Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தமிழ் வளர்த்த அண்ணல் சாமி.சிதம்பரனார்-முனைவர் க.பிரீதா


Guru

Status: Offline
Posts: 7478
Date:
தமிழ் வளர்த்த அண்ணல் சாமி.சிதம்பரனார்-முனைவர் க.பிரீதா
Permalink  
 


தமிழ் வளர்த்த அண்ணல் சாமி.சிதம்பரனார்-முனைவர் க.பிரீதா

சிறப்புக் கட்டுரை:தமிழ் வளர்த்த அண்ணல் சாமி.சிதம்பரனார்-முனைவர் க.பிரீதா

https://minnambalam.com/k/2017/01/16/1484505013

தமிழகத்திலே முதன்முறையாக பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை எழுதியவர், தமிழ் மரபில் முதல் கலப்பு மணம் செய்தவர், முதல் விதவை மறுமணம் செய்தவர், முதல் சுயமரியாதை மணம் புரிந்தவர், முதன்முதலாக மேலைநாட்டு உடையில் தமிழ் பயிற்றுவித்த தலைமைத் தமிழாசிரியர் எனப் பல்வேறுபட்ட முதலுக்குச் சொந்தக்காரர் தமிழறிஞர் சாமி.சிதம்பரனார். இலக்கியக் கல்வியை ரசனைக்கு அப்பாற்பட்டு கொண்டுசென்று சமூகப் பண்பாட்டைக் கட்டமைத்த தமிழறிஞர் இவர். தமிழிலக்கிய மரபில் இவர்தம் பங்களிப்பு சமூக முக்கியத்துவம் பெற்றதும்கூட.

முற்போக்கு இலக்கியவாதியாக சமூக நிகழ்வுகளைப் பதிவாக்கியவர் - பல்வேறான திறனாய்வாளர்களால் இனம் கண்டு கொள்ளப்பட்டவர் - உழைக்கும் அடித்தட்டு மக்களை மையப்படுத்திய படைப்புகளை உருவாக்கிய படைப்பிலக்கியவாதி - சமூகப் பொருளாதார அரசியல் விழிப்புணர்வினூடாகத் தமிழிலக்கிய மரபை எழுச்சி பெறச் செய்தவர் - எனப் பன்முக ஆளுமை கொண்ட சாமி.சிதம்பரனார் என்னும் தமிழறிஞர் பற்றிய புரிதல் இன்றைய தலைமுறையினருக்குத் தேவையாகிறது. 1900ஆம் ஆண்டில் பிறந்து 1961ஆம் ஆண்டு இயற்கை எய்திய சாமி.சிதம்பரனாரின் காலக்கட்டம் தமிழக அரசியலிலும் சரி, தமிழிலக்கிய மரபிலும் சரி மிகவும் திருப்புமுனையாக அமைந்ததாகும். ஐரோப்பியச் சிந்தனையின் தாக்கமும், தொழில் புரட்சியால் ஏற்பட்ட சமூக மாற்றமும் தமிழ் மரபை வெகுவாகப் பாதித்த காலமும் இதுவேயாகும். அப்படியான ஒரு சூழலில் மரபார்ந்த தன்மைக்குள் புதுமையைப் புகுத்தியவராக சாமி.சிதம்பரனார் காணப்படுகிறார்.

1921இல் வெளிவந்த வெண்பா யாப்பிலான 'நளாயினி கதை' என்னும் நூலே இவர்தம் முதல் படைப்பு. அந்நூல் ஏட்டளவில் உள்ளது. 1923ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக எழுதிவந்துள்ளார். படைப்பிலக்கியங்கள், அரசியல் கட்டுரைகள், வாழ்க்கை வரலாறுகள், இலக்கிய ஆய்வுகள் என இவரது எழுத்துலகம் விரிந்த பரப்பைக் கொண்டது.

மறுபிறப்பில் நம்பிக்கையுடைய மக்கள் சங்க காலத்தில் இருந்தனர் என்றும் சங்க காலத்திலேயே ஆத்திக-நாத்திக பூசலும் நிலவியிருந்தது என்றும் அக்காலத்திய பொருளாதார நிலையை உழவுத் தொழிலே பெரும்பான்மையாக நிர்ணயித்தது என்றும் சங்க இலக்கியக் காலத்தை வரையறை செய்கிறார்.

தொழில் சிறக்கவும் உற்பத்தி பெருகவும் அறம் வலியுறுத்தப்பட்டது. குடிப்பிறப்பால் ஏற்றத் தாழ்வு ஏற்படுவதை நீதி இலக்கியம் ஆதரிக்கவில்லை. மற்ற இலக்கிய காலங்களைக் காட்டிலும் நீதி இலக்கியக் காலத்தில் பேச்சுக்கலை முக்கியத்துவமாகிறது. வறியவர்க்கு ஈவதே இம்மைக்கும் மறுமைக்குமான புகழைச் சேர்க்கும். பொருளாதாரச் சமத்துவம் ஏற்பட அறத்தின்மூலமே வழி ஏற்படுகிறது.

உயிர்களிடம் அன்பு கொண்டு அமைதியை நிலவச் செய்தலே வீரமாகக் கருதப்பட்டது. மெய்ப்பொருளை உணர்வதே பெறற்கரிய பெருஞ்செல்வம் எனப் போற்றப்பட்டது என்று இவரது பக்தியிலக்கிய ஆய்வுகள் பறைசாற்றுகின்றன. தன்னுடைய சித்தர் இலக்கியம் பற்றிய ஆய்வில் மனிதநேயம் பெரிதும் பேசப்படுவதை அவர் சுட்டிக்காட்டுகிறார். வள்ளலாரின் அருட்பாவில் பொதுவுடைமை கருத்துகளை சாமி.சிதம்பரனார் காணுகிறார்.

இவருடைய படைப்புகள் முழுக்க பகுத்தறிவுக் கொள்கையும் சுயமரியாதைச் சிந்தனையும் விரவிக் கிடக்கின்றன. இவர்தம் 'அணைந்த விளக்கு' அரசியல் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தக்கூடிய நாடகம். ஆபுத்திரம் நாடகம் மனிதநேயத்தை வலியுறுத்துவது. இரு நாடகமும் பௌத்த மதக் காப்பியங்களைத் தழுவி எழுதப்பட்டன. மனித சமூகத்துக்கு அறிவை வலியுறுத்திய மதம் புத்த மதம். புத்த தர்மம் என்பதற்கு புத்தி தர்மம் என்றும் அதுதான் மனித தர்மம் என்றும் பௌத்தம் கூறுகிறது. அதனாலே அறிவை வலியுறுத்தி தனது படைப்பை வழங்கியுள்ளார் சிதம்பரனார்.

சங்க கால இலக்கியங்கள் முதல் இருபதாம் நூற்றாண்டு இலக்கியங்கள் வரை அவர் எழுதிய விளக்கங்கள் யாவும் அறிவின் தேவையை வலியுறுத்தி அமைந்தன. பண்டிதர்களிடம் காணப்பட்ட அறிவுசார் புலத்தை எளிய மக்களிடம் கொண்டுசெல்ல விழைந்தார். இலக்கியத்தினூடாக மக்களின் சமூகப் பொறுப்பை உணர்த்திக் காட்டியவர்.

தன்னுடைய படைப்பிலக்கியத்தின் வழியாக பகுத்தறிவுக் கருத்துகளையும், சுயமரியாதைக் கொள்கைகளையும் தீவிரமாக பரவச் செய்தவர். தத்துவநிலையில் நின்று தனிமனிதத் தேவையைத் தேடியவர்.

இலக்கிய ஆய்வின்வழி சமூகப் பண்பாட்டைக் கட்டமைக்கக் கூடிய தேவை அவரது காலத்தில் அவசியமாக இருந்தது. அதை அவர் நிறைவு செய்தார் என்று உறுதியாகக் கூறமுடியும்.

அரசியல் ஆளுமை:

இலக்கியமும் அரசியலும் என்றைக்கும் நெருங்கிய தொடர்புகொண்டு திகழ்கின்றன. இயக்கங்களுடன் இணைந்த இலக்கிய வளர்ச்சியின் உச்சநிலையை இருபதாம் நூற்றாண்டுத் தமிழக வரலாற்றிலே காண முடியும். அப்படியான தாக்கம் சிதம்பரனாருக்குள்ளும் இருந்தது. இவர், மிக இளமையில் தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தில் பற்றுடையவராக இருந்தார். ஆனால் அக்கட்சித் தலைவர்களின் முதலாளித்துவப் போக்கில் அதிருப்தி கண்டார். அதிலிருந்து விலகினார்.

அடுத்ததாக பெரியார் கண்ட சுயமரியாதை இயக்கத்தில் பங்குகொண்ட சிதம்பரனார், சுயமரியாதை இயக்க நிறுவனர்களில் ஒருவராகத் திகழ்ந்தார். சாதி ஒழிப்பு, புரோகித மறுப்பு, கலப்பு மணம், தீண்டாமை ஒழிப்பு எனச் சமூக அக்கறையுடையவராக எண்ணற்ற கூட்டங்களில் பேசியும் பத்திரிகைகளில் அவைகுறித்து எழுதியும் வந்தார். எஸ்.சி.பரன் என்ற புனைபெயரில் இந்தி எதிர்ப்பு குறித்து 'தமிழரின் முதல் வெற்றி' என்ற தலைப்பில் விடுதலை இதழில் கட்டுரை எழுதியுள்ளார். 'திராவிடக் கட்சியின் பொறுப்பு' எனும் தலைப்பில் 10-05-1951 அன்று விடுதலையில் கட்டுரை எழுதியுள்ளார். 'திராவிடக் கட்சியின் சிறப்பு' எனும் தலைப்பில் 11-02-1940 அன்று குடியரசு இதழில் கவிதை எழுதினார். விடுதலையில் 16-03-1951 அன்று வெளியான, 'எதிர்காலத் தேர்தல் எப்படி நடக்கும் ?' என்ற கட்டுரை அவர்தம் அரசியல் ஞானத்தைத் தெளிவுற எடுத்துக்காட்டும். விடுதலை இதழில் 13-05-1951 அன்று வெளியான, 'இந்தியா அடமானம் வைக்கப்படுகிறது' என்ற இவருடைய கட்டுரை அக்காலத்தில் அமெரிக்காவுடனான இந்தியாவின் உறவு நிலையை நுட்பமாக விளக்கும்.

நகரத்தூதன் இதழில் 24-06-1945 அன்று வெளியான 'சுயமரியாதை இயக்கத் தோழர்களுக்குள் பொறாமை ஏன் ? போட்டி ஏன் ?' என்ற கட்டுரை, அந்நேரத்தில் அவ்வியக்கத்திற்குள்ளாக நடந்த நிகழ்வுகளை வெளிச்சமிட்டுக் காட்டும். இப்படியாக, பகுத்தறிவுச் சிந்தனைகளையும் சுயமரியாதைக் கருத்துகளையும் மக்களிடம் கொண்டுசென்ற தீவிர சுயமரியாதைக்காரராக விளங்கினார் சிதம்பரனார்.

பெரியாருடன் இருந்தபோதே இவருக்கு பொருள்முதல்வாதத்தில் ஈடுபாடு அதிகம். சோசலிச கருத்துகளை உள்வாங்கிக் கொண்டு இலக்கியவாதியான ஜீவாவிடம் நட்பு கொண்டிருந்தார். இரண்டாம் உலக யுத்த முடிவில் ஏற்பட்ட சமாதானக் கவுன்சில், சோவியத் கலாச்சார சங்கம், ஆசிய - ஆப்பிரிக்க ஒருமைப்பாடு இயக்கம் போன்ற எல்லா முன்னேற்ற அமைப்புகளிலும் சேர்ந்து நற்பணி ஆற்றியுள்ளார். உள்நாட்டில் தொழிலாளி வர்க்க விவசாயப் போராட்டங்களுக்கு அவர் ஆதரவளித்துள்ளார். சீன எல்லைப் பிரச்சினையை காங்கிரஸ் ஒரு துருப்புச் சீட்டாக்கி, தேர்தலில் கம்யூனிஸ்ட் முற்போக்கு சக்திகள் வெற்றிபெறாமலிருக்க முயற்சி செய்யும் என்று அஞ்சாமல் அம்பலப்படுத்தினார். பழம்பெரும் தொழிலாளர் இயக்கத் தலைவர் ம.சிங்காரவேலு, வி.சக்கரைச் செட்டியார், எஸ்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோருடன் துணிந்து பணியாற்றிய பெருமை இவருக்குண்டு.

பல்வேறு கட்சிகளில் பொறுப்பு வகித்தாலும் குறிப்பிட்ட கட்சியின் அரசியல்வாதியாக தம்மை வெளிக்காட்டியதில்லை. அவர் 'மக்களிடையே சாதி வேற்றுமை, இன வேற்றுமை, மொழி வேற்றுமைகள் பாராட்டக் கூடாது. மக்களனைவரும் கல்வி, பொருளாதாரம் ஆகிய வகைகளில் சமநிலை அடைய வேண்டும். வர்க்க பேதமற்ற சமுதாயம் ஏற்பட வேண்டும். இவை போன்ற கொள்கைகளே என்னுடைய அரசியல் கருத்துகள்' எனக்கூறும் சிதம்பரனாரின் அரசியல் ஈடுபாடு அளவிடற்கரியது.

தம்முடைய இலக்கிய ஆய்விலும் ஆழமான அரசியல் பார்வையைச் செலுத்தியிருந்தார். சமுதாயத்தின் அனைத்துத் தரப்பு மக்களும் அரசியல் விழிப்புணர்வு பெற வேண்டும் எனவும் விழைந்தார். தமிழறிஞர் க.கைலாசபதி, சிதம்பரனாரின் அரசியல் பாதையைப் பற்றிக் கூறியிருப்பது அரசியலில் இவருக்கான ஆளுமையை தெற்றெனப் புலப்படுத்தும்.

1484505013b.jpg

இதழியல் ஆளுமை

சாமி. சிதம்பரனார் இளம் வயதிலேயே நாட்குறிப்பு எழுதும் வழக்கமுடையவர். ஆதலால் நிகழ்வுகளைக் குறிப்பெடுக்கும் வழக்கமே பின்னாளில் பத்திரிகைத் துறையில் ஈடுபடக் காரணமாக அமைந்தது. தமிழாசிரியராகப் பணிபுரிந்த காலத்திலேயே பத்திரிகையிலும் தொண்டு செய்துவந்தார். 1934-35இல் பள்ளி ஆசிரியராக இருந்தபோது மாயவரத்திலிருந்து வெளிவந்த 'வெற்றி முரசு' என்னும் இதழின் ஆசிரியராகச் செயல்பட்டார். 1948இல் பரலி சு.நெல்லையப்பரிடமிருந்து லோகோபகாரி இதழின் உரிமையை வாங்கி திரு.வேணுகோபால நாயக்கர் நடத்தியபோது ஓராண்டு காலம் அதன் ஆசிரியராக அமர்ந்து திறம்பட நடத்தினார். இவர், 1938இல் ஓராண்டு காலமும் 1952இல் ஓராண்டு காலமும் விடுதலையின் ஆசிரியராகப் பணியாற்றியிருக்கிறார். அதோடு மட்டுமன்றி குடியரசு, புரட்சி, பகுத்தறிவு, திராவிடன் ஆகிய பத்திரிகைகளிலும் ஆசிரியராகப் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

சுயமரியாதை இயக்கக் கருத்துகளை நாட்டில் நிலைக்கச் செய்ய ஒரு பரப்புரை நிறுவனத்தைப் புத்தக வெளியீட்டு நிறுவனத்தை உருவாக்க தந்தை பெரியாருக்கு ஒரு வேண்டுகோளை வைத்தார். இவரது இந்தக் கருத்தினூடாகவே குடியரசுப் பதிப்பகம் நிறுவப்பட்டது. மாபெரும் அறிவுப் புரட்சி ஏற்படுத்திய இதழாசிரியராக இவர் விளங்கினார் என்பதற்கு இதுவே சான்று.

அரசியலும் இதழியலும் வெகுஜன மக்களை எளிதாக கவரக்கூடிய துறைகள். அதனாலேயே இவரது நாட்டம் இதிலே மிகுந்திருந்தது. 30க்கும் மேற்பட்ட இதழ்களில் 13க்கும் மேற்பட்ட புனைபெயர்களில் படைப்புகளை வழங்கியுள்ளார். 1936இல் முன்னேற்றம் பிரஸ் ஆரம்பித்து அறிவுக்கொடி என்ற பத்திரிகை நடத்தினார்.

தனிமனித ஆளுமை

எவ்வித ஆடம்பரமுமின்றி எளிமையாக வாழ்ந்தவர். கொண்ட கொள்கையில் உறுதிப் பிடிப்புடன் திகழ்ந்தவர். எந்த காரணத்தைக் கொண்டும் எண்ணம் வேறு, எழுத்து வேறாக இருந்தவர் அல்லர். எண்ணியதை எழுதியவர். எழுதியதைச் செயல்படுத்தியவர்.

தமிழ்ப்பொழில் இதழ் ஆசிரியருக்கு தமிழர் வீரம் என்ற கட்டுரையை அனுப்பியபோது எழுதப்பட்ட கடிதத்தில், 'இக்கட்டுரையின் இறுதிப் பகுதியில் புலவர்கள் மறுக்கத்தக்க பொருள்களும் விரவி வரும். அவற்றையெல்லாம் தாங்களே பார்த்துக் கீழே குறிப்பெழுதும் உரிமையுண்டு. அன்றியும் இக்கட்டுரைக்காரரின் எண்ணங்களுக்குப் பத்திரிகையும் சங்கமும் உடன்பாடுடையவை அல்ல என்று குறிப்பு எழுதிக் கொள்ளலாம். தயவுசெய்து என் எண்ணத்தை மாற்றாமல் எல்லாவற்றையும் அப்படியே வெளியிட வேண்டுகின்றேன்' என எழுதியுள்ளார். தமிழன் என்ற வார்த்தையின் அடையாளம் என்பது இதுதான்.

உணர்வுத் தளத்தில் இயங்கிக் கொண்டு அறிவு விளக்கு ஏற்றிய தமிழறிஞர் இவர். அதனால் ஈரம் பதிந்த அவரது பாதச் சுவடுகள் 22 தொகுதிகளாக நம் கையில் இருக்கின்றன. அவரது அரசியல் கட்டுரைகள், இதழாசிரியர் பணிகள் என முழுவதும் வெளிவந்தால் அவருடைய பன்முக ஆளுமையை முழுவதுமாக அறிய இயலும்.

(17-01-2017 சாமி.சிதம்பரனாரின் நினைவு நாளையொட்டி இக்கட்டுரை வெளியிடப்படுகிறது.)

*

கட்டுரையாளர் குறிப்பு: சென்னை பெரம்பூரிலுள்ள செவாலியர் டி.தாமஸ் எலிசபெத் மகளிர் கல்லூரியில் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். ‘சாமி.சிதம்பரனாரின் தமிழ்ப் பணிகள்’ என்னும் தலைப்பில், சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். அண்மையில், தன்னோடு பணியாற்றுகிற தமிழ்த்துறைத் தலைவர் வ.விசயரங்கன் அவர்களோடு இணைந்து ‘தொல்காப்பியம்-எழுத்ததிகாரம் உரையுடன்’ என்ற நூலை வெளியிட்டுள்ளார். இந்நூல் மாணவர்களுக்காக உருவாக்கப்பட்ட அரிய இலக்கண உரை நூலாகும். தமிழிலக்கியப் பரப்பில் இலக்கிய ஆய்வுகள், கவிதை எனச் செயல்பட்டு வருபவர்.



__________________


Guru

Status: Offline
Posts: 7478
Date:
RE: தமிழ் வளர்த்த அண்ணல் சாமி.சிதம்பரனார்-முனைவர் க.பிரீதா
Permalink  
 


சாமி. சிதம்பரனார்

                        - பா.சு. ரமணன்|அக்டோபர் 2013|

                        Share:

                        FacebookTwitterLinkedInDigg

 

                         

                              

                         

                   

 

 

                  பள்ளி ஆசிரியர், பாடநூல் ஆக்கியோர், எழுத்தாளர், கட்டுரையாளர், 

                  அச்சக அதிபர், பத்திரிகையாளர், சொற்பொழிவாளர், கவிஞர் எனத் 

                  திகழ்ந்தவர் சாமி. சிதம்பரனார். டிசம்பர் 1, 1900ல், 

                  மயிலாடுதுறையை அடுத்த கடகம் கிராமத்தில் சாமிநாத மலையமான் - 

                  கமலாம்பாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். தந்தை 

                  நிலக்கிழார். ஓரளவு வசதியான குடும்பம். துவக்கக் கல்வியை 

                  கிராமத்திலும், உயர்நிலைக் கல்வியை மயிலாடுதுறையிலும் நிறைவு 

                  செய்தார். பின் மதுரை தமிழ்ச் சங்கத்தில் 1923ல் "பண்டிதர்" 

                  பட்டம் பெற்றார். கரந்தை தமிழ்ச் சங்கத்தில் ஆசிரியர் பணி 

                  கிடைத்தது. த.வே. உமாமகேஸ்வரன் பிள்ளை, சர் ஏ.டி. 

                  பன்னீர்செல்வம், ஆர். வெங்கடாசலம் பிள்ளை போன்றோரது அறிமுகம் 

                  கிடைத்தது. தொடர்ந்து தஞ்சை ஜில்லா போர்டு உயர்நிலைப்பள்ளியில் 

                  தமிழாசிரியர் பணியாற்றி மாணவர்களின் நன்மதிப்பைப் பெற்றார். 

                  ஒழுக்கம், உண்மை, நேர்மை போன்ற குணங்கள் கொண்டவர்களாக மாணவர்கள் 

                  விளங்க வேண்டுமென அறிவுறுத்தி வழிநடத்தினார். 

 

                  மாணவர்களுக்கு பகுத்தறிவுப் பாதையைக் காட்டினார். வேஷ்டி, டர்பன் 

                  அணிந்து ஆசிரியர்கள் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த 

                  வழக்கத்திலிருந்து மாறுபட்டு, கோட், ஷூ, டை அணிந்து பள்ளிக்குச் 

                  சென்ற முதல் ஆசிரியர் சிதம்பரனார். ஏழை மாணவர்களுக்கு இலவசமாகக் 

                  கல்வி போதித்து, அவர்களது வளர்ச்சிக்கும் உதவினார். ஓய்வு 

                  நேரத்தில் இலக்கியக் கட்டுரைகளையும், கதை, கவிதை போன்றவற்றையும் 

                  அக்கால இதழ்களில் எழுதினார். நீதிக்கட்சியின் மீது ஆர்வம் 

                  கொண்டார். பின் சுயமாரியாதை இயக்கம் அவரை ஈர்த்தது. அதன்மூலம் 

                  பெரியார் ஈ.வெ.ரா., எஸ். ராமநாதன், கைவல்லிய சாமியார் போன்றோரின் 

                  தொடர்பு கிடைத்தது. சுயமரியாதை இயக்கத்தில் இணைந்தார். சொல் 

                  வேறு, செயல் வேறு என்றில்லாமல், சுயமரியாதை இயக்க வழிப்படி 

                  சிவகாமி என்ற விதவைப் பெண்ணைக் கலப்புத் திருமணம் செய்துகொண்டு 

                  முன்மாதிரியாகத் திகழ்ந்தார். 

 

                  பெரியாரின் அன்புக்கும், மரியாதைக்கும் உரிய தொண்டராக, நண்பராக 

                  சாமி. சிதம்பரனார் திகழ்ந்தார். பெரியார் வெளியூர், 

                  சுற்றுப்பயணங்கள் செல்லும் காலங்களில் 'குடியரசு' இதழின் 

                  பொறுப்பாசிரியராக விளங்கினார். பெரியார் முதன்முதலாக மலேசியா 

                  சென்றபோது உடன் சென்றார். "காந்திக்கு 'மகாத்மா' வேண்டாம், 

                  'திரு' போதுமென்றால் ஈ.வெ.ரா.வுக்கும் 'திரு' போதுமே; பெரியார் 

                  எதற்கு?" என்று சுயமாரியாதை மாநாட்டில் துணிச்சலாகக் கேள்வி 

                  எழுப்பியவர் சாமி. சிதம்பரனார்தான். முதன்முதலில் பெரியாரின் 

                  வாழ்க்கை வரலாற்றை, அவரது அனுமதியுடன் 'தமிழர் தலைவர்' என்னும் 

                  பெயரில் உள்ளது உள்ளபடி நூலாக எழுதி வெளியிட்டவரும் சாமி. 

                  சிதம்பரனாரே! இன்றளவும் அது முக்கியமானதொரு நூலாக ஆய்வாளர்களால் 

                  போற்றப்பட்டு வருகிறது. 'குடியரசு' தவிர 'திராவிடன்', 'விடுதலை', 

                  'பகுத்தறிவு', 'புரட்சி' போன்ற இதழ்களுக்கும் சிறந்த 

                  பங்களிப்புத் தந்துள்ளார். 

 

                  சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகமாகப் பரிணமித்த காலத்தில், 

                  1940களில் பெரியாருடன் ஏற்பட்ட கொள்கை வேறுபாட்டால் 

                  கழகத்திலிருந்து வெளியேறினார். திராவிடர் கழகம் முன்வைத்த 

                  ஆரிய-திராவிடப் பாகுபாட்டைச் சாமி. சிதம்பரனார் ஏற்கவில்லை. 

                  "சாதிப் பிரிவினைகள் தமிழர்கள் அறியாத ஒன்று. ஆரியர்களாலே 

                  புகுத்தப்பட்டது அது" என்ற கருத்துக்களை மக்களிடையே சிலர் பரப்பி 

                  வந்தபோது, அதுபற்றி தீவிரமாக ஆராய்ந்து, "வகுப்புப் பிரிவும் 

                  வருணாசிரம முறையும் ஆரியர்களிடம் இல்லை. இந்தியாவில் மட்டுமே 

                  வருணாசிரம முறைக்கு அடிப்படையான வகுப்புப் பிரிவுகள் 

                  நிலைத்திருந்தன! ஆதலால் ஆரியர்கள் இங்கு வந்த பின்னர்தான் 

                  இப்பிரிவினைகளை ஒப்புக்கொண்டனர் மற்றும் தங்கள் இலக்கியங்களிலும் 

                  ஏற்றுக் கொண்டனர். ஆரியர் குடியேறிய ஏனைய நாடுகளில் பிறவியிலேயே 

                  சாதி வேற்றுமை இல்லாதிருப்பதற்கும், இந்தியாவில் மட்டுமே 

                  இருப்பதற்கும் இதுவேதான் காரணமாகும்" என்ற தன் கருத்தை 

                  ஆணித்தரமாக முன்வைத்தார். இதனால் பல எதிர்ப்புகளைச் சந்தித்தார் 

                  என்றாலும் தயங்காது தம் கருத்துக்களை பல கட்டுரைகள்மூலம் எழுதி 

                  வந்தார்.

 

                  பின் தமிழாசிரியர் பணியிலிருந்து விலகி பொதுவுடைமை இயக்கத்தில் 

                  இணைந்து சமூகப் பணியாற்றத் துவங்கினார். கும்பகோணத்தில் 

                  'முன்னேற்றம் பிரஸ்' என்ற அச்சகம் ஒன்றைத் தொடங்கி நடத்தினார். 

                  'அறிவுக்கொடி' என்ற மாத இதழையும் துவங்கினார். கலை, இலக்கியம், 

                  ஆய்வு, சமூக சீர்த்திருத்தம், விஞ்ஞானம், இசை, மருத்துவம், 

                  பெண்கள் முன்னேற்றம், தமிழ் வளர்ச்சி என்பனவற்றை உள்ளடக்கமாகக் 

                  கொண்டு அது வெளிவந்தது. ஆனாலும் பத்திரிகை, அச்சகம் நடத்தினால் 

                  பெருமளவு நேரம் அதற்கே செலவழிக்க நேர்ந்தது. தம் ஆர்வத்துக்கும், 

                  ஆராய்ச்சிக்கும் நேரம் ஒதுக்க முடியவில்லை என்பதால் அவற்றை 

                  விற்றுவிட்டார். பின்னர் மனைவியுடன் சென்னைக்குக் 

                  குடிபுகுந்தார். ம. சிங்காரவேலு முதலியார், ப. ஜீவானந்தம், மணலி 

                  கந்தசாமி போன்ற பொதுவுடைமை இயகத்தினருடனான நட்பு தீவிரமானது. 

                  'சரஸ்வதி', 'தாமரை' போன்ற பொதுவுடைமை இயக்க இதழ்களிலும், 

                  'தினமணி', 'வெற்றிமுரசு', போன்ற இதழ்களிலும் கதை, கவிதை, 

                  கட்டுரைகளை எழுத ஆரம்பித்தார்.

 

                  "அதிகார பீடத்தில் ஏறி நிற்பார்

                  ஆகட்டும் பார்க்கின்றோம் பொறுங்கள் என்பார்

 

                  கதியின்றித் தினந்தோறும் செத்துப் போகும்

                  மக்கள் துயர் காணாத குருடர் ஆனார்

 

                  சதிகாரர் சுகமாக வாழுகின்றார்

                  சாதி மத இனம் என்னும் படைபலத்தால்

 

                  கொதிநீரில் அகப்பட்ட புழுவைப் போலக்

                  கொடுமையால் வேகின்றார் ஏழை மக்கள்"

 

                  என்பது போன்ற அவரது கவிதைகள் அவரது மனதைப் படம்பிடிக்கின்றன. 

                  சமூக சிந்தனையோடு இலக்கிய ஆய்விலும் தீவிர ஈடுபாடு 

                  கொண்டிருந்தார் சாமி. சிதம்பரனார். திருக்குறளையும், 

                  சிலம்பையும், கம்பராமாயணத்தையும் நுணுக்கமாக ஆய்ந்து 

                  கட்டுரைகளும் நூல்களும் எழுதியிருக்கிறார். பல்லாயிரம் 

                  பாடல்களைக் கொண்ட கம்பராமாயணத்திலிருந்து சிறந்த பாடல்களைத் 

                  தேர்தெடுத்து, கம்பராமாயணத் தொகுப்பு ஒன்றை 

                  வெளியிட்டிருக்கிறார். 'கம்பன் கண்ட தமிழகம்', 'வள்ளுவர் வாழ்ந்த 

                  தமிழகம்', 'சிலப்பதிகாரக் காலத்து தமிழ்நாடு' போன்ற நூல்கள் 

                  அவரது நுண்மான் நுழைபுலத்தையும், ஆய்வுத் திறனையும் 

                  வெளிக்காட்டுவன. "சாமி சிதம்பரனார் பழுத்த தமிழ்ப் புலவர். 

                  தமிழ்நாட்டு முதல்வரிசை முற்போக்கு எழுத்தாளர். தமிழால் 

                  தமக்கும், தம்மால் தமிழுக்கும் பெருமை ஏற்பட வாழ்ந்த அறிஞர்... 

                  அவர் ஒரு தமிழ்ச் சித்தர்" என்கிறார் ஜீவா.

 

                  'பழந்தமிழர் வாழ்வும் வளர்ச்சியும்', 'தொல்காப்பியத் தமிழர்', 

                  'வளரும் தமிழ்', 'இலக்கியம் என்றால் என்ன?', 'பதினெண் 

                  கீழ்க்கணக்கும் தமிழர் வாழ்வும்' போன்ற சிதம்பரனாரின் நூல்கள் 

                  முக்கியமானவை. 'தொல்காப்பியம்', 'சங்க இலக்கியம்', 'பதினெண் 

                  மேல்கணக்கு', 'பதினெண் கீழ்க்கணக்கு' போன்றவற்றுக்கு ஆய்வுரைகள் 

                  எழுதியுள்ளார். தாமரை இதழில் வெளியான 'சிறுகதை இலக்கியம்', 

                  'தமிழும் வடமொழியும்', 'கிணற்றுத் தவளைப் புலவர்கள்', 

                  'பின்னோக்கிச் செல்லும் பெரியோர்கள்' போன்ற கட்டுரைகள் 

                  பாராட்டுப் பெற்றவை. பள்ளிப் பாடநூல்கள் பல எழுதியுள்ளார். 

                  தம்முடைய 'இலக்கிய நிலையம்' என்ற பதிப்பு நிறுவனம் மூலம் 

                  வெளியிட்ட 'குறுந்தொகைப் பெருஞ்செல்வம்' என்னும் மாணவர்களுக்கான 

                  நூல் முக்கியமானது. 'லோகோபகாரி', 'ஜனசக்தி' போன்ற பத்திரிகைகளில் 

                  ஆசிரியர் பொறுபேற்றுத் திறம்பட நடத்திய சாமி. சிதம்பரனார், 

                  அக்காலத்தில் புகழ்பெற்றிருந்த 'ஸ்டார் பிரசுரம்', 

                  'தமிழ்புத்தகாலயம்', 'நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்' போன்ற 

                  பதிப்பகங்களுக்கும் சிங்கை 'தமிழ் முரசு' போன்ற நாளிதழ்களுக்கும் 

                  படைப்புகளைத் தந்துள்ளார். 'இன்பசாகரன்', 'அணைந்த விளக்கு' போன்ற 

                  அவரது நாடகங்கள் படித்து இன்புறத்தக்கன. 'சித்தர்கள் கண்ட 

                  விஞ்ஞானம் தத்துவம்' என்ற நூல் சித்தர் தத்துவங்களுக்குப் 

                  புதுவிளக்கம் கூறும் நூலாகும். 'வள்ளலார் கூறும் வாழ்க்கை நெறி' 

                  என்ற நூலும் அவரது ஆய்வுத் திறனை வெளிப்படுத்துவதாகும். 

                  குறிப்பாக அதில் 'செத்தாரை எழுப்புதல்' என்ற வள்ளலாரின் 

                  கூற்றுக்குச் சாமி. சிதம்பரனார் கூறியிருக்கும் விளக்கம் மிக 

                  முக்கியமானது. 'அருட் பிரகாசர் அமுத வாசகம்', 'பத்துப் பாட்டும் 

                  பண்டைத் தமிழரும்', 'அருணகிரியார் குருபரர் அறிவுரைகள்' போன்ற 

                  நூல்கள் அவரது பரந்துபட்ட அறிவைக் காட்டுவன. 

 

                  இலக்கியம், சமுதாயம், அரசியல், தத்துவம் எனச் சுமார் 62 நூல்கள் 

                  எழுதியுள்ள சாமி. சிதம்பரனார், "ஆரியர்கள்தாம் பொருந்தாப் 

                  பழக்கவழக்கங்களையும் மூடநம்பிக்கைகளையும் தமிழரிடையே புகுத்தினர் 

                  என்பது உண்மையன்று.... தமிழ் இலக்கியங்கள் நன்றாகக் 

                  கற்றவர்களுக்கு இவ்வுண்மை தெரியும். இவ்வுண்மையை உணர்ந்த 

                  புலவர்களில் கூடச் சிலர் இதை மறைக்கின்றனர். 'தமிழர்களிடம் 

                  எவ்விதமான பொருந்தாப் பழக்கமும் இருந்ததில்லை. எந்தக் குருட்டு 

                  நம்பிக்கையும் இருந்ததில்லை. இன்றைய விஞ்ஞான அறிவுபெற்ற 

                  பகுத்தறிவாளர்களைப் போலவே அன்றும் வாழ்ந்தனர். தமிழ்நாட்டிலே 

                  புகுந்த ஆரியர்கள்தாம் பொருந்தாப் பழக்கவழக்கங்களையும், குருட்டு 

                  நம்பிக்கைகளையும் தமிழர்களிடம் புகுத்தினர்' என்று கூறுகின்றனர். 

                  இவர்கள் கூற்று வெறுப்பையே அடிப்படையாகக் கொண்டது. இவர்கள் 

                  வடமொழியில் கொண்டிருக்கும் வெறுப்பும் இதற்கொரு காரணம்." என்று 

                  கூறுகிறார். "இன்று நடப்பது விஞ்ஞான யுகம். விஞ்ஞான வளர்ச்சி 

                  காரணமாகப் பண்டைய பழக்கங்கள் சிலவற்றைத் தவறு என்று 

                  சொல்லுகின்றோம். பண்டைய மக்கள் கொண்டிருந்த நம்பிக்கைகள் 

                  சிலவற்றை மூடநம்பிக்கைகள் என்று மொழிகின்றோம். விஞ்ஞான அறிவுக்கு 

                  ஒத்துவராத சில பழக்கங்களும் நம்பிக்கைகளும் பண்டைக்கால மக்களிடம் 

                  இருந்தன. நாகரிகம் பெற்ற எல்லா இனத்தினரிடமும் இவைகள் இருந்தன. 

                  தமிழர்களிடமும் இத்தகைய பழக்கங்களும், நம்பிக்கைகளும் இருந்தன 

                  என்பதில் வியப்பில்லை." என்று அவர் கூறுவது சிந்திக்கத் தகுந்த 

                  ஒன்று. மேலும் அவர், "தமிழுக்கும் வடமொழிக்கும் இருந்து வந்த, 

                  இருந்து வரும் தொடர்பு தமிழுக்குத் தீமை விளைவித்து விடவில்லை; 

                  நன்மைதான் தந்தது; பல துறைகளில் தமிழ் இலக்கியத்தை வளம்பெறச் 

                  செய்தது" என்கிறார். 

 

                  தமது 'தொல்காப்பியத் தமிழர்' என்ற நூலில், "பண்டைத் தமிழகத்திலே 

                  உருவ வணக்கம் இருந்ததில்லை; அது இந்நாட்டிலே குடிபுகுந்த 

                  ஆரியரால் புகுத்தப்பட்ட வழக்கம் என்று சிலர் சொல்லுகின்றனர். 

                  இதற்கு ஆதாரம் ஒன்றுமில்லை. இது வெறுப்பைத் தூண்டும் வீணான 

                  கூற்று. உருவ வணக்கமுறை எல்லா நாடுகளிலும் இருந்தது. பழைய 

                  பைபிளைப் படிப்போர் இதைக் காணலாம். பல நாட்டு வரலாறுகளிலும் 

                  இதைக் காணலாம். தமிழ்நாட்டிலும் உருவ வணக்கமுறை இருந்தது என்பதை 

                  தொல்காப்பியத்தால் அறியலாம்" என்று கூறுவது சிந்திக்க வேண்டிய 

                  ஒன்று. தன் ஆய்வுக் கருத்தை உள்ளது உள்ளபடி விளக்கிக் கூறினாலும் 

                  இறுதிவரை நாத்திகராகவே இருந்தார் சாமி. சிதம்பரனார். பண்டை 

                  இலக்கியங்களின் வாயிலாக தமிழர்தம் வாழ்முறை, நாகரிகம், பண்பாடு, 

                  கலை போன்றவற்றை தெளிவுபடுத்துவதும், விளக்குவதும் தான் அவரது 

                  நோக்கமாக இருந்ததே தவிர, அதில் எந்தவித மதச் சார்பும், 

                  உள்நோக்கமும் இருந்ததில்லை. 

 

                  தமிழ், சமூகம் என்றே சிந்தித்து, வாழ்நாள் முழுதும் அதன் 

                  முன்னேற்றத்திற்காக உழைத்த சாமி. சிதம்பரனார், ஜனவரி 10, 1961ல் 

                  'நற்றிணைக் காட்சிகள்' என்னும் ஆராய்ச்சிக் கட்டுரை எழுதிக் 

                  கொண்டிருக்கும்போது திடீரென மயக்கமடைந்தார். பக்கவாத நோயால் 

                  தாக்குண்டார். மணலி கந்தசாமி, ராஜாஜி, கண. முத்தையா, பெ. தூரன் 

                  போன்ற பலர் உதவி, சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்தும் பலனின்றி 

                  17ம் நாளன்று உயிர்நீத்தார். பொது சகாப்தம் 2000த்தில் அவரது 

                  நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டன. தமிழர்கள் மறக்கக்கூடாத 

                  முன்னோடிகளுள் சாமி. சிதம்பரனாரும் ஒருவர்.

 

                  (தகவல் உதவி : "யாதும் ஊரே" மாத இதழ் - சாமி. சிதம்பரனார் 

                  சிறப்பு மலர்")

 

                  பா.சு. ரமணன்



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard