Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 16 விசும்பின் துளிவீழின் அல்லால்


Guru

Status: Offline
Posts: 7474
Date:
16 விசும்பின் துளிவீழின் அல்லால்
Permalink  
 


விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது

(அதிகாரம்:வான் சிறப்பு குறள் எண்:16)

பொழிப்பு (மு வரதராசன்): வானத்திலிருந்து மழைத்துளி வீழ்ந்தால் அல்லாமல், உலகத்தில் ஓரறிவுயிராகிய பசும்புல்லின் தலையையும் காண முடியாது.

மணக்குடவர் உரை: வானின்று துளிவீழினல்லது அவ்விடத்துப் பசுத்த புல்லினது தோற்றமுங் காண்டல் அரிது.
ஆங்கென்பதனை அசையாக்கினு மமையும். இஃது ஓரறிவுயிருங் கெடுமென்றது.

பரிமேலழகர் உரை: விசும்பின் துளி வீழின் அல்லால் - மேகத்தின் துளி வீழின் காண்பது அல்லது; மற்று ஆங்கே பசும்புல் தலை காண்பது அரிது - வீழாதாயின் அப்பொழுதே பசும்புல்லினது தலையையும் காண்டல் அரிது.
('விசும்பு' ஆகு பெயர். 'மற்று' வினைமாற்றின்கண் வந்தது. இழிவு சிறப்பு உம்மை விகாரத்தால்தொக்கது. ஓர் அறிவு உயிரும் இல்லை என்பதாம்.)

நாமக்கல் இராமலிங்கம் உரை: (மழையில்லாமல் ஏர் உழுது, உணவுப் பயிர் செய்யமுடியாதென்றாலும் வேறு ஏதாவது இலை, காய் முதலியவைகளையாவது உண்டு உயிர் வாழலாமென்றாலும்) வானத்திலிருந்து மழைத்துளி விழாமல் புல் பூண்டுகூட முளைக்காது. (அப்படியிருக்க இலையும் காயும் எப்படிக் கிடைக்கும்?)

பொருள்கோள் வரிஅமைப்பு:
விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே.பசும்புல் தலைகாண்பு அரிது.

பதவுரை: விசும்பின்-வானத்தின், வானத்தினின்றும்; துளி-மழைத்துளி, மழை; வீழின்-விழுந்தால்; அல்லால்-அன்றி; மற்று-ஆனால், பின்; ஆங்கே-அவ்விடத்தே; பசும்-பசிய; புல்-புல்; தலை-முடி; காண்பு-காணல்; அரிது-அருமையானது.


விசும்பின் துளிவீழின் அல்லால்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: வானின்று துளிவீழினல்லது;
பரிதி: மழைத்துளி வருஷியாதபோது; [வருஷியாதபோது-பெய்யாதபோது]
காலிங்கர்: விசும்பினின்று மழைவந்து வீழின் அல்லது;
பரிமேலழகர்: மேகத்தின் துளி வீழின் காண்பது அல்லது;
பரிமேலழகர் குறிப்புரை: 'விசும்பு' ஆகு பெயர்.

'விசும்பினின்று மழைவந்து வீழின் அல்லது' என்று பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை செய்தனர். வானின்று துளி, மழைத்துளி, விசும்பினின்று மழை, மேகத்தின் துளி என்று 'விசும்பின் துளி' என்றதற்கு விளக்கம் தந்தனர்.

இன்றைய ஆசிரியர்கள் 'மேலிருந்து துளி மழை விழாவிட்டால்', 'மேகத்திலிருந்து மழைத்துளி வீழ்ந்தால்தான்', 'வானத்தில் நின்று மழைத்துளி வீழ்ந்தாலல்லாமல்', 'வானத்தினின்றும் மழைத்துளி விழவில்லையேல்' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

வானின்று மழைத் துளி வீழ்ந்தால் அல்லது என்பது இப்பகுதியின் பொருள்.

மற்றாங்கே பசும்புல் தலைகாண்பு அரிது.:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அவ்விடத்துப் பசுத்த புல்லினது தோற்றமுங் காண்டல் அரிது.
மணக்குடவர் குறிப்புரை: ஆங்கென்பதனை அசையாக்கினும் அமையும். இஃது ஓரறிவுயிருங் கெடுமென்றது.
பரிதி: பசும்புல்லின் தலையும் காண்பது அரிதாகலாம்.
காலிங்கர்: வேறு இவ்விடத்துப் பச்சென்றிருப்பதொரு புல்நுனியுங்கூடக் காண்பது அரிது.
பரிமேலழகர்: அப்பொழுதே பசும்புல்லினது தலையையும் காண்டல் அரிது.
பரிமேலழகர் குறிப்புரை: 'மற்று' வினைமாற்றின்கண் வந்தது. இழிவு சிறப்பு உம்மை விகாரத்தால்தொக்கது. ஓர் அறிவு உயிரும் இல்லை என்பதாம்.

பசிய புல்லின் நுனியும் காண்பது அரிது என்று பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கண்டனர். மணக்குடவரும் பரிமேலழகரும் ஓர் அறிவு உயிரும் இல்லை என்ற கருத்துரையும் வழங்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'நிலத்தில் பசும்புல்லின் நுனியையேனும் காண முடியுமா?', 'பசும்புல்லின் நுனியைக் காணலாம். வீழாவிடின் அதனைக் காணுதல் இயலாது', 'பசுமையாகிய புல்லின் நுனிகளைக்கூடக் காணுதல் இயலாதாய் விடும். (மழையால் பெருமரங்களும் உண்டாகும். மழையிலதாயின் மரங்கள் உள்ள இடத்தே சிறிய புல்லின் நுனிகள் கூடக் காணுதல் கூடாதென்றவாறு', 'புதிய புல்லினையும் காணமுடியாது. (புல்லே முளைக்கவில்லையானால் மக்கள் வாழ்வது எங்கே?)' என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

அவ்விடத்து பச்சைப் புல்நுனியுங் காண்பது அரிது என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
வானின்று மழைத் துளி வீழ்ந்தால் அல்லது அவ்விடத்து பச்சைப்புல் தலைகாண்பு அரிது என்பது பாடலின் பொருள்.
'தலைகாண்பு அரிது' என்றால் என்ன?

மழைத்துளி வீழ்கிறது; பச்சைப்புல் தலை காட்டுகிறது. பசும்புல்லைக் காண்பதற்கும் வான் வழங்கவேண்டும்.

வானிலிருந்து மழைத்துளி வீழாவிட்டால், உலகில், பசும்புல்லின் சிறுமுனையையும் காண்பது கூட அருமையாகி விடும்.
மழை பெய்யாது இருந்திட்டால், புதிய புல்லினையும் காணமுடியாது; புல்லே முளைக்கவில்லையென்னும்போது பிற உயிரினங்கள் வாழமுடியுமா? அழிவது‌ ஆவது எல்லாவற்றையும் செய்யும் மழை என முந்தைய குறளில் சொல்லப்பட்டது. அந்த எல்லாம்‌ என்றவற்றுள்‌ மிகச்‌ சிறிய புல்லும்‌ மழையின்றி ஆகாது என்று இங்கு கூறப்படுகிறது; சிறுபொருளின் ஆக்கமும் மழையால்தான் முடியும் என்றதால் மிகப்பெரியதும்‌ மழையில்லாமல் ஆகாது என்பது பெறப்படும்‌.

'விசும்பு' என்ற சொல் வானத்தைக் குறிக்கும். இங்கு வானிலுள்ள மேகத்தைச் சுட்டி வருகிறது.
துளி என்றது மழைத்துளியை. 'மழை பொழி நிலையில் பலதிறம் உண்டு. அவை: துளி, தூறல், ஆசாரம், சோனை, ஆலங்கட்டி முதலியன. மழை நிலைகள் பல இருப்ப, அவைகளுள் துளியை ஈண்டுச் சிறப்பாகக் கூறியதென்ன? பெருமையுடைய ஒன்றன் இயலை விளக்குதற்கு அதன் சிறு கூறு ஒன்றே சாலும். கூறுகளெல்லாம் இயல்புடையனவாயின், அவைகளுள் எதை எடுத்து இயம்பினாலென்ன? சிறியதைச் சிறப்பித்தால் பெரியதன் மாண்பு தானே விளங்கும்.' (திரு வி க)
'ஆங்கே' என்பதற்கு அவ்விடத்து, இவ்விடத்து, அப்பொழுதே எனப் பொருள் கண்டனர். மழைத்துளி வீழ்ந்த உடனேயே புல் பசுமையுற்று எழத் தொடங்குவதைக் குறிக்க 'அப்பொழுதே' என்று உரைக்கப்பட்டது.

மழை இல்லையெனில் இயற்கை செழித்து, உணவுப்பயிர்கள் தழைக்காதென்பதை இப்பாடல் நெஞ்சிற்பதியும்படி சொல்கிறது. இயற்கை பொய்ப்பதின் கொடிய விளைவுகள் வறட்சியும் பசியும் ஆகும். மழை இல்லையெனில் செடிகொடிகள் இல்லை. தாவரங்கள் இல்லையென்றால் மற்ற உயிரினங்களுக்கும் இரை கிடையாது. இரை இல்லையெனில் கால்நடைகளால் கிட்டும் பயனும் கிட்டாது. இதையே உயிர்ச்சூழலியலார் வேறுவகையாக விளக்குவர்: உயிர்கள் அனைத்தும் பயிரினங்களைச் சார்ந்துதான் வாழ்கின்றன. பயிரினம் தான் உணவுச் சங்கிலி (food chain)யின் தொடக்கக்கண்ணி; அடுத்து தழையுண்ணிகள்; அதற்கு அடுத்து அவற்றை உண்ணும் விலங்குண்ணிகள்; பின் அவ்விலங்குகளை வேட்டையாடும் சிங்கம், புலி போன்ற பெரிய விலங்குகள். புல்லைப் பயிரினத்தின் அடையாளமாகக் கொள்ளின் மழையின்றேல் பசும்புல் தழையாது; பயிரினம் இல்லையானால் வேறெந்த உயிரினமும் வாழ இயலாது என்பது சூழலியல் சார்ந்த அடிப்படை உண்மை.
மழை பெய்யாவிட்டால் தரையில் புல்லும் தலைகாட்டாது என்கிறது இப்பாடல். ஓரறிவு புல்லே தலை எடுக்க முடியவில்லை என்றால், ஓரறிவுக்கு மேலான மற்ற உயிர்களுக்கு வாழ்வு இயலாது என்பதை உள்ளுறையாக வைத்துச் சொல்லப்பட்டுள்ளது. வானத்திலிருந்து மழை பெய்யவில்லையென்றால் பூமியில் எதுவும் வளராமல் போய்விடும். மழை பெய்யவில்லையென்றால் இயற்கைச் செல்வங்கள் எல்லாம் வறண்டு போகும். உயிர் வாழ்வதற்குத் தேவையான உணவு வகைகளும் விளையாமல் போய்விடும் என்று பொருள் கூறுவதன் மூலம் மழைநீரின் இன்றியமையாமை விளக்கப்பட்டது.
'இக்குறள் ஒரு சாதாரணமான மழைச்சிறப்பு அல்ல. விசும்பு என்றால் வான் மட்டும் அல்ல. அது வெளிக்கு Space க்குரிய தமிழ்ச்சொல். அலகிலா விசும்பைப் புல்லுடன் இணைத்திருக்கும் தரிசனம் எப்போதுமே என்னைப் பரவசமடையச்செய்கிறது. பசும்புல் என்பது விசும்புக்கு மண் காட்டும் எதிர்வினை' என எழுதினார் ஓர் கதையாசிரியர் (ஜெயமோகன்).

'தலைகாண்பு அரிது' என்றால் என்ன?

தலை என்ற சொல் இங்கு முளைத்தெழுவதைக் குறிக்கும். காண்பரிது. என்ற தொடர்க்கு பார்ப்பதற்கு மிகவும் கடினம் அல்லது காண இயலாது என்பது பொருள். தலை காண்பு அரிது என்றது முளைத்தெழுவதைப் பார்ப்பது கடினம் என்ற பொருள் தரும்.
இன்றும் வழக்கில் பெரிதும் வழங்கும் தொடரான 'தலைகாட்ட முடியாது' என்பதுதான் 'தலைகாண்பு அரிது' என்று இலக்கிய நயம்பட கூறப்பட்டது. பசும்புல்தலை என்பது 'பசேல் என்றிருப்பதொரு புல்நுனி' என்பதைச் சொல்கிறது. பசும்புல் தலைகாண்பு அரிது என்றதற்குப் பழைய உரையாசிரியர் ஒருவர் 'பனையினது கன்றும் காண்பதரிது' என உரை கூறினார். நீர் ஊற்றாமலே வளரும் தன்மை உடைய பனையின் கன்றும் அதாவது பனையின் பசிய குருத்தையும் காணமுடியாது என்பது இதன் பொருள். மழையில்லையாயின் பனையும் குருத்துவிடாது என்கிறார் இவர்.
வான் நின்று மழைத்துளி விழாது போனால் பசும்புல்கூடத் தென்படாது. மழை பெய்தால்தான் புல் கிளைத்து வளரும். மேலும் மேலும் மழையின் வருகைக்கு பசும்புல் தலைகாண்பு நற்குறியாதலின், அதன் காட்சி உயிர்கட்கு மகிழ்வூட்டும் தன்மையது.
ஓரறிவு உயிரின் கடைசியான புல்லுங்கூட மழையில்லையானால் தலைகாட்ட முடியாது என்றதனால், உயிர்த்தோற்றமே மழையால் என்பதை இத்தொடர் நன்கு விளக்கிற்று. ஓரறிவுயிர் இல்லையெனின் மற்ற வகையுயிர்களும் காலப்போக்கில் இல்லாமல் அழிந்தொழியும் என்பதுமாம். ஒரு நாட்குள் முளைக்கும் புல்லும் இல்லையெனின், மற்ற மரஞ்செடி கொடிகளின் இன்மையைச் சொல்லவேண்டுவதில்லை. ஓரறிவுயிர் இல்லையெனின் மற்ற ஐவகையுயிர்களும் நாளடைவில் இராவென்பதாம்.
இத்தொடர் 'தலையும் காண்பு அரிது' என்று இருக்கவேண்டும். இழிவு சிறப்பும்மை செய்யுளால் தொக்கது என இதை விளக்குவர் இலக்கண ஆசிரியர்கள்.

'தலை காண்பு அரிது' என்ற தொடர்க்கு நுனியையும் காண்டலரிது என்பது பொருள்.

வானின்று மழைத் துளி வீழ்ந்தால் அல்லது அவ்விடத்து பச்சைப் புல்நுனியுங் காண்பது அரிது என்பது இக்குறட்கருத்து.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard