Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 52 மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின்


Guru

Status: Offline
Posts: 7474
Date:
52 மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின்
Permalink  
 


மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினு மில்

(அதிகாரம்:வாழ்க்கைத்துணை நலம் குறள் எண்:52)

பொழிப்பு: இல்வாழ்க்கைக்குத் தக்க நற்பண்பு மனைவியிடம் இல்லையானால். ஒருவனுடைய வாழ்க்கை வேறு எவ்வளவு சிறப்புடையதானாலும் பயன் இல்லை.

மணக்குடவர் உரை: குடிக்குத்தக்க வொழுக்கம் மனையாள்மாட்டு இல்லையாகில், அவ்வில்வாழ்க்கை எத்துணை நன்மைகளை யுடைத்தாயினும் ஒரு நன்மையும் இன்றாம்.

பரிமேலழகர் உரை: மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் - மனையறத்திற்குத் தக்க நற்குண நற்செய்கைகள் ஒருவன் இல்லாளிடத்து இல்லையாயின்; வாழ்க்கை எனைமாட்சித்து ஆயினும் இல் - அவ்வில்வாழ்க்கை செல்வத்தான் எத்துணை மாட்சிமையுடைத்தாயினும் அஃது உடைத்தன்று.
('இல்' என்றார் பயன்படாமையின்.)

இரா சாரங்கபாணி உரை: இல்லறத்துக்குரிய பண்புகள் மனைவியிடம் இல்லாவிடின், அவ்வில்லறம் வேறுவகையில் எவ்வளவு சிறப்புற்றிருந்தாலும் சிறப்பில்லை.

பொருள்கோள் வரிஅமைப்பு:
.மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை எனைமாட்சித்து ஆயினும் இல்.


மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின்:
பதவுரை: மனை-மனையறன்; மாட்சி-பெருமை; இல்லாள்கண்-மனைவியிடத்தில்; இல்லாயின்-இல்லாவிடில்.

இத்தொடர்க்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: குடிக்குத்தக்க வொழுக்கம் மனையாள்மாட்டு இல்லையாகில்;
பரிதி: இல்லறம் நடத்தும் திறமில்லாதாள்;
காலிங்கர்: மற்று இங்ஙனம் செலுத்துகின்ற இல்வாழ்க்கையானது செலுத்துமிடத்து மேன்மேலும் தன் நெஞ்சத்து அன்பு மற்று அவனிடத்து இல்லையாயின்;
பரிமேலழகர்: மனையறத்திற்குத் தக்க நற்குண நற்செய்கைகள் ஒருவன் இல்லாளிடத்து இல்லையாயின்;

மனைமாட்சி என்றதற்கு மணக்குடவர் 'குடிக்குத்தக்க ஒழுக்கம்' என்றும், பரிதி 'இல்லறம் நடத்தும் திறம்' என்றும், காலிங்கர் 'அவள் அவனிடம் செலுத்தும் அன்பு' என்றும் பரிமேலழகர் இல்லாளிடத்து மனையறத்திற்குத் தக்க நற்குண நற்செய்கைகள்' என்றும் பொருள் கூறினர். இம்மனைமாட்சி மனையாளிடம் இல்லையானால் என்பது இத்தொடர்க்கு இவர்கள் கூறும் உரையாகும்.

இன்றைய ஆசிரியர்கள் 'வீட்டுப் பண்பு மனைவியிடத்து இல்லையானால்', 'மனைவியினிடம் (இல்லறத்திற்குரிய) சிறப்பியல்பு இல்லையானால்', 'மனையறத்திற்கு ஏற்ற பெருமைக் குணங்கள் மனைவியிடத்து இல்லையாயின்', 'குடும்பத்துக்கு ஏற்ற பண்புநலன்கள் மனைவியிடம் இல்லாது போனால்' என்ற பொருளில் உரை தந்தனர்.

குடும்பத்துக்கு ஏற்ற பண்புநலன்கள் இல்லாளிடம் இல்லாது போனால் என்பது இத்தொடரின் பொருள்.

வாழ்க்கை எனைமாட்சித் தாயினு மில்:
பதவுரை: வாழ்க்கை-வாழ்தல்; எனை-எவ்வளவு பெரிய; மாட்சித்து-பெருமையுடையது; ஆயினும்-ஆனாலும்; இல்-உடைத்தன்று.

இத்தொடர்க்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அவ்வில்வாழ்க்கை எத்துணை நன்மைகளை யுடைத்தாயினும் ஒரு நன்மையும் இன்றாம்.
பரிப்பெருமாள் கருத்துரை: வருவாய்க்குத் தக்க செலவினளாகவே இல்வாழ்க்கை இனிது நடக்கும். ஒழுக்கக் குறைபாடு உண்டானால் வரும் குற்றம் என்னை? என்றார்க்கு இது கூறப்பட்டது.
பரிதி: இல்லறத்தில் நானாபதார்த்தம் உண்டாய் இருந்தும் ஒன்றுமில்லை என்றவாறு. [நானாபதார்த்தம்-பலவேறு வகையான பொருட்கள்]
காலிங்கர்: இல்வாழ்க்கை எவ்வகைப்பட்ட மாட்சிமை உடைத்தே ஆயினும் யாதுமில்லை என்றவாறு.
பரிமேலழகர்: வாழ்க்கை எனைமாட்சித்து ஆயினும் இல் - அவ்வில்வாழ்க்கை செல்வத்தான் எத்துணை மாட்சிமையுடைத்தாயினும் அஃது உடைத்தன்று.
பரிமேலழகர் குறிப்புரை: 'இல்' என்றார் பயன்படாமையின்.

இல்லறத்தில் எவ்வகையான வளம் இருந்தாலும் ஒன்றுமில்லை என்றபடி பழைய ஆசிரியர்கள் இத்தொடர்க்கு உரை கூறினர். மணக்குடவரும் பரிமேலழகரும் 'இல்' என்ற சொல்லுக்கு நன்மை/பயன் இல்லை என்று பொருளுரைத்தனர்.

இன்றைய ஆசிரியர்கள் 'வாழ்வின் பிறநலம் இருந்தும் பயனில்லை', 'இல்வாழ்க்கையானது (பிற) எவ்வகையான சிறப்புடையதாயிருந்தாலும் மாட்சிமைப்படாது', 'வாழ்க்கை செல்வம் முதலியவற்றால் எவ்வளவு சிறப்புடையதாயிருந்தாலும் பயனில்லை', 'அக்குடும்பத்தின் பிற பெருமைகளால் எவ்விதப் பயனும் இல்லை' என்றபடி பொருள் உரைத்தனர்.

இல்வாழ்க்கையானது பிற பெருமைகள் எவை இருந்தாலும் ஒன்றும் இல்லை என்பது இத்தொடரின் பொருள்.

நிறையுரை:
எவ்வளவு வளங்கள் இருந்தாலும் இல்லாளிடம் குடும்ப வாழ்க்கைக்குரிய பண்பு இல்லாவிடில் அது இல்வாழ்க்கை ஆகாது என்னும் பாடல்.

குடும்பத்துக்கு ஏற்ற பண்புநலன்கள் இல்லாளிடம் இல்லாவிடில், இல்வாழ்க்கையானது எனைமாட்சித்து ஆயினும் ஒன்றும் இல்லை என்பது பாடலின் பொருள்.
'எனைமாட்சித்து ஆயினும்' என்பதன் பொருள் என்ன?

மனைமாட்சி என்பது மனையறத்திற்கு ஏற்ற பெருமைக் குணங்கள் என்று பொருள்படும்.
வாழ்க்கை என்பது இல்லற வாழ்வு குறித்தது.
இல் என்ற சொல் இல்லை என்ற பொருள் தரும். இங்கு 'அதற்குமேல் இருந்தும் ஒன்றுமில்லை' என்று கொண்டால் பொருத்தமானதாக அமையும்.

'மனைத்தக்க மாண்பு' என முந்தைய குறளில் சொல்லப்பட்டது இங்கு சுருக்கமாக 'மனைமாட்சி' என்று குறிக்கப்படுகிறது. அக்குறளில் உடன்பாட்டில் கூறப்பட்டதை எதிர்மறையால் சொல்லி அக்குணம் இல்லாளுக்கு அமையவேண்டும் என மீண்டும் வலியுறுத்துகிறார்.
இல்லற ஒழுக்கம், நற்குண நற்செய்கைகள், இல்லறம் நடத்தும் திறம், கணவன்-மனைவி இடையே உள்ள குறைபடாத அன்பு, குடும்பப் பண்பாடு, இல்லறத்திற்குத் தக்க நல்ல பண்பு, இல்லறத்திற்கு ஏற்ற இயல்பு, என்று பலவாறாக மனைமாட்சியை விளக்குவர்.
இல்லறத்திற்கேற்ற நற்குண நற்செயல்களே மனைமாட்சி என்பது.

இல்லறம் ஏற்று நடத்தும் பெண்ணுக்கு மனைமாட்சி இருந்தே ஆகவேண்டிய நற்பண்பு என்று இக்குறள் சொல்கிறது. இல்லம் அழகும் பெருமையும் பெற இல்லாளுக்கு முதன்மைப் பொறுப்பும் கடமையும் உண்டு. இதற்குத் தேவையான பண்பாடும் திறமும் முனைப்பும் இல்லத்தலைவியிடம் இல்லாவிடில் அக்குடும்பம் மாட்சிமை பெறாது. இல்லாளது செவ்வியைப் பொறுத்தே அக்குடும்பத்தின் பெருமை புலப்படும்;
ஒருவனுக்கு மற்றப்படி வளம் மிகுந்து வாழ்க்கை சிறப்பாக அமைந்து இருப்பதாகத் தோன்றலாம். ஆனால், அவனது மனைவியிடம் மனைத்தக்க மாண்பு இல்லாவிட்டால், மற்ற வகையில் எவ்வளவு வளம் பெற்றிருந்தாலும், அவர்களது இல்வாழ்க்கை பெருமையுறாது; அவ்வில்லத்தில் யாதும் இல்லாதது போன்றதே என்று கூறப்பட்டது. இல்வாழ்க்கை பெருமைபெற வேண்டற்பாலது மனைமாட்சி ஒன்றுதான் என்று பாடல் முடிவாகச் சொல்கிறது.

'எனைமாட்சித்து ஆயினும்' என்பதன் பொருள் என்ன?

'எனைமாட்சித்து ஆயினும்' என்ற தொடர்க்கு '(வேறு வகைகளில்) எவ்வளவு பெருமையை யுடையதாயினும்' என்பது பொருள். பலவேறு வகையான பொருள்கள் மூலம் ஒருவன் பெருமை பெறுகிறான். நிலபுலங்கள், மாடமாளிகைகள், செல்வம், செல்வாக்கு இவற்றால் ஒருவன் சிறப்பு அடைய முடிகிறது. இருந்தாலும் ஒன்றும் இல்லாதது போலத்தான் என்ற கருத்தை அழுத்தமாகக் கூற 'எனைமாட்சித்து ஆயினும்' என்ற தொடர் ஆளப்பட்டது.

குடும்பத்துக்கு ஏற்ற பண்புநலன்கள் இல்லாளிடம் இல்லாது போனால், இல்வாழ்க்கையானது பிற பெருமைகள் எவை இருந்தாலும் ஒன்றும் இல்லை என்பது இக்குறட்கருத்து.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard