகவோ மறைமுகமாகவோ அல்லது ரகசியமாகவோ பிறர் பொருளை அபகரித்தல் மிகக் கொடிய பாபம் என்று இந்து சாஸ்திரங்கள் சொல்கின்றன. ஏறத்தாழ எல்லா சாஸ்திரங்களும் ஏழைகள் மற்றும் இறையடியார்களிடமிருந்து அபகரிப்பது பெரும் பாபம் என்று கண்டிக்கின்றன.
பிறழ்காமம்
பின்வரும் காமங்கள் பாபமாகச் சொல்லப்படுகின்றன-
குருவங்கன காமம்– ஒருவன் தனது குரு அல்லது ஆசானின் மனைவியுடன் உடலுறவு மேற்கொள்வது பாபச்செயல்.
அதே போல், தந்தை, அன்னை, சகோதரன், சகோதரி என்று குடும்ப உறுப்பினர்களுடன் உடலுறவு கொள்வது பாபச் செயல். சில சாஸ்திரங்கள் தந்தை அல்லது தாயின் உடன்பிறந்தோர் மற்றும் அவர்களது குழந்தைகளுடன் உறவு கொள்வதையும் தடை செய்கின்றன, ஆனால் இது பிரதேசத்துக்குப் பிரதேசம் மாறுபடுகிறது.
சக மனிதனைத் தவிர வேறு பிற விலங்கினங்களுடன் உறவு கொள்வதும் பாபம்தான்.
சங்கம் அல்லது சகவாசம் – மகாபாதக சம்சங்கம்
மாபாதகங்கள் செய்பவர்களோடு தொடர்பு வைத்துக் கொள்வதே பெருங்குற்றமாகவும் மாபாதகமாகவும் சொல்லப்படுகிறது. இவை ஒருவனின் மனதைச் சீரழிக்கும், நாட்பட நாட்பட ஒருவரின் தீய குணங்கள் பிறரைப் பாதிக்கும் என்பதால், காலப்போக்கில் கூடாஒழுக்கம் கேடில் முடியும்.
உபபாதகங்களும் பிராயச்சித்தங்களும்
சில சாஸ்திரங்கள் சூதாட்டம், பொய் சொல்லுதல், சாஸ்திரங்களைப் பழித்தல், பிறருக்கும் பொதுமக்களுக்கும் உரியதை அழித்தல் போன்றவற்றை உபபாதகங்கள் என்று நீண்ட பட்டியலிடுகின்றன. இதில் ஆர்வமுள்ளவர்கள், பிராயச்சித்த விவேகம், யக்ஞவல்க்ய ஸ்ம்ருதி, போன்ற பனுவல்களைப் படிக்கலாம்.
பிராயச்சித்தம் அல்லது பாபத்தைப் போக்கிக் கொள்ளும் வழிகள்
பிராயச்சித்தம் என்றால் பாபத்தைச் சுத்திகரித்துக் கொள்ளுதல். பாபச் செயலால் பாபியின் மனதில் ஏற்பட்ட தடங்களைப் பிராயச்சித்த கர்மம் சுத்தப்படுத்துகிறது. கடந்த காலத்தில் செய்த பிழையைத் திருத்திக் கொள்ளும் செயல் இது.
பாபங்களைப் போக்கும் கருவியாக பிராயச்சித்தம் இருக்க முடியுமா என்பது பற்றி பல்வேறுபட்ட கருத்துகள் இருக்கின்றன. தெரிந்தே செய்த பாபங்களிலிருந்து தப்பிக்க முடியாது, ஒருவன் தன் செயல்களுக்கான பின்விளைவுகளை அனுபவித்தேயாக வேண்டும் என்று சிலர் சொல்கின்றனர். அறியாமையாலோ, அசிரத்தையாலோ, அறியாமலோ செய்த பாபங்களுக்கு மட்டுமே சாஸ்திரங்களில் பிராயச்சித்தம் உண்டு என்கின்றனர் அவர்கள். ஆனால் வேறு சிலர், எப்பேற்பட்ட பாபங்களைச் செய்திருந்தாலும் சரி, அனைவருக்கும் இந்து தர்மம் நம்பிக்கை அளிக்கிறது என்று சொல்கிறார்கள்.
மாபாதகங்கள் செய்தவர்களுக்கும் மனம் வருந்தி திருந்த வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். சில உயிர்கள் நிரந்தரமாக நரகத்துக்கு அனுப்பப்படும் என்பதை இந்து சமயங்கள் அப்படியே நம்புவதில்லை- ஆனால் துல்லியமாகச் சொல்ல வேண்டுமென்றால், சில பக்தி சம்பிரதாயங்கள் அப்படிச் சொல்கின்றன. ஆனால் அந்த நம்பிக்கை பரவலாக இல்லை. எனவே எல்லா பாபங்களில் இருந்தும் சுத்திகரித்துக் கொள்ள முடியும் என்பதால் அதிக அளவில் பிராயச்சித்தங்கள் இந்து மதநூல்களில் சொல்லப்படுகின்றன. பாபச்செயல்களின் விளைவுகளைக் குறைத்துக் கொள்ள பல வழிமுறைகளும் சொல்லப்பட்டிருக்கின்றன. அவற்றில் சில –
பாவமன்னிப்பு
இந்து சமயச் சடங்குகளில், பாபத்தை ஒப்புக்கொண்டு பாப மன்னிப்பு பெறும் வழக்கம் கிடையாது என்ற ஒரு தவறான பொதுநம்பிக்கை இருக்கிறது. கடந்த காலத்தில் செய்த குற்றங்களிலிருந்து விடுபட இறைவனிடம் பிரார்த்தனை செய்வது குற்றத்தை ஒப்புக்கொள்ளும் செயல் என்று சொன்னால் அப்படிப்பட்ட பல பிரார்த்தனைகள் இருக்கின்றன. ரிக் வேதத்தில் மன்னிப்பு கேட்கும் பாடல்கள் எண்ணற்ற அளவில் இருக்கின்றன. தர்ம சாஸ்திரங்களில் எங்கே எப்போது எப்படி இது போன்ற பிராயச்சித்தம் செய்ய வேண்டும் என்று பல தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் பிற சமயங்களுக்கும் இந்து சமயங்களுக்கும் இடையே ஒரு மிகப்பெரிய வேறுபாடு உண்டு- பாபம் செய்தது குறித்த குற்றவுணர்வைப் போக்குவதற்காக என்றே குற்றத்தை ஒப்புக் கொள்வது கிடையாது; மாறாக, பாபத்தின் விளைவுகளை நீக்குவதற்கும் குறைப்பதற்கும் சில செயல்களைத் துவக்கவும் இப்படிச் செய்யப்படுகிறது.
வருந்துதல்
மீட்சிக்கு முக்கியமான செயல்களில் அனுதாபம் என்று அழைக்கப்படும் வருத்தச் செயல் ஒன்று. தான் செய்த தவறுக்காகவும் அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்காகவும் பாபம் செய்தவர் மனம் வருந்த வேண்டும். இவை இரண்டும் அடுத்தடுத்த செயல்கள் அல்ல, ஆனால் மனம் வருந்துதல்தான் பாபம் செய்தவருக்கு பிராயச்சித்தம் செய்யும் தகுதியை அளிக்கிறது.
பிராணாயாமம்
புலன்களையும் மனதையும் கட்டுப்படுத்த பிராணனைத் தன்னுள்ளும் தன் சூழலிலும் இருத்தி வைத்திருத்தல் காலங்காலமாக நடைமுறையில் உள்ள பழக்கம். இந்து சமய பழக்க வழக்கங்களின் ஆரம்ப நிலைகளில் இது ஒன்று. எனவே, இதுவும் பிராயச்சித்தமும் வெவ்வேறு அல்ல. பிராணாயாமம் பல்வகைப்படும், அவற்றின் எண்ணிக்கையும் பல்வேறு. இதன் நுட்பங்களை அறிய விரும்புபவர்கள் யோகா புத்தகங்களை வாசிக்கலாம்.
தபஸ்
இந்து சமயங்களில் உள்ள சுத்திகள் அனைத்தின் மையத்திலும் தபஸ் அல்லது விரதம்தான் இருக்கிறது. எதெல்லாம் விரதம் என்பது குறித்து மாறுபட்ட கருத்துகள் உள்ளன. பிரம்மச்சரியம், உண்மை பேசுதல், உண்ணாமை, வெறும் தரையில் உறங்குதல், ஒவ்வொரு நாளும் மந்திரம் ஜபித்தல், மும்முறை குளித்தல் முதலானவற்றை விரதங்கள் என்கிறார் கௌதமர் ( கௌதம தர்ம சூத்திரங்கள், 19.15). பாபத்துக்கு ஏற்றபடி எத்தனை நாட்கள் விரதம் இருக்க வேண்டும் என்பதும் எவ்வளவு வேளை சாப்பிடாமல் இருக்க வேண்டும் என்பதும் மாறுகின்றன. சில சாஸ்திரங்களில் உண்ணா நோன்புக்குதான் மைய இடம் இருக்கின்றது, அவை சந்திரனைக் கொண்டு ஆண்டுகளைக் கணக்கிடுகின்றன- சில குற்றங்களுக்கு ஒரு வருடம்கூட உண்ணாமல் இருக்க வேண்டியதாகலாம்.
ஜபம்
குறிப்பிட்ட ஒரு மந்திரத்தைத் திரும்பத் திரும்ப சொல்வதுதான் ஜபம். ஒருவனுக்கு அவனது குருவால் உபதேசிக்கப்பட்ட மந்திரமாகவும் அது இருக்கலாம், அல்லது இறைநாமமாக இருக்கலாம், அல்லது பிராயசித்த மந்திரமாக இருக்கலாம். உண்மையில் ஜபம் செய்வது ஒருவனது அன்றாட கடமைகளில் ஒன்றாக இருக்கிறது. மிகக் கொடிய பாபங்களுக்கும்கூட இறைநாமத்தை ஜெபிப்பது பிராயசித்தமாக இருக்கும் என்று பல புராண ஸ்தோத்ரங்கள் சொல்கின்றன.
தானம்
தானதர்மம் செய்வது இன்றும் பரவலாக நடைமுறையில் உள்ள பழக்கம். நல்ல நாட்களிலும் சில முக்கியமான சமயங்களிலும் ஒருவனது பிராயச்சித்தத்தின் ஒரு பகுதியாகவோ அல்லது அன்றாட கடமைகளில் ஒன்றாகவோ, இந்துக்கள் ஏழைகளுக்கும் இல்லாத நிலையில் இருப்பவர்களுக்கும் தர்மம் செய்கிறார்கள். பாபங்களுக்கு பிராயச்சித்தம் செய்வதைப் பேசும்போது தானம் தனி மற்றவை வேறல்ல என்று புரிந்து கொள்ள வேண்டும். பாபசுத்திக்கு பல கர்மாக்களை அடுத்தடுத்து செய்யும்போது அவற்றில் ஒரு பகுதியாக இதுவும் வருகிறது.
உபவாசம்
உண்ணா நோன்பிருத்தல் இந்து மக்களின் வாழ்வில் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. திங்கட்கிழமை, ஏகாதசி என்று குறிப்பிட்ட விசேஷ நாட்களில் சிலர் விரதம் இருக்கின்றனர். புண்ணியம் கிடைக்கும் என்றோ ஒரு சடங்கின் பகுதியாகவோ பிராயச்சித்தம் செய்வதற்கான தகுதி ஏற்படுத்திக் கொள்ளவோ நோன்பிருப்பதுண்டு.
தீர்த்தயாத்திரை
தீர்த்தயாத்திரை அனைத்து வகை பாபங்களையும் போக்கிவிடும் என்று போற்றப்படுகிறது. ஆனால் நடந்து செல்வது, உண்ணா நோன்பிருப்பது, திருத்தலங்களில் நீராடுவது என்று சாஸ்திரத்தில் கூறப்பட்ட வழிமுறைகளுக்கு ஏற்பவே ஒருவன் தீரத்தயாத்திரையை மேற்கொண்டு பயணப்பட வேண்டும்.
முடிவு
அடிப்படையில் சமயம் சார்ந்தவையாக இருந்தாலும், இந்துக்கள் தங்களைச் சுத்திகரித்துக் கொள்ளவும், ஆன்மிக சாதனைக்குரிய தகுதிகளை வளர்த்துக் கொள்ளவும் உதவ பாப புண்ணியக் கோட்பாடுகள் மேற்கண்டவாறு வடிவமைக்கப்பட்டு பயன்படுவதை நாம் பார்க்க முடிகிறது. அதற்கெல்லாம் எது தடையோ அதெல்லாம் தீயவை, ஒருவன் தனக்கு வீழ்ச்சியை ஏற்படுத்தும் செயல்களைத் தவிர்க்க வேண்டும் என்பதுதான் இவற்றின் மையக்கருத்து.
❀❀❀❀
ஹிந்துமதங்களில் கூறப்படும் பாவ, புண்ணியங்களைக் குறித்து மேலும் தெரிந்துகொள்ள விரும்புபவர்கள் கீழ்கண்ட நூல்களைப் படித்துத் பயன் பெறலாம்-
P.V. Kane. History of Dharma Shastras, 5 vols, 1962-1975, Pune: Bhandarkar Oriental Research Institute.
Chitralekha Singh and Premnath.Hinduism, 2002, New Delhi: Crest Publishing House
A. Sharma. The Purusharthas: A Study in Hindu Axiology, 1982, East Lansing: Asian Studies Centre, Michigan State University.