Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தமிழக அரசமைப்பு முறையில் ஐம்பெருங்குழுவும் எண்பேராயமும்


Guru

Status: Offline
Posts: 7329
Date:
தமிழக அரசமைப்பு முறையில் ஐம்பெருங்குழுவும் எண்பேராயமும்
Permalink  
 


தமிழக அரசமைப்பு முறையில் ஐம்பெருங்குழுவும் எண்பேராயமும்

 

 

- மு.செல்லமுத்து, தமிழியல்துறை, முனைவர்ப் பட்ட ஆய்வாளர், மதுரைகாமராசர் பல்கலைக்கழகம், பல்கலைநகர் - மதுரை – 21 -ஆய்வு முன்னுரை
தமிழிக அரசியல் சரித்திரத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டுக்கு முற்பட்ட அரசியல் சார்ந்த அறநெறிகளை ஆராய்ந்தோமானால் உலக நாடுகள் முழுவதற்கும் இலக்கியப் பேராறு மூலம் ஒரு நாட்டையாளும் அரசனுக்குரிய அறங்களை மிக நேர்த்தியோடு எடுத்துச்சொன்ன பெருமை தமிழ் மண்ணுக்கும் மக்களுக்கும் உண்டு. தமிழக வரலாற்றில் தமிழ் மண்ணில் ஏற்பட்ட பல்வேறு போர்களாலும், பூசலாலும் காலந்தோறும் வெவ்வேறு ஆட்சிமுறைகள் வழக்கத்தில் இருந்து மக்களாட்சி முறையே இன்று நிலைத்துள்ளது. அரசன் என்பவன் அரச பரம்பரை அல்லது வாரிசுரிமையின் காரணமாகவோ, கணக்கற்ற படைவலிமையின் காரணமாகவோ, மக்களை ஆளும் இறைமையைப் பெற்றுக் கொண்டு அவர்களை அரசாண்ட வரலாறுகளின் அனுபங்களிலிருந்தே இன்றைய அரசியல்வாதிகள் அறநெறிகளை கற்றுக்கொண்டு மேடை தோறும் பேசிக்கொண்டிருக்கின்றனர். ‘மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்’ என மோசிகீரனாரும், ‘குடியுயரக் கோன் உயர்வான்’ என்றுரைத்த ஓளவையார் போன்ற தமிழ்ப் புலவர்களும் அறிஞர்களும் காலந்தோறும் ஆய்ந்தறிந்து தமிழக அரசியல் அறங்களை செவ்வனே எடுத்துரைத்துள்ளனர். அதன்வழி நின்று அரசனுடைய அங்கங்களாகத் திகழும் ஐம்பெருங்குழு, எண்பேராயம் போன்ற அரசவைக்குழுவின் வழிகாட்டுதல்களையும், செயற்பாட்டம்சங்களையும் தமிழிலக்கியங்கள் வாயிலாக எடுத்துரைப்பதாக இக்கட்டுரை அமைகின்றது.

ஐம்பெருங்குழு எண்பேராயம்
“ஐம்பெருங்குழு அமைப்பில், ‘அமைச்சர் (Chief Minister)> புரோகிதர் (Priest)> சேனாபதியர் (Commender - in - Chief)> தாவாத் தொழில் தூதுவர் (Ambassador)> சாரணர் (Intelligence Officer) ஆகியவர் அடங்கிய குழுவே ஐம்பெருங்குழு எனப்படும். இவ்வைந்து கூட்டத்தை பஞ்சாயம் என்றும் அழைப்பர். கரணத்தியலவர் (Chief Executive Officer)> கருமகாரர் (Priests)> கனகச் சுற்றம் (Treasury Officials)> கடைகாப்பாளர் (Guards)> நகரமாந்தர் (Great Men of the City)> படைத்தலைவர் (Captains of Troops)> யானைவீரர் (Elephant -Warriors )> இவுளிமறவர் (Cavalry - Officers) ஆகிய இவர்கள் எண்பேராயத்தில் இடம்பெற்றிருப்பார்கள்’ என்பர் அ.கி.பரந்தாமன்.” (வரலாற்றுக் கட்டுரைகளும் பிறவும். ப.101) அரசியலில் அரசனுக்குத் துணையாக அமைவன ஐம்பெருங்குழுவும், எண்பேராயமும் என்பதனை,

“ஆசான் பெருங்கணி அருந்திறல் அமைச்சர்
தானைத் தலைவர் தம்மொரு குழிஇ” 
(சிலம்பு.வஞ்சிக்காண்டம் கால்கோள்காதை.2-3) 
என்ற பாடல் வரிகளால் அடியார்க்குநல்லார் சிலப்பதிகாரம் அறிவுறுத்துகிறது. மேற்கண்ட ஐம்பெருங்குழு மற்றும் எண்பேராயத்தினர் இடம்பெற்ற சான்றோர்கள் அவையில்; மன்னர்கள் கருத்துக்கேட்டே அரசாட்சியையும், நிர்வாக அமைப்பையும் நடத்தினர் என்பதனை,

“சமயக் கணக்கருந் தந்துறை போகிய
அமயக் கணக்கரும் அகலா ராகிக்
கரந்துரு வெய்திய கடவுளாளரும்
பரந்தொருங் கீண்டிய பாடை மாக்களும்
ஐம்பெருங்குழுவும் எண்பேராயமும்
வந்தொரு ங்குழிஇ வான்வதி தன்னுள்”  
(மணி.விழாவறை காதை. 13-18)

என்னும் மணிமேகலைப் பாடலடிகளும் விளக்குகின்றன. மணிமேகலை கால அரசாட்சியில் காவிரிப்பூம்பட்டினத்தில் இந்திரவிழாவினை நடத்துவதற்கு ஆட்சியாளர்களும் அமைச்சர்களும் பொதுமக்களும் ஒன்றுகூடி முடிவு செய்தனர் என்பதனை  மேற்கண்ட வரிகள் எடுத்துரைக்கின்றன. எனவே, நாட்டில் நடக்கவேண்டிய நற்செயல்களை மக்களும் மன்னர் சபையினரும் ஆலோசித்து நிகழ்த்த மேற்கண்ட இவ்விரு சபைகள் துணைபுரிந்தன என அறியமுடிகின்றது. மேலும், இச்சபைகளின் பிரதிநிதியாக அதிகாரவர்க்கத்தினரே இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தகுந்த செய்தியாகும். இதனை, ‘அரை சொடு பட்ட ஐம்பெருங்குழு’ எனச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது. இந்திரவிழா ஊர்வலத்தில் ஐம்பெருங்குழுவும், எண்பேராயமும், அரச வணிக குமரர்களும், கலர் பரிப்புரவியர், களிற்றின் தொகுதியிர், இவர் பரித்தேரினர் ஆகியோரும் இயைந்து ஒருங்கு வருவதை சிறப்பாக முறைப்படுத்தி இளங்கோவடிகள் குறிப்பிடுகிறார். எனவே, ஒரு நாட்டின் முக்கிய அங்கங்களில் அரசிற்கு அடுத்தபடியாக தமிழக அரசமைப்பில் ஐம்பெருங்குழுவும் எண்பேராயமும் சிறப்பிடம் பெற்றிருந்ததை அறியமுடிகிறது.

ஐம்பெருங்குழுவில் இடம்பெறத் தகுதியுடையவர்கள்
“உள்நாட்டில் உயர்குடிப்பிறப்பு, மிகுந்த செல்வாக்கு, கலைப்பயிற்சி, அஞ்சாமை, வருங்காலம் பற்றிய முன்னுணர்வு, நுண்ணறிவு, நல்லொழுக்கம் உள்ள உரம், உடல் வலிமை ஆகியன கொண்டவர்களே ஐம்பெருங்குழு போன்ற அரசின் அனைத்து அறிவுரை குழுவிலும் இடம்பெறத் தகுதியுடையவர்கள் என்பார் கௌடில்யர்”         (தங்ககந்தசாமி. போரியல் அன்றும் இன்றும். ப.21)

ஐம்பெருங்குழுவில் முதலிடம் பெறுபவர் அமைச்சரே ஆவார்.  அமைச்சர், வினைக்கேற்ற கருவி, காலம், செய்யும் அருவினைகள் அறிந்த மாட்சியர், வினையாற்றும் இடத்தில் அசைவின்மையுடையர், குடிகாத்தல், அறஆட்சி நூல்களை ஐயமின்றி கற்றவர், ஆற்றுவன அகற்றுவன அறிந்தவர், ஆள்வினையுடைமை ஆகிய சிறப்புடையவர், வினைவந்துழி பகைத்துணை பிரித்தல், பேணிக் கொளல், பிரிந்தார்ப் பொருத்தல் வல்லார், எச்செயலையும் ஆய்ந்து தெரிதல், தெரிந்து செய்தல், அரசிற்கும் அவைக்கும் துணிவு பிறக்கும் வகையில் ஒருதலையாகச் சொல்லல் ஆகியன ஆற்றுபவர், அரசஅறம் அறிதல், கல்வி நிறைசொல் சொல்லல், எக்காலும் வினைத்திறம் அறிதல், சூழ்ச்சித் துணை கொள்ளல் ஆகியவற்றில் வல்லவர். இயற்கை நுண்ணறிவும், மதிநுட்பமும் உடையவர், கல்வியால் வரும் நூலறிவு மிக்கவர், எச்செயலையும் உலக இயற்கை அறிந்து  செய்பவர், அறமுறை அறிந்து அரசிற்கு உறுதி உரைப்பவர், கேட்டார் பிணிக்கும் சொல் வன்மையுடையவர், இம்மைக்கண் புகழும் மறுமைக்கண் அறமும் பயவாத வினைகளை நீக்கும் வினைத்தூய்மையோர், மதிநுட்பமாம் வினைத்திட்பம் கொண்டோர், பொருள், கருவி, காலம், வினை இடனோடு ஐந்தும் எண்ணிச் செய்வோர் என அமைச்சரின் தகுதிகள் பற்றி திருக்குறள் முறையே 64, 65, 66 ஆகியவை தெரிவிக்கின்றன.

‘மா விசும்பு வழங்கும் பெரியோர்போல
நன்றும் தீதும் கண்டு ஆய்ந்து அடக்கி
பழிஒரிஇ உயர்ந்து, பாய்புகழ் நிறைந்த
செம்மை சான்ற காவிதி மாக்கள்’


என்ற மதுரைக் காஞ்சி பாடலடிகளில், அறம் அறிவு, ஆற்றல் அமைந்தோர் அமைச்சர், பாதுகாப்பு விதிக்குரியவர் காவிதி மக்கள், நாட்டில் நடைமுறைப்பட வேண்டிய சட்டம் ஒழுங்கு விதிகளைக் காக்கும் மக்களும் அவர்களே என அமைச்சரின் அரும் பண்புகள் விவரிக்கப்பட்டுள்ளன.

“வருமுன் காக்கும் வல்லமையும், வேற்று மன்னர் நிலை அறியும் அறிவாற்றலும் உடையவர் விறுசால் பேரமைச்சர் தன் நிலை, தாழாத் தொழில் நிலை, பகைநிலை, முதலியவற்றைப் பிளந்து அறியும் பேராற்றலர். அரசிற்கு ஆலம் வீழ் போன்றவர், மறுவில்வாய் மொழிப்புலவர் அரிசில்கிழார், தகடூர் எறிந்த பெருஞ்சேரலிரும்பொறைக்கு அமைச்சராக அமர்ந்து, நல்லாட்சிக்குத் துணைநின்றார். இவற்றால் அமைச்சரின் அரும்பண்புகளும், ஆற்றல்களும் அமைதி, அமர்க்காலங்களில் அரசின் முக்கிய பணிகளில் அவருக்குரிய சிறப்பிடமும் நன்கு விளங்கும். அன்றும் இன்றும் படையமைப்பு, படையாட்சி, போர்க் கொள்கைகள் முதலியவற்றை முடிவு செய்து ஏற்றுச் செயலாற்றப் பெருந்துணை நிற்பவர் அமைச்சரே.”

(தங்ககந்தசாமி. போரியல் அன்றும் இன்றும். ப.22)


அரசனின் ஆணையைச் செயல்படுத்துவதற்குப் பல அதிகாரிகள் இருந்தது போல அமைச்சர்களும் இருந்தனர். இவர்களின் பணி அரசனுக்கு ஆட்சிமுறையில் ஏற்படும் ஐயங்களுக்கு ஆலோசனை வழங்குதலே ஆகும். அரசன் நெறி தவறி நடக்கும் சூழல் உருவாகும் பொழுது அவனை திருத்த வேண்டியவர்களாகவும் இருந்தனர். அரசியலமைப்பில் அரசனுக்கு அடுத்த அதிகாரங்களைப் பெற்றவர்களாக அமைச்சர்கள் திகழ்ந்தனர். ‘அமைச்சர்’  என்பவரை ‘மந்திரி’ என்றும் அழைப்பர். அமைச்சர் என்னும் சொல் ;அமாத்யா’ என்ற வடமொழிச் சொல்லிலிருந்து பெறப்பட்டது என்பர். அமைச்சரை உழை இருந்தார் (பக்கத்தில் இருப்பவர்) என்று வள்ளுவர் உரைப்பர். கடியலூர் உருத்திரங்கண்ணனார் அமைச்சரை பெரும்பாணாற்றுப்படையில் ‘சுற்றம்’ என்னும் சொல்லால் குறப்பிடுவார்.

நாட்டை ஆளும் மன்னவனுக்குத் துணைநிற்பவர்கள் அமைச்சர்கள். இம்மரபு பழங்காலம் தொட்டே இன்றுவரை அரசாட்சி மரபாக இருக்கின்றதை அறியமுடிகின்றது. இக்காலத்தில் மாநிலத்தை ஆள்பவர் முதல்வராகிறார். முதல்வருக்குத் துணையாக அமைச்சர்கள் இருக்கிறார்கள். இவ்வமைச்சர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதை அமைச்சு அதிகாரங்கள் வழி வள்ளுவர் எடுத்துரைக்கிறார். இதனையே,

“அறனறிந்து ஆன்றமைந்த சொல்லான் எஞ்ஞான்றுந்
திறனறிந்தான் தேர்ச்சித் துணை.”        (குறள்.635)


என்னும் குறட்பா வழி வள்ளுவர் எடுத்துரைக்கிறார். நாட்டினை நல்வழியில் கொண்டு செல்ல அரசனின் செங்கோலாட்சி மட்டுமல்லாது, அச்செங்கோலாட்சிக்குத் துணைநிற்கும் அமைச்சர்களின் ஒத்துழைப்பும் மிக அவசியமானதாகும். அத்தகைய அமைச்சர்கள் எங்ஙனம் மன்னனுக்குத் துணைநிற்க வேண்டும் என்பதையும், அதற்கு அமைச்சர்கள் ஆற்றவேண்டிய கடமைகள்,

ஐயறிவும் தம்மை அடைய ஒழுகுதல்
எய்துவ தெய்தாமை முற்காத்தல் - வைகலும்
மாறேற்கும் மன்னர் நிலையறிதல் இம்மூன்றும்
சீரேற்ற பேரமைச்சர் கோள்.”          (திரி.61)

எனத் திரிகடுகத்தில் நல்லாதனார் குறிப்பிடுகிறார். அதாவது, ஐம்பொறிகளைத் தீயவழியில் செலுத்தாது அடங்கி நிற்கும்படி நடத்;தல், அரசனுக்கு வருவதாகிய தீங்கை வராதபடி முன்காத்தல், நாள்தோறும் பகைவர்களது நிலையை ஒற்றர்களால் அறிந்து, அதற்கேற்றவாறு நடத்தல் ஆகிய இம்மூன்றும் புகழ்பெற்ற பெருமைமிக்க அமைச்சர்கள் ஆற்றவேண்டிய செயல்களாக மேற்கண்ட பாடல் சுட்டுகிறது. அரசனுக்குரிய தொழில்களையும், அரசுக்கு வேண்டிய நிலைகளையும், அமைச்சர்களுக்கு வேண்டிய தகுதிகளையும் திரிகடுகத்தின் சில பாடல்கள் இவ்வாறு எடுத்தியம்புகின்றன.

சிறுகுழுவினுடைய செயல்பாடுகளைப் பாதுகாக்க தனியொருவனின் ஆற்றல் போதுமானதாக அமைந்திருந்தது. மக்கள்தொகை மிகுதியாக அமைந்த பேரரசினை ஆள்வதென்பது அறிவுநிறைந்த அமைச்சர்களும், அறிஞர்கள் பலரும் உடனிருந்து உதவிசெய்தால் மட்டுமே இயலும். இக்காரணத்தினாலேயே அமைச்சர், ஒற்றர், படைஞர், தூதுவர் போன்ற பலரும் அரசஅங்கங்களாக தோன்றினர். ஆட்சிக்கு துன்பம் விளைவிக்கும் நபர்களையோ அல்லது அவைதோன்றும் வழியினையோ அறிவதற்கும், பகைவர்களை வெல்லும் ஆற்றலை எப்போதும் அறிந்திருக்கும் அமைச்சர்களின் செயலுக்கு அரசன் மதிப்பளிக்கவேண்டும் என்கிறது திரிகடுகம் (பா.எ.61). அமைச்சர் ஒருவராக இருப்பின் ஆட்சியின் அனைத்து செயல்பாடுகளையும் கண்காணிப்பதென்பது அரிதாகும். ஆதலால், மந்திரிமண்டலம் அவரவர் தகுதிக்கேற்ப அனுபவ அறிவினால் பல குழுக்களாக செயல்பட்டமையை நல்லாதனார் திரிகடுகத்தில் எடுத்துரைக்கின்றார் (பா.எ.61:4).

விழுதுகள் ஆலமரத்தைக் காப்பதுபோல அமைச்சர்கள் அரசனைக் காக்கவேண்டும். அரசுக்கும் குடிகளுக்கும் இடையில் நின்று செயல்படுபவனாகவும் அமைச்சன் இருக்கவேண்டும். அறிவாற்றலால் அரசாட்சியை அரசனுக்கு அடுத்தபடியாக நடைமுறைப்படுத்துவதிலும், நல்லாட்சிக்கு வழி வகிப்பதிலும் அமைச்சர் பெரும்பங்கு வகிப்பவராக இருக்கவேண்டுமென திரிகடுகம் 33 ஆவது பாடல் குறிப்பிடுகிறது.

ஆராய்தலிலும், அதற்குரிய வழிகளை ஆராய்ந்து செய்தலிலும் துணிவாகக் கருத்தைச் சொல்லுதலிலும் வல்லவன்தான் அமைச்சன் என்பார் வள்ளுவர். வள்ளுவரைப் போல், நல்லாதனாரைப் போல் அமைச்சரின் தகுதிகள் பற்றி விரிவாகப் பேசவி;ல்லை எனினும் சிறுபஞ்சமூலம் நூலாசிரியர் ‘எல்லாக் காரியங்களையும் பகுத்தறியும் வல்லமை உடையவனே மந்திரி’ என்பார். (பா.எ.58)

அரசன் தன்னுடைய வேலைகளையும், நாட்டின் வேலைகளையும் செய்வதற்கு தேர்வு செய்யப்படும் அமைச்சனானவன் பெற்றிருக்கவேண்டிய தகுதிகள் சிலவற்றை சிறுபஞ்சமூலம் வரையறுக்கின்றன. அவைகளாவன, ‘பொருளுடைமை, போகமுடைமை, அஞ்சாமை, அருளுடைமை, அறமுடைமை’ என்னும் ஐந்து குணங்களாகும். இதன் பொருண்மையாவது, பொருளுக்காக தன்னரசனைக் காட்டிக் கொடுக்கவோ, பிறர் தரும் பொருளுக்கு மயங்கும் நிலையுடையவனாகவோ இல்லாமல் பொருளையும், போகத்தையும் அனுபவித்து தன்னிறைவு பெற்றவனாக இருக்க வேண்டும். முடிவாகக் கூறவேண்டுமானால் உலக நடத்தைகளில் பக்குவமுடையவனாக இருத்தல்வேண்டும். அரசன் உதிர்க்கும் ஆணைகளில் ஆபத்து நிறைந்துள்ளது என அஞ்சுதல் கூடாது. தன்னரசனுக்கும், தன் மக்களுக்கும் கேடு விளைவிக்கும் இரக்கமற்ற செயலை எக்கணமும் செய்தல்கூடாது. தர்ம நியாயங்களை அறிந்து அறவழியில் யாவரையும் வழிநடத்த வேண்டும் என இந்நூலாசியர் அறிவுறுத்துகிறார் என அறியமுடிகிறது.

 

நல்லாட்சி புரியும் மன்னர்கள் “வாய்மையோடு பொருந்திய அறிவுமிக்க அமைச்சர்களைத் துணைக்கொண்டிருத்தல் வேண்டும் என்றும், அவ்வமைச்சர்கள் நற்குடியில் பிறந்து பல்வேறு கலைகளைக் கற்றுத்தேர்ந்து, கல்வி கேள்விகளில் ஞானம் மிகுதியாகப் பெற்று அறநெறியில் நிலைத்து நிற்பவர்களாகவும் இருக்கவேண்டும் என்பதை,

“குலமமுதல் தொன்மையும் கலையின் குப்பையும்,
பலமுதல் கேள்வியும் பயனும் எய்தினார்
நலமுதல் நலியினும் நடுவு நோக்குவார்
சலமுதல் அறுத்து அரும் தரும் தாங்கினார்”
(கம்பராமாயாணம் - 1404)


என்ற கம்பராமாயண வரிகளால் அறியமுடிகிறது. மேலும், நாட்டின் அரசனானவன் நல்ல அமைச்ச்களையும், சிறந்த போர் வீரர்களையும் அகலவும் கூடாது, தானாக முன்வந்து அணுகவும் கூடாது என எடுத்துரைத்து, மன்னரிடம் நட்பு கொள்ள வேண்டிய ஏனையவர்களின் பண்புகளையும்,

“வாய்மைசால் அறிவின் வாய்ந்த மந்திர மாந்தரோடும்
தீமை தீக் ஒழுக்கின் வந்த திறத்தொழில் மறவரோடும்
தூய்மைசால் புணர்ச்சி பேணி, துகள் அறு தொழிலை ஆகி
சேய்மையோடு அணிமை இன்றி, தேவரின் தெரிய நிற்றி”
(கம்பராமாயணம் - 4226)


என்ற வரிகளால் எடுத்துரைப்பதன் வாயிலாக, நிகழ்கால அரசுக்கும், எதிர்கால அரசுக்கும் வழிகாட்டியாக மேற்கண்ட கம்பராமாயண பாடலடிகள் அமைந்துள்ளன எனலாம்.

ஆய்வு முடிவுரை
பழந்தமிழக அரசியலமைப்பில் அமைச்சர், புரோகிதர், சேனாபதியர், தாவாத் தொழில் தூதுவர், சாரணர் ஆகியவர் அடங்கிய ஐம்பெருங்குழுவினரும், எண்பேராயத்தினரும் இடம்பெற்ற சான்றோர்கள் அவையில்; மன்னர்கள் அவர்களிடம் கருத்துக்கேட்டே அரசாட்சியையும், நிர்வாக அமைப்பையும் நடத்தியுள்ளனர். உள்நாட்டில் உயர்குடிப்பிறப்பு, மிகுந்த செல்வாக்கு, கலைப்பயிற்சி, அஞ்சாமை, வருங்காலம் பற்றிய முன்னுணர்வு, கல்வி கேள்விகளில் நுண்ணறிவு, நல்லொழுக்கம், உடல் வலிமை ஆகியன கொண்டவர்களே ஐம்பெருங்குழு மற்றும் எண்பேராயம் எனப்படும் அரசின் அனைத்து அறிவுரைப் குழுவிலும் இடம்பெறத் தகுதியுடையவர்களாக இருந்துள்ளனர். வாய்மையோடு பொருந்திய அறிவுமிக்க அமைச்சர்களைத் துணைக் கொண்டிருத்தலும், அறநெறியில் நிலைத்து நிற்கும் அவர்களை நாட்டின் நல்லாட்சிக்கு பயன்படுத்தவும்,

“அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க
இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்” 
என்ற வள்ளுவர் வாக்கின் வழி இக்கட்டுரையின் வாயிலாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

உசாத்துணை நூல்கள்
1.    ந.மு.வேங்கடசாமி நாட்டார், ஒளவை.சு.துரைசாமி பிள்ளை - கூலவாணிகன் சாத்தனாரின் மணிமேகலை (மூலமும் உரையும்), சாரதா பதிப்பகம், சென்னை - 14, முதற்பதிப்பு 2001.
2.    முனைவர் அ.பரிமணம், முனைவர் கு.வெ.பாலசுப்பிரமணியன் - புறநானூறு (மூலமும் உரையும்) நீயூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை - 98, முதற்பதிப்பு - 2004
3.    முருகரத்தினம்.தி - வள்ளுவர் வகுத்த அரசியல், திருக்குறள் ஆய்வக வெளியீடு, மதுரை காமராசர் பல்கலைக்கழகம் 1997.
4.    இரா.இராசமாணிக்கம் பிள்ளை - பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் (மூலமும் உரையும்)       கழக வெளியீடு, திருநெல்வேல்வேலி, சைவசித்தாற்த நூற் பதிப்புக் கழகம். சென்னை. முதற்பதிப்பு 1947.
5.    ஞா.வெர்ஜின் சிகாமணி - அடிப்படை அரசியல் கோட்பாடுகள், தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம், சென்னை. முதற்பதிப்பு 2004.

*கட்டுரையாளர்:  - மு. செல்லமுத்து, முனைவர்ப் பட்ட ஆய்வாளர், தமிழியல்துறை, மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை – 21.-__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard