– ‘தமிழ்ப் பெரும்புலவர்’ பேராசிரியர் சரவண ஆறுமுக(முதலியா)ர்
சமரசமும், கடவுள் திருமுன் அனைவரும் சமமே என்னும் பொது நோக்கமும் நம் நாட்டில் பேசப்பட்டு நகரங்களில் மட்டுமன்றி சிற்றூர்களிலும் காட்டுத் தீயே போல் பரவி மக்களிடையே உணர்ச்சியையும் பரபரப்பையும் உண்டு பண்ணிவரும் இக்காலத்தில் ‘பொதுமறை’யாகிய திருக்குறளில், இந்நோக்கம் அமைந்திருக்கும் விதத்தை நூல் முழுவதும் பொதுவாக நோக்கிக் கண்டறிவது சாலவும் பொருத்தமுடையதேயாம்.
இருவகைச் சுவைகள் ஏற்ற அளவிற் கலந்து ஒத்து இயங்குங்கால் ஒருவித புதுச்சுவை தோன்றிச் சுவைப்போர்க்கு மிகுந்த இன்பத்தைக் கொடுக்கும். அதேபோன்று ஒரு நாட்டில் பல மக்கட் தொகுதிகளும் சாதிப் பரிவுகளும் இருப்பினும் அவற்றிடையே ஒத்த உணர்ச்சியும், பொது நோக்கமும், அன்பும் நிலவி ஒற்றுமை மிகுமாயின் அந்நாடு முன்னேற்ற மடைந்து சிறப்புறும். பிறப்பினாலேயே உயர்வு தாழ்வு ஏற்படுகிறது என்றும் சாதியால் உயர்ந்தோர், தான் உயர்ந்தோர் என்று நினைக்கின்ற போலிக் கொள்கைகளும் போலி உயர்வும் பொது நோக்காளிக்கில்லை. ஆதலினால் சமரசம் மிகுந்த நாட்டில் சாதியாலுயர்ந்தோர், தாழ்த்தப்பட்டோர் ஒடுக்கப்பட்டோர் என்ற வேற்றுமைகள் இல்லை.
‘‘பொது நோக்கத்தை’’ மக்களுக்குப் புகட்ட வந்த உலகத்துச் சான்றோர்கள் பலரும், அவ்வுணர்ச்சி மக்களுக்குச் சொல்லளவில் மட்டுமன்றி, வாழ்க்கையில் செய்து காட்டலிலும் உண்டாகும்படியான பல வழிகளைத் தங்கள் வாழ்க்கைவழி காட்டிச் சென்றுள்ளார்கள். இரசுகின்டாலசுடாய், தாயுமான முனிவர் இராமலிங்க அடிகள் போன்ற பெரியோர்களின் வாழ்க்கை வரலாற்றைப் படிப்போர் இதனுண்மையைக் கண்டறிவர். உலகம் போற்றும் கவியரசராம் இரவீந்தரரும், காந்தியடிகளும் இவ்வழியிலே மக்களைப் பயிலுவித்துத் தம் அன்புச் சமயத்தால் உலகம் முழுவதையும் ஒன்றுபடுத்தி வந்தனர். பிறப்பு வேற்றுமைகளை அறவே ஒழித்து எவ்வுயிரையம் தம்முயிர் போல் பாவித்து, உயர் பதவி பொருளீட்டம் முதலிய அழிதன் மாலையவாம் போலிப் பொருள்களில் மனம் வையாது, பிறருக்குழைக்கும் பெருமை ஒன்றினையே ஒவ்வொருவரும் தங்கள் உலக வாழ்க்கையின் முடிந்த குறிக்கோளாகக் கொள்ள வேண்டுமென்பதே இப் பெரியோர்கள் நமக்குக் காட்டும் வழியாகும். சுருங்கக் கூறின் பிறர் குற்றமே பார்த்தல், புறங்கூறல் முதலியன இன்றி, மனத்துக்குள் மாசிலராகித் தம்மிலும் தாழ்ந்த நிலையில் உள்ளவர்களைத் தம்மாற் கூடிய வரையில் முன்னேற்ற முயலுவதே பொது நோக்கத்தின் அடிப்படையான கொள்கையாகும்.
இத்துறையில் இறங்குபவர்களுக்கு நேரும் இடையூறுகள் பலவிருக்கலாம். அவற்றையெல்லாம் பொருட்படுத்தாது. தங்கள் கொள்கையைக் கொண்டு செலுத்த வேண்டும். மேலும் வெளிக்குப் பொது நோக்கத்தின் பெருமையைப் பிறர்க்குப் புலப்படும்படி மேடைகளிற் பேசித் திரிந்து, தமது வாழ்க்கையில் அதற்கேற்ற ஒன்றும் செய்யாது வாழும் போலித் தொண்டர்க்கு, ஈங்கு இடமில்லை. தாம் செய்யும் தொண்டிற்குப் பதிலாகப் பயன் யாதொன்றையும் எதிர்பார்ப்பாரும் இதற்கு அருகரல்லர், ‘‘என் கடன் பணி செய்து கிடப்பதே’’ என்று கருதிய ஆளுடைய அடிகளது தூய உள்ளமே வேண்டற்பாலது. எனவே இந்நிலைக்கு வேண்டுவன பிறர்க்கென வாழும் பெற்றியும், தனக்கென வாழாத் தகைமையும் அவற்றை நடத்திக் காட்டுவதற்குரிய மனத்திட்பமும். இடுக்கண் அழியாமையுமாம் இவற்றையெல்லாம் ஊடுருவிச் செல்லும் அன்புடைமையும் வேண்டற் பாலதே. ‘அன்பின் வழியது உயிர் நிலை’ யாதலின் எல்லாவுயிர்களிடத்தும் அன்பில்லையாயின் அவற்றிற்காகத் தாம் செய்யும் நற் செயலுமில்லையாம்.
இன்றும் பொது நோக்கமும் ஒழுக்கமுடைமையும் பிரிக்க முடியாத ஒரு தொடர்பைப் பெற்றிருக்கின்றன. ஒன்றையொன்று எப்பொழுதும் தழுவியே நிற்கும். சிறந்த ஒழுக்க சீலர்கள் சிறந்த பொது நோக்காளிகள் எல்லாரும் உயர்ந்த குணமேன்மையும் ஒழுக்கமும் உடையவர்களாகவும் இருந்திருப்பதை நாம் அறிவோம். ஒழுக்கமுடைமையே உயிரினும் பெரிதாக ஒவ்வொருவராலும் போற்றப்படுவது. தக்கார் தகவிலர் என்பது ஒருவரது பிறப்பினாலன்றி, ஒழுக்கத்தினாலேயே அறியப்படுமாதலின், நாம் வாழ்க்கையில் செய்யும் செயல்களனைத்தும் நம் ஒழுக்கமுடைமையின் மூலமாகவே ஆராயப்பட்டுத் தகுதி உடையன அல்லது தகுதி அற்றன என்று மதிக்கப்படும் ஒழுக்க மேம்பாட்டையும் குண நலத்தையும் தவிர்த்து மக்களுக்கு உயர்ந்த அணிகலன்கள் வேறில்லை. இல்லறத்தில் நின்று அன்பு ஒப்புரவுகளைச் செய்யும் பொது நோக்காளிக்கும், மனத்துக்குண் மாசிலாராகி, அகப்பற்று, புறப்பற்றுகளைக் கைவிட்டு மெய்யுணர்வு விழைந்து எவ்வுயிரையும் கருணைக் கண் கொண்டு பார்க்கும் முதிர்ந்த அருள் நெறியில் நிற்கும் ஞானியாகிய பொது நோக்காளிக்கும், பிறர்க்கும் ஒழுக்கம் இன்றியமையாததாகும்.
‘பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும் சிறப்பொவ்வா
செய் தொழில் வேற்றுமையான்’’.
‘‘பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல்’’
‘‘ஒருமை மகளிரே போலப் பெருமையும்
தன்னைத்தான் கொண்டொழுகினுண்டு’’
‘‘மறப்பினும் ஒத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்’’.
‘‘மேலிருந்தும் மேலல்லார் மேலல்லார் கீழிருந்தும்
கீழல்லார் கீழல்லவர்’’
‘‘ஏதிலார் குற்றம்போல் தன்குற்றங்காண்கிற் பின்
தீதுண்டோ வாழு முயிர்க்கு’’
‘‘பிறர்பழியும் தம்பழியும் நாணுவார் நாணுக்கு
உறைபதி என்னுமுலகு.’’
என்பன போன்ற குறட்கள் இப்பொது நோக்கக் கொள்கைக்கு அடிப்படை யானவை என்று கருதலாம்.
பொது நோக்கத்தின் தன்மையையும், நடைமுறையையும் பயனையும் தம் வாழ்க்கையில் உணர்ந்து நடத்திக் காட்டிய நுண்மாண் நுழைபுலம் உடைய சமரச ஞானியாகிய திருவள்ளுவரும் தம் பெரு நூலில் தலை சிறந்த பொது முறையை விதந்தோதுகின்றனர். மேற்கூறிய பொது விதிகளின் இன்றியமையாமையை வற்புறுத்தி; ஒழுக்கத்தின் விழுப்பத்தை எடுத்துக்காட்டி, இல்லற துறவற இயல்களில் அன்பு அருள் நெறிகளை அமைத்துள்ளார். இவ்வியல்களை முறையே படிப்போர் அன்பு அருள்கள் இல்லற துறவறங்களில் பரிணமித்து செய்வதை அறியாமற் போகார் முடிவில் சமுதாய சமய வாழ்க்கைகளிலும் பொது நோக்கம் அமைந்துள்ள பான்மையையும் தாமேயறிவர்.
தமிழ்நாடு செய்த தவப்பயனாய் அவதரித்த திருவள்ளுவர் உலகத்தோருக்கு ஒழுக்கமுறை வகுத்த சான்றோர் வரிசையில் சிறந்த ஒருவராக வைத்து எண்ணப்படுகிறார் என்பது நாமறிந்த தொன்றாகும். உலகம் போற்றும் தம் பெருநூலில் ஆசிரியர் வகுத்துப் போந்த ஒழுக்க முறை இன்னார் இனியார் என்ற வரையறையின்றி யாவரும் கையாளுதற்குரியதாய்ப் பொது நோக்கப்பார்வையோடு அருளிச் செய்யப்பட்டுள்ளது. (தொடரும்)
ஒழுக்கமுடையோர் விழுப்பமடைவர் என்பதனைத் தம் வாழ்க்கையிலேயே நடத்திக்காட்டி, ‘கூடா வொழுக்க’த்திற் கண்டிக்கப்பட்ட போலித் துறவொழுக்கம் உலகத்தாரை ஏமாற்றுவதற்கே உரியது என்பதனையும் உலகத்துக்குப் போதித்து ‘மனத்துக்கண் மாசிலராகிக்’ குணமென்னும் குன்று ஏறி நின்ற திருவள்ளுவர், அனைவரும் ஏற்றுக் கொண்டு கையாளுதற்குரிய ஒழுக்கமுறை வகுத்தது ஒருவியப்பன்று, தம் வாழ்க்கைப் பட்டறிவையே யாம் பெற்ற பேறு பெறுக இவ்வகையம் என்று சுரந்தெழும் அருள் மிகுதியினால், திருவள்ளுவர் அனைவரும் உய்யுமாறு ஒப்பற்ற ஒழுக்க முறையாக திருக்குறள் மூலமாக நமக்கு அருளிச் செய்தார் என்பதிற்படும் இழுக்கொன்றுமில்லை. சிறந்த ஒழுக்கமுறை வகுத்த இக்காரணத்தால் இவரைத் ‘தமிழ்நாட்டு சாக்ரடிசு’ என்று கொள்வோருமுண்டு.
தெய்வப் புலவர் அருளிய பொது முறை உலகத்தெழுந்த ஒழுக்க நூல்கள் பலவற்றிலும் தலை சிறந்து விளங்குகிறது. உயரிய கொள்கைகளையும், இவர்தான் கையாளுவதென்ற வரையறையின்றி, உலகத்து மக்கள் எல்லோருமே ஒருங்கே ஏற்றுக் கொண்டு ஒழுகும் முறையையும் கொண்டுள்ள ஒரு நூல் எம்மொழியில் எழுதப்படினும் அது அனைவராலும் போற்றிப் படிக்கப்பட்டுப் பல்வேறு மொழிகளிற் பெயர்த் தெழுதவும் படுகிறது. சாதி, சமய, கால தேசப் பிரிவுகளைப் பொருட்படுத்தாது சிறந்த ஒழுக்கமுறையை எல்லாருக்கும் பொதுவாக எடுத்துக் கூறிச் செல்வதே இதற்குரிய காரணமாகும். இக்காரணம் பற்றியே திருக்குறள் உலகோர் அனைவராலும் போற்றப்படுகிறது என்று கூறுவது மிகையாகாது. பரந்த நோக்கமும் விரிந்த பார்வையும் அமைந்த நம்மாசிரியர் – கைம்மாறு கருதாது தனக்கெனவும் வாழாது பிறர்க்கெனவே வாழ்ந்த திருவள்ளுவர், தம் வாழ்க்கைப்பட்டறிவுகளையும் நினைத்த எண்ணங்களையும் கருத்துகளையும் பேசிய ஞான உரையாடல்களையும் அறிவுரைகளையுமே பிறரும் அறிந்து கொள்வான் வேண்டித் திருக்குறளில் பெய்து வைத்துள்ளாராதலின் இந்நூல் முழுவதும் ஒருமை (சமரச) மணம் வீசிக் கொண்டிருக்கிறது. நூல் தொடக்கத் திலிருந்து முடிவு வரையிலும் இம்மணமே உள்ளது. இல்லறம் நடத்தும் முறையும் தூய துறவறமாகிய சமய நெறியும் சமுதாய ஒழுக்கமுறையும், இல்லறத்துக்கு முன்பு தலைவன் தலைவியர் மேற்கொண்டு ஒழுகிய களவு முறையும் அரசனும் அவனது அமைச்சர்களும் மேற்கொள்ள வேண்டிய அரசியல் முறைகளும், இன்னோரன்ன பிறவும், சுருங்கக் கூறின் மக்கள் வாழ்க்கையின் ஒப்பற்ற முழு இலட்சியமும் ஆசிரியரால் பொது நோக்கங்கொண்டே புகலப்படுகின்றன. தமது காலநிலையை ஒட்டியே, தாம் கூறவந்த செய்தியைத் திருவள்ளுவர் தமிழ்நாட்டார் மட்டுமன்றி உலகோர் அனைவரும் ஒப்புக் கொள்ளுமாறு சமரசம் ததும்பி ஊற்றெடுத்தோடி, அனைவரும் அள்ளிப் பருகி உய்யப் பொதுமறை எழுதியுள்ளார். அவர் வகுத்த ஒழுக்கமுறை தமிழ் நாட்டோடு மட்டும் தன் செல்வாக்கை நிறுத்திக் கொள்ளாமல் உலகு முழுவதும் ஒரு தனிச் செங்கோல் ஓச்சி வருவதும், நம் மொழிக்குள்ள ஒரு பெருங்சிறப்பாகும். தமிழ் உலகில் தோன்றிய எத்தனையோ நூல்கள் அழிந்து, உருத்தெரியாமல் மாறுபட்டுப் போக, தன்னகத்தே கொண்டுள்ள பொது நோக்கப் பெருமையால், திருக்குறள் மட்டும் ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளாக வளர்பிறையே போன்று நாள்தோறும் பெருமை குறையாது மேன்மேலும் வளர்ந்து கொண்டே வந்து உலகத்தினர் அனைவருக்கும் பயனைச் செய்து வருகிறது. இலத்தின் போன்ற பண்டைக்கால ஐரோப்பிய உயர்தனிச் செம்மொழிகளிலும், செர்மன், பிரெஞ்சு போன்ற தற்கால ஐரோப்பிய மொழிகளிற் சிறந்தவற்றிலும், சிறப்பாக, ஆங்கில மொழியிலும் தென்னாட்டு மொழிகளிலும், இந்தியிலும் இந்நூல் பெயர்த்தெழுதப்படுமாயின் இதன் பெருமையை யாரே கணித்தறிய வல்லார்? வடமொழியிலும் இதன் மொழி பெயர்ப்பிருப்பதாகக் கூறுகிறார்கள்.
‘‘எல்லாப் பொருளும் இதன் பாலுள; இதன் பால்
இல்லாத எப்பொருளுமில்லையால்’’
என்னும் திருவள்ளுவ மாலையடிகள் இதன் பெருமையைத் தொகுத்துக் கூறுவன.
இனி, இத்தமிழ் மறையின் பொதுத் தன்மையைப் பற்றிப் பிறபுலவர்கள் கூறுவதென்ன என்று சில புறச் சான்றுகள் காட்டுவோம். பண்டு தொட்டு இன்று காறும் இதன் சமரசத்தைத் தமிழ்ப் புலவர்களும் பிறரும் போற்றிப் புகழ்ந்து வருகின்றனர். மேல்நாட்டு அறிஞர் ஆராய்ச்சியாளர் பலரிலும் M.Ariel என்பார் (Journal Asiatique 1848) இதைப்பற்றிக் கூறுவது போற்றிப் படித்தற்குறியது.
‘தமிழ் இலக்கியத்தின் தலைமை வாய்ந்த நூலாகும் திருக்குறள். மனிதனின் மிக உயர்ந்ததும் தூயதுமான கருத்து வெளிப்பாடுகளில் ஒன்றாகும் தனிப்பட்ட சாதிகள், இனங்கள், அல்லது கொள்கைகள் என்று வேறுபடுத்திப் பார்க்காமல் மனித குலம் முழுவதற்குமே திருவள்ளுவர் அறம் வகுக்கின்றனர் என்னும் உண்மையே எல்லாவற்றிலும் திருக்குறளில் வியக்கத்தக்கதாயிருக்கிறது. எல்லாரும் ஒத்துக் கொள்ளக்கூடிய மிகவுயர்ந்த அறநெறியையும், அனுமானத்தையும் கொண்டிருக்கிறது. தூய்மையையும் வாய்மையையும் மிகவும் நுண்ணிய முறையிலும் ஆழ்ந்தும் எடுத்தியம்புகின்றது இல்வாழ்க்கை, சமுதாய வாழ்க்கைகளின் மிகவுயர்ந்த முறைகளை வகுக்கின்றது’’ என்பது அது.
எனவே, இச்சீரிய நூல் எச்சாதியினர்க்கும், எச் சமயத்தாருக்கும் எக்காலத்தாருக்கும் பொதுவாகிய உண்மைகளைத் தன்னகத்தே கொண்டு விளங்கும் தனி நூலாக இருக்கிறது. சில நூல்கள் தாம் எழுந்த காலத்து வாழும் மக்களின் கருத்தைக் கவரும் பொருள் பற்றிக் கூறிச் செல்கின்றன. பிற்காலத்துத் தோன்றுவோரின் கருத்துக்களும் இலட்சியங்களும் மாறிவிடுகின்றன. ஆனால் எக்காலத்தும் பொருந்தக் கூடிய உறுதிப்பாடுகளைத் தெரிவிக்கும் நூல் முக்காலத்தும் நின்று நிலவும். பிறவுப் பேறுகளாகிய அறம் பொருளின்பங்களையும், அவற்றின் மூலமாக வீட்டின் திறத்தையும், தெரிந்த திருவள்ளுவர் செய்த நூல் ‘எக்காலத்திலும் மாறாப் பயன் தரும் மாண்புடை நூலாக விளங்குகிறது’. இதைக் ‘காலங்கடந்த நூல்’ என்றே கூறிவிடலாம்.
இதைப் போன்றே திருக்குறள் சாதிப் பொது நூலாகவும் விளங்குகிறது. நான்கு வருணங்களாகிய சாதிப் பிரிவைப் பரிமேலழகர் தம் உரையில் புகுத்திப் பல விடங்களில் வலிந்து பொருள் கொள்ளினும், நான்கு வருணங்களைப் பற்றியும் அவை தமிழ்நாட்டில் ஏற்றுக் கொள்ளத் தக்கவை என்றும் தம் நூலில் ஆசிரியர் யாண்டும் கூறினாரில்லை. ‘‘சமன் செய்து சீர் தூக்கும் கோல்’’ போலவே நீதிகளை வகுத்து அனைவரையும் ஒருமைக் கண் கொண்டு பார்க்கின்றார். இந்நூலுக்கு எல்லோரும் உரியர். இத்தன்மையைக் கீழ்க்காணும் திருவள்ளுவமாலை வெண்பாக்கள் இனி விளக்குகின்றன.