Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 53 இல்லதென் இல்லவள் மாண்பானால்


Guru

Status: Offline
Posts: 7329
Date:
53 இல்லதென் இல்லவள் மாண்பானால்
Permalink  
 


இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை

(அதிகாரம்:வாழ்க்கைத்துணை நலம் குறள் எண்:53)

பொழிப்பு: மனைவி நற்பண்பு உடையவளானால் வாழ்க்கையில் இல்லாதது என்ன? அவள் நற்பண்பு இல்லாதவளானால் வாழ்க்கையில் இருப்பது என்ன?

மணக்குடவர் உரை: ஒருவனுக்கு மனையாள் மாட்சிமையுடையாளானால் எல்லாமிலனேயாயினும் இல்லாதது யாது? மனையாள் மாட்சிமை இல்லாளானால் எல்லாமுடையானாயினும் உண்டானது யாது?

பரிமேலழகர் உரை: இல்லவள் மாண்பு ஆனால் இல்லது என் - ஒருவனுக்கு இல்லாள் நற்குண நற்செய்கையள் ஆயினக்கால் இல்லாதது யாது? இல்லவள் மாணாக்கடை உள்ளது என் - அவள் அன்னள் அல்லாக்கால் உள்ளது யாது? ('மாண்பு' எனக்குணத்தின் பெயர் குணிமேல் நின்றது. இவை இரண்டு பாட்டானும் இல்வாழ்க்கைக்கு வேண்டுவது இல்லாளது மாட்சியே, பிற அல்ல என்பது கூறப்பட்டது.)

இரா சாரங்கபாணி உரை: மனைவி நற்பண்பே வடிவமாகத் திகழ்வாளாயின் அவளைப் பெற்ற கணவனுக்கு இல்லாதது என்ன? அவள் பண்பில்லாதவள் ஆயின் அவனுக்கு உள்ளது என்ன?

பொருள்கோள் வரிஅமைப்பு:
இல்லவள் மாண்பானால் இல்லதென்? இல்லவள் மாணாக் கடை உள்ளதென்?


இல்லதென் இல்லவள் மாண்பானால்:
பதவுரை: இல்லது-இல்லாதது; என்-யாது? இல்லவள்.மனைவி; மாண்பு-நற்குண்நற்செய்கை; ஆனால்-ஆயினால்.

இத்தொடர்க்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஒருவனுக்கு மனையாள் மாட்சிமையுடையாளானால் எல்லாமிலனேயாயினும் இல்லாதது யாது?
பரிதி: இல்லறத்தின் வரலாறு அறிந்து இல்லறம் நடத்தும் பதிவிரதை இல்லத்தில் ஏதும் உண்டு.[ஏதும்-எல்லாம் ]
காலிங்கர்: இல்வாழ்வானுடைய மனைவியானவள் கற்பு என்னும் மாட்சிமை உடையாளானால் அவ் இல்லத்திற்கு இல்லாதது என்? எல்லா நன்மையும் உளவாம்.
பரிமேலழகர்: ஒருவனுக்கு இல்லாள் நற்குண நற்செய்கையள் ஆயினக்கால் இல்லாதது யாது?
பரிமேலழகர் குறிப்புரை: 'மாண்பு' எனக்குணத்தின் பெயர் குணிமேல் நின்றது.

மணக்குடவர் மாண்பு என்பதற்கு 'மாட்சிமை' என்றும் பரிதி 'வரலாறு அறிந்து இல்லறம் நடத்துவது' என்றும் காலிங்கர் 'கற்பு என்னும் மாட்சிமை; என்றும் பரிமேலழகர் 'நற்குண நற்செய்கை' என்றும் பொருள் கூறி, மனைவி மாண்பு உடையளானால் அவ்வில்லத்தில் என்ன இல்லை? என்றபடி இத்தொடர்க்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'மனைவிக்குப் பண்பிருப்பின் எது இல்லை?', 'மனைவி நற்பண்புடையவளானால் இல்லாதது யாது?', 'மனைவி பெருமைக் குணங்கள் உடையவளாயிருந்தால் இல்லாதது ஒன்றும் இல்லை', 'மனைத்தலைவி மாண்பு மிக்கவளாக இருந்தால் அவ்வில்லத்தில் இல்லாதது எதுவும் இல்லை' என்ற பொருளில் உரை தந்தனர்.

இல்லாள் மாண்பு உடையவளாயிருந்தால் இல்லறத்தில் இல்லாதாது என்ன? என்பது இத்தொடரின் பொருள்.

உள்ளதென் இல்லவள் மாணாக் கடை:
பதவுரை: உள்ளது-இருப்பது; என்-என்ன?; இல்லவள்-மனைவி; மாணாக்கடை-சிறவாதபோது.

இத்தொடர்க்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மனையாள் மாட்சிமை இல்லாளானால் எல்லாமுடையானாயினும் உண்டானது யாது?
பரிதி: இல்லறம் நடத்தும் முறையை அறியாதாள் இருக்கும் இல்லத்தில் ஏதும் உண்டாயிருந்தும் ஒன்றும் இல்லை என்றவாறு.
காலிங்கர்: மற்று அம்மனையாள், கற்பு மாட்சிமை இல்லாத இடத்து அவ் இல்லத்திற்கு உள்ளது என்? மற்று எல்லா நன்மையும் உளவாயினும் இல்லையாம் என்றவாறு.
பரிமேலழகர்: அவள் அன்னள் அல்லாக்கால் உள்ளது யாது?
பரிமேலழகர் குறிப்புரை: இவை இரண்டு பாட்டானும் இல்வாழ்க்கைக்கு வேண்டுவது இல்லாளது மாட்சியே, பிற அல்ல என்பது கூறப்பட்டது.

'மனைவி மாண்பு இல்லாதவளானால் இல்லத்தில் உள்ளது என்ன? ஒன்றுமில்லை' என்றபடி பழைய ஆசிரியர்கள் இத்தொடர்க்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'மனைவிக்குப் பண்பில்லை எனின் எது உண்டு?', 'அவள் அதிலே சிறப்பில்லாதவளாய விடத்து உள்ளது யாது?', '.மனைவி பெருமைக் குணங்கள் அற்றவளாய் இருந்தால், எல்லாம் பெற்றிருந்தும் ஒன்றும் இல்லையாம், 'அவள் பண்பில் குன்றி இருந்தால் அங்கு மதிப்புள்ளது எதுவும் இல்லை' என்றபடி பொருள் உரைத்தனர்.

இல்லாள் பெருமைக் குணங்கள் அற்றவளாய் இருந்தால், இல்லத்தில் உள்ளது என்ன? என்பது இத்தொடரின் பொருள்.

நிறையுரை:
இல்லாளின் மாண்பே இல்லப் பெருமை என்னும் பாடல்.

இல்லாள் மாண்பானால் இல்லறத்தில் இல்லாதாது என்று ஒன்றுமில்லை; அவள் பெருமைக் குணங்கள் இல்லாதவளாய் இருந்தால், இல்லத்தில் உள்ளது ஒன்றுமில்லை என்பது பாடலின் பொருள்.
மாண்பானால் என்றால் என்ன பொருள்?

இல்லது என்ற சொல்லுக்கு இல்லாதது என்று பொருள்.
என் என்பது என்ன என்ற பொருள் கொண்டது.
இல்லவள் என்றது மனைவியைக் குறித்த சொல்.
மாணா என்ற சொல் மாண்புகள் இல்லாத என்ற பொருள் தரும்.
கடை என்ற சொல்லுக்கு இடத்து என்றும் கீழ்ப்பட்டது என்றும் இரண்டு வகையாகப் பொருள் கொள்வர். இடத்து என்ற பொருள் பொருத்தமானது.

இல்லம் பொலிவு பெற மனைவிக்கு மாட்சிமை இன்றியமையாதது என்று மறுபடியும் கூறப்படுகிறது.
மாட்சிமை என்பது நற்குணநற்செய்கைகளைக் குறிக்கும் சொல். கணவனுடனான காதல் வாழ்வு, இல்வாழ்வுக்கு வேண்டுவன அறிந்து அவற்றில் உறுதியாய் நிற்றல், உலக நடை அறிந்து நடத்தல், உணவு படைக்கும் திறன், விருந்தினர்/சுற்றம் பேணுதல், ஏழைகளிடம் இரக்கம் காட்டுதல், பழி வராத வாழ்க்கை நடத்துதல் வீட்டின் வளத்திற்கேற்ப செலவு செய்தல் முதலியன மாட்சிமையில் அடங்கும்.
மாண்பில்லா மனைவி யார்? கணவனிடம் அடிக்கடி இணக்கமற்று இருத்தல், எல்லோரிடமும் மென்மை அற்று நடப்பது, இல்லத்தைப் பிரித்தாள நினைப்பது, குடும்பத்துக்கு எதிராக கூட்டணிகள் அமைப்பது, இழிவான செயல்களில் ஈடுபடுதல், தன்னிச்சையாய் செயல்படுதல், சினம் காக்க இயலாமை - இன்ன பிற குணங்கள் கொண்ட பெண்ணை மாண்பில்லாதவள் என அழைக்கலாம்.
படிப்பவர் சிந்தனையைத் தூண்டும் முறையில் இரண்டு வினாக்கள் எழுப்பப்பட்டன. இல்லாள் மாண்புடையவளானால் இல்லறவாழ்வில் இல்லாதது என்ன? அவள் மாண்பில்லாதவளானால் அங்கு உள்ளது என்ன? என்பன அவை. இரண்டுக்கும் குறளிலே உள்ளுறையாக உள்ள ஒரே பதில்- 'ஒன்றுமில்லை'. மாட்சிமைக் குணம் பெற்ற மனைவி வாய்க்கப் பெற்றால், இல்லத்தில் எல்லாம் பெற்றுள்ளமை போன்றதாம்; மாண்பில்லாத மனைவி வாய்த்துவிட்டால், எதுவும் பெறாத நிலைமை போன்றதாம்.
இல்லத்து வளம் என்பது பொருளில் இல்லை; பெற்ற மனைவியே எல்லா வளமாகவும் இருக்கிறாள். இல்லறத்தின் சிறப்பு எல்லாம் மனைவியைப் பொறுத்ததே என்பது கருத்து.

இப்பாடலில் இல்லவள் என்ற சொல் இருமுறை பயின்று வந்துள்ளது.
'முதல் 'இல்லவள்' மாண்புடைய இல்லாள். இரண்டாம் 'இல்லவள்' மாண்பில்லாக் கடையவள். இவ்வேற்றுமை யுணர்த்த ஒரு சொல்லே இருமுறை பெய்யப்பட்டது. மாண்புப் பொருளுடையவளே இல்லவளாவாள் என்பதை விளங்கச் செய்யவே இவ்விதம் சொல் பெய்தார். முன்னைய 'இல்லவள்' என்னுஞ்சொல் மாண்புப் பொருளுடையது. பின்னையது வெறுஞ் சொல் வழக்குடையது.' என்று ஒரே சொல் ஒரே குறளில் இருமுறை பயன்படுத்தப்பட்ட நோக்கத்தை திரு வி க விளக்குவார்.

மாண்பானால் என்றால் என்ன பொருள்?

மாண்பானால் என்பது மாண்பு+ஆனால் என்று விரிந்து 'மாண்பு உளதானால்' என்ற பொருள் கொடுக்கும்.
மாண்பு என்பது பண்புப் பெயர். இங்கு மாண்பு என்னும் குணத்தை உடையவளாகிய மனைவியை உணர்த்திற்று.
இப்பண்பு இயற்கையாக அமையவும் கூடும். ஆனால் பொதுவாக இது கல்வி, அனுபவம், சுற்றுச்சூழல் இவற்றைப் பொறுத்து செயற்கையில் அடையப்பெறுவது. 'மாண்பு ஆனால்' என்று ஆக்கம் கொடுத்துச் சொல்லப்பட்டதால் இங்கு அது சிறப்புப் பண்பாக விளங்குவது என்று கொள்வர்.
"'இல்லாள்' மாண்பானால் என இல்லாளைப் பண்பாகச் சொல்லப்பட்டுள்ளது. மாண்பினாள் எனப் பண்பியாகக் கூறவேண்டும். அங்ஙனம் கூறாமையின் மாண்பு என்னும் குணத்தின் பெயர் குணியின் அதாவது குணத்தையுடைய பொருளின் மேல் நின்றது. இன்னொரு வகையில், இதற்கு 'இல்லவள் மாண்பின் உருவமாக ஆனால்' எனப் பொருள் காணலாம். குணத்தையே உருவகமாகக் கொள்ளும் பொருள் சிறந்தது" என்று விளக்கி மாண்பே உருவமாக உள்ள இல்லாள் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது என்பார் இரா சாரங்கபாணி.
'ஆனால்' என்ற சொல்வடிவம் குறள் காலத்திற்கு முன் இல்லை என்று அறிஞர்கள் கூறுவர். வள்ளுவர் அறிமுகப்படுத்திய இச்சொல் இன்று வழக்கத்தில் உள்ள 'ஆயினால்' என்ற பொருள் தரும்.

இல்லாள் மாண்பு உடையவளாயிருந்தால் இல்லறத்தில் இல்லாதாது என்று ஒன்றுமில்லை; இல்லாள் பெருமைக் குணங்கள் அற்றவளாய் இருந்தால், இல்லத்தில் உள்ளது ஒன்றுமில்லை என்பது இக்குறட்கருத்து.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard