Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: உறுப்பொத்தல் மக்களொப்பு அன்றால்


Guru

Status: Offline
Posts: 7387
Date:
உறுப்பொத்தல் மக்களொப்பு அன்றால்
Permalink  
 


உறுப்பொத்தல் மக்களொப்பு அன்றால் வெறுத்தக்க
பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு.                      பண்புடைமை  குறள் 993:
கலைஞர் மு.கருணாநிதி உரை:நற்பண்பு இல்லாதவர்களை அவர்களின் உடல் உறுப்புகளை மட்டுமே ஒப்பிட்டுப் பார்த்து மக்கள்
இனத்தில் சேர்த்துப் பேசுவது சரியல்ல; நற்பண்புகளால் ஒத்திருப்பவர்களே மக்கள் எனப்படுவர். மு.வரதராசனார் உரை:உடம்பால் ஒத்திருத்தல் மக்களோடு ஒப்புமை அன்று, பொருந்தத்தக்கப் பண்பால் ஒத்திருத்தலே
கொள்ளத்தக்க ஒப்புமையாகும். சாலமன் பாப்பையா உரை:உறுப்புக்களின் தோற்றத்தால் பிறருடன் ஒத்திருப்பது ஒப்பு ஆகாது; உள்ளத்துடன் இணையும்
பண்பால் பிறருடன் ஒத்திருப்பதே ஒப்பு ஆகும். பரிமேலழகர் உரை:உறுப்பு ஒத்தல் மக்கள் ஒப்பு அன்று - செறியத்தகாத உடம்பால் ஒத்தல் ஒருவனுக்கு நன்மக்களோடு
ஒப்பாகாமையின் அது பொருந்துவதன்று; ஒப்பதாம் ஒப்பு வெறுத்தக்க பண்பு ஒத்தல் - இனிப் பொருந்துவதாய ஒப்பாவது
செறியத்தக்க பண்பால் ஒத்தல். (வடநூலார் 'அங்கம்' என்றமையின், 'உறுப்பு' என்றார். ஒருவனுக்கு நன்மக்களோடு பெறப்படும்
ஒப்பாவது, உயிரின் வேறாய் நிலையுதல் இல்லா உடம்பு ஒத்தல் அன்று, வேறன்றி நிலையுதலுடைய பண்பு ஒத்தலாகலான்,
அப்பெற்றித்தாய அவர் பண்பினையுடையன் ஆக என்பதாம்.) . மணக்குடவர் உரை:செறியத்தகாத உடம்பாலொத்தல் ஒருவனுக்கு நன்மக்களோடொப்பாகாமையின் அது பொருந்துவதன்று;
இனிப் பொருந்துவதாய ஒப்பாவது செறியத்தக்க பண்பாலொத்தல். Translation: Men are not one because their members seem alike to outward view; Similitude of kindred quality makes likeness true. Explanation: Resemblance of bodies is no resemblance of souls; true resemblance is the resemblance of qualities that attract.

பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்
அதுநோக்கி வாழ்வார் பலர். குறள் 528:சுற்றந்தழால்.

மணக்குடவர் உரை: அரசன் எல்லாரையும் பொதுவாகப் பாராதே ஒருவனைத் தலைமையாலே பார்ப்பானாயின் அப்பார்வை நோக்கி அவனை விடாது வாழுஞ் சுற்றத்தார் பலர். இஃது ஒருவனை இளவரசாக்க வேண்டுமென்றது.
பரிமேலழகர் உரை: பொது நோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின் - எல்லாரையும் ஒரு தன்மையராக நோக்காது அரசன் தத்தம் தகுதிக்கு ஏற்ப நோக்குமாயின், அது நோக்கி வாழ்வார் பலர் - அச்சிறப்பு நோக்கி அவனை விடாது வாழும் சுற்றத்தார் பலர். (உயர்ந்தார் நீங்குதல் நோக்கிப்பொது நோக்கை விலக்கி,எல்லாரும் விடாது ஒழுகுதல் நோக்கி வரிசை நோக்கை விதித்தார்.இந்நான்கு பாட்டானும் சுற்றம் தழுவும் உபாயம் கூறப்பட்டது.).
மு. வரதராசன் உரை: அரசன் எல்லாரையும் பொதுவகையாக நோக்காமல், அவரவர் சிறப்புக்கு ஏற்றவாறு நோக்கினால, அதை விரும்பிச் சுற்றமாக வாழ்கின்றவர் பலர் ஆவர்.
மு. கருணாநிதி உரை: அனைத்து மக்களும் சமம் எனினும், அவரவர்க்குரிய ஆற்றலுக்கேற்ப அவர்களைப் பயன்படுத்திக் கொண்டால், அந்த அரசை அனைவரும் அரணாகச் சூழ்ந்து நிற்பர்.
சாலமன் பாப்பையா உரை: 
சுற்றத்தார் எல்லாரையும் ஒன்று போலவே எண்ணாமல், அவரவர் தகுதிக்கு ஏற்ப ஆட்சியாளன் உபசரிப்பான் என்றால், அச்சிறப்பை எண்ணி அவனை விடாமல் வாழும் சுற்றத்தார் பலராவர்.
Translation:Where king regards not all alike, but each in his degree, 'Neath such discerning rule many dwell happily.
Explanation:Many relatives will live near a king, when they observe that he does not look on all alike, but that he looks on each man according to his merit.



__________________


Guru

Status: Offline
Posts: 7387
Date:
Permalink  
 

 

உறுப்பொத்தல் மக்களொப்பு அன்றால் வெறுத்தக்க
பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு

(அதிகாரம்:பண்புடைமை குறள் எண்:993)

பொழிப்பு (மு வரதராசன்): உடம்பால் ஒத்திருத்தல் மக்களோடு ஒப்புமை அன்று; பொருந்தத்தக்க பண்பால் ஒத்திருத்தலே கொள்ளத்தக்க ஒப்புமையாகும்.

மணக்குடவர் உரை: .............................................

பரிமேலழகர் உரை: உறுப்பு ஒத்தல் மக்கள் ஒப்பு அன்று - செறியத்தகாத உடம்பால் ஒத்தல் ஒருவனுக்கு நன்மக்களோடு ஒப்பாகாமையின் அது பொருந்துவதன்று; ஒப்பதாம் ஒப்பு வெறுத்தக்க பண்பு ஒத்தல் - இனிப் பொருந்துவதாய ஒப்பாவது செறியத்தக்க பண்பால் ஒத்தல்.
(வடநூலார் 'அங்கம்' என்றமையின், 'உறுப்பு' என்றார். ஒருவனுக்கு நன்மக்களோடு பெறப்படும் ஒப்பாவது, உயிரின் வேறாய் நிலையுதல் இல்லா உடம்பு ஒத்தல் அன்று, வேறன்றி நிலையுதலுடைய பண்பு ஒத்தலாகலான், அப்பெற்றித்தாய அவர் பண்பினையுடையன் ஆக என்பதாம்.)

சி இலக்குவனார் உரை: உறுப்புக்களினால் ஒத்திருத்தல் மட்டும் மக்களோடு ஒத்திருத்தற்கு உரியதன்று; மக்கட்குரிய நிறைந்த பண்புகளாலும் ஒத்திருத்தலே உண்மையான ஒப்புமையாகும்.

பொருள்கோள் வரிஅமைப்பு:
உறுப்பொத்தல் மக்களொப்பு அன்றால்; ஒப்பதாம் ஒப்பு வெறுத்தக்க பண்பொத்தல்.

பதவுரை: உறுப்பு-உடம்பு; ஒத்தல்-ஒத்திருப்பது, -நிகர்த்தல்; மக்கள்-மக்கள்; ஒப்பு-ஒத்திருப்பது, நிகர்த்தல், பொருந்துதல்; அன்று-இல்லை; 'ஆல்' அசைநிலை; வெறுத்தக்க-செறியத்தக்க, நிலையான. நிறைந்த, நெருங்கத்தக்க; பண்பொத்தல்-பண்பு நிகர்த்தல்; ஒப்பதாம்-பொருந்துவதாம்; ஒப்பு- ஒப்பு, நிகர்த்தல், பொருந்துதல்.


உறுப்பொத்தல் மக்களொப்பு அன்றால்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
பரிப்பெருமாள்: மக்கள் ஒப்பாவது உறுப்பு ஒத்தலன்று;
பரிதி: மெய் வாய் கண் மூக்குச் செவி உண்டு. உறுப்பினால் குறைவில்லை என்பது நன்றல்ல;
காலிங்கர்: கை கால் கண் மூக்குச் செவி முதலிய உறுப்பு ஒத்தல் மக்கள் ஆதற்கு ஒப்பு அன்று;
பரிமேலழகர்: செறியத்தகாத உடம்பால் ஒத்தல் ஒருவனுக்கு நன்மக்களோடு ஒப்பாகாமையின் அது பொருந்துவதன்று;
பரிமேலழகர் குறிப்புரை: வடநூலார் 'அங்கம்' என்றமையின், 'உறுப்பு' என்றார். ஒருவனுக்கு நன்மக்களோடு பெறப்படும் ஒப்பாவது, உயிரின் வேறாய் நிலையுதல் இல்லா உடம்பு ஒத்தல் அன்று.

'மக்கள் ஒப்பாவது உறுப்பு ஒத்தலன்று' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'முகமொப்பு ஒருகுடி மக்கள் ஒப்பாகாது', 'உடலுறுப்புகளால் ஒத்தல் மக்கள் ஒப்பாகாது', 'நல்ல குடியிற் பிறந்த மக்கள் (அந்த நல்ல குடியிற் பிறந்தவர்கள் என்பதற்கு அடையாளம்) தம்முடைய தாய் தந்தையர் அல்லது முன்னோர்களுடைய உருவம், நிறம், அங்கங்கள் முதலியவற்றில் ஒத்திருத்தல் சரியான ஒப்பல்ல', 'மனிதர்கள் ஒத்திருப்பதென்பது உறுப்பால் ஒத்திருப்பதன்று' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

உறுப்புக்களால் ஒத்திருப்பது மக்கள் ஒப்புஆகாது என்பது இப்பகுதியின் பொருள்.

வெறுத்தக்க பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
பரிப்பெருமாள்: செறியத்தக்க குணங்களை ஒத்தல்; அதனை ஒப்பதே ஒப்பாவது என்றவாறு. [செறியத்தக்க- நெருங்கத்தக்க]
பரிப்பெருமாள் குறிப்புரை: செறியத்தக்க குணங்கள் உள ஆதலின் செறியத்தக்க குணம் என்றார். பண்பு இல்லாதார் மக்களல்லர் என்றது.
பரிதி: மக்கட் பண்பு உள்ளதே நன்று என்றவாறு.
காலிங்கர்: மற்று யாதோ ஒப்பு எனின் ஒருவர்க்குப் பெருமை பொருள் எனத்தக்க பண்பு ஒத்தல்; யாது மற்று அது, அகத்து உறுப்பாகிய நெறிக்குறிப்பு அன்றே; மற்று அதனைச் சிலரோடு சிலர் ஒப்பதே ஒப்பாவது என்றவாறு. [அகத்து உறுப்பாகிய நெறிக்குறிப்பு - அன்பு முதலிய அகத்துறுப்புக்கள்]
பரிமேலழகர்: இனிப் பொருந்துவதாய ஒப்பாவது செறியத்தக்க பண்பால் ஒத்தல்.
பரிமேலழகர் குறிப்புரை: வேறன்றி நிலையுதலுடைய பண்பு ஒத்தலாகலான், அப்பெற்றித்தாய அவர் பண்பினையுடையன் ஆக என்பதாம்.

'செறியத்தக்க குணங்களை ஒப்பதே ஒப்பாவது' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'நிறைந்த குணவொப்பு ஒப்பாகும்', 'செறியத்தக்க பண்பால் ஒத்தலே பொருந்திய ஒப்பாகும்', 'சரியான ஒப்பு எதுவென்றால் அம்முன்னோர்களிடம் நிறைந்திருந்த செல்வமாகிய 'பண்புடைமை' என்ற குணத்தில் ஒத்திருப்பதேயாகும்', 'நெருங்கி அளவளாவுதற்குரிய பண்பினால் ஒத்திருப்பதே ஒப்பாகும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

நிறைந்த பண்பால் ஒத்திருத்தலே ஒப்பாகும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
உறுப்புக்களால் ஒத்திருப்பது மக்கள்ஒப்பு ஆகாது; நிறைந்த பண்பால் ஒத்திருத்தலே ஒப்பாகும் என்பது பாடலின் பொருள்.
'மக்களொப்பு' குறிப்பது என்ன?

குணமே மனிதனாகக் காட்டும்.

உறுப்புக்களால் ஒத்திருப்பதால் மட்டும் ஒருவன் மனிதனுக்கு ஒப்பாக மாட்டான்: மக்கட்பண்பால் நிறைந்து ஒத்திருப்பதே பொருந்திய ஒப்புமையாம்.
முகத்தோற்றம், கைகள், கால்கள், உடலமைப்பு இவற்றைக் கொண்டு ஒருவர் மாந்தர் என அறிகிறோம். ஆனால் இதுபோன்று உறுப்புக்களின் ஒற்றுமை இருப்பதால் மட்டுமே ஒருவர் மனிதர் ஆகமாட்டார் என வள்ளுவர் சொல்கின்றார். ஒருவன் பண்பு நிறைந்தவனா எனப் பார்க்கச் சொல்கிறார். அதாவது மனிதன் என்றால் மக்கட் பண்பு நிறைந்தவனாய் இருப்பது என்கிறார் அவர். இது நற்குணங்கள் பல காணப்பட்டால்தான் ஒருவன் மனிதனாவான் என்பதைச் சொல்வது. வேறுவகையில் சொல்வதானால் உறுப்புகள் மக்களுக்கு ஒப்பாக இருத்தல் ஒப்புமையாகாது. பண்புகளால் நிறைந்தவன் என்ற ஒப்பு கூறுவதே மனிதப் பிறப்பொப்புமை காண்பதாம். பண்புடைமை என்பது மக்கட்பண்பு. மக்கட்பண்பு உடையார் மட்டுமே மக்கட்பிறப்பினர். மக்கட்பண்பு என்பது எவரும் எளிதாக அணுகக்கூடிய தன்மை, அன்புடைமை, நல்லியல்புகள் அமைந்த குடும்பத்திற்கேற்ற குணங்களுடையனாதல் ஆகிய மூன்றுமே உடையதாக இருப்பது என இந்த அதிகாரத்து முதல் இரண்டு குறள்களில் பண்புடைமைக்கு இலக்கணம் கூறும்போது சொல்லப்பட்டது.
'வெறுத்தக்க பண்பு' என்ற தொடர் செறியத்தக்க குணங்கள் எனப்பொருள்படும். இது நற்குணங்கள் நிறைந்திருப்பதைக் குறிக்கும்.

பிறப்பால் மனிதராய், உறுப்புகளால் மக்கள் போல்வார் எல்லாரையும் மக்கள் எனக் கொள்ளவேண்டாம் என வள்ளுவர் துணிகிறார். மக்கள் யாவருக்கும் உறுப்புகளாலாய ஒப்பு கிடைத்து விடுகிறது. ஒரு மனிதனுக்கும் மற்றொருவனுக்கும் உறுப்புகளில் வேறுபாடு இல்லை. அவ்வாறு உடம்பால், உறுப்புகளால், உருவால் மனிதர்களைப் போன்றிருந்தாலும் அவர்களை மனிதர்களோடு ஒப்பாக வைக்கமுடியாது; உறுப்பு அமைப்பால் ஒத்திருப்பதாலேயே ஒருவர் மனிதராகி விடுவதில்லை. மக்களுள் சிலர் மரக்கட்டை போல் நிற்கின்றார்கள்; வேறுசிலர் புழுக்கள்போல் ஊர்ந்து செல்கின்றனர். பலர் ஆந்தைகள்போல் திரிகின்றனர். இன்னும் சிலர் விலங்குகளாய் மாறிப் பாய்கின்றனர். பலர் ஒத்தது அறியாமல் அலைகின்றனர். ஒருசிலரே பண்பட்ட மக்களாய் குணம் நிறைந்து கலந்து பழகி வாழ்கின்றார்கள். இதனையே மக்களுக்கு உரிய உறுப்புக்கள் அமைந்திருப்பதைக் கண்டு மக்கள் என்று கருதவேண்டாம் என்று இக்குறள்வழி வள்ளுவர் கூறுகிறார். பொருந்துவதாகிய ஒப்புமை எது என்றால் மக்கட் பிறப்பிற்கு உரிய பண்பால் ஒத்திருப்பதே ஆகும் என்கிறார். ஒருவரது குணங்கள் திண்ணிய, வலிமையான, செறிவான பண்புடையாரோடு ஒத்திருந்தால் அவர் மனிதரென்று ஒப்புக்கொள்ள முடியும். அதாவது மனிதர்க்குள்ள ஒற்றுமை காணும்போது அவரவர்களுக்கு உள்ள பண்பைக் கொண்டு ஒப்புமை காணவேண்டும்.

உரம்ஒருவற்கு உள்ள வெறுக்கைஅஃது இல்லார் மரம் மக்கள் ஆதலே வேறு (ஊக்கமுடைமை 600 பொருள்: ஒருவற்கு வலிமையாவது ஊக்கமிகுதியே; அது இல்லாதவர் மரங்களாவார். வடிவால் மக்களாய் இருப்பதே மரங்களிலிருந்து வேறுபட்ட தன்மையாகும்) என்ற குறட்பாவை இங்கு இணைத்து நோக்கலாம்.

ஒப்பு என்னும் சொல் இக்குறளில் மும்முறை அமைந்துள்ள நடைத்திறம் இன்புறத்தக்கதாய் உள்ளது.

'மக்களொப்பு' குறிப்பது பொருள் என்ன?

'மக்களொப்பு' என்றதற்கு மக்கள் ஒப்பு, மக்கள் ஆதற்கு ஒப்பு, நன்மக்களோடு ஒப்பு, பெரியவர்களுடனே சரி, பண்புடை மக்களோடு ஒத்தல், மக்களோடு ஒப்புமை, மக்களை ஒத்தவர், மக்களுடன் ஒப்பாதல், ஒருகுடி மக்கள் ஒப்பு, மக்கள் ஒப்பு, தம்முடைய தாய் தந்தையர் அல்லது முன்னோர்களுடைய உருவம், நிறம், அங்கங்கள் முதலியவற்றில் ஒத்திருத்தல், மக்களொடு ஒத்தது, மனிதர்கள் ஒத்திருப்பது, மக்களோடு ஒத்திருத்தற்கு, மக்கள் எனப்படுதற்குரிய ஒப்புமை, ஒருவன் மனிதனாவது, நன்மக்களை ஒக்கும் ஒப்பு, மக்கள் ஒரு சமமானவர் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

மனிதராகத் தோற்றம் தரும் எல்லோரையும் மக்கள் என ஒப்புக்கொள்ளலாமா? கூடாது என்கிறார் வள்ளுவர். பின் எப்படி மக்கள் எனக் கண்டறிவது? செறிந்த குணங்கள் ஒத்திருத்தலாயே ஒருவன் நன்மகனாக முடியும். நிறைந்த பண்புகளைக் கொண்டு ஒழுகுவாரோடு ஒப்பியே, அவ்வாறே ஒழுகுபவரை மனிதர் என்று ஒப்புக்கொள்ளமுடியும் என்கிறார் அவர்.

வ சுப மாணிக்கம் 'முகமொப்பு ஒருகுடி மக்கள் ஒப்பாகாது; நிறைந்த குணவொப்பு ஒப்பாகும்' என உரை தந்தார். நாமக்கல் இராமலிங்கம் 'நல்ல குடியிற் பிறந்த மக்கள் தம் முன்னோர்களின் அங்க அடையாளங்களில் உருவம், நிறம் முதலியவற்றில் ஒத்திருப்பது சரியான ஒப்பல்ல. சரியான ஒப்பு எதுவென்றால், தம் முன்னோர்களுடைய செல்வம் ஆகிய பண்புடைமை என்ற குணத்தில் ஒத்திருப்பதேயாகும்' என இக்குறளுக்கு உரை வரைந்தார். இவர்கள் ஒரு குடும்பத்தில் பிறந்த மக்களுள் உறுப்புகள்/குணம் ஒப்புமை காண்பது பற்றிப் பேசுகின்றனர்.

மக்களொப்பு என்பது நல்ல பண்புகள் நிறைந்திருப்போரை ஒத்திருத்தலாம்.

மக்களொப்பு மக்கள் என்ற உருவ அமைப்பில் ஒத்திருத்தல் அன்று; நிறைந்த பண்பால் ஒத்திருத்தலே ஒப்பாகும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

அடர்ந்த பண்புடைமை ஒருவரை மனிதராக்கும்.

பொழிப்பு

உறுப்புகள் ஒத்திருத்தல் மக்களொப்பு அல்ல; நிறைந்த பண்புகளால் மனித ஒற்றுமை நோக்கப்படும்.



__________________


Guru

Status: Offline
Posts: 7387
Date:
Permalink  
 

பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்
அதுநோக்கி வாழ்வார் பலர்

(அதிகாரம்:சுற்றந்தழால் குறள் எண்:0528)

பொழிப்பு: அரசன் எல்லாரையும் பொதுவகையாக நோக்காமல், அவரவர் சிறப்புக்கு ஏற்றவாறு நோக்கினால், அதை விரும்பிச் சுற்றமாக வாழ்கின்றவர் பலர் ஆவர்.

மணக்குடவர் உரை: அரசன் எல்லாரையும் பொதுவாகப் பாராதே ஒருவனைத் தலைமையாலே பார்ப்பானாயின் அப்பார்வை நோக்கி அவனை விடாது வாழுஞ் சுற்றத்தார் பலர்.
இஃது ஒருவனை இளவரசாக்க வேண்டுமென்றது.

பரிமேலழகர் உரை: பொது நோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின் - எல்லாரையும் ஒரு தன்மையராக நோக்காது அரசன் தத்தம் தகுதிக்கு ஏற்ப நோக்குமாயின், அது நோக்கி வாழ்வார் பலர் - அச்சிறப்பு நோக்கி அவனை விடாது வாழும் சுற்றத்தார் பலர்.
(உயர்ந்தார் நீங்குதல் நோக்கிப்பொது நோக்கை விலக்கி,எல்லாரும் விடாது ஒழுகுதல் நோக்கி வரிசை நோக்கை விதித்தார்.இந்நான்கு பாட்டானும் சுற்றம் தழுவும் உபாயம் கூறப்பட்டது.)

இரா சாரங்கபாணி உரை: அரசன் எல்லாரையும் சமனாகப் பொதுநோக்கு நோக்காமல் அவரவர் தகுதியறிந்து அதற்கேற்பச் சிறப்பு நோக்கு நோக்குவானாயின், அச்சிறப்பு நோக்கி அவனை விடாது வாழ்பவர்கள் பலராவர்.

பொருள்கோள் வரிஅமைப்பு:
பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின் அதுநோக்கி வாழ்வார் பலர்.


பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்:
பதவுரை: பொது-பலவும் ஒரு தன்மையவாதல்; நோக்கான்-பாராதவனாக; வேந்தன்-மன்னவன்; வரிசையா-தகுதிக்கு ஏற்ற தன்மையாக; நோக்கின்-பார்த்தால்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அரசன் எல்லாரையும் பொதுவாகப் பாராதே ஒருவனைத் தலைமையாலே பார்ப்பானாயின்;
பரிப்பெருமாள்: எல்லோரையும் பொதுவாகப் பாராதே ஒருவனைத் தலைமையாலே அரசன் பார்ப்பானாயின்;
பரிதி: அரசன் உறவின் முறையரான பதினெட்டுப் பேர் முதலான பேரை, எல்லாரும் ஒக்கும் என்று விசாரியாமல் தராதர பாவனையறிந்து பார்ப்பானாகில்;
காலிங்கர்: கீழ்ச்சொன்ன முறைமையின் பொதுப்பட அணைத்தலேயும் அன்றிப் பின்னும் பிறர் குலமும் ஒழுக்கமும் குணமும் கல்வியும் முதலிய மேம்பாட்டு வேற்றுமையானும் குறிக்கொண்டு அணைப்பனாயின்;
பரிமேலழகர்: எல்லாரையும் ஒரு தன்மையராக நோக்காது அரசன் தத்தம் தகுதிக்கு ஏற்ப நோக்குமாயின்;
பரிமேலழகர் குறிப்புரை: உயர்ந்தார் நீங்குதல் நோக்கிப்பொது நோக்கை விலக்கி, எல்லாரும் விடாது ஒழுகுதல் நோக்கி வரிசை நோக்கை விதித்தார்.

'எல்லாரையும் ஒரு தன்மையராக நோக்காது அரசன் தத்தம் தகுதிக்கு ஏற்ப நோக்குமாயின்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். மணக்குடவர்/பரிப்பெருமாள் தலைமைக் குணத்தைப் பார்ப்பானானால் என்றும் மற்றவர்கள் தகுதிக்கேற்ப நோக்குவானால் என்று சொல்கின்றனர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அரசன் பொதுமையின்றிச் சிறப்பாக நோக்கின்', '(ஒரு குடும்பி தன்னுடைய சுற்றத்தார் அனைவரையும் சரிசமானமாக நடத்தலாம். ஆனால் ஓர் அரசன்) தன் சுற்றமாகிய துணைவர்கள் எல்லாரையும் ஒரே மாதிரியாக நடத்தி விடாமல் அவரவர்கள் பதவிக்குத் தக்கபடி வரிசைகள் செய்ய வேண்டும்', 'அரசன் எல்லாரையும் ஒரே தன்மையாக நோக்காது அவரவர் தகுதிக்கேற்ப நோக்கிச் செய்வன செய்தால்', 'எல்லாரையும் ஒரு தன்மையராக வைத்துப் பொதுவாகப் பாராது அரசன் அவரவர் தகுதிக்கு ஏற்பப் பார்த்துச் சிறப்புச் செய்வானானால்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

எல்லாரையும் ஒரு தன்மையராக வைத்துப் பொதுவாகப் பாராமல் அரசன் அவரவர் தகுதிக்கேற்ப சிறப்பாக நோக்குவானாயின் என்பது இப்பகுதியின் பொருள்.

அதுநோக்கி வாழ்வார் பலர்:
பதவுரை: அதுநோக்கி-அது பார்த்து; வாழ்வார்-வாழ்க்கை நடத்துபவர்; பலர்-பலர்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அப்பார்வை நோக்கி அவனை விடாது வாழுஞ் சுற்றத்தார் பலர்.
மணக்குடவர் குறிப்புரை: இஃது ஒருவனை இளவரசாக்க வேண்டுமென்றது.
பரிப்பெருமாள்: அத்தலைமையை நோக்கி வாழ்வார் பலர் என்றவாறு.
பரிப்பெருமாள் குறிப்புரை: மக்கள் பலர் உண்டானால் எல்லாரையும் ஒக்கப் பாராது நீதிமான் ஒருவனை இளவரசு ஆக்க வேண்டும் என்றது.
பரிதி: அது நோக்கி அரசனைச் சூழ்ந்து இருப்பார் பலர் என்றவாறு.
காலிங்கர்: மற்று அம்மரபு நோக்கித் தாமும் அங்ஙனம் ஒழுகுவர் உலகத்தோர்; எனவே இதனைப் படிமரபாகக் கொண்டு யாவரும் தம்தம் சுற்றம் ஓம்புவார் என்றவாறு. [படிமரபு - வரிசை நோக்கு; தகுதி பற்றிய முறை].
பரிமேலழகர்: அச்சிறப்பு நோக்கி அவனை விடாது வாழும் சுற்றத்தார் பலர்.
பரிமேலழகர் குறிப்புரை: இந்நான்கு பாட்டானும் சுற்றம் தழுவும் உபாயம் கூறப்பட்டது.

'அப்பார்வை நோக்கி அவனை விடாது வாழுஞ் சுற்றத்தார் பலர்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். மணக்குடவர்/பரிப்பெருமாள் இளவரசு பட்டத்தை அச்சிறப்பாகக் குறிக்கின்றனர் எனத் தோன்றுகிறது.

இன்றைய ஆசிரியர்கள் 'அதனால் வாழும் சுற்றத்தார் பலர்', 'அதனால் அநேகர் அரசனை விரும்பித் துணைப்பலமாகச் சூழ்ந்திருப்பார்கள்', 'அது தெரிந்து அவனை விடாது வாழுஞ் சுற்றத்தார் பலர் இருப்பர்', 'அச்சிறப்புக் கருதி வாழ்வார் பலர்' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

அச்சிறப்பை எதிர்நோக்கி அவனை விடாது வாழ்வார் பலர் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
தகுதிபார்த்துச் சிறப்பு செய்பவனை அச்சிறப்பு பெறுவதற்காக பல சுற்றத்தார் அவனை விடாது அவனுடன் தங்கி இருப்பர்.

எல்லாரையும் ஒரு தன்மையராக வைத்துப் பொதுவாகப் பாராமல் அரசன் வரிசையா நோக்கின் அச்சிறப்பை எதிர்நோக்கி அவனை விடாது உடனிருப்பர் பலர் என்பது பாடலின் பொருள்.
'வரிசையா நோக்கின்' என்றால் என்ன?

பொதுநோக்கான் என்றதற்கு எல்லோரையும் ஒரு தன்மையாக நோக்காதவன் என்பது பொருள்.
வேந்தன் என்ற சொல் ஆட்சித்தலைவன் என்ற பொருள் தரும்.
அதுநோக்கி என்ற தொடர்க்கு அச்சிறப்பை எதிர்பார்த்து என்று பொருள்.
வாழ்வார் பலர் என்றது வாழ்பவர்கள் பலர் என்ற பொருளது. இங்கு சுற்றமாய் வாழ்பவர் பலர் எனக் கொள்வர்.

அரசன் ஒருவரது தகுதி நோக்கிச் செய்வன செய்தால், அது தெரிந்து அவனை விடாது வாழுஞ் சுற்றத்தார் பலர் இருப்பர்.

நாட்டை ஆள்வோர் மக்கள் எல்லோரையும் ஒரே நிறையில் கருத வேண்டுமானாலும், ஒவ்வொரு பிரிவினருடைய நிலையை உணர்ந்து அவரவர் தகுதிக்கு ஏற்பச் செயல்பட்டு சிறப்புச் செய்ய வேண்டும். தகுதியுடையவர், தகுதியில்லாதவர் என்று கருதாது யாவரையும் ஒரு தன்மையராகக் கருதி நடந்தால், அந்நடக்கை தம்மைத் தாழ்வுபடுத்தியது நோக்கி தகுதியுடையார் நீங்கிவிடுவர். தக்கோர் விலகாதிருக்கப் பொது நோக்கை நீக்கி, எல்லாரும் விடாது சூழ்ந்து வாழ்தலை நோக்கி வரிசை நோக்கை தலைவன் பின்பற்றவேண்டும். அங்ஙனம் தகுதிக்கேற்ப நடந்து கொள்வானைப் பலரும் சூழ்ந்து வாழ்வர். சுற்றத்துடன் ஒன்றி அவரவர் தகுதிக்கேற்ப அணைத்துச் சென்றால் சுற்றத்தினர் மகிழ்வடைவார்கள்; அரண்சூழ என்றும் முன் நிற்பார்கள்.
சுற்றத்தாரும், தாம் செய்யும் செயல்களால் தனக்குச் சிறப்பு செய்யப்படும் என்று எதிர்பார்த்தால், அந்த எதிர்பார்ப்பின் அடிப்படையிலேயே ஊக்க மடைந்து சிறந்த செயல்திறனை வெளிப்படுத்துவார்கள். எல்லாச் சுற்றத்தாரையும் ஒன்றுபோல் நடத்தாமல், செயல்திறனுக்கேற்ப ஒருவர் பாராட்டப்படுவர் என்று தெரிந்தால் தலைவனை நீங்காமல் தங்கியிருப்பார். இன்றைய மேலாண்மைக் கோட்பாடும் இந்தக் கருத்தைத்தான் கொண்டுள்ளது.

'உறவின் முறையாரின் அடிப்படைத் தேவைகளைப் பொதுநோக்காலும் சிறப்புத் தேவைகளை வரிசையறிந்தும் அளித்தால் நீங்கார்' என்றும் ஓர் உரை உள்ளது.

'வரிசையா நோக்கின்' என்றால் என்ன?

'வரிசையா நோக்கின்' என்ற தொடர்க்கு தலைமையாலே பார்ப்பானாயின், குலமும் ஒழுக்கமும் குணமும் கல்வியும் முதலிய மேம்பாட்டு வேற்றுமையானும் குறிக்கொண்டு, தத்தம் தகுதிக்கு ஏற்ப நோக்குமாயின், அவரவர் தகுதி திறமைகட்கு ஏற்ப வரிசைப்படப் பார்த்து, தகுதி வரிசையில் வைத்துச் சிறப்புச் செய்வது, பொதுமையின்றிச் சிறப்பாக நோக்கின், அவரவர் தகுதியறிந்து அதற்கேற்பச் சிறப்பு நோக்கு நோக்குவானாயின், அவரவர்கள் பதவிக்குத் தக்கபடி வரிசைகள் செய்தால், அவரவர் சிறப்புவகையால் மதிப்பானானால், அவரவர் தகுதிக்கேற்ப நோக்கி, அவரவ்ர் தகுதிக்கு ஏற்பப் பார்த்து, தரமும் தகவும் உறவும் பார்த்து நடப்பானாயின் என்று உரையாளர்கள் பொருள் கூறினர்.
காலிங்கர் 'வரிசையா நோக்கின்' என்பதற்குப் 'படிமரபாகக் கொண்டு' எனப் பொருள் கூறுவார்.
சுற்றத்தார் செயலைக் கண்டு அவர் தகுதி நோக்கிச் சிறப்புச் செய்யவேண்டும் என்கிறது இக்குறட்பா. இக்குறட்கருத்தை ஒப்ப ஒரு சங்கப்பாடல் ஒன்று உள்ளது: ‘வரிசை அறிதலோ அரிதே, பெரிதும், ஈதல் எளிதே மாவண் தோன்றல், அது நற்கறிந்தனை யாயின், பொது நோக்கொழிமது புலவர் மாட்டே’ (புறநானூறு 121: பொருள்: (கொடைத்தன்மை உடையவனை நினைந்து நான்கு திசையினுமுள்ள பரிசின்மாக்கள் பலரும் வருவர்) அவர் வரிசையறிதல் அரிது; கொடுத்தல் மிகவும் எளிது; பெரிய வண்மையை யுடைய தலைவ! நீ அவ்வரிசையறிதலை நன்றாக அறிந்தாயாயின், அறி வுடையோரிடத்து வரிசை கருதாது ஒருதரமாகப் பார்த்தலைத் தவிர்வாயாக). பத்துப்பாட்டு (சிறுபாணாற்றுப்படை 217ம் அடி) பரிசிலருடைய தரமறிந்து அவர்பெறு முறைமையை வரிசையறிதல் என்று குறிக்கிறது. வரிசை நோக்குச் சொல்லப்பட்டதை தேவநேயப்பாவாணர் 'எல்லாவகையிலும் மக்கள் உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்றோ தலையாயார் இடையாயார் கடையாயார் என்றோ, முதல்வகுப்பினர் இரண்டாம் வகுப்பினர் எனப்பல வகுப்பின ராகவோ, இயற்கையாகவும் செயற்கையாகவும் பாகுபட்டிருத்தலால், தன்மானமுள்ள மேலோர் நீங்காவாறு பொது நோக்கை விலக்கி எல்லாரையும் தழுவுமாறு வரிசைநோக்கை நெறியிட்டார்' என விளக்கினார்.

வரிசையாக நோக்குதல் என்பது இங்கு 'தகுதியை யுணர்ந்து' என்ற பொருளைத் தரும்.

எல்லாரையும் ஒரு தன்மையராக வைத்துப் பொதுவாகப் பாராமல் அரசன் அவரவர் தகுதிக்கேற்ப சிறப்பாக நோக்குவானாயின் அச்சிறப்பை எதிர்நோக்கி அவனை விடாது வாழ்வார் பலர் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

செயல்பாட்டிற்குத் தக உயர்வு என்ற முறைமை இருந்தால் பலர் தலைவனை விட்டு விலகமாட்டார்கள் என்னும் சுற்றந்தழால் பாடல்.

பொழிப்பு

அரசன் பொதுப்பார்வை பாராமல் ஒருவரது தகுதிக்கேற்பச் சிறப்பு நோக்கு நோக்குவானாயின், அச்சிறப்பு கருதி அவனை விடாது வாழ்பவர்கள் பலராவர்.



__________________


Guru

Status: Offline
Posts: 7387
Date:
Permalink  
 

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான் உறையும்
  தெய்வத்துள் வைக்கப்படும் - குறள் 5:10
ஒத்தது அறிவான் உயிர் வாழ்வான் மற்றையான்
  செத்தாருள் வைக்கப்படும் - குறள் 22:4
முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
  இறை என்று வைக்கப்படும் - குறள் 39:8
உலகத்தார் உண்டு என்பது இல் என்பான் வையத்து
  அலகையா வைக்கப்படும் - குறள் 85:10


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard