Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: எழுமை எழுபிறப்பு


Guru

Status: Offline
Posts: 7329
Date:
எழுமை எழுபிறப்பு
Permalink  
 


எழுமை (1)
எழுமை எழு பிறப்பும் உள்ளுவர் தம்-கண்
  விழுமம் துடைத்தவர் நட்பு - குறள் 11:7

 முதல்

 
 எழுமையும் (4)
ஒருமையுள் ஆமை போல் ஐந்து அடக்கல் ஆற்றின்
  எழுமையும் ஏமாப்பு உடைத்து - குறள் 13:6
ஒருமை-கண் தாம் கற்ற கல்வி ஒருவற்கு
  எழுமையும் ஏமாப்பு உடைத்து - குறள் 40:8
புகழ்ந்தவை போற்றி செயல் வேண்டும் செய்யாது
  இகழ்ந்தார்க்கு எழுமையும் இல் - குறள் 54:8
ஒருமை செயல் ஆற்றும் பேதை எழுமையும்
  தான் புக்கு அழுந்தும் அளறு - குறள் 84:5

எழு (4)
எழு பிறப்பும் தீயவை தீண்டா பழி பிறங்கா
  பண்பு உடை மக்கள் பெறின் - குறள் 7:2
எழுமை எழு பிறப்பும் உள்ளுவர் தம்-கண்
  விழுமம் துடைத்தவர் நட்பு - குறள் 11:7
ஒரு நாள் எழு நாள் போல் செல்லும் சேண் சென்றார்
  வரு நாள் வைத்து ஏங்குபவர்க்கு - குறள் 127:9
நெருநற்று சென்றார் எம் காதலர் யாமும்
  எழு நாளேம் மேனி பசந்து - குறள் 128:8

 எழுபது (1)
பழுது எண்ணும் மந்திரியின் பக்கத்துள் தெவ் ஓர்
  எழுபது கோடி உறும் - குறள் 64:9


__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்

(அதிகாரம்:புதல்வரைப் பெறுதல் குறள் எண்:62)

பொழிப்பு (மு வரதராசன்): பழி இல்லாத நல்ல பண்பு உடைய மக்களைப் பெற்றால் ஒருவனுக்கு ஏழு பிறவியிலும் தீவினைப் பயனாகிய துன்பங்கள் சென்று சேரா.

மணக்குடவர் உரை: எழுபிறப்பினுந் துன்பங்கள் சாரா: ஒரு பிறப்பிலே பழியின்கண் மிகாத குணத்தினையுடைய புதல்வரைப் பெறுவாராயின்.

பரிமேலழகர் உரை: எழுபிறப்பும் தீயவை தீண்டா - வினைவயத்தால் பிறக்கும் பிறப்பு ஏழின்கண்ணும் ஒருவனைத் துன்பங்கள் சென்றடையா; பழி பிறங்காப் பண்பு உடை மக்கட்பெறின் - பிறரால் பழிக்கப்படாத நற்குணங்களை உடைய புதல்வரைப் பெறுவான் ஆயின்.
('அவன் தீவினை வளராது தேய்தற்குக் காரணம் ஆகிய நல்வினைகளைச் செய்யும் புதல்வரைப் பெறுவான் ஆயின்' என்றவாறு ஆயிற்று. பிறப்பு ஏழாவன: 'ஊர்வ பதினொன்றாம் ஒன்பது மானிடம் நீர்பறவை நாற்கால் ஓர் பப்பத்துச் சீரிய, பந்தம்ஆம் தேவர் பதினான்கு அயன்படைத்த அந்தம் இல்சீர்த் தாவரம் நாலைந்து' தந்தை தாயர் தீவினை தேய்தற்பொருட்டு அவரை நோக்கிப் புதல்வர் செய்யும் தான தருமங்கட்கு அவர் நற்குணம் காரணமாகலின், 'பண்பு' என்னும் காரணப் பெயர் காரியத்தின்மேல் நின்றது.)

வ சுப மாணிக்கம் உரை: பழியில்லாப் பண்புக் குழந்தைகளைப் பெற்றால் பெற்றோரை எப்பிறவியும் தீயவை நெருங்கா.

பொருள்கோள் வரிஅமைப்பு:
எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப் பண்புடை மக்கட் பெறின்.

பதவுரை: எழு-எழுகின்ற, ஏழுவகையாகிய; பிறப்பும்-பிறப்பும், தோற்றமும்; தீயவை-தீமைகள், துன்பங்கள்; தீண்டா-நெருங்கா, சென்றடையா; பழி-பழிக்கப்படுதல்; பிறங்கா-உண்டாகாத, ஆளாகாத, மிகாத; பண்புடை-குணமுடைய; மக்கள்-புதல்வர்; பெறின்-அடைந்தால்.


எழுபிறப்பும் தீயவை தீண்டா:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: எழுபிறப்பினுந் துன்பங்கள் சாரா:
பரிப்பெருமாள்: எழுபிறப்பினுந் துன்பங்கள் சாரா:
பரிப்பெருமாள் குறிப்புரை: அறம் பொருள் இன்பம் என்னும் மூன்றும் பயக்கும் என்பார் முற்பட தீயவை தீண்டா என்று கூறினார். அன்றியும் தன்னளவும் பிறந்த முன்புள்ள எழுவர்க்கும் எனினும் அமையும்.
பரிதி: தேவர், மனிதர், மிருகம், ஊர்வன, நீர்வாழ்வன, பட்சி, தாவரம் என்னும் எழுபிறப்பிற் சென்றாலும் ஏழுநரகத்திற் சென்றாலும் துன்பம் வராது;
பரிமேலழகர்: வினைவயத்தால் பிறக்கும் பிறப்பு ஏழின்கண்ணும் ஒருவனைத் துன்பங்கள் சென்றடையா;

'ஏழு பிறப்புக்களிலும் துன்பங்கள் சென்றடையா' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். பரிதி ஏழு பிறவிகள் எவை எனச் சொல்கிறார். இவர் பிறப்பு என்பதற்கே பிறவி, நரகம் என இருபொருள் கூறுகிறார். பரிப்பெருமாள் உரை பின்புள்ள எழுவர்க்கும் அல்லது முன்புள்ள எழுவர்க்கும் என்றமைகிறது.

இன்றைய ஆசிரியர்கள் 'பெற்றோரை எப்பிறவியும் தீயவை நெருங்கா', 'ஒருவனை எழுவகைப் பிறப்பிலுந் துன்பங்கள் (சென்று) அடையமாட்டா', 'பிறப்பின் ஏழு பருவங்களிலும் துன்பங்கள் நெருங்கா', 'தாய் தந்தையர் அவர்களுடைய அடுத்த ஏழு பிறப்புகளிலும்கூடத் துன்பம் இல்லாதவர்களாக இருப்பார்கள்' என்ற பொருளில் உரை தந்தனர்.

எழு பிறப்புகளிலும் துன்பம் நெருங்கா என்பது இப்பகுதியின் பொருள்.

பழிபிறங்காப் பண்புடை மக்கட் பெறின்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஒரு பிறப்பிலே பழியின்கண் மிகாத குணத்தினையுடைய புதல்வரைப் பெறுவாராயின்.
பரிப்பெருமாள்: ஒரு பிறப்பிலே பழியின்கண் மிகாத குணத்தினையுடைய புதல்வரைப் பெறுவாராயின்.
பரிதி: நல்ல புத்திரனைப் பெற்றவர்க்கு என்றவாறு.
பரிமேலழகர்: பிறரால் பழிக்கப்படாத நற்குணங்களை உடைய புதல்வரைப் பெறுவான் ஆயின்.
பரிமேலழகர் குறிப்புரை: 'அவன் தீவினை வளராது தேய்தற்குக் காரணம் ஆகிய நல்வினைகளைச் செய்யும் புதல்வரைப் பெறுவான் ஆயின்' என்றவாறு ஆயிற்று. பிறப்பு ஏழாவன: 'ஊர்வ பதினொன்றாம் ஒன்பது மானிடம் நீர்பறவை நாற்கால் ஓர் பப்பத்துச் சீரிய, பந்தம்ஆம் தேவர் பதினான்கு அயன்படைத்த அந்தம் இல்சீர்த் தாவரம் நாலைந்து' தந்தை தாயர் தீவினை தேய்தற்பொருட்டு அவரை நோக்கிப் புதல்வர் செய்யும் தான தருமங்கட்கு அவர் நற்குணம் காரணமாகலின், 'பண்பு' என்னும் காரணப் பெயர் காரியத்தின்மேல் நின்றது. [பிறப்பு ஏழு-தேவர் மக்கள் விலங்கு பறவை ஊர்வன நீர்வாழ்வன தாவரம் என்பன]

'பழிக்கப்படாத நற்குணங்களை உடைய புதல்வரைப் பெறுவாராயின்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பழியில்லாப் பண்புக் குழந்தைகளைப் பெற்றால்', 'பழிப்பிறங்கிடமில்லாத நற்குணங்களையுடைய குழந்தைகளை பெறுவானாயின்', 'பிறரால் பழிக்கப்படாத நற்குணங்களையுடைய மக்களைப் பெற்றால்', 'பழி பாவங்களுக்கு ஆளாகிவிடாத நல்ல குணமுடைய மக்களைப் பெற்றால்' என்றபடி பொருள் உரைத்தனர்.

பழிக்கு ஆளாகிவிடாத பண்புள்ள மக்களைப் பெற்றாரானால் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
பழிக்கு ஆளாகிவிடாத பண்புள்ள மக்களைப் பெற்றாரானால், எழுபிறப்பும் துன்பம் நெருங்கா என்பது பாடலின் பொருள்.
'எழுபிறப்பும்' என்றால் என்ன?

பிள்ளைகள் பண்புள்ளவர்களாக வளர்க்கப்பட்டால் பெற்றோருக்கு தீமைகள் நேரா.

பழிதோன்றாத நற்குணங்களையுடைய பிள்ளைகளைப் பெற்றவர்களை எழு பிறப்புக்களிலும் தீமைகள் நெருங்கா.
பெற்ற பிள்ளைகள் பெரியவர்களாக வளர்ந்து நிற்கிறார்கள். அவர்களுக்கு எந்தவிதமான கெட்ட பழக்கங்களும் இல்லை. எல்லோரிடமும் அன்புடனும் ஆர்வத்துடனும் பழகுகின்றார்கள். அவர்கள் பழிக்கப்படும் எந்தக் குற்றத்திலும் ஈடுபடுவதில்லை. இக்குடும்பத்தை நோக்கும் வள்ளுவர் அகமகிழ்ந்து 'இப்படிப்பட்ட பிள்ளைகள் கிடைத்துள்ள இவர்களுடைய பெற்றோர் துன்பமின்றி வாழவேண்டும்' என விரும்புகிறார். எழேழு தலைமுறைக்கும் அவர்களை எந்தத் தீங்கும் நெருங்காது என்று வாழ்த்துகிறார்.
அறிவார்ந்த பிள்ளைகளாக அமைவது பெரும்பேறு என்று முந்தைய பாடலில் (குறள் 61) கூறப்பட்டது. இங்கு பண்புள்ள மக்களைப் பெற்றவர்களைத் தீமைகள் வந்து சேரா என்று சொல்லப்படுகிறது. பிறக்கும் பொழுதே பிள்ளைகள் பண்பாளராகவும் பிறப்பதில்லை; குழந்தைகள் பண்பு கொண்டவர்களாக வளர்த்தெடுக்கப்படுகிறார்கள். நல்ல பிள்ளைகளாக வளர்த்துக் கொண்டுவருதல் பெற்றோர் பொறுப்பாகும் என்பதைக் குறிப்பால் உணர்த்துவது இக்குறள்.

நன்மக்கட்பேறு தீயவை தீண்டாதவாறு தாய் தந்தையரை ஏழ் வகைப் பிறவிக்கும் காக்கும் என்கிறது இக்குறள்.
நன்மக்களைப் பெறுதற்கும் பெற்றோரைத் தீமைகள் தீண்டாமைக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்?
சிதலை தினப்பட்ட ஆல மரத்தை
மதலையாய் மற்றதன் வீழூன்றி யாங்குக்
குதலைமை தந்தைகட் டோன்றிற்றான் பெற்ற
புதல்வன் மறைப்பக் கெடும்.
(நாலடியார் 197 பொருள்: கறையானால் அரிக்கப்பட்ட ஆலமரத்தை, அதன் விழுது அதனைத் தாங்கும் வன்மையுடையதாய் ஊன்றி நின்றாற்போல, தன் தந்தையினிடத்தில் தளர்ச்சி தோன்றினால், அவன் பெற்றெடுத்த மகன் பாதுகாக்க அது நீங்கும்) என்று நாலடியார் கூறுவது போல, நடைமுறையிலும் பெற்றோர் உறும் தீங்கு தேய்வது என்பது இயலக்கூடியதே.
நன்மக்கள் தாய் தந்தையருக்கு நற்பெயர் புகழ் வரும்படி நடந்து கொள்வர். பழிக்கஞ்சி, ஒழுக்க நெறி நின்று குற்றமற்ற வாழ்க்கை நடத்தும் நற் குணங்களுடைய மக்களைப் பெற்றிருந்தால் தீமைகள் இராது என்பது இயல்புதான். தீயவை தீண்டல் ஊழால் வருவது; பண்புநலமிக்க பிள்ளைகளால் இப்பிறப்பிலே பெற்றோருக்கு ஒரு தீமையும் நடவாது என்பது சொல்லப்பட்டது.

'கற்பென்னும் திண்மையுண்டாகப் பெறின்', 'பண்புடை மக்கட்பெறின்' என்பன எல்லாம் இவற்றையாக்கிக் கொள்ளுதற்குரிய பெருமுயற்சியைக் குறித்து நின்றன என்பார் மு கோவிந்தசாமி. தம் மக்கள் பண்புடையவர்களாக விளங்க பெற்றோர் பெருமுயற்சி கொள்ளல் வேண்டும் என்பது செய்தி.

'எழுபிறப்பும்' என்றால் என்ன?

எழுபிறப்பு என்பதற்கு ஏழு பிறப்பு என்பது பொருள். எழுபிறப்பு என்பது எழுவகைப் பிறப்பைக் குறிக்கும். இது செடிகொடிகள், ஊர்வன, நீர் வாழ்வன, பறப்பன, விலங்கு, மானுடர், தேவர் என்பனவற்றைக் குறிக்கும் என்பர்.
எழுபிறப்பு என்பதற்கு இனிவரும் பிறப்பு அதாவது இனி உண்டாகப்போகிற பிறவி என்று பொருள் கூறுவோரும் உண்டு. இனிவரும் பிறப்பு அல்லது எழுந்த பிறப்பு என்றாலும் இரண்டுமே பிறப்பு-இறப்புத் தொடர்கள் அதாவது மறுபிறவி, பலபிறவி, பற்றிக் கூறும் சமயக்கருத்து பற்றியது ஆகும். ஒருவர் செய்யும் நன்மை தீமைகளுக்கு ஏற்ப, அவர்களுக்கு பல பிறவிகள் உண்டு என்ற நம்பிக்கையின் அடிப்படையில் உண்டானது.
வள்ளுவர் கூறியது சமயக் கருத்து என்பதை உடன்படாதவர்கள் எழுபிறப்பு என்பது வழிவழிப் பிறப்பு, பல தலைமுறை, ஏழு பரம்பரை, என்னும் விளக்கங்களைக் கூறுவர். இவையனைத்தும் அடுத்தடுத்த தலைமுறையைக் குறிப்பன. இவையும் ஒருவகையில் மறுபிறப்புக் கொள்கையைச் சார்ந்ததனவாகவே ஆகின்றன.
'ஒரு வமிசத்தில் ஒருவன் நல்ல பிள்ளைகளைப் பெற்றால் அவ்வமிசத்தில் முன்னேழு, பின்னேழு, நடுவேழு என்னும் இருபத்தொரு தலைமுறையார்க்கும் தீவினைகள் தொடரா' என்றார் வை மு கோபாலகிருஷ்ணமாச்சாரியார்.
எழு பிறப்பு என்பதற்கு 'ஒரு பிறப்பிலேயே அடையும் ஏழு வகை (ஏழு பருவங்கள்) மாற்றங்கள் என்று கருதலாம்' எனப் பொருள் கூறினார் சி இலக்குவனார்.
புலவர் குழந்தை 'நாலைந்து எடு, ஏழெட்டுப்பேர்' என்னும் வழக்குப் போல எழுமை என்னும் எண்ணுப் பெயரைப் பல என்னும் பொருளிலேயே ஆளுகின்றார் வள்ளுவர் என்றார்.

எழுபிறப்பு என்பது, மேலே சொல்லப்பட்ட, மரபு வழி வந்த ஏழு பிறவிகள் பற்றிய எண்ணத்தை அறிவிப்பது என்பது பொதுவான கருத்து.
"'எழு பிறப்பு' 'எழுமை' என்ற நம்பிக்கை நெடுங்காலமாகத் தமிழ் மக்களுக்குள் பழக்கத்திலிருந்து வருகிற பதங்கள். பாவ புண்ணியங்களின் பலன்களை நினைப்பூட்ட வேண்டிய சந்தர்ப்பங்களிலெல்லாம் இச்சொற்கள் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கின்றன. அதனால்தான் பாமர மக்களும் 'ஏழு பிறப்புகள்' என்பது என்ன என்ற ஆராய்ச்சி இல்லாமலேயே நல்வினை தீவினை என்பவைகளையும் மறுபிறப்புகளையும் நம்பி நடக்கிறார்கள்" என்பது நாமக்கல் இராமலிங்கம் கருத்துரை.

மறுபிறவி உண்டெனக் கொண்டாலும், ஒரு பிறப்பில் நிகழ்ந்தன பற்றி மறு பிறப்பில் எவரும் அறிதல் இல்லை. ஒருவர் இறந்தபின் உண்டாகும் பிறப்புகளில் என்ன நடக்கும் என்பதையும் ஒருவர் இப்பிறப்பில் அறியமுடியாது.
எழுவகைப் பிறப்பில் வள்ளுவர்க்கு உறுதியுண்டு/உறுதியில்லை என்று அறுதியிட்டுக் கூற இயலாது. எனினும் இக்குறளில் ஏழ் பிறப்பு என்றது உயர்வு நவிற்சியாகவே, நீண்ட காலத்தைக் குறிப்பதற்காக, என்பது எளிதில் புலப்படும். நன்மக்களைப் பெறுவதின் நன்மையை எழுபிறப்புகளிலும் துன்பங்கள் நெருங்காது என்ற கருத்தை வலியுறுத்துவதற்கு அது மிகைப்படுத்திக் கூறப்பட்டது.
உலகவழக்கு நோக்கி ஏழு பரம்பரை அல்லது தலைமுறையை இத்தொடர் குறிக்கும் எனக் கொள்ளலாம்.

பழிக்கு ஆளாகிவிடாத பண்புள்ள மக்களைப் பெற்றாரானால், எழு பிறப்புகளிலும் துன்பம் நெருங்கா என்பது இக்குறட்கருத்து.



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமம் துடைத்தவர் நட்பு

(அதிகாரம்:செய்ந்நன்றியறிதல் குறள் எண்:107)

பொழிப்பு: தம்முடைய துன்பத்தைப் போக்கி உதவியவரின் நட்பைப் பல்வேறு வகையான பிறவியிலும் மறவாமல் போற்றுவர் பெரியோர்

மணக்குடவர் உரை: தங்கண் உற்ற துன்பத்தை நீக்கினவரது நட்பை அப்பிறப்பிலே யன்றி எழுமையிலுந் தோற்றும் பிறப்பெல்லாம் நினைப்பர் சான்றோர்.

பரிமேலழகர் உரை: தம்கண் விழுமம் துடைத்தவர் நட்பு - தம்கண் எய்திய துன்பத்தை நீக்கினவருடைய நட்பினை; எழுமை எழு பிறப்பும் உள்ளுவர் - எழுமையினையுடைய தம் எழுவகைப் பிறப்பினும் நினைப்பர் நல்லோர்.
('எழுமை' என்றது வினைப்பயன் தொடரும் ஏழு பிறப்பினை: அது வளையாபதியுள் கண்டது. எழுவகைப் பிறப்பு மேலே உரைத்தாம் (குறள் 62) விரைவு தோன்றத் 'துடைத்தவர்' என்றார். நினைத்தலாவது துன்பம் துடைத்தலான், அவர்மாட்டு உளதாகிய அன்பு பிறப்புத்தோறும் தொடர்ந்து அன்புடையராதல். இவை இரண்டுபாட்டானும் நன்றி செய்தாரது நட்பு விடலாகாது என்பது கூறப்பட்டது,)

தமிழண்ணல் உரை: தம்மிடம் நேர்ந்த கடுந்துன்பங்களைப் போக்கியவர் நட்பினை, ஏழேழு பிறப்பிற்கும் நல்லோர் நினைத்துக்கொள்வர்.
என்றென்றும் மறக்கக்கூடாது என்பதை இங்ஙனம் கூறுவது ஒரு மொழிநடை மரபு.

பொருள்கோள் வரிஅமைப்பு:
.தங்கண் விழுமம் துடைத்தவர் நட்பு எழுமை எழுபிறப்பும் உள்ளுவர்


எழுமை எழுபிறப்பும் உள்ளுவர்:
பதவுரை: எழுமை-எழுந்தன்மையுடையது; எழு-ஏழு வகையாகிய; பிறப்பும்-பிறப்பும்; உள்ளுவர்-நினைப்பர்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அப்பிறப்பிலே யன்றி எழுமையிலுந் தோற்றும் பிறப்பெல்லாம் நினைப்பர் சான்றோர்;
பரிப்பெருமாள்: அப்பிறப்பிலே யன்றி எழுமையிலுந் தோற்றும் பிறப்பெல்லாம் நினைப்பர் சான்றோர்;
பரிதி: செனனம் தோறும் நினைக்கப்படும்;
காலிங்கர்: எழுவகையாகத் தோன்றி வருகின்ற பிறப்புதோறும் ஈண்டுச் செயலாகும் நன்றியைக் கொண்டே பிறவிதோறும் இடருறும் காலத்துப் பெரியோர் செய்த நன்றிகள் என்று இங்ஙனம் எழுவகைப் பிறப்பினும் தமக்குச் செய்தார் செய்தநன்றிகளைச் சிந்திப்பச் செய்ந்நன்றி அறிவார் என்றவாறு.
பரிமேலழகர்: எழுமையினையுடைய தம் எழுவகைப் பிறப்பினும் நினைப்பர் நல்லோர்.
பரிமேலழகர் குறிப்புரை: 'எழுமை' என்றது வினைப்பயன் தொடரும் ஏழு பிறப்பினை: அது வளையாபதியுள் கண்டது. எழுவகைப் பிறப்பு மேலே உரைத்தாம் (குறள் 62)

''எழுமையினையுடைய தம் எழுவகைப் பிறப்பினும் நினைப்பர்'' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். யார் நினைப்பர் என்றதற்கு சான்றோர் என்று மணக்குடவரும் செய்ந்நன்றி அறிவார் என்று காலிங்கரும் நல்லோர் என்று பரிமேலழகரும் குறித்தனர்.

இன்றைய ஆசிரியர்கள் ' எடுக்கின்ற பிறப்பெல்லாம் எண்ணுவர்', 'தம்முடைய தொடர்கின்ற எழுவகைப் பிறப்புகளிலும் சான்றோர் மறவாது போற்றுவர். (எழுபிறப்பு என்பதற்கு ஏழு தலைமுரை என்றும் கூறுவர்', 'நன்றியுள்ளவர்கள் எழேழு தலைமுறைக்கும் நினைத்துப் பார்ப்பார்கள்', 'எழுமையினையுடைய எழுவகைப் பிறப்பினும் நினைப்பர் நல்லோர். (எழுமை-எழு. பிறப்பு-தமக்கு உண்டாகும் பலவகை நிலைமைகள்.)', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

ஏழேழு பிறப்பிற்கும் நினைத்துக்கொள்வர் என்பது இப்பகுதியின் பொருள்.

தங்கண் விழுமம் துடைத்தவர் நட்பு:
பதவுரை: தங்கண்-தம்மிடத்தில்; விழுமம்-துன்பம்;- துடைத்தவர்-நீக்கினவர்; நட்பு-தோழமை.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தங்கண் உற்ற துன்பத்தை நீக்கினவரது நட்பை .
பரிப்பெருமாள்: தங்கண் உற்ற துன்பத்தை நீக்கினவரது நட்பை.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது மாற்றுதவி செய்யுங்கால் நிலத்தினும் நீரினும் உளவான பொருளாற் செய்யுங்கால் அதற்கு நேர் ஒவ்வாமையின் எக்காலத்திலும் அவரை ஒழிவின்றி நினைத்தலேயாவது என்று கூறப்பட்டது..
பரிதி: தம்முடைய மனக்கிலேசத்தைத் துடைத்தவர் நடபை என்றவாறு
காலிங்கர்: தம்மாட்டு வந்து எய்தும் இடுக்கண் துடைத்தவர் நட்பை .
பரிமேலழகர்: தம்கண் எய்திய துன்பத்தை நீக்கினவருடைய நட்பினை;
பரிமேலழகர் குறிப்புரை: விரைவு தோன்றத் 'துடைத்தவர்' என்றார். நினைத்தலாவது துன்பம் துடைத்தலான், அவர்மாட்டு உளதாகிய அன்பு பிறப்புத்தோறும் தொடர்ந்து அன்புடையராதல். இவை இரண்டுபாட்டானும் நன்றி செய்தாரது நட்பு விடலாகாது என்பது கூறப்பட்டது.

'தங்கண் உற்ற துன்பத்தை நீக்கினவரது நட்பை' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'துன்பக் கண்ணீரைத் துடைத்தவர் நட்பினை', 'துன்பத்தைப் போக்கியவரது நட்பினை', 'துன்பக் காலத்தில் வந்து உதவி செய்து துன்பங்களைத் துடைத்துவிட்டவர்களுடைய உறவை', 'தம்மிடம் உண்டாகிய துன்பத்தைப் போக்கியவர் நட்பினை' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

தம்மிடம் உண்டாகிய துன்பத்தை நீக்கியவர் நட்பினை என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
துன்ப்ம் துடைத்தவர் உறவை கழிநெடுங்காலம் நினைத்தல் வேண்டும் என்னும் குறள்!.

தம்மிடம் உண்டாகிய துன்பத்தை நீக்கியவர் நட்பினை எழுமை எழுபிறப்பும் நினைத்துக்கொள்வர் என்பது பாடலின் பொருள்.
எழுமை எழுபிறப்பும் என்றால் என்ன?

உள்ளுவர் என்ற சொல்லுக்கு நினைப்பர் என்று பொருள்.
தங்கண் என்றது தம்மிடம் என்ற பொருள் தரும்.
விழுமம் என்றது துன்பம் குறித்தது.
துடைத்தவர் என்ற சொல் நீக்கியவர் எம்ற பொருளது.
நட்பு என்பது நட்பு, உறவு என்ற பொருள் தருவது.

தமது துன்பத்தைப் போக்கியவரின் நட்பைச் செய்ந்நன்றி அறிவார் ஏழேழ் பிறவிக்கும் மறவாது நினைத்துப் போற்றுவர்.

செய்யப்பட்ட எல்லா உதவிகளும் நினைக்கத்தக்கவனவே. ஆனால் துன்ப காலத்தில் துயர் துடைக்க விரைந்து வந்து உதவியவரின் நற்செய்கை நெடுங்காலம் மறவாதிருக்கச் செய்யும். இதை அழுத்தமாக உணர்த்த ஏழேழு பிறவிக்கும் மறக்கமாட்டார்கள் என்று கூறப்பட்டது. துடைத்தல் என்ற சொல் விரைவும் நிறைவுந் தோன்றச் சொல்லப்பட்டது என்பர். இச்சொல் கண்ணீர் துடைத்தலைக் குறிக்கக் கூறப்பட்டது என்று சில் உரையார்லர்கள் கருதுவர். துன்பம் நீங்கியவுடன் துன்ப நீக்கத்திற்கு உதவி செய்தவரை மறத்தல் கூடாது என்பதும் செய்தி..

எழுமை எழுபிறப்பும் என்றால்ம் என்ன?

எழுமை என்ற சொல்லுக்கு ஏழு என்பது பொருள். எழுபிறப்பும் என்ற் சொல் ஏழு பிறப்பு என்ற பொருள் தரும். எழுமை எழுபிறப்பும் என அதையே அழுத்தம் பெற இரட்டித்துக் கூறப்பட்டது.
எழுபிறப்பு என்பது எழுவகைப் பிறப்பைக் குறிக்கும். இது செடிகொடிகள், ஊர்வன, நீர் வாழ்வன, பறப்பன, விலங்கு, மானுடர், தேவர் என்பனவற்றைக் குறிக்கும் என்பர். எழுபிறப்பு என்பதற்கு இனிவரும் பிறப்பு அதாவது இனி உண்டாகப்போகிற பிறவி என்று பொருள் கூறுவோரும் உண்டு. இனிவரும் பிறப்பு அல்லது எழுந்த பிறப்பு என்றாலும் இரண்டுமே பிறப்பு-இறப்புத் தொடர்கள் அதாவது மறுபிறவி, பலபிறவி, பற்றிக் கூறும் சமயக்கருத்து பற்றியது ஆகும். ஒருவர் செய்யும் நன்மை தீமைகளுக்கு ஏற்ப, அவர்களுக்கு பல பிறவிகள் உண்டு என்ற நம்பிக்கையின் அடிப்படையில் உண்டானது..
எழுமை எழுபிறப்பு என்பது பலநிலை வாய்ந்த அல்லது பலதன்மை கொண்ட பல தலைமுறை' என்று பொருள் தருகிறது என்றும் கூறுவர்.. .
வள்ளுவர் கூறியது சமயக் கருத்து என்பதை உடன்படாதவர்கள் எழுபிறப்பு என்பது வழிவழிப் பிறப்பு, பல தலைமுறை, ஏழு பரம்பரை, என்னும் விளக்கங்களைக் கூறுவர். இவையனைத்தும் அடுத்தடுத்த தலைமுறையையே குறிக்கும்.
குழந்தை 'நாலைந்து எடு, ஏழெட்டுப்பேர்' என்னும் வழக்குப் போல எழுமை என்னும் எண்ணுப் பெயரைப் பல என்னும் பொருளிலேயே ஆளுகின்றார் வள்ளுவர் என்றார். மறுபிறவி உண்டெனக் கொண்டாலும், ஒரு பிறப்பில் நிகழ்ந்தன பற்றி மறு பிறப்பில் எவரும் அறிதல் இல்லை. ஒருவர் இறந்தபின் உண்டாகும் பிறப்புகளில் என்ன நடக்கும் என்பதையும் ஒருவர் அறியமுடியாது. எனவே உலக வழக்குக் கருதி ஏழு தலைமுறை, ஏழேழு தலைமுறை, எனக் கூறும் உரைகளும் ஏற்கத்தக்கனவே..
இக்குறளில் எழுமை எழுபிறப்பு என்றது உயர்வு நவிற்சியாகவே, நீண்ட காலத்தைக் குறிப்பதற்காகச் சொல்லப்பட்டது.

தம்மிடம் உண்டாகிய துன்பத்தை நீக்கியவர் நட்பினை ஏழேழு பிறப்பிற்கும் செய்ந்நன்றிஅறிவார் நினைத்துக்கொள்வர் என்பது இக்குறட்கருத்து.



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

ஒருமைச் செயல்ஆற்றும் பேதை எழுமையும்
தான்புக்கு அழுந்தும் அளறு

(அதிகாரம்:பேதைமை குறள் எண்:835)

பொழிப்பு (மு வரதராசன்): எழுபிறப்பிலும் தான் புகுந்து அழுந்துவதற்கு உரிய நரகத் துன்பத்தைப் பேதை தன் ஒரு பிறவியில் செய்து கொள்ள வல்லவனாவான்.

மணக்குடவர் உரை: பேதை ஒருபிறப்பின்கண் செய்யும் செயலாலே செய்ய வல்லவன், எழுபிறப்பினும் தான் புக்கழுந்தும் நரகத்தை.
புக்கழுந்தல்- ஒருகால் நரகத்திலே பிறந்தால் அவ்வுடம்பு நீங்கினாலும் அதனுள்ளே பிறத்தல்.

பரிமேலழகர் உரை: பேதை - பேதையாயினான்; எழுமையும் தான் புக்கு அழுந்தும் அளறு - வரும் பிறவிகள் எல்லாம் தான் புக்கு அழுந்தும் நிரயத்தினை; ஒருமைச் செயல் ஆற்றும் - இவ்வொரு பிறப்புள்ளே செய்து கொள்ள வல்லனாம்.
(எல்லாப் பிறப்பும் ஏழாய் அடங்குதல் அறியப்பட்டமையின், முற்று உம்மை கொடுத்தார். அழுந்துதற்கு இடனாய நிரயம், ஈண்டைப் பிறப்புக்களிலும் கொடுவினை வயத்தால் அந் 'நிரயத்' துன்பமே உழந்து வருதலின், 'எழுமையும் தான் புக்கு அழுந்தும் அளறு' என்றார். முடிவில் காலமெல்லாம் தான் நிரயத்துன்பம் உழத்தற்கு ஏதுவாம் கொடுவினைகளையே அறிந்து சில காலத்துள்ளே செய்துகோடல் பிறர்க்கு அரிதாகலின், 'ஆற்றும்' என்றார். இதனான் அவன் மறுமைச்செயல் கூறப்பட்டது.)

வ சுப மாணிக்கம் உரை: எழுபிறப்பிலும் தான் தங்கும் நரகத்தினை ஒரு பிறப்பிலேயே பேதை தேடிக் கொள்வான்.

பொருள்கோள் வரிஅமைப்பு:
ஒருமைச் செயல்ஆற்றும் பேதை எழுமையும் தான்புக்கு அழுந்தும் அளறு.

பதவுரை: ஒருமை-ஒருபிறப்பு; செயல்-செய்தல்; ஆற்றும்-செய்து கொள்ளும்; பேதை-பேதை; எழுமையும்-எழுபிறப்பும், நீண்ட காலத்தும்; தான்-தான்; புக்கு-புகுந்து; அழுந்தும்-ஆழ்வதற்குக் காரணமாகிய; அளறு-நரகம், நிரயம்.


ஒருமைச் செயல்ஆற்றும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஒருபிறப்பின்கண் செய்யும் செயலாலே செய்ய வல்லவன்;
பரிப்பெருமாள்: ஒருபிறப்பின்கண் செய்யும் செயலாலே செய்ய வல்லவனாம்;
பரிதி: ஒரு சன்மத்திலே பேதைக்குணம் பெற்றால்;
காலிங்கர்: தான்பெற்று நின்ற ஒரு பிறவிக்கண்ணே செய்து கோடலை வல்லன் பேதையானவன்; யாதினையோ எனின்;
பரிமேலழகர்: இவ்வொரு பிறப்புள்ளே செய்து கொள்ள வல்லனாம்.

'இவ்வொரு பிறப்புள்ளே செய்து கொள்ள வல்லனாம்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'எடுத்த இப்பிறப்பொன்றிலேயே செய்து கொள்ள வல்லவனாவான்', 'அவனுக்கு இனிமேல் வரக்கூடிய ஏழு பிறவிகளிலும் தான் கிடந்து துன்பப்பட வேண்டிய நரகத்தை', 'ஒரு பிறவியிற் செய்கின்ற செயலாலே தனக்கு விளைத்துக் கொள்ளுவான்', 'இவ் ஒரு பிறப்பிலுள்ளே செய்துகொள்ள வல்லவன்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

இப்பிறப்பொன்றிலே செய்கின்ற செயல்களாலே தனக்கு விளைத்துக் கொள்ளுவான் என்பது இப்பகுதியின் பொருள்.

பேதை எழுமையும் தான்புக்கு அழுந்தும் அளறு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பேதை எழுபிறப்பினும் தான் புக்கழுந்தும் நரகத்தை.
மணக்குடவர் குறிப்புரை: புக்கழுந்தல்- ஒருகால் நரகத்திலே பிறந்தால் அவ்வுடம்பு நீங்கினாலும் அதனுள்ளே பிறத்தல்.
பரிப்பெருமாள்: பேதை எழுபிறப்பினும் தான் புக்கழுந்தும் நரகத்தை.
பரிப்பெருமாள் குறிப்புரை: எனவே அதற்குக் காரணமாயின செய்யும் என்றவாறாயிற்று. எழுபிறப்பினும் என்றது ஒருகால் அதன் அகத்திலே பிறந்தால் அவ்வுடம்பு நீங்கினாலும் அதன் உள்ளே பிறந்து அகலாதுறப் பேதை அறம் செய்யுமாறு கூறிற்று. [அகலாதுற - நீங்காதிருக்க]
பரிதி: ஏழு சென்மமும் நரகம் புகுவான் என்றவாறு.
காலிங்கர்: இனிவரும் பிறப்பின்கண் எஞ்ஞான்றும் ஒரு கரையேற்றம் இல்லாத வண்ணம் தான் புக்கு அழுந்தும் கும்பி நரகத்தை என்றவாறு. [கும்பி நரகம்- ஒருவகை நரகம்]
பரிமேலழகர்: பேதையாயினான் வரும் பிறவிகள் எல்லாம் தான் புக்கு அழுந்தும் நிரயத்தினை; [நிரயம் -நரகம்]
பரிமேலழகர் குறிப்புரை: எல்லாப் பிறப்பும் ஏழாய் அடங்குதல் அறியப்பட்டமையின், முற்று உம்மை கொடுத்தார். அழுந்துதற்கு இடனாய நிரயம், ஈண்டைப் பிறப்புக்களிலும் கொடுவினை வயத்தால் அந் 'நிரயத்' துன்பமே உழந்து வருதலின், 'எழுமையும் தான் புக்கு அழுந்தும் அளறு' என்றார். முடிவில் காலமெல்லாம் தான் நிரயத்துன்பம் உழத்தற்கு ஏதுவாம் கொடுவினைகளையே அறிந்து சில காலத்துள்ளே செய்துகோடல் பிறர்க்கு அரிதாகலின், 'ஆற்றும்' என்றார். இதனான் அவன் மறுமைச்செயல் கூறப்பட்டது. [அழுந்துதற்கு- மூழ்குதற்கு; கொடுவினை வயத்தால்- தீவினையால்; உழந்து - வருந்தி]

'பேதையாயினான் வரும் பிறவிகள் எல்லாம் தான் புக்கு அழுந்தும் நிரயத்தினை' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பேதை ஏழு பிறப்புக்களிலும் தான் சென்று வருந்தக்கூடிய நரகத்துன்பத்தை', 'முட்டாளானவன் இந்த ஒரு பிறவியிலேயே உண்டாக்கிக் கொள்வான்', 'அறிவிலான் எழுபிறவியிலுந் தான் உழன்று துய்க்கும் துன்பத்தை', 'பேதை எழு பிறப்பிலும் தான் புகுந்து வருந்தக்கூடிய நரகத்தை (வேறு பொருள்: மிகுதியும் தான் புகுந்து வருந்தக்கூடிய துன்பத்தை ஒரு செயலால் செய்வான் அறியாதான்.)' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

பேதை எழுபிறவியிலுந் தான் சென்று வருந்தக்கூடிய நரகத்துன்பத்தை என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
பேதை எழுபிறவியிலுந் தான் சென்று வருந்தக்கூடிய நரகத்துன்பத்தை இப்பிறப்பொன்றிலே ஆற்றுகின்ற செயல்களாலே தனக்கு விளைத்துக் கொள்ளுவான் என்பது பாடலின் பொருள்.
'தான்புக்கு அழுந்தும் அளறு' குறிப்பதென்ன?

அளவற்ற தீச்செயல்களைப் பேதை செய்துவிடுவான்.

பலபிறவிகள் எடுத்து நரகம் சென்று துய்க்கும் துன்பத்துக்கான குற்றங்களைப் பேதை ஒரு பிறவியிலேயே செய்து கொள்வான்.
‘ஒருமை’ என்பதற்கு ஒரு பிறப்பு, ஓரிடம், ஒருசெயல், என்று பொருள் கூறினர். ‘எழுமை’ என்பதற்கு ஏழுபிறப்பு, ஏழுதலைமுறை, பலவிடம், மிகுதி, எக்காலமும் என்று உரை கண்டனர். அளறு என்ற சொல் நரகத்தைக் குறிக்கும்; நிரயம் என்றும் பொருள்படும்.
அளறு, ஒருமை, எழுமை என்ற சொற்கள் வந்துள்ளமையால் செயல்கள் என்பது தீச்செயல்களைக் குறிப்பதாயிற்று. பேதையானவன் தீச்செயல்கள் பல புரிவான். எந்த அளவுக்குப் பாவச் செயல்கள் ஆற்றுகிறான் என்றால் ஒரு பிறவியில் ஈட்டிக்கொள்ளும் பாவங்கள் பல பிறவிகளுக்கான தீச்செயல் பெருக்கத்துக்குரிய தண்டனைக்குச் சமமாகின்றன என்று எள்ளல் குறிப்போடு நகைச்சுவையாகக் கூறுகிறார் வள்ளுவர் இப்பாடலில். ஏழு பிறவிகளில் நரகத்தில் வீழ்ந்து துய்க்கும் துன்பங்களை ஒருபிறவியிலேயே தேடிக்கொள்கிறான் பேதை. பேதையானவன் மிகவும் இழிவான செயல்கள் புரிய வல்லவன் என்று இங்கு சொல்லப்படுகிறான்.

'தான்புக்கு அழுந்தும் அளறு' குறிப்பதென்ன?

அளறு என்ற சொல் தொன்மங்களில் கூறப்படும் நரகம் என்று பொருள்படும். இது தேவருலகம், புத்தேளுலகு போன்று கற்பனையில் உருவான இடங்கள். நரகத்தை 'ஆரிருள்' 'இருள் சேர்ந்த இன்னா உலகம்' 'அளறு' என்ற சொற்களால் குறள் குறிப்பிடும். அளறு என்ற சொல்லுக்குப் பெருந்துன்பம், நரகம், என்றும் பொருள் கூறுவர். இச்சொல்லுக்குச் சேறு என்றும் ஒரு பொருள் உள்ளதாகையால் துன்பமென்னும் புதைசேறு என்றும் உரைப்பர். அளறு என்பது துன்பம் மட்டுமே நிறைந்த ஓர் இடம். ஒருவன் தம் வாழ்நாளில் செய்யும் தீச்செயல்களுக்குத் தண்டனையாக இறந்தபின் நரகம் என்ற சேற்றில் வீழ்ந்து அழுந்துவான் என்பது நம்பிக்கை. இதை 'தான்புக்கு அழுந்தும் அளறு' என்று இக்குறள் சொல்கிறது. ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும் தான் அளறு புக்கு அழுந்தும் என்று இக்குறளுக்குக் கொண்டு கூட்டிப் பொருள் காணலாம்.

இரா இளங்குமரனார் 'நிரயம் என்பது இறப்பின் பின் எய்துவதன்று. அஃதொரு தனியிடமுமன்று. தாமே நிரயத்தில் அழுந்தவும் தம் வாழ்வே இடமாக அமைகின்றது' என விளக்குவார். மேலும் 'சேற்றிலே குற்றவாளிகளை அமிழ்த்தலும், இருட்டறையுள் போட்டுத் துன்புறுத்தலும் உலகியல். ஆதலான், நிரயம் 'அளறு' என்றும் 'ஆரிருள்' என்றும் கூறப்படுகின்றன' எனவும் அவர் கூறுவார்.

'தான்புக்கு அழுந்தும் அளறு' என்றதற்கு தான் நரகம் என்ற துன்பச்சேற்றில் புகுந்து அழுந்திக் கிடக்கும் என்பது பொருள்.

பேதை எழுபிறவியிலுந் தான் சென்று வருந்தக்கூடிய நரகத்துன்பத்தை இப்பிறப்பொன்றிலே ஆற்றுகின்ற செயல்களாலே தனக்கு விளைத்துக் கொள்ளுவான் என்பது இக்குறட்கருத்து.



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாது
இகழ்ந்தார்க்கு எழுமையும் இல்

(அதிகாரம்:பொச்சாவாமை குறள் எண்:538)

பொழிப்பு: சான்றோர் புகழ்ந்து சொல்லிய செயல்களைப் போற்றிச் செய்ய வேண்டும்; அவ்வாறு செய்யாமல் மறந்து சோர்ந்தவருக்கு ஏழு பிறப்பிலும் நன்மை இல்லை.

மணக்குடவர் உரை: உயர்ந்தாரால் புகழப்பட்டவையிற்றைக் கடைப்பிடித்துச் செய்தல்வேண்டும். இவையிற்றைச் செய்யாது இகழ்ந்தவர்க்கு எழுபிறப்பிலும் நன்மையில்லையாமாதலான்.
இஃது அறத்தின்கண் இகழாமற் செய்வது கூறிற்று.

பரிமேலழகர் உரை: புகழ்ந்தவை போற்றிச் செயல் வேண்டும் - நீதி நூலுடையார் இவை அரசர்க்கு உரியன என்று உயர்த்துக் கூறிய செயல்களைக் கடைப்பிடித்துச் செய்க, செய்யாது இகழ்ந்தார்க்கு எழுமையும் இல் - அங்ஙனம் செய்யாது மறந்தவர்க்கு எழுமையினும் நன்மை இல்லை ஆகலான்.
(அச்செயல்களாவன: மூவகை ஆற்றலும், நால்வகை உபாயமும், ஐவகைத் தொழிலும், அறுவகைக் குணமும் முதலாய செயல்கள். சாதி தருமமாகிய இவற்றின் வழீஇயோர்க்கும் உள்ளது நிரயத் துன்பமே ஆகலின், 'எழுமையும் இல்' என்றார். 'எழுமை' ஆகு பெயர், இதனான் பொச்சாவாது செய்ய வேண்டுவன கூறப்பட்டன.)

இரா சாரங்கபாணி உரை: சான்றோர் புகழ்ந்து கூறும் செயல்களைக் குறிக்கொண்டு விரும்பிச் செய்தல் வேண்டும். அங்ஙனம் செய்யாமல் மறந்தவர்க்கு எப்போதும் நன்மை இல்லை.

பொருள்கோள் வரிஅமைப்பு:
புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும்; செய்யாது இகழ்ந்தார்க்கு எழுமையும் இல்.


புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும்:
பதவுரை: புகழ்ந்தவை-உயர்த்திக்கூறப்பட்ட செயல்கள்; போற்றி-எண்ணி; செயல்-செய்தல்; வேண்டும்-தகும்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: உயர்ந்தாரால் புகழப்பட்டவையிற்றைக் கடைப்பிடித்துச் செய்தல்வேண்டும்;
பரிப்பெருமாள்: உயர்ந்தாரால் புகழப்பட்டவையிற்றைக் கடைப்பிடித்துச் செய்தல்வேண்டும்;
பரிதி: உலகம் புகழ்ந்த காரியம் தனக்கு வந்தால் அந்தக் காரியத்தைப் போற்றிச் செய்வான்;
காலிங்கர்: தொல்கலையும் தொல் சான்றோரும் இவை இவை நல்ல என்று புகழ்ந்தவற்றை நீரும் குறிக்கொண்டு செய்தலை விரும்புமின்; [தொல்கலை - பழமையான நூல்கள். தொல்சான்றோர் - பழங்காலச் சான்றோர்கள்]
பரிமேலழகர்: நீதி நூலுடையார் இவை அரசர்க்கு உரியன என்று உயர்த்துக் கூறிய செயல்களைக் கடைப்பிடித்துச் செய்க;
பரிமேலழகர் குறிப்புரை: அச்செயல்களாவன: மூவகை ஆற்றலும், நால்வகை உபாயமும், ஐவகைத் தொழிலும், அறுவகைக் குணமும் முதலாய செயல்கள்.

'உயர்ந்தாரால் புகழப்பட்டவையிற்றைக் கடைப்பிடித்துச் செய்தல்வேண்டும்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'புகழ்தரும் வினைகளை மதித்துச் செய்க', 'புகழ் தரக்கூடிய நல்ல காரியங்களையும் மறந்து விடாமல் செய்து கொண்டிருக்க வேண்டும்', 'அறிஞர் சிறந்த கடமைகளென்று புகழ்ந்து கூறியவற்றைக் கடைப்பிடித்துச் செய்யவேண்டும்', 'பெரியோர் புகழ்ந்துள்ள நற்செயல்களைக் கடைப்பிடித்துச் செய்க', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

புகழப்பட்ட நற்செயல்களைக் கடைப்பிடித்துச் செய்க என்பது இப்பகுதியின் பொருள்.

செய்யாது இகழ்ந்தார்க்கு எழுமையும் இல்:
பதவுரை: செய்யாது-செய்யாமல்; இகழ்ந்தார்க்கு-மறந்தவர்க்கு; எழுமையும்-எழுபிறப்பும்; இல்-இல்லை.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இவையிற்றைச் செய்யாது இகழ்ந்தவர்க்கு எழுபிறப்பிலும் நன்மையில்லையாமாதலான்.
மணக்குடவர் குறிப்புரை: இஃது அறத்தின்கண் இகழாமற் செய்வது கூறிற்று.
பரிப்பெருமாள்: அவற்றைச் செய்யாது இகழ்ந்தவர்க்கு எழுபிறப்பிலும் நன்மையில்லையாமாதலான்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது அறத்தின்கண் இகழாமை கூறிற்று.
பரிதி: செய்யானாகில் ஏழு செனனத்தாலும் கீர்த்தி இல்லை என்றவாறு.
காலிங்கர்: என்னை எனின் இங்ஙனம் செய்யாது அவற்றை இகழ்ந்தவர்க்கு இம்மை ஆக்கமும் அன்றி மறுமை ஆக்கமும் இல்லை என்றவாறு.
காலிங்கர் குறிப்புரை: எழுமை என்பது மறுமை.
பரிமேலழகர்: அங்ஙனம் செய்யாது மறந்தவர்க்கு எழுமையினும் நன்மை இல்லை ஆகலான்.
பரிமேலழகர் குறிப்புரை: சாதி தருமமாகிய இவற்றின் வழீஇயோர்க்கும் உள்ளது நிரயத் துன்பமே ஆகலின், 'எழுமையும் இல்' என்றார். 'எழுமை' ஆகு பெயர், இதனான் பொச்சாவாது செய்ய வேண்டுவன கூறப்பட்டன.

'அங்ஙனம் செய்யாது மறந்தவர்க்கு எழுமையினும் நன்மை இல்லை' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'செய்யாது விட்டவர்க்கு என்றும் வாழ்வில்லை', 'அப்படிச் செய்யாது இகழ்ந்தவர்களுக்குப் (புண்ணியம் இல்லாததால்) பின்வரும் பிறவிகளுக்கு நன்மையில்லை', 'அங்ஙனஞ் செய்யாது அவற்றை மறந்தவர்க்கு எழுபிறப்பிலும் நன்மையில்லை', 'அங்ஙனம் செய்யாது இகழ்ந்தார்க்கு (மறந்தார்க்கு) எழு பிறப்பிலும் நன்மையில்லை. (எழுமையும் இல- 'மிகுதியும் உயர்ச்சியும் இல்லை' என்றும் கூறலாம்.)' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

செய்யாது அவற்றை மறந்தவர்க்கு எப்போதும் நன்மையில்லை என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
புகழப்பட்ட நற்செயல்களைக் கடைப்பிடித்துச் செய்க; அங்ஙனம் செய்யாது வழுக்கியவர்க்கு எப்போதும் நன்மையில்லை.

புகழப்பட்ட நற்செயல்களைக் கடைப்பிடித்துச் செய்க; செய்யாது அவற்றைப் புறக்கணித்தவர்க்கு எப்போதும் நன்மையில்லை என்பது பாடலின் பொருள்.
'புகழ்ந்தவை' யாவை?

போற்றி என்ற சொல்லுக்கு குறிக்கொண்டு அதாவது கவனத்துடன் என்பது பொருள்.
செயல்வேண்டும் என்ற தொடர் செய்தல் வேண்டும் என்ற பொருள் தரும்.
செய்யாது என்ற சொல்லுக்குச் செய்யாமல் என்று பொருள்.
இகழ்ந்தார்க்கு என்ற சொல் புறக்கணிப்போர்க்கு என்று பொருள்படும்.
எழுமையும் இல் என்ற தொடர் எழும்பிறவியிலும் அல்லது எப்போதும் (நன்மை) இல்லை என்ற பொருள் தருவது.

புகழ்ந்துரைக்கப்பட்ட நற்செயல்களைப் புறக்கணிக்காது செய்தல் வேண்டும். அவ்வாறு செய்யாது விட்டவர்க்கு எக்காலத்தும் நன்மை உண்டாகப் போவதில்லை.

புகழ்ந்து சொல்லப்பட்ட செயல்களைப் போற்றிச் செய்தல் வேண்டும். அவ்வாறு செய்யாமல் மறந்து சோர்ந்தவர்க்கு (இகழ்ந்தவர்க்கு) மிகுதியும் உயர்ச்சியும் இல்லை என்கிறார் வள்ளுவர். புகழப்படுவது அறச்செயல்களாகத்தான் இருக்கவேண்டும் என்பதில்லை; மற்ற பொருள் தொடர்பான செயல்களுக்கும் இக்குறட்கருத்தைப் பொருத்தமுடியும். பெரியோர் உயர்ந்தவை எனப்போற்றிய சிறந்த கொள்கைகளை அலட்சியப்படுத்தாமல் கடைப்பிடித்து ஒருவர் கடமை ஆற்ற வேண்டும்.
எழுமையும் இல் என்றதற்கு எழு பிறப்பினும் நன்மையில்லை எனப் பொருள் கூறுவர்; எப்பொழுதும் நன்மை இல்லை எனவும் கூறலாம்.
புகழ்ந்தவையைச் செய்யாமல் தளர்பவர்களுக்கு எப்பொழுதும் நன்மையான வாழ்க்கை கிட்டாது என்பது பொருள்.

'புகழ்சான்ற திருக்குறளைப் போற்றுகிறோம். பன்மாணும் பறை சாற்றுகிறோம். அவ்வளவோடு அமைதல் ஆகாது; 'குறள் கற்பேன்; நிற்பேன்; நிற்கக் கற்பேன்; குறள் வாழ்வு வாழ்வேன்; வள்ளுவன் ஆணை' என்ற செயலுணர்வும் வேண்டும்' என்று வ சுப மாணிக்கம் இக்குறளைத் தொடர்புபடுத்திச் சொல்வார்.
தமிழண்ணல் 'ஒருவன் தம் மிதப்புக் காரணமாகக் கொண்ட கடமைகளை மறந்து விடுவதையும் தான் புகழ்ந்து உயர்த்துப் பேசியவற்றை மறந்து விடுவதையுமே இவ்வாறு திருவள்ளுவர் கடிகின்றார்' என்று இக்குறளுக்கு விளக்கம் தந்தார்.
'சொன்னது போல் செய்ய வேண்டும். வாக்குறுதியை மறந்தவன் வளர்ச்சியடையவே முடியாது' என்றபடியும் உரை உள்ளது.

'புகழ்ந்தவை' யாவை?

'புகழ்ந்தவை' என்றதற்கு உயர்ந்தாரால் புகழப்பட்டவை, உலகம் புகழ்ந்த காரியம், தொல்கலையும் தொல் சான்றோரும் இவை இவை நல்ல என்று புகழ்ந்தவை, நீதி நூலுடையார் இவை அரசர்க்கு உரியன என்று உயர்த்துக் கூறிய செயல்கள், தான் மிகவும் உயர்த்திப் புகழ்ந்து பேசியவை, அறநூலோரும் சான்றோரும் உயர்த்திக் கூறிய செயல்கள், புகழ்தரும் வினைகள், சான்றோர் புகழ்ந்து கூறும் செயல்கள், புகழ் தரக்கூடிய நல்ல காரியங்கள், சான்றோர்களால் புகழப்பட்ட நற்செயல்கள், அறிஞர் சிறந்த கடமைகளென்று புகழ்ந்து கூறியவை, பெரியோர் புகழ்ந்துள்ள நற்செயல்கள், பெரியோரால் புகழ்ந்து கூறப்பட்டவை என்றவாறு உரை ஆசிரியர்கள் பொருள் கூறினர்.

புகழ்ந்தவை என்பதற்குக் காலிங்கர் 'தொல்கலையும் தொல் சான்றோரும் இவை இவை நல்ல என்று புகழ்ந்தவற்றை' என உரைத்தார். இது நூல்களேயன்றித் தொல்லோர்வாயுரைகளும் உள்ளடக்கியது எனப்பொருள்படும். இவ்வுரை சிறப்பாகக் காணப்படுகிறது.
புகழ்ந்தவை என்பதற்குப் பரிமேலழகர் 'நீதி நூலுடையார் இவை அரசர்க்கு உரியன என்று உயர்த்துக் கூறிய செயல்கள்' எனக்கூறி 'அச்செயல்களாவன: மூவகை ஆற்றலும், நால்வகை உபாயமும், ஐவகைத் தொழிலும், அறுவகைக் குணமும் முதலாய செயல்கள்' என விளக்கமும் தந்தார். இவர் கூறும் மூவகையாற்றல் என்பது அறிவும் ஆண்மையும், பொருள் படை என இருவகைத்தாய பெருமையும் என்றும் நால்வகை உபாயம் என்பது கொடுத்தல், இன்சொற் சொல்லல், வேறுபடுத்தல், ஒறுத்தலாம் என்றும் ஐவகைத் தொழில் என்பது எளிய முயற்சியுடையது, செய்தாற் பயனுள்ளது, பெரும்பயன் தருவது, ஐயம் இல்லாதது, பின் இன்பம் தருவதாகிய தொழில்களாம் என்றும் அறுவகைக் குணம் என்றது நட்பாக்கல், பகையாக்கல், பகைமேற் சேறல், இருத்தல், பிரித்தல், கூட்டலாம் என்றும் முதலாய என்றதனால் அன்பு, நாண், ஒப்புரவு, கண்ணோட்டம் முதலியவும் கொள்க என்றும் ஆய்வாளர்கள் விளக்கினர்.
தேவநேயப்பாவாணர் அரசர்க்குரிய சிறந்த செயல்கள் என்பதற்கு வரலாற்றிற் கெட்டாத பண்டைக்காலத்திற் பெருங்கடலில் நாவாய்ப் படை செலுத்திச் சாலித்தீவைக் கைப்பற்றியமை, தூங்கெயிலெறிந்தமை, முக்கழகம் நிறுவியமை, மகனை முறை செய்தமை, சீன நாட்டினின்று கரும்பைக் கொணர்ந்து பயிரிட்டமை, பாரதப்போர்ப்படை யிரண்டிற்கும் பதினெண்ணாளும் பெருஞ்சோறு வழங்கியமை, ஓரிளைஞன் இருபெருவேந்தரையும் ஐம்பெரு வேளிரையும் வென்றமை, முரசு கட்டிலில் துயின்ற புலவனுக்குக் கவரி வீசியமை, பரிசிலனுக்குத் தலையீந்தமை, காவிரியணைகட்டியமை, பேரேரியுங் கிளையாறும் வெட்டியமை, தமிழ்வேந்தரை யிகழ்ந்த வடநாட்டரசரை வென்று பத்தினிக்குப் படிமை நிறுவியமை, வானளாவுங் கோபுரம் எடுத்தமை, துறைநகரமைத்துக் கடல் வாணிகம் பெருக்கியமை போன்றனவும் பிறவுமாம் என தமிழ் அரசர்களது புகழ்பெற்ற செயல்கள் சிலவற்றைக் கூறினார்.
பரிமேலழகரும் தேவநேயப்பாவாணரும் அரசர்க்கு உரிய செயல்கள் எனக்கொண்டு உரை வரைந்திருந்தாலும் இவற்றைப் பொதுமையிற் கொள்ளவும் முடியும்.

'புகழ்ந்தவை' என்பதற்கு முன்னோர் புகழ்ந்துள்ள நற்செயல்கள் என்பது பொருள்.

புகழப்பட்ட நற்செயல்களைக் கடைப்பிடித்துச் செய்க; செய்யாது அவற்றைப் புறக்கணித்தவர்க்கு எப்போதும் நன்மையில்லை என்பது இக்குறட்கருத்து.



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப்பு உடைத்து

(அதிகாரம்:கல்வி குறள் எண்:398)

பொழிப்பு (மு வரதராசன்): ஒரு பிறப்பில் தான் கற்ற கல்வியானது அப்பிறப்பிற்கு மட்டும் அல்லாமல் ஒருவனுக்கு எழுபிறப்பிலும் உதவும் தன்மையுடையதாகும்.

மணக்குடவர் உரை: ஒருவனுக்கு ஒரு பிறப்பிலே கற்ற கல்வி தானே எழுபிறப்பினும் ஏமமாதலை யுடைத்து.
கற்ற கல்வி தானென்று கூட்டுக. இது வாசனை தொடர்ந்து நன்னெறிக்கண் உய்க்குமென்றது.

பரிமேலழகர் உரை: ஒருவற்கு - ஒருவனுக்கு, தான் ஒருமைக்கண் கற்ற கல்வி - தான் ஒரு பிறப்பின்கண் கற்ற கல்வி, எழுமையும் ஏமாப்பு உடைத்து - எழுபிறப்பினும் சென்று உதவுதலை உடைத்து.
(வினைகள்போல உயிரின்கண் கிடந்து அது புக்குழிப் புகும் ஆகலின், 'எழுமையும் ஏமாப்பு உடைத்து' என்றார். எழுமை - மேலே கூறப்பட்டது(குறள் 62). உதவுதல் - நன்னெறிக்கண் உய்த்தல்.)

சி இலக்குவனார் உரை: நன்கு கருத்தைச் செலுத்தி உள ஒருமைப்பாட்டோடு கற்ற கல்வி ஒருவர்க்கு மிகுதியும் வலிமை ஆதலை உடையது.

பொருள்கோள் வரிஅமைப்பு:
ஒருவற்கு தான் ஒருமைக்கண் கற்ற கல்வி எழுமையும் ஏமாப்பு உடைத்து.

பதவுரை:
ஒருமைக்கண்-ஒருமைப்பாட்டுடன்; தான்-தான்; கற்றகல்வி-கற்றுத் தேர்ந்த அறிவு; ஒருவற்கு-ஒருவர்க்கு; எழுமையும்-பல காலம்; ஏமாப்பு-பாதுகாப்பு, உதவுதல்; உடைத்து-உடையது.


ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஒருவனுக்கு ஒரு பிறப்பிலே கற்ற கல்வி தானே;
மணக்குடவர் குறிப்புரை: கற்ற கல்வி தானென்று கூட்டுக.
பரிப்பெருமாள்: ஒருவற்கு ஒரு பிறப்பிற் கற்ற கல்வி தானே;
பரிப்பெருமாள் குறிப்புரை: கற்ற கல்வி தான் என்று கூட்டுக.
பரிதி: ஒரு பிறப்பிலே கற்ற கல்வி;
காலிங்கர்: ஒரு பிறப்பின்கண் நல்வழிக்கு உரிய கல்விகளைத் தன் நெஞ்சத்து ஒருப்பாட்டுடனே தான் கற்ற கல்வியானது அங்ஙனம் கற்ற இணையிறந்த இறைவற்கு இம்மைக்கண் உளதாய் நீதிப் பொருளாகிய இன்ப உறுதியே அன்றி;
பரிமேலழகர்: ஒருவனுக்கு தான் ஒரு பிறப்பின்கண் கற்ற கல்வி;

'ஒருவன் ஒரு பிறப்பிலே கற்ற கல்வி' என்று பழம் ஆசிரியர்கள் அனைவரும் இப்பகுதிக்குப் பொருள் கூறினர். மணக்குடவர்/பரிப்பெருமாள் 'கற்ற கல்வி தான்' என்று கொள்ள காலிங்கரும் பரிமேலழகரும் 'தான் கற்ற கல்வி' என்று உரை செய்தனர். காலிங்கர் 'தன் நெஞ்சத்து ஒருப்பாட்டுடனே தான் கற்ற கல்வி' என்றும் 'அங்ஙனம் கற்ற அரசற்கு இம்மைக்கண் உளதாகிய நீதியாகிய இன்பப் பொருளாகிய உறுதியேயன்றி' என்று கூட்டியும் உரைத்தார்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஒரு பிறப்பில் படித்த படிப்பு ஒருவர்க்கு', 'ஒரு பிறவியில் தான் கற்ற கல்வி ஒருவனுக்கு', 'ஒரு பிறப்பில் கற்றுக்கொள்ளும் நல்லறிவு', 'ஒரு பிறப்பில் ஒருவன் கற்றுப் பெற்ற அறிவு', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

ஒருமனப்பட்டு ஒருவன் கற்ற கல்வி அறிவு என்பது இப்பகுதியின் பொருள்.

எழுமையும் ஏமாப்பு உடைத்து:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: எழுபிறப்பினும் ஏமமாதலை யுடைத்து.
மணக்குடவர் குறிப்புரை: இது வாசனை தொடர்ந்து நன்னெறிக்கண் உய்க்குமென்றது.
பரிப்பெருமாள்: எழுபிறப்பின் கண்ணும் காவல் ஆதலை யுடைத்து.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது வாசனை தொடர்ந்து நன்னெறிக்கண் உய்க்கும் என்றது.
பரிதி: எழுபிறப்புக்கும் உதவும்.
காலிங்கர்: பின்பு நிகழும் மறுமையாகிய இனிய சேம உறுதியையும் உடைத்து என்றவாறு.
பரிமேலழகர்: எழுபிறப்பினும் சென்று உதவுதலை உடைத்து.
பரிமேலழகர் குறிப்புரை: வினைகள்போல உயிரின்கண் கிடந்து அது புக்குழிப் புகும் ஆகலின், 'எழுமையும் ஏமாப்பு உடைத்து' என்றார். எழுமை - மேலே கூறப்பட்டது (குறள் 62). உதவுதல் - நன்னெறிக்கண் உய்த்தல்.

இப்பகுதிக்குப் பழைய ஆசிரியர்களில் மணக்குடவர்/பரிப்பெருமாள் 'எழுபிறப்பினும் பாதுகாப்பு உடையது' என்று கூறி 'இது வாசனை (வாசனாமலம்) தொடர்ந்து நன்னெறிக்கண உய்க்கும் என்ற சமயம் சார்ந்த கருத்துரை வழங்கினர். பரிதியும் பரிமேலழகரும் 'எழு பிறப்புக்கும் உதவும்' என்றனர். பரிமேலழகர் விரிவுரையில் 'வினை உயிரைத் தொடர்ந்து செல்வதுபோல் கல்வியும் உயிருடன் தொடரும்' என்று சமயவழிநின்று உரை தருகிறார். காலிங்கர் உரை மாறுபாடானது.

இன்றைய ஆசிரியர்கள் ' எழுபிறப்பிலும் வந்து உதவும்', 'ஏழு பிறப்பிலும் தொடர்ந்து உதவும்', ' இனி வரக்கூடிய ஏழு பிறவிகளுக்கும் பாதுகாப்பளிக்கும்', 'அவனுக்கு எழுவகைப் பிறப்பினுஞ் சென்று பாதுகாக்குஞ் சிறப்பினை உடையது.' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

பல காலங்களிலும் பாதுகாவலை அளிக்கும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
ஒருமையிற் கற்ற கல்வி ஒருவர்க்கு எழுமையிலும் வந்து உதவும் என்பது பாடலின் பொருள்.
ஒருமை - எழுமை குறிப்பன எவை?

இன்று ஈடுபாட்டுடன் கற்ற கல்வி காலங்காலத்திற்கும் பாதுகாப்பாக நின்று உதவும்.

ஒருவர் மன ஒருமைப்பாட்டோடு கற்ற கல்வி அவருக்கு பல காலத்துக்கும் காக்கும் வைப்பாக அமையும்.
ஒரு பிறவியில் கற்ற கல்வி பல பிறவிகளுக்கு உதவும் என்பதாக இக்குறளுக்குப் பெரும்பான்மை உரையாளர்கள் பொருள் கொள்வர். கல்வியால் பெற்ற அறிவு ஏழு பிறவிகள் வரைக்கும் அவனுடைய உயிரோடு கலந்திருந்து அவனுடைய வாழ்விற்கு உதவும் என்பது உட்கருத்து எனவும் அவர்கள் சொல்வர். இவை மிகஎளிமையாக்கப்பட்ட உரைகளாகத் தோன்றுகின்றன. அடுத்தபிறவியான மனிதப் பிறவிக்கோ மாந்தரற்ற மற்றப் பிறவிக்கோ எப்படிக் கல்வியை எடுத்துச் செல்லமுடியும்? பல்பிறவி/மறுபிறவி பற்றிச் சில நேரங்களில் வள்ளுவர் பேசித்தான் இருக்கிறார். ஆனால் கல்வியின் மேன்மை சொல்ல வந்தவர் இவ்விதம் கல்வி பிறவி தோறும் தொடந்து செல்லும் என்று பொருள் புலனாகாத வகையில் கூறியிருப்பாரா?
கல்வி உயிருடன் தொடரும் என்பது 'கல்வி' என்னும் அதிகாரத்திற்கே முரண்பட்டதாகும்' என்று கூறும் குறளுரையாசிரியர் குழந்தை 'அப்படி இருக்குமானால் ஒரு பிறவியில் படித்தால் போதுமே; அது அடுத்த மனிதப்பிறவிகளிலுமோ அல்லது மற்ற பிறவிகளிலுமோ தொடருமே; எல்லாப் பிறவிகளிலும் படிக்க வேண்டியதில்லையே' என்று வினவுவது சிந்திக்கத்தக்கது.
கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர் மற்றீண்டு வாரா நெறி (மெய்யுணர்தல், 356) பொருள்: கற்க வேண்டியவற்றைக் கற்று, இங்கு மெய்ப் பொருளை உணர்ந்தவர்; மீண்டும் இப் பிறப்பிற்கு வாராத வழியை அடைவர்) என்று பிறிதோரிடத்தில் குறள் சொல்கிறது. பிறவி ஒன்று வராமல் தடுப்பது கல்வி என்று அக்குறளுக்குப் பொருள் கூறுவர். பின் அது எப்படி பல பிறவிக்கும் உதவும்? என்று பிறவிச் சுழற்சியில் நம்பிக்கை கொண்ட சமயவாதிகளே ஐயவினா எழுப்புகின்றனர்.

இக்குறளுக்கான காலிங்கர் உரை ''ஒரு பிறப்பின்கண் நல்வழிக்கு உரிய கல்விகளைத் தன் நெஞ்சத்து ஒருப்பாட்டுடனே தான் கற்ற கல்வியானது, அங்ஙனம் கற்ற இணையிறந்த இறைவற்கு இம்மைக்கண் உளதாய் நீதிப் பொருளாகிய இன்ப உறுதியே அன்றிப் பின்பு நிகழும் மறுமையாகிய இனிய சேம உறுதியையும் உடைத்து' என்கிறது. மற்றவர்கள் உரைகளினும் இவ்வுரை மாறுபாடாக உள்ளது. இந்த உரை பல பிறவிக் கொள்கையைத தவிர்க்கிறது என்பது குறிக்கத்தக்கது. மேலும் கல்வியின் பயன் மக்களுக்குச் சென்று சேர்கிறது என்பதையும் புதிய முறையில் விளக்குகிறது. ஏமாப்பு என்ற சொல்லுக்கு மற்றவர்கள் பாதுகாப்பு என்றும் உதவி என்றும் பொருள் சொல்லக் காலிங்கர் 'சேம உறுதியாதல்' அதாவது நலிந்தகாலத்து காக்கும் வைப்பு என்றார்.

ஒருமை என்பதற்கு ஒருமனப்பட்டு என்றும் ஏழு என்றது பன்மை குறித்து நின்றதே அன்றி எண் வரையறை செய்வதன்று எனவும் கொண்டால் குறட்பொருள் விளக்கம் பெறும். ஒருமனப்பட்டு பயின்ற கல்விப்பதிவு பல காலங்களுக்குத் துணை நின்று ஒருவற்கு உதவி செய்யும் என்பது இக்குறள் கூறும் செய்தி.

ஒருமை - எழுமை குறிப்பன எவை?

'ஒருமை' என்ற சொல்லுக்கு அன்றைய/இன்றைய உரையசிரியர்ககளுள் பெரும்பான்மையினர் 'ஒரு பிறப்பிலே' என்றே பொருள் கூறினர்.
சிலர் ஒருமைக்கண் தான் கற்ற கல்வி என்பதற்கு 'நன்கு கருத்தைச் செலுத்தி உள ஒருமைப்பாட்டோடு கற்ற கல்வி அதாவது கற்கவேண்டும் என்ற ஒரே எண்ணத்துடன் வேறு எண்ணங்கள் அற்று ஒருமனதோடு கற்றலே' என்ற வகையில் பொருள் கூறினர். இன்னும் சிலர் 'ஒருமைக்கு ஓரிடத்தில் என்றும் '(மன எண்ணங்களின்) ஒருங்கிணைப்புடன் என்றும் இத்தொடர்க்குப் பொருள் கண்டனர்.
காலிங்கர் உரையில் ஒருமைக்கண் என்பதை 'ஒருமைக்கண்-ஒருமைக்கண்' என்று வாசிக்க நேரிடுகிறது. இவர், 'ஒரு பிறப்பின்கண்' என்பதுடன் 'தந்நெஞ்சத்து ஒருமைப்பாட்டுடனே' என்பதையும் இணைத்து உரை கூறுகின்றார். இவர் ஒருமை என்பதற்கு ஒருபிறப்பு, ஒருமைப்பாடுடன் என்று இருபொருளையும் கூட்டிக் கூறுகிறார்.
ஒருமைக்கண் என்றதற்கு காலிங்கர் உரைப்பகுதியில் கண்டவாறு 'தந்நெஞ்சத்து ஒருமைப்பாட்டுடன்' என்பது பொருத்தமான பொருளாகும்.

ஒருமைக்கு ஒருபிறப்பு என்று பொருள் கண்ட ஆசிரியர்கள் எழுமை என்பதற்கு ஏழு பிறப்பு என்று உரை கூறினர். ஏழு பிறப்புக்கள் எவை? பரிமேலழகரது உரையில் கூறியபடியும் சமயக் கருத்துக்கள் சொல்வனவற்றிலிருந்தும் அவை: தாவரம், நீர் வாழ்வன, ஊர்வன, பறவைகள், விலங்கு, மனிதர், தேவர் ஆகியன என்று அறிகிறோம். இதன்படி ஓர் உயிர் தன் குறைகளினின்று நீங்கி நிறைபெற்று வளர்ந்து நிலைபெற ஏழுதடவை முயற்சி செய்கிறது; படிமுறை வளர்ச்சியில் உயிர் ஓரறிவில் தொடங்கி தேவர்நிலை (ஏழாவது நிலை) எய்துதல் என்பது 'ஏழு பிறப்பு தத்துவம்'. ஏழுபிறப்புகளை ஏழு மனிதப்பிறவிகள் என்று கொள்ளலாம் என்ற கருத்தும் உண்டு. பிறவி/பிறவிச்சுழற்சிக் கோட்பாடுகளே தெளிவற்றனவாகவே உள்ளன.
சிலர் எழுபிறப்பு என்பதை எழுகின்ற பிறப்பு எனக்கொண்டு இனிமேல் தோன்றப் போகும் பிறவிகளுள் என்று உரை தருவர். இன்னும் சிலர் 'ஏழேழ் தலைமுறை' என்றும், 'எழுமை என்பது எமக்கு எழுகின்ற துன்பங்கள்' என்றும், 'பல இடங்கள்' என்றும் கூறினர். ஏழு பருவம், எழு தலைமுறை, ஏழு வகைப்பட்ட உறவினர், ஏழுமடங்கு பொருள் என்றபடியும் உரைப்பொருள்கள் உள. காலிங்கர் 'எழுமையும்' என்பதை எழுகின்ற அதாவது இனிவர இருக்கின்ற மறுமையிலும் என்று கொண்டார். காலிங்கர் இம்மை-மறுமை என்ற இருபிறப்பில் (இருமை) நம்பிக்கை உள்ளவர். இவர்க்கு மறுமை மக்கட்பிறப்பேயாம்.
'எழுமை' என்ற சொல் சங்ககால இலக்கியங்களிலும், மற்ற பதினெண் கீழ்க்கணக்கு நூல்களிலும் பயிலப்படவில்லை என்று சொல்லும் கு ச ஆனந்தன், எழுமை என்பதற்கு 'ஏழுநிலை' அல்லது 'ஏழு தன்மை' என்றே வள்ளுவர் பொருள் கொண்டார் என்று கூறினார். இதற்குச் சான்றாக பரிமேலழகரின் குறள் 1269-ஆம் உரையில் கண்ட 'சேணிடைச் சென்ற நம் காதலர் மீண்டுவரக் குறித்த நாளை உட்கொண்டு அது வருந்துணையும் உயிர் தாங்கி வருந்தும் மகளிர்க்கு ஒருநாள் பலநாள் (ஏழுநாள்)போல நெடிதாகக் காட்டும்', 'ஏழ் என்பது அதற்கு மேலாய மிக்க பன்மை குறித்து நின்றது' என்னும் பகுதிகளைக் காட்டுவார். எனவே ஒன்று-ஏழு, அல்லது ஏழு என்னும் சொற்கள் குறளில் அந்த எண்ணை மட்டுமே சுட்டாது, ஒன்று-பல என்னும் பொருளையே குறிக்கும்; 'ஒருமை' 'எழுமை' என்பவை 'ஒன்று-பல' என்ற பொருளையே குறளில் தந்து நிற்கின்றன என்றும் விளக்கினார் கு ச ஆனந்தன். 'நாலைந்தெடு, ஏழெட்டுபேர்' என்னும் வழக்குப்போல, எழுமை என்னும் எண்ணுப் பெயரைப் பல என்னும் பொருளிலேயே ஆளுகின்றார் வள்ளுவர் என்பார் குழந்தை. சி இலக்குவனார் எழுமை என்ற சொல்லுக்கு மிகுதி என்று பொருள் கொண்டார்.
ஏழு என்றது பன்மை குறித்து நின்றது எனவே இச்சொல்லுக்குப் 'பல' என்று பொருள் கொள்ளலாம்.

ஒருமை என்பதற்கு ஒருமைப்பாட்டுடன் என்றும் எழுமை என்பதற்குப் பல என்றும் பொருள் கொள்வது பொருத்தமாகும்.

ஒருமனப்பட்டு ஒருவன் கற்ற கல்வி அறிவு பல காலத்துக்குப் பாதுகாவலை அளிக்கும் என்பது இக்குறட்கருத்து.



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப்பு உடைத்து

(அதிகாரம்:அடக்கமுடைமை குறள் எண்:126)

பொழிப்பு (மு வரதராசன்): ஒரு பிறப்பில், ஆமைபோல் ஐம்பொறிகளையும் அடக்கியாள வல்லவனானால், அஃது அவனுக்குப் பல பிறப்பிலும் காப்பாகும் சிறப்பு உடையது.

மணக்குடவர் உரை: ஒருபிறப்பிலே பொறிகளைந்தினையும் ஆமைபோல அடக்க வல்லவனாயின், அவனுக்கு அதுதானே எழுபிறப்பினுங் காவலாதலை யுடைத்து.

பரிமேலழகர் உரை: ஆமை போல் ஒருமையுள் ஐந்து அடக்கல் ஆற்றின் - ஆமைபோல, ஒருவன் ஒரு பிறப்பின்கண் ஐம்பொறிகளையும் அடக்கவல்லன் ஆயின்; எழுமையும் ஏமாப்பு உடைத்து - அவ் வன்மை அவனுக்கு எழுபிறப்பின் கண்ணும் அரண் ஆதலை உடைத்து.
(ஆமை ஐந்து உறுப்பினையும் இடர் புகுதாமல் அடக்குமாறு போல இவனும் ஐம்பொறிகளையும் பாவம் புகுதாமல் அடக்க வேண்டும் என்பார் 'ஆமை போல' என்றார். ஒருமைக்கண் செய்த வினையின் பயன் எழுமையும் தொடரும் என்பது இதனான் அறிக. இதனான் மெய்யடக்கம் கூறப்பட்டது.)

இரா சாரங்கபாணி உரை: ஒரு பிறப்பில் ஒருவன் ஆமைபோல் ஐம்பொறிகளையும் அடக்க வல்லவனாயின், அவனுக்கு ஏழு பிறப்பிலும் பாதுகாப்பு உண்டு.

பொருள்கோள் வரிஅமைப்பு:
ஆமைபோல் ஒருமையுள் ஐந்தடக்கல் ஆற்றின் எழுமையும் ஏமாப்பு உடைத்து.

பதவுரை: ஒருமையுள்-ஒருவழிப்பட்ட உள்ளத்தினுள்; ஆமைபோல்-ஆமை போல; ஐந்து- ஐம்பொறிகட்குத் தொகைக் குறிப்பு; அடக்கல்-அடங்கச் செய்தல்; ஆற்றின்-வல்லவனானாயின்; எழுமையும்-பலகாலத்தும்; ஏமாப்பு-பாதுகாப்பு; உடைத்து-உடையது.


ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஒருபிறப்பிலே பொறிகளைந்தினையும் ஆமைபோல அடக்க வல்லவனாயின்;
பரிப்பெருமாள்: ஒருபிறப்பிலே பொறிகளைந்தினையும் ஆமைபோல அடக்க வல்லவனாயின்;
பரிப்பெருமாள் குறிப்புரை: ஆமைபோல என்றது தனக்குள்ள உறுப்பைப் பிறர்க்குப் புலனாகாது அடக்குமது போல பொறிகள் நுகரவற்றாயிருக்க, நுகராமல் அடக்க வேண்டும் என்றவாறு.
பரிதி: ஆமையானது நாலு காலும் தலை ஒன்றும் மனுஷனைக் கண்ட மாத்திரத்திலே அடங்கினாப் போலவே இவனும் ஐம்புலன்களையும் அறிவினால் அடக்கின்;
காலிங்கர்: ஆமையானது முகமுதலாகிய தன் உறுப்பு ஐந்தனையும் வேண்டுழி விரித்தும் வேண்டாக்கால் அடக்கியும் தன்னைப் பாதுகாத்து கொண்டொழுகுமாப் போல் தன் ஒருவழிப்பட்ட உள்ளத்தினாலே இங்குசொன்ன ஐம்புலன்களையும் நன்னெறிக்கண் நடாத்தியும் தீநெறிக்கண் குவித்தும் இங்ஙனம் இவற்றை அடக்குதல் வல்லனாயின்;
பரிமேலழகர்: ஆமைபோல, ஒருவன் ஒரு பிறப்பின்கண் ஐம்பொறிகளையும் அடக்கவல்லன் ஆயின்;
பரிமேலழகர் குறிப்புரை: ஆமை ஐந்து உறுப்பினையும் இடர் புகுதாமல் அடக்குமாறு போல இவனும் ஐம்பொறிகளையும் பாவம் புகுதாமல் அடக்க வேண்டும் என்பார் 'ஆமை போல' என்றார்.

'ஒருவன் ஒரு பிறப்பின்கண் ஆமைபோல ஐம்பொறிகளையும் அடக்கவல்லன் ஆயின்' என்றபடி மணக்குடவர்/பரிப்பெருமாள், பரிமேலழகர் ஆகிய பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். ஒருமையுள் என்பதற்குப் பரிதி பொருள் கூறாமல் விடுத்தார். காலிங்கர் அதற்கு 'ஒருவழிப்பட்ட உள்ளத்தினாலே' எனப் பொருள் கூறினார்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஒருபிறப்பில் ஆமைபோல் ஐம்பொறியும் அடக்கின்', 'ஆமையானது தன்னுடைய நான்கு கால்கள் தலை ஆகிய ஐந்தையும் தன் இச்சைப்படி தன் ஓட்டுக்குள் அடக்கிக் கொள்வதைப்போல் மனிதன் தன் ஐந்து ஆசைகளையும் ஒரு பிறவியில் அடக்கியாள முடியுமானல்', 'ஆமை தன் உறுப்புக்களை அடக்கிக் கொள்ளுதல் போல ஒருவன் ஒரு பிறப்பிலே தன் ஐம்பொறிகளை அடக்க வல்லனாயின்', 'ஒருவர் ஒரு பருவத்துள் ஆமைபோல ஐம்பொறிகளையும் அடக்கக்கூடிய ஆற்றல் பெறுவாராயின்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

ஒருவழிப்பட்ட உள்ளத்தினுள் ஆமைபோல் ஐம்பொறியும் அடக்கக்கூடிய ஆற்றல் பெறுவாராயின் என்பது இப்பகுதியின் பொருள்.

எழுமையும் ஏமாப்பு உடைத்து:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அவனுக்கு அதுதானே எழுபிறப்பினுங் காவலாதலை யுடைத்து.
பரிப்பெருமாள்: அவனுக்கு அதுதானே எழுபிறப்பினுங் காவலாதலை யுடைத்து.
பரிப்பெருமாள் குறிப்புரை: அன்றாயின் வாதனை தொடரும் என்றவாறு. பொறிகள் ஐந்தனையும் அடக்க வல்லார்க்கு ஏழுபிறப்பும் நன்மை உண்டாம் என்றவாறு. [வாதனை - துன்பம்]
பரிதி: அவனுக்கு ஏழு சென்மத்திலும் துன்பம் இல்லையாம். [சென்மம் - பிறவி]
காலிங்கர்: அது அவ்வடக்குகின்ற ஒப்பிறந்தானுக்கு இம்மைக் கண்ணும் மறுமைக் கண்ணும் சேமமாகிய உறுதியைப் பெறுவிக்கும் என்றது. [ஒப்பிறந்தானுக்கு-உவமையற்றவனுக்கு; பெறுவிக்கும் - பெறச் செய்யும்]
பரிமேலழகர்: அவ் வன்மை அவனுக்கு எழுபிறப்பின் கண்ணும் அரண் ஆதலை உடைத்து.
பரிமேலழகர் குறிப்புரை: ஒருமைக்கண் செய்த வினையின் பயன் எழுமையும் தொடரும் என்பது இதனான் அறிக. இதனான் மெய்யடக்கம் கூறப்பட்டது.

'எழுபிறப்பினுங் காவலாதலை உடைத்து' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். எழு பிறப்பு என்பதற்குக் காலிங்கர் இம்மைக்கண்ணும் மறுமைக்கண்ணும் எனப் பொருள் கூறினார்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஏழு பிறப்பிலும் சேமம் உண்டு', 'அது பின்வரும் ஏழு பிறவிகளுக்கும் பாதுகாப்பளிப்பதாகும்', 'அஃது அவனுக்கு எழுவகைப் பிறப்பின்கண்ணும் உறுதிதருந் தன்மையது', 'அவ்வாற்றல் மிகுதியும் துணையாதல் சிறப்புடைத்து' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

பல காலத்துக்கும் பாதுகாப்பு அளிப்பதாகும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
ஒருமையுள் ஆமைபோல் ஐம்பொறியும் அடக்கக்கூடிய ஆற்றல் பெறுவாராயின், அது எழுமையும் பாதுகாப்பு அளிப்பதாகும் என்பது பாடலின் பொருள்.
ஒருமை-எழுமை குறிப்பன எவை?

ஐம்புலன்களையடக்கி ஒழுகும் தூய வாழ்க்கை பலகாலம் தொடர்ந்து பயனளிக்கும்.

ஆமை தனக்கு ஊறு நேராமல் தன் தலை கால்கள் ஆகியவைகளைத் தன் ஓட்டுக்குள் அடக்கிக் காத்துக் கொள்ளும். அதுபோல் ஒருவன் தன் ஐம்பொறிகளையும் தீவினை அண்டாமல் அடக்கும் திறம் பெற்றால், அது அவனுக்கு நீண்டகாலத்திற்கும் பாதுகாப்பாகும்.
மெய்யடக்கம் பற்றிப் பேசுகிறது இக்குறள். மன வாயில்களான வாய், கண், மெய், செவி, மூக்கு என்னும் ஐந்தின் வழியாக ஏற்படக்கூடிய சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்னும் உணர்வுகளைத் தக்கவாறு அடக்கிக் காப்பதே மன அடக்கமாகும். நுகரவேண்டும் என்ற மனஎழுச்சி புலனுணர்வின் பின்னே பிறக்கிறது. ஆகவே உணர்வாகிய புலனைப் பொறிவாயிலாகச் செல்ல ஏவும் மனநிலையிலேயே அடக்க வேண்டும் என்பதே மன அடக்கம். ஒருவர் தம்முடைய ஐந்து புலன்களையும் அடக்கி வசப்படுத்தி உலக இன்பங்களை அளவாக அனுபவிக்க வேண்டும் எனச் சொல்லப்படுகிறது. மனத்தை அடக்கி மெய்யடக்கத்துடன் ஒழுகவேண்டும் என்பது வலியுறுத்தப்படுகிறது.

ஆமை போன்று ஒருமுகப்பட்ட நிலையில் ஐம்புலன்களை அடக்கிச் செயலாற்றினால், அது பலகாலம் அரணாய்க் காத்து நிற்கும் தன்மை உடைத்து. ஆமை தன் தலையையும் நான்கு கால்களையும் தேவையானபோது ஓட்டிற்கு வெளியே நீட்டி நுகர்ந்தும் நலம் பயக்காத சூழல்களில் அவை பிறர்க்குத் தெரியாதவாறு சுருக்கியும் தன்னைக் காத்து நடந்து கொள்ளும். அது போல மாந்தர் ஒருவழிப்பட்ட உள்ளத்தினாலே ஐம்புலன்களையும் நல்ல நெறியில் செலுத்தியும் தீயநெறி கண்டால் உள்ளடக்கியும் நடந்துகொண்டால் அது அவர்க்குப் பலகாலம் பாதுகாப்பாக அமையும். ஐந்தடக்கல் என்பது நுகர்தல் கூடாது என்பதல்ல; அளவுக்கு மீறாமல் உரிய எல்லையில் ஐம்புல இன்பங்களைத் துய்ப்பதைக் குறிப்பது. இது புலனின்பங்கள் ஐந்தையும் அடியோடு ஒழிப்பதிலிருந்து வேறானது.
பொறியடக்கம் என்பது வஞ்சகமாக அவற்றை அடக்கி வைத்தலும் அன்று; தீவினைகள் புரியாமல் தன்னைக் காத்துக் கொள்வது ஆகும். ஒருவன் தன்‌ ஐம்புலன்களையும்‌ அடக்குவது‌ தீவினைகளால்‌ தனக்கு ஊறு வராமற்‌ பாதுகாத்துக் கொள்ளுதற்காகவே என்பதை உணர்த்த 'ஏமாப்புடைத்து' எனச் சொல்லப்பட்டது‌.

ஒருமை-எழுமை குறிப்பன எவை?

ஒருமையுள் என்பதற்குப் பல உரையாசிரியர்கள் 'ஒரு பிறப்பில்' என்றே உரை கண்டனர். இவர்கள் எழுமை என்ற சொல்லுக்கு ஏழு பிறப்பு எனக் கொண்டு அதன் எதிர்சொல்லாக ஒருமை வந்ததாகக் கருதி ஒரு பிறப்பில் எனப் பொருள் கண்டனர். இவர்கள் ஒருமைக்கண் செய்தவினை ஏழுபிறவியிலும் தொடரும் என்பதை வள்ளுவர் நம்பினார் என்பவர்கள். தொல்லாசிரியர்களில் பரிதியும் பரிப்பெருமாளும் இதற்குப் பொருள் கூறாமல் விட்டனர். காலிங்கர் ஒருமையுள் என்ற சொல்லுக்கு 'ஒருவழிப்பட்ட உள்ளத்திலே' எனப் பொருள் கொண்டார். இன்றைய உரையாளர்களில் சிலர் இப்பகுதிக்கு ஒரு கூட்டிற்குள் என்றும் தன் ஓட்டுக்குள் என்றும் ஒருநெறியுள் அடக்கல் என்றும் பொருள் கூறினர். சி இலக்குவனார் ஒரு பருவத்துள் என உரைத்தார்.
அதுபோலவே எழுமையும் என்றதற்கு மிகுதியும், எழுபிறப்பிலும், எழுவகைப் பிறப்பின் கண்ணும், பின்வரக்கடவ எழுவகைப் பிறப்பினும், இனி வரக்கூடிய ஏழு பிறவிகளிலும், ஏழு பிறப்பளவு அரணாதலையுடையது என உரையாளர்கள் பொருள் கூறினர்.
காலிங்கர் இம்மைக் கண்ணும் மறுமைக்கண்ணும் என மொழிந்தார்.

ஒரு பிறப்பு, ஏழு பிறப்பு என்பன சமயம் சார்ந்த நம்பிக்கைகளால் உண்டானவை. அடக்கம் அமரருள் உய்க்கும்....... (121) என்று இவ்வதிகாரத்து முதல் குறளில் எழுதியவர் அதற்கு மாறாக அதே அதிகாரத்தில் ஐம்புல அடக்கமுடைமையோனுக்கு ஏழு பிறப்புகள் உண்டு என்று பொருள்படுவதாகிய இக்குறளை எழுதியிருப்பாரா என்ற ஐயவினா எழுப்பப்படுகிறது.
'எழுமை' என்ற சொல் சங்ககால இலக்கியங்களிலும், மற்ற பதினெண் கீழ்க்கணக்கு நூல்களிலும் பயிலப்படவில்லை என்று சொல்லும் கு ச ஆனந்தன், எழுமை என்பதற்கு 'ஏழுநிலை' அல்லது 'ஏழு தன்மை' என்றே வள்ளுவர் பொருள் கொண்டார் என்று கூறினார். இதற்குச் சான்றாக பரிமேலழகரின் குறள் 1269-ஆம் உரையில் கண்ட 'சேணிடைச் சென்ற நம் காதலர் மீண்டுவரக் குறித்த நாளை உட்கொண்டு அது வருந்துணையும் உயிர் தாங்கி வருந்தும் மகளிர்க்கு ஒருநாள் பலநாள் (ஏழுநாள்)போல நெடிதாகக் காட்டும்', 'ஏழ் என்பது அதற்கு மேலாய மிக்க பன்மை குறித்து நின்றது' என்னும் பகுதிகளைக் காட்டுவார். எனவே ஒன்று-ஏழு, அல்லது ஏழு என்னும் சொற்கள் குறளில் அந்த எண்ணை மட்டுமே சுட்டாது, ஒன்று-பல என்னும் பொருளையே குறிக்கும்; 'ஒருமை' 'எழுமை' என்பவை 'ஒன்று-பல' என்ற பொருளையே குறளில் தந்து நிற்கின்றன என்றும் விளக்கினார் கு ச ஆனந்தன். 'நாலைந்தெடு, ஏழெட்டுபேர்' என்னும் வழக்குப்போல, எழுமை என்னும் எண்ணுப் பெயரைப் பல என்னும் பொருளிலேயே ஆளுகின்றார் வள்ளுவர் என்று சொல்லும் குழந்தை 'ஒரு பிறப்பில் ஐந்தடக்கினால் அவனுக்குத்தான் பிறப்பில்லையே; அவ்வளவு வருந்திப் பொறிகளை யடக்கியும் பிறப்பறாமல் பின்னும் எழுபிறப்புண்டெனில் ஒருவன் எதற்காக ஐம்பொறியடக்க வேண்டும்? எனவும் வினவுவார். சி இலக்குவனார் எழுமை என்ற சொல்லுக்கு மிகுதி என்று பொருள் கொண்டார்.

ஒருமையுள் என்பதற்கு காலிங்கர் உரையில் கண்டபடி 'ஒருவழிப்பட்ட உள்ளத்திலே' என்ற பொருள் சிறப்பாக உள்ளது.
ஏழு என்றது பன்மை குறித்து நின்றது எனவே இச்சொல்லுக்குப் 'பல' என்று பொருள் கொண்டு எழுமையும் என்றதற்கு பல காலத்தும் எனப் பொருள் கொள்வது நன்கு.

ஒருவழிப்பட்ட உள்ளத்திலே ஆமைபோல் ஐம்பொறியும் அடக்கக்கூடிய ஆற்றல் பெறுவாராயின், அது பல காலத்துக்கும் பாதுகாப்பு அளிப்பதாகும் என்பது இக்குறட்கருத்து.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard