Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 51. இயல்புடைய மூவர்


Guru

Status: Offline
Posts: 7474
Date:
51. இயல்புடைய மூவர்
Permalink  
 


இல்வாழ்வான் என்பான் க்கும்
நல்லாற்றின் நின்ற துணை

(அதிகாரம்:இல்வாழ்க்கை குறள் எண்:41)

பொழிப்பு: (மு வரதராசன்) இல்லறத்தில் வாழ்பவனாகச் சொல்லப்படுகின்றவன் அறத்தின் இயல்பை உடைய மூவர்க்கும் நல்வழியில் நிலை பெற்ற துணையாவான்.

மணக்குடவர் உரை: இல்வாழ்வானென்று சொல்லப்படுபவன் இயல்புடைய மூவர்க்கும் நல்ல வழியின்கண்ணே நின்றவொருதுணை.
(தவசி, பிரமச்சாரி, துறவியாகிய மூவர்) என்றது தானமாகிய வில்லறஞ் செய்யுமவன் தவத்தின்பாற்பட்ட விரதங் கொண்டொழுகாநின்ற பிரமச்சாரிக்கும், தவமேற் கொண்டொழுகாநின்ற வானப்பிரஸ்தன் ஸந்நியாசிகளுக்கும், தத்தம் நிலைகுலையாம லுணவு முதலாயின கொடுத்துப் பாதுகாத்தலின் அவர்க்கு நல்லுலகின்கண் செல்லும் நெறியிலே நின்ற வொரு துணையென்று கூறியவாறாயிற்று. துணையென்பது இடையூறு வாராமலுய்த்து விடுவாரை.

பரிமேலழகர் உரை: இல்வாழ்வான் என்பான் - இல்லறத்தோடு கூடி வாழ்வான் என்று சொல்லப்படுவான்; இயல்பு உடைய மூவர்க்கும் நல் ஆற்றின் நின்ற துணை- அற இயல்பினையுடைய ஏனை மூவர்க்கும் அவர் செல்லும் நல்லொழுக்க நெறிக்கண் நிலை பெற்ற துணை ஆம்.
(இல் என்பது ஆகுபெயர். என்பான் எனச் செயப்படு பொருள் வினைமுதல் போலக் கூறப்பட்டது. ஏனை மூவர் ஆவார், ஆசாரியனிடத்தினின்று ஓதுதலும் விரதங்காத்தலும் ஆகிய பிரமசரிய ஒழுக்கத்தானும், இல்லை விட்டு வனத்தின்கண் தீயொடு சென்று மனையாள் வழிபடத் தவஞ் செய்யும் ஒழுக்கத்தானும், முற்றத் துறந்த யோக ஒழுக்கத்தானும் என இவர்; இவருள் முன்னை இருவரையும் பிறர் மதம் மேற்கொண்டு கூறினார். இவர் இவ்வொழுக்க நெறிகளை முடியச் செல்லுமளவும், அச்செலவிற்குப் பசி நோய், குளிர் முதலியவற்றான் இடையூறுவாராமல், உண்டியும் மருந்தும் உறையுளும் முதலிய உதவி, அவ்வந்நெறிகளின் வழுவாமல் செலுத்துதலான் 'நல் ஆற்றின் நின்ற துணை' என்றார்.)

கு ச ஆனந்தன் உரை: குடும்பத் தலைவன், பெற்றோர், துணைவி, மக்கள் ஆகிய இல்வாழ்க்கை இயல்புடைய முத்திறத்தார்க்கும் நன்னெறி நின்று பயன்தரும் துணையாவான்.

பொருள்கோள் வரிஅமைப்பு:
இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற துணை.

பதவுரை: இல்வாழ்வான்-இல்லற வாழ்க்கை நடத்துபவன், குடும்பவாழ்க்கை நடத்துபவன்; என்பான்-என்று சொல்லப்படுபவன்; இயல்புடைய-(அறத்தோடு கூடிய) தன்மையுடைய; மூவர்க்கும்-மூன்று திறத்தார்க்கும்.; நல்லாற்றின்கண்-நல்ல நெறியின்கண்; நின்ற-நிலைபெற்ற; துணை-உதவி, ஆதரவு.


இல்வாழ்வான் என்பான்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இல்வாழ்வானென்று சொல்லப்படுபவன் (தவசி, பிரமச்சாரி, துறவியாகிய மூவர்) என்றது தானமாகிய வில்லறஞ் செய்யுமவன்;
காலிங்கர்: மறைகளாலும் மற்றுள்ள நூல்களாலும் இல்வாழ்வான் என்று சொல்லப்படும் மரபினையுடையான் அவனே;
பரிமேலழகர்: இல்லறத்தோடு கூடி வாழ்வான் என்று சொல்லப்படுவான்;
பரிமேலழகர் குறிப்புரை: இல் என்பது ஆகுபெயர். என்பான் எனச் செயப்படு பொருள் வினைமுதல் போலக் கூறப்பட்டது.

'இல்வாழ்வான் என்று சொல்லப்படுபவன்' என்று பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'இல்லறத்தான்', 'இல்லறத்தான் எனப்படுபவன்', 'இல்லறத்தில் வாழுஞ் சிறப்புடையவன்', 'மனைவி மக்களோடு வாழ்ந்து குடும்பம் நடத்துகிறவன்' என்றபடி உரை தந்தனர்.

இல்லறத்தில் வாழ்வான் என்பது இப்பகுதியின் பொருள்.

இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற துணை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இயல்புடைய மூவர்க்கும் நல்ல வழியின்கண்ணே நின்றவொருதுணை.
மணக்குடவர் குறிப்புரை: தவத்தின்பாற்பட்ட விரதங் கொண்டொழுகாநின்ற பிரமச்சாரிக்கும், தவமேற் கொண்டொழுகாநின்ற வானப்பிரஸ்தன் ஸந்நியாசிகளுக்கும், தத்தம் நிலைகுலையாம லுணவு முதலாயின கொடுத்துப் பாதுகாத்தலின் அவர்க்கு நல்லுலகின்கண் செல்லும் நெறியிலே நின்ற வொரு துணையென்று கூறியவாறாயிற்று. துணையென்பது இடையூறு வாராமலுய்த்து விடுவாரை.
பரிதி: இயல்புடைய மூவராய பிரம்மசாரி, வானப்பிரஸ்தன், சந்நியாசி என்கிற மூவர்க்குந் துணையாம் என்றவாறு.
காலிங்கர்: பிரம்மசரியம், வானப்பிரஸ்தம், சந்நியாசம் என்கின்ற மரபினையுடைய மூவர்க்கு வழிபாட்டின் தன்னிலை நின்ற துணை என்றவாறு. [வழிபாடு-அவ்வந்நெறியில் ஒழுகுதல்]
பரிமேலழகர்: அற இயல்பினையுடைய ஏனை மூவர்க்கும் அவர் செல்லும் நல்லொழுக்க நெறிக்கண் நிலை பெற்ற துணை ஆம்.
பரிமேலழகர் குறிப்புரை: ஏனை மூவர் ஆவார், ஆசாரியனிடத்தினின்று ஓதுதலும் விரதங்காத்தலும் ஆகிய பிரமசரிய ஒழுக்கத்தானும், இல்லை விட்டு வனத்தின்கண் தீயொடு சென்று மனையாள் வழிபடத் தவஞ் செய்யும் ஒழுக்கத்தானும், முற்றத் துறந்த யோக ஒழுக்கத்தானும் என இவர்; இவருள் முன்னை இருவரையும் பிறர் மதம் மேற்கொண்டு கூறினார். இவர் இவ்வொழுக்க நெறிகளை முடியச் செல்லுமளவும், அச்செலவிற்குப் பசி நோய், குளிர் முதலியவற்றான் இடையூறுவாராமல், உண்டியும் மருந்தும் உறையுளும் முதலிய உதவி, அவ்வந்நெறிகளின் வழுவாமல் செலுத்துதலான் 'நல் ஆற்றின் நின்ற துணை' என்றார். [தீ-ஒருவன் இல்லறத்தை ஏற்றநாள் முதல் நாடோறும் அவனால் ஓம்பப்படும் தீ; முடியச் செல்லுமளவும் - இறுதிவரையில்]

'பிரம்மசரியம், வானப்பிரஸ்தம், சந்நியாசம் என்கின்ற மரபினையுடைய மூவர்க்கும் அவர் செல்லும் நல்லொழுக்க நெறிக்கண் நிலை பெற்ற துணை ஆம்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'மரபான மூவேந்தர்க்கும் நல்லாட்சிக்கு உற்ற துணையாவான்', 'மரபில் வந்த மூவேந்தர்க்கும் நல்லாட்சி புரிய உறுதுணையாவான்', 'பிற மூன்று அறநிலைகளில் நிற்பவர்க்கும் நன்மை பயக்கும் வழிகளில் உறுதியான உதவியாளனாவான்', 'சமுதாயத்திலுள்ள உறவினர், நண்பர்கள், எளியவர்கள் ஆகிய மூன்று இனத்தாருக்கும் நல்ல முறையில் உதவியாக இருப்பவன்' என்றபடி பொருள் உரைத்தனர்.

இயல்பினை உடைய மூவர்க்கும் நல்ல நெறிப்பட வாழ நிலைபெற்ற துணையாவான் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
இல்லறத்தில் வாழ்வான் இயல்புடைய மூவர்க்கும் நல்ல நெறிப்பட வாழ நிலைபெற்ற துணையாவான் என்பது பாடலின் பொருள்.
இயல்புடைய அந்த மூவர் யார் யார்?

அறம் குடும்பத்திலிருந்து தொடங்குகிறது.

இல்வாழ்க்கை நடத்தும் ஒருவன் இயல்பாகவே உதவ வேண்டிய நிலையில் இருப்பவர் பெற்றோர், மனைவி, பிள்ளைகள் ஆகியோர் ஆவர். அம்மூவகையினருக்கும் அவன் நல்வழியிலே நிலையான துணையாவான்.
இல்வாழ்வான் என்பான் என்ற தொடர் இல்லற நெறியில் பொருந்தி வீட்டிலிருந்து வாழ்பவன் என்றுசொல்லப்படுபவன் எனப் பொடுள்படும். இல்வாழ்வானுக்குரிய அடிப்படையான கடமை ஒன்று இங்கு அறிவுறுத்தப்படுகிறது - இல்லறத்தில் வாழ்பவன் இயல்புடைய மூவர்க்கும் நன்மை பயக்கும் வழிகளில் உறுதியாகத் துணை நிற்கவேண்டும் என்பது அது. அந்த மூவர் பெற்றோர், மனைவி, மக்கள். இயல்புடைய மூவர் என்பதற்கு இல்லறத்தின் இயல்புடன் சேர்ந்த மூவர் எனப் பொருள் கொள்ளலாம்.
இல்லற வாழ்க்கை நடத்துகிறவன் தன்னைச் சார்ந்தவர்களைப் பேணுதலும், அவர் நெறிப்பட வாழ்வதற்குத் துணை நிற்றலும் வேண்டும். இல்லறத்தோடு கூடி வாழ்பவன் என்று சொல்லப்படுபவன் இயல்பாகவே தன்னைச் சார்ந்திருக்கும் பெற்றோர், மனைவி, பிள்ளைகள் ஆகிய மூவர்க்கும் அவர்கள் நெறி தவறாமல் காக்கும் நிலையான துணையாவான். இம்மூவரும் ஒரு குடும்பத்தின் மூலக்கூறுகள் என்று அறியப்படுபவர். இவர்களுக்கு இயற்கையாகவே இல்லறத்தான் உரிமையுடைத்தவனாக இருப்பதால், அறநெறியில் நின்று அவர்களை எந்நிலையிலும் எப்போதும் காத்து அவர்களுக்கு வழிகாட்டியாகவும் துணையாகவும் இருக்க வேண்டுமென எண்ணியே நல்லாற்றின் நின்ற துணை எனச் சொல்லப்பட்டது. துணை என்பது ஆதரவும், பாதுகாப்பும் கொடுப்பவர் என்பதாம். இல்லறத்தான் தன்னைச் சார்ந்து உள்ளோர் நல்வழியில் நிற்கத் துணையாகின்றான் என்பது பொருள்.
இக்குறள் மேற்கு நாடுகளில் வழக்கிலுள்ள 'Charity Begins At Home' (அறப் பணியின் தொடக்கம் தனது இல்லமே) என்ற முதுமொழியை நினைவுபடுத்தும். மற்றவர்களுக்கு உதவும் முன் தன்னுடைய குடும்பத்தை நினைக்க வேண்டும் என்பது இதன் கருத்து.

இயல்புடைய அந்த மூவர் யார் யார்?

'‘இயல்புடைய மூவர்’ என்னும் தொகை வெளிப்படையாகத் தெரிந்த தொகையாதலின் திருவள்ளுவர் அதனை விரிவு செய்யாது வாளா விடுத்தார். காலப் போக்கில் அத்தகையப் பொருள் மறைந்தமையின் உரையாசிரியர்கள் தத்தமக்குத் தோன்றியவாறே அதனை விரித்துள்ளனர்' என்பார் இரா சாரங்கபாணி.
இயல்புடைய என்பதற்குத் தொல்லாசிரியர்களில் மணக்குடவர் 'தவத்தின்பாற்பட விரதங்கொள்ளும் தவத்தை மேற்கொண்டு ஒழுகுகிற' எனவும் 'மரபினையுடைய' எனக் காலிங்கரும், 'அறஇயல்பினையுடைய' என்று பரிமேலழகரும் பொருள் கூறினர். பின்வந்த உரையாளர்கள் அறத்தின் இயல்பை உடைய, இயற்கைத் தொடர்பால் அமைந்த, இயல்பாகவே உதவ வேண்டிய நிலையில் இருப்பவர், இயல்பாகவே முறைமையோடு பொருந்திய, இயல்பாக நெருக்கமுள்ள என்றவாறு உரைத்தனர்.

மூவர் யார் என்பது பற்றிப் பலரும் பலவிதமாகக் கருத்துக்கள் தெரிவித்தனர். இதற்குத் தொல்லாசிரியர்கள் அனைவரும் ஒரு திறத்ததாகப் பொருள் கூற, இன்றைய ஆசிரியர்களில் பெரும்பான்மையோர் முற்றிலும் மாறுபாடாகப் பொருள் கூறினர்.
தொல்லாசிரியர்கள் அனைவரும் இல்வாழ்வான் என்பவன் கிருஹஸ்தன் எனக் கூறி, மற்ற மூவராவர் பிரம்மசாரி (மாணவநிலை), வனப்பிரஸ்தன் (காடுறை வாழ்க்கை நிலை), சந்நியாசி (முற்றும் துறந்த நிலை) என்று கொண்டனர். அதைப் பின்பற்றியே பிற்கால உரையாசிரியர்களில் சிலரும் பொருள் கூறினர். இவ்வுரைகள் எல்லாம் வடநாட்டவர் பின்பற்றிய, மேலே சொல்லப்பட்ட, மனிதவாழ்வை நான்கு வகை வாழ்க்கை நெறிகளாகப் பகுக்கப்பட்ட கொள்கையைச் சார்ந்தனவாகும். திருக்குறள் இல்லற துறவற அடிப்படையில் எழுந்ததே யன்றி ஆசிரம நெறியில் எழுந்ததன்று; ஆசிரம முறையில் வாழ்வுநிலையைப் பிரித்துக் காணுதல் தமிழ் மரபன்று என்று இக்கால உரையாளர்களில் பெரும்பான்மையோர் ஆசிரமம் சார்ந்த இக்குறளுக்கான விளக்கத்தை ஏற்பதில்லை. குறளில் எங்குமே இந்நான்கு முறைகள் பேசப்படவில்லை; அது கூறுவது இல்லறம்-துறவறம் என்ற இரண்டு வாழ்வு நெறி முறைகள்தாம்.
வள்ளுவர் நால்வகை ஆசிரமநெறியை ஒப்பாதவர் ஆதலாலும் அடுத்த குறளில் 'துறந்தார்' என்று வெளிப்படையாகச் சொல்லப்பட்டதாலும் மூவர் என்பது கிருகசாஸ்திரத்தில் சொல்லப்பட்ட பிரம்மசாரி, வனப்பிரஸ்தன், சந்நியாசி என்ற மற்ற மூவர் அல்லர் என்பது தெளிவு.

மூவர் யார் என்பதை மற்ற உரையாளர்களும் அறிஞர்களும் கீழே கண்டவாறு விளக்கினர்:
தமிழக மூவேந்தரான சேர, சோழ, பாண்டிய மன்னர்கள்திரு வி க, வ சுப மாணிக்கம், இரா சாரங்கபாணி, குழந்தை
இளையர், முதியோர், பெண்கள்ச தண்டபாணி தேசிகர்
உறவினர், நண்பர், ஏழைகள்நாமக்கல் இராமலிங்கம்.
கல்வி நிலை, மனைத் தவநிலை, துறவுநிலை நிற்பார்கா சுப்பிரமணியம் பிள்ளை
பார்ப்பான், அரசன், வணிகன்தேவநேயப் பாவாணர்
சைவர், வைணவர், வைதிகர் அல்லது அரசன், ஆசான், ஆன்றோர்மு கோவிந்தசாமி
அறவாழ்வை உள்நின்றியக்கும் அறவோர், பொருள் வாழ்வை உள்நின்று இயக்கும் ஒழுக்கத்து நீத்தார், இன்ப வாழ்க்கை இயக்கும் அந்தணர்கா அப்பாத்துரை
மாணவர், தொண்டர், அறிவர்சி இலக்குவனார்
தாய், தந்தை, தாரம்வ உ சிதம்பரம், இரா இளங்குமரன்
பெற்றோர், துணைவி, மக்கள்கு ச ஆனந்தன், நெடுஞ்செழியன், கருணாநிதி, சுஜாதா.

மேலே கண்ட அட்டவணையிலிருந்து இவர்கள் உரை ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் அமைந்து பெரிதும் வேறுபாடுடையதாகவும் உள்ளன என்பதை அறியலாம். இக்குறளில் கூறப்பட்டுள்ள மூவர் யாவர் என்பதை நிறுவ அறிஞர்களும் ஆய்வாளர்களும் பெரிதும் முயன்றுள்ளனர். ஆனாலும் இக்குறளின் சொல்லமைப்பு தடை உண்டாக்கியதால் எவராலுமே இவர்தான் மூவர் என்று முடிவாகச் சுட்டிக் கூற இயலவில்லை.

இக்குறளுக்கான உரைகளில் 'குடும்பத் தலைவன், பெற்றோர், துணைவி, மக்கள் ஆகிய இல்வாழ்க்கை இயல்புடைய முத்திறத்தார்க்கும் நன்னெறி நின்று பயன்தரும் துணையாவான்' என்றது பொருத்தமாகப்படுகிறது. தாயையும் தந்தையையும் தனித்தனியே கொள்ளாமல் எல்லா வகையிலும் இணையான பெருமையுடைய அவர்களைப் பெற்றோர் என ஒருதிறத்தாராக் கொள்ளப்பட்டது. மற்ற இருவர் மனைவியும் மக்களும் ஆவர். எனவே இயல்புடைய மூவர் என்பவர் இல்வாழ்வானுக்கு இயல்பாகவே முறைமையோடு பொருந்திய, உரிமையால் இயல்பாக ஒன்றியவர்களான இம்மூவரும் ஆகின்றனர்.
பின்வரும் தென்புலத்தார், தெய்வம்... (43) என்ற பாடலில் வருகின்ற ‘தான்’ என்பது இல்வாழ்வானை மட்டும் குறியாது அவனது குடும்பத்தைக் குறிக்குமாதலின், அதன்கண் பெற்றோர், மனைவி, பிள்ளை முதலிய குடும்ப உறுப்பினர்களை அடக்குவதே முறையாகும் என்றும் மனைவி, மக்கள், பெற்றோர் என்பவர்கள் அக்குறளிற் காணப்பெறும் ஒக்கலில் அடங்குவர் என்றும்கூறி இக்குறள் கூறும் மூவர் மனைவி, மக்கள், பெற்றோர் என்பதைச் சிலர் ஒப்பமாட்டார்கள். ஆனால் அக்குறளிலுள்ள (43) 'தான்' என்பது இல்வாழ்வானைக் குறிக்கும். மேலும். அதிலுள்ள 'ஒக்கல்' என்பது இம்மூவர் தவிர்த்த சுற்றம் எனக்கொள்வதில் இழுக்கில்லை.
உலகிற்கு தம்மை அளித்த பெற்றோர்கள், பின்னர் வாழ்வில் இணையும் மனைவி, மற்றும் இல்வாழ்வின் பயனாகக் கிடைத்த மக்கட்பேறு இவர்களே இயல்புடைய அதாவது இயற்கையில் தொடர்புடைய மூவர்.

இல்லறத்தில் வாழ்வான் இயற்கையாக உரிமை உடைய பெற்றோர், வாழ்க்கைத்துணைவி, மக்கள் ஆகிய மூவர்க்கும் நல்ல நெறிப்பட வாழ நிலைபெற்ற துணையாவான் என்பது இக்குறட்கருத்து.

அதிகார இயைபு

இல்வாழ்க்கைக்கு அடித்தளமாக அமைவர்களுக்கு ஆற்றவேண்டிய கடமை.

 

பொழிப்பு

இல்லறத்தான் எனப்படுபவன் இயல்பினை உடைய மூவர்க்கும் நல்ல நெறிப்பட வாழ நிலைபெற்ற துணையாவான்.



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

2. இல்லற வியல்

இருவகை அறவாழ்க்கைகளுள், இயல்பானதும் பெரும்பான்மையானதும் உலகநடப்பிற்கு இன்றியமையாததும், துறவறத்திற்கும் இன்றியமையாத துணையாவதும், உலகிலுள்ள ஐம்புலவின்பமும் நுகர்வதும், முறைப்படி கடைப்பிடிக்கப்பெறின் வீடுபேற்றையுந் தருவதும், நல்லறமென்று உயர்ந்தோராற் சிறப்பிக்கப் பெறுவதுமான இல்லற வாழ்க்கையின் இயல்பைக் கூறும் சிறு பகுதி இல்லறவியல் எனப்பட்டது.

அதிகாரம் 5. இல்வாழ்க்கை

அஃதாவது, ஒருவன் தன் கற்புடை மனைவியொடு கூடி இல்லத்தின்கண் இருந்து இன்பந்துய்த்து வாழும் அறவாழ்க்கையின் இன்றியமையாமையையும் சிறப்பையும் எடுத்துக் கூறுவது.

 

l2100tn4.gifl2100tn1.gif
இல்வாழ்வா னென்பா னியல்புடைய மூவர்க்கு
நல்லாற்றி னின்றி துணை.

 

இல்வாழ்வான் என்பான் இல்லறத்தில் வாழ்பவன் என்று சிறப்பித்துச் சொல்லப்படும் வேளாளன்; இயல்புடைய மூவர்க்கும்-இல்லறத்தில் வாழும் இயல்புடைய ஏனை மூவர்க்கும்; நல்லாற்றின் நின்ற துணை-அவர் செல்லும் நல்லற நெறிக்கண் நிலைபெற்ற துணையாம்.

ஏனை மூவராவார் இருவகை யந்தணருள் இல்லறத்தானான பார்ப்பானும் அரசனும் வணிகனுமாவர். 'இயல்புடைய' என்னும் அடைமொழி அதிகார இயைபினால் இல்லறத்தாரைக் குறிக்குமேயன்றித் துறவறத்தாரைக் குறிக்காது. அந்தணர் (பார்ப்பார்) முதலிய நால்வரும் இல்லறத்தாரா யிருப்பரேனும், அவருள் தலைசிறந்தவர் வேளாளரே யென்பது கருத்து.

"உழுவா ருலகத்திற் காணியஃ தாற்றா
தெழுவாரை யெல்லாம் பொறுத்து."

"ஏரி னுழாஅ ருழவர் புயலென்னும்
வாரி வளங்குன்றிக் கால்."

"உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாந்
தொழுதுண்டு பின்செல்பவர்."

"தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்க றானென்றாங்
கைம்புலத்தா றோம்ப றலை."

"இருந்தோம்பி யில்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு."

"வித்து மிடல்வேண்டுங் கொல்லோ விருந்தோம்பி
மிச்சில் மிசைவான் புலம்."

என்று திருவள்ளுவரும்,

"வேளாள னென்பான் விருந்திருக்க வுண்ணாதான்" என்று நல்லாதனாரும், கூறியிருத்தலையும், 'இல்வாழ்வான்' என்பதனோடொத்த 'குடியானவன்' என்னுஞ் சொல் உலக வழக்கில் உழவனையே குறித்து வருதலையும் நோக்குக.

ஆரியர் வருமுன் ஐயரென்றும் பார்ப்பாரென்றும் சொல்லப்பட்ட இருவகையந்தணரும் தமிழரே. அவருள் முன்னவர் துறவியர்; பின்னவர் ஆசிரியர் புலவர் பண்டாரம் உவச்சர் குருக்கள் திருக்கள் நம்பியர் போற்றியர் எனப் பல்வேறு பெயர்பெற்ற இல்லறத்தார். ஏனை மூவகுப்பார் போன்றே அந்தணரும் இருவகுப்பார் என அறிக.

திருவள்ளுவர் பிராமணீயம் என்னும் ஆரியத்தை ஓழிக்கவே நூல் செய்தாராதலின், பிரமசரியம் வானப்பிரத்தம் சந்நியாசம் என்னும் முந்நிலைப்பட்ட பிராமணரைக் காத்தலைத் தமிழ வேளாளன் கடமையெனக் கூறியிரார் என்பது தெளிவுறு தேற்றமாம்.

"அறனெனப் பட்டதே யில்வாழ்க்கை" என்று ஆசிரியர் கூறுவதால்,'நல்லாறு' என்றது இல்லறத்தையே என்பது துணியப்படும்.'என்பான்' என்னும் செய்வினை வாய்பாட்டுச் சொல் செயப்பாட்டு வினைப் பொருளது.



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கு மிறந்தார்க்கு
மில்வாழ்வா னென்பான் றுணை.

 

துறந்தார்க்கும்-உலகப்பற்றைத் துறந்தவர்க்கும்; துவ்வாதவர்க்கும்-உண்பதற்கில்லாத வறியர்க்கும்: இறந்தார்க்கும்-ஒருவருமின்றித் தன்னிடம் வந்து இறந்தார்க்கும்; இல்வாழ்வான் என்பான் துணை-இல்லறத்தான் என்று சிறப்பித்துச் சொல்லப்படுபவன் துணையாம்.

"உழவினார் கைம்மடங்கி னில்லை விழைவதூஉம்
விட்டேமென் பார்க்கு நிலை".

"இரவார் இரப்பார்க்கொன் றீவர் கரவாது
கைசெய்தூண் மாலை யவர்".

என்று ஆசிரியர் வேறிடத்துங் கூறுதல் காண்க.

"துறந்தார் பொருமை" (22) "துறந்தாரின் தூய்மை" (159), "துறந்தார்க்குத் துப்புரவு "(263) , "துறந்தார் படிவத்தர்" (586) என வருமிடமெல்லாம், துறந்தார் என்னுஞ்சொல் செய்வினைப் பொருளே தருதலால், "களைகணானவராற்றுறக்கப் பட்டார்க்கும்" என்று பரிமேலழகர் ஈண்டு செயப்பாட்டுவினைப் பொருள் கூறுவது பொருந்தாது. முந்தின குறளுரையில் அவர் மூவகைப் போலித் துறவியரைப் பொருத்தியதினாலேயே இங்கு இவ்வாறுரைக்க நேர்ந்தது. களைகணானவரால் துறக்கப்பட்டவரும் துவ்வாதவருள் அடங்குவர். இறந்தார்க்குச் செய்யுந்துணை ஈமக்கடனும் இறுதிக் சடங்கும் தென்புலத்தார் படையலுமாம்.



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்க றானென்றாங்
கைம்புலத்தா றோம்ப றலை.

 

தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்று - இறந்த முன்னோர் வழிபடுதெய்வம் விருந்தினர் ஏழையுறவினர் தன் குடும்பம் என்று சொல்லப்படும்; ஆங்கு ஐம்புலத்து ஆறு ஒம்பல் - அவ் வைந்திடத்தும் செய்யவேண்டிய அறவினைகளைப் பேணிச் செய்தல்; தலை - இல்லறத்தானுக்குத் தலையாய கடமையாம்.

முதற்காலத் தமிழகமாகிய குமரிநாடு பல்வேறு கடல்கோள்களால் மூழ்கிப் போனமையால், அது இருந்த தென்றிசை கூற்றுவன்திசையாகவும் இறந்தோரின் இருப்பிடமாகவும் கொள்ளப்பட்டது. தென்புலத்தார்க்குச் செய்யும் அறவினையாவது, அவர் ஆவி ஆறுதலும் மகிழ்வும் அடைதற்பொருட்டு, அவர் இறந்த நாளில் தெய்வத்திற்குப் படைப்பது போல் அடையாள முறையிற் சில வுண்டிகளை அவர்க்கும் படைத்து, அவர் பெயரால் துறவியர்க்கும் இரப்போர்க்கும் சிறந்த உணவும் புத்தாடையும் உதவுதல். தெய்வம் என்றது அவரவர் உளநிலைக் கேற்றவாறு சிறுதெய்வமும் பெருந்தேவனும் கடவுளுமாகிய மூவகைத் தேவுகளை. கோயிற்கும் அடியார்க்கும் செய்யும் தானங்களும் தெய்வ வழிபாட்டின் பாற்படும் விருந்து என்றது புதிதாக வரும் மதிப்புள்ள அயலாரை. அவரை வரவேற்றுச் சிறந்த உணவளிப்பது இக்காலத்து வழக்கற்றது. அயலுரினின்று வந்த உறவினர்க்குச் சிறந்த வுணவளிப்பது கைம்மாறு கருதிய கடமையேயன்றி அறமாகாது. தன் என்றது தன்னையுந்தன் குடும்பத்தையும் "உண்டி முதற்றே யுணவின் பிண்டம்" (புறம் - 18). "உடம்பாரழியின் உயிரா ரழிவர்" ( திருமந்திரம், 724 ). ஆதலால், பிறருக்குத் தொண்டு செய்பவன் தன்னையும் பேணிக் கொள்ளல் வேண்டும் "தனக்கு மிஞ்சித் தானம்". ஆதலால், ஒருவன் தன் குடும்பத்தைக் கவனியாது பிறரைப் பேணுதலும் அறமாகாது.

இங்குக் குறிக்கப்பட்ட ஐந்திட வினைகளும் அறவினையாகவே ஆறாவது இடமாகிய அரசிற்குச் செலுத்தவேண்டிய வரி கட்டாய வினையாகிய கடமையாயிற்று. ஆறிலொரு கடமையிறுத்தல் என்னும் பண்டை வழக்கும், உழவனையே இல்லறத்தாருட் சிறந்தவனாகக் காட்டும். பிறதொழிலார் எல்லாரும் பெரும்பாலும் குறிப்பிட்ட சிறுதொகைப் பணத்தையே வரியாகச் செலுத்திவந்தனர்.

"பலகுடை நீழலுந் தங்குடைக்கீழ்க் காண்பர்
அலகுடை நீழ லவர்".

என்று திருவள்ளுவரும்,

"இரப்போர் சுற்றமும் புரப்போர் கொற்றமும்
உழவிடை விளைப்போர் பழவிற லூர்களும்".

(சிலப். 10: 149.150)

 

என்று இளங்கோவடிகளும், கூறுதல் காண்க.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard