நீங்கள் தினமும் உண்ணும் அரிசி எத்தனை ஆண்டுகளாக தமிழர்களின் உணவாக இருந்திருக்கும் என்று எப்போதாவது எண்ணிப் பார்த்திருக்கிறீர்களா? அண்மையில் நான் சுமார் 2600 ஆண்டுகளுக்கு முந்தைய நெல் மணிகளைப் பார்த்தேன். தொல்லியல் அறிஞரான பேராசிரியர் ராஜன் அவர்களிடம் அந்த நெல்மணிகள் உள்ளன
பேராசிரியர் ராஜன் உலக அளவில் மதிக்கப்படும் தொல்லியல் அறிஞர்களில் ஒருவர்.ஆழ்கடலுக்குக் கீழ் சென்று ஆய்வுகள் நடத்திய முதல் இந்தியத் தொல்லியல் வல்லுநர். கொடுமணல், பொருந்தல் போன்ற இடங்களில் அவர் மேற்கொண்ட ஆய்வுகள் தமிழர்களின் தொன்மை, சங்க காலம் இவற்றைப் பற்றிய புதிய செய்திகளையும் வெளிச்சங்களையும் அளித்துள்ளன.
தற்போது ராகப் பணியாற்றிவரும் பேராசிரியர் ராஜனுடன் புதிய தலைமுறை ஆசிரியர் மாலன் நிகழ்த்திய உரையாடலில் இருந்து…..
மாலன் (தலைமுறை): சங்க காலம் சங்க காலம் என்கிறார்களே சங்ககாலம் என்பது எந்தக் கால கட்டத்தைக் குறிக்கிறது?
பேராசிரியர் ராஜன்: மார்ட்டீமர் வீலர் (Mortimer Wheeler) என்ற தொல்லியலாளர் புதுச்சேரி அருகில் உள்ள அரிக்கமேடு என்ற இடத்தில் மிகப் பெரிய அகழ்வாராய்வு ஒன்றினை 1940களில் நடத்தினார்..தமிழர்களுக்கும் ரோமானியர்களுக்குமிடையே வர்த்தகம் நடைபெற்று வந்தது என்ற கருத்ததாக்கத்தை முதன்முதலில் அவர்தான் வெளியிட்டார்.முசிறி, தொண்டி, காவேரி பூம்பட்டினம், கொற்கை, அரிக்கமேடு இவையெல்லாம் சங்க காலத் துறைமுகங்கள் என்ற அடிப்படையில் அவர் அரிக்கமேடு ஆய்வை மேற்கொண்டார். அரிக்கமேட்டில் ரோமன் நாட்டிற்கு தொடர்பான பொருட்கள் கிடைத்ததனால், அந்தப் பொருட்கள் கி.மு.மு தலாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகவும் இருப்பதால், சங்க காலம் என்பது கி.மு.முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று அவர் கருதினார். அதையொட்டி ரோமுடைய எழுச்சிக்குப் பிறகுதான் தமிழகம் எழுச்சி பெற்றது எனற் கருத்தாக்கம் உருவாகிவிட்டது.
இந்தியர்கள் ரோமானியர்களுக்கிடையேயான கடல் வழி வாணிபம் (Maritime Trade) தான் தமிழகத்தில் அரசு என்ற உருவாக்கத்திற்கு பெரும் காரணமாக இருந்தது என்ற ஒரு கருத்து வேறு உள்ளது. கிளாரன்ஸ் மலோனி, செண்பகலட்சுமி, போன்றவர்கள் அந்தக் கருத்தாக்கத்தை உருவாக்கினார்கள்
இடையில அரிக்கமேட்டில் 3 மட்பாண்டங்கள கிடைத்தன. ரௌலட்டேட் வேர், (Rouletted Ware) என்ற பாண்டங்கள், அரிக்டேன் வேர், மது ஜாடி (amphora jar) ) என்பவை அவை. இந்த மூன்றுமே ரோமன் மட்பாண்டங்கள் என்று வீலர் சொல்கிறார். ஆனால் ரௌலட்டேட் வேர் ரோமன் மட்பாண்டம் கிடையாது. இந்த ரௌலட்டேட் வேர் இந்தியாவின் கீழக் கடற்கரை, தென்கிழக்கு ஆசியாவில் கிடைக்கிறது. ஆனால் ரோமன் பொருட்களோடு ரௌலட் வேரையும் ஒப்பிட்டு அதுவும் கி.மு.முதலாம் நுற்றாண்டு என்று உறுதி செய்துவிட்டார்கள்.
ராபர்ட் சுவெல் (Robert Sewell) மதுரைக்கருகில் மாங்குளத்தில் சில கல்வெட்டுக்களைக் கண்டறிந்தார். அவற்றில் காணப்பட்டது அசோகர் காலத்து பிராமி எழுத்துக்கள் (கிமு மூன்றாம் நூற்றாண்டு) . என்று கருதினார்கள்.
ஜேம்ஸ் பிரின்ஸப் (James Prinsep) அசோகரது பிராமி கல்வெட்டுக்களை படித்தபோது இதனையும் படிப்பதற்கான முயற்சியை மேற்கொண்டார்கள். ஆனால் படிக்க முடியவில்லை. அதற்கு காரணம், அதிலிருந்த சில எழுத்துக்கள் அசோகர் கால எழுத்துக்கள போல இல்லை. அது பிராகிரதம் மொழி. இது பிராமி வரி வடிவம். அதே வரிவடிவமாக இருப்பதால் இதன் மொழியும் பிராகிரதமாகத்தான் இருக்க வேண்டும் என்று எண்ணினார்கள் அப்போது கே.சுப்ரமணிய ஐயர் மட்டும்தான் இது பிராகிரதம் இல்லை, தமிழ் என்று சொன்னார்.
தமிழ் வடிவங்களைப் பார்க்கிறபோது இதனுடைய காலம் முன்னோக்கி செல்லக் கூடும் என்று ஐராவதம் மகாதேவன் முடிவு செய்து கி.மு. 3ம் நூற்றாண்டு என்றார். அசோகரது பிராமி கிமு 3ம் நூற்றாண்டு. தமிழ் பிராமி அதற்கு 100 ஆண்டுகள் முந்தியதாக இருக்க வேண்டும் என்று கிமு 3லிருந்து 2ம் நூற்றாண்டு வைத்துக் கொள்கிறார். கிமு முதலாம் நூற்றாண்டு, என்று கருதிய மார்ட்டின் வீலரின் கருத்தாக்கம் 1980 வாக்கில் 200 ஆண்டுகள் மேலும் பழமையாகி கிமு 3ம் நூற்றாண்டு என்றானது தமிழகத்தின் அனைத்து வரலாற்று நூல்களிலும் சங்க காலம் என்பது கிமு 3ம் நூற்றாண்டு முதல் கிபி 3ம் நூற்றாண்டு வரை என்று பதிவு செய்து விட்டார்கள்.
மாலன்: நீங்கள் ஈரோட்டிற்கு அருகில் உள்ள கொடுமணல் என்ற இடத்தில் நடத்திய ஆய்வுகள் சங்ககாலம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டிற்கும் முன்னதாக இருந்திருக்கக் கூடும் எனக் காட்டுகின்றனவா? கொடுமணல் ஆய்வுகளின் முக்கியத்துவம் என்ன ?
நம்முடைய நொய்யல் ஆற்றங்கரை நாகரீகம் பற்றிய ஆய்வை புலவர் செ.ராசு ஈரோட்டில் உள்ள கலைமகள் பள்ளியோடு சேர்ந்து நடத்தினார். அவர், அந்தப் பகுதியில் உள்ள கொடுமணல் முக்கியமான ஊராக இருக்க வேண்டும் என்றும், பதிற்றுப் பத்தில் வருகிற ‘கொடுமணம் பட்ட வினைமான் அருங்கலம்’ என்ற வரியில் உள்ள கொடுமணம்தான் இந்த கொடுமணலாக இருக்க வேண்டும் என்று ஒரு கருத்தை சிறிய அளவில் வெளியிட்டுக் கொண்டிருந்தார். அவர் தமிழ் பல்கலைகழகத்திற்கு இணைப் பேராசிரியராக அதன்பின் வந்து சேர்ந்தார். பேராசிரியர் சுப்புராயலு மதுரை பல்கலைகழகத்தில் இருந்து தமிழ் பல்கலைகழகத்தில் சேர்ந்தார்.
நான் கோவாவில் துவாரகை பற்றி கடல் அகழாய்வு செய்து கொண்டிருந்தேன். நீங்களும் நம்ம ஊருக்கு வந்து இந்த ஆய்வில் சேர்ந்து கொள்ளுங்கள் என்று என்னையும் அழைத்தார்கள். எனவே நானும் தமிழ் பல்கலைகழகத்தில் வந்து சேர்ந்தேன். நாங்கள மூவரும் முக்கியமான ஆய்வுக் குழுவாக மாறிவிட்டோம். புலவர் இலக்கிய அறிஞர். பேராசிரியர் சுப்பராயலு கல்வெட்டியலில் மிகவும் புலமை வாய்ந்தவர். நாங்கள் ஒரு குழுவாக கொடுமணல் அகழாய்வை எடுத்துக் கொண்டோம்.
நாங்கள் கொடுமணல் ஆய்வை எடுத்துக் கொண்டு தொடர்ந்து ஏழு முறை ஆய்வுசெய்தோம். (எங்களுக்கு கல்விப் பணி இருந்ததால் ஏழு ஆண்டுகள் என்று சொல்வதில்லை. ஏழு சீசன் என்று சொல்லுவோம், மே, ஜுன் என்று 2 விடுமுறை மாதங்களில் மட்டும்தான் போக முடியும். மற்ற மாதங்களில் மாணவர்களுக்கு வகுப்பு எடுக்க வேண்டிய பணி இருக்கும்)
1980, 90களில் கொடுமணல் அகழாய்வை நாங்கள செய்தபோது மண் அடுக்கு அடிப்படையில் செய்தோம். அப்போது மத்தியில் ரௌலட்டேட் வேர் என்ற மட்பாண்டம் கிடைத்தது. அதேநேரம் வட இந்திய வெள்ளி முத்திரை நாணயங்களும் கிடைத்தன. ஆனால் இந்த நாணயங்கள ஆறாம் நூற்றாண்டில் இருந்து தொடர்ந்து நமக்குக் கிடைக்கிறது. அது கிமு முதலாம் நூற்றாண்டு வரை வருகிறது. இதை வைத்து ஆறாம் நூற்றாண்டு என்று முடிவு செய்வதா 2ம் நூற்றாண்டு என முடிவு செய்வதா என்ற கேள்வி எழுந்தது ,, ஏற்கனவே ரௌலட்டேட் வேர் ரோமன் மட்பாண்டத்தின் காலம் கிமு முதலாம் நூற்றாண்டு வரை என்று உலகம் முழுவதும் இருந்த கருத்து அந்த நாணயம், மண் அடுக்கு இவற்றை வைத்து சங்க காலம் என்பது கிமு 3ம் நூற்றாண்டில் இருந்து கிபி 3ம் நூற்றாண்டு வரை இருக்கும் என்று நாஙகளும் முடிவு செய்தோம்.
ஆனால் நாங்கள் செய்த ஆய்வைத் தாண்டி வர முடியாத அளவிற்கு கருதுகோள்கள் இருந்ததால் அதைத் தாண்டி வர முடியவில்லை. ஆனாலும் அந்த நேரத்தில் அதை நாங்கள ஏற்றுக் கொள்ளவில்லை. சங்க காலத்தை இலக்கியவாதிகள், கல்வெட்டு ஆய்வாளர்கள், தொல்லியல் ஆய்வாளர்கள் என்று மூன்று தரப்பினரும் 3 விதமாக காலக்கணிப்புச் செய்துள்ளோம். ஆனால் மூன்றுமே அறிவியல் ரீதியாக காலம் கணிக்கப்படவில்லை. எனவே ஏற்றுக் கொள்ளக் கூடிய காலக் கணிப்பு இல்லை.
இந்நிலையில் அனுராதபுரத்தில் ராபின் கன்னிங்ஹாம் என்ற பேராசிரியர் அகழாய்வு செய்தபோது அங்கே கிடைத்த பிராமி வரி வடிவங்கள் கிமு ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்று காலக் கணிப்பு செய்திருந்தார். இது மிகப் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியது.
மாலன்: கிறிஸ்துவிற்கு ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன்னரே அதாவது 2500 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர்கள் இந்தப் பகுதியில் வாழ்ந்திருந்தார்கள் என்பது பெருமைக்குரிய செய்திதான். ஆனால் அதை அறிவியல் பூர்வமாக நிரூபிக்க வேண்டுமல்லவா?
பேரா.ராஜன்: அறிவியல்பூர்வமாக உறுதி செய்ய வேண்டும் என்றுதான் நானும் விரும்பினேன். அதற்கான வாய்ப்பு பழனிக்குப் பக்கத்தில் உள்ள பொருந்தலில் அகழாய்வு செய்தபோது கிடைத்தது. பொருந்தல் அகழ்வாய்வை 2010ல் செய்தோம். ஒரு கல்லறையை தோண்டும்போது வட்டமாக ஒரு தாங்கி (மட்பாண்டங்களை வைக்க ஸ்டாண்ட் போல் பயன்படும் மண் வளையம்) அந்த கல்லறையில் இருந்தது. அதற்கு வைரா என்று பெயர். அதில் பெரிய ஜாடியில் 2 கிலோ நெல் வைத்திருந்தார்கள். முதல் தடவையாக தமிழகத்தில் நெல் கிடைக்கிறது.
அறிவியல்பூர்வமாக கால கணிப்பு செய்தால் நன்றாக இருக்கும் என்று செய்தோம். தானியங்களை காலக் கணிப்பு செய்ய கார்பன் டேட்டிங்கை விட நவின முறையான ஆக்ஸ்சிலேட்டர் மாஸ் ஸ்பெக்ட்டேராமெட்ரி முறையில் செய்தபோது காலக் கணிப்பு கிமு 490 என்று வந்தது. உலகத்திலேயே பீட்டா அனலிட்டிக்கல் லேபாரட்டரி அமெரிக்காவில்தான் உள்ளது. அங்க அனுப்பியபோது இந்த காலக் கணிப்பு வந்தது..அதாவது இந்த நெல் கிறிஸ்து பிறப்பதற்கு 490 ஆண்டுகளுக்கு முன், இன்றைக்கு 2500 ஆண்டுகளுக்கு முந்தையது.
மாலன்: இது வேளாண்மை செய்து பெறப்பட்ட நெல்லா? அப்படி இருந்தால் அந்தக் காலத்திலேயே தமிழர்கள் வேளாண்முறைகளை அறிந்திருந்தார்கள் என்பது உறுதியாகுமல்லவா, அதனால் கேட்கிறேன். அப்படி இருந்தால் தமிழர்களின் காலம் இன்னும் பழமையானதாக இருந்திருக்க வேண்டும். ஏனெனில் வேட்டைச் சமூகம் வேளாண் சமூகமாக மாற சில நூறாண்டுகள் ஆகியிருக்குமல்லவா?
பேரா.ராஜன்: உண்மைதான் மூன்று வகையான நெல் இருக்கின்றன வேளாண்மை செய்து வளர்க்காமல் தானே விளையக்கூடிய காட்டு நெல் இதற்கு புழுதி நெல் என்ற பெயர்.இரண்டாவது விதைத்து வளர்க்கிற விளைச்சல் நெல் மற்றொன்று நாற்று விட்டுப் பறித்துநடுகின்ற ரீபிளான்டேஷன் நெல்.
காட்டு நெல்லாக இருந்தால் என்ன செய்வீர்கள்? என்று கேள்வி எழுப்பினார்கள். தவிர ஒரு ஆய்வுக் கூடத்தில் மட்டும் செய்யும்போது இந்தக் காலக் கணிப்பு அங்கு நடந்த சிறு தவறாக கூட இருக்கலாம். அப்படி என்றால் காட்டு நெல்லா, பயிர் செய்த நெல்லா என்று தெரிவதற்கு இதை உறுதி செய்ய இன்னொரு சோதனை வேண்டும். நம்முடைய அரசு சட்டப்படி நெல்லை வெளியில் அனுப்பக் கூடாது என்பதால், Indian institute of advance archeological study என்று இலங்கையில் உள்ள மையத்தில் இருந்து டாக்டர் பிரேம திலகர் என்பவரை இங்க வரச் சொன்னோம். அவரோடு பாண்டிச் சேரியில் உள்ள பிரஞ்ச் இன்ஸ்டிடியூட் ஆப் பாண்டிச்சேரி ஆய்வாளர்களும் சேர்ந்து இது விளைச்சல் நெல்தான். இதன் தாவரவியல் பெயர் ஒரைசா சட்டைவா இண்டிகா என்று உறுதி செய்தார்கள். இதேபோல 4 பெருங்கற்படை சின்னங்களை ஆய்வு செய்தோம். நான்கிலும் நெல் கிடைத்தது.
மாலன்: நான்கையும் ஆய்வு செய்தீர்களா?
ஒரு நெல்லை ஆய்வுக்கு அனுப்பியபோது அதன் காலம் கிமு 450 என்று வந்தது. நான்கையும் ஆய்வுக்கு யிருக்கலாம். ஒன்றை ஆய்வு செய்யவே 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை செலவாகும் என்பதால் முடியவில்லை.
பொருந்தல் அகழாய்வில் நெல் மட்டுமல்ல, கார்னேலியன் மணிகள், தங்கப் பொருட்கள்,இவையும் கிடைத்தன. இவற்றை வைத்து அந்தக் கல்லறைகள் சமுதாயத்தில் உயர்ந்த நிலையில் இருக்கும் மனிதர்களுக்காக எழுப்ப்ப்பட்டவை என்று நாங்கள நினைத்தோம். ‘பரலுடை மருங்கிற் பதுக்கை சேர்த்தி’ என்று புறநானுற்றில் வருகிறது அவர்கள் விவசாயத்தில் சிறந்த நிலையை அடைந்து அதன் மூலம் நிறையப் பொருட்களை வெளிநாட்டில், வெளி மாநிலத்தில் இருந்த வாங்கி இருக்கிறார்கள. விலை உயர்ந்த கல், மணிகள் எல்லாம் அவர்களிடம் இருந்தது.
இன்னொரு கேள்வியும் கேட்கப்பட்டது . நீங்கள செய்திருக்கும் ஆய்வுகள் எல்லாம் ஈமக்காட்டில் செய்யப்பட்டவை வாழ்விடத்திலிருந்து செய்தால்தான் இன்னும் உறுதிதயாக ஏற்றுக் கொள்ள முடியும் என்றார்கள்.
இதையும் ஒரு சவாலாக எடுத்துக் கொண்டுதான் கொடுமணல் ஆய்விற்கு மிண்டும் இறங்கினோம் ஆய்வை தொடங்கும் முன்பே மாதிரி எடுக்கும்போதே மண் அடுக்கின் ஒவ்வொரு ஆழத்திலும் 10 செ.மீ, 20 செ.மீ. 50 செ,மீ., என்று தனித்தனியாக எடுக்க வேண்டும் என்ற முடிவு செய்து விட்டோம். அப்படி நாங்கள் எடுத்த மாதிரியின் காலத்தைஅறிவியல் பூர்வமாக ஆராய்ந்தோம். அவை கிமு 2ம் நூற்றாண்டு முதல் கிமு ஆறாம் நூற்றாண்டு வரை .சேர்ந்தவை ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஒவ்வொரு ஆய்வுக் கூடமும் ஒவ்வொரு வழிமுறையை பின்பற்றுமே அதனால் இந்த கால கணிப்பு சரியாக இருக்குமா என்று. இன்னொரு கேள்வியும் எழுந்தது.
அதற்காக நாங்கள 10 செ.மீ., ஆழத்தில் எடுத்ததை பீட் அனலிட்டிகல் சோதனைக் கூடத்திற்கும் 20 செ., ஆழத்தில் எடுத்த்தை அரிசோனா பல்கலை கழகத்திற்கும் அனுப்பினோம். இரண்டு ஆய்வுகளும் முரண்படுகிறதா என்ற பார்த்தபோது கச்சிதமாக இரண்டும் ஒரே மாதிரி இருந்த்தது. அதனால் இதன் காலம் என்பது கி.மு 2 முதல் 6 வரை இருக்கும் என முடிவு செய்தோம்.