Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: திருவள்ளுவர் திருக்குறளியற்றிய நோக்கம்-தேவநேயர் மதவெறி நச்சுகள்


Guru

Status: Offline
Posts: 7474
Date:
திருவள்ளுவர் திருக்குறளியற்றிய நோக்கம்-தேவநேயர் மதவெறி நச்சுகள்
Permalink  
 


திருவள்ளுவர் திருக்குறளியற்றிய நோக்கம்
ஆரியத்தாலும் நம்பா ( நாத்திக) மதங்களாலும், சிறப்பாக ஆரியத்தால், குமுகாயத்துறையிலும் சமயத்துறையிலும் தமிழகத்திற்கு ஏற்பட்ட எல்லாக் கேடுகளும் பாடுகளும் துன்பங்களும் தொல்லைகளும் நீங்கி எல்லாரும் இன்பமாக வாழவேண்டுமென்னும் இன்னருள் நோக்கங்கொண்டே, தெள்ளிய மனமும் ஒள்ளிய அறிவும் திண்ணிய நெஞ்சும் நுண்ணிய மதியும் கொண்ட திருவள்ளுவர் திருக்குறளை இயற்றினார் என்க.
"அந்தண ரென்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்குஞ்
செந்தண்மை பூண்டொழுக லான்".
"அறத்தாற்றின் இல்வாழ்க்கை யாற்றின் புறத்தாற்றிற்
போஒய்ப் பெறுவ தெவன்".
"ஒழுக்க முடைமை குடிமை யிழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்".
"மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்".
"அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று".
"ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூன்மறப்பர்
காவலன் காவா னெனின்".
"பிறப்பொக்கு மெல்லா வுயிர்க்குஞ் சிறப்பொவ்வா
செய்தொழில் வேறுமை யான்".
"சுழன்றுமேர்ப் பின்ன துலகம் அதனால்
உழந்தும் உழவே தலை".
"உழுவா ருலகத்திற் காணியஃ தாற்றா
தெழுவாரை யெல்லாம் பொறுத்து".
என்பன ஆரியத்தைக் கண்டித்தனவாகும் பிறவற்றைக் கடிந்ததை ஆங்காங்கு நூலுட் காண்க.



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
RE: திருவள்ளுவர் திருக்குறளியற்றிய நோக்கம்-தேவநேயர் மதவெறி நச்சுகள்
Permalink  
 


12. பரிமேலழகர் நச்சுக் கருத்துக்கள்
அறமாவது மனு முதலிய நூல்களில் விதித்தன செய்தலும் விலக்கியன ஒழிதலுமாம்.
ஒழுக்கமாவது அந்தணர் முதலிய வருணத்தார் தத்தமக்கு விதிக்கப்பட்ட பிரமசரிய நிலைகளினின்று, அவ்வவற்றிற்கோதிய அறங்களின் வழுவாதொழுகுதல்.
அதுதான் (அறம்) நால்வகை நிலைத்தாய் வருணந்தோறும் வேறு பாடுடைமையின், சிறுபான்மையாகிய அச்சிறப்பியல்புகளொழித்து ........... கூறப்பட்டது. (உரைப்பாயிரம்)
இவ்வாழ்த்து ஏற்புடைக் கடவுளை யெனவறிக; என்னை? சத்துவ முதலிய குணங்களான் மூன்றாகிய உறுதிப்பொருட்கு, அவற்றான் மூவராகிய முதற்கடவுளோடு இயைபுண்டாகலான். அம்மூன்று பொருளையுங் கூறலுற்றார்க்கு அம்மூவரையும் வாழ்த்துதல் முறைமையாகலின், இவ்வாழ்த்து அம்மூவர்க்கும் பொதுப்படக் கூறினாரெனவுணர்க. (கடவுள் வாழ்த்து அதிகார முகவுரை).
தமிழெழுத்திற்கேயன்றி வடவெழுத்திற்கும் முதலாதல் நோக்கி 'எழுத்தெல்லா' மென்றார். (1) தத்துவமிருபத்தைந்தினையுந் தெரிதலாவது ......... சாங்கிய நூலுளோதியவாற்றான் ஆராய்தல் (27.)
ஏனை மூவராவர், ஆசாரியனிடத்தினின்றோதுதலும் விரதங்காத்தலுமாகிய பிரமசரிய வொழுக்கத்தானும், இல்லைவிட்டு வனத்தின்கட் டீயொடு சென்று மனையாள் வழிபடத் தவஞ்செய்யுமொழுக்கத்தானும், முற்றத்துறந்த யோகவொழுக்கத்தானுமென இவர். (41)
பிதிரராவார் படைப்புக்காலத்து அயனாற் படைக்கப்பட்டதோர் கடவுட்சாதி; அவர்க்கிடம் தென்றிசையாதலின், 'தென்புலத்தா' ரென்றார். (43)
புதல்வரைப் பெறுதல் - அஃதாவது, இருபிறப்பாளர் மூவரானும் இயல்பாக விறுக்கப்படூஉங் கடன் மூன்றனுள், முனிவர்கடன் கேள்வியானும், தேவர்கடன் வேள்வியானும், தென்புலத்தார் கடன்புதல்வரைப் பெறுதலானு மல்லது இறுக்கப் படாமையின், அக்கடனிறுத்தற் பொருட்டு நன்மக்களைப் பெறுதல். (மக்கட் பேற்றதிகார முகவுரை)
மக்களென்னும் பெயர் பெண்ணொழித்து நின்றது. (41)
பெண்ணியல்பாற் றானாக வறியாமையிற் 'கேட்டதா' யெனவுங் கூறினார். (46)
தீயசொற்களாவன ......... வருணத்திற்கு உரியவல்லனவுமாம். (139)
இனி மனு முதலிய அறநூல்களால் பொதுவாகக் கூறப்பட்ட இல்லறங்களெல்லாம் இவர் தொகுத்துக் கூறிய இவற்றுள்ளே அடங்கும். (240)
வேதமும் அறமும் அநாதி. (543)
பசுக்கள் பால்குன்றியவழி அவியின்மையானும், அது கொடுத்தற்குரியார் மந்திரங் கற்பமென்பன ஓதாமையானும், வேள்வி நடவாதாம்; ஆகவே, வானம் பெயலொல்லா தென்பதாயிற்று. (540)
தேவர்க்கும் அசுரர்க்கும் அமைச்சுப் பூண்ட வியாழ வெள்ளிகளது துணிவு தொகுத்துப் பின் நீதி நூலுடையார் கூறியவாறு கூறுகின்றமையின், ஈண்டு வினைத்தூய்மையும் உடன் கூறினார். (662)
"வேந்தன் மேய தீம்புன லுலகமும்" என்றார் பிறரும். நகுடனென்பான் இந்திரபதம் பெற்றுச் செல்கின்ற காலத்துப் பெற்ற களிப்பு மிகுதியான் அகத்தியன் வெகுள்வதோர் பிழைசெய, அதனாற் சாப மெய்தி அப்பதம் இடையே இழந்தானென்பதனை 'யுட்கொண்டு இவ்வாறு கூறினார். (899)
பெண்பாலாக்கியது வடமொழி முறைமை பற்றி. (624)
வினைவயத்தாற் பஞ்சபூத பரிணாமமாகிய யாக்கையைப் பொருந்தி நின்று அதின் பயனனுபவித்தல் எல்லா வருணத்தார்க்கு மொத்தலிற் 'பிறப்பொக்கு' மென்றும் ........ கூறினார். (972)
வடநூலார் அங்கமென்றமையின் 'உறுப்' பென்றார். (993)
காமத்துப்பால் - இது புணர்ச்சி பிரிவென விருவகைப்படும். ஏனை இருத்தல், இரங்கல், ஊட லென்பனவோவெனின், இவர் பொருட்பாகுபாட்டினை அறம் பொருளின்பமென வடநூல் வழக்குப் பற்றி யோதுதலான், அவ்வாறே யவற்றைப் பிரிவின்கணடக்கினாரென்க. இனி, அவை தம்மையே தமிழ் நூல்களோடும் பொருந்தப் புணர்ச்சியைக் களவென்றும் பிரிவைக் கற்பென்றும் பெரும்பான்மை பற்றி வகுத்து, அவற்றைச் சுவை மிகுதி பயப்ப உலக நடையோடு ஒப்பு மொவ்வாமையு முடையவாக்கிக் கூறுகின்றார். (காமத்துப்பால் முகவுரை).
ஈண்டுப் பிரிவினை வடநூன்மதம் பற்றிச் செலவு ஆற்றாமை விதுப்புப் புலவியென நால்வகைத் தாக்கிக் கூறினார். அவற்றுட் செலவு பிரிவாற்றாமையுள்ளும், ஆற்றாமை படர்மெலிந்திரங்கன் முதல் நிறையழித லீறாயவற்றுள்ளும், விதுப்பு அவர்வயின் விதும்பன் முதற் புணர்ச்சி விதும்ப லீறாயவற்றுள்ளும், புலவி நெஞ்சொடு புலத்தன் முதல் ஊடலுவகை யீறாயவற்றுள்ளுங் கண்டு கொள்க. அஃதேல், வடநூலூர் இவற்றுடனே சாபத்தினானாய நீக்கத்தையுங் கூட்டிப் பிரிவினை ஐவகைத் தென்றாராலெனின், அஃது அறம்பொருளின்ப மென்னும் பயன்களுள் ஒன்று பற்றிய பிரிவன்மையானும், முனிவராணையான் ஒருகாலத் தோர்குற்றத் துளதாவதல்லது உலகியல்பாய் வாராமையானும். ஈண்டொழிக்கப்பட்டதென்க. (காமத்துப்பால் முடிவுரை)
ஏனைக் கருத்துக்களை ஆங்காங்கு உரையிற் காண்க.

 



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

அந்தணர் நூற்கு மறத்திற்கு மாதியாய்
நின்றது மன்னவன் கோல் .
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் நின்றது - ஐயரும் பார்ப்பாருமான இருவகைத் தமிழ் அந்தணரும் இயற்றிய பல்துறை நூல்கட்கும் மக்களின் அறவொழுக்கத்திற்கும் அடிமணையாயிருப்பது ; மன்னவன் கோல் - அரசனின் செங்கோலே.
பரிசாலும் முற்றூட்டாலும் நூலாசிரியரைப் போற்றுவதும் அவர்நூல் வழங்குமாறு அரங்கேற்றுவிப்பதும் அரசன் தொழிலாதலின் 'ஆதி' என்றார் . "அந்தண ரென்போ ரறவோர்மற் றெவ்வு யிர்க்குஞ் செந்தண்மை பூண்டொழுகலான்" , என்று பிராமணரை விலக்கியதால் , இங்கு அந்தண ரென்றது தமிழ் அறிஞரையே . அந்தணர் என்பது சிறப்பாகத் துறவியரையே குறிக்குமேனும் , சிறு பான்மை இல்லறத்தாரையும் தழுவும்.
"வினையி னீங்கி விளங்கிய அறிவின்
முனைவன் கண்டது முதனூ லாகும்".(தொல். 1564)
என்றதனால் , முதற்காலத்து முதனூல்களெல்லாம் முனிவராலேயே இயற்றப்பட்டதாகத் தெரிகின்றது . அதன் பின்பே இல்லறத்தாரான பார்ப்பாரும் நூலியற்றினர் . நூல்களைப் பார்ப்பவர் பார்ப்பார் . முனிவர் ஐயர் எனவும் படுவர் . கடைக்கழகக் காலத்திலும் இளங்கோவடிகள் என்னும் தமிழ் அந்தணர் , இயைபுவனப் பியற்றியமை காண்க. அந்தணர் நூற்கு அரசியல் அடிப்படையாயிருந்தமைக்கு முக்கழக நடவடிக்கைகளே போதிய சான்றாம் . ஒழுக்கத்திற்கு அது தூண்டு கோலாயிருந்தது. "அச்சமே கீழ்கள தாசாரம்" ( குறள் . 1075) என்பதனாலும் , நன்னடை நல்கல் வேந்தர்க்குக் கடனே ( புறம் . 312) என்பதனாலும் , அறியப்படும் . நூற்கும் அறத்திற்கும் முந்தியே யிருந்ததனாலும் நிலைபெற்றதனாலும் 'நின்றது' என்றார்.
"அந்தணர்க் குரித்தாய வேதத்திற்கும் அதனாற் சொல்லப்பட்ட அறத்திற்கும் காரணமாய் நிலைபெற்றது ................ செங்கோல்" "அரசர் வணிக ரென்னு மேனையோர்க்கு முரித்தாயினும் , தலைமை பற்றி அந்தணர் நூலென்றார்" என்பன பரிமேலழகரின் ஆரியப்பிதற்றல்கள் . நூலென்றது மறைநூலை மட்டுமன்று . அங்ஙனங் கொள்ளினும் அது கடவுள் வழிபாட்டை அறவே அறியாத ஆரிய வேதத்தையன்று ; தமிழ் மறையையே குறிக்கும்.
"மன்னு மாமலை மகேந்திர மதனிற்
சொன்ன வாகமந் தோற்றுவித் தருளியும்"
என்று மாணிக்க வாசகர் பாடியிருத்தல் காண்க.
இன்னும் தமிழிலுள்ள பண்டை மறை (மந்திர ) நூல்களும் மருத்துவ நூல்களும் சித்தர் என்னும் முனிவர் இயற்றியவையே.



__________________



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல் (அதிகாரம்:செங்கோன்மை குறள் எண்:543)
பொழிப்பு (மு வரதராசன்): அந்தணர் போற்றும் மறைநூலுக்கும் அறத்திற்கும் அடிப்படையாய் நின்று உலகத்தைக் காப்பது அரசனுடைய செங்கோலாகும்.
மணக்குடவர் உரை: அந்தணர்க்கு உரித்தாகிய வேதத்திற்கும் அதனால் கூறப்பட்ட அறத்திற்கும் முதலாக நின்றது அரசன் செய்யும் முறைமை.
பரிமேலழகர் உரை: அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் நின்றது - அந்தணர்க்கு உரித்தாய வேதத்திற்கும், அதனால் சொல்லப்பட்ட அறத்திற்கும் காரணமாய் நிலைபெற்றது, மன்னவன் கோல் - அரசனால் செலுத்தப் படுகின்ற செங்கோல்.
(அரசர் வணிகர் ஏனையோர்க்கு உரித்தாயினும், தலைமை பற்றி அந்தணர் நூல் என்றார். 'மாதவர் நோன்பும் மடவார் கற்பும், காவலன் காவல்' (மணி. 22 208 209) அன்றித் தம் காவலான் ஆகலின், ஈண்டு 'அறன்' என்றது அவை ஒழிந்தவற்றை. வேதமும் அறனும் அநாதியாயினும் செங்கோல் இல்வழி நடவா ஆகலின், அதனை அவற்றிற்கு 'ஆதி' என்றும், அப் பெற்றியே தனக்கு ஆதியாவது பிறிதில்லை என்பார் 'நின்றது' என்றும் கூறினார். இவை இரண்டு பாட்டானும் செங்கோலது சிறப்புக் கூறப்பட்டது.)
வ சுப மாணிக்கம் உரை: அருளாளர்தம் நூலுக்கும் அறத்துக்கும் அடிப்படை அரசனது ஆட்சியே.
பொருள்கோள் வரிஅமைப்பு:
அந்தணர் நூற்கும், அறத்திற்கும், ஆதியாய் நின்றது மன்னவன் கோல்.
பதவுரை: அந்தணர்-அறவோர்; நூற்கும்-நூலுக்கும்; அறத்திற்கும்-அறத்திற்கும்; ஆதியாய்-முதலாய், முதலாய், மூலமாய், காரணமாய்; நின்றது-நிலைபெற்றது; மன்னவன்-வேந்தன்; கோல்-முறை செய்யுங் கோல், செங்கோல்ஆட்சி அதாவது நல்லாட்சி.
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் நின்றது:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அந்தணர்க்கு உரித்தாகிய வேதத்திற்கும் அதனால் கூறப்பட்ட அறத்திற்கும் முதலாக நின்றது;
பரிப்பெருமாள்: அந்தணரதாகிய வேதத்திற்கும் அதனால் கூறப்பட்ட அறத்திற்கும் முதலாய நின்றது;
பரிதி: வேத நெறிக்கும் தன்ம நெறிக்கும் முதலானது;
காலிங்கர்: உலகத்து அனைத்து நீதியையும் வழுவற உணர்த்துவது மறைநூல் அன்றே; அதனால் அவ்வருமறையாகிய நூலிற்கும் மற்று அதன்வழி நடைபெற்று வருகின்ற அறமனைத்திற்கும் இவ்வுலகத்து ஆதியாக நிலைபெற்றது யாதோ எனின்;
பரிமேலழகர்: அந்தணர்க்கு உரித்தாய வேதத்திற்கும், அதனால் சொல்லப்பட்ட அறத்திற்கும் காரணமாய் நிலைபெற்றது;
பரிமேலழகர் குறிப்புரை: அரசர் வணிகர் ஏனையோர்க்கு உரித்தாயினும், தலைமை பற்றி அந்தணர் நூல் என்றார்.
'அந்தணர்க்கு உரித்தாகிய வேதத்திற்கும் அதனால் கூறப்பட்ட அறத்திற்கும் முதலாக நின்றது' என்று மணக்குடவர்/பரிப்பெருமாள், பரிமேலழகர் இப்பகுதிக்கு உரை நல்கினர். பரிதி 'வேதநெறிக்கும் தன்மநெறிக்கும் முதலானது' என்றார். காலிங்கர் 'மறையாகிய நூலிற்கும் மற்று அதன்வழி நடைபெற்று வருகின்ற அறமனைத்திற்கும் இவ்வுலகத்து ஆதியாக நிலைபெற்றது' எனப் பொருள் கூறினார்.

இன்றைய ஆசிரியர்கள் 'அந்தணர்க்குரிய மறை நூலுக்கும், அந்நூல் கூறும் அறத்திற்கும் அடிப்படையாய் நிலைபெற்றது', 'அந்தணர்கள் ஓதும் வேதம் முதலிய ஞானநூல்களின் அறிவு மக்களிடையே பரவுதற்கும் அதனால் நாட்டில் அறங்கள் சரியாக நடப்பதற்கும் ஆதரவாக இருப்பது', 'அந்தணர் என்னும் நீத்தாரது உண்மை நூலுக்கும், அதனுட் கூறப்படும் அறத்திற்கும் அடிப்படையான துணையாய் நிற்பது', 'அழகிய செந்தண்மையுடைய பெரியோர்கள் நூலுக்கும் அறத்திற்கும் காரணமாய் உள்ளது', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.
அருளாளர் நூலுக்கும் அறத்துக்கும் காரணமாய் நிற்பது என்பது இப்பகுதியின் பொருள்.
மன்னவன் கோல்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அரசன் செய்யும் முறைமை.
பரிப்பெருமாள்: அரசன் செய்யும் முறைமை.
பரிப்பெருமாள் குறிப்புரை: ஓதுவாரும் அறம் செய்வாரும் முறை செய்யும் அரசன் நாட்டகத்து உளராவர்; ஆதலான் முதல் ஆயிற்று. இது கல்வியும் அறமும் வளரும் என்றது.
பரிதி: அரசன் செங்கோல் என்றவாறு.
காலிங்கர்: வேந்தனானவன் மற்று அவ்வறநெறி கோடாமல் பாதுகாக்கின்ற செங்கோலாகிய நீதி என்றவாறு.
காலிங்கர் குறிப்புரை: மற்றும் அறநூல் என்றும் நூல் என்றும் இங்ஙனம் ஒன்று சொல்லாது அந்தணர்நூல் என்றது, அரசர் நெறியாகிய செங்கோலும் நால் வருணத்தார் நடையுள் ஒரு நடை ஆகலானும், அவை யாவையும் பிறவும் துறவுமாகிய அனைத்தினையும் பழுது அற உரைப்பது பார்ப்பார் ஓதியும் ஓதுவித்தும் இங்ஙனம் விளங்க நடைபெற்று வருகின்ற வேதம் ஆகலான் என்றவாறு.
பரிமேலழகர்: அரசனால் செலுத்தப் படுகின்ற செங்கோல்.
பரிமேலழகர் குறிப்புரை: 'மாதவர் நோன்பும் மடவார் கற்பும், காவலன் காவல்' (மணி. 22 208 209) அன்றித் தம் காவலான் ஆகலின், ஈண்டு 'அறன்' என்றது அவை ஒழிந்தவற்றை. வேதமும் அறனும் அநாதியாயினும் செங்கோல் இல்வழி நடவா ஆகலின், அதனை அவற்றிற்கு 'ஆதி' என்றும், அப் பெற்றியே தனக்கு ஆதியாவது பிறிதில்லை என்பார் 'நின்றது' என்றும் கூறினார். இவை இரண்டு பாட்டானும் செங்கோலது சிறப்புக் கூறப்பட்டது. [அப்பெற்றியே- அத்தன்மையே]
'அரசன் செங்கோல்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'அரசரது செங்கோல் ஆட்சியாம்', 'அரசாட்சியின் செங்கோன்மை', 'அரசனது செங்கோல் ஆகும்', 'அரசன் செங்கோல்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
செங்கோல் ஆட்சியாம் என்பது இப்பகுதியின் பொருள்.
நிறையுரை:அந்தணர் நூற்கும் அறத்துக்கும் காரணமாய் நிற்பது செங்கோல் ஆட்சியாம் என்பது பாடலின் பொருள்.
'அந்தணர் நூல்' குறிப்பது என்ன?
சட்டமும் ஒழுங்கும் கெடாமலிருக்க முறைதவறா ஆட்சி வேண்டும்.
செந்தண்மை உடையவர்கள் இயற்றும் நூல்களையும் அறங்களையும் நிலைநிற்கச் செய்வது அரசின் நல்லாட்சியேயாகும்.
அந்தணர் என்போர் அறவோர்... (குறள் 30) என்று வள்ளுவரே கூறியுள்ளதால் அந்தணர் என்று சொல்லப்பட்டது எல்லா உயிர்களிடத்தும் செந்தண்மை கொண்டொழுகும் அருளாளரைக் குறிக்கும். இங்கு அவ்வறவோர் இயற்றும் நூல்களும் அறச்செயல்களும் பேசப்படுகின்றன. நாட்டில் நல்லாட்சி நடைபெறாவிட்டால் அறவோர் நூல்களுக்குத் தடையுண்டாகும், நீதிநெறிகளுக்கு இடையூறு நேரும் என்ற கருத்தில் அவைகளுக்கு அடிப்படை அரசின் செம்மையான ஆட்சி எனச் சொல்லப்பட்டது. தம் கொள்கைகளுக்கு ஒவ்வாத கருத்துக் களைக் கொண்ட நூல்கள் தம் ஆட்சிக்கு மாறாய் இருத்தல் கண்டு, நூல்களைத் தடை செய்வதும், எழுதியவரைக் கொடுமைக்கு ஆளாக்குவதும் இன்றும் நாம் கண்கூடாகக் காண்பதுதான். அறநூல் அழியாமல் பாதுகாப்படுவதும் அறங்கள் சமுதாயத்தில் முறையாக இயங்குகின்றனவா என்பதைக் கண்காணிக்கப்படுவதும் செங்கோலாட்சியில்தான் நிகழக்கூடும்.
இக்குறட்பாவில் வரும் ஆதி என்ற சொல்லுக்கு முதல், மூலம், காரணம் என்ற பொருள் கொண்டு உரை செய்தனர். காரணம் என்ற பொருள் பொருத்தமாகத் தோன்றுகிறது. ‘ஆதியாய் நின்றது’ என்ற சொற்றொடர் காரணமாக நின்றது அல்லது அமைந்தது என்று பொருள் தரும். அதனால் ஒரு நாட்டின் இறையாண்மையே அந்தணர்நூல்களும், அறச்செயல்களும் நிலைநிற்கக் காரணமாகும் என்ற பொருள் இக்குறளுக்கு அமையும்.
'நாட்டில் செங்கோன்மை நிலவுவதால் ஓதுவாரும் அறஞ்செய்வாரும் உளர்' என்று பரிப்பெருமாள் உரை சொல்கிறது. அவரது சிறப்பு உரை செங்கோலாட்சியில் கல்வியும் அறமும் வளரும் எனவும் சொல்கிறது. 'அரசு முறை செய்யாவிட்டால் அறவோரின் நூல்களைப் போற்றுவாரும் அறத்தைக் கடைப்பிடித்து நடப்பாரும் நாட்டில் குறைவாராதலால் அவ்விரண்டிற்கும் அடிப்படையாய் நிற்பது மன்னன் கோல் என்றார்' என்கிறது இன்னொரு உரை.
தண்டபாணி தேசிகர் 'தன்னலப் பற்றும் இனப்பற்றும் சமயக் காழ்ப்பும் கடல் கோளும் இயற்கைப் பூசலும் விளைந்த காலத்தில் நூல்களும் அழிக்கப்படும்; மாற்றப்படும். இடைச் செருகல் நிகழ்த்தப் பெறும். அவை நிகழாமல் பாதுகாப்பதும் அரசன் கடமையாகிறது; செங்கோலாகிறது என்ற கருத்தை 'நூலிற்கும் ஆதியாய்' என்பதற்குக் காலிங்கர் தரும் சொற்பொருட் குறிப்பு விளக்குகிறது' என்று இக்குறளுக்கு கருத்துரை வழங்கினார்.
இக்குறள் செங்கோன்மையின் சிறப்பைக் கூறுவது. கோணாத கோல் கொண்டு ஆட்சிசெய்வோர் இல்லாது போனால், அற நூல்கள் பயனின்றிப்போம்; அறம் (நீதி) காப்பாற்றப்பட மாட்டாது. ஆதலின் அவற்றுக்கும் அடிப்படை நல்ல ஆட்சியாளரின் செங்கோன்மை என்கிறார் வள்ளுவர் இங்கு.
'அந்தணர் நூல்' குறிப்பது என்ன?
'அந்தணர் நூல்' என்பதற்கு அந்தணர்க்கு உரித்தாகிய வேதம், அந்தணரதாகிய வேதம், வேத நெறி, அந்தணர்களது வேதம், அந்தணர்கள் செய்யும் அறநூல், அருளாளர்தம் நூல், அந்தணர்க்குரிய மறை நூல், அந்தணர்கள் (ஓதும் வேதம் முதலிய ஞான) நூல், அனைத்து நீதியையும் வழுவற உணர்த்தும் மறைநூல், அறவோர் இயற்றிய நூல், அந்தணர் என்னும் நீத்தாரது உண்மை நூல், அழகிய செந்தண்மையுடைய பெரியோர்கள் நூல், அருள்நெறியாளர் சிந்தனைகளை நூலால் வடிப்பது, அறவோர் செய்த நூல், ஒழுக்கமுடைய நல்லோர் கூறும் அறவழி நூல், ஐயரும் பார்ப்பாருமான இருவகைத் தமிழ் அந்தணரும் இயற்றிய பல்துறை நூல் என உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.
அந்தணர் நூல் என்பதற்குப் பலர் அந்தணர்க்கு உரித்தாகிய நூல் என்று சொல்லி பிராமணர்கள் ஓதியும் ஓதுவித்தும் நடைபெற்று வருகின்ற வடவர் வேதத்தையே அது குறிக்கும் என்றனர். இக்கருத்தை ஆய்வாளர்கள் ஒப்புவதில்லை. வேதம் யாராலும் இயற்றப்பட்டதல்ல அதாவது மனிதனால் உண்டாக்கப்பட்டதல்ல என்ற பொருளில் வடமொழியில் அது 'அபௌர்ஷேயம்' எனப்பட்டது. 'பரம்பொருளுடன் வேதம் இருந்தது. பரம்பொருள் பிரம்மாவை படைத்து, அவருக்கு வேதத்தைக் கற்பித்தார். பிரம்மா உலகைப் படைத்து, பிராமணார்களுக்கு வேதத்தை வெளிப்படுத்தினார்' என்று வைதீகம் போதிக்கிறது. இந்த அடிப்படையில் இக் குறளுக்கான விளக்கத்தில் பரிமேலழகர் 'வேதமும், அறனும் அநாதி' (என்றுமுள்ளவை) என்று கூறிவிட்டு 'ஆயினும் செங்கோல் இல்வழி (இல்லாது போனால் அவை) நடவா' என்றும் கூறுகிறார். பரம்பொருளுடன் கலந்ததாய்-அழிவில்லாத நிரந்தரமாய், அநாதியாய் இருக்கவல்ல வேதத்திற்கு, சிலகாலம் அரசாளும் மன்னவன் எப்படி ஆதியாய்-அடிப்படையாய். மூலமாய் அல்லது காப்பாய் இருக்க முடியும்?' என ஆய்வாளர்கள் வினவுவர்.
புலவர் குழந்தை 'வேதமும் அதனாற் கூறப்படும் அறமும் தமிழர்க்கேலாமையின் இவ்வுரை பொருந்தாது. வேதங்கள் கூறும் அறங்கள் என்ன? வேள்விகள் செய்யும் முறையும் பகைவரைக் கொல்ல வேண்டும் என்னும் வேண்டுகோளுந்தானே? இவற்றைத் தமிழரசர் எதற்காகக் காக்க வேண்டும்? வேதமும் அறமும் அநாதி என்பதும் பொருந்தாக் கூற்றே' என்பார்.
வேத நெறியை உள்ளிடக் கருதியோர் இக்குறளிலுள்ள அந்தணர் நூல் என்ற சொல்லுக்கு வைதீக வேதம் எனப் பொருள் தந்தனர். நீத்தாராகி அருள் நெஞ்சம் கொண்டோரை மட்டும் அந்தணர் என்று சொல்பவர் வள்ளுவர். அந்தணர் என்பவர் தொண்டுள்ளம் கொண்டு பணி செய்வர்; அறப்பண்புடையராய் எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுகுவர். அவர் இயல்பு அருளுடைமை. எங்கெங்கு துன்பம் கண்டாலும் அங்கெல்லாம் சென்று அவர்கள் துன்பம் துடைக்கப் பாடுபடுபவர். மனமாசுகளை அறுத்த இப்படிப்பட்ட நீத்தாரது நூலையே வள்ளுவர் இப்பாடலில் சொல்கிறார். அந்தணர் நூல் என்பதற்குப் பார்ப்பனர்க்கேயுரித்தெனச் சொல்லப்படும் வேதம் என்ற பொருளைக் கொள்ளாது அறவோர் செய்யும் நூல் அல்லது அறவோரின் கொள்கை என்று பொருள் கொள்வதே பொருந்தும்.
அந்தணர் நூல் என்பது அருளாளர்தம் நூலைக் குறிக்கும்.
அருளாளர் நூலுக்கும் அறத்துக்கும் காரணமாய் நிற்பது செங்கோல் ஆட்சியாம் என்பது இக்குறட்கருத்து.
அதிகார இயைபு
செங்கோன்மையே அறநூல்களையும் அறங்களையும் காப்பது.
பொழிப்பு -அறவோர் நூல்களும் அறச்செயல்களும் நல்லாட்சியிலேயே நிலைபெற்று நிற்கும்.



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

மறப்பினு மோத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும் .
பார்ப்பான் ஓத்து மறப்பினும் கொளல் ஆகும் - ஆரியப் பார்ப்பானான பிராமணன் தான் கற்ற வேதத்தை மறந்தானாயினும் அதைத் திரும்ப ஓதிக்கொள்ள முடியும் ; பிறப்பு ஒழுக்கம் குன்றக்கெடும் - ஆனால் அவன் தன்னை உயர்ந்தவனாகச் சொல்லிக் கொள்ளும் பிறப்பு , தமிழ ஒழுக்கங் குன்றின் கெடும் .
ஒவ்வொரு நாட்டிலும் அந்தந்த நாட்டுப் பண்பாட்டின்படியே ஒழுக்கவரம்பிருக்கும் . பிராமணன் வேதத்தை மறந்தானா மறக்க வில்லையா என்பது தமிழ்நாட்டில் ஆய்விற்குரியதன்று ; அவன் தமிழ வொழுக்கத்தைக் கடைப்பிடித்தானா இல்லையா என்பதே அதன் ஆய்விற்குரியதாம் . ஆகவே , அவ்வொழுக்கத்தினாலேயே அவன் உயர்குலத்தானாவான் என்பதும் , அது கெட்டவிடத்துத் தாழ்ந்த குலத்தானாகிவிடுவான் என்பதும் , தமிழறநூல் முடிபாம் .

 



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

மறப்பினும் ஒத்துக் கொளல்ஆகும் பார்ப்பான்
பிறப்பு ஒழுக்கம் குன்றக் கெடும் (ஒழுக்கமுடைமை:134)
பொழிப்பு (மு வரதராசன்): கற்ற மறைப்பொருளை மறந்தாலும் மீண்டும் அதனை ஓதிக் கற்றுக் கொள்ள முடியும்; ஆனால் மறை ஓதுவானுடைய குடிப்பிறப்பு, ஒழுக்கம் குன்றினால் கெடும்.
மணக்குடவர் உரை: பிராமணன் வேதத்தினை ஓதி மறந்தானாயினும் பின்னும் ஓதிக் கொள்ளலாம்: ஒழுக்கங் குறையுமாயின் குலங்கெடும்.
இஃது ஒழுக்கம் கல்வியிலும் வலிதானவாறு கூறிற்று.
பரிமேலழகர் உரை: ஓத்து மறப்பினும் கொளலாகும் - கற்ற வேதத்தினை மறந்தானாயினும் அவ் வருணம் கெடாமையின் பின்னும் அஃது ஓதிக்கொள்ளலாம், பார்ப்பான் பிறப்பு ஒழுக்கம் குன்றக் கெடும்.- அந்தணது உயர்ந்த வருணம் தன் ஒழுக்கம் குன்றக் கெடும்.
(மறந்தவழி இழிகுலத்தனாம் ஆகலின், மறக்கலாகாது என்னும் கருத்தான், 'மறப்பினும்' என்றார். சிறப்புடை வருணத்திற்கு மொழிந்தமையின், இஃது ஏனைய வருணங்கட்கும் கொள்ளப்படும்.)
வ சுப மாணிக்கம் உரை: கற்பவன் மறந்தாலும் படித்துக் கொள்ளலாம்; மானிட ஒழுக்கம் குறைந்தாலோ கெடுவான்.
பொருள்கோள் வரிஅமைப்பு:
மறப்பினும் ஒத்துக் கொளல்ஆகும் பார்ப்பான் பிறப்பு ஒழுக்கம் குன்றக் கெடும்.
பதவுரை: மறப்பினும்-மறந்து விட்டாலும்; ஓத்து-ஓதுதல், கற்றல், வாசித்தல்; சொல்லுதல், வேதம்; கொளல்ஆகும்-பெற்றுக் கொள்ள முடியும்; பார்ப்பான்-நூல் ஆய்வான்; பிறப்பு-மனிதப்பிறவி, மனித வாழ்க்கை; ஒழுக்கம்-நன்னடத்தை; குன்ற-தவற; கெடும்-அழியும்.
மறப்பினும் ஒத்துக் கொளல்ஆகும்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பிராமணன் வேதத்தினை ஓதி மறந்தானாயினும் பின்னும் ஓதிக் கொள்ளலாம்:
பரிதி: வேதம் ஓதி மறந்தாலும் பின்பு சந்தத்தை விட்டு ஓதிக்கொள்ளலாம்; [சந்தம்-சந்தஸ் என்னும் வேதஇசை]
காலிங்கர்: தனது குலமரபுக்கு முதற்காரணமாகிய தான் ஓதிய வேதத்தை மறந்தானாயினும் பின்னும் அஃது ஓதிக்கொளலாயிருக்கும்;
பரிமேலழகர்: கற்ற வேதத்தினை மறந்தானாயினும் அவ் வருணம் கெடாமையின் பின்னும் அஃது ஓதிக்கொள்ளலாம்;
பரிமேலழகர் குறிப்புரை: மறந்தவழி இழிகுலத்தனாம் ஆகலின், மறக்கலாகாது என்னும் கருத்தான், 'மறப்பினும்' என்றார்.
'வேதத்தினை ஓதி மறந்தானாயினும் பின்னும் ஓதிக் கொள்ளலாம்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'பார்ப்பான் மறந்தாலும் வேதத்தை மீண்டும் ஓதிப் பெறலாம்', 'நூலாய்பவன் தான் கற்ற கல்வியை மறந்து போனாலும் திரும்பவும் கற்றுக் கொள்ளலாம்', 'நூல்கற்பான் கற்றதை மறந்து விட்டாலும், மீண்டுங் கற்றுக் கொள்ளுதல் கூடும். (அதனால் இழுக்கொன்றும் இல்லை.)', 'நூலை ஆராய்கின்றவன் தாம் கற்ற நூலை மறந்தாலும் மீண்டும் கற்றுக் கொள்ளலாம்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.
மறந்து விட்டாலும், மீண்டுங் கற்றுக் கொள்ளுதல் கூடும் என்பது இப்பகுதியின் பொருள்.
பார்ப்பான் பிறப்பு ஒழுக்கம் குன்றக் கெடும்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஒழுக்கங் குறையுமாயின் குலங்கெடும்.
மணக்குடவர் குறிப்புரை: இஃது ஒழுக்கம் கல்வியிலும் வலிதானவாறு கூறிற்று.
பரிதி: ஒழுக்கம் கெட்டால் பிராயச்சித்தம் பண்ணினாலும் போகாது; செய்த தோஷம் அனுபவிக்க வேண்டும் என்றவாறு. [பிராயச்சித்தம் - பாவக்கழிவு; தோஷம் - குறை அல்லது பாவம்]
காலிங்கர்: மற்று அந்தணனது குலப்பண்பு தனது ஆசாரம் குறைபடவே கெடும் என்றவாறு.
பரிமேலழகர்: அந்தணது உயர்ந்த வருணம் தன் ஒழுக்கம் குன்றக் கெடும்.
பரிமேலழகர்: சிறப்புடை வருணத்திற்கு மொழிந்தமையின், இஃது ஏனைய வருணங்கட்கும் கொள்ளப்படும்.
'பிராமணன் ஒழுக்கங் குறையுமாயின் குலங்கெடும்' என்று மணக்குடவரும் 'ஒழுக்கம் கெட்டால் பாவக்கழிவு இல்லை' என்று பரிதியும் 'அந்தணது குலப்பண்பு ஒழுக்கம் குறைவுபடவே கெடும்' என்று காலிங்கரும் 'ஒழுக்கம் குன்ற அந்தணது வருணம் கெடும்' என்று பரிமேலழகரும் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'ஆனால் அவன் குடிப்பிறப்பு ஒழுக்கம் குறையக் கெட்டுவிடும்', 'ஆனால் ஒழுக்கம் குறைதலால், சிறந்த அவன் குடிப்பிறப்பு அழிந்து போகும்', 'அவன் ஒழுக்கத்திற் குறைவுபட்டானாயின் அவனது குடியின் சிறப்பு அழிந்து படும்', 'ஆனால் மக்கட் பிறப்புக்குரிய நல்லொழுக்கம் நீங்குமேல் அவன் அழிவான்' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.
ஒழுக்கம் தவறினால் பார்ப்பான் பிறப்பு கெட்டுவிடும் என்பது இப்பகுதியின் பொருள்.
நிறையுரை: கற்றதை மறந்து விட்டாலும், மீண்டுங் கற்றுக் கொள்ளுதல் கூடும்; ஒழுக்கம் தவறினால் பார்ப்பான் பிறப்பு கெட்டுவிடும் என்பது பாடலின் பொருள்.
இங்கு சொல்லப்பட்ட பார்ப்பான் யார்?
மறந்தும் ஒழுக்கம் தவறக்கூடாது. ஒழுக்கம் குன்றினால் மனித வாழ்வே சீர்மை கெட்டுப்போய்விடும்.
தான் கற்ற நூலை மறந்தாலும் நூல்ஆராய்கின்றவன் மீண்டும் கற்றுக் கொள்ளலாம். ஆனால் நல்லொழுக்கம் நீங்குமேல் அவன் பிறவியே பொருளற்றதாகிவிடுகிறது.
ஓத்து என்ற சொல் ஆரியர்களின் வேதத்தைக் குறிப்பது என்று பல உரையாளர்கள் கூறினர். தொன்றுதொட்டு ஒருவர்க்கு ஒருவரால் ஓதப்பட்டு வருவதாலும் ஓதி ஓதி உணரும் காரணத்தாலும் வேதத்திற்கு ஒத்து என்னும் பெயர் வழங்கப்படுகின்றது என்பர். பார்ப்பான் என்ற ஒருவகை இனத்தார்க்கு வேதம் ஓதுதல் மிக இன்றியமையாதது; வேதம் ஓதுதலை தமக்கே உரியதென்று அவர்கள் சொல்வர். அது அவர்களுக்கு என்று அவர்களாகவே விதித்துக்கொண்ட அறுவகை தொழில்களில் முதன்மையான ஒன்று (மற்றவை ஓதுவித்தல், வேட்டல், வேட்டுவித்தல், ஈதல், ஏற்றல் ஆகியன). அதனால்தான் அவர்கள் வேதியர், மறையவர் எனப் பெயர் கொண்டனர்.
வேதம் ஓதுவதைக் கைவிட்ட பார்ப்பனர்களைச் சிலப்பதிகாரக் காட்சி ஒன்று காட்டுகிறது. கண்ணகியும் கோவலனும் மதுரையை நோக்கிச் செல்லும்போது, மறைநூல்களை ஓதுவதைக் கைவிட்டு வரிப்பாடல்களைப் பாடுவதை மேற்கொண்ட அந்தணர் வாழும் ஊர் ஒன்றைக் கண்டனர் எனக் கூறப்படுகிறது.
வரிநவில் கொள்கை மறைநூல் வழுக்கத்துப்
புரிநூன் மார்பர் உறைபதிச் சேர்ந்து (சிலப்பதிகாரம் புறஞ்சேரியிறுத்த காதை 38-39: பொருள்: வரிப் பாட்டைப் பயிலும் கொள்கையோடு பொருந்தி வேதநூற் கொள்கையினின்றும் வழுவுதலையுடைய முப்புரிநூல் அணிந்த மார்பினையுடை யோர் வதியும் பதியைச் சேர்ந்து (வரி - காமம் கண்ணிய இசைப் பாட்டு)). அக்கால மக்கள் வரிப்பாடல்களையே பெரிதும் விரும்பியதனால் பொருள் வருவாய் கருதி அவற்றைப் பாடினர் போலும் (காமாட்சி சீனிவாசன்).
பார்ப்பானை எடுத்துக்காட்டாக்கி 'பார்ப்பனர் ஒருவர் தாம் கற்றுக்கொண்ட கல்வியை மறந்தாலும் அதை அவர் மீண்டும் கற்றுக்கொண்டுவிடலாம் ஆனால் அவருக்கென்று விதிக்கப்பட்ட ஒழுக்கநெறிகளை மறந்தால், அவருடைய நிலையிலிருந்து தாழ்ந்த நிலைக்குப்போவர்' என்ற கருத்தை சொல்கிறது என்று ஒருசாரார் இக்குறட்பொருளை விளக்குவர். இன்னும் சிலர் பார்ப்பனராவார் வேதம் ஓதுதல், ஓதுவித்தல் என்ற தொழிலையே மேற்கொள்ள வேண்டும். பார்ப்பனக்குரிய பிறப்பொழுக்கம் குன்றியவர்களை பார்ப்பனர் என்று மதிக்கக் கூடாது. பார்ப்பனக்குரியன அல்லாத மற்றத் தொழில்கள் செய்வாராயின் அந்தந்த இனத்திலேயே அவர்களைச் சேர்க்க வேண்டும் என்பதாகக் கூறுவர்.
மற்றொரு சாரார், இங்கு சொல்லப்பட்ட ஓத்து என்ற சொல் வேதத்தைக் குறிக்காது என்றும் அச்சொல்லுக்கு கற்று என்ற நேர்பொருளே கொள்ளவேண்டும் என்பர். 'ஓத்து மறப்பினும்' என்பதற்கு படித்ததை யெல்லாம் மறந்து போனாலும் என்றும். தினந்தினம் தவறாமல் ஓதவேண்டிய நேரங்களில் ஓத மறந்து விட்டாலும் என்றும் இவர்கள் பொருளுரைப்பர்.
பார்ப்பான் என்ற சொல்லுக்கு நூலை ஆராய்பவன் என்றும் ஒரு பொருள் உண்டு. அப்பொருளிலேயே அச்சொல் இப்பாடலில் ஆளப்பட்டது என்பவர்கள் ஓத்து என்பதற்கு கற்று என்றும் பார்ப்பான் என்பதற்கு நூலை ஆராய்பவன் என்று பொருள் கொண்டு நூலை ஆராய்ந்து பார்ப்பான் மறப்பினும் மீட்டும் கற்றுக் கொள்ளலாம்; ஆனால் 'பார்ப்பானது பிறப்பு, ஒழுக்கம் குன்றக் கெடும்' என விளக்கம் செய்வர். ஒழுக்கம் குன்றின் அவனது பிறப்பு -மனிதப் பிறப்பே கெடும் அதாவது வாழ்க்கையே கெடும் என்று இவர்கள் பொருள் உரைப்பர்.
இரா சாரங்கபாணி "வள்ளுவனார் பார்ப்பான் வேதம் ஓதுதலை மறக்கலாகாது என்னும் கருத்துக்குச் சிறப்பளிக்கவில்லை. அதனை மறந்தாலும் மீண்டும் கற்கலாம்; ஆனால் அதனினும் ஒழுக்கமே சிறப்புடையது; அது கெட்டால் மக்கட்பிறப்பே கெடும் என ஒழுக்கத்தின் விழுப்பத்தை இக்குறளில் வலியுறுத்திக் காட்டுவர். வேதம் ஓதுதலினும் ஒழுக்க நெறி நிற்றல் விழுமிது என்பதனை வலியுறுத்துதலால் ஒருவகை இனத்தாரின் கொள்கையை மறுத்துத் தமிழர்க்குரிய ஒழுக்க நெறியை நாட்டியது தெரிகிறது. ‘நல்லா றெரினும் கொளல் தீது’ என்ற குறளும் ஆரியக் கொள்கையைக் குறிப்பான் மறுத்தல் காணலாம். ஒவ்வாத பிறர்தம் கொள்கைகளை மறுத்தல் வள்ளுவர் இயல்பு என்பதனை ‘மழித்தலும் நீட்டலும் வேண்டா’ (280) என்னும் குறளானும் அறியலாம். ‘பார்ப்பான் பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்’ என்பதற்குப் பார்ப்பானது பிறப்புக்குரிய ஒழுக்கம் என வருணாசிரம தன்ம முறையில் பொருள் கொள்ளாமல் பார்ப்பான் பிறப்பு மக்கட்குரிய ஒழுக்கம் குன்றக் கெடும் எனக் கொள்வதே குறள் நெறிக்கு இயல்பாகும்" என்று இக்குறள் பற்றிக் கருத்துரைப்பார். இவ்விளக்கம் சிறப்பாக உள்ளது.
மணக்குடவர் தனது சிறப்புரையில் 'இஃது ஒழுக்கம் கல்வியிலும் வலிதானவாறு கூறிற்று' என்கிறார். இதன் பொருள் 'ஓதிக் கற்கின்ற கல்வியைக் காட்டிலும், ஒழுக்கமே சாலச் சிறந்தது' என்பது. இதுவே இக்குறள் கூறும் செய்தி. ஓதியதை யாரும் மறக்கவே கூடாது; மறந்தால் அதுவும் ஓர் ஒழுக்கக் குறைவாம் என்பதையும் இப்பாடல் உணர்த்துவதாக உள்ளது.
இங்கு சொல்லப்பட்டுள்ள பார்ப்பான் யார்?
வள்ளுவர் இந்த ஒரு குறளில் மட்டும்தான் பார்ப்பான் என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளார்.
நச்சினார்க்கினியர் கலித்தொகை உரையில் 'வேதாந்தத்தையே பொருள் என்று மேற்கொண்டு பார்ப்பார்' என்று சொல்விளக்கம் கூறுகிறார்.
'பார்ப்பார் என்பது ஆரியப்பார்ப்பனரையும் குறித்தல் இயல்பானது' என்பார் இரா சாரங்கபாணி.
'பார்ப்பான்: பார்த்தான், பார்க்கிறான், பார்ப்பான் எனப் பார்த்தல் தொழிலின், கால அடைவு வழி வந்த சொல்லே பார்ப்பான் என்னும் சொல். அது இந்நாள் கூறுவதுபோல் ஒரு குலப்பெயரன்று; நூல் கற்பார்க்கு வாய்ந்த பெயர் 'ஓதுவார்' என்பது போலப் பொதுமை சுட்டும் பெயரே; 'பொச்சாப்புப் பார்ப்பார் (285) என்பதில் வந்துள்ள 'பார்ப்பார்' என்ன பொருளைத் தருமோ, அதே பொருளையே 'பார்ப்பான்' என்பதும் (134) தரும். நூல் (பொத்தகம்) படிப்பவன், கணியம் பார்ப்பவன், ஏடு பார்ப்பவன், தொடுகுறி பார்ப்பவன் என்பன போல ஆசிரியத் தொழில் பார்ப்பவனைக் குறித்தது' என்பது இளங்குமரன் தரும் விளக்கம்.
ரா பி சேதுப்பிள்ளை 'இக்குறளில் அமைந்திருக்கின்ற பார்ப்பான் என்னும் சொல்லிற்கு வேதியன் என்று உரையாசிரியர் பொருள் கொண்டுள்ளளர். ஆனால் வள்ளுவர் காலத்தில் அந்தணன், பார்ப்பான் என்ற சொற்களெல்லாம், சாதிப் பெயரை உணர்த்தாமல், காரணப் பெயர்களாகவே விளங்கின என்பது மொழிநூல் ஆராய்ச்சியாளர்கள் கருத்து. அழகிய செந்தண்மை பூண்டு ஒழுகிய அறவோன் அந்தணன் என்று அழைக்கப்பட்டாற்போல, நூல்களைப் பார்த்து பரிசீலனை செய்பவர் 'பார்ப்பார்' என்று பெயர் பெற்றார். பிற்காலத்தில் இவ்விரு சொற்களும் ஒரு சாதியைக் குறிக்கும் பெயர்களாய் அமைந்தன. இவ்வுண்மையை மனத்தில் கொண்டு மேற்கூறிய குறளின் பொருளை ஆராய்தல் இன்றியமையாததாகும்' எனக் குறித்துள்ளார்.
'பார்ப்பான்' என்ற சொல்லுக்குக் கற்பவன் என்று வ சுப மாணிக்கமும், நூல்கற்பான் என்று கா சுப்பிரமணியம் பிள்ளையும் நூலை ஆராய்கின்றவன் என்று சி இலக்குவனாரும் நூல்களை ஆராய்ந்து பார்ப்பவன் என்று குழந்தையும் தலைமை வேளாண் மரபுவழி நின்று தமிழ் மந்திரம் ஓதுபவர் எனக் கா அப்பாத்துரையும் பொருள் உரைத்தனர்.
ஆரிய பிராமணர் தம்மைப் பார்ப்பான் என அழைக்கப்படுவதை விரும்புவதில்லை; அதை இழிவு என வெறுக்கின்றனர் என்ற பார்வையும் உள்ளது.
இங்குள்ள 'பார்ப்பான்' என்ற சொல்லுக்கு நூலை ஆராய்கின்றவன் என்பது பொருள்.
கற்றதை மறந்து விட்டாலும், மீண்டுங் கற்றுக் கொள்ளுதல் கூடும்; ஒழுக்கம் தவறினால் கற்பவன் வாழ்வு கெட்டுவிடும் என்பது இக்குறட்கருத்து.
கற்றலினும் ஒழுக்கமுடைமை மேம்பாடானது.
பொழிப்பு -கற்றதை மறந்தாலும் மீண்டும் படித்துக் கொள்ளலாம்; பார்ப்பான் ஒழுக்கம் தவறினால் பிறப்பு கெட்டுவிடும்.



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

ஆபயன் குன்று மறுதொழிலோர் நூன்மறப்பர்
காவலன் காவா னெனின்.
காவலன் காவான் எனின் - காத்தற்குரிய அரசன் குடிகளையும் அவர்கட்குப் பயன்படும் உயிரிகளையும் காவானாயின் ; ஆபயன் குன்றும் - அவன் நாட்டு ஆக்களும் பால் குன்றும் ; அறு தொழிலோர் நூன்மறப்பர் - அறுவகைத் தொழில் செய்வோரும் தத்தமக்குரிய நூல் கற்பதை அல்லது பார்ப்பதை விட்டுவிடுவர்.
முந்தின குறளில் கொடுங்கோலரசன் நாட்டில் மழைபெய்யாமை கூறப்பட்டது.
"விசும்பிற் றுளிவீழி னல்லான்மற் றாங்கே
பசும்புற் றலைகாண் பரிது."(குறள் . 19)
ஆதலால் மேய்ச்சற் புல்லின்றி ஆக்களும் பால்தரா . அதனால் தொடக்கந் தொட்டுப் பால் , தயிர் , மோர் , வெண்ணெய் , நெய் என்னும் ஐவகையில் மாந்தரெல்லார்க்கும் பயன்பட்டுவரும் இன்றியமையாத இயற்கையுணவு இல்லாமற்போம் . குடிப்பாகவும் உணவாகவும் பயன்படும் பாலும் , உடற்சூட்டைத் தணிக்கும் மோரும் , மூளைவளர்ச்சிக் கேற்ற நெய்யும் கல்வி கற்போருக்கு மிகத் தேவையானவை . கல்வி , நூற்கல்வியும் தொழிற்கல்வியும் என இருதிறப்படும் . நூற்கல்வியும் பல தொழிலாகவும் தொழிற்கல்வியும் பல நூற்றுறையாகவு மிருத்தலால் , இருவகைக் கல்வியையும் அறுவகைத் தொழிலாக வகுத்தனர் முன்னோர்.
"உழவு தொழிலே வரைவு வாணிகம்
விச்சை சிற்பம் என்றித் திறத்தறு
தொழில்கற்ப நடையது கரும பூமி."
என்பது திவாகரம் . உழவு என்பது நெசவொழிந்த பதினெண்கைத்தொழிலையும் தன்னுள் அடக்கும் . தொழில் என்று விதந்தது நெசவை . அது பிற்காலத்தில் உழவிற்குத் துணையான பதினெண் பக்கத்தொழில்களுள் ஒன்றாயிற்று.
"செய்யுந் தொழிலெல்லாஞ் சீர்தூக்கிப் பார்க்கு ங்கால்
நெய்யுந் தொழிற்கு நிகரில்லை" - மெய்யது போல்
வள்ளுவன் வண்டமிழன் மானங்காத் துப்பெருமை
கொள்ளவே செய்தான் குறள்.
வரைவு ஓவியம், விச்சை கல்வி, விழி-(விடி)- L, Vide-வித்(வ.) - வித்யா - வித்தை - விச்சை. சிற்பம் என்றது ஐவகைக் கொல்லத்தொழிலை.குயத்தொழில் ஐவகைக் கொல்லுள் ஒன்றாகிய கன்னத்தொழிலுள் அடங்கும் .கரும 'பூமி' என்றது பண்டை ஞாலத்துட் சிறந்த நாவந்லதீவை.தொழிற்குரிய மண்ணுலகத்தைக் கரும நிலம் என்றும் , தொய்யாவுலகமாகிய விண்ணுலகத்தை இன்பநிலம் என்றும் ,கொண்டனர்.அறுவகைத் தொழிற்கும் பண்டைத் தமிழகமாகிய குமரி நாட்டில் நூல்களிருந்தன.
'ஆபயன் குன்றும்' என்பது, மழையின்மையால் நிலத்தில் விளையும் உணவு மட்டுமின்றி ஆவிற்சுரக்கும் பாலுமிரா தென்பதாம். அதனால் அறுதொழிலும் நடைபெறா என்றவாறு.முற்றும்மை தொக்கது.
பரிமேலழகர் அறுதொழிலோரைப் பிராமணராகக் கொண்டு, அவ்வழுவை இருமடியாக்க அவரை அந்தணர் என்னுஞ் சொல்லாற் குறித்து, "அறுதொழிலாவன; ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல்,ஏற்றலென விவை.பசுக்கள் பால்குன்றியவழி அவியின்மையானும் ,அது கொடுத்தற்குரியார் மந்திரங் கற்பமென்பன ஓதாமையானும், வேள்வி நடவாதாம்; ஆகவே வானம் பெயலொல்லா தென்பதாயிற்று." என்று தம் ஆரியநஞ்சை வெளிப்படுத்தியுள்ளார். திருவள்ளுவர் தமிழறத்தையே இங்கு எடுத்துக் கூறுதலானும் ஆரிய முறையைக் கண்டித்தலானும், பிராமணர் வேதமோதுதலையும் வேள்விவளர்த்தலையும் பருவ மழைக்குக் கரணியமாகக் கூறினாரென்பது பச்சைச் பொய்யாம்.
"இயல்புளி...................தொக்கு".(545) என்றும்,
"முறைகோடி .................பெயல். (559) என்றும்,
செங்கோலாட்சியே பருவமழைக்குக் கரணியமென்று ஆசிரியர் தெளிவாகக் கூறியிருக்கவும் ,அதை மறுத்து ஆரிய வேதவேள்வியே அதற்குக் கரணியமென்று பரிமேலழகர் உரைக்க இடந்தந்தது தமிழர் அடிமைத்தனமேயன்றி வேறன்று.பிராமணரை அறுதொழிலோர் என்பது ஆரிய ஏற்பாடேயன்றித் தமிழர் கொள்கையன்று.பரிமேலழகர் கருத்தே வள்ளுவரதாயின்,
'இயல்புளி வேள்வி யியற்றுவா னாட்ட
பெயலும் விளையுளுந் தொக்கு.' என்றோ
' மறைகோடி வேள்வி மறப்பி னுறைகோடி
யொல்லாது வானம் பெயல்.' என்றோ பாடியிருப்பர்.
கொடுங்கோலால் மழை பெய்யாமையும் மழை பெய்யாமையால்
ஆபயன் குன்றலும் ஆபயன் குன்றலால் அறு தொழில் நடவாமையும் ஆக ஆசிரியராற் கூறப்பட்ட நிகழ்ச்சித் தொடரை, பரிமேலழகர் தலைகீழாக மாற்றி ஆபயன் குன்றலால் வேள்வி நடவாமையும் வேள்வி நடவாமையால் மழைபெய்யாமையும் என வலிந்து கூறியிருத்தல் காண்க.
பேரா.கா. சுப்பிரமணியப் பிள்ளையார் 'அறிதொழிலோர்' என்று பாடங் கொண்டு , "காவலன் காவான் எனின்- அரசன் (உயிர்களைக்) காப்பாற்றானாயின்; ஆபயன் குன்றும் -முயற்சி செய்வார்க்கு அம் முயற்சியாலுண்டாகும் இயல்பான பயன் இல்லாமற் போகும் ;அறிதொழிலோர் நூல் மறப்பர்-அறியுந் தொழிலையுடைய கலைஞர் தாங்கற்றற் குரிய நூல்களைக் கற்பதைத் கைவிடுவர்". என்று பொருள் கூறுவர்.



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின் (அதிகாரம்:கொடுங்கோன்மை குறள் எண்:560)
பொழிப்பு: நாட்டைக் காக்கும் தலைவன் முறைப்படி காக்காவிட்டால் அந்நாட்டில் பசுக்கள் பால் தருதலாகிய பயன் குன்றும்; அந்தணரும் அறநூல்களை மறப்பர்.
மணக்குடவர் உரை: பசுக்கள் பால் குறையும்: அந்தணர் வேதம் ஓதார்: அரசன் காவானாயின்.
இது காவாமையால் வருங் குற்றங் கூறிற்று.
பரிமேலழகர் உரை: காவலன் காவான் எனின் - காத்தற்குரிய அரசன் உயிர்களைக் காவானாயின், ஆ பயன் குன்றும் - அறன் இல்லாத அவன் நாட்டுப் பசுக்களும் பால் குன்றும், அறு தொழிலோர் நூல் மறப்பர் - அந்தணரும் நூல்களை மறந்துவிடுவர்.
(ஆ பயன்: ஆவாற்கொள்ளும் பயன். அறுதொழிலாவன: ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என இவை. பசுக்கள் பால் குன்றியவழி அவியின்மையானும், அது கொடுத்தற்குரியார் மந்திரம் கற்பம் என்பன ஓதாமையானும், வேள்வி நடவாதாம்; ஆகவே, வானம் பெயல் ஒல்லாது என்பதாயிற்று. இவை இரண்டு பாட்டானும் அவன் நாட்டின்கண் நிகழும் குற்றம் கூறப்பட்டது.)
கா சுப்பிரமணியம் பிள்ளை உரை: அரசன் குடிகளைக் காவானாயின், முயற்சி செய்வார்க்கு அம்முயற்சியால் இயற்கையில் உளதாம் பயன் இல்லாமற்போம். அறியுந் தொழிலையுடைய கலைஞர் நூலினைக் கற்பதைக் கைவிட்டு அதனை மறப்பர்.
பொருள்கோள் வரிஅமைப்பு:
ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர் காவலன் காவான் எனின்.
ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்:
பதவுரை: ஆ-பசு; பயன்-கொள்ளும் பயன்; குன்றும்-குறையும்; அறு-ஆறாகிய; தொழிலோர்-தொழிலை உடையவர்; நூல்-நூல்; மறப்பர்-நினைப்பொழிவர்.
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பசுக்கள் பால் குறையும்: அந்தணர் வேதம் ஓதார்;
பரிதி: ஆவின் பயன் குன்றும், வேத நீதியும் கெடும்;
காலிங்கர்: உலகத்து முந்நிரைப் பசுக்களானவை கறவையும் கன்றுமாகப் பயன்பட்டு வருகிற பயனும் குன்றும்; மற்று அதுவேயும் அன்றி அறுவகைத் தொழிலுக்கு உரியராகிய அந்தணரும் அருமறை ஓதலும் மறந்துவிடுவர்; [முந்நிரை பசுக்கள் - பசு, எருமை, ஆடு மூவிலாமான மந்தைகளில் ஒன்றாகிய பசுக்கள்]
பரிமேலழகர்: அறன் இல்லாத அவன் நாட்டுப் பசுக்களும் பால் குன்றும், அந்தணரும் நூல்களை மறந்துவிடுவர்.
பரிமேலழகர் குறிப்புரை: ஆ பயன்: ஆவாற்கொள்ளும் பயன். அறுதொழிலாவன: ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என இவை. பசுக்கள் பால் குன்றியவழி அவியின்மையானும், அது கொடுத்தற்குரியார் மந்திரம் கற்பம் என்பன ஓதாமையானும், வேள்வி நடவாதாம்; ஆகவே, வானம் பெயல் ஒல்லாது என்பதாயிற்று.
ஆபயன் என்றதற்கு அனைத்துப் பழம் ஆசிரியர்களும் 'பசுக்கள் பால் குறையும்' என்ற பொருளில் உரை கூறினர். அறுதொழிலோர் என்பதற்கு மணக்குடவர், காளிங்கர், பரிமேலழகர் மூவரும் 'அந்தணர்' எனப் பொருள் கண்டனர். பரிதி 'வேதநீதி' என்றார். நூல்மறப்பர் என்ற தொடர்க்கு மணக்குடவர் 'ஓதார்' என்றும் பரிதி 'கெடும்' என்றும் காலிங்கர் 'மறை ஓதல் மறந்துவிடுவர்' என்றும் பரிமேலழகர் 'நூல்களை மறந்துவிடுவர்' உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'பசு பயன் தாராது; எத்தொழில்களும் இரா', 'பசுக்கள் பால குறையும். அறுதொழில் புரியும் அந்தணர் மறைநூல் ஓத மறப்பர்', 'அந்த நாட்டில் பசு இனத்தால் அடையக்கூடிய பலன்களும் அறிவினால் நடக்கக்கூடிய கல்வி கற்றல், பொதுநல வேள்வி செய்தல், செய்வித்தல், கொடுப்பது, வாங்குவது ஆகிய ஆறு தொழில்களும் அவற்றிற்கான அறிவும் இல்லாது போகும்', 'பசுக்கள் பால் தருவதில் குறைவு ஏற்படும். அறுவகைப்பட்ட தொழிலோரும் தம் தொழிலைச் செய்ய இயலாமல் மறந்து விடுவர். (அறுதொழில்- உழவு, நெய்தல், அமைச்சு, அரசு, கற்பித்தல், வாணிபம்)', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.
ஆகும் பயன் இல்லாமற்போம்; எத்தொழில் புரிவோரும் அவரவர் தொழில் அறிவினை இழப்பர் என்பது இப்பகுதியின் பொருள்.
காவலன் காவான் எனின்:
பதவுரை: காவலன்-காப்பவன்; காவான்-காக்கமாட்டான்; எனின்-என்றால்.
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அரசன் காவானாயின்.
மணக்குடவர் குறிப்புரை: இது காவாமையால் வருங் குற்றங் கூறிற்று.
பரிதி: மன்னவன் செங்கோல் குன்றின்.
காலிங்கர்: என்னை எனின் வையம் காவலன் ஆகிய மன்னவன் செங்கோல் முறையால் பாதுகாவாது கொடுங்கோன்மை செய்து ஒழுகின் என்றவாறு.
பரிமேலழகர்: காத்தற்குரிய அரசன் உயிர்களைக் காவானாயின்.
பரிமேலழகர் குறிப்புரை: இவை இரண்டு பாட்டானும் அவன் நாட்டின்கண் நிகழும் குற்றம் கூறப்பட்டது.
'அரசன் உயிர்களைக் காவானாயின்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'காத்தற்கு உரிய அரசன் காவாவிடின்', 'நாட்டினை நன்முறையில் காவல் புரியக்கூடிய அரசன் அங்ஙனம் காவாவிடின்', 'காக்கவேண்டிய முறையில் அரசன் குடிகளையும் அறங்களையும் காக்கத் தவறினால்', 'காவலன் அறநெறியில் நாட்டைக் காக்கவில்லையேல்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
ஆட்சியாளர் செங்கோல் முறையால் நாட்டைக் காக்கவில்லையென்றால் என்பது இப்பகுதியின் பொருள்.
நிறையுரை:ஆட்சியாளர் குடிமக்களைக் காக்கத்தவறினால் அவர்களுக்கு உண்டாகும் பயன் குறைந்துபோகும். எத்தொழில் புரிவோரும் அவரவர் தொழில் அறிவினை இழப்பர்.
ஆட்சியாளர் செங்கோல் முறையால் நாட்டைக் காக்கவில்லையென்றால் ஆகும் பயன் இல்லாமற்போம்; அறுதொழிலோர் நூல் கற்பதைச் செய்யார் என்பது பாடலின் பொருள்.
'அறுதொழிலோர்' யார்?
ஆபயன் என்ற சொல்லுக்கு ஆகும் பயன் என்பது பொருள்.
குன்றும் என்ற சொல் குறையும் என்ற பொருள் தருவது.
நூல்மறப்பர் என்ற தொடர்க்கு நூலறிவின இழப்பர் என்று பொருள்.
காவலன் என்றது ஆட்சியாளன் குறித்தது.
காவான் எனின் என்ற தொடர் காக்காவிட்டால் எனப்பொருள்படும்.
முறையற்ற ஆட்சியில் குடிமக்கள் முயற்சிக்கான பயன் இராது. தொழில் புரிவோர் அவரவர் தொழில் அறிவினை இழப்பர்.
குடியுள் நாடு அடங்கும் என்பது வள்ளுவம். அக்குடிமக்களைக் காக்கவேண்டியது நாட்டுத்தலைவனது முதற்கடமையும் பொறுப்பும் ஆகும். அவர்களைக் காவாதிருந்தால் அந்நாட்டில் கொடுங்கோன்மை ஆட்சி நடைபெறுகிறது எனக் கருதப்படும். குடிகளுக்குப் பாதுகாப்பு இல்லாவிட்டால் அவர்கள் ஆர்வம் குன்றி ஊக்கம் இழப்பர். அவர்களது முயற்சிக்கு உண்டான பயன் கிடைக்காது. தொழில் செய்வோர் தம் திறன் முன்னேற்றம் கருதார். இது வள்ளுவர் இப்பாடல்வழி கூறவந்த கருத்தாகும்.
ஆனால் குறளில் உள்ள ஆபயன் குன்றும், அறுதொழிலோர் நூல்மறப்பர் என்ற இரண்டு தொடர்களால் வெவ்வேறு மாறுபட்ட கருத்துக்கள் தோன்றின.
ஆபயன் குன்றும்- இத்தொடர்க்கான விளக்கங்களை இரண்டு பெரும்பிரிவாகப் பகுக்கலாம். முதற்பிரிவினர் ஆபயன் என்பது ஆ+பயன் என விரிந்து பசுவினால் பெறும் பயன் எனப் பொருள்படும் என்பவர்கள். ஆபயன் குன்றும் என்றது பசுவினால் பெறும் பயன் குறையும் என்பதைக் குறிக்கும் என்பர் இவர்கள். கொடுங்கோலர் ஆட்சியில் பால் வளம் அதாவது பால், தயிர், வெண்ணெய், நெய் இவை குறையும். இதனால், அவற்றைப் பயன்படுத்தி அவியுணவு படைத்துச் செய்யப்படும் வேள்விகள் தடைப்படும். வேள்விகளால் என்ன பயன் விளையும்? தேவர்களை நோக்கி அக்கினியிற் செய்யப்படும் ஓமங்கள் சூரியனை அடைகின்றன; சூரியனிடமிருந்து மழை உண்டாகிறது; அதனால் தானியங்கள் விளைகின்றன; அவற்றால் உயிரினங்கள் வளர்கின்றன; இவை பயன்கள் என வேதம் சொல்கிறது; ஆபயன் குன்றலால் வேள்வி நடவாமையும் வேள்வி நடவாமையால் மழைபெய்யாமையும் உண்டாகும் என்பது இவர்கள் கருத்து. வேள்வி பற்றிச் சொல்லவிரும்பாதவர்கள் ஆட்சியாளன் அரசு முறை செய்யானாயின் முந்தைய குறளில் சொல்லப்பட்டதுபோல அவன் நாட்டில் வானம் பெயல் ஒல்லாது; மழை பெய்யாவிட்டால் பசும்புல் தலைகாட்டாது, ஆவினங்கள் மேய்தலின்றி பால் வற்றும் என்று வேறுவகையாக விளக்கம் கூறினர். ஆவினது பயன் என்பதற்குப் பசு கன்றீனாமை என்றபடியும் உரை உள்ளது. 'ஆனினம் பால் முதலிய உணவுப் பொருள் தந்து உலகத்தார்க்கு அச்சாணி அன்ன உழவுத் தொழிலுக்கு துணையாய் இருத்தலின் அதனைக் காத்தல் பேரறமாகக் கருதப்பட்டது. ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும்>. (புறநானூறு 9) ஆவிற்கு நீரென் றிரப்பினும்.. (1066) என்னும் பகுதிகளை ஒப்பு நோக்குக. அறக் கொடுமைக்கு ஆன்முலை அறுத்த அறனிலோரைச்... (புறம் 34:1) சுட்டுதலையும் நினைக. எனவே, அறுதொழிலோர்க்கு அந்தணர் என்றும் ஆபயன் என்பதற்கு ஆவின்பயன் என்றும் கோடலே குறட்போக்குக்கு இயைந்ததாகும்' என்பது இரா சாரங்கபாணியின் கருத்துரை.
'ஆபயன் குன்றும்' என்பதற்கு பசுக்கள் பாலாகிய பயனைத் தருதலிற் குறைவுபடும் என்பதே பெரும்பான்மையோர் கருத்தாகிறது.
இரண்டாவது பிரிவினர் ஆபயன் குன்றும் என்பதற்கு 'நாட்டுக்கு ஆகிக் கொண்டு வந்த பயன் ஆகாமலே அளவிற் குன்றிவிடும்' என்றும் 'ஆனபயன், ஆகின்ற பயன், ஆகும் பயன் என முக்காலத்துக்கும் விரியும்' என்றும் 'அரசனுக்கு ஆகும் பல வருவாய்கள் குறையும்' என்றும் உரை தருவர்.
கா சுப்பிரமணியம் பிள்ளை 'முயற்சி செய்வார்க்கு அம்முயற்சியால் இயற்கையில் உளதாம் பயன் இல்லாமற்போம்' என உரை கூறுவார்.
அறுதொழிலோர் நூல்மறப்பர்-இத்தொடர்க்கும் வேறுபட்ட பல விளக்கங்கள் உள.
அறுதொழிலோர் என்ற சொல்லுக்கு அந்தணர் என்று தொல்லாசிரியர்கள் அனைவரும் மற்றும் பிற்காலத்தவர்களுள் பலரும் பொருள் கூறினர். இதற்கு..அறு தொழில் அந்தணர் அறம் புரிந்து எடுத்த தீயொடு விளங்கும் நாடன்... என்ற புறநானூற்றுச் செய்யுளையும் (397:20) ஓதல், வேட்டல், அவை பிறர்ச் செய்தல், ஈதல், ஏற்றல், என்று ஆறு புரிந்து ஒழுகும் அறம் புரி அந்தணர்... என்ற பதிற்றுப்பத்துப் பாடலையும் (24) சான்றாகக் காட்டுவர். கற்பதும், கற்பிப்பதும், வேள்விகளைச் செய்வதும், வேள்விகளைச் செய்வித்தலும், ஈதலும், இரத்தலும் என்ற ஆறு தொழில்கள் அவர்க்குரியதெனக் கருதப்பட்டன என்பர். நூல்மறப்பர் என்றதற்குக் கொடுங்கோல் ஆட்சியில் அந்தணர் மறைகள் ஓதலை மறப்பர் எனவும் அவர்கள் தம் நூலை மறப்பின் அது சமுதாயத்திற்குத் தீங்காகும் அதனால் சமுதாயம் ஒரு நற்பயனை இழக்கின்றது எனவும் விளக்கம் தருவர். மறப்பர் என்ற சொல் நோக்கி மறப்பினும் ஒத்துக் கொளல்ஆகும் பார்ப்பான் பிறப்பு ஒழுக்கம் குன்றக் கெடும் (ஒழுக்கமுடைமை 134) என்ற குறளை ஒப்புநோக்கச் சொல்வர்.
அறுதொழிலோர் என்போர் அந்தணர் அல்லர் என்று சொல்பவர்கள் அறுதொழிலோர் என்றதற்கு 'முதன்மையான தொழிலுடையோர்' எனவும், 'இன்றியமையாத சிறந்த தொழிலென அறுதி செய்யப்பட்ட தொழில்களாவன: உழவு, வணிகம், நெசவு, தச்சு, கொல் முதலியன' எனவும் மற்றும் வேறுவேறு தொழில்கள் கொண்ட தொகுப்புகளுடன் உரைகள் வகுக்கப்பெற்றன. நூல்மறப்பர் என்றதற்கு இவர்கள் 'தம் கொள்கையை விடுவர்' எனவும் 'தத்தம் கடமைகள் முறையாக செய்யமாட்டார்' எனவும் 'மறத்தல் என்பது முயன்று செய்யாமையையும் நூல் என்பது அத்தொழில்களின் நுட்ப அறிவையும் உணர்த்திற்று' எனவும் 'தம் தொழில் முறையை மறந்து விடுவர்' எனவும் 'தம் தொழிலைச் செய்ய இயலாமல் மறந்து விடுவர்' எனவும் 'தம் தொழிலுக்குரிய அறிவை மறந்து விடுவர்' எனவும் 'தத்தமக்குரிய நூல் கற்பதை அல்லது பார்ப்பதை விட்டுவிடுவர்' எனவும் பொருள் கூறினர்.
கா சுப்பிரமணியம் பிள்ளை அறிதொழிலோர் எனப்பாடங்கொண்டு 'அறியுந் தொழிலையுடைய கலைஞர் நூலினைக் கற்பதைக் கைவிட்டு அதனை மறப்பர்' என முற்றிலும் மாறுபாடான பொருள் கூறுவார்.
ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும்... (புறநானூறு 9 பொருள்: பசுக்களும், பசுவின் இயல்பை ஒத்த அந்தணரும்...) என்ற சங்கச் செய்யுளை மேற்கோள் காட்டி இக்குறள் முறைதவறிய ஆட்சியில் ஆவும் அந்தணரும் தம் இயல்பு குன்றி உலகம் துன்புறும் என்பதைச் சொல்கிறது என்றனர்.
ஆனால் கொடுங்கோல் அரசின் கீழ உள்ள அனைவருக்கும் நேரும் தீங்குகளைக் கூறாது அந்தணர்க்குண்டானவை மட்டும் கூறுதல் வள்ளுவர் எண்ணமாயிருக்க முடியாது.
இப்பாடலில் அறிதொழிலோர் என்போர் அந்தணர் என்றோ அவர்தம் தொழில்கள் இவைஇவை என்றோ எவையும் பட்டியலிடப்பட்டுச் சொல்லப்படவில்லை. எனவே இக்குறளுக்குப் பொதுமையில் பொருள் காண்பதே பொருத்தம். நாட்டை ஆள்பவன் அனைத்து மக்களையும் காக்க வேண்டுமேயன்றி, அந்த்ணர்களை மட்டும் காப்பாற்ற அரசாட்சி செய்யமாட்டான்.
முறையற்ற ஆட்சியில் இன்றியமையாத தொழில்கள் ஆறைச் செய்பவர்கள் தத்தம் கடமையை முறையாகச் செய்ய முடியாதவராகி, தமது தொழில் குறித்த நூல்களை நாளடைவில் மறப்பர் என்பது பொருளாகலாம்.
ஒருங்கிணைத்து நோக்கும்போது இக்குறளுக்கு ஆள்வோர் முறையாக ஆட்சி செய்து மக்களைக் காப்பாற்றாவிட்டால், செய்தொழில்களால் ஆகின்ற பயன்கள் குன்றும்; எத்தொழில் புரிவோரும் அவரவர் தொழில் அறிவினை இழப்பர் எனப் பொருள் கொள்வது சிறக்கும்.
'அறுதொழிலோர்' யார்?
'அறுதொழிலோர்' என்ற சொல்லுக்கு அந்தணர், அறுவகைத் தொழிலுக்கு உரியராகிய அந்தணர், ஆறு தொழிலுக்குரிய அந்தணர்கள், எத்தொழிலாரும், அறுதொழில் புரியும் அந்தணர், ஆறு தொழில்களைச் செய்ய வேண்டியவர்கள், அறியுந் தொழிலையுடைய கலைஞர், அறுவகைப்பட்ட தொழிலோர், முதன்மையான தொழிலுடையோர், அறுவகைத் தொழில் செய்வோர், அறத்தை வரையறுக்கும் நீதி நூலார், பணி செய்வதே கடமை என்று கருதும் பெரியோர் என்று உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.
ஆறு தொழில்களாக பல தொகுப்புகளை உரையாளர்கள் கண்டு சொல்லியிருக்கின்றனர். வரிசை மாற்றியும் உறுப்புக்கள் மாற்றியும் கூறப்பெற்ற தொகுதிகள்:
உழவு, நெய்தல், அமைச்சு, அரசு, கற்பித்தல், வாணிபம்
கல்வி கற்றல், பிறருக்குக் கல்வி கற்பித்தல், பொதுநலத்துக்கான பெரு முயற்சிகளைச் செய்தல், அந்த முயற்சிகளுக்கு உதவி செய்தல், அந்த நன் முயற்சிகளுக்காக நன்கொடை கொடுத்தல், அவற்றிற்காக நன்கொடை வசூலித்தல் போன்ற அறிவு முயற்சிகளும் அன்பு முயற்சிகளும்.
இன்றியமையாதன என்று அறுதி செய்யப்பட்ட தொழில்கள்; உழவு, வாணிகம், நெசவு, தச்சு, கொல் முதலியன
ஆறு அரசாங்க உறுப்பினர்
உழவர், நெசவாளர், தச்சர், கொல்லர், வணிகர், படைவீரர்
உழவு, கைத்தொழில், வணிகம், கைவினைகள், வடிவமைத்தல், வித்தை
ஒவ்வொரு வருணத்தார்க்குமுரிய ஆறுஆறு தொழில்கள்: வேத மோதல், ஓதுவித்தல், யாகஞ் செய்தல், செய்வித்தல், ஈதல், ஏற்றல் என்பவை- அந்தணர்க்குரியன. ஓதல், யாகஞ் செய்தல், ஈதல், உலகோம்பல், படியியற்றல், பொருதல் என்பவை அரசர்க்குரியன. ஓதல், யாகஞ்செய்தல், பொருளீட்டல், ஈதல், பசுக்காத்தல் ஏருழல் என்பவை வைசியர்க்குரியன. ஏவல் செய்தல், பொருளீட்டல், உழுதல், பசுக் காத்தல், குயிலுவத் தொழில் செய்தல் (தோற்கருவிகளைக் கொட்டலும் துளைக்கருவிகளி ஊதலுமாம்), காருக வினைகளாக்கல் (பட்டு நூலையும் பருத்தி நூலையும் கொண்டு ஆடையாக்கலும் சுமத்தலும் உழுதலுமாம்) ஆகியவை சூத்திரர்க்குரியன.
திவார நிகண்டு உழவு, வாணிபம், தொழில் ஆகிய மூன்றும் உடலுழைப்புத் தொழிலகள் எனவும் வரைவு, சிற்பம், வித்தை ஆகிய மூன்றும் மூளை உழைப்புத் தொழில்கள் எனவும் ஆறு தொழில்களைக் குறிப்பிடும். ‘அறுதொழிலோர்’ என்பது அறுவைத் தொழிலாளரை- நெசவுத்தொழிலாளரை அதாவது ஆடை நெய்வோரைக் குறிக்கும் என்றும் உரை உள்ளது. 'எத்தொழிலும்' என உரைத்தார் வ சுப மாணிக்கம்.
அந்தணர்க்குரிய ஆறு தொழில்கள் என்று சொல்லப்பட்டனவற்றில் கற்பித்தல் என்பது சரி. ஆனால் ஓதல் (படித்தல்) என்பது எப்படித் தொழிலாகும்? வேள்வி செய்வது ஒரு தொழிலாகலாம், வேள்வி செய்யத் தூண்டுவது எப்படித் தொழிலாகும்? ஈதல் என்பது ஒரு அறம்; அது தொழிலாகாது.
ஆறுதொழில்கள் எவை என்று குறளில் எங்கும் சொல்லப்படவில்லை. எனவே அந்தணர்க்கான தொழில்களே அவை என்று அறுதியிட்டுக் கூறமுடியாது. ஆறுதொழில்கள் எனக் கருதத்தக்க வேறுபட்ட பலவகைப் பிரிவுகள் -சான்றுகளுடனோ ஊகங்களின் அடிப்படையிலோ- காணக்கிடக்கின்றன. எனவேதான் 'எத்தொழிலும்' எனக் கருத்துப் பொருளாக வ சுப மாணிக்கம் உரைத்தார் போலும். இதுவே இக்குறளுக்கான பொருத்தமான பொருள்.
ஆட்சியாளர் செங்கோல் முறையால் நாட்டைக் காக்கவில்லையென்றால் தொழில்களால் ஆகும் பயன் இல்லாமற்போம்; எத்தொழில் புரிவோரும் அவரவர் தொழில் அறிவினை இழப்பர் என்பது இக்குறட்கருத்து.
கொடுங்கோன்மை ஆட்சியில் முயற்சிக்கேற்ற பலனும் செய்யும் தொழில்திறனில் முன்னேற்றமும் இல்லாமற் போகும்.
பொழிப்பு-ஆட்சியாளர் குடிமக்களைக் காக்காவிடின் தொழில்களால் ஆகும் பயன் குறையும். அவரவர் தொழில் அறிவு மங்கும்.

 



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

 2. தமிழர் வாழ்க்கைக் குறிக்கோள் :

உலகில் இன்பத்தை நுகரவேண்டுமென்பதே பொதுவாக எல்லா மாந்தர்க்கும் இயல்பான நோக்கம். அவ்வின்பத்திற்குப் பொருள் இன்றியமையாதது. பொருள் சிறந்தபின்,
"தனக்கு மிஞ்சித்தானம்", "பாழாய்ப் போகிறது பசுவின் வாயிலே". என்னும் நெறிமுறைப்படி, தான் நுகர்ந்ததுபோக எஞ்சியதை உழைக்கவியலாதவரும் துறவியருமான பிறர்க்கு அளிப்பதும் இயல்பே. இதுவே அறமெனப்படுவது. இங்ஙனம் இன்பம், பொருள், அறம், என்னும் முக்குறிக்கோள் இயற்கையாகத் தோன்றின. அறத்தைச் சிறப்பாக நோக்காது இன்பத்தையே நோக்கும் இன்பநூல்களும் இலக்கண நூல்களும் இம்முப்பொருளையும் இம்முறையிலேயே
குறிக்கும்.
"இன்பமும் பொருளும் அறனு மென்றாங்கு
அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கின்
காமக் கூட்டங் காணுங் காலை" (கள. 1)
என்று தொல்காப்பியங் கூறுதல் காண்க.
தமிழர் புறநாகரிகத் துறைகளில் மட்டுமன்றி அகநாகரிகமான பண்பாட்டுத்துறையிலும் மறுமைக்குரிய சமயத்துறையிலும் தலைசிறந்திருந்ததினால், சமயநூலாரும் அறநூலாரும் அறத்திற்கே சிறப்புக்கொடுத்து அறம் பொருளின்பம் எனத்தலைமாற்றிக் கூறினர்.
"அந்நிலை மருங்கின் அறமுத லாகிய
மும்முதற் பொருட்கு முரிய வென்ப" (செய். 105)
என்று தொல்காப்பியமும்,
"அறனும் பொருளும் இன்பமு மூன்றும்
ஆற்றும் பெருமநின் செல்வம்"(28)
"சிறப்புடை மரபிற் பொருளு மின்பமும்
அறத்துவழிப் படூஉந் தோற்றம் போல" (31)
என்று புறநானூறுங் கூறுதல் காண்க. அறவழியிற் பொருளையீட்டி அதைக் கொண்டு அறவழியில் இன்பம் நுகர வேண்டுமென்பது கருத்து. இன்பம் என்பது முதற்கண் இவ்வுலக வின்பத்தையும் பின்பு அதனொடு விண்ணுலக வின்பத்தையும் அதன்பின் அவற்றொடு வீட்டுலக வின்பத்தையுங் குறித்தது. இது சமயத்துறை பற்றிய நாகரிக வளர்ச்சியைக் காட்டும். வீட்டின்பம் பலவகையில் ஏனையிரண்டினும் வேறுபட்டதாதலின், பின்னர் அறம் பொருளின்பம் வீடு எனப் பிரித்துக் கூறப்பட்டது. ஆயினும் வீடென்பது அறம் என்னும் வாயில் வகையிலும் காதலின்பம் என்னும் உவமை வகையி லுமன்றி வண்ணனை வகையிற் கூறப்பட வியலாதாதலின், நாற்பொருளும் நூலளவில் என்றும் முப்பாலாகவே இருக்கும். அதனாலேயே திருக்குறட்கும் முப்பால் என்று பெயர். நாற்பொருளும், மாந்தர்க்கு நன்மைசெய்தல் பற்றி உறுதிப் பொருள் என்றும், சிறப்புடைமை பற்றி மாண்பொருள் என்றும் கூறப்படும். கல்வியின் பயன் கடவுள் திருவடியடைதல் என்னுங் கருத்தெழுந்தபின், நாற்பயனே நூற்பயன் என்றாயிற்று.
"அறம்பொரு ளின்பம்வீ டடைதல் நூற்பயனே."
என்பது நன்னூற்பாயிரம்(10).
அறம், பொருள், இன்பம், வீடு, என்னும் நாற்சொல்லையும், முறையே தர்ம அர்த்த காம மோக்ஷ என மொழிபெயர்த்தனர் வட மொழியாளர். ஆயின், தமிழில் அறம் என்பது நல்வினையையும், வடமொழியில் தர்ம என்பது வருணாச்சிரம தருமம் என்னும் குலவொழுக்கத்தையுமே குறிக்கும்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard