Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 42 துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும்


Guru

Status: Offline
Posts: 7474
Date:
42 துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும்
Permalink  
 


துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை

(அதிகாரம்:இல்வாழ்க்கை குறள் எண்:42)

பொழிப்பு:(மு வ) துறந்தவர்க்கும் வறியவர்க்கும் தன்னிடத்தே இறந்தவர்க்கும் இல்லறம் மேற்கொண்டு வாழ்கின்றவன் துணையாவான்.

மணக்குடவர் உரை: வருணத்தினையும் நாமத்தினையுந் துறந்தார்க்கும், துறவாது நல்குரவாளரா யுண்ணப் பெறாதார்க்கும், பிறராய் வந்து செத்தார்க்கும் இல்வாழ்வானென்று சொல்லப்படுமவன் துணை யாவான்.
(வறுமையாளர், கைவிடப்பட்டவர், திக்கற்றவர்) மேற்கூறிய மூவரும் வருணநாமங்களைத் துறவாமையாலீண்டுத் துறந்தாரென்று கூறினார். செத்தார்க் கிவன் செய்ய வேண்டிய புறங்காட்டுய்த்தல் முதலாயின. இது மேற்கூறியவர்க்கேயன்றி இவர்க்கும் துணையென்று கூறிற்று.

பரிமேலழகர் உரை: துறந்தார்க்கும்- களைகண் ஆனவரால் துறக்கப்பட்டார்க்கும்; துவ்வாதவர்க்கும் - நல்கூர்ந்தார்க்கும்; இறந்தார்க்கும்-ஒருவருமன்றித் தன்பால்வந்து இறந்தார்க்கும்; இல்வாழ்வான் என்பான் 'துணை'-இல்வாழ்வானென்று சொல்லப்படுவான் துணை
(துறந்தார்க்குப் பாவம் ஒழிய அவர் களைகணாய் நின்று வேண்டுவன செய்தலானும், துவ்வாதவர்க்கு உணவு முதலிய கொடுத்தலானும், இறந்தார்க்கு நீர்க்கடன் முதலிய செய்து நல்லுலகின்கண் செலுத்தலானும், துணை என்றார். இவை இரண்டு பாட்டானும் இல்நிலை எல்லா உபகாரத்திற்கும் உரித்தாதல் கூறப்பட்டது.)

இரா சாரங்கபாணி உரை: பற்றற்ற துறவிகளுக்கும் வாழ்க்கையைத் துய்க்க இயலாத ஏழைகளுக்கும், நெறிமாறி நடந்து வாழ்விழந்தார்க்கும் இல்லறத்தான் எனப்படுபவன் துணையாவான்.

பொருள்கோள் வரிஅமைப்பு:
துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும் இல்வாழ்வான் என்பான் துணை.


துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்:
பதவுரை: துறந்தார்க்கும்-துறவிகளுக்கும்; துவ்வாதவர்க்கும்-ஏழைகட்கும்; இறந்தார்க்கும்-நிலை கெட்டுப்போனவர்களுக்கும்.

இத்தொடர்க்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: வருணத்தினையும் நாமத்தினையுந் துறந்தார்க்கும், துறவாது நல்குரவாளரா யுண்ணப் பெறாதார்க்கும், பிறராய் வந்து செத்தார்க்கும்;
பரிப்பெருமாள்: முற்குறளில் இயல்புடைய மூவரில் ஒருவரான துறந்தார் வைதிக முனிவர்; ஈண்டுக் கூறியது ஏனைய இருடிகளை.
பரிதி: மண், பொன், பெண் இந்த மூன்று வகை ஆசையைத் துறந்தார்க்கும் போன சென்மத்தில் தன்மம் செய்யாமல் தேகி என்பார்க்கும், இறந்தார்க்கும்; [தேகி-கொடு என்று இரப்பவர்.]
காலிங்கர்: முன்சொன்னவர்களே யன்றி ஒரூதியம் அற்றதால் உடன்துறந்தார்க்கும், கடவுளைப்பற்றி நாணினைத் துறந்தார்க்கும், குடிப்பிறந்தாரால் ஒரோர் காரணத்தினால் வெகுண்டு துறக்கப்பட்டார்க்கும், முற்பிறப்பின்கண் ஏற்றவற்கு ஈயாது இறந்த வறியோர்க்கும், கல்வியினால் மிக்கோர்க்கும் அநாதராய் இறந்தவர்க்கும். [ஒர் ஊதியம்-வருவாய் ஒன்றும்; அநாதர்-ஆதரவு அற்றவர்]
பரிமேலழகர்: களைகண் ஆனவரால் துறக்கப்பட்டார்க்கும், நல்கூர்ந்தார்க்கும், ஒருவருமன்றித் தன்பால்வந்து இறந்தார்க்கும்;

எதைத் துறந்தார் என்பதை விளக்குவதில் வேறுபாடன்றி பழைய ஆசிரியர்கள் அனைவரும் துறந்தார் என்பதற்குத் துறவியர் என்றே பொருள் கொண்டனர். துவ்வாதார் என்பதற்கு வறியோர் எனவும் இறந்தார் என்பதற்கு செத்தவ்ர் எனவும் இவர்கள் உரை தந்தனர்.

இன்றைய ஆசிரியர்கள் 'துறவிக்கும் வறியவர்க்கும் நிலைதிரிந்தவர்க்கும்', 'துறவிகளுக்கும், பசித்திருக்கும் எவருக்கும், நிலை கெட்டுப் போனவர்களுக்கும்', 'சுற்றத்தாராற் கைவிடப்பட்டவர்கட்கும், வறியவர்கட்கும், ஆதரவின்றித் தன்பால் வந்து உயிர்நீத்தவர்கட்கும்', 'பிறர் நலம் பேணுவதற்காக தந்நலத்தை விட்டவர்க்கும், வறியோர்க்கும், இல்வாழ்க்கைக் கடந்த அறிவோர்க்கும்' என்றபடி உரை தந்தனர்.

துறவிகளுக்கும், வறியவர்கட்கும், நிலைதிரிந்து ஆதரவற்று நிற்போர்க்கும் என்பது இத்தொடரின் பொருள்.

இல்வாழ்வான் என்பான் துணை:
பதவுரை: இல்வாழ்வான்-இல்லற வாழ்க்கை நடத்துபவன்; என்பான்-என்று சொல்லப்படுபவன்; துணை-உதவி.

இத்தொடர்க்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இல்வாழ்வானென்று சொல்லப்படுமவன் துணை யாவான்.
மணக்குடவர் கருத்துரை: வறுமையாளர், கைவிடப்பட்டவர், திக்கற்றவர். மேற்கூறிய மூவரும் வருணநாமங்களைத் துறவாமையாலீண்டுத் துறந்தாரென்று கூறினார். செத்தார்க் கிவன் செய்ய வேண்டிய புறங்காட்டுய்த்தல் முதலாயின. இது மேற்கூறியவர்க்கேயன்றி இவர்க்கும் துணையென்று கூறிற்று.
பரிதி: இந்த மூவர்க்கும் கிருகஸ்தன் துணையாம் என்றவாறு. [கிருகஸ்தன்-இல்வாழ்வான்]
காலிங்கர்: ஏற்ற இல்வாழ்வான் என்று சொல்லப்படுவானே துணையாவான் என்றவாறு.
பரிமேலழகர்: இல்வாழ்வானென்று சொல்லப்படுவான் துணை
பரிமேலழகர் கருத்துரை: துறந்தார்க்குப் பாவம் ஒழிய அவர் களைகணாய் நின்று வேண்டுவன செய்தலானும், துவ்வாதவர்க்கு உணவு முதலிய கொடுத்தலானும், இறந்தார்க்கு நீர்க்கடன் முதலிய செய்து நல்லுலகின்கண் செலுத்தலானும், துணை என்றார். இவை இரண்டு பாட்டானும் இல்நிலை எல்லா உபகாரத்திற்கும் உரித்தாதல் கூறப்பட்டது.

'இல்வாழ்வான் என்று சொல்லப்படுவான் துணையாவான்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இத்தொடர்க்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'இல்லறத்தானே துணைவன்', 'குடும்ப வாழ்க்கை நடத்துகிறவன் தான் உதவியாவான்', 'இல்வாழ்வான் தக்க துணையாவான்', 'இல்லற வாழ்க்கையில் உள்ளவன் துணையாவான்' என்றபடி பொருள் உரைத்தனர்.

இல்லற வாழ்க்கையில் உள்ளவன் துணையாவான் என்பது இத்தொடரின் பொருள்.

நிறையுரை:
குடும்பத்துக்கு வெளியே உதவி தேவைப்படுவோர்க்கு துணை செய்ய வேண்டும் என்னும் பாடல்.

துறவிகளுக்கும், வறியவர்கட்கும், இறந்தார்க்கும் இல்லற வாழ்க்கையில் உள்ளவன் துணையாவான் என்பது பாடலின் பொருள்.
இறந்தார்க்கு ஒருவன் எப்படித் துணையாக இருக்கமுடியும்?

இப்பாடலில் துறந்தார், இறந்தார் என்று கூறப்படுவோர் யார் என்பதை விளக்குவதில் உரையாசிரியர்கள் வேறுபடுகின்றனர்.

துறந்தார்

முந்திய குறளில் கூறப்பட்ட 'இயல்புடைய மூவர்' யார் என்று சொல்வதில் குறள் அறிஞர்களும் ஆய்வாளர்களும் தடுமாற்றம் அடைந்தனர். அதில் சொல்லப்பட்ட மூவரில் ஒருவர் இங்கும் குறிக்கப்பட்டதாக அவர்கள் உணர்ந்ததால் குழப்பம் இங்கும் தொடர்ந்தது. அங்கே தவறாகக் கணித்தவர்கள் அதை நிலைநிறுத்த இங்கு வேறொரு வகையில் சரிசெய்ய முயல்கின்றனர்.
மணக்குடவர் முன் குறளில் மூவரில் (பிரம்மசாரி, வனப்பிரத்தன், சந்நியாசி) ஒருவராக சந்நியாசியைக் குறிப்பிட்டார். இங்கு துறந்தவர் என்று வெளிப்படையாகச் சொல்லப்படுவதால் அவர் அந்தச் சந்நியாசிக்கும் இந்தத் துறவிக்கும் வேறுபாடு காட்ட 'வருணத்தையும் நாமத்தையும் துறந்தார்' என்று இவற்றையும் விலக்கிய துறவி என்று சேர்த்துச் சொல்கிறார்.
பரிமேலழகர் முந்தைய பாட்டிலும் இப்பாட்டிலும் உள்ள சந்நியாசிக்குள்ள வேறுபாட்டை வேறுவிதமாக விளக்க முனைகிறார். இவர் துறந்தார் என்பதற்குத் துறக்கப்பட்டார் அதாவது கைவிடப்பட்டவர் என்று மாற்றிச் சொல்கிறார்.
மற்றவர்கள் துறந்தார் என்பதற்கு 'நீத்தார்', 'உலகப் பற்றைத் துறந்தவர்', உலகிற்காக வாழும் தியாகிகள்', பிறர் நலம் பேணுவதற்காக தந்நலம் விட்டவர்கள்' என்று பொருள் கூறினர்.

பரிதியின் 'மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசையென்ற மூவகையாசைகளையும் துறந்தவர்' என்பதே துறந்தார் என்பதற்குச் சிறந்த விளக்கமாகும்.

துவ்வாதவர்

துவ்வாதார் என்பதற்கு அனைவரும் நல்கூர்ந்தார் அதாவது வறுமையுற்றோர் என்று பொருளிலேயே 'உலக இன்பம் நுகர இயலாதவர்', 'உண்பதிற்கில்லாத வறியர்', 'உண்ணப்பெறாத வறியர்', 'வறுமையால் வாடித்தவிக்கும் ஏழை' என்று கூறினர். உயிர்களின் இயற்கை துய்த்தலாகும். அவை துய்ப்பனவற்றைத் துய்த்து வேட்கை தணிந்த வழியே நலமுறுகின்றன. அடிப்படைத் தேவைகளைக் கூட நுகர இயலாத வறிய நிலையிலிருப்பவர் துவ்வாதார் ஆவர். உழைத்தும் உலகில் வாழ்க்கை நடத்தி இன்பம் நுகர முடியாதவர், குருடர், நொண்டி முதலான உடற்குறைகள் கொண்டோரும் இதில் அடங்குவர். உடல் நோயினாலோ மனநலக் குறையினாலோ பொருள் தேடவும் வாழ்க்கையில் வளங்களை நுகரவும் இயலாத நிலைலுள்ளோரும் துவ்வாதார் ஆவர்.

இறந்தார்

இச்சொல்லுக்கு 'இறந்தவர்' அதாவது 'யாதொரு ஆதரவுமின்றித் அநாதையாய் செத்தவர் அல்லது சாவு நிலையில் இருப்போர்' என்று ஒரு சாராரும் இறத்தல் என்பதற்குக் கடத்தல் என்று பொருள் கொண்டு வரம்பின்றி வாழ்ந்து கெட்டவர்கள் அல்லது நிலைகெட்டுப் போனவர்கள் என்ற பொருளில் மற்றொரு சாராரும் பொருள் கொள்வர். சுகாத்தியர் 'வயது கடந்த முதியவர்' என்றும் சி இலக்குவனார் இல்வாழ்வைக் கடந்த அறவோர் என்றும் உரை பகன்றனர். இன்னும் சிலர் இறந்தார் என்பதற்கு 'பாதுகாப்பவர் இல்லாதவர்கள்', ;இல்வாழ்க்கை வாய்ப்புக்களை இழந்தவர்' என்றபடி பொருள் காண்பர்.
இறந்தார் என்ற சொல்லில் உள்ள றகரத்தை இடையின ரகரமாகக் கொண்டு இரந்தார் என்று கொண்டால் பொருள்தேட வகையில்லாமல் பிறரை நோக்கியே வாழவேண்டிய நிலையில் இரந்து நிற்பாரைக் குறித்துக் குறட்பொருளுக்குப் பொருந்தி வரும். எனவே இச்சொல் பாடபேதமாக இருக்கலாம் என்பது ஒரு சிலர் கருத்து. ஆனால் இரந்தார் என்பது துவ்வாதாரில் அடங்கும் என்பதால் இக்கருத்தை மற்றவர் ஏற்கமாட்டார்.

பொருள் நாடி நிற்போரையே இக்குறள் பேசுகிறது. அந்த வகையில், இறந்தார் என்பதற்கு 'செத்தவர்' என்பதைவிட 'நிலைதிரிந்து ஆதரவற்று நிற்போர்' என்ற பொருள் இங்கு சிறக்கும்.

இல்வாழ்வான் என்பவன் முயன்று உழைத்துப் பொருளீட்டி வாழ்க்கை நடத்துபவன். அவனைப் போல் உழைத்து உண்ண வாய்ப்பும் வளமும் இல்லாதவர் இவ்வுலகில் நிறைய உண்டு. அவர்களுக்கு இல்வாழ்வான் துணை செய்யவேண்டும் என்கிறார் வள்ளுவர்.
துறந்தார்தம் உயிர்வாழ்க்கை நடத்துதலுக்குரிய இன்றியமையாதனவற்றைத் தருதலுக்கு இல்வாழ்வான் துணை புரியலாம்.
துவ்வாதார்தம் துய்க்கும் வேட்கையைத் தீர்த்து வைத்து இல்லறத்தான் உதவி செய்யலாம்.
இறந்தார்க்குத் துணையாய் அமைதலாவது (இறந்தார்க்கு செத்தார் எனப் பொருள்கொண்டால்) நல்லடக்கம் செய்தல். அல்லது (நெறி கடந்தவர் என்று கொண்டால்) அவர்கள் திருந்தி இயல்பு வாழ்வு திரும்ப வழி செய்தல்.

இறந்தார்க்கு ஒருவன் துணையாக ஆவது எப்படி?

இறந்தார் என்ற சொல்லுக்கு சாதல், கடத்தல், நெறிகடந்து செல்லுதல், கழிதல், மிகுதல், வழக்குவீழ்தல், நீங்குதல் என்ற பொருள்களை அகராதி கூறுகிறது.
இறந்தார் என்றதற்கு 'ஆதரவின்றி உயிர்விட்டவர்கள்', 'திக்கற்றுச் செத்தவர்கள்', 'ஒருவருமின்றித் தன்பால் வந்திறந்தவர்' என்றும் 'மூதாதையர்' என்றும் பல பொருளில் உரை கண்டனர்.
இறந்தார்க்கு இல்வாழ்வான் செய்யுந்துணை நீர்க்கடன் (இறந்தாரை நோக்கிச் செய்யும் எள்ளும் நீரும் இறைத்தல்), இறுதிக் சடங்கும், தென்புலத்தார் படையலுமாம் என்று எழுதினர். இறுதிச் சடங்குகள் செய்யாவிட்டாலும் இறந்தாரை அப்புறப்படுத்தி அவர்கள் உடலைப் பாங்குடன் நல்அடக்கம் செய்தல் ஒரு சிறந்த பொதுநலத் தொண்டு ஆகும். இப்பயன்கள் செத்தார்க்கு நேரே சென்று அடைவதில்லை என்றாலும் இது போற்றத்தக்க அறச்செயலாகும்.
இறந்தார் என்பதற்கு 'எல்லை கடந்தவர்கள்' எனச் சிலர் பொருள் கொண்டனர். இப்பொருளில் வ சுப மாணிக்கம் 'நிலைதிரிந்தவர்' என்றும் இரா சாரங்கபாணி 'நெறிமாறி நடந்து வாழ்விழந்தார்' என்றும் நாமக்கல் இராமலிங்கம் 'வரம்பின்றி வாழ்ந்து கெட்டவர்' என்றும் உரை கண்டனர்.
துறந்தாரின் தூய்மை உடையார் இறந்தார்வாய்
இன்னாச்சொல் நோக்கிற் பவர் 
(அதிகாரம்:பொறையுடைமை குறள் எண்:159)
(பொருள்: வரம்பு கடந்து நடப்பவரின் வாயில் பிறக்கும் கொடுஞ் சொற்களைப் பொறுத்துக் கொள்பவர் துறந்தவரைப் போலத் தூய்மையானவர் ஆவர்.) என்ற குறளில் இறந்தார் என்ற சொல் வரம்பு கடந்தவர் என்ற பொருளில் ஆளப்பட்டதை இரா சாரங்கபாணி சுட்டுவார்.
இல்வாழ்வான் நிலை திரிந்தவர்களுக்கு உதவி செய்து மீண்டும் அவர்களை வாழ வைக்கத் துணையாகிறான் என்பது கருத்து.

துறவிகளுக்கும், வறியவர்கட்கும், ஆதரவற்றோர்க்கும் இல்லற வாழ்க்கையில் உள்ளவன் துணையாவான் என்பது இக்குறட்கருத்து.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard