Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 13. விண்ணின்று பொய்ப்பின் விரிநீர்


Guru

Status: Offline
Posts: 7474
Date:
13. விண்ணின்று பொய்ப்பின் விரிநீர்
Permalink  
 


விண்ணின்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உண்ணின்று உடற்றும் பசி.

(அதிகாரம்:வான் சிறப்பு குறள் எண்:13)

பொழிப்பு: மழை பெய்யாமல் பொய்படுமானால், கடல் சூழ்ந்த அகன்ற உலகமாக இருந்தும் பசி உள்ளே நிலைத்து நின்று உயிர்களை வருத்தும்.

மணக்குடவர் உரை: வானமானது நிலைநிற்கப் பொய்க்குமாயின், விரிந்த நீரினையுடைய அகன்ற வுலகத்திடத்தே பசியானது நின்று வருத்தாநிற்கும்.
எல்லாவுயிர்களையும் பொய்த்தல்- தன்றொழில் மறுத்தல். இது பசி என்று பொதுப்படக் கூறியவதனான் மக்களும் விலங்கும் பொருளுங் காமமுந் துய்க்கலாற்றாது துன்ப முறுமென்று கூறிற்று.

பரிமேலழகர் உரை: விண் இன்று பொய்ப்பின் - மழை வேண்டுங்காலத்துப் பெய்யாது பொய்க்கும் ஆயின்; விரி நீர் வியன் உலகத்துள் - கடலால் சூழப்பட்ட அகன்ற உலகத்தின்கண்; நின்று உடற்றும் பசி - நிலை பெற்று உயிர்களை வருத்தும் பசி.
(கடலுடைத்தாயினும் அதனால் பயன் இல்லை யென்பார், 'விரி நீர் வியன் உலகத்து' என்றார். உணவு இன்மையின் பசியான் உயிர்கள் இறக்கும் என்பதாம்.)

குன்றக்குடி அடிகளார் உரை: வான்மழை பொய்ப்பின் கடல் சூழ்ந்த உலகத்தினுள் பசி வருத்தும். மழை இல்லாவிடில் விளைவு இல்லை. அதனால் பஞ்சமும் பசியும் உலகத்தை வருத்தும்.
'விரிநீர் வியனுலகம்' என்றது தண்ணீர்ப் பரப்பளவில் மிகுந்திருந்தும் பயன்படாத நிலை உணர்த்தப்பட்டது. உப்புநீர் விளைவிக்கப் பயன்படாது. பயன்படாத பொருளும் உதவ இயலாத படையும் இருந்து என்ன பயன்?

பொருள்கோள் வரிஅமைப்பு:
விண்ணின்று பொய்ப்பின் விரிநீர் வியன் உலகத்து உண்ணின்று உடற்றும் பசி.


விண்ணின்று பொய்ப்பின் :
பதவுரை: விண்-மழை; இன்று-இல்லாமல்; பொய்ப்பின்-பொய்யானால் .

இத்தொடர்க்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: வானமானது நிலைநிற்கப் பொய்க்குமாயின்;
மணக்குடவர் விரிவுரை: எல்லாவுயிர்களையும் பொய்த்தல்- தன்றொழில் மறுத்தல்.
பரிதியார்: கார்காலத்தில் மழை பெய்யாவிடில்;
காலிங்கர்: மழையானது நெடிதாக வறங்கூர்ந்து தப்புமாயின்;
பரிமேலழகர்: மழை வேண்டுங்காலத்துப் பெய்யாது பொய்க்கும் ஆயின்; :

பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு 'மழை நெடிது பெய்யாவிடினும்', 'மழை வேண்டுங்காலத்துப் பெய்யாவிட்டாலும்' என்று உரை கூறினர். பரிதி 'கார்காலத்தில் மழை பெய்யாவிடில்' என்கிறார். .

இன்றைய ஆசிரியர்கள் 'மழையில்லாது போகின்', 'மழை வேண்டிய காலத்துப் பெய்யாது தவறுமாயின்', 'வேண்டுங் காலத்திலே மழை பெய்யாது மறையுமாயின் கடல்சூழ்ந்த என்பதனால் கடல்நீர் அளவின்றியிருந்தும் அது பசி நீக்க உதவாது என்பது குறிப்பு', 'மழை பெய்யும் காலத்துப் பெய்யாது தவறுமாயின்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

மழை நெடிது பெய்யாவிட்டால் என்பது இப்பகுதியின் பொருள்.

விரிநீர் வியனுலகத்து உண்ணின்று உடற்றும் பசி:
பதவுரை: விரிநீர்-பரம்பிய நீர் (கடல்) வியன்-அகன்ற; உலகத்துள்-உலகத்தில்நின்று-நிலைபெற்று; உடற்றும்-வருத்தும்; பசி-பசித்தல்.

இத்தொடர்க்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: விரிந்த நீரினையுடைய அகன்ற வுலகத்திடத்தே பசியானது நின்று வருத்தாநிற்கும்.
மணக்குடவர் விரிவுரை: இது பசி என்று பொதுப்படக் கூறியவதனான் மக்களும் விலங்கும் பொருளுங் காமமுந் துய்க்கலாற்றாது துன்ப முறுமென்று கூறிற்று.
பரிதியார்: கடல் சூழ்ந்த பூலோகத்தில் பசிப்பிணி வருத்தும் என்றவாறு.
காலிங்கர்: பரவை சூழ்ந்த ஞாலத்தின்கண் வாழும் உயிர்களிடதநிலை நின்று சுடுதலைச் செய்யும் பசியாகிய தீ என்றவாறு.
பரிமேலழகர்: கடலால் சூழப்பட்ட அகன்ற உலகத்தின்கண் நிலை பெற்று உயிர்களை வருத்தும் பசி.
பரிமேலழகர் விரிவுரை: கடலுடைத்தாயினும் அதனால் பயன் இல்லை யென்பார், 'விரி நீர் வியன் உலகத்து' என்றார். உணவு இன்மையின் பசியான் உயிர்கள் இறக்கும் என்பதாம்.

'பசி வருத்தும்', 'பசியாகிய தீ சுடும்', 'பசியால் உயிர்கள் இறக்கும்' என்று பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

இன்றைய ஆசிரியர்கள் 'கடல்சூழ் உலகத்தில் பசி உயிர்களை வாட்டும்', 'கடலால் சூழப்பெற்ற விரிந்த இவ்வுலகத்தில் உணவு கிடைக்காமையால் பசி வருத்தும்', 'கடல் சூழ்ந்த அகன்ற உலகத்திலே பசியானது நிலைபெற்று உயிர்களை வருத்தும்', 'கடலால் சூழப்பட்ட அகன்ற உலகத்தின்கண் பசி நிலைபெற்று உயிர்களை வருத்தும்' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

பரம்பிய நீர் சூழ்ந்த இந்த அகன்ற நிலவுலகத்தின்கண் பசியானது நின்று வருத்தும் என்பது இத்தொடரின் பொருள்.

நிறையுரை:
வானம் மழை பொழியாவிட்டால் பசி நீக்க உணவு கிடைக்காது என்னும் பாடல்.

மழை பொய்த்தால் பரம்பிய நீர் சூழ்ந்த இந்த அகன்ற நிலவுலகத்தின்கண் பசி உயிர்களை வாட்டி வதைக்கும் என்பது பாடலின் பொருள்.
உலகமே நீராலேதானே சூழப்பட்டுள்ளது? பின் மழை பொய்த்தால் என்ன?

பொய்ப்பின் என்ற சொல்லுக்கு வாய்க்கத் தவறினால் என்று பொருள். இங்கு மழை பெய்யத் தவறினால் எனப் பொருள்படும்.
விரிநீர் என்ற தொடர் அகன்ற நீர் என்ற பொருள் தரும். கடலினும் விரிந்த நீர் வேறொன்றில்லை. விரிநீர் என்பது அகன்ற கடல் நீர் சூழ்ந்த எனப் பொருள்படும்.
வியனுலகத்து என்ற தொடர் பரந்த உலகத்தின்கண் என்ற பொருளது.
உடற்றும் என்ற சொல் வருத்தும் குறித்தது.
பசி என்ற சொல் உடற்பசியை உணர்த்தியது.

மழை தொடர்ந்து பொய்த்துப் போய்விட்டால் வறட்சி ஏற்பட்டு பசிப்பிணி உண்டாகும்.

இரு பொருள் தருமாறு அமைந்த விண்ணின்று, உண்ணின்று என்ற இரு தொடர்கள் இப்பாடலில் உள்ளன.
விண்ணின்று என்பதை, விண்+நின்று என்றும் விண் + இன்று எனப் பிரிக்கலாம். விண்நின்று பொய்ப்பின் -என்பது தொடர்ச்சியாக மழை பொய்த்தால் எனப் பொருள் தரும். மழை பொய்த்தல் என்பது பருவ மழை தவறுவதைக் கூறுவதா? நெடுங்காலம் இடையிடையே ஓரிரு முறை நிற்பதை உணர்த்துவதா? அல்லது மழையே இல்லாத உலகத்தை நினைந்த உரத்த சிந்தனையா? மழை முற்றிலும் பொய்த்தால் பொருளியல் வாழ்வே பொன்றிவிடும்; பூமி வறண்டு, வளங்கள் குறைந்து, உலக உயிர்கள் அழியும். இதை வள்ளுவர் உறுதியாக நினைத்திருக்க மாட்டார். கால மழை ஓரிரு முறை பொய்ப்பதால் பெருங்கேடு விளையாது. எனவே இப்பாடலிலுள்ள 'பொய்த்தல்' என்னும் சொல் ஓரிருமுறையோ அல்லது என்றுமோ பொய்த்தலைச் சொல்லாமல் நெடுங்காலம் தொடர்ந்து மழை பெய்யாதொழிதலைக் குறிக்கிறது என்று கொள்ளவேண்டும். விண்+இன்று எனப் பிரித்துப் பார்த்தால் 'மழை இல்லாமற் பொய்க்குமாயின்' என்ற பொருள் கிடைக்கும். விண்இன்றி பொய்ப்பின்' எனக் கொள்வதில் 'இன்றி' என்பதும் 'பொய்ப்பின்' என்பதும் ஒரே பொருளைத் தருவதாகிறது. எனவே விண்நின்று என்று கொள்வதே பொருத்தமான பொருளாகும்.
உண்ணின்று என்பதையும் உண்+இன்று என்றும் உள்+நின்று என்றும் விரிக்கலாம். இது உலகத்து+உள்நின்று' அதாவது உலகத்தின் உள்ளே நிலைத்து நின்று எனவும் உலகத்து+உண்இன்று அதாவது உலக உயிர்கள் உணவில்லாமல் எனவும் இரண்டுவகையாகப் பொருள் கொள்ள வழிவகுக்கிறது. உலகத்திடத்து உள் நின்று அதாவது நிலை பெற்று உடற்றும் எனப் பிரித்தே பெரும்பான்மையோர் பொருள் கண்டனர். இங்கு 'இன்றி' என்பது இன்று எனத் திரிந்துள்ளதாகக் கொள்வர். வியனுலகத்து என்ற தொடரே விரிந்த உலகத்திடத்து என்ற பொருளைத் தருகிறது. ஆகவே 'உள்' என்பதை மறுபடியும் இடத்து என்ற பொருள் தரும்வகையில் கொள்ளத் தேவையில்லை. எனவே உண் + இன்று என்று பிரித்து உணவில்லாமல் எனப் பொருள் கொள்ளல் பொருத்தமானது.

உடற்றும் பசி என்பது மழை பொய்த்தலால் விளையுந் துன்பத்தை உணர்த்துவது. மழை பெய்யாது போய்விடுமானால், விளைபொருள் குறையும். விளைபொருள் இல்லாதபோது, உணவுக் குறைவால் மக்களும் பிற உயிர் இனங்களும் பசியால் வருந்த நேரிடும். பசிப்பிணி உண்டானால், அவை பொருள், இன்பம் துய்க்க முடியாமல் துன்புறும். இயற்கை பொய்ப்பது வறட்சிக்கும் அதனாலுண்டாகும் பசிப்பிணிக்கும் காரணமாகிறது. எனவே, உயிர் வாழ்க்கையே மழையால்தான் அமைகிறது எனக் கூறப்பட்டது.
நம்நாட்டின் பெரும்பகுதி வானம் பார்த்த பூமி தான். மானாவாரி விளைச்சல்தான் நம் உழவர்களின் வாழ்வாதாரம். தொடர்ந்து மழையில்லாததால் வறட்சியும் உணவுப் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளதை நாம் அவ்வப்பொழுது உணர்ந்திருக்கிறோம். மழை இன்றி உலக உயிர்கள் வாடும் என்பது நிலைத்த உண்மை.
போக்குவரத்து தொலைத்தொடர்பு வசதிகள் பெரூகி, உலகம் சுருங்கி வருகிறது. இன்றைய சூழ்நிலையில் உணவுப் பொருட்கள இறக்குமதி செய்து உணவுப்பொருள் தட்டுப்பாட்டைக் குறைத்துக் கொள்ளலாம். ஆனால் அது தற்காலிக தீர்வுதான். அந்நிலையை வெகுகாலம் நீட்டிக்க முடியாது. உள்ளூரிலே உள்நாட்டிலே உணவுப் பொருளை விளைவிப்பதுவே சிறந்த நன்மை பயக்கும். எனவே எக்காலத்துக்கும் எல்லா நாட்டினர்க்கும் மழை இன்றியமையாதது.

உலகமே நீராலேதானே சூழப்பட்டுள்ளது? பின் மழை பொய்த்தால் என்ன?

'விரி நீர் வியன் நீர் உலகம்' என்று சொல்கிறது குறள். இது அகன்ற நீரால் சூழப்பட்ட பெருமைமிக்க உலகம் என்பதைக் குறிக்கும். நீரால் சூழப்பட்டது என்பது கடல்நீர் சூழ்ந்துள்ளதைச் சொல்கிறது. நீர் சூழ்ந்த ஞாலம் தானே இது? பின் ஏன் மழை தேவை? பரந்த நிலப்பரப்பை அதைவிடப் பெரிய கடல்நீர்ப் பரப்பு சூழ்ந்து நின்றாலும், அதற்குப் பசிப்பிணியைப் போக்கும் ஆற்றல் இல்லை. கடல்நீர் உழவுக்கோ உணவு சமைக்கவோ என்றும் பயன்படாது; மழைநீராலோ அல்லது அதன் பயனாய் கிடைக்கும் ஆற்றுநீர், ஏரிநீர், ஊற்றுநீர் இவற்றாலேயே உழவு செய்தலும் உணவு ஆக்கலும் இயலும் ஆதலால் மழைநீரால் மட்டுமே பசி நீக்க இயலும்.
கடல் நீரிலுள்ள உப்பைப் போக்கி நன்னீராக மாற்றும் தொழில்நுட்பம் இன்று வளர்ந்துள்ளது. இதை நாம் ஏன் மழைநீருக்குப் பதிலாகப் பயன்படுத்திக் கொள்ளக்கூடாது என்பது இயல்பாக எழும் வினா. நிறைய நாடுகள் குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகள் இத்தொழில்நுட்பத்தால் பயனடைந்துவருகின்றன. ஆனாலும் கடல்நீரை குடிநீராக மாற்றுவது பொருளாதார அடிப்படையில் ஆதாயமற்றது; வேளாண்மைக்கும் தேவையான அளவு கடல்நீரை நன்னீர் ஆக்கும் முயற்சி மிக மிகச் சிறிதே பயன்தரும்.
'வானத்திலிருந்து மழை பெய்யாவிட்டால் கடலோரம் தவிர மற்ற உள்நாடுகளிலெல்லாம் உணவில்லாமல் உயிர்களைப் பசி வதைத்துவிடும்' என்பது நாமக்கல் இராமலிங்கத்தின் உரை. மழை இல்லாவிட்டாலும் கடல் உணவை உட்கொண்டு பசியாற்றிக்கொள்ள முடியும் என்ற பொருள் தருவது இவ்வுரை. ஆனால் கடல் உணவு மட்டுமே கொண்டு உயர்வாழ்க்கை வாழ முடியாது.
உயிர்ப்பொருட்களின் சூழ்நிலை அமைப்பு (Ecosystem) செயல்படவும், நீர்ச்சுழற்சி இயங்கவும் மழைநீர் தேவையாகும். மழை இல்லாவிட்டால் நீர்ச்சுழற்சி முறை தடைபடும். நீர்ச்சுழற்சி என்பது நிலநீர், கடல்நீர் ஆகியவை ஆவியாகி மேகமாக மாறி மழையாக மறுபடி பூமிக்குத் திரும்புதலைக் குறிக்கும். நெடிது மழைபெய்யா நிலையில் இந்நீர்சுழற்சி நிறுத்தப்பட்டு சூழல் சமன்மை கெட்டு உலக அழிவுக்கு வழி வகுக்கும். இது அறிவியல் கூறும் உண்மையாகும். எனவே உலக உயிர்களின் பசித் துன்பம் நீங்க மழை ஒன்றே நம்பிக்கை.
'விரி நீர்” மற்றும் “வியன் உலகம்” எனச் சொல்லப்பட்டதும், மழை பெய்யாவிட்டால், இவ்வளவு நீரிருந்தும் கடல்நீர் உவராக இருப்பதால் பயனில்லை என்பதைச் சுட்டிக் காண்பிப்பதற்காகத்தான்.

மழை பொய்த்தால் பரம்பிய நீர் சூழ்ந்த இந்த அகன்ற நிலவுலகத்தின்கண் பசி உயிர்களை வாட்டி வதைக்கும் என்பது இக்குறளின் கருத்து.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard