Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 259. அவிசொரிந் தாயிரம் வேட்டலின்


Guru

Status: Offline
Posts: 7474
Date:
259. அவிசொரிந் தாயிரம் வேட்டலின்
Permalink  
 


அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத்து உண்ணாமை நன்று

(அதிகாரம்:புலால் மறுத்தல் குறள் எண்:259 )

பொழிப்பு (மு வரதராசன்): அவிப் பொருள்களைத் தீயில் சொரிந்து ஆயிரம் வேள்விகள் செய்தலைவிட, ஒன்றன் உயிரைக் கொன்று உடம்பைத் தின்னாதிருத்தல் நல்லது.



மணக்குடவர் உரை: நெய் முதலான அவியைச் சொரிந்து ஆயிரம் வேள்வி வேட்டலினும் ஒன்றினுயிரை நீக்கி அதனுடம்பை யுண்ணாமை நன்று.

பரிமேலழகர் உரை: அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின் - தீயின்கண் நெய் முதலிய அவிகளைச் சொரிந்து ஆயிரம் வேள்வி வேட்டலினும், ஒன்றன்உயிர் செகுத்து உண்ணாமை நன்று - ஒரு விலங்கின் உயிரைப் போக்கி அது நின்ற ஊனை உண்ணாமை நன்று.
(அவ்வேள்விகளான் வரும் பயனினும் இவ்விரதத்தான் வரும் பயனே பெரிது என்பதாம்.}

குன்றக்குடி அடிகளார் உரை: தீயின்கண் நெய் முதலியவற்றை அவியாகச் சொரிந்து ஆயிரம் வேள்வி செய்வதிலும் சிறந்தது, ஒன்றின் உயிரைப் போக்கி அதன் ஊனை உண்ணாமை. வேள்வியினும் சிறந்தது கொல்லாமை. வேள்வி முதலியவற்றின் காரணமாகக் கொலை நிகழ்தமையை மறுத்தது இது.


பொருள்கோள் வரிஅமைப்பு:
ஒன்றன்உயிர் செகுத்து உண்ணாமை, அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின் நன்று.

பதவுரை:
அவி-அவிக்கப்படுவது; சொரிந்து-பெய்து; ஆயிரம் வேட்டலின்-ஆயிரம் வேள்விகள் செய்தலைவிட ஒன்றன்-ஒன்றினுடைய; உயிர்-உயிர்; செகுத்து-(போக்கி)கொன்று; உண்ணாமை-உண்ணாதிருத்தல்; நன்று-நன்மையுடையது.


அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நெய் முதலான அவியைச் சொரிந்து ஆயிரம் வேள்வி வேட்டலினும்;
பரிப்பெருமாள்: நெய் முதலான அவியைச் சொரிந்து ஆயிரம் வேள்வி வேட்டலினும்;
பரிதி: நெய் முதலானவற்றை ஓமத்திலே சொரிந்து ஆயிரம் யாகம் செய்வதில்;
காலிங்கர்: வேள்வித் தீக்கு உரித்தாயுள்ள நெய்யும் அசனமும் முதலாகிய ஓமத்திரவியங்களைக் குறைவறச் சொரிந்து ஆயிரம் வேட்டலினும்
பரிமேலழகர்: தீயின்கண் நெய் முதலிய அவிகளைச் சொரிந்து ஆயிரம் வேள்வி வேட்டலினும்;

'நெய் முதலான அவியைச் சொரிந்து ஆயிரம் வேள்வி வேட்டலினும்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஆகுதி பெய்து ஆயிரவேள்வி செய்தலினும்', 'நெய் முதலியவற்றைத் தீயிற் சொரிந்து ஆயிரம் வேள்வி செய்தலினும்', 'ஓமத் தீயில் அவிர்ப்பாகங்களைக் கொட்டி ஆயிரம் யாகங்களைச் செய்வதைக் காட்டிலும்', 'தீயினிடம் நெய் முதலிய பொருள்களைச் சொரிந்து ஆயிரம் வேள்விகளைச் செய்தலைவிட' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

அவியைச் சொரிந்து ஆயிரம் வேள்விகள் செய்தலைவிட என்பது இப்பகுதியின் பொருள்.

ஒன்றன் உயிர்செகுத்து உண்ணாமை நன்று:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஒன்றினுயிரை நீக்கி அதனுடம்பை யுண்ணாமை நன்று.
பரிப்பெருமாள்: ஒன்றினுயிரை நீக்கி அதனுடம்பை யுண்ணாமை நன்று.
பரிப்பெருமாள் குறிப்புரை: மேல் தெளிவுடையாருண்ணார் என்றார். அவருண்ணாதது யாதனைக் கருதியென்றார்க்கு, அது எல்லாப் புண்ணியத்தினும் நன்றென்று கூறப்பட்டது.
பரிதி: ஓர் உயிரைக் கொன்று புலால் தின்னாமை நன்று என்றவாறு.
காலிங்கர்: மிக நன்று, மற்றொன்றினையே கொன்று அதன் ஊனை உண்ணாமை என்றவாறு.
பரிமேலழகர்: ஒரு விலங்கின் உயிரைப் போக்கி அது நின்ற ஊனை உண்ணாமை நன்று.
பரிமேலழகர் குறிப்புரை: அவ்வேள்விகளான் வரும் பயனினும் இவ்விரதத்தான் வரும் பயனே பெரிது என்பதாம்.

'ஓர் உயிரைக் கொன்று புலால் தின்னாமை நன்று' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஓருயிரைக் கொன்று தின்னாமை மேல்', 'ஓருயிரைப் போக்கி அதன் ஊனைத் தின்னாமை நல்லது', 'இன்னொரு பிராணியின் உயிரை வதைத்து அதன் ஊனைத் தின்னாதிருப்பது நல்லது', 'ஓருயிரைக் கொன்று அதன் ஊனை உண்ணாமலிருத்தல் நல்லது. (உயிரைக் கொன்று யாகம் செய்தலை மறுக்கின்றார்.' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

ஓர் உயிரைக் கொன்று அதன் ஊனை உண்ணாமலிருத்தல் நல்லது என்பது இப்பகுதியின் பொருள்.



நிறையுரை:
அவியைச் சொரிந்து ஆயிரம் வேள்விகள் செய்தலைவிட ஓர் உயிரைக் கொன்று அதன் ஊனை உண்ணாமலிருத்தல் நல்லது என்பது பாடலின் பொருள்.
இக்குறள் கூறும் செய்தி என்ன?

உயிரைக் கொன்று வேள்வி செய்வதால் என்ன நன்மை கிடைத்துவிடப் போகிறது?

தெய்வத்தின் பெயரால் உயிர்க்கொலை செய்து சடங்கு ஆற்றல், புலால் உண்ணாமை இவற்றில் எது நல்லது என்பதை இப்பாடல் ஆய்கிறது.
ஆரிய அந்தணர்களுக்கு அவர்களாலேயே வகுத்துக்கொண்ட ஆறு தொழில்களில் தீ வளர்த்து வேள்வி செய்தல் ஒன்றாகும். வடமொழியில் யாகம் என்று சொல்லப்படுவது தமிழில் வேள்வி எனப்படுகிறது. இந்த வேள்வி தெய்வங்களின் விருப்பத்திற்காகச் செய்யப்படுவது என்று சொல்லப்படுகிறது. வேறுலகத்திலுள்ள தெய்வங்களை மகிழ்விப்பதற்காக அவர்களுக்கு விருப்பமான உணவுவகைகள் வேள்விக் குண்டத்தில் போடப்படும். இதில் குதிரை, பசு, உடும்பு போன்ற உயிர் விலங்குகளும் உயிரோடு அளிக்கப்பட்டன. 'வேள்விக்கென்றே பசுக்கள் பிரமனால் படைக்கப்பட்டன' என்று மனுநூல் (சூத்.5) கூறுகிறது. வெந்த அவற்றின் மாமிசத்தை, தெய்வத்தின் பெயரால், யாகம் வளர்த்தவர்களும் யாகம் செய்வித்தவர்களும் உண்டு மகிழ்ந்தார்கள். இது தேவர்களுக்கு அக்கினி பகவான் மூலம் உணவைக் கொடுத்துஅனுப்பி ஆரியர்கள் வழிபடும் முறையாகும். அவியுண்ட தெய்வங்கள் மகிழ்ந்து வேள்வி செய்வோர் கேட்ட வரம் தருவர் என்பது அவர்தம் நம்பிக்கை. உயிர்க்கொலை செய்து வேள்வி செய்வது புலைசூழ் வேள்வி எனப்பட்டது.
(இந்நாட்களில் வளர்க்கப்படும் வேள்வித் தீயில் உயிர்களைப் போடாமல், விலை மதிப்புள்ள தங்க, வெள்ளிக்காசுகள், பட்டுச்சேலை போன்ற பொருள்களையும் நெய், பால், தானியங்கள் போன்றவற்றையும் சொரிகின்றனர்.)

அவி என்பது வேள்வித் தீயில் சொரியப்படும் உணவாகும். தேவர்களுக்கு உணவாகத் தீயிலிடப்படும் எல்லாப் பொருளையும் வடமொழியில் ஹவிஸ் என்பர். அதுவே தமிழில் 'அவி' யாயிற்று. உயிர்க்கொலைகள் செய்யப்பட்டு முன்னாளில் வேள்விகள் நடந்தன என்பது வரலாற்று உண்மை. புத்தர் இத்தகைய புலைசூழ் வேள்வியைக் கண்டித்ததும் வேள்வியை நேரில் கண்ட புத்தரின் உள்ளத் துடிப்பு பிம்பிசாரனின் யாகத்தைக் கலைத்ததும் பதிவாக்கம் செய்யப்பட்ட நிகழ்வுகள். மணிமேகலைக் காப்பியத்திலும் ஆபுத்திரன் என்ற அறவோன் புலைசூழ் வேள்வியைத் தடுத்தான் என்பதான காட்சிகள் வருகின்றன. மேலும் பழம் நூல்கள் மூலமும் கொலை வேள்விகள் நடந்தேறியன என்பது தெரியவரும். கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர் புன்மை தெரியா ரகத்து (கொல்லாமை குறள்எண்:329 பொருள்: கொலைத்தொழிலினராகிய மக்கள் அதன் இழிவை ஆராய்ந்தவரிடத்தில் புலைத்தொழிலுடையவராய்த் தாழ்ந்து தோன்றுவர்) என்ற குறளுக்கு உரை விளக்கம் தரும்போது பரிமேலழகர் "கொலை வினையர் என்றதனான் வேள்விக்கண் கொலையன்மையறிக" எனக் கூறியுள்ளார். இவ்விளக்கம் "வேள்விக்கண் செய்யப்படும் கொலை" என்று ஒன்று உள்ளது என்பதை ஒப்புக்கொண்டு அப்படிப்பட்ட கொலை வேள்விக்காக இருந்தால் ஒத்துக் கொள்ளலாம் என்பதாக அமைந்துள்ளது. மற்றொரு குறளான நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக் கொன்றாகும் ஆக்கம் கடை (கொல்லாமை குறள்எண்: 328 பொருள்: கொலையால் நன்மையாக விளையும் ஆக்கம் பெரிதாக இருந்தாலும், சான்றோர்க்குக் கொலையால் வரும் ஆக்கம் மிக இழிவானதாகும்) என்பது எந்த நோக்கமாக இருந்தாலும் உயிர்ப்பலி இழிவானது என்று கூறுகிறது. ஓர் உயிரைக் கொன்று சாந்தி முதலியன செய்வதால் என்ன ஆக்கம் கிடைத்தாலும், மேன்மையுள்ளோர் உயிர்ப் பலியிடும் பாவத்தைச் செய்ய மாட்டார்கள் என்கிறார் வள்ளுவர். இக்குறட்பாக்களும் அக்கால வேள்வியில் உயிர்க்கொலைகள் இருந்தன என்பதை உறுதிப்படுத்துகின்றன.

...................விருந்தின் துணைத் துணை வேள்விப் பயன் (விருந்தோம்பல் 87), .................விருந்தோம்பி வேள்வி தலைப்படாதார் (விருந்தோம்பல் 88) என விருந்தோம்பலை வேள்வி என்று ஆசிரியர் குறித்திருத்தலால் வேட்டல்-விருந்தோம்பல் என்று பொருள் கொள்ளலாம் என்று சிலர் கூறினர். இங்கு 'அவி சொரிந்து வேட்டல்' என அடை கொடுத்துக் கூறுவதால் விருந்தோம்பலைக் குறியாது வேள்வியையே குறிக்கும்' எனத் தெளிவுபடுத்துவார் இரா சாரங்கபாணி.

செகுத்து என்பது போக்கி என்ற பொருள்பட்டு உயிர் நீக்குவதைக் குறிக்கும்.
மற்றொரு உயிரைக் கொன்று அதன் ஊனை உண்ணாமை ஆயிரம் வேள்விகள் செய்வதைக் காட்டிலும் மேல் என்கிறது பாடல். எல்லா உயிர்களும் இயற்கையின் படைப்பே. எனவே, மனிதர்களைப் போலவே அனைத்து உயிரினங்களுக்கும் வாழும் உரிமை உண்டு. எல்லோரும் வாழ வேண்டும் என்று எண்ணுவதுடன் நில்லாமல், எல்லா உயிரும் வாழவேண்டும் என்று எண்ணி, விலங்கு, பறவை முதலிய மற்ற உயிர்க்கும் தீங்கு செய்யாமல் மக்கள் வாழ்க்கை நடத்தவேண்டும் என்று வள்ளுவர் விரும்புவார். உயிர்களைக் கொல்லாமை, புலால் உண்ணாமை ஆகியன சிறந்த அறங்கள் என்று கருதியவர் வள்ளுவர். தெய்வத்தின் பெயரால் கொலைசூழ் வேள்விகள் பல செய்தலினும் ஓர் உயிரை நீக்கி அதன் ஊன் உண்ணாமை அதாவது புலால் உண்ணா நோன்பு நல்லது என்கிறார் இங்கு. இக்கருத்துக்களில் உறுதியாக நின்று, எதற்காகவும் விட்டுக்கொடுக்காமல், உயிர்க்கொலை வேள்வி தனக்கு ஏற்புடையதல்ல என்ற தன் நிலைப்பாடைத் தெளிவாகப் பதிவு செய்கிறார்.

இக்குறள் கூறும் செய்தி என்ன?

இக்குறளின் நேரடிப் பொருள் அவியைச் சொரிந்து ஆயிரம் வேள்வி வேட்டலினும் ஒன்றின் உயிரை நீக்கி அதன் உடம்பை உண்ணாமை நன்று என்பது. புலால் மறுத்தல் அதிகாரத்தில் உள்ளதால் இது புலால் உண்ணாமையை வலியுறுத்த வந்தது என்பது தெளிவு.

இப்பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது கொலை வேள்வியையா அல்லது கொலைத் தீமை கலவாத வேள்வியையா? பழைய உரையாசிரியர்களான மணக்குடவர், பரிப்பெருமாள், பரிதி, காலிங்கர், பரிமேலழகர் ஆகிய அனைவரும் நெய் சொரிந்து செய்யப்படும் வேள்வியையே சொல்கின்றனர்; இவர்கள் உரைகளில் உயிர்ப்பலி என்பது கூறப்படவில்லை. இக்குறள் பற்றி தண்டபாணி தேசிகர் தரும் விளக்கம்: 'இதனால் வேள்விகளையும் அவற்றால் எய்தும் பயனையும் உட்கொண்டு, அவற்றைக் காட்டிலும் கொல்லா விரதத்தின் மேன்மையைக் குறித்துக் கொள்ளச் செய்கிறார்..... கொலை நிகழ்த்துவது கடவுட்காயின் பாவமாகாது என்பதைக் காட்டிலும் கொலையே இல்லாமலிருக்கும் நிலை பெரிது என்பதே திருவள்ளுவர் துணிவு'. இவர் கருத்துப்படி இக்குறள் கொலைவேள்வி பற்றியதே. கொலையற்ற வேள்வியே இப்பாடலில் சொல்லப்படுவது என்றால் ஒப்புமைக் கூறுகளின் பொருத்தம் முழுமையாக அமையாது. கொலை அல்லாத வேள்வியை இங்கு சொல்லவேண்டிய தேவையே எழவில்லை. மேலும் சொல்லாட்சி, நடைப்போக்கு இவற்றையும் நோக்கும்போது புலைசூழ் வேள்வியையே வள்ளுவர் இங்கு குறிக்கிறார் என்பது தெளிவாகும்.
இனி, இக்குறள் வேள்விகளை மறுத்து சொல்லப்பட்டது என சிலர் விளக்கம் கூறினர். வள்ளுவர் கொலை வேள்வியை மட்டும் வேண்டாம் என்றாரா அல்லது வேள்வியையே முற்றிலும் மறுத்தாரா? இக்குறள் வேத வேள்விக்கு -அவி வேள்வி ஆயினும் அல்லது கொலை வேள்வி ஆயினும்- எதிரானது என்று இன்றைய பெரும்பான்மை தமிழரிஞர்களும் ஆய்வாளர்களும் கருத்து தெரிவிக்கின்றனர். ஆனால் வேள்வியை ஆதரிப்போர் ‘ஆயிரம் யாகத்தைவிட அகிம்சை உயர்ந்தது’ என்றால் அது கைவிடத்தக்கது என்பது பொருள் அல்ல; வேத வேள்வியைவிட புலால் உண்ணாமை சிறந்தது என்று கூறியதாகத்தான் கொள்ள வேண்டும் என்பது இவர்கள் கருத்து. இக்குறளில் வேட்டல் தாழ்வாகக் குறிப்பிடப்படவில்லை; வேள்வி சாடப்படவில்லை என்று இவர்கள் வாதிடுவர். மேலும் அவர்கள் குறள் 413-ஐத் துணைக் கொள்வர்: செவியுணவின் கேள்வி உடையார் அவியுணவின் ஆன்றாரோடு ஒப்பர் நிலத்து (கேள்வி குறள்எண்:413 பொருள்: செவியுணவாகிய கேள்வி உடையவர் நிலத்தில் வாழ்கின்றவரே ஆயினும், அவி உணவைக்கொள்ளும் தேவரோடு ஒப்பாவர்) என்று குறளில் 'அவியுணவின் ஆன்றோர்' என்ற சொல்லாட்சி உயர்வுநவிற்சியிலே சொல்லப்பட்டிருப்பதால் வள்ளுவர் வேதவேள்விகளுக்கு எதிரானவர் அல்ல என்று சொல்வர். 'அவி' என்ற சொல்லே குழப்பத்துக்குக் காரணம். அவி என்று பொதுவாக குறள் எண் 413-லும் இக்குறளிலும் அடையின்றி குறித்ததால் இச்சிக்கல் எழுகிறது. இக்குறளில் சொல்லப்பட்ட அவி புலைசூழ் வேள்வியில் சொரியப்படுவது என்றும் குறள் 413-இல் கூறப்பட்ட அவி கொலையற்ற வேள்வியில் போடப்பட்டது என்றும் கொண்டால் ஓரளவு குழப்பம் நீங்கும். வேள்வி என்பது ஒரு வகையான வழிபாடு தான். அதில் சான்றாண்மை நிறைந்த வள்ளுவர் குறுக்கிடமாட்டார். கொலையற்ற வேள்விக்கு வள்ளுவர் ஏன் மறுப்புத் தெரிவிக்க வேண்டும்? எனவே வேள்விக்கே எதிரான பாடல் இது என்று கொள்ளமுடியாது. ஆனால் இப்பாடல் கொலைவேள்விக்கு எதிரானது - அது கடவுளுக்கே ஆயினும்- என்பதில் சிறுதும் ஐயம் இல்லை.

உயிர்க்கொலைக் கொடுமை செய்து நிகழ்த்தப்படும் வேள்வியைக் கண்டிக்கும் அதேவேளையில் புலால் உண்ணாமையின் மேன்மையும் இங்கு உணர்த்தப்படுகிறது. தெய்வத்தின் பெயரால் உயிர்க்கொலை செய்து ஆயிரக்கணக்காக சடங்குகள் செய்வதைவிட கொன்ற உடம்பின் புலால் உண்ணாமல் இருப்பது நல்லது என்பது இக்குறள் கூறும் செய்தி.

அவியைச் சொரிந்து ஆயிரம் வேள்விகள் செய்தலைவிட ஓர் உயிரைக் கொன்று அதன் ஊனை உண்ணாமலிருத்தல் நல்லது என்பது இக்குறட்கருத்து.

படையல் என்ற பெயரிலும் ஊன் உண்ணவேண்டாம் எனும் புலால் மறுத்தல் பாடல்.

 

பொழிப்பு

அவியைச் சொரிந்து ஆயிரம் வேள்விகள் செய்தலினும் ஓர் உயிரைப் போக்கி அதன் ஊனைத் தின்னாமை நல்லது.



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிரும் தொழும்

(அதிகாரம்:புலால்மறுத்தல் குறள் எண்:260)

பொழிப்பு (மு வரதராசன்): ஓருயிரையும் கொல்லாமல் புலால் உண்ணாமல் வாழ்கின்றவனை உலகத்தில் உள்ள எல்லா உயிர்களும் கைகூப்பி வணங்கும்.

மணக்குடவர் உரை: கொல்லானுமாய்ப் புலாலையுண்டலையுந் தவிர்த்தவனைக் கை குவித்து எல்லாவுயிருந் தொழும்.
மேல் எல்லாப்புண்ணியத்திலும் இது நன்றென்றார்; அது யாதினைத் தருமென்றார்க்குக் கொல்லாதவன் தேவர்க்கும் மேலாவனென்று கூறினார்.

பரிமேலழகர் உரை: கொல்லான் புலாலை மறுத்தானை - ஓர் உயிரையும் கொல்லாதவனுமாய்ப் புலாலையும் உண்ணாதவனை, எல்லா உயிரும் கைகூப்பித் தொழும் - எல்லா உயிரும் கை குவித்துத் தொழும்.
(இவ்விரண்டு அறமும் ஒருங்கு உடையார்க்கு அல்லது ஒன்றே உடையார்க்கு அதனால் பயன் இல்லை ஆகலின், கொல்லாமையும் உடன் கூறினார். இப்பேரருள் உடையான் மறுமைக்கண் தேவரின் மிக்கான் ஆம் என அப் பயனது பெருமை கூறியவாறு. இவை மூன்று பாட்டானும் ஊன் உண்ணாமையது உயர்ச்சி கூறப்பட்டது.)

சி இலக்குவனார்: உரை: ஓருயிரைக் கொல்லாதவனாய், புலால் உண்ணுதலை மறுத்தவனை எல்லா உயிரும் கை குவித்து வணங்கும்.

பொருள்கோள் வரிஅமைப்பு:
கொல்லான் புலாலை மறுத்தானை எல்லா உயிரும் கைகூப்பி தொழும்.

பதவுரை:
கொல்லான்-பிற உயிர்களைக் கொல்லாதவன்; புலாலை-இறைச்சியை; மறுத்தானை-நீக்கியவனை; கை-கை; கூப்பி-கும்பிட்டு; எல்லா-அனைத்து; உயிரும்-உயிரும்; தொழும்-வணங்கும்.


கொல்லான் புலாலை மறுத்தானை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: கொல்லானுமாய்ப் புலாலையுண்டலையுந் தவிர்த்தவனை;
பரிப்பெருமாள்: கொல்லானுமாய்ப் புலாலுண்பதனைத் தவிர்த்தவனை;
பரிதி: கொல்லாமையும் புலால் மறுத்தலும் உள்ளானை;
காலிங்கர்: தனக்குச் சுவை கருதி ஒன்றினைக் கொல்லானுமாய்ப் புலாலினைத் தின்ன மறுப்பது செய்வானுமாய் இருந்தானை;
பரிமேலழகர்: ஓர் உயிரையும் கொல்லாதவனுமாய்ப் புலாலையும் உண்ணாதவனை;
பரிமேலழகர் குறிப்புரை: இவ்விரண்டு அறமும் ஒருங்கு உடையார்க்கு அல்லது ஒன்றே உடையார்க்கு அதனால் பயன் இல்லை ஆகலின், கொல்லாமையும் உடன் கூறினார்.

'கொல்லானுமாய் புலாலையும் உண்ணாதவனை' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'கொல்லாதவனையும் புலால் உண்ணாதவனையும்', 'ஓருயிரையும் கொல்லாதவனாய், கொல்லப்பட்ட புலாலைத் தின்னாதவனாய் உள்ள அருளாளனை', 'புலால் உண்பதற்காகப் பிறிதொரு பிராணியைத் தானும் கொல்லான் பிறர் கொன்று விற்கும் புலாலையும் ஏற்றுக் கொள்ள மாட்டான்', 'ஓர் உயிரையுங் கொல்லாது ஊனையும் உண்ணாது இருப்பவனை' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

ஓருயிரைக் கொல்லாதவனாய், புலால் உண்ணுதலை மறுத்தவனை என்பது இப்பகுதியின் பொருள்.

கைகூப்பி எல்லா உயிரும் தொழும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: கை குவித்து எல்லாவுயிருந் தொழும்.
மணக்குடவர் குறிப்புரை: மேல் எல்லாப்புண்ணியத்திலும் இது நன்றென்றார்; அது யாதினைத் தருமென்றார்க்குக் கொல்லாதவன் தேவர்க்கும் மேலாவனென்று கூறினார்.
பரிப்பெருமாள்: கை குவித்து எல்லாவுயிருந் தொழும்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது, மேல் எல்லாப்புண்ணியத்திலும் நன்றென்றார்; அது யாதினைத் தருமென்றார்க்குக் எல்லாத் தேவர்க்கும் மேலாவனென்று கூறப்பட்டது.
பரிதி: எல்லா உயிரும் தொழும் என்றவாறு.
காலிங்கர்: அனைத்து உயிரும் கைகூப்பித் தொழும் என்றவாறு.
பரிமேலழகர்: எல்லா உயிரும் கை குவித்துத் தொழும்.
பரிமேலழகர் குறிப்புரை: இப்பேரருள் உடையான் மறுமைக்கண் தேவரின் மிக்கான் ஆம் என அப் பயனது பெருமை கூறியவாறு. இவை மூன்று பாட்டானும் ஊன் உண்ணாமையது உயர்ச்சி கூறப்பட்டது.

'கை குவித்து எல்லாவுயிருந் தொழும்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'கைகூப்பி எல்லா உயிர்களும் வணங்கும்', 'எல்லா உயிரும் கை குவித்துத் தொழும்', 'அப்படிப்பட்டவனை எல்லா உயிர்களும் கை குவித்து வணங்கும்', 'எல்லா உயிரும் கைகுவித்து வணங்கும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

எல்லா உயிரும் கை குவித்து வணங்கும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
ஓருயிரைக் கொல்லாதவனாய், புலால் உண்ணுதலை மறுத்தவனை எல்லா உயிரும் கை குவித்து வணங்கும் என்பது பாடலின் பொருள்.
இக்குறள் கூறும் செய்தி என்ன?

உணவிற்காக எந்த உயிரையும் கொல்லாதவனாய் புலால் உண்ணுதலை நீக்கி வாழுகின்ற அருளாளனை எல்லா உயிர்களும் வணங்கும்.

ஓருயிரையும் கொலை செய்யாதவனுமாகி, புலாலுண்பதையும் விலக்கியிருப்பவன் எல்லாவுயிர்களும் கைகுவித்துத் தொழக்கூடிய சிறப்பைப் பெறுவான் என்கிறது பாடல். கொல்லாதவன் புலால் உண்பவனாக இருக்கலாம். புலால் உண்ணாதவன் கொல்பவனாகவும் இருக்கலாம் என்பதால் இவ்விரு அறங்களையும் மேற்கொள்பவன் பேரருளாளனாக மதிக்கப்படுவான் என்பது உணர்த்தப்பட்டது.
தனக்கோ அல்லது பிறர் உண்ணுதலுக்காகவோ உயிர்களைக் கொல்லாதவனாய், தானும் புலால் உண்ணலை மறுப்பவனாய் உள்ளவனை, இவ்வுலகில் உள்ள எல்லா உயிர்களுமே, கை கூப்பி வாழ்த்தும் என்று ஊக்க வழியில் புலால் உண்ணாமையை வலியுறுத்துகின்றார்.
அனைத்து உயிர்களும் கைகூப்பித் தொழும் என்று சொல்லப்பட்டதால் தொல்லாசிரியர்கள் அவன் தேவர்க்கும் மேலாவன் என்று பொருள் கூறினர்.
எல்லா உயிர்களும் கைகுவித்து வணங்கும் என்பது உயர்வுநவிற்சி அணிபட அமைந்தது.

தொழுது என்பது வணங்கு என்பதற்கு இணையாக வந்துள்ளது. தொழுத கையுள்ளும் படையொடுங்கும்... (கூடாநட்பு 828 பொருள்: வணங்கித் தொழுத கையினுள்ளும் கொலைக் கருவி மறைந்திருக்கும்....) என்ற பாடலிலும் இதே பொருளில் வந்துள்ளது.
மதிப்புக்குரியவரைக் காணும்போது கை கூப்பி வணக்கம் தெரிவிப்பது வழக்கம். ஓருயிரைக் கொல்லானுமாய்ப் புலால் தின்ன மறுப்பவனுமாய் இருப்பவன் அத்தகைய வணக்கத்துக்கு உரியவன் என்கிறது பாடல்.
உயிர்கள் பேணிக் காக்கப் பெறுதலால் காக்கப் பெற்ற உயிர்கள் காத்த மக்களைத் தொழுது வாழ்கின்றன; அவை ஏன் தொழும் என்பதற்கு இவனால் தம் உயிருக்கும் கேடில்லை யென்பது கருதி என்றும் தமது கைகளைத் தலைக்குமேல் தூக்கி என்னை விட்டுவிடுங்கள் என்று பிற உயிர்களைக் கொல்லாதவனை எல்லா உயிர்களும் போற்றி நன்றி செலுத்தும் என்றும் விளக்கம் கூறினர்.

எல்லா உயிரும் என்பதில் புழு, பூச்சி, பறவை, ஆடு, மாடு அடங்கும். இவைகளுக்குக் கை உண்டா? கூப்பத் தெரியுமா? பின்னங்கால்களில் நின்று கொண்டு, முன்னக்கால்களை உயர்த்தி, கைகூப்பி உயிரினங்கள் வணங்கும் என்று பொருள் கொள்ளலாமா? என வினாக்களை எழுப்பினர். கைகூப்பி என்ற சொல் வந்ததனால் கையுள்ள மனிதர்கள் அனைவரும் அவனைத் தொழுவார்கள் என்றுதான் சொல்லப்பட்டது எனச் சிலர் விளக்கினர்.
கை கூப்பலும் தொழுதலும் மக்களல்லாத உயிர்களுக்கு இயலாதென்றாலும், எல்லா உயிர்களும் என்றது அனைத்து உயிர்களையும் கருத்தில் கொண்டுதான் பாடலில் சொல்லப்பட்டது. சொல்லுக்குச் சொல் நேரடிப் பொருள் கொள்வது, சில வேளைகளில் தவறான பொருள் கொள்வதற்கு வழி வகுக்கும். இலக்கிய நயம் தோன்றச் சொல்லும்போது சிறப்பு குறித்து மிகைப்படுத்தல் மரபு. இப்பாடலை அதுபோன்ற மரபு நடையாகக் கொள்ளவேண்டுமேயல்லாமல் கொள்கை காட்டும் கருத்து நடையாக அல்ல.

சென்ற நூற்றாண்டின் இடைப் பகுதி வரை (1856-1950) ஆங்கில நாடக ஆசிரியராகவும், உலகம் அறிந்த அறிஞராகவும் விளங்கியவர் அயர்லாந்து நாட்டில் பிறந்த ஜார்ஜ் பெர்னாட்சா. அவர் புலால் உண்ணா அருளாளராகவும் இருந்தார். 'ஊனில்லா உணவு முறையே சிறந்தது!' என்பதைத் தம் வாழ்க்கையின் மூலம் உலகிற்கு உணர்த்தியவர். அடிக்கடி, இக்குறளை அவர் மேற்கோள் காட்டுவார். லண்டன் நாளிதழ் ஒன்று 1948 ஆம் ஆண்டு ஒரு கருத்துப்படம் (cartoon) வெளியிட்டது. அதில் பெர்னாட்சா நாற்காலியில் அமர்ந்து இருப்பார். அவருடைய காலடியில் ஆடு, மாடு, மான், பன்றி, கோழி, புறா போன்ற விலங்கினங்களும் பறவைகளும் நன்றியுணர்வோடு அவரை நோக்கிய வண்ணம் படுத்துக் கொண்டும், நின்று கொண்டும் உள்ளன. அவரைச் சுற்றி, கொடிய விலங்குகளான புலி, கரடி, சிங்கம் போன்றவை அமைதியாக நின்று கொண்டு, அவரை ஆர்வத்தோடு நோக்குகின்றன. இந்தப் படம் இக்குறட்பாவிற்கு வரையப்பட்ட நல்லதொரு கருத்து விளக்கப்படமாக அமைந்தது. இதே படத்தை, 1949 ஆம் ஆண்டு, சனவரி மூன்றாம் வார இதழில், தில்லியிலிருந்து வெளிவந்துகொண்டு இருந்த 'ஷங்கர்ஸ் வீக்கிலி' (Shankar's Weekly) அப்படியே வெளியிட்டு, படத்தின் கீழே 'கொல்லான் புலாலை மறுத்தானை...' என்ற இப்பாடலைக் குறிப்பிட்டிருந்தது. 'புலால் உணவை உண்பதை வாழ்க்கைப் போக்காகக் கொண்டுள்ள மேற்குநாட்டு மக்கள் இடையே 'புலால் உண்ணாமை'யே சிறந்த வாழ்க்கை நெறி என்பதனைப் பெர்னார்ட்சா, திருக்குறளைச் சான்று காட்டி விளக்கிவந்தார்' என்பதனை உணர்த்தவே இந்தக் கேலிச்சித்திரம் வெளியிடப்பட்டது (க த திருநாவுக்கரசு நூலிலிருந்து).

இக்குறள் கூறும் செய்தி என்ன?

சமுதாயத்தில் நீண்ட நெடுங்காலமாக ஊறிப் போயிருக்கும் புலாலுண்ணல், கள்ளுண்ணல், சூதாடல் போன்ற தீய பழக்கவழக்கங்களைக் களைந்தெறிவது மிகக் கடினம். ஆனாலும் வள்ளுவர் போன்ற அறவாணர்கள் அவற்றை நீக்க, அவ்வக்காலங்களில் தொடர்ந்து முயன்று கொண்டுதான் இருக்கின்றனர்/இருப்பர். மனிதர்களிடம் அருளுணர்வு பெருகவேண்டும் என்ற நோக்கில் புலால் உண்ணாமையை வலுவாக மக்கள்முன் வைக்கின்றார் வள்ளுவர். ஊன் உண்பவனை நரகம்கூட ஏற்காது என்று அச்சப்படுத்தியும் பிற உயிர்களின் புண்ணையா தின்கிறாய் என்று அருவருப்பு காட்டியும் புலால் உண்ணாமையை வற்புறுத்தியவர் இப்பாடலில் கொல்லாமை, புலாலுண்ணாமை அறங்கள் பேணுபவன் உலக உயிர்களால் நன்கு மதிக்கப்படுவான் என்று சொல்லி ஊக்கவழியில் அறிவுரை பகர்கின்றார்.

இன்று நம் நாட்டிலும் பிறநாடுகளிலும், உயிர்களைக் கொல்லாமலும் புலால் நீக்கிய உணவை உண்பவர்களாகவும் மிகுதியாக உள்ளனர். அவர்களை எந்த உயிரும், அந்தக் காரணங்களுக்காக, கை கூப்பித் தொழுவதை நாம் பார்க்க முடிவதில்லை. இக்குறளில் கொல்லான் புலால் மறுத்தானின் உயர்வு சுட்டப் பெறுவதே நோக்கம் என்பதும் எல்லா உயிரும் அவனைத் தொழுதலை வலியுறுத்துவதற்காகச் சொல்லப்படவில்லை என்பதும் அறியப்படவேண்டும்.

ஓருயிரைக் கொல்லாதவனாய், புலால் உண்ணுதலை மறுத்தவனை எல்லா உயிரும் கை குவித்து வணங்கும் என்பது இக்குறட்கருத்து.

 

புலால்மறுத்தல் வணக்கத்துக்குரியது.

 

பொழிப்பு

ஓருயிரையும் கொல்லாதவனாய், கொல்லப்பட்ட புலாலைத் தின்னாதவனாய் உள்ளவனை எல்லா உயிரும் கை குவித்து வணங்கும்.



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

கொலைவினையர் ஆகிய மாக்கள் புலைவினையர்
புன்மை தெரிவார் அகத்து

(அதிகாரம்:கொல்லாமை குறள் எண்:329)

பொழிப்பு (மு வரதராசன்): கொலைத்தொழிலினராகிய மக்கள் அதன் இழிவை ஆராய்ந்தவரிடத்தில் புலைத்தொழிலுடையவராய்த் தாழ்ந்து தோன்றுவர்.

மணக்குடவர் உரை: கொலைத் தொழிலினை யுடையராகிய மாக்கள் பொல்லாமையை யாராய்வாரிடத்துத் தொழிற்புலையராகுவர்.
இவரை உலகத்தர் கன்மசண்டாளரென்று சொல்லுவார்.

பரிமேலழகர் உரை: கொலை வினையர் ஆகிய மாக்கள் - கொலைத் தொழிலையுடையராகிய மாந்தர், புன்மை தெரிவார் அகத்துப் புலைவினையர் - அத்தொழிலின் கீழ்மையை அறியாத நெஞ்சத்தராயினும், அறிவார் நெஞ்சத்துப் புலைத் தொழிலினர்.
(கொலை வினையர் என்றதனான், வேள்விக் கண் கொலையன்மை அறிக. 'புலை வினையர்' என்றது தொழிலால் புலையர் என்றவாறு. இம்மைக்கண் கீழ்மை எய்துவர் என்பதாம்.)

கா சுப்பிரமணியம் பிள்ளை உரை: கொலைத்தொழிலின் மிக்க இழிவை உணர்ந்தவரது மனத்திற் கொலைசெய்வார் எக்குலத்தவராயிருப்பினும் புலைத்தொழிலர் ஆகவே கருதப்படுவர்.

பொருள்கோள் வரிஅமைப்பு:
கொலைவினையர் ஆகிய மாக்கள் புலைவினையர் புன்மை தெரிவார் அகத்து.

பதவுரை: கொலை-கொல்லுதல்; வினையர்-செயலையுடையவர்; ஆகிய-ஆன; மாக்கள்-பகுத்தறியும் திறனில்லா மாந்தர்; புலை-புலால், இழிவு; வினையர்-தொழிலையுடையவர்; புன்மை-கீழ்மை, இழிவான தன்மை; தெரிவார்-அறிபவர்; அகத்து-உள்ளே.


கொலைவினையர் ஆகிய மாக்கள்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: கொலைத் தொழிலினை யுடையராகிய மாக்கள்;
மணக்குடவர் குறிப்புரை: இவரை உலகத்தர் கன்மசண்டாளரென்று சொல்லுவார்.
பரிப்பெருமாள்: கொலைத் தொழிலுடையராகிய மாக்கள்;
பரிப்பெருமாள் குறிப்புரை: இவரை உலகத்தர் (கொலைப்புலையர்) கன்மசண்டாலரென்று சொல்லுவர் என்றது.
பரிதி: கொலை செய்வாரும்;
காலிங்கர்: கொலைத் தொழிலை உடையராகிய மாக்கள்;
பரிமேலழகர்: கொலைத் தொழிலையுடையராகிய மாந்தர்;

'கொலைத் தொழிலினை யுடையராகிய மாக்கள்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'கொலைஞனை மிக இழிந்தவனாகக் கருதுவர்', 'கொலைத்தொழில் செய்யும் மாந்தர்', 'கொலை சம்பந்தமான தொழிலைச் செய்கிறவர்கள் சண்டாளத் தனமுள்ள கீழ் மக்களாகக் கருதப்படுவார்கள்', 'கொலைத் தொழிலையுடைய மாந்தர்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

கொலைத்தொழில் செய்யும் அறிவில்லா மாந்தர் என்பது இப்பகுதியின் பொருள்.

புலைவினையர் புன்மை தெரிவார் அகத்து:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பொல்லாமையை யாராய்வாரிடத்துத் தொழிற்புலையராகுவர்.
பரிப்பெருமாள்: பொல்லாமை யாராய்வாரிடத்துத் தொழிற்புலையராகுவர்.
பரிதி: புலையரும் நிகராம்; பாவத்தின் சொரூபமாவது புலையர் என்றவாறு.
காலிங்கர்: 'கடையாய புலையரினும் இவரே புலைத்தொழில் உடையவர்' என்று சொல்லப்படுவார். நூல் முறைமையான நூல்களில் குற்றங்கள் ஆராயும் சான்றோரிடத்து என்றவாறு.
பரிமேலழகர்: அத்தொழிலின் கீழ்மையை அறியாத நெஞ்சத்தராயினும், அறிவார் நெஞ்சத்துப் புலைத் தொழிலினர்.
பரிமேலழகர் குறிப்புரை: கொலை வினையர் என்றதனான், வேள்விக் கண் கொலையன்மை அறிக. 'புலை வினையர்' என்றது தொழிலால் புலையர் என்றவாறு. இம்மைக்கண் கீழ்மை எய்துவர் என்பதாம்.

'குற்றங்கள் ஆராயும் சான்றோரிடத்து, இவரே புலைத்தொழில் உடையவர் என்று சொல்லப்படுவார்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'எல்லா இழிவுகளையும் ஆராய்ந்த பெரியவர்', 'அத்தொழிலின் கீழ்மையை அறிவார் நோக்கில் இழிதொழில் புரிவோராவர்', 'ஈனமான காரியம் எதுவென்பதை எண்ணிப்பார்க்கக் கூடியவர்களுடைய மதிப்பில்', 'கொலைத் தொழிலின் கீழ்மையைத் தெரிவாரிடம் புலைத் தொழிலினர் ஆவார்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

கொலைத்தொழிலின் கீழ்மையைத் தெரிந்தவர்க்கு, இழிதொழில் செய்வோராவர் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
கொலைத்தொழில் செய்யும் அறிவில்லா மாந்தர், கொலைத்தொழிலின் கீழ்மையைத் தெரிந்தவர்க்கு, புலைவினையர் ஆவர் என்பது பாடலின் பொருள்.
'புலைவினையர்' யார்?

யார் எவ்விடத்து உயிர்க்கொலை செய்தாலும் அவர்கள் இழிதொழில் புரிபவர்களே.

கொலைச் செயலையுடையவராகிய மனிதர்கள், அத்தொழிலின் இழிவை உணர்ந்தோர்க்கு, புலைத் தொழிலினராகத் தோன்றுவர்.
உயிர்க்கொலை செய்பவர்கள் வெறுக்கத்தக்க இழிதொழிலினரே எனச் சொல்கிறது இப்பாடல். பொருளுக்காகவோ, வேண்டுதலுக்காகவோ, வேள்விக்காகவோ- கொலைஞராக இருந்தால் அவர் இழிந்தவரே. இங்கே கொலைவினையர் என்பது ஆங்கிலத்தில் Butcher என்பதற்கு இணையான தமிழ்ச்சொல்லாகக் கொள்ளலாம். கொலைவினையர் என்ற சொல் தின்னுவதற்காகக் கொல்பவன், இறைச்சி வணிகன், இரத்தக்களரிச் செயல்களில் விருப்புள்ளவன், கொலையைத் தொழிலாகக் கொண்டவன் போன்றோரைக் குறிக்கும்.
இக்குறட்பாவில் 'கொலைவினைய ராகிய மக்கள்' என்று கூறாமல் 'மாக்கள்' என்று கூறப்பட்டுள்ளது. மாக்கள் என்ற சொல் பகுத்தறியும் திறனில்லாத மாந்தர் எனப் பொருள்படும். ஆறாமறிவு இல்லாத அவர்களை விலங்குகளுக்கு ஒப்பாவர் எனச் சொல்லி தன் மனக்கசப்பை வெளிப்படுத்துகிறார் வள்ளுவர். கொலைவினையன் என்றால் அருவருப்பான, வெறுக்கத்தக்க, உயிர்களை இரக்கமின்றிக் கொல்லும் கொடிய செயல் புரிபவன் என்று இழித்துக் கூறப்படுகிறது.

'வேள்விக்கண் கொலை கொலையன்மை அறிக' என்று இக்குறளுக்கான சிறப்புரையில் கூறுகிறார் பரிமேலழகர். இவ்விளக்கம் "வேள்விக்கண் செய்யப்படும் கொலை" என்று ஒன்று உள்ளது என்பதை ஒப்புக்கொண்டு அப்படிப்பட்ட கொலை வேள்விக்காக இருந்தால் ஒத்துக் கொள்ளலாம் என்பதாக அமைந்துள்ளது. வேள்விக் கொலையும் வள்ளுவர்க்கு உடன்பாடற்றதுதான். தேவநேயப் பாவாணர் 'வள்ளுவர் கொலைத்தொழிற்கு எவ்வகை விலக்கும் கொடுக்கவில்லை யாதலாலும் அவர் ஆரியவேள்வியை மறுப்பவராதலாலும் இங்குக் "கொலைவினை" என்பது வேள்வியையும் உளப்படுத்தியதே யாகும்' என்பார். மேலும் பாவாணர் 'கொலை வினையைத் தொழிலாகக் கொண்டிருக்கும் பூசாரியரைக் "கொலைவினையர்" என்றார்' எனவும் 'வேள்வி தவிர்த்த பிற உயிர்ப் பலி கொடுத்து வழிபடும் இடங்களான காளிக்கோட்டம் போன்ற கோயில்களும் பேய்த்தெய்வங் கட்குக் காவு கொடுக்கும் இடங்களும் ஆம்' எனவும் சொல்கிறார்.

கொலைத்தொழில் செய்வோரை வீரம் மிகுந்தவர் என்றோ, வழிபாட்டுத் தலங்களில் செய்யப்படும் உயிர்க்கொலை உணவை புனிதப்படையல் என்றோ, எண்ணவேண்டாம் என்று வள்ளுவர் சொல்ல வருகிறார். கொலைத் தொழில் கீழ்மையானது அதைச் செய்பவர் இழிமாந்தர் எனத் தாழ்வுபடுத்தப்படுகிறது இங்கு.

'புலைவினையர்' யார்?

'புலைவினையர்' என்ற தொடர்க்குத் தொழிற்புலையர் (கன்மசண்டாளர்), பாவத்தின் சொரூபமாவது புலையர், கடையாய புலையரினும் இவரே புலைத்தொழில் உடையவர், மிகக் கீழ்ப்பட்ட புலைத்தொழிலினர், உயர்ந்தோராகத் தம்மைக் காட்டிக் கொள்ளினும் புலையரே, இழிந்தவன், இழிதொழில் புரிவோர், சண்டாளத் தனமுள்ள கீழ் மக்கள், புலைத் தொழில் செய்பவர், புலைத்தொழிலர், மிகமிக இழிந்தவர், புலைத்தொழிலோர், மிகத் தாழ்ந்த செயலுடையர் என்றவறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

புலைவினையர் என்ற சொல் இழிவான செயல் அல்லது தொழில் புரிவோர் என்ற பொருள் தரும். மணக்குடவர் பேச்சு வழக்காக உலகத்தார் கன்ம சண்டாளர் என்று புலைவினையரைச் சொல்லுவர் எனக் குறிக்கிறார். பாவத்தின் சொரூபமாவது புலையர் அதாவது தீச்செயலின் உருவம் என்கிறார் பரிதி. பாடலிலுள்ள புன்மை என்ற சொல்லும் 'இழிவு' என்று பொருள் படுவதே.
'புன்மைதெரிவார் அகத்து' என்ற தொடர் 'கொலைத்தொழிலின் கீழ்மையைத் தெரிந்தவர்க்கு' என்று பொருள்படும். உலகில் பலர் எது இழிவான தொழில் எது இழிவற்றது என்று தெரியாதிருக்கிறார்களே என்று வருந்திச் சொல்லப்படுகிற விதத்தில் இத்தொடர் ஆளப்பட்டுள்ளது. சுடுகாட்டில் தொழில்புரியும் பிணம் எரிப்போர், அரசின் சாவுத் தண்டனை நிறைவேற்றும் தொழில்புரிவோர் போன்றோரை இழிதொழில் செய்வோர் எனச் சொல்லியுள்ளனர். இத்தொழில்களில் சமுதாய நன்மைதானே தெரிகிறது. இவற்றில் எங்கே இழிவு உள்ளது? உயிர்க் கொலைசெய்தல், போதைப்பொருள் விற்றல், கலப்படம் செய்தல், கள்ளநோட்டைப் புழக்கத்தில் விடுதல் போன்றவையே இழிதொழில்கள்.
புன்மை தெரிந்து இழிதொழிலைப் புறக்கணியுங்கள்; கொலைஞர் எல்லாம் புலைவினையரே என்கிறார் வள்ளுவர்.

புலைவினையரை புலையர் என்றும் கூறுவர். பரிமேலழகர் தனது உரையில் தொழிலால் புலையர் என்றவாறு என்கிறார் அதாவது சாதியால் அன்று; செய்யும் தொழிலால் எனக் குறிக்கிறார். தொழிலில் இழிவு இருக்கலாம். சாதியில் ஏது இழிவு?

இழிவான தொழில் செய்வோர் புலைவினையர் ஆவர்.

கொலைத்தொழில் செய்யும் அறிவில்லா மாந்தர், கொலைத்தொழிலின் கீழ்மையைத் தெரிந்தவர்க்கு, இழிதொழில் செய்வோராவர் என்பது இக்குறட்கருத்து.

 

கொல்லாமை தொடர்புடையதாய் இருந்தால் அது இழிவற்ற தொழில்.

 

பொழிப்பு

கொலைத்தொழிலின் கீழ்மையை அறிவார் பார்வையில் கொலைஞர் இழிதொழில் செய்வோராவர்.



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

அவிசொரிந் தாயிரம் வேட்டலி னொன்ற
னுயிர்செகுத் துண்ணாமை நன்று.

 

அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின் - தீயின்கண் நெய் முதலிய வுணவுகளைச் சொரிந்து ஆயிரம் வேள்வி வேட்டலினும் ; ஒன்றன் உயிர் செகுத்து உண்ணாமை நன்று - ஒரு விலங்கின் உயிரைப் போக்கி உடம்பைத் தின்னாமை நன்றாம்.

ஆரிய வேள்விகள் கொலை வேள்விகளாதலானும், ஆயிரம் வேள்விப் பயனினும் ஓருயிரியைக் கொல்லாமையின் பயன் பெரிதென்றமையானும், அவை விலக்கப்பட்டனவாம்.

பாட வேறுபாடு:

அவிசொரிந் தாயிரம் வேட்டலன் றொன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று.

இப்பாடம், அவிசொரிந்து ஆயிரம் வேட்டலன்று ; ஒன்றன் உயிர் செகுத்துண்ணாமையே நன்று என்று பொருள் தருதல் காண்க. இதில் ஏகாரம் தொக்கது.



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

 

தன்னூன் பெருக்கற்குத் தான்பிறி தூனுண்பா
னெங்ஙன மாளு மருள்.  251 

 

தன் ஊன் பெருக்கற்குத் தான் பிறிது ஊன் உண் பான்-தன் உடம்பைப் பெரிதாக்குவதற்காகத் தான் வேறோர் உயிரியின் உடம்பைக் கொன்று தின்பவன்; எங்ஙனம் அருள் ஆளும்-எங்ஙனந்தான் அருளைக் கையாள்பவன் ஆவன்.

உடம்பைப் பருக்க வைத்தற்குக் கொலையில்லாத வுணவு நிரம்ப விருத்தலானும், உடம்பை எங்ஙனம் பேணினும் அது அழிந்து போவதாதலாலும், ஊனுணவு பெறுதற்கு ஓர் உயிரியை எள்ளளவும் இரக்கமின்றிக் கொல்ல வேண்டியிருத்தலானும், குற்றமற்றவுயிரிகளை மேன்மேலுங் கொல்வது கொடுமையினுங் கொடுமையாதலானும், 'எங்ஙனம் ஆளும் அருள்' என்றார். ஆளவே ஆளான் என்பது விடை. உயிருள்ளது உயிரி (பிராணி)



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

பொருளாட்சி போற்றாதார்க் கில்லை யருளாட்சி
யாங்கில்லை யூன்றின் பவர்க்கு.    252

 

பொருள் ஆட்சி போற்றாதார்க்கு இல்லை-பொருளைக் கையாளுதல் அதைப் பாதுகாவாதார்க்கு இல்லை; ஆங்கு அருள் ஆட்சி ஊன் தின்பவர்க்கு இல்லை-அதுபோல அருளைக்கையாளுதல் ஊன் உண்பவர்க்கு இல்லை.

ஊனுண்பவர்க்கு அருளில்லை யென்பது இங்கு முடிந்த முடிபாகக் கூறப்பட்டது. இம் முடிவிற்கு முந்தின குறள் ஏதுவாம்.

 

படைகொண்டார் நெஞ்சம்போ னன்றூக்கா தொன்ற
னுடல்சுவை யுண்டார் மனம்.                       253

 

படை கொண்டார் நெஞ்சம் போல்-பகைவரைக் கொல்வதற்குக் கொலைக்கருவியைக் கையிற் கொண்டவரின் மனம் அதனாற் செய்யுங் கொலையை யன்றி அருளை நோக்காதது போல; ஒன்றன் உடல் சுவை உண்டார் மனம் நன்று ஊக்காது-ஓர் உயிரியின் உடலைச் சுவையாக வுண்டவர் மனம் அவ்வூனையன்றி அருளை நோக்காது.

ஊன் சுவையாயிருத்தல் காயச் சரக்கை மட்டுமன்றி உயிரியின் இனத்தையும் பொறுத்ததாம். ஊனுண்பார்க்கு அருளின்மை உவமை வாயிலாகவுங் காட்டப்பட்டது.

கதறினும் தொண்டை கீளக் கத்தினும் புள்ளும் மாவும்
பதறினும் நெஞ்சமெல்லாம் பக்கமுந் தலையுங் காலும்
உதறினும் அங்குமிங்கும் ஓடினும் அரத்தம் பீறிச்
சிதறினும் இரக்கங்கொள்ளார் சிதைத்துடல் சுவைக்க வுண்டார்.

என்னும் செய்யுள் இங்கு நினைவுகூரத்தக்கது.



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல்
பொருளல்ல தவ்வூன் றினல்.                 254  

 

அருள் யாது எனின் கொல்லாமை-அருள் என்பது என்னது எனின் கொல்லாமை; அல்லது (யாது எனின்) கோறல்-அருளல்லாதது எதுவெனின் கொல்லுதல் ; அவ்வூன் தினல் பொருள் அல்லது-ஆதலால், அக்கொல்லுதலால் வந்த ஊனைத் தின்பது கரிசு (பாவம்).

கொல்லாமை கோறல் ஆகிய கருமகங்களை (காரியங்களை) அருள் அல்லது எனக் கரணகங்களாக (காரணகங்களாக)க் கூறியது சார்ச்சி (உபசார) வழக்கு. அறமும் பொருளெனப்படுவதால் அறமல்லாத கரிசைப் பொருளல்லது என்றார். அவ்வூன் என்ற சேய்மைச் சுட்டு முன்னின்ற கோறலைத் தழுவியது. மணக்குடவர் முதலடியை நிரனிறையாகப் பகுக்காது ஆற்றொழுக்காகக் கொண்டு "அருளல்லது யாதெனின் கொல்லாமையைச் சிதைத்தல்", என்று பொருள் கூறுவர்.

உண்ணாமை யுள்ள துயிர்நிலை யூனுண்ண
வண்ணாத்தல் செய்யா தளறு.                      255

 

உயிர்நிலை ஊன் உண்ணாமை உள்ளது-ஒருசார் உயிர்கள் உடம்பொடு கூடி நிற்றல் ஊனுண்ணாமையாகிய அறத்தால் நேர்வது; ஊன் உண்ண அளறு அண்ணாத்தல் செய்யாது-ஆதலால், ஒருவன் ஊனுண்பானாயின், அவனை விழுங்கிய நரகம் பின்பு அவனை வெளிப்படுத்தற்கு வாய் திறவாது.

உண்ணப்படும் உயிரிவகைகள் வரவரத் தொகை குறைந்து வருவதனாலும், சில காட்டுயிரிகள் நாளடைவில் அற்றும் போவதனாலும், 'உண்ணாமையுள்ள துயிர்நிலை' என்றார். உயிர்களெல்லாம் நிற்றியம் என்பது கொள்கையாதலின், உண்ணப்படும் உயிர்கள் குறையின் உண்ணப்படா வுயிரிகள் கூடும் என்பதாம். ஊனுண்டவன் நீண்டகாலம் நரகத்தில் துன்புறுவான் என்பது 'அண்ணாத்தல் செய்யா தளறு' என்பதன் கருத்தாம். ஊன் என்பது முன்னும் பின்னுஞ் சென்றிசைதலின் தாப்பிசைப் பொருள்கோளும் இடைநிலை விளக்கணியுமாகும். நிற்றியம்-நித்ய(வ.).

தினற்பொருட்டாற் கொல்லா துலகெனின் யாரும்
விலைப்பொருட்டா லூன்றருவா ரில்.                      256

 

தினற்பொருட்டு உலகு கொல்லாது எனின்-பேதைமை அல்லது குறும்புத்தனம் பற்றியல்லது ஊன் தின்பதற்காக உலகத்தார் உயிரிளைக் கொல்லாரெனின்; விலைப் பொருட்டு ஊன் தருவார் இல்-பொருள் பெறும் நோக்கத்தோடு ஊன் விற்பவரும் ஒருவரும் இரார்.

ஊன் தின்பதற்காக ஓர் உயிரியைக் கொன்றால், அக் கொலைக்குற்றம் அதைக் கொன்றவனைச் சாருமே யன்றி அதன் ஊனைத் தின்றவரைச் சாராது, என்னும் புத்த சமய வுறழியை (வாதியை) நோக்கிக் கூறிய கூற்றாகும் இது. விலைக்கு வாங்கி யுண்பாரும் வீட்டிற் கொன்று உண்பாரும் ஆக ஊனுண்பார் இரு திறத்தார். குற்றத்தைப் பொறுத்த அளவில் இவ்விரு திறத்தாரும் ஒரு திறத்தாரே. ஒருவன் ஒர் உண்ணப்படும் உயிரியைக் கொல்வதற்கு அதன் ஊனுண்பவரும் நேர்வகையிலும் நேரல்லா வகையிலும் தூண்டுபவராயிருத்தலால், அக் கொலைக் குற்றம் கொன்றானையும் தின்றாரையும் ஒக்கச் சாரும் என்பது வள்ளுவர் கருத்தாகும். உலகம் என்பது இங்குப் பெரும்பான்மை பற்றிய ஆகுபெயர். 'ஆல்' ஈரிடத்தும் அசைநிலை.



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்
புண்ண துணர்வார்ப் பெறின்.                                  257

 

புலால் பிறிது ஒன்றன் புண் - புலால் என்பது வேறோர் உடம்பின் புண்ணே; அது உணர்வார்ப் பெறின் உண்ணாமை வேண்டும் - அவ்வுண்மையை அறியப் பெறின் அதை உண்ணாதிருத்தல் வேண்டும்.

உண்மையை உணர்தலாவது நோய்ப்பட்டதென்றும் துப்புர வற்றதென்றும் அருவருப்பானதென்றும் அறிதல். அங்ஙனம் அறியின் உண்ணாரென்பது கருத்து. 'புலாஅல்' இசை நிறையளபெடை. அது வுணர்வார் என்பதின் வகர வுடம்படுமெய் தொக்கது.

 

செயிரிற் றலைப்பிரிந்த காட்சியா ருண்ணா
ருயிரிற் றலைப்பிரிந்த வூன்.                                 258

 

செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் - மயக்கம் என்னும் குற்றத்தினின்று நீங்கிய தெள்ளறிவினர்; உயிரின் தலைப் பிரிந்த ஊன் உண்ணார் - ஓர் உயிரினின்று நீங்கிய வுடம்பை உண்ணார்.

உயிரினின்று நீங்கியது பிண மென்று உணர்தலின் உண்ணா ரென்றார். 'தலைப்பிரிதல்' என்பது ஒரு சொற்றன்மைப்பட்ட கூட்டுச்சொல். மயக்கம் ஐயமுந் திரிபும்.

 

கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
யெல்லா வுயிருந் தொழும்.                                     260

 

கொல்லான் புலாலை மறுத்தானை - ஓருயிரையுங் கொல்லாதவனாய்ப் புலாலையும் உண்ணாதவனை; எல்லா உயிரும் கைகூப்பித் தொழும் - எல்லா மக்களும் கைகுவித்து வணங்குவர்.

கொல்லாதவன் புலாலுண்பவனாகவும் புலாலுண்ணாதவன் கொல்பவனாகவும் இருக்கலா மாதலால், அவற்றால் பயினின்மை கருதி ஈரறங்களையும் உடன் கூறினார். கைகூப்பித் தொழுதல் மற்ற வுயிர்கட் கியையாமையின் மக்களுயிர் எனக் கொள்ளப்பட்டது. உயிர் என்பது சொல்லால் அஃறிணை யாதலின், பல்லோர் படர்க்கையிற் செல்லாச் செய்யுமென்னும் முற்று இங்குச் செல்வதாயிற்று. ஈரறங்களையுங் கடைப்பிடிப்பார் , மறுமையில் (தேவர் நிலையில் ) மட்டு மன்றி இம்மையில் மக்கள் நிலையிலும் பிறரால் தெய்வமாக மதிக்கப் படுவர் என்பது கருத்து.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard