Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 2.கற்றதனா லாய பயனென்கொல்


Guru

Status: Offline
Posts: 5711
Date:
2.கற்றதனா லாய பயனென்கொல்
Permalink  
 


 

 

கற்றதனாலாயபயனென்கொல்வாலறிவ
னற்றாடொழாஅரெனின்.

வால் அறிவன் நல்தாள் தொழார் எனின் - தூய அறிவையுடைய இறைவனின் நல்ல திருவடிகளைத் தொழாதவராயின்; கற்றதனால் ஆய பயன் என் - நூல்களைக் கற்றவர்க்கு அக்கல்வியால் உண்டான பயன் யாதாம்?

அஃறிணை யிருபாற் பொதுவான எவன் என்னும் வினாப்பெயர் 'என்' என்று தொக்கு இங்கு இன்மை குறித்தது. கொல் என்பது அசைநிலை. தூய அறிவாவது இயற்கையாகவும் முழுநிறைவாகவும் ஐயந்திரிபற்றும் இருப்பது. தமிழக மருந்துகள் பெரும்பாலும் தழையுந் தண்டு மாயிருத்தலின், பிறவிப்பிணிக்கு மருந்தாகும் குறிப்புப்பட இறைவன் திருவடிகளை நற்றாள் என்றார். 'தொழாஅர்' இசை நிறையளபெடை.

கல்வியின் சிறந்த பயன் கடவுளை வழிபட்டுப் பேரின்ப வீடு பெறுவதென்பதே பண்டையறிஞர் கொள்கை.

"ஆண்டவனுக்கு அஞ்சுவதே அறிவின் தொடக்கம்". என்றார் சாலொமோன் ஓதியார் (ஞானியார்.)

"எழுத்தறியத் தீரும் இழிதகைமை தீர்ந்தான்
மொழித்திறத்தின் முட்டறுப்பா னாகும் - மொழித்திறத்தின்
முட்டறுத்த நல்லோன் முதனூற் பொருளுணர்ந்து
கட்டறுத்து வீடு பெறும்."


என்பது பழஞ் செய்யுள்.

"கற்பக் கழிமடம் அஃகும் மடமஃகப்
புற்கந்தீர்ந் திவ்வுலகிற் கோளுணரும் - கோளுணர்ந்தால்
தத்துவ மான நெறிபடரும் அந்நெறியே
இப்பால் உலகத் திசைநிறீஇ யுப்பால்
உயர்ந்த வுலகம் புகும்."


என்பது நாண்மணிக்கடிகை. (27)

கடவுளை வணங்காவிடின் கல்வியாற் பயனில்லை என்பது இக்குறட் கருத்து.__________________


Guru

Status: Offline
Posts: 5711
Date:
Permalink  
 

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.

(அதிகாரம்:கடவுள் வாழ்த்து குறள் எண்:2)

பொழிப்பு (மு வரதராசன்): தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளைத் தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன?

மணக்குடவர் உரை: மேற்கூறிய வெழுத்தினா னாகிய சொற்க ளெல்லாங் கற்றதனானாகிய பயன் வேறுயாது? விளங்கின வறிவினை யுடையவன் திருவடியைத் தொழாராயின்.
சொல்லினானே பொருளறியப்படுமாதலான் அதனைக் கற்கவே மெய்யுணர்ந்து வீடுபெறலாகும். மீண்டும் வணக்கம் கூறியது எற்றுக்கென்றாற்கு, இஃது அதனாற் பயனிது வென்பதூஉம், வேறுவேறு பயனில்லையென்பதூஉம் கூறிற்று. `கற்பக் கழிமட மஃகும் (நான்மணிக்கடிகை 28) என்றாருமுளர்.

பரிமேலழகர் உரை: கற்றதனால் ஆய பயன் என் - எல்லா நூல்களையும் கற்றவர்க்கு அக்கல்வி அறிவான் ஆய பயன் யாது?; வால் அறிவன் நல் தாள் தொழாஅர் எனின் - மெய்யுணர்வினை உடையானது நல்ல தாள்களைத் தொழாராயின்?
எவன் என்னும் வினாப்பெயர் என் என்று ஆய், ஈண்டு இன்மை குறித்து நின்றது. 'கொல்' என்பது அசைநிலை. பிறவிப் பிணிக்கு மருந்து ஆகலின் 'நற்றாள்' என்றார். ஆகம அறிவிற்குப் பயன் அவன் தாளைத் தொழுது பிறவியறுத்தல் என்பது இதனான் கூறப்பட்டது.

நாமக்கல் கவிஞர் உரை: படிப்பதன் பயன் அறிவு பெறுதல். அப்படியானால் நம் அறிவுக்கெல்லாம் எட்டாத ஒரு பொருள் இருப்பதை உணர்ந்து அதைப் போற்றாவிட்டால் படிப்பினால் என்ன பயன்?

பொருள்கோள் வரிஅமைப்பு:
வால்அறிவன் நல்தாள் தொழாஅர் எனின் கற்றதனால் ஆய பயனென்கொல்?

பதவுரை: கற்றதனால்-கல்வி பெற்றதனால்; ஆய-ஆகிய; பயன்-நன்மை; என்கொல்-என்னவோ; வால்அறிவன்-தூய்மையாகிய அறிவுடையவன், முற்றறிவு உடையன்; நல்-நல்ல; தாள்-அடி; தொழாஅர்-வழிபடமாட்டார், வணங்கார்; எனின்-என்றால்.


கற்றதனால் ஆய பயனென்கொல்? :

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மேற்கூறிய வெழுத்தினா னாகிய சொற்க ளெல்லாங் கற்றதனானாகிய பயன் வேறியாது?
பரிப்பெருமாள்: மேற்கூறிய வெழுத்தினா னாகிய சொற்க ளெல்லாங் கற்றதனானாகிய பயன் வேறியாது?
பரிதி: சாத்திரம் கற்றும் அதனால் ஆகிய பயன் என்ன? [சாத்திரம்-கடவுள் வழிபாட்டை வற்புறுத்தும் நூல்]
காலிங்கர்: பலவகைப்பட்ட கலைகளையும் கற்றதனால் உள்ள பயன் யாது கொல்லோ?
பரிமேலழகர்: எல்லா நூல்களையும் கற்றவர்க்கு அக்கல்வி அறிவான் ஆய பயன் யாது?;
பரிமேலழகர் குறிப்புரை: எவன் என்னும் வினாப்பெயர் என் என்று ஆய், ஈண்டு இன்மை குறித்து நின்றது. 'கொல்' என்பது அசைநிலை.

'கல்வி பெற்றதனால் என்ன பயன்?' எனப் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்குப் பொருள் கண்டனர். மற்றவர்கள் பொதுவாக நூல்கள் கற்றதனால் என்று கூற, பரிதி 'சாத்திரம் கற்றதனால்' என்று சாத்திர நூல்கள் பற்றியதாக உரைக்கிறார். பரிமேலழகர் சிறப்புரையில் ஆகம அறிவு என்று குறிப்பிட்டதால் ஆகம நூலைக் கற்றதை அவர் குறிக்கிறார் எனலாம்.

இன்றைய ஆசிரியர்கள 'கற்றதன் பயன் என்ன?', 'அவர்க்கு கற்றதனால் ஆகும் பயன் யாது?', 'அவர்கள் படித்த படிப்பு என்ன படிப்பு', 'எல்லா நூல்களையும் கற்றதனால் உண்டான பயன் என்ன? ஒன்றுமில்லை' என்ற பொருளில் உரை தந்தனர்.

கல்வி பெற்றதனால் ஆகிய பயன் என்ன? என்பது இப்பகுதியின் பொருள்.

வால் அறிவன் நல் தாள் தொழாஅர் எனின்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: விளங்கின அறிவினை உடையவன் திருவடியைத் தொழாராயின்.
மணக்குடவர் குறிப்புரை: சொல்லினானே பொருளறியப்படுமாதலான் அதனைக் கற்கவே மெய்யுணர்ந்து வீடுபெறலாகும். மீண்டும் வணக்கம் கூறியது எற்றுக்கென்றாற்கு, இஃது அதனாற் பயனிது வென்பதூஉம், வேறுவேறு பயனில்லையென்பதூஉம் கூறிற்று. `கற்பக் கழிமட மஃகும் (நான்மணிக்கடிகை 28) என்றாருமுளர்.
பரிப்பெருமாள்: விளங்கின வறிவினை யுடையவன் திருவடியைத் தொழாராயின்.
பரிப்பெருமாள் குறிப்புரை: சொல்லினானே பொருளறியப்படுமாதலான் அதனைக் கற்கவே மெய்யுணர்ந்து வீடுபெறலாகும். மீண்டும் வணக்கம் கூறியது எற்றுக்கென்றாற், கற்றதனாலாய பயனிது வென்பதூஉம், வேறு கூறிற்று. `கற்பக் கழிமட மஃகும் (நான்மணிக்கடிகை 28) என்றாருமுளர்.
பரிதி: மேலறிவாளனான சிவன் ஸ்ரீபாதத்தை வணங்காராகில் என்றவாறு.
காலிங்கர்: மாசற்ற அறிஞனாகிய இறைவனது தூய அடியினை வணங்காராயின் என்றவாறு.
காலிங்கர் குறிப்புரை: வாலிமை என்பது வெண்மை; பெருமை என்றுமாம்.
பரிமேலழகர்: மெய்யுணர்வினை உடையானது நல்ல தாள்களைத் தொழாராயின்?
பரிமேலழகர் குறிப்புரை: பிறவிப் பிணிக்கு மருந்து ஆகலின் 'நற்றாள்' என்றார். ஆகம அறிவிற்குப் பயன் அவன் தாளைத் தொழுது பிறவியறுத்தல் என்பது இதனான் கூறப்பட்டது. [ஆகமம்-நூல்கள். ஆகமங்கள் சிறப்புவகையான் கடவுள் வழிபாட்டையே உணர்த்துவன]

'நற்றாள் தொழாஅர் எனின்; என்றதற்கு திருவடியை வணங்காவிட்டால் என்ற பொருளிலேயே பழம் ஆசிரியர்கள் அனைவரும் இப்பகுதிக்கு உரை கூறினர். வாலறிவன் என்ற சொல்லுக்கு மணக்குடவர்/பரிப்பெருமாள் விளங்கின அறிவினை உடையவன் என்றும் பரிமேலழகர் மெய்யுணர்வினை உடையான் என்றும் பொருள் கூறினர். பரிதி சமயக் கடவுளான சிவன் என்று இச்சொல்லுக்கு உரை தந்தார். காலிங்கர் மாசற்ற அறிஞனாகிய இறைவன் என்று பொருள் உரைத்தார்.

இன்றைய ஆசிரியர்கள் 'அறிஞனது நல்ல திருவடியை வணங்காவிட்டால்', 'தூய அறிவினை உடையவனின் நல்ல அடிகளை ஒருவர் நெடிது தொழாராயின்', 'நன்றாகப் படித்தவர்களாக இருந்தும் அறிவுக்கெல்லாம் அறிவாக இருக்கின்ற பகவானுக்கு வணக்கம் செலுத்த மறுக்கின்றவர்களும் இருக்கிறார்களே!', 'தூய்மையான அறிவினன் எனப்படும் கடவுளின் நல்ல அடிகளை வணங்காராயின்' என்ற பொருளில் உரை தந்தனர்.

தூய அறிவினை உடையவனின் திருவடியை வணங்காவிட்டால் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
தூய அறிவினை உடையவனின் திருவடியைத் தொழார்எனின் கல்வி பெற்றதனால் ஆகிய பயன் என்ன? என்பது பாடலின் பொருள்.
'தொழவேண்டும்' எனக் கற்றவரை நோக்கி ஏன் சொல்லப்பட்டது?

கல்வியறிவினால் உண்டான ஐயந்திரிபுகளாகிய கசடுகளைத் நீக்கித் தூய்மையாக்க வாலறிவனை நினை.

தூய்மையான அறிவினனான கடவுளின் நல்ல அடிகளை வணங்காராயின் என்ன கற்றிருந்தாலும் பயன் ஒன்றுமில்லை.
தமிழில் வாலறிவு என்று இங்கு குறிக்கப்பட்டது பிராகிருதச் சொல்லான "கேவல ஞானம்" என்பதன் தமிழாக்கம் எனவும். இச்சொல் "கடையிலா அறிவு", "வரம்பற்றஅறிவு", "முழுதுணர்", "வினையின் நீங்கி விளங்கிய அறிவு", "அலகிலா அறிவு", "முற்றறிவு", 'குற்றமற்ற அறிவு' எனப் பொருள்படும் எனவும் கூறுவர். அளப்பற்கரிய தூய அறிவினை உடையவன் வாலறிவன் ஆவன். அது கடவுளைத் தவிர வேறு யாராகவும் இருக்க முடியாது. வாலறிவன் என்று சொல்லப்பட்டதால் கடவுள் அறிவு வடிவினன் ஆகின்றான்.
கடவுளது உண்மையும் அவனது முதன்மையும் கூறியபின் (குறள் 1) அவனது சிறப்புகளை விளக்கத் தொடங்குகிறார் வள்ளுவர். இரண்டாமாவதான இப்பாடலில் (குறள் வைப்பு முறையில் உரையாசிரியர்கள் தம்முள் பலவேறுபட்டிருப்பினும், இக்குறளைப் பொறுத்தவரை பழம் ஆசிரியர்கள் அனைவரும் இரண்டாம் வைப்பாகவே இதனைக் கொள்கின்றனர்) அறிவுக்கு எப்பொழுதும் தலைமையிடம் தரும் அவர்க்கு முதலில் தோன்றுவது கடவுள் அறிவுவடிவானவன் என்பதுவே. எனவே. தூயமுழுமையான அறிவுடையவன் என்று இறைவனைக் காட்டுகிறார்.

நாம் மனித/இயற்கைப் பொருள் வடிவிலேதான் கடவுளைக் கற்பனை செய்து பார்த்துப் பழகியிருக்கிறோம். அவனை உயிர்க்கூட்டத்தின் தலைவனாக எண்ணி, நம்மைப் போல் தோற்றம் கொண்டவனாக உருவகம் செய்வது நம் எல்லோருக்கும் எளிதாக இருக்கிறது. எங்கும் நிறைந்த, பண்புகள் தெரியப்படாத கடவுளை இப்படித்தான் இருக்கிறார் என யாராலும் வரையவோ செதுக்கவோ முடியாது. கடவுள் அறிவுஉருவானவன் என்று சொன்னால் அவனை எப்படி மனக்கண்ணில் காண்பது? எனவே கடவுளைத் தாள் என்று இவ்வதிகாரத்துப் பாடல்களில் காட்சிப்படுத்துகிறார் வள்ளுவர்.
தாள்கள் என்றால் மனித வடிவம் தோன்றிடலாம் என்பதால் தாள் என்று ஒருமையில் கூறினார். தோற்றமும் தரவேண்டும். அதே நேரத்தில் இயற்கைப் பொருளாகவும் இருந்துவிடக் கூடாது. எனவே இறை என்பது ஒற்றைத் தாள் உருவாக, அடி/தாள் என இங்கும் அதிகாரத்து மற்ற இடங்களிலும் குறிப்பிடுகிறார் வள்ளுவர். தாள் என்பதற்கு 'நல்' என்ற அடை கொடுத்து நல்தாள் எனச் சொல்லி இந்நற்றாளைத் தொழச் சொல்கிறார். ஒற்றைத்தாள் தொழுதல் சமயப் பொதுமையுடையது அதாவது எந்தச் சமயச் சார்புடையதும் அல்ல என்பதைக் குறிக்கும். தாள்தொழல் பற்றித் தண்டபாணி தேசிகர் 'இவ்வதிகாரத்துள் 'அடி சேர்ந்தார்', 'தாள்தொழாஅரெனின்' எனப்பல இடங்களில் வருதலால் அதற்கு அருள் எனக் குணப்பொருள் காணாமல் கால் என்னும் உறுப்பு எனக் கொள்வோமாயின், ஏனைய முகம் முதலியனவும் உடன் எண்ணப்பட்டு ஏதாயினும் ஒரு சமயக் கடவுளைக் குறிப்பதாகப் பொதுமையின் நீங்கும் என்க' என்பார்.
'நற்றாள் தொழுதல்' என்பது கடவுளை ஒற்றைத் தாள் வடிவில் மனத்துள் நினைத்து அவனது அருளை வேண்டி நிற்றல் என்பதாம்.

'தொழாஅர் எனின்' என அளபெடுத்துச் சொல்லப்பட்டதால் தொழுதே ஆகவேண்டும் என்றாகிறது. அறிவுவடிவான இறைவனை எப்படித் தொழுவது? எங்கும் நிறைந்த கடவுளுக்கு நற்றாள் என்று தோற்றம் கூறப்பட்டதால், தாள் தொழல் என்பது இறைவனின் திருவடியை மனத்துக்குள் உறுதியாக வரித்துக் கொண்டு அவனது அருளை வேண்டுவது எனக் கொள்வர்.

கடவுளின்தாள் தொழாஅர் எனின் கற்றதனாலாகிய பயன் ஒன்றுமில்லை என்பது இக்குறள் தரும் கருத்து.
சென்ற நூற்றாண்டில் மிகவும் கொண்டாடப்பட்ட அறிவியல் அறிஞரான ஐன்ஸ்டைன் 'அறிவியல் தேடலில் ஆழ ஈடுபட்டுள்ள எவரும் உலக இயக்கத்தின் விதிகளுக்குள் மனிதனைவிட மேலான ஒரு பேராற்றல் உறைந்துள்ளது என்பதை உணரத் தொடங்குவர் (everyone who is seriously involved in the pursuit of science becomes convinced that a spirit is manifest in the laws of the Universe—a Spirit vastly superior to that of man.)' என மொழிந்தார். அறிவியல் தேடலும் கடவுளை நீக்கி அமைவதில்லை என்பது இதன் சாரம்.
எந்த நூல் அறிவு பெற்றிருந்தாலும்-அறிவியல் ஆனாலும் சரி- கடவுளை நினைந்து வணங்கி வாழ்வியல் பயன்பெறுக என்பது வள்ளுவர் தரும் அறிவுரையாகும்.

'தொழவேண்டும்' எனக் கற்றவரை நோக்கி ஏன் சொல்லப்பட்டது?

வாலறிவினான இறைவன் திருவடிகளைத் தழுவாவிட்டால் ஒருவன் கல்வி பெற்றும் என்ன பயன் என வினவுகிறார் வள்ளுவர். அதாவது கற்றவனும் கடவுளைத் தொழுதே ஆகவேண்டும் என்ற கருத்தில் இக்குறள் அமைந்துள்ளது. கற்றவனைத் தனிப்படுத்தி இவ்விதம் ஏன் கூறப்பட்டது?
தூய அறிவினான இறைவனை வணங்கு எனப் பணிக்கும் போது, கல்வி பெற்ற ஒருவன் 'கற்றதனாலேயே இறைவன் இல்லை என்று துணிகிறேன். நான் ஏன் அவனை வணங்க வேண்டும்?' என்று கேட்கிறான். இன்னொரு கற்றவன் 'நான் நிறையப் படித்திருக்கிறேன். உயிர்களைப் பற்றித் தெரிந்து வைத்திருக்கிறேன். உலகத்தையும் அதன் இயக்கத்தையும் நன்கு அறிவேன்; அறிவுதானே எல்லாம்? அறிவினும் மிஞ்சிய ஆற்றல் உண்டோ? எல்லாம் அறிந்த நான் தொழத் தேவையில்லை' எனப் பதில் இறுக்கிறான். இத்தகைய கற்ற மாந்தரைப் பார்த்து வள்ளுவர் சொல்கிறார், 'இறைவனை வணங்கக் கற்கவில்லையென்றால் நீ என்ன கற்றுக்கொண்டிருக்க முடியும்? நீ கற்றநூல்கள் எதுவானாலும் அவற்றால் நீ தெரிந்து கொண்டது ஒன்றுமேயில்லை; அறிவின் எல்லையெல்லாம் கடந்த அந்த மெய்ப்பொருளை முதலில் உணர்ந்துகொள்; அதற்கு உன் வாழ்நாள் முழுவதும் போதாது; அதனால் முதலில் அவனை வணங்கக் கற்றுக்கொள். அவனை வணங்கும் ஒவ்வொருமுறையும் - அவனை நினைக்கும் ஒவ்வொரு முறையும் - தூய அறிவைப் பெறுவதை நோக்கி நீ நகர்வாய். அதுதான் உண்மை அறிவுபெறுதல். எனவே அவனை வணங்கு' என்று.
இக்குறளுக்கு நாமக்கல் இராமலிங்கம் தரும் 'கல்வி கற்பது அறிவுக்காக. நாம் எவ்வளவு கல்வி கற்றாலும் அதிலிருந்து அறிந்து கொண்ட அறிவுக்கு மேல் இன்னும் அறியவேண்டிய அறிவு இருந்து கொண்டே இருக்கிறது; அந்த அறிவின் எல்லை எங்கே முடிகிறது என்று நாடுகின்றபோது அது நாமறிந்த அறிவுக்கு எட்டாததாக இருக்கிறது; ஆகவே நாம் அறிந்து கொள்ள முடியாத அறிவு இருந்து கொண்டே இருப்பது மட்டும் நிச்சயமாகத் தெரிகிறது; நம் அறிவுக்கு எட்டாத அந்த அறிவின் பூரணத்தைத்தான் 'வாலறிவன்' என்றும் 'பகவன்' என்றும் சொல்லுகிறோம். அந்தப் பகவான் என்ற பூரண அறிவிற்கு மிகவும் குறைந்ததுதான் நம்முடைய அறிவு என்பதை ஒப்புக் கொள்ளாவிட்டால் நாம் கற்ற கல்வியின் பயன் என்னவோ! ஒப்புக் கொண்டால் அதற்கு வணங்க வேண்டும்" என்ற உரை நல்ல விளக்கமாக உள்ளது.

இறைவன் அருள் இல்லாமல் கற்றுக்கொள்வதற்கும் கற்றதை உணர்ந்து கொள்வதற்கும் இயலாது என்பதைக் கற்றவன் உணரவேண்டும்; அனைத்துக் கல்வியும் அறிவும், தூய குணமாகிய கடவுளை அறிதல் அல்லது தேடுதல் என்பதை நோக்கித்தான் செல்கிறது என்பதையும் அவன் அறிய வேண்டும். கல்வியின் நோக்கம் கடவுள் அறிதல் தவிர கடவுளின் நற்றாள் தொழுதலுமாகும் என்பதுவே வள்ளுவம். இத்தொழுகை இல்லாமல் திருக்குறள் முழுதும் கற்றாலும் பயன் இராது; குறள் கற்க விழைவாரை ஒரு நோக்கப்படுத்தும் வள்ளுவச் செயல் நோக்கம் முதற்கண்ணேயெ தெளிவாகிறது (வ சுப மாணிக்கம்).

தூய அறிவினை உடையவனின் திருவடியைத் தொழார்எனின் கல்வி பெற்றதனால் ஆகிய பயன் என்ன? என்பது இக்குறட்கருத்து.

கல்வி ஆய்ந்தறிய உதவும்; கற்றவன் கடவுள்வாழ்த்துச் செய்தல் அவன் மெய்யுணர்வு பெற வழிப்படுத்தும்


__________________


Guru

Status: Offline
Posts: 5711
Date:
Permalink  
 

 5%2BKrl%2BKaRRathaal%2Baaya%2Bpayan.jpg__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard