Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 48 ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை


Guru

Status: Offline
Posts: 7474
Date:
48 ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
Permalink  
 


ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து

(அதிகாரம்:இல்வாழ்க்கை குறள் எண்:48)

பொழிப்பு (மு வரதராசன்): மற்றவரையும் அறநெறியில் ஒழுகச் செய்து, தானும் அறம் தவறாத இல்வாழ்க்கை, தவம் செய்வாரைவிட மிக்க வல்லமை உடைய வாழ்க்கையாகும்.

மணக்குடவர் உரை: பிறரையும் நன்னெறியிலே ஒழுகப்பண்ணித் தானும் அறத்தின் பாலொழுகும் இல்வாழ்க்கை தவம் செய்வாரினும் வலியுடைத்து என்றவாறு.
ஒழுகப் பண்ணலாவது அவர்க்கு வேண்டுவன அமைத்தல். இது தவத்தினும் வலியுடைத்து என்றது.

பரிமேலழகர் உரை: ஆற்றின் ஒழுக்கி அறன் இழுக்கா இல்வாழ்க்கை - தவஞ்செய்வாரையும் தத்தம் நெறியின்கண் ஒழுகப் பண்ணித் தானும் தன் அறத்தின் தவறாத இல்வாழ்க்கை; நோற்பாரின் நோன்மை உடைத்து - அத் தவஞ்செய்வார் நிலையினும் பொறையுடைத்து.
(பசி முதலிய இடையூறு நீக்கலின் 'ஆற்றின் ஒழுக்கி' என்றார். 'நோற்பார்' என்பது ஆகுபெயர்.நோற்பார் நிலைக்கு அவர்தம்மை உற்ற நோயல்லது இல்வாழ்வார் நிலைபோல் பிறரை உற்ற நோயும் பொறுத்தல் இன்மையின், 'நோற்பாரின் நோன்மையுடைத்து' என்றார்.)

வ சுப மாணிக்கம் உரை: பிறரை நெறிப்படுத்தித் தானும் நெறிநிற்கும் இல்வாழ்வே தவத்தினும் ஆற்றல் உடையது.

பொருள்கோள் வரிஅமைப்பு:
ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை நோற்பாரின் நோன்மை உடைத்து.

பதவுரை: ஆற்றின்-நல்நெறியின்கண், வழியின்கண்; ஒழுக்கி-பிறரை ஒழுகச் செய்து, ஒழுக்கநெறி நிற்க உதவி, நடத்தி, செலுத்தி, ஒழுகப் பண்ணி; அறன் இழுக்கா-அறநெறியினின்று மாறுபடாத; இல்வாழ்க்கை-இல்லற வாழ்க்கை; நோற்பாரின்-தவஞ்செய்வாரின் நிலையைவிட; நோன்மை-வலிமை, பொறுமை, தவச்சிறப்பு, தாங்கும் தன்மை; உடைத்து-(மிகுதியும்) கொண்டது.


ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பிறரையும் நன்னெறியிலே ஒழுகப்பண்ணித் தானும் அறத்தின் பாலொழுகும் இல்வாழ்க்கை;
மணக்குடவர் குறிப்புரை: ஒழுகப் பண்ணலாவது அவர்க்கு வேண்டுவன அமைத்தல்.
பரிதி: அறத்தின் மேலாகிய இல்லறத்தின்மேல் நின்று தருமத்தையும் கைவிடாதார்க்கு;
பரிமேலழகர்: தவஞ்செய்வாரையும் தத்தம் நெறியின்கண் ஒழுகப் பண்ணித் தானும் தன் அறத்தின் தவறாத இல்வாழ்க்கை;
பரிமேலழகர் குறிப்புரை: பசி முதலிய இடையூறு நீக்கலின் 'ஆற்றின் ஒழுக்கி' என்றார்.

இப்பகுதியிலுள்ள அறனிழுக்கா இல்வாழ்க்கை என்பதற்கு அறத்தின் தவறாத இல்வாழ்க்கை என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் உரை பகன்றனர். ஆற்றின் ஒழுக்கி என்றதற்கு மணக்குடவர் 'பிறரையும் ஒழுகப் பண்ணி' என்று கூற பரிமேலழகர் தவம் செய்வாரை அவரவர் நெறியில் ஒழுகப் பண்ணி என்றார்.

இன்றைய ஆசிரியர்கள் 'பிறரை அறநெறியில் நடத்தித் தானும் அறநெறி பிறழாது ஒழுகுவானது இல்லறம்', 'முறைப்படி நடந்துகொண்டு தர்ம நியாயம் தவறாமல் குடும்பம் நடத்துகிறவன்', '(ஏனைய நிலையாரையுந் தத்தம்) நெறியிலே நிற்கச் செய்து (தானும்) அறநெறி நின்று நீங்காத (ஒருவனது) இல்வாழ்க்கையானது', 'இல்வாழ்க்கையில் செல்லாத பிறரையும் அறநெறியில் ஒழுகச் செய்து, தானும் தன் அறநெறியில் தவறான இல்லற வாழ்க்கை' என்றபடி உரை தந்தனர்.

பிறரை நெறியில் நடத்தித் தானும் அறநெறி பிறழாது ஒழுகுவானது இல்வாழ்க்கை என்பது இப்பகுதியின் பொருள்.

நோற்பாரின் நோன்மை உடைத்து:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தவம் செய்வாரினும் வலியுடைத்து என்றவாறு.
மணக்குடவர் குறிப்புரை: இது தவத்தினும் வலியுடைத்து என்றது.
பரிதி: பிரமசாரி, வானப்பிரத்தன், சந்நியாசி இம்மூவரும் நிகரல்லர் என்றவாறு.
பரிமேலழகர்: அத் தவஞ்செய்வார் நிலையினும் பொறையுடைத்து.
பரிமேலழகர் குறிப்புரை: 'நோற்பார்' என்பது ஆகுபெயர்.நோற்பார் நிலைக்கு அவர்தம்மை உற்ற நோயல்லது இல்வாழ்வார் நிலைபோல் பிறரை உற்ற நோயும் பொறுத்தல் இன்மையின், 'நோற்பாரின் நோன்மையுடைத்து' என்றார்.

நோற்பார் என்பதற்குத் தவம் செய்வார் என்று பழைய ஆசிரியர்கள் பொருள் கொண்டனர். நோன்மை என்பதற்கு மணக்குடவர் வலி என்று பொருள் சொல்ல பரிமேலழகர் பொறை என்றார்.

இன்றைய ஆசிரியர்கள் 'தவஞ்செய்வான் நிலையினும் வலிமையுடையது', 'துறவுபூண்டு தவம் செய்கிறவர்களைவிடப் பொறுப்பும் சகிப்புத் தன்மையும் உடையவன்', 'தவஞ் செய்வாரது நிலையைப் பார்க்கினும் மிக்க பொறுப்புடையது', 'பற்றினைவிடத் தவம் செய்வார் நிலையினை விடத் தவச் சிறப்பு உடையது' என்றபடி பொருள் உரைத்தனர்.

தவம் செய்வார் நிலையினைவிட வலிமை கொண்டது என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
பிறரை நெறியில் நடத்தித் தானும் அறநெறி பிறழாது ஒழுகுவானது இல்வாழ்க்கை, தவம் செய்வார் நிலையினைவிட நோன்மை கொண்டது என்பது பாடலின் பொருள்.
'நோன்மை' என்றால் என்ன?

இல்வாழ்க்கை தவவாழ்வினும் பெருமைக்குரியது.

பிறரையும் நன்னெறிப்படி நடக்கச் செய்து தானும் அறம் தவறாதவனது இல்வாழ்க்கை, தவம் செய்வார் நிலையை விட வல்லமை வாய்ந்தது.
தவம் மேற்கொள்பவர்கள் உண்ணாமலும் உறங்காமலும் தம்மை வருத்திக் கொள்வர்; பசி, காமம், வெகுளி, முதலியவற்றை அடக்கியாள்வர்; மிகுந்த பொறுமையும், சகிப்புத் தன்மையும் விடாமுயற்சியும் கொண்டவர்களாய் இருப்பர். இதுவே தவச் சிறப்பு அல்லது பெருமை எனப்படுகிறது.
குடும்ப வாழ்க்கையில் உள்ளோர்க்கும் தவம் செய்வாரது பண்புகள் எல்லாம் உண்டு. அறம் வழுவாமல் நடத்தப்படும் இல்லறவாழ்க்கையில் பெருமுயற்சி இருக்கிறது. சமூக, பொருளாதார வழி உண்டாகும் அழுத்தங்களைத் தாங்கிக் குடும்பப் பொறுப்புகளை ஏற்று நடத்துகிறான் இல்வாழ்வான். மகனாக, கணவனாக, தந்தையாக, நண்பனாக, ஒப்புரவாளனாக என்று பல்வேறு சமூகப் பங்களிப்புச் செய்யக் கடமைப்பட்டவனாக இருக்கிறான்; உலகியல் வாழ்வு என்னும் அலைகளுக்கு நடுவில், நல்லொழுக்கம் கடைப்பிடித்து, குடும்பம் என்னும் படகில் பயணிக்கின்றான். இவ்வாறாக, இல்வாழ்வான் எதிர்கொள்ளும் இன்னல்கள், இடர்கள், தோல்விகள் முதலியன தவம்செய்வார் தாங்குவனவற்றிலும் கூடுதலானவை. இதனால்தான் குடும்ப வாழ்க்கையும் ஒரு தவம் என்று சொல்லப்படுகிறது.

'ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை' நடத்துபவனை உயர்த்திப் பேசுகிறது இப்பாடல். 'ஆற்றின் ஒழுக்கி அறன் இழுக்கா' என்று சொன்னது இல்வாழ்வான் தானும் அறநெறியில் நின்று மற்றவர்களையும் நல்வழிப்படுத்துவதை உணர்த்துகிறது. ஆற்றின் ஒழுக்கப்படுபவர் அதாவது நல்வழிப்படுத்தப்படுபவர் யார்? அது துறவறத்தார் என்று சிலர் கூறினர். இல்லறத்தான் துறவியை நெறிப்படுத்துகிறான் என்பது பொருந்தாக்கூற்று. ஆற்றின் ஒழுக்குபவர் பிறர் குறித்தது என்று பொதுமையில் வேறு சிலர் உரைத்தனர். பிறர் என்றது பல நிலையினரைக் குறிக்கலாம் என்றாலும் 'ஆற்றின் ஒழுக்கி' என்பது தொடர்புடையார்க்கு வேண்டுவன அமைத்துக் கொடுத்து அவர்களை நல்வழியில் நிலைநிறுத்துவதைக் குறிப்பது என எண்ணலாம்.
'அறன் இழுக்கா' என்பது அறவழியில் இருந்து விலகாமல் இருந்து எனப்பொருள்படும். அறம்தவறுவதற்கு மிகப்பல வாய்ப்புகள் இல்லறத்தானுக்கு ஏற்படுகிறது. பொருளீட்ட, முறையற்ற இன்பம் துய்க்க எனப்பல வழிகளில் அவன் நெறிதவற வாய்ப்புகள் உண்டு. அவற்றையெல்லாம் விலக்கி ஒழுகுபவன் அறனிழுக்கா வாழ்வு மேற்கொள்பவன்.

பாடலின் பிற்பகுதி நோற்பாரைத் தொடர்புபடுத்துகிறது. நோற்பாரின் என்ற சொல்லாட்சியால், இக்குறள் துறவறத்தையும் இல்லறத்தையும் ஒப்பிட்டுப் பேசுவதாகவே கருதவேண்டியுள்ளது, நோற்பார் யார்? இச்சொல் தவம் செய்வாரைச் சுட்டுவதாக குறளில் ஆளப்பட்டுள்ளது. துறவைத் தவத்தில் ஒருவகையாகக் குறள் கருதும்.
இல்லறம்-துறவறம் இவ்விரண்டில் எது சிறந்தது? தவம் மேற்கொள்பவன் தன்னைத்தானே துன்பத்துள்ளாக்கிக் கொள்கிறான். இல்லறத்தான் பல துன்பங்களுக்கிடையே வாழ்வு நடாத்துகிறான். இருவருமே துன்பம் பொறுப்பவர்களாக உள்ளனர். இது ஒற்றுமை. துறவி தன்னை மட்டும் எண்ணிக்கொண்டு துறவு மேற்கொள்கிறான். இங்கு சொல்லப்படும் இல்லறத்தான் மற்றவர்களுக்கு நல்வழிகாட்டி தானும் அறநெறியிலிருந்து தவறாமல் வாழ்க்கை நடத்துகிறான்; தம் கருமத்துடன் பிறர் கருமமும் செய்கிறான்; உழைத்துப் பொருளீட்டி பகுத்துண்டு வாழ்கிறான். இது வேற்றுமை. தாம் மட்டும் நன்மை அடைவதற்காகத் தவம் செய்வோரின் வாழ்க்கையைவிடப் பிறர் நலம் கருதிய இல்வாழ்க்கை தவத்தின் பெருமையினும் மேலானது.

'நோன்மை' என்றால் என்ன?

'நோன்மை' என்ற சொல்லுக்கு வலி, பொறை, மிக்க வலி, வல்லமை, அதிகமான விரதம், சிறப்பு, ஆற்றல், வலிமை, அதிக சகிப்புத் தன்மை, மிக்க பொறுப்பு, தவச் சிறப்பு, மிக்க பொறுமை, மிகுந்த பொறைத் திறன், வலிமையும் பெருமையும், மேம்பாடு, தவவலிமை, என்றவாறு உரையாளர்கள் பொருள் கூறினர்.

நோன்மை என்பதற்கு வலிமை என்று பொருள் கண்டார் மணக்குடவர். இதன்படி 'நோற்பாரின் நோன்மை உடைத்து' என்றதற்குத் 'தவம் செய்வாரின் நிலையை விட வலிமை கொண்டது' என்ற பொருள் கிடைக்கிறது. நோன்மை என்ற சொல்லுக்குப் பரிமேலழகர் கொண்ட பொருள் பொறுமை என்பது. வலிகொண்டவனே எதையும் பொறுக்க இயலும் என்பதால் பரிமேலழகர் நோன்மை என்பதற்குப் பொறுமை எனப் பொருள் கூறியிருக்கலாம்.

உற்ற நோய் நோன்றலும் அதாவது உறும் துன்பங்களைப் பொறுத்தலும், உயிர்க்கு உறுகண் செய்யாமையும் தவத்தின் திருக்காட்சி என்று குறள் கூறும். தனக்கு ஏற்படும் உடல்வலியையும் மன உளைச்சலையும் பொறுத்துக் கொண்டு பிறரை நெறிப்படுத்துவதற்கான பொறுப்புகளையும் ஏற்றுக்கொள்வதால், இல்லறத்தான் உறும் துயரங்களும் மிகையே. பொறுமையும் தாங்கும் ஆற்றலும் உள்ளவர்களாலேயே துன்பங்களைத் தாங்கி கொள்ள முடியும். இந்த ஆற்றலே வலிமை எனப்படுகிறது. இதற்குத் தவச் சிறப்பு என்பதும் பொருத்தமான பொருள். நோற்பாரின் ஆற்றலை வள்ளுவர் நோன்மை என அழைக்கிறார்.

'நோன்மை' என்பதற்கு வலிமை என்பது பொருள்.

பிறரை நெறியில் நடத்தித் தானும் அறநெறி பிறழாது ஒழுகுவானது இல்வாழ்க்கை, தவம் செய்வார் நிலையினைவிட நோன்மை கொண்டது என்பது இக்குறட்கருத்து.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard