Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: மனுவும் வள்ளுவரும் குறிப்பிடும் மறுபிறப்பு


Guru

Status: Offline
Posts: 7474
Date:
மனுவும் வள்ளுவரும் குறிப்பிடும் மறுபிறப்பு
Permalink  
 


மனுவும் வள்ளுவரும் குறிப்பிடும் மறுபிறப்பு

 

 

- முனைவர் மா. உமா மகேஸ்வரி, உதவிப்பேராசிரியா், தமிழ்த்துறை, தியாகராசர் கல்லூரி, மதுரை- 09தொல் தமிழரின் நுண்ணறிவு மிக வியப்பிற்குரியதாகும். பல்லாயிரம் நூற்றாண்டுகளுக்கு முன் மொழியியல், உயிரியல், கணிதவியல், அறிவியல் ஆகியவற்றில் தமிழர் பெற்றிருந்த பேரறிவு போற்றுதற்குரியதாகும். தொன்மை மிகுந்த தமிழன் கண்ட பேருண்மைகளை இன்றைய அறிவியலாளர் மறுப்பதற்கில்லை. மாறாகப் பண்டைத்தமிழர் கூற்றினை அடிப்படையாகக் கொண்டே பல சிறந்த அறிவியல் உண்மைகளை நிலைப்படுத்தியுள்ளனர் என்பது தெளிவாகும். பிறப்புக்கள் ஆறு என்பதை,

“ஒன்று அறிவதுவே உற்று அறிவதுவே;
இரண்டு அறிவதுவே அதனொடு நாவே
மூன்று அறிவதுவே அவற்றொடு மூக்கே
நான்கு அறிவதுவே அவற்றொடு கண்ணே
ஐந்து அறிவதுவே அவற்றொடு செவியே
ஆறு அறிவதுவே அவற்றொடு மனனே
நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே”    (தொல் ; மரபியல், நூ - 27.)

என்று தொல்காப்பியர் மரபியலில் எடுத்துரைக்கின்றார். மேலும்

“புல்லும் மரனும் ஓர் அறிவினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே”

“நந்தும் முரளும் ஈர்அறி வினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே”

“சிதலும் எறும்பும் மூஅ றிவினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே”

“நண்டும் தும்பியும் நான்கு அறிவினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே”

“மாவும் மாக்களும் ஐஅறி வினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே”

“மக்கள் தாமே ஆறுஅறி வுயிரே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே”    (தொல் ; மரபியல், நூ -28-34 )

என்று பிறப்புக்கள் ஆறு என்பதைத் தொல்காப்பியம் எடுத்துரைக்கின்றது. தோன்றிய பல்லிலக்க உயிர்கள் எல்லாம் ஆறு அறிவுனுள் அடங்கும் என்பதை,

“பற்றே பவமே தோற்றம் வினைப்பயன்
இற்றென வகுத்த இயல்பீ ராறும்”
(மணிமேகலை, ஆபுத்திரன் நாடு அடைந்த காதை, 107-108)

என மணிமேகலை ஆபுத்திரன் நாடு அடைந்த காதையில் எடுத்துரைக்கின்றது. மேலும்

“நல்வினை யென்ப தியாதென வினவில்
சொல்லிய பத்தின் றொகுதியி னீங்கிச்
சீலந் தாங்கித் தானந் தலைநின்று
மேலென வகுத்த வொருமூன்று திறத்துத்
தேவரும் மக்களும் பிரமரு மாகி
மேவிய மகிழ்ச்சி வினைப்பய னுண்குவர்.”(மணிமேகலை, 135 – 140)

என்றும் எடுத்துரைக்கின்றது. செய்கின்ற வினைப்பயன் வழியே உயிர்கள் தோற்றம் பெறுகின்றன என்பதை மணிமேகலை வலியுறுத்துகின்றது. இதனைப் “பரம்பொருள் எல்லாப் பொருள்களையும் ஐவினைகளில் இயங்கச் செய்து, முன்பு செய்த வினைகளுக்கேற்ப மறுபிறப்புக்களை அவற்றிற்கு விதித்து, அவ்விதமே பிறந்து வளர்ந்து மாய்ந்தும், பின்னர் முக்தி நிலை பெறும்வரை வண்டிச் சக்கரம் போல் நில்லாது சுழன்றும்வரச் செய்கிறார்” (மனு – 12 : 124) என்று மனுதருமத்தில் கூறப்படுகின்றன. மனிதன் செய்கின்ற தீவினைகளுக்கு ஏற்ப அவன் அடையும் மறுபிறப்புக்களைப் பற்றி மனுதருமம் பட்டியலிட்டுக் காட்டுகிறது. இதனை,

செய்த வினை
அடையும் மறுபிறப்பு
பிரம்மஹத்தி
நாய், பன்றி, கழுதை, அட்டை, பசு, ஆடு, சிங்கம், பறவை, சண்டாளன், புற்கசன்
கள்ளுண்ட அந்தணன்
புழு, உலண்டு, விளக்கணை பூச்சி, மலப்பூச்சி, பறவை, புலி
பொன் களவாடியவன்
சிலந்திப்பூச்சி, பாம்பு, கரட்டோணான், நீர்வாழ்பிறவிகள், கொலை விருப்புள்ள பிசாசுகள்
குரு மனைவியைக் கூடியவன்
புல், புதர், கொடி, மாமிசம் தின்னிக் கழுகு
அந்தணன் பொருளை அபகரித்தல்
தானியம் திருடுதல்
பிரம்ம ராஷசனாகப் பிறப்பான்
பெருச்சாளி (மனு : 12 : 60 - 68)

இவ்விதமாகச் செய்த வினைகளுக்கு ஏற்ப அடையும் மறுபிறப்புக்களைப் பற்றி மனுதருமம் எடுத்துரைக்கின்றது. மேலும் “சிரார்த்தத்தில் வரிக்கப்பட்ட அந்தணன் புலால் உண்ணலாகாதென்று எண்ணி மறுத்தால் இருபத்தோரு பிறவிகள் பசுவாய்ப்பிறப்பான்” (மனு – 5 : 35) என்று மனு அந்தணர்களுக்குப் புலால் உண்பதை வற்புறுத்துவதோடு அதை உண்ணாமல் மறுத்தால் இருப்பதோரு பிறவிகள் பசுவாகப் பிறப்பர் என்று அவனுடைய மறுபிறப்புச் செய்தியினையும் எடுத்துரைக்கின்றது.

சைவசித்தாந்தம் ஒருவன் இறைவனிடம் ஏதாவது வேண்டுகின்றான் என்றால், அவ்வேண்டுதல் மீண்டும் பிறவாமையாகவே இருக்க வேண்டும் என்று கூறுகிறது. இதனைத் திருக்களிற்றுப் படியார்,

“வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை என்றமையால்
வேண்டின் அஃது ஒன்றுமே வேண்டுவது – வேண்டினது
வேண்டாமை வேண்டவரும் என்றமையால் வேண்டிடுக
வேண்டாமை வேண்டும்அவன் பால்”
(சி.சு. மணி, திருக்களிற்றுப்படியார், பா.40)

என்று கூறுகின்றது. இதனை வள்ளுவர்;

“வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும்” (குறள் - 362)

என்று குறிப்பிடுகின்றார். பிறப்பு, இறப்பு என்பதை அறிந்தவன் ஒன்றை விரும்புவான் ஆயின், மீண்டும் வந்து இந்த உலகத்தில் பிறந்து விடக்கூடாது என்பதையே விரும்புவான். அந்தப் பிறவாமைதான் எந்த ஒரு பொருளையும் விரும்பாமையை அவனுக்கு ஏற்படுத்தும். இதனை,

இலக்கியக் கட்டுரை வாசிப்போமா?

“முற்பிறப்பில் தான்செய்த புண்ணியத்தின் நல்லதோர்
இல்பிறந்து இன்புறா நின்றவர்- இப்பிறப்பே
இன்னும் கருதுமேல் ஏதம்கடிந்து அறத்தை
முன்னிமுயன்(று) ஒழுகல் பாற்று” (அறநெறிச்சாரம், பா.54.)

என்று அறநெறிச்சாரம் எடுத்துரைக்கின்றது.

எனவே தான் எதனையும் விரும்பாமை ஆகிய பெருஞ்செல்வத்தை விடச் சிறந்தது வேறு இல்லை என்கிறார் வள்ளுவர். இதனை,

“வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டுஇல்லை
யாண்டும் அஃதுஒப்பது இல்” (குறள் - 363)

என்று குறிப்பிடுகின்றார். மேலும் மறுபிறப்பு என்பது உண்டு என்பதைப் பற்றித் தாயுமானவர்

“இப்பிறவி தப்பினால் எப்;பிறவி வாய்க்குமோ
ஏது வருமோ அறிகிலேன்” (தாயுமானவர் பாடல், பா.24.)

என்ற பாடலின் வழி எடுத்துரைக்கின்றார். ஒளவை மூதாட்டியும் ‘அரிது அரிது மானிடராய்ப் பிறப்பதரிது’ ( ஓளவை, தனிப்பாடல் 30.)

என்று பிறப்பிலே மனிதப்பிறவி உயர்வுடையது என்பதை எடுத்துரைக்கின்றார். மேலும் முதுமொழிக் காஞ்சியும்

“ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
மக்கட் பேற்றிற் பெரும்பே றில்லை”
(முதுமொழிக்காஞ்சி - இல்லைப்பத்து.)

என்பதை வலியுறுத்துகின்றது. இதனை வள்ளுவரும்,

“பெறுமவற்றுள் யாமறிவதில்லை அறிவறிந்த
மக்கட் பேறல்ல பிற (குறள் - 61)

என்று குறிப்பிடுகின்றார். மேலும் வள்ளுவர் மறுபிறப்பு பற்றிய உண்மையை வலியுறுத்தி கல்வியின் சிறப்பை எடுத்துரைக்கின்றார். இதனை,

“ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து” (குறள் - 398)

என்று குறிப்பிடுகின்றார். ஒருவர் கற்ற கல்வி ஏழு பிறவிகளுக்கும் தொடர்ந்து வரும் என்ற கருத்தை எடுத்துரைக்கின்றார். மேலும், ஒருவர் தம் துன்பத்தை நீக்கியவரின் நட்பைத் தொடர்ந்து வரக்கூடிய ஏழு பிறப்புகளிலும் மறவாது நினைத்திருப்பார் என்பதை,

“எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமந் துடைத்தவர் நட்பு” (குறள் - 107)

என்றும் குறிப்பிடுகின்றார். மேலும் இறப்பும் பிறப்பும் எவ்வாறு நிகழ்கிறது என்பதைப் பற்றி வள்ளுவர்,

“உறங்குவது போலுஞ் சாக்கா டுறங்கி
விழிப்பது போலும் பிறப்பு”    (குறள் - 339)

என்று குறிப்பிடுகின்றார். இதே கருத்தை மணிமேகலையில்

“பிறந்தவர் சாதலும், இறந்தவர் பிறத்தலும்
உறங்கலும் விழித்தலும் போன்ற துண்மையின்” (மணிமேகலை, ஆதிரை பிச்சையிட்ட காதை, பா.வரி, 86-87)

என்று வாழ்க்கைச் சக்கரத்தைப் பற்றி எடுத்துரைக்கப்பட்டுள்ளது. மேலும் சுந்தரர் தேவாரத்தில் “உறங்கி விழித்தால் ஒக்கும் இப்பிறவி.” ( சுந்தர மூர்த்தி சுவாமிகள், ஏழாந்திருமுறை, பா.வரி, - 3-4.) பிறப்பும் இறப்பும் விரைவில் மாறி மாறி வரும் என்பதை அறிய முடிகின்றது. எனவே வள்ளுவர் மறுபிறப்பு உண்மையை வலியுறுத்தியுள்ளார் என்பது தெளிவாகிறது.

வினைப்பயன் என்பது மனிதனுடைய வாழ்க்கையில் அவன் செய்யக்கூடிய நல்வினை, தீவினைகளுக்கு ஏற்ப அமையும். நல்வினை செய்தால் அவன் நற்கதியை அடைவான். தீவினை செய்தால் நரகத்தில் துயருறுவான்; என்றும் கூறப்படுகின்றது. மனு மனிதன் செய்கின்ற வினைகளைப் பொறுத்து மீண்டும் அடைகின்ற பிறப்புக்களைப் பற்றி எடுத்துரைத்துள்ளார். வள்ளுவர் ‘தீவினையச்சம்’ என்னும் அதிகாரத்தில் தீவினைகள் செய்தல் கூடாது என்பதை எடுத்துரைக்கின்றார். மேலும் வினைப்பயன் குறித்து ஒளவையார்,

“வினைப்பயனை வெல்வதற்கு வேதம் முதல்ஆம்
அனைத்துஆய நூல்அகத்தும் இல்லை - நினைப்பதுஎனக்
கண்உறுவது அல்லால் கவலைப்படேல், நெஞ்சே
விண்உறுவார்க்கு இல்லை விதி.”    ( ஒளவையார், நல்வழி, பா.38.)

என்று வினைப்பயனை வெல்வதற்கு நான்மறைகளிலும்கூட வழி சொல்லப்படவில்லை. நல்ல வீடுபேறு அடையும் செயல்களைச் செய்பவரை விதி ஒன்றும் செய்யாது என்பதை வலியுறுத்துகின்றார். ஆனால் வள்ளுவர் தீய செயல்கள் செய்தல் கூடாது என்பதை வலியுறுத்துகின்றார். மேலும் வள்ளுவர் ஒருவன் ஒவ்வொரு நாளும் அறத்தைச் செய்வானானால் அதுவே ஒருவனது பிறவியைத் தடுக்கும் கல்லாகும் என்பதை,

“வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்குங் கல்”    (குறள் - 8)

என்று எடுத்துரைக்கின்றார். எனவே மறுபிறவியைத் தடுப்பதற்கு மனிதன் அறத்தைச் செய்ய வேண்டும் என்பதை வள்ளுவர் வலியுறுத்துகின்றார்.

முடிவுரை:
பற்றறுத்தல் என்பது பிறவி ஆசையை விட்டொழித்தலாகும். எதன் மீதும் பற்று இல்லாமல் இருப்பதே பற்றற்ற நிலை எனலாம். துறவு என்பது பற்றினை விடுவதாகும். யான் எனது என்ற இருவகைப் பற்றினையும் விடுத்து துறவு நிலையை மேற்கொள்ள வேண்டும் என்பதை மனுவும் வள்ளுவரும் வலியுறுத்துகின்றனர். துறவு மூலம் மெய்யான அறிவைப் பெறமுடியும் என்பதை மனுவும் வள்ளுவரும் எடுத்துரைக்கின்றனர். வினைப்பயன் குறித்த செய்திகளை எடுத்துரைத்து தாம் செய்த வினையால் அடையும் மறுபிறப்புச் செய்தியினையும் மனு எடுத்துரைக்கின்றது. மனு குறிப்பிடுவதைப்போல் வள்ளுவத்தில் வினையால் அடையும் மறுபிறப்பு பற்றி எடுத்துரைக்கவில்லை. ஆனால் வள்ளுவரும் மறுபிறப்புக் கொள்கையினை ஏற்றிருக்கின்றார் என்ற செய்தி காணப்படுகின்றது.

பார்வை நூல்கள்

1. வீரமணி, கீ.,(ஆய்வுரையுடன்) அசல் மனுதரும சாஸ்திரம்    ,
(மக்கள் பதிப்பு) (1919 பதிப்பில் உள்ளபடி),திராவிடர் கழக வெளியீடு,
50, ஈ.வெ.கி.சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை - 600 007,
முதல்பதிப்பு - 2004.

2. பரிமேலழகர்.,(உ.ஆ)திருக்குறள், சாரதா பதிப்பகம்;,
சென்னை - 600014, முதற்பதிப்பு - 2002.

3. இளம்புரணர்., தொல்காப்பியம் பொருளதிகாரம்,
கழக வெளியீடு, சென்னை, முதற்பதிப்பு - 1972.

4. ஔவையார்.,மூதுரை,கழக வெளியீடு,
சென்னை, முதற்பதிப்பு - 1989.

5. சுந்தரமூர்த்தி சுவாமிகள்., தேவாரம் - ஏழாம் திருமுறை,
ஞானசம்பந்தர் பதிப்பகம், தருமை ஆதீனம், மயிலாடுதுறை - 609001,
இரண்டாம் பதிப்பு - 1997.

6. தண்டபாணி.துரை., மணிமேகலை, உமா பதிப்பகம்,
மண்ணடி, சென்னை – 600001, நான்காம் பதிப்பு - 2010.

7. தாயுமானவர், தனித்திரட்டு, நர்மதா பதிப்பகம்,
தியாகராயர் நகர், சென்னை - 600017.

8. பாலசுந்தரம்பிள்ளை, தி.சு., முதுமொழிக்காஞ்சி,
திருநெல்வேலித்தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக லிமிடெட்,
திருநெல்வேலி - 6, முதற்பதிப்பு - 1947.

9. மணி,சி.சு., திருஉந்தியார், திருக்களிற்றுப்படியார்,
(உ.ஆ)அருள்நந்திசிவம் அருட்பணி மன்றம், 78, செல்விநகர், சிந்துபுந்துறை,
திருநெல்வேலி - 627001, இரண்டாம் பதிப்பு, 2000.

umamaheswarikalimuthu@gmail.com

* கட்டுரையாளர் - - முனைவர் மா. உமா மகேஸ்வரி, உதவிப்பேராசிரியா், தமிழ்த்துறை, தியாகராசர் கல்லூரி, மதுரை- 09



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard