Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 35 அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல்


Guru

Status: Offline
Posts: 7467
Date:
35 அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல்
Permalink  
 


அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்

(அதிகாரம்:அறன் வலியுறுத்தல் குறள் எண்:35)

பொழிப்பு (மு வரதராசன்): பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் ஆகிய இந்த நான்கு குற்றங்களுக்கும் இடங்கொடுக்காமல் அவற்றைக் கடிந்து ஒழுகுவதே அறமாகும்.

மணக்குடவர் உரை: மனக்கோட்டமும், ஆசையும், வெகுளியும், கடுஞ்சொல்லும் என்னும் நான்கினையும் ஒழித்து நடக்குமது யாதொன்று அஃது அறமென்று சொல்லப்படும்.
பின்னர்ச் செய்யலாகாதென்று கூறுவனவெல்லாம் இந்நான்கினுள் அடங்குமென்று கூறிய அறம் எத்தன்மைத் தென்றார்க்கு இது கூறப்பட்டது.

பரிமேலழகர் உரை: அழுக்காறு - பிறர் ஆக்கம் பொறாமையும்; அவா - புலன்கள்மேல் செல்கின்ற அவாவும்; வெகுளி - அவை ஏதுவாகப் பிறர்பால் வரும் வெகுளியும்; இன்னாச்சொல்- அதுபற்றி வரும் கடுஞ்சொல்லும் ஆகிய; நான்கும் இழுக்கா இயன்றது அறம் - இந்நான்கினையும் கடிந்து இடையறாது நடந்தது அறம் ஆவது.
(இதனான், இவற்றோடு விரவி இயன்றது அறம் எனப்படாது என்பதூஉம் கொள்க. இவை இரண்டு பாட்டானும் அறத்தினது இயல்பு கூறப்பட்டது.)

வ சுப மாணிக்கம் உரை: பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் வாராமல் ஒழுகுவதே அறம்.

பொருள்கோள் வரிஅமைப்பு:
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம்.

பதவுரை:
அழுக்காறு-(பிறர் ஆக்கம்) பொறாமை; அவா-பேராசை; வெகுளி-சினம்; இன்னாச்சொல்-தீயமொழி; நான்கும்-(இவை) நாலும்; இழுக்கா- இழுக்கி அதாவது விலக்கி; இயன்றது-நடந்தது; அறம்-நல்வினை.


அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மனக்கோட்டமும், ஆசையும், வெகுளியும், கடுஞ்சொல்லும் என்னும் நான்கினையும்;
பரிதி: பிறர் செல்வங்கண்டு நோகாமையும், வெஃகாமையும், கோபமின்மையும், புறங்கூறாமையும்:
காலிங்கர்: செல்வமும் கல்வியும் முதலான பிறர் ஆக்கம் பொறாமையும், மற்ற நீதியல்லாதவற்றாசையும், சினமும், பிறரை இகழ்ந்துரைக்கும் உரையும் இவை நான்கும்;
பரிமேலழகர்: பிறர் ஆக்கம் பொறாமையும், புலன்கள்மேல் செல்கின்ற அவாவும், அவை ஏதுவாகப் பிறர்பால் வரும் வெகுளியும், அதுபற்றி வரும் கடுஞ்சொல்லும் ஆகிய நான்கும்;

'பொறாமை, பேராசை, சினம், கடுஞ்சொல் இவை நான்கும்' என்று அனைத்து பழம் ஆசிரியர்களும் இப்பகுதிக்குப் பொருள் கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் ஆகிய இந்நான்கினையும்', 'பொறாமை, ஆசை, கோபம், கடுஞ்சொல், ஆகிய நான்கையும்' 'பொறாமையும், ஆசையும், சினமும், கடுஞ்சொல்லுமாகிய நான்கினையும்', 'பிறர் உயர்வு கண்டு பொறாமையும், பெரு விருப்பமும், சீற்றமும், கடுஞ்சொல்லும் எனப்படும் இவை நான்கினையும்' என்றபடி உரை தந்தனர்.

பொறாமை, பேராசை, சினம், கடுஞ்சொல் இவை நான்கினையும் என்பது இப்பகுதியின் பொருள்.

இழுக்கா இயன்றது அறம்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஒழித்து நடக்குமது யாதொன்று அஃது அறமென்று சொல்லப்படும்.
மணக்குடவர் குறிப்புரை: பின்னர்ச் செய்யலாகாதென்று கூறுவனவெல்லாம் இந்நான்கினுள் அடங்குமென்று கூறிய அறம் எத்தன்மைத் தென்றார்க்கு இது கூறப்பட்டது.
பரிதி: போலத் தன்மமில்லை என்றவாறு.
காலிங்கர்: குற்றமாகக் கொள்வானிடத்து அறமானது நடைபெற்றது என்றவாறு.
காலிங்கர் குறிப்புரை: அல்லதூஉம் இவை நான்குங் குற்றமாகக் கொள்ளாது, மேற்கொண்டொழுகுமாயின், மற்றிவன் செய்யப்பட்டதோர் அறமும் ஐயப்படத்தகும் என்றவாறு.
பரிமேலழகர்: கடிந்து இடையறாது நடந்தது அறம் ஆவது.
பரிமேலழகர் குறிப்புரை: இதனான், இவற்றோடு விரவி இயன்றது அறம் எனப்படாது என்பதூஉம் கொள்க. இவை இரண்டு பாட்டானும் அறத்தினது இயல்பு கூறப்பட்டது.

'ஒழித்து நடப்பது அறம்' என்று மணக்குடவரும் 'குற்றமாகக் கொள்வது அறம் (அல்லதூஉம் இவை நான்குங் குற்றமாகக் கொள்ளாது, மேற்கொண்டொழுகுமாயின், மற்றிவன் செய்யப்பட்டதோர் அறமும் ஐயப்படத்தகும்)' என்று காலிங்கரும் 'கடிந்து இடையறாது நடந்தது அறம்' என்று பரிமேலழகரும் பொருள் கொள்வர்.

இன்றைய ஆசிரியர்கள் 'நீக்கி நடப்பதே அறம்', 'நீக்கிவிட்டுச் செய்கின்ற எல்லாக் காரியங்களும் அறங்களேயாகும்', 'தவிர்த்து நடைபெறுவதே அறவினை எனப்படும்', 'நீக்கிச் செய்கின்ற செயலே அறச்செயலாகும்' என்றபடி உரை செய்தனர்.

நீக்கி நடப்பது அறம் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
பொறாமை, பேராசை, சினம், கடுஞ்சொல் இவை நான்கினையும் நீக்கி நடப்பது அறம் என்பது இப்பாடலின் பொருள்.
இந்நான்கு மட்டும்தாம் அறமற்றவைகளா?

தீயகுணங்களை நீக்குவது அறமாம்.
முந்தைய பாடலான மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்துஅறன் ஆகுல நீர பிற (குறள் 34) என்பதும் இப்பாடலும் இணை குறள்களாகப் பார்க்கப்படுகின்றன. முதலாவது பாடல் அறத்தின் நேரிலக்கணமாகவும் இப்பாடல் எதிர்மறை இலக்கணமாகவும் சொல்லப்பட்டன. இப்பாட்டு முற்பாட்டினது விளக்கமாக அமைந்து அங்கே தொகையாகச் சொல்லப்பட்டது இங்கே வகையாக மனமாசுகள் இன்ன இன்ன என்று விளங்கும் முறையில் கூறப்படுகிறது. சொல்லப்பட்ட நான்கையும் குற்றமாகக் கருதி விலக்கினால் மனம் தூய்மை அடையும் என்பது கருத்து.

அறம் நடைபெற வேண்டுமானால் அதற்குக் கேடாய் அமைந்தனவற்றை அகற்றாமல் இயலாது. மாசிலா மனத்திலேதான் அறம் நிலைபெறும், மனமாசுக்கு ஏதுவாக அமைபவற்றை அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல் எனும் நான்கில் சுருக்கிக் காண்கிறார் வள்ளுவர்.
அழுக்காறு என்பது பிறருடைய ஆக்கங் கண்டு அதை ஏற்றுக் கொள்ள முடியாத மனக் கோட்டத்தைக் குறிக்கும்.
அவாவானது பேராசை. இதனை உடையவர், தன்னலம் மிகக் கொண்டு பிறர்க்கு உரியதையும் பறிக்க முயல்வர்.
(வெகுளி)சினம் கொண்டோர் அறிவிழந்து தான்அறியாமல் கூட பிறர்க்குக் கேடு செய்துவிடுவார்கள்.
பிறர் மனம் புண்படும் வகையில் அவரைக் கடுஞ்சொல் பேசுவது இன்னாச் சொல் ஆகும்.
இத்தீய பண்புகள் ஒருவனுக்குப் பெருங்கேட்டை விளைக்கத் தக்கன. இந்நான்குடன் விரவி இயன்றது அதாவது கலந்து செய்வது அறமெனக் கருதப்பட மாட்டாது. இவற்றை ஒழித்து ஒழுகினால் அது அறநெறி வாழ்க்கையாக மாறும்.

இழுக்கா என்ற சொல் இழுக்கி அதாவது விலக்கி என்ற பொருள் தருவது. ஒழுக்கத்திற்கு எதிர்ச்சொல் இழுக்கம். இழுக்குதல்-வழுக்குதல், தவறுதல். எனவே இழுக்கா என்பதற்கு இழுக்காக அதாவது குற்றமாக என்றும் பொருள் கூறுவர்.
உள்ளம் தூய்மை அடையும்போது அறம் தானே இயங்கி நடைபெறுமாதலின் 'இயன்றது' என்பதற்கு நடப்பது என்று பொருள் கொள்ளப்பட்டது.

பொறாமை, பேராசை, சினம், கடுஞ்சொல் என்ற இவை நான்கு மட்டும்தாம் அறமற்றவைகளா?

அறம் என்ற சொல்லுக்குப் பொருள் காண்பது எளிதன்று. எவை எவை அறம்/அறமற்றவை என்று தொகுக்கப்பட்டாலும் அது முழுமையானதாக இருக்காது. அறத்திற்குரிய பண்புகள் இவை என விதந்து கூறாமல், எவற்றை நீக்கிவிட்டால், அறவழிகளில் நின்றதாக ஆகிவிடுமோ, அவற்றையே வள்ளுவர் இக்குறளில் சொல்கிறார். அப்படியென்றால் இங்கு குறிக்கப்பட்ட நான்கு மட்டும்தாம் அறமற்றவைகளா?
அறம் என்பது ஒழுக்க நெறியையும் அதாவது நடத்தை முறையையும் நல்வினையையும் குறித்தது. உள்ளத்துள் குற்றமில்லாதவனாக இருத்தல் எல்லா அறத்துக்கும் அடிப்படையாக இருக்க வேண்டும் என்பது வள்ளுவம். மனமாசு பலவகை. குற்றமுள்ள பண்புகளாக அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச் சொல் ஆகிய நான்கும் இக்குறளில் குறிப்பாகச் சொல்லப்படுகின்றன. இந்நான்கில் பிற மனமாசுகளெல்லாம் அடங்கும் என்பது கருத்தாகிறது. இந்நான்கையும் நீக்கிவிட்டால் மனம் தூய்மை அடையும். இவற்றைக் குற்றமாகக் கொண்டு ஒருவன் ஒழுகாவிட்டால் அவை அவனுக்கு இழுக்கு உண்டாக்கும். அவன் அறவழி நின்றதாகக் கொள்ளமுடியாது. அவன் செய்யும் அறச்செயல்களும் ஆரவாரத்திற்காகச் செயப்படுவதாக எண்ணப்படும். அனைவரது மனதில் எளிதில் ஊன்றும் வண்ணமும் இயற்றத் தக்கனவாகவும் உள்ள முறையில் சுருக்கமாக நான்காகக் கூறினார்.
மணக்குடவர் 'விலக்கத்தக்கன என்று கூறுவனவெல்லாம் இந்நான்கினுள் அடங்கும்' என்று கூறி அறம் எத்தன்மைத்து என்பது விளக்கப்பட்டது என்றும் தனது சிறப்புரையில் கூறுவார்.

பொறாமை, பேராசை, சினம், கடுஞ்சொல் இவை நான்கையும் நீக்கி நடப்பது அறம் என்பது இக்குறட்கருத்து



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard