பொழிப்பு:பிற்காலத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணாமல் அறம் செய்யவேண்டும். அதுவே உடல் அழியும் காலத்தில் அழியாத் துணையாகும்.
மணக்குடவர் உரை: பின்பே அறிந்து செய்வோமென்னாது முன்பே அறத்தைச் செய்க. அது சாங்காலத்தினுஞ் சாகாதே நின்று பிறக்கு மிடத்திற்குத் துணையாம். இஃது அறஞ்செய்யுங்கால் விரைந்து செய்யவேண்டு மென்பதும் அது மறுமைக்குத் துணையாமென்பதும் கூறிற்று.
பரிமேலழகர் உரை: அன்று அறிவாம் என்னாது அறம் செய்க - 'யாம் இது பொழுது இளையம் ஆகலின் இறக்கும் ஞான்று செய்தும்' எனக் கருதாது அறத்தினை நாள்தோறும் செய்க; அது பொன்றுங்கால் பொன்றாத் துணை - அவ்வாறு செய்த அறம் உடம்பினின்றும் உயிர் போங்காலத்து அதற்கு அழிவு இல்லாத துணை ஆம். ('மற்று' என்பது அசைநிலை. 'பொன்றாத் துணை' என்றார், செய்த உடம்பு அழியவும் உயிரோடு ஒன்றி ஏனை உடம்பினுட் சேறலின். இதனான் இவ்வியல்பிற்றாய அறத்தினை நிலையாத யாக்கை நிலையின பொழுதே செய்க என்பது கூறப்பட்டது.
குன்றக்குடி அடிகளார் உரை: அறம் செய்வதற்குரிய காலம் இதுவல்ல என்றும், அது வரும் காலம் அறிவோம். அப்போது செய்வோம் என்றும் எண்ணாது காலம் தாழ்த்தாது அறத்தினைச் செய்க. அஙஙனம் செய்த அறம் இறுதிக்காலத்தில் அழியாத் துணை.
பொருள்கோள் வரிஅமைப்பு: அன்றறிவாம் என்னாது அறம்செய்க மற்று அது பொன்றுங்கால் பொன்றாத் துணை.
இத்தொடர்க்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்: மணக்குடவர்: பின்பே அறிந்து செய்வோமென்னாது முன்பே அறத்தைச் செய்க; பரிதி: நாம் வறியார் என்றும் தன்மம் இல்லை என்றும் விசாரித்துச் செல்வமுண்டானபோது அறஞ்செய்வோம் என்னாமல் நினைத்தபோதே தருமம் செய்க; காலிங்கர்: அறஞ்செய்கைக்கு அறிவல்லது என்றும் அறிவாவதென்றுங் காலத்தைக் கழியாதே. கடிதாக அறத்தினைச் செய்து கொள்க; பரிமேலழகர்: 'யாம் இது பொழுது இளையம் ஆகலின் இறக்கும் ஞான்று செய்தும்' எனக் கருதாது அறத்தினை நாள்தோறும் செய்க;
'பின்பு அறிந்து அறம் செய்வோம் என்று எண்ணாது இன்றே அறம் செய்க' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'சாகும்போது பார்த்துக் கொள்வோம் என்னாது நாளும் அறஞ்செய்க', 'முதுமையில் அறம் செய்து கொள்ளலாம் என்று எண்ணாமல் இளைஞனாய் இருக்கும்போதே அறம் செய்யவேண்டும்', 'இறங்குங் காலத்திலே பார்த்துக் கொள்ளலாமென்று கருதாது அறத்தை எப்போதும் செய்ய வேண்டும்', 'பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று கருதாது அறத்தினை உடனே செய்க'
'பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று கருதாது அறத்தினை இப்பொழுதே செய்க' என்பது இத்தொடரின் பொருள்.
இத்தொடர்க்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்: மணக்குடவர்: அது சாங்காலத்தினுஞ் சாகாதே நின்று பிறக்கு மிடத்திற்குத் துணையாம். மணக்குடவர் கருத்துரை: இஃது அறஞ்செய்யுங்கால் விரைந்து செய்யவேண்டு மென்பதும் அது மறுமைக்குத் துணையாமென்பதும் கூறிற்று. பரிதி: அது மரணாந்த காலத்துக்கும் பெருந்துணையாம் என்றவாறு. காலிங்கர்: அதுவே அழியாத துணை என்றவாறு. பரிமேலழகர்: அவ்வாறு செய்த அறம் உடம்பினின்றும் உயிர் போங்காலத்து அதற்கு அழிவு இல்லாத துணை ஆம். பரிமேலழகர் கருத்துரை: 'மற்று' என்பது அசைநிலை. 'பொன்றாத் துணை' என்றார், செய்த உடம்பு அழியவும் உயிரோடு ஒன்றி ஏனை உடம்பினுட் சேறலின். இதனான் இவ்வியல்பிற்றாய அறத்தினை நிலையாத யாக்கை நிலையின பொழுதே செய்க என்பது கூறப்பட்டது.
'அவ்வறம் உயிர் போகின்ற காலத்து அழியாத துணை' என்று மணக்குடவரும் பரிமேலழகரும் உரை தந்தனர். பரிதி 'அது மரண காலத்துப் பெருந்துணை' என்றும் காலிங்கர் 'அதுவே அழியாத துணை' என்றும் பொருள் கண்டனர்.
இன்றைய ஆசிரியர்கள் 'அதுவே உயிர்த்துணை', 'அந்த அறம் ஒருவனுக்குச் சாகும்போது சாவாத் துணையாகும்', 'அஃது உயிர்போங் காலத்திலே அதற்கு அழியாத துணையாய் உடன்செல்வது', 'அவ்வாறு செய்யப்படும் அறம் நாம் இறக்கும்கால் அறியாத துணையாக இருக்கும்' என்றபடி உரை செய்தனர்.
'அந்த அறம் இறுதிக்காலத்தில் அழியாத துணை' என்பது இத்தொடரின் பொருள்.
நிறையுரை: அன்றைக்குப் பார்த்துக்கொள்ளலாம் எனத் தள்ளிப்போடாது அறம் செய்க; அது கடைசிக் காலத்தில் அழியாத துணையாய் இருக்கும்.
பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணாது அறத்தினை இப்பொழுதே செய்க; அந்த அறம் இறுதிக்காலத்தில் பொன்றாத் துணை என்பது பாடலின் பொருள். பொன்றாத் துணையாவது எப்படி?
அன்றறிவாம் என்ற தொடர்க்கு அன்றைக்குப் பார்த்துக்கொள்ளலாம் அல்லது பின்பு அறிவோம் என்பது பொருள். என்னாது என்ற சொல் என்று எண்ணாமல் என்ற பொருள் தரும். அறம்செய்க என்ற தொடர் அறச்செயல்களைச் செய்க என்ற பொருளது.
அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று கருதாது அறத்தினை இன்றே செய்க; இப்பொழுதே செய்க. அவ்வறம், இறுதிக்காலத்தில், அழியாத துணையாக இருக்கும்.
'அன்றைக்குப் பார்த்துக் கொள்ளலாம்' அல்லது 'அப்பொழுது பார்த்துக் கொள்ளலாம்' என்று அன்றாட வாழ்வில் பேச்சு வழக்கில் உள்ள தொடர்தான் 'அன்றறிவாம்' என்று இக்குறளில் ஆளப்பட்டுள்ளது. ஒருவரை நோக்கி 'அறஞ்செய்க' என்று அறிவுரை சொல்லும் பொழுது, பெரும்பான்மையினர் 'இப்பொழுதா? பின்னே பார்த்துக் கொள்ளலாம்' என்றே பதில் சொல்வர். இந்த உலக வழக்கே 'அன்றறிவாம்' என்று இப்பாடலில் வந்தது. காலிங்கர் அன்றறிவாம் என்பதை 'அன்று அறிவு', 'அறிவு ஆம்' எனப் பிரித்து அறச் செயலுக்கு 'அறிவல்லது' ,'அறிவு ஆவது' என்னும் பாகுபாட்டிலேயே காலத்தைக் கழியாது, கடிதாக அறம் மேற்கொள்க என்று உரை காண்கிறார். அறச்செயல் அறிவொடு பொருந்தியதாயினும் இல்லையாயினும் அது அழியாத பயன் தரும் என்பது இவரது கருத்து. சாகும்பொழுது துணையாகும் என்று பாடலின் பின்பகுதி வருவதால் 'அன்று' என்ற சொல்லுக்கு 'அன்றைக்கு இறக்கும்போது' அல்லது 'முதுமையில்' என்று கொண்டு 'சாகப்போகிற (அன்றைக்கு) பொழுது பார்த்துக் கொள்வோம்', 'இறக்கிற அன்றைக்குப் பார்த்துக் கொள்ளலாம்' என்று சில உரையாசிரியர்கள் விளக்கம் தந்தனர். அன்றறிவாம் என்னாது அறம்செய்க என்றதற்கு 'பின்பு அல்லது அன்றைக்குப் பார்த்துக் கொள்வோம்', என்றும் 'கடைசிக் காலத்தில் பார்த்துக் கொள்ளலாம்' என்றும் பொருள் கூறப்பட்டது.
உலகோர் தத்தம் தேவைகளை நிறைவேற்றுவதிலேயே குறியாய் இருப்பதால், அறச் செயல்களில் ஈடுபடுவதில் ஆர்வம் காட்டுவதில்லை. பிற்காலத்தில் அறம் செய்யலாமென்றோ இன்னும் கொஞ்சம் செல்வம் சேர்த்தபின் அறம் செய்யலாமென்றோ கருதி அறம் செய்வதைத் தள்ளிப் போட்டுவிட்டுப் பொருள் தேடுவதிலோ வாழ்க்கையில் உள்ள இன்பங்களை அனுபவிப்பதிலோ நேரத்தைச் செலவிடும் மனப்பான்மையயே அனைவரிடமும் பெரிதும் காணப்படுகிறது. 'அறம் செய்வதற்கு இப்பொழுது என்ன விரைவு? பின்னர்ப் பார்த்துக் கொள்வோமே' என்று நீண்டகாலம் வாழப்போவதாகக் கருதிக்கொண்டு, 'அன்றறிவாம்' என்று சொல்வது அறிவுடைமை ஆகாது. நற்செயல்களை செய்ய முற்படுவதையும், நல்வழி நடப்பதையும், தள்ளிப்போடுதல் உகந்த செயல் அல்ல. செல்வம் நீங்கலாம்; உடல் வலிமை குறையலாம்; உயிர் போகலாம். இதுபோல எத்தனையோ எதிர்பாராத நிகழ்வுகளைக் கொண்டதுதான் வாழ்க்கை. எனவேதான் “நன்றே செய் – அதுவும் இன்றே செய்” என்று சொன்னார்கள் நம் முன்னோர்கள். கடைசிக் காலத்தில் பார்த்துக்கொள்ளலாம் என்று நினையாது அறத்தை இன்றே செய்க; இப்பொழுது செய்யப்படும் அறச்செயல்கள் செய்வானது இறுதிக் காலத்தில் அழியாது நின்று துணையாய் இருக்கும் என்றும் கூறுகிறது இப்பாடல்.
பொன்றாத் துணையாவது எப்படி?
பொன்றும் + கால் என்றது பொன்றுங்கால் ஆயிற்று. பொன்றும் என்பதற்கு இறத்தல் அல்லது அழிதல் என்றும் கால் என்பதற்கு காலம் அல்லது பொழுது என்றும் பொருள். இங்கு பொன்றுங்கால் என்றதற்கு 'இறக்கும் பொழுது' என்று பொருள் கொள்வது பொருத்தம். பொன்றா என்பது 'அழியாத' என்று பொருள் தரும். பொன்றாத் துணை என்பதற்கு அழியாத துணையாகும் என்பது பொருள். பொன்றுங்கால் பொன்றாத் துணை என்பது சாகுங்காலத்தில் அறம் அழியாத துணை எனப்பொருள்படும்.
அப்புறம் செய்வோம் என்று ஒத்திப்போடாமல் நல்லது செய்து கொண்டே இருந்தால் இறக்கும் தறுவாயில் அது அறம் செய்வானுக்கு அமைதியைக் கொடுக்கும். ஆக்கம் தருவது அறம் என்று கூறுவதுடன் நில்லாது அதுவே மரண காலத்திலும் அழியாத துணையாக இருக்கிறது. அறச் செயல்களை அவ்வப்பொழுது செய்து கொண்டே போகாமல் 'நாளை, நாளை' என்று சொல்லிக் கொண்டு அறம் செய்யத் தவறி, சேர்த்த செல்வங்ளுடன் மறைந்தோர் பலர். 'இன்றே நம்முடைய நாள்; நாளை நடப்பதை யார் அறிவார்' என்பதை உணர்ந்து அறம் செய்தோர் மன அமைதியுடன் சாவை ஏற்றுக் கொள்வர். அவர்களுக்குச் சாவில் துன்பமில்லை. அறம் செய்யாதோர் மரணத்தைக் கண்டு அஞ்சுவர். எனவே சாவு அவர்களுக்குத் துன்பம் தரும். அறநெறியில் வாழ்க்கை நடத்துவோர்க்கு மரணத்தில் பயமே தோன்றுவதில்லை. சாகும் காலத்தில் 'கடவுளே, கடவுளே’ என்று கதறாமல் வலியின்றி அமைதியாக உயிர் பிரிய இப்போதிருந்தே நன்மை செய்க என்பது பாடல் தரும் செய்தி. அறம் ஒன்றே அழியாமல் துணை நிற்பதை வாழ்வின் கடைசி நாட்களில் அவர்கள் உணர்வர். இதுவே 'பொன்றாத்துணை' என்பது.
பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று கருதாது அறத்தினை இப்பொழுதே செய்க; அந்த அறம் சாகும்போது அழியாத துணையாகும் என்பது இக்குறட்கருத்து.