இன்று நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஐராவதம் மகாதேவனின் தமிழ் பிராமிக் கல்வெட்டுகள் தொகுப்பைப் பார்த்துக்கொண்டிருந்தேன். இதைப்பற்றி பி.ஏ.கிருஷ்ணன் ஏற்கெனவே சில இடங்களில் சொல்லியிருக்கிறார்.
சங்க இலக்கியத்தின் தரம் எல்லாம் வேண்டாம், இன்றைய அரசியல் கட்சிகளின் பிழைகள் மலிந்த சுவரொட்டிகளைவிட மோசமான தமிழில்தான் அனைத்து தமிழ் பிராமிக் கல்வெட்டுகளும் இருக்கின்றன. உருப்படியான, தேறக்கூடிய, பிழையற்ற, தெளிவான தகவலைத் தரக்கூடியதாக இந்த 96 கல்வெட்டுகளில் ஒன்றுகூட இல்லை. மேலும் இவை எவையும் இரண்டு வரிகள்கூடத் தாண்டுவதில்லை.
பானையோடுகள் பற்றிக் கேட்கவே வேண்டாம். அவற்றில் ஆள் பெயர் தாண்டி, தொழில்பெயர் தாண்டி ஒன்றுமே இல்லை.
அரசனின் காசுகளை எடுத்துக்கொண்டால்கூட கொஞ்சம் நீளமாக வரும் சாதவாகனக் காசில் உள்ள பிராகிருதம்கூட இலக்கணசுத்தமாக உள்ளது, தமிழ் தடவுகிறது.
ஏன் இப்படி?
மொழிரீதியாக, தமிழின் முதல் உருப்படியான கல்வெட்டு என்பதே பூலாங்குறிச்சி வட்டெழுத்துக் கல்வெட்டு(கள்)தாம். அவற்றில்தான் தமிழின் இலக்கணத் தன்மையுடனான வாக்கியங்கள், கிட்டத்தட்டப் பிழைகளின்றி அமைகின்றன. அவையோ, பொயு ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை.
மாறாக, அசோகனின் நாடுமுழுதுமான கல்வெட்டுகளாக இருக்கட்டும், காரவேலனின் கண்டகிரி ஹாதிகும்ஃபா கல்வெட்டாக இருக்கட்டும், ருத்ரதாமனின் கிர்னார் கல்வெட்டாக இருக்கட்டும், சாதவாகனர்களின் கல்வெட்டுகளாக இருக்கட்டும், அவையெல்லாம் தமிழ் பிராமிக் கல்வெட்டுகளின் சமகாலத்தைச் சேர்ந்தவை, ஆனால் விரிவானவை, இலக்கண சுத்தமானவை, தகவல் செறிவு மிக்கவை.
உண்மையில், அசோகனின் நீண்ட நெடிய கல்வெட்டுகள் இருந்திராவிட்டால், எழுத்தமைதியில் அவற்றுக்கும் தமிழ் பிராமிக் கல்வெட்டுகளுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்திராவிட்டால் நம்மால் தமிழ் பிராமியைப் புரிந்துகொண்டிருக்கவே முடியாது.