Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 14 ஏரின் உழாஅர் உழவர்


Guru

Status: Offline
Posts: 7467
Date:
14 ஏரின் உழாஅர் உழவர்
Permalink  
 


ஏரின் உழாஅர் உழவர் புயலென்னும்
வாரி வளங்குன்றிக் கால்

(அதிகாரம்:வான் சிறப்பு குறள் எண்:14)

பொழிப்பு (மு வரதராசன்): மழை என்னும் வருவாய் வளம் குன்றிவிட்டால், (உணவுப் பொருள்களை உண்டாக்கும்) உழவரும் ஏர்கொண்டு உழ மாட்டார்

மணக்குடவர் உரை: ஏரினுழுதலைத் தவிர்வாருழவர், புயலாகிய வாரியினுடைய வளங்குறைந்தகாலத்து.
இஃது உழுவாரில்லை யென்றது.

பரிமேலழகர் உரை: உழவர் ஏரின் உழார்- உழவர் ஏரான் உழுதலைச் செய்யார்; புயல் என்னும் வாரி வளம் குன்றிக்கால் - மழை என்னும் வருவாய் தன் பயன் குன்றின்.
('குன்றியக்கால்' என்பது குறைந்து நின்றது. உணவு இன்மைக்குக் காரணம் கூறியவாறு.)

இரா சாரங்கபாணி உரை: மழை என்னும் வருவாய் தன் வளம் குறையுமானால், உழவர் ஏர்பிடித்து உழமாட்டார்கள்.

பொருள்கோள் வரிஅமைப்பு:
புயல் என்னும் வாரி வளம் குன்றிக்கால் உழவர் ஏரின் உழாஅர்.

பதவுரை: ஏரின்-கலப்பை(உழவுக் கருவி)யால்; உழாஅர்-உழமாட்டார், உழுதலைச் செய்யார்; உழவர்-உழுபவர், உழவுத் தொழில் செய்பவர்; புயல்-மழை; என்னும்-என்கின்ற; வாரி-வருவாய்; வளம்-வளம்; குன்றிக்கால்-குறைந்தால். .


ஏரின் உழாஅர் உழவர்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஏரினுழுதலைத் தவிர்வாருழவர்;
மணக்குடவர் குறிப்புரை: இஃது உழவாரில்லை யென்றது;
பரிதி: உழவரும் ஏருழார்;
காலிங்கர்: உழவரானவர்கள் ஏரினால் உழுதல் செய்யார்; .
பரிமேலழகர்: உழவர் ஏரான் உழுதலைச் செய்யார்;

'உழவர்கள் ஏரினால் உழுதல் செய்யார்' எனப் பழைய ஆசிரியர்கள் அனைவரும் இப்பகுதிக்குப் பொருள் கூறுகின்றனர்.

இன்றைய ஆசிரியர்கள் 'உழவர்கள் உழுவதற்கு ஏர் பிடிக்க மாட்டார்கள்', 'உழவர்கள் ஏர் உழுது உணவுப் பயிர்களை விளைவிக்க முடியாது', 'பயிரிடுவோர் கலப்பையால் உழமாட்டார். (அவர்கள் செவ்வையாக உழவு செய்யமாட்டாதாராவார் என்றும் பொருள் கொள்ளலாம்', 'உழவர் ஏரான் உழுதலைச் செய்யார். (உழவர் உழவில்லையானால் உணவு கிடைக்காது அன்றோ?)', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

உழவர் ஏரினால் உழமாட்டார்கள் என்பது இப்பகுதியின் பொருள்.

புயலென்னும் வாரி வளங்குன்றிக் கால்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: புயலாகிய வாரியினுடைய வளங்குறைந்தகாலத்து.
பரிதி: மேகம் மழை பெய்யாவிடில் என்றவாறு.
காலிங்கர்: மழையென்னும் புனல்வளங் குறைபட்டக்கால் என்றவாறு.
பரிமேலழகர்: மழை என்னும் வருவாய் தன் பயன் குன்றின்.
பரிமேலழகர் குறிப்புரை: 'குன்றியக்கால்' என்பது குறைந்து நின்றது. உணவு இன்மைக்குக் காரணம் கூறியவாறு.

புயல் என்னும் வாரி என்னும் தொடர்க்கு பழைய உரையாசிரியர்கள், புயலாகிய வாரி, மேகம், மழை என்னும் புனல், மழை என்னும் வருவாய் என்று உரை கூறினர். இவர்களின் உரையின்படி புயல் என்பதற்கு மேகம், புனல், மழை என்று பல பொருள் ஆகிறது. அதுபோலவே வாரி என்ற சொல்லுக்கு நீர், புனல், வருவாய் என வேறுவேறு பொருள் கொள்ளப்பட்டது.
வளம் குன்றிக்கால் என்பதற்கு '(மழையின்) வளம் குறைந்த காலத்து' என்ற பொருளில் மணக்குடவரும் காலிங்கரும், 'மழை என்னும் வருவாய் தன் பயன் குன்றின்' என்று பரிமேலழகரும் உரைத்தனர்.

இன்றைய ஆசிரியர்கள் 'மழை வருத்துக் குறையின்', 'மழை வராவிட்டால்', 'மேகமென்னும் நீர்நிலையின் செழிப்புக் குறையுமானால்', 'மழை எனப்படும் வருவாய் குறையுமானால்' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

மழை என்கின்ற வருவாய் வளம் குறைந்தால் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
புயலென்னும் வாரி வளம் குறைந்தால் உழவர் ஏரினால் உழமாட்டார்கள் என்பது பாடலின் பொருள்.
'புயலென்னும் வாரி' என்றால் என்ன?

மழைப் பொழிவு குறைந்தால் வேளாண்தொழில் நடைபெறாது.

மழையென்னும் வருமானம் குறைந்து போகும் காலம் உண்டாகுமானால் உழவர்கள் ஏர்பிடித்து உழமாட்டாதவர்கள் ஆகி விடுவார்கள்.
உழவர்கட்கு நீர் வருவாய் மழையின் மூலமாகவே கிடைக்கிறது. மழை பெய்வதில் குறைவு நேர்ந்தால் உழவர்கள் உழுது பயிர் செய்யமாட்டார்கள். உழவர் விதை விதைத்துத் தமது விளைவிக்கும் தொழிலைத் தொடங்குவர். விதைப்பதற்கு முன் நிலத்தை பதப்படுத்த அது உழப்படவேண்டும். உழுது விதை விதைத்தவுடன் வேளாண்மைக்கு நீர் இல்லாவிட்டால் விதையும் விதைத்தலுக்கான உழைப்பும் வீணாகிவிடும். எல்லாவகையான பாசனங்களுக்கும் மழை தேவை. மழை பொய்த்துவிட்டால் உழவனின் மற்ற எத்தகைய முயற்சியும் பலனளிக்காது. மழையானது வளங்குன்றாமல் வருகை தரவேண்டும். மழை நீரானது நிலத்தின் மீது பெய்தும் ஆறாக ஓடியும், குளமாக, கண்மாயாக நிறைந்தும், வயலின் வளத்தை விளைபொருளாக்கிக் கொடுத்து உதவுகிறது. கிணறு, ஏரி, ஆறு முதலியனவற்றையும் மழைநீர் நிரப்பும். மழை நெடுங்காலம் பெய்யாவிட்டால், ஊற்று நீரும் வற்றிவிடும். எனவே எல்லாவற்றிற்கும் வேண்டப்படுவது மழை நீரேயாகும். கிணறு, ஏரி, ஆறு முதலியவற்றின் எஞ்சி நிற்கும் நீரை நம்பியும், ஊற்றை நம்பியும் உழவர் ஏர் கட்டினால் அது சூதின் பயனையே தரும். எனவே பெருமழையின் அறிகுறிகள் தெரிந்தால் மட்டுமே உழவர் ஏர் கட்டுவர். உழுதொழில் புரிவோர் அடித்துப் பெய்யும் பெருமழையை விரும்புவர் என்பதை உணர்த்தவே புயல் என்னும் சொல்லை வள்ளுவர் ஆண்டார். மழையின்றேல் உணவளிக்கும் உழவர் மனங்குன்றுவர்.

'ஏரின் உழாஅர்’ என்பதற்குச் செவ்வையாக உழவு செய்ய மாட்டாதாராவர் என்னும் பொருள் கொள்ளலாம் என்பர். இவ்வுரை மழை போதுமானதாக இல்லாவிட்டால் என்ற கருத்தைத் தருவதால் இக்குறட்குப் பொருந்துவதே. 'மழைவளம் குறைந்தால் ஏரின் உழாஅர்' அதாவது போதிய மழை பெய்யவில்லையானால் உழவர்கள் ஏரால் நிலங்களை உழமாட்டார். என்று பாடல் கூறுகிறது. மழையின்றேல் உழவில்லை. உழவுத் தொழிலே நடக்கவில்லை என்றால் உழுபயனாகிய விளைவு இல்லை; உணவுமில்லை; உணவின்றேல் உயிரில்லை. இவ்விதம் உணவுச்சங்கிலி தொடக்கத்திலே தடைபடுவது உணர்த்தப்பெறுகின்றது.
மழை வளம் குறைதலைக் கூறுமிடத்துக் 'குன்றியக்கால்' என்பதைக் 'குன்றிக்கால்' எனக் குறைத்தது நயம்பட அமைந்தது.

சங்கப்புலவர் கபிலர் ஏருக்கு எந்தக் காலத்தில் வேலை இல்லை என்பது பற்றிப் பாடியுள்ளார். அவர்
நாடு வறங்கூர நாஞ்சில் துஞ்ச
கோடை நீடிய பைதுஅறு காலை
 (அகநானூறு.42. குறிஞ்சி)
என்று மழை தவறிய கோடையை விவரிக்கிறார். கோடை நீடின் உழவனுக்கு வேலை இல்லை. அதனால் உழவுக் கருவிக்கும் வேலைஇல்லை. கோடை நீடுகிறது. பசுமை போகிறது. நாஞ்சிலும் (கலப்பையும்) துஞ்சுகிறது. அதனால் நாடு வறங்கூர்ந்தது என்கிறது கபிலரது செய்யுள்.

'புயலென்னும் வாரி' என்றால் என்ன?

இப்பாட்டிலுள்ள புயல், வாரி என்னும் இரண்டு சொற்களும் பலபொருள் தருவன.
புயல் என்பது காற்று, இடி, மேகம், மழை முதலியவற்றிற்கு வழங்கப்படும் ஒரு சொல். “புயல்” என்பதை இன்று நாம் கடும்வேகத்துடன் வீசும் காற்று அதாவது சூறாவளி என்று புரிந்து கொள்கிறோம். தேவநேயப்பாவாணர் புயல் (Cyclone) என்னும் சொல் சுழல்காற்று மழையைக் குறிக்கும் என்கிறார். இப்பாடலில் அச்சொல் நீரைத் தன்னுள் சுமந்து பொழியவரும் மேகங்களைக் குறிக்கிறது. புயலிலிருந்து வரும் நீரை அதாவது மழைநீரை உணர்த்தும். புயல் என்பதற்குக் காற்றுடன் வரும் பெருமழை எனப் பொருள் கொள்ளலாம்.
வாரி என்பது வருவாய் என்னும் பொருள் தரும் சொல். மேலும் இதற்கு நீர், வெள்ளம் என்னும் பொருள்களும் உள. மழையென்னும் வருவாயே, உழவர்களுக்கு முதலீடாய் இருந்து அவர்கள் தரும் உழைப்புக்கும் வருவாய் தருவதலால் அச்சொல்லை வள்ளுவர் பயன்படுத்தியுள்ளார் என்பர். வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை ஆராய்வான் செய்க வினை (அதிகாரம்: தெரிந்து வினையாடல்; குறள் எண் 512; பொருள்: பொருள் வரும் வழிகளைப் பெருகச் செய்து, அவற்றால் வளத்தை உண்டாக்கி, வரும் இடையூறுகளை ஆராய்ந்து நீக்க வல்லவனே செயல் செய்யவேண்டும்.) என்ற குறட்பாவில் “வாரி பெருக்கி” என்பது 'வருவாய் பெருகச் செய்து' என்ற பொருளில் வந்தது.
சிலப்பதிகாரத்திலும் 'மகர வாரி வளம்' என்ற சொல்லாட்சி 'கடல் வருவாய் வளம்' என்ற பொருளில் ஆளப்பட்டுள்ளது:
மகர வாரி வளம் தந்து ஓங்கிய
நகர வீதி நடுவண் போகி
 (புகார்க் காண்டம் 6. கடலாடு காதை: பொருள்: கடலின் வருவாய் வளத்தைக் கொணர்தலால் உயர்ச்சி பெற்ற நகர வீதியினூடே சென்று) கடலில் தோன்றும்)
புயற்காற்று என்பதும் வழக்கிலுள்ள தொடரே.
மு கோவிந்தசாமி ‘புயல்’ என்பதற்கு மழை எனக் கொள்ளாது காற்று எனக் கொண்டு உரைத்துள்ளார். இவர் வடகிழக்கு தென்மேற்குப் பருவக் காற்றுகளே மழைக்குக் காரணம் என்பதை இயைத்துக் காட்டுவார்.

புயலென்னும் வாரி என்பது மழையென்னும் வருவாய் அதாவது மழை நீரின் வருவாய் என்ற பொருள் தரும். வளம் என்ற சொல் வளப்பத்தைக் குறிப்பது. 'புயலென்னும் வாரி வளங்குன்றிக் கால்' என்பது 'நீரென்னும் வருவாயை சுமந்து வரும் மேகங்கள், தங்களுடைய வளம் குன்றி, மழைவளம் குறையுமானால்' என்னும் பொருளில் அமைந்தது.

மழை என்கின்ற வருவாய் வளம் குறைந்தால் உழவர் ஏரினால் உழமாட்டார்கள் என்பது இக்குறட்கருத்து.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard