Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 47 இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன்


Guru

Status: Offline
Posts: 7329
Date:
47 இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன்
Permalink  
 


இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை

(அதிகாரம்:இல்வாழ்க்கை குறள் எண்:47)

பொழிப்பு (மு வ): அறத்தின் இயல்போடு இல்வாழ்க்கை வாழ்கின்றவன்- வாழ முயல்கின்றவன் பல திறத்தாரிலும் மேம்பட்டு விளங்குகின்றவன் ஆவான்.

மணக்குடவர் உரை: நெறியினானே யில்வாழ்க்கை வாழ்பவனென்பான், முயல்வாரெல்லாரினுந் தலையாவான்.
முயறல்- பொருட்கு முயறல்.

பரிமேலழகர் உரை: இல் வாழ்க்கை இயல்பினான் வாழ்பவன் என்பான் - இல்வாழ்க்கைக்கண் நின்று அதற்கு உரிய இயல்போடு கூடி வாழ்பவன் என்று சொல்லப்படுவான்; முயல்வாருள் எல்லாம் தலை - புலன்களை விட முயல்வார் எல்லாருள்ளும் மிக்கவன்.
(முற்றத் துறந்தவர் விட்டமையின், 'முயல்வார்' என்றது மூன்றாம் நிலையில் நின்றாரை. அந்நிலைதான் பல வகைப்படுதலின், எல்லாருள்ளும் எனவும், முயலாது வைத்துப் பயன் எய்துதலின், 'தலை' எனவும் கூறினார்.)

குன்றக்குடி அடிகளார் உரை: இயல்பான இல்வாழ்க்கை வாழ்பவன் வாழ்க்கை முயற்சியில் ஈடுபட்டிருக்கும் அனைவரிலும் தலையாயவன். இயல்பினான் இல்வாழ்க்கை-வாழ்க்கை வாழ்வதற்கே. பொறிகளும் புலன்களும் துய்த்து மகிழ்வதற்கே. இதுவே வாழ்க்கையின் இயற்கையாய் அமைந்த இயல்பு. மற்ற முயற்சிகள் செயற்கை.

பொருள்கோள் வரிஅமைப்பு:
இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் முயல்வாருள் எல்லாம் தலை.


இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்:
பதவுரை: இயல்பினான்-இயல்போடு; இல்வாழ்க்கை-இல்லாளோடு கூடிய வாழ்க்கை; வாழ்பவன்-வாழ்க்கை நடத்துபவன்; என்பான்-என்று சொல்லப்படுபவன்.

இத்தொடர்க்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நெறியினானே யில்வாழ்க்கை வாழ்பவனென்பான்;
பரிதி: இல்லறத்தில் முறையால் நடப்பானாகில் அவன்;
காலிங்கர்: முதற்சொன்ன மூவர்க்கும் நற்சார்பு இவன்தானே ஆதலால் இச்சொன்ன மரபினாலே இல்லறத்தை நடத்துகின்றவன் என்று சொல்லப்படுகின்ற இவன்;
பரிமேலழகர்: இல்வாழ்க்கைக்கண் நின்று அதற்கு உரிய இயல்போடு கூடி வாழ்பவன் என்று சொல்லப்படுவான்;

'நெறியான வாழ்க்கை வாழ்பவன்' என்று மணக்குடவரும் முறையாக இல்லறம் நடத்துபவன்' என்று பரிதியும், 'அறநெறியில் இல்லறம் நடத்துகின்றவன்' என்று காலிங்கரும் 'இல்வாழ்க்கையில் நின்று அதற்கு உரிய இயல்போடு கூடி வாழ்பவன் என்று சொல்லப்படுவான்' என்று பரிமேலழகரும் இத்தொடர்க்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'இயல்பாகக் குடும்ப வாழ்வு வாழ்பவன்', 'இல்வாழ்க்கையை முறைமையாக நடத்துபவன் என்னும் சிறப்பைப் பெறுபவன்', '(சிறந்த ஒழுக்க) முறையிலே இல்லிருந்து வாழ்பவன்', 'இல்வாழ்க்கையை மேற்கொண்டு அதற்குரிய இயல்போடு வாழுகின்றவன் என்று சொல்லப்படுபவன்' என்றபடி உரை தந்தனர்.

இயல்பான இல்வாழ்க்கை வாழ்பவன் என்று சொல்லப்படுபவன் என்பது இத்தொடரின் பொருள்.

முயல்வாருள் எல்லாம் தலை:
பதவுரை: முயல்வாருள்-முயற்சி செய்பவர் எல்லாருள்ளும்; எல்லாம்-அனைத்தும்; தலை-முதன்மை.

இத்தொடர்க்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: முயல்வாரெல்லாரினுந் தலையாவான்.
மணக்குடவர் குறிப்புரை: முயறல்- பொருட்கு முயறல்.
பரிப்பெருமாள்: 'வித்துமிடல் வேண்டுங்கொல்லோ, விருந்தோம்பி மிச்சில் மிசைவான் புலம்' என்றாராகலின் இதனானே பொருளும் உண்டா என்று கூறினார்.
பரிதி: அறிய முயல்வாரினும் பெரியன்.
பரிதி கருத்துரை: தவம் செய்வார், ஆகாரம், நித்திரை முதலானவற்றை விட்டுச் சரீரத்தை ஒறுத்துத் தவம் செய்வார்; இவன் சரீரத்தை வருத்தாமல் இல்லறம் நடத்தி முத்தி பெறுவான் என்பதாம்.
காலிங்கர்: மூன்று ஒழுக்கத்தினும் முயல்கின்றவருள் எல்லாம் தலையாவான் என்றவாறு.[மூன்று ஒழுக்கம் - கல்விநிலை, தவமுயலும் நிலை, தவ நிலை ஆகிய மூன்று நிலைகள்.]
பரிமேலழகர்: புலன்களை விட முயல்வார் எல்லாருள்ளும் மிக்கவன்.
பரிமேலழகர் கருத்துரை: முற்றத் துறந்தவர் விட்டமையின், 'முயல்வார்' என்றது மூன்றாம் நிலையில் நின்றாரை. அந்நிலைதான் பல வகைப்படுதலின், எல்லாருள்ளும் எனவும், முயலாது வைத்துப் பயன் எய்துதலின், 'தலை' எனவும் கூறினார்.

'பொருட்கு முயல்வார் எல்லாரினும் தலை' என்று மணக்குடவரும் 'விருந்தோம்பி மிச்சில் மிசைவான் புலத்திற்கு'வித்துமிடல் வேண்டாமை போலப் பொருள் தானே உண்டாம்' என்று பரிப்பெருமாளும் 'அறிய முயல்வாரினும் பெரியன்' என்று பரிதியும் மூன்று ஒழுக்கத்தினும் [கல்விநிலை, தவமுயலும் நிலை, தவ நிலை] முயல்கின்றவர்களில் தலை' என்று காலிங்கரும் 'புலன்களை விட முயல்வார் எல்லாருள்ளும் மிக்கவன்' என்று பரிமேலழகரும் இத்தொடர்க்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'முன்னேற முயல்வார் எல்லாரிலும் சிறந்தவன்', 'வீடுபெற முயலும் துறவியர் எல்லாருள்ளும் சிறந்தவனாவான்', '(பிறவியின் நின்று உய்திகூட) முயற்சி செய்கின்றவர்கள் யாவருள்ளும் முதன்மை யானவனாவான்', ', பற்றினைவிட முயல்கின்றவர்கள் அனைவரினும் மேம்பட்டவன் ஆவான்' என்றபடி பொருள் உரைத்தனர்.

முயற்சி செய்கின்றவர்கள் யாவருள்ளும் முதன்மையானவன் என்பது இத்தொடரின் பொருள்.

நிறையுரை:
இயல்பான வாழ்வு நடத்தும் இல்லறத்தான் வெற்றி வாழ்க்கைக்கு முயல்வோருள் சிறந்தவன் என்னும் பாடல்.

இயல்பான இல்வாழ்க்கை வாழ்பவன் என்று சொல்லப்படுபவன் முயல்வார் எல்லாருள்ளும் முதன்மையானவன் என்பது பாடலின் பொருள்.
முயல்வார் யார்?

இயல்பினான் என்பதற்கு இயற்கைப்படி அல்லது இயற்கை உந்தும் வழி என்று பொருள் கொள்வர்.
தலை என்ற சொல்லுக்கு முதன்மை என்பது பொருள்.

முயல்வார் யார்?

முயல்வார் என்பதற்கு நேர் பொருள் முயற்சி செய்கிறவர்கள் என்பது.
முன்னேற முயல்வார், மேலான வாழ்வு பெற முயற்சி செய்கிறவர்கள் என்று இதன் பொருளை நீட்டிக்கலாம்.

'பொருட்கு முயலுவார்' என மணக்குடவரும், 'உணவு உறக்கம் நீத்து உடலை ஒறுத்துத் தவஞ் செய்து அறியமுயல்வர்' எனப் பரிதியும் இச்சொல்லுக்குப் பொருள் கண்டனர். பரிமேலழகர் 'புலன்களை விட முயல்வார்' என்கிறார்.
பிற்காலத்தவர்களில் சிலர், முக்தியாகிய வீடு பேற்றை முயல்வோர், இறைவன் திருவருளைக் காண முயல்பவர் என்று பொருள் கூறினர்.
பற்றினை விட முயலுகின்றவர், புலன்களை விடத் தவஞ்செய்வார், உயிர் உய்திபெற முயல்வோர், நல்ல கதி அடைய முயற்சி செய்வோர் என்றனர் வேறு சிலர்.
இல்லறத்தின் முயல்வார் என்றபடியும் ஓர் உரை உள்ளது.
மேன்மேலும் பொருளீட்டி வாழ முயல்வர் என்றும் பொருள் கூறினர்.
நாமக்கல் இராமலிங்கம் முயல்வார் என்பதற்குப் 'பலவித முயற்சிகள் செய்கிறவர்கள் அதாவது துறவறம் பூண்டு பல வழிகளில் தவம் செய்கிறவர்கள், சாகாமலிருக்க காயகற்பம் தேடுகிறவர்கள், வெவ்வேறு சித்திகள் பெறுவதற்காக வெவ்வேறு மந்திர தந்திரங்களை நாடுகிறவர்கள் முதலானோர்' என்பார்.
'இல்லறம் இடையூறாக இருக்கும் என்று கருதி, இல்லற வழியை எய்தாது முயல்கின்றவர்களும் உளர். திருமணம் செய்துகொள்ளாமல் தனித்து வாழ்ந்தும், துறவு நிலையை மேற்கொண்டும், பிறர் பணிக்கெனத் தம்மை ஆளாக்கியும், ஏதேனும் தமக்கு விருப்பமான துறையில் தம்மை ஈடுபடுத்தியும், வாழுகின்றவர்கள்' என்பது சி.இலக்குவனார் முயல்வார் என்றதற்குத் தரும் விளக்கம்.
குன்றக்குடி அடிகளார் 'வாழ்க்கையை வெற்றிகரமாக-இன்பமாக அமைத்துக் கொள்ள முயற்சி செய்வார்' என்ற விளக்கம் பொறித்துள்ளார்.
வ சுப மாணிக்கம் 'முன்னேற முயல்வார்' என்று பொருள் தருகிறார்.

முயல்வார் என்பது வாழ்க்கை முயற்சி செய்வார் என்ற பொருளிலே இக்குறளில் வந்தது என்று தோன்றுகிரது. இது வாழமுயற்சி செய்வோர்- சிறப்பாக 'வெற்றி வாழ்க்கை முயல்வார்' குறித்தது என்று கொள்ளலாம். வாழ முயல்வார் என்று சொல்லும்போது வீடு பேற்றை முயல்வோர், புலன்களை விடத் தவஞ்செய்வோர் என்ற கருத்துக்கள் இக்குறளுக்கு அமையா.
குன்றக்குடி அடிகளாரின் 'வாழ்க்கையை வெற்றிகரமாக-இன்பமாக அமைத்துக் கொள்ள முயற்சி செய்வார்' என்ற பொருள் பொருந்தி வரும்.

ஆணும் பெண்ணும் கூடி வாழ்தலே இல்வாழ்க்கை எனப்படுவது. 'இயல்பினான் இல்வாழ்க்கை' என்றது இயற்கை ஒழுங்கு அமைப்பின் பாற்பட்ட இல்வாழ்க்கையக் குறித்தது. வாழ்க்கை வாழ்வதற்கே; பொறிகளும் புலன்களும் துய்த்து மகிழ்வதற்கே என்பதுவே வாழ்க்கையின் இயற்கை அமைவு.
இயல்பு இல்வாழ்க்கை என்பது, காதல் பெண்ணோடு கூடிக் கலந்து மகிழ்ந்து வாழ்தல், நன்மக்களைப் பெறுதல். பொருள் ஈட்டுதல், துய்த்தல், ஈத்து மகிழ்தல், புகழ் சேர்த்தல் என்பனவற்றை உள்ளடக்கும்.

மாந்தரை வாழவிரும்புகிறவர்கள், உலக வாழ்க்கையை விரும்பாதவர்கள் என்று இரண்டாகக் கொண்டால் துறவு மேற்கொண்டவர்களும் துறவுச் சிந்தனையுள்ளவர்களும் உலக வாழ்க்கையை விரும்பாதோரில் அடங்குவர். முயல்வோர் என்ற சொல் வாழவிரும்புவோர் பற்றியது. எனவே துறவியரும் தவசிகளும் இக்குறளில் பேசப்படவில்லை என்று கொள்ளவேண்டும். மணக்குடவர், மு வ., வ சுப மாணிக்கம், குன்றக்குடி அடிகளார் போன்றோர் இப்பாடலை இப்பொருளில் அணுகி உரை கண்டவர்கள்.

வாழவிரும்புவர்கள் வாழ்வில் வெற்றியடைய விரும்புவார்கள். அப்படி வாழ்க்கையில் வெற்றி பெற மாந்தர் வெவ்வேறூ முயற்சிகளில் ஈடுபடுகின்றனர். வாழ்க்கை வெற்றியை எது தீர்மானிக்கிறது? செல்வம் சேர்ப்பதும் மனித வாழ்வின் வெற்றியை முடிவு செய்வதில் முக்கியப் பங்கு வகிப்பது. இதனால்தான் மணக்குடவர் முயல்வார் என்பதற்கு பொருட்கு முயறல் என்று குறிப்பு தந்தார். இல்லறத்தை ஒழுங்காக நடத்தினால் 'விருந்தோம்பி மிச்சில் மிசைவான் புலத்திற்கு'வித்துமிடல் வேண்டாமை போலப் பொருள் தானே உண்டாம் என்று இதனை பரிப்பெருமாள் வேறுவிதமாக விளக்குவார்.
ஆனால் பொருள் மட்டுமே வெற்றியைக் குறிக்காது. மக்கட்செல்வம், புகழ் போன்ற மற்ற பேறுகளைப் பெற்று நல்வாழ்வு வாழ மாந்தர் முயல்கின்றனர். இயல்பான இல்வாழ்வு வாழ்ந்தாலே வெற்றி வாழ்க்கைதான் என்கிறார் வள்ளுவர். இன்னொரு வகையில் சொல்வதானால் வாழ்க்கை வாழ்வதற்கே என்று வாழ்பவனே வெற்றி பெறுகிறான். எனவே அத்தகைய வாழ்வு வாழ்பவனை முயல்வாருளெல்லாம் தலை என்கிறார்.

இயல்பான இல்வாழ்க்கை வாழ்பவன் என்று சொல்லப்படுபவன் மேலான வாழ்வு பெறவேண்டுமென்று முயற்சி செய்கின்றவர்கள் எல்லாருள்ளும் முதன்மையானவன் என்பது இக்குறட்கருத்து.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard