Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: அனாத்ம கோட்பாடு


Guru

Status: Offline
Posts: 7474
Date:
அனாத்ம கோட்பாடு
Permalink  
 


வல்பொல சிறி இராகுலர்   Venerable Walpola Rahula

 

புத்த பகவான் அருளிய போதனை
What The Buddha Taught

 

தமிழாக்கம் Tamil Translation

நவாலியூர் சோ. நடராசன்
Navaliyur Somasundaram Nadarasa



* * *

VI ஆம் அத்தியாயம்
அனாத்ம கோட்பாடு
அனத்த
The Doctrine of No-Soul: Anatta

    வட மொழியில் ஆத்மன் என்று கூறப்படும் ஆன்மா என்பது மனிதனகத்துள்ள நித்தியமான அழிவற்ற சார்பில்லாத தனிப்பொருள்; மாற்றத்துக்குட்பட்ட இந்த உலகின் பின்னால் மாறாதிருக்கும் ஒரு பொருள் எனப் பொதுவாகக் கருதப்படுகிறது. ஒவ்வொரு மனிதனிடத்தும் தனிப்பட்டதொரு ஆன்மா உண்டென்றும், அது கடவுளால் சிருட்டிக்கப்பட்டதென்றும், அது மரணத்தின் பின்னர் அதன் சிருட்டி கர்த்தாவின் கடைசி நாள் தீர்ப்பின்படி நரகத்துக்கோ சுவர்க்கத்துக்கோ செல்லுமென்றும் சில சமயத்தவர் கூறுவர். வேறு சிலர் அது பல பிறவிகளை எடுத்து முற்றாய்த் தூய்மையடைந்த பின்னர் ஈற்றில் எந்தப் பிரமத்திலிருந்து அது தோன்றிற்றோ அந்தப் பரமாத்மனோடு கலந்துவிடும். மனிதனிடத்தில் எண்ணங்களை எண்ணுவதும், வேதனைகளை உணர்வதும், நல்வினை தீவினைக்கேற்ற பிரதிபலன்களைப் பெறுவதும்  இந்த ஆன்மாவே என்பர். இத்தகைய கோட்பாடே ஆன்மா எனப்படும்.

    இத்தகைய ஆன்மா என ஒன்றில்லை என்று மறுப்பதில் பௌத்தம் மனித சிந்தனை வரலாற்றிலேயே ஒப்புயர்வற்ற இடத்தை வகிக்கிறது. இது கற்பனையிற் பிறந்த போலிக் கொள்கை. உண்மையில் ஆன்மா என்ற பொருள் இல்லை. இது 'நான்', 'எனது' என்ற இச்சையுண்டாக்கும் எண்ணங்களை உண்டாக்குகிறது. தன்னலம் வாய்ந்த ஆசைகளையும், வேட்கை, பற்று, துவேஷம், பகைமை, மானம், இறுமாப்பு, அகங்காரம் முதலிய ஆசவங்களையும் உண்டாக்குகிறதெனப் புத்த தர்மம் கூறுகிறது. தனிப்பட்ட பிணக்குகள் தொட்டுத் தேசங்களிடையே யுத்தங்கள் வரை எல்லாவற்றுக்கும் ஆன்மாவே காரணம். சுருங்கக் கூறுவதானால் இந்தப் போலிக் கொள்கையே உலகிலுள்ள தீமைகளெல்லாவற்றுக்கும் காரணம் எனலாம்.

    மனிதனிடத்து உளவியல் சார்பாக ஆழப்பதிந்துள்ள இரு எண்ணங்கள் தற்பாதுகாப்பும், தன்னை அழியாமல் பாதுகாத்துக் கொள்வதுமாகும். தற்பாதுகாப்புக்காக மனிதன் கடவுள் என்ற வஸ்துவை உண்டாக்கினான். குழந்தை தன்னைப் பாதுகாப்பதற்கும், தான் தீதின்றியிருப்பதற்கும் தன் பெற்றோரில் தங்கியிருப்பது போல, மனிதன் கடவுளில் தங்கியிருக்கிறான். தான் அழிவின்றி இருப்பதற்காக ஆத்மா என்ற நித்திய வஸ்துவைக் கற்பனை பண்ணினான். இந்த ஆத்மா அழிவில்லாதது என விதித்துக் கொண்டான். அறியாமை, பலவீனம், பயம், ஆசை என்பனவற்றின் பயனாகத் தனக்கு ஆறுதலுக்காக இவ்விரு பொருள்களும் அவனுக்கு அவசியமாயின. அதனால் அவன் இவற்றைப் பைத்தியக்காரத்தனமாக இறுகப் பற்றிக் கொண்டான். மனிதனுடைய இந்த அறியாமை பலவீனம், பயம், ஆசை என்பவற்றைப் புத்த தர்மம் ஆதரிக்கவிலை. இவற்றை வேரோடு களைந்து மனிதனுக்கு ஞான ஒளி கொடுப்பதே அதன் நோக்கம். கடவுள், ஆன்மா என்பனவெல்லாம் போலிக் கருத்துக்கள். உள்ளீடற்றவை என்கிறது பௌத்தம். கொள்கை அளவில் இவை நன்கு வளர்ச்சியடைந்தவையானாலும் அவை நுட்பமான பரிபாஷையில் போர்க்கப்பட்டுள்ளன. இக்கருத்துக்கள் மனிதனிடத்து ஆழமாகப் பதிந்திருப்பதால் இவை அவனுக்கு இன்றியமையாதனவாகிவிட்டன. அதனால் அவற்றுக்கெதிரான போதனைகளைக் கேட்கவோ புரிந்து கொள்ளவோ அவன் விரும்புவதில்லை.

    பகவான் இதனை நன்கு உணர்ந்திருந்தார். தமது போதனை எதிரோட்டமானதென்றும் (படிசோதகாமி)  மனிதனுடைய தன்னல இச்சைகளுக்கு மாறானதென்றும் கூறினார். பகவான் ஞான ஒளி பெற்ற நாலு வாரங்களானதும் போதி மரத்தின் கீழிருந்து கொண்டு தம்முள்  பின்வருமாறு யோசித்தார். 'ஆழமானதும், காட்சிக்கு அரியதும், புரிந்து கொள்ளக் கஷ்டமானதும், அறிஞர்க்கே அறிவதற்கு ஏற்றதுமான இந்த உண்மையை உணர்ந்து கொண்டேன். காமம் வெகுளி முதலியவற்றால் நிறைந்தவரும் அந்தகாரத்தில் மூழ்கியிருப்பவரும் இதனை அறிந்து கொள்ளமாட்டார். இது எதிரோட்டமான, உயர்ந்த, ஆழமான, நுண்ணிய, புரிந்து கொள்ளக் கஷ்டமான கருத்துக்களை உடையது.'

    இவ்வாறு எண்ணிய புத்தர் தான் கண்ட உண்மையை உலகுக்கு எடுத்தியம்புவது பயனுடையதா எனச் சற்றே தயங்கினார். பின்னர் இந்த உலகம் தாமரைக் குளம் போன்றதெனக் கருதினார். தாமரைக் குளத்திலே சில பூக்கள் மொட்டாகத் தண்ணீரில் மறைந்திருக்கும். சில பூக்கள் நீர் மட்டத்துக்கு உயர்ந்திருக்கும். சில நீருக்கு மேலே நீரில் தொடாமல் நிற்கும். அவ்வாறே மக்களும் பலவேறு அறிவு நிலையில் வளர்ச்சிப் படியில் இருக்கிறார்கள். சிலராவது இத்தர்மத்தைப் புரிந்து கொள்வார்களென எண்ணி அதைப் போதிக்கத் தீர்மானித்தார்.

    அனாத்மவாதம் (அனத்த) பஞ்சக்கந்தங்களிலிருந்து பெறப்படுவது. பெறப்பட்ட முடிவிலிருந்து துணை முடிவாகப் பெறப்படுவது. படிச்ச சமுப்பாதத்துக்கும் துணை முடிவாயுள்ளது. (படிச்ச சமுப்பாதம் காரண காரியத்தொடர்பு [1]) இதை ஏதுத்தோற்றம் அல்லது ஏதுத்தொடர்பு எனலாம்.
முதலாவது உயர்வாய்மையைப் பற்றி அதாவது துக்கத்தைப் பற்றி ஆராய்ந்த போது பஞ்சக்கந்தமே சீவன் எனக் கண்டோம். தனிப்பட்ட ஒருவன் இப்பஞ்சக்கந்தங்களின் சேர்க்கையே. இப்பஞ்சக்கந்தங்களை ஆராய்ந்தால், அவற்றின் ஊடே 'நான்' எனக் கொள்ளக்கூடிய, மாறுபாடற்ற நித்தியமாய் நிற்கும், ஆன்மா என்ற ஒரு பொருள் இல்லை என்பதையும் கண்டோம். இவ்வாறு ஆராயும் முறையே பிரித்து ஆராய்தல் (விபஜ்ஜ வாதம்) எனப்படும். இவ்வாராய்ச்சியால் பெறும் முடிபைப் படிச்ச சமுப்பாதம் என்ற தொகுப்பு முறையினாலும் பொருள் ஒன்றுமில்லை என்பதைக் காணலாம். எல்லாம் சார்புடையவை. உபாதிக்குட்பட்டவை, பரஸ்பரம் தங்கியிருப்பவை. பௌத்தம் கூறும் சார்புக் கொள்கை இதுவே.
அனத்த என்ற அன்மா இல்லை என்னும் கொள்கையை முற்றாக ஆராயுமுன் படிச்ச சமுப்பாதம் பற்றி அறிந்து கொள்வது பயனுடையது.. இக்கோட்பாட்டின் தத்துவம் நான்கு வரியைக் கொண்டவாய்பாட்டில் உண்டு.

இது இருந்தால் அது இருக்கிறது.
    (இமஸ்மிம் சதி இதம் ஹோதி):
இது உண்டானால் அது உண்டாகிறது.
    (இமஸ்ஸுப்பாதா இதம் உப்பஜ்ஜதி)
இது இல்லையானல் அது இல்லை.
    (இமஸ்மிம் அசதி இதம் நஹோதி)
இது ஒழிய அது ஒழிகிறது.
    (இமஸ்ஸ நிரோதா இதம் நிருஜ்ஜதி) [2].


    இந்தச் சார்பு முறையில், ஒன்றிலொன்று தங்கியிருக்கும் முறையில், சம்சாரத் தொடரும் அதன் மறைவும் விளக்கப்படுகிறது. இது விபரமான வாய்ப்பாடுடையது. இதற்குப் பெயர் படச்ச சமுப்பாத. இது 12 நிதானங்களையுடையது.  (நிதானம் என்பது காரணம் அல்லது ஏது).

(1) அவித்தையிலிருந்து சங்கற்பங்கள் உண்டாகின்றன
(அவிச்சா பச்சயா சங்காரா)
(2) சங்கற்பங்களிலிருந்து விஞ்ஞானம் உண்டாகிறது
(சங்காரப்பச்சயா விஞ்ஞானம்)
(3) விஞ்ஞானத்திலிருந்து நாமரூபங்களுண்டாகின்றன.
(விஞ்ஞான பச்சயா நாமரூபம்)
(4) நாம ரூபங்களிலிருந்து ஆறுபுலன்களுண்டாகின்றன
(நாமரூப பச்சயா சளாயதனம்)
(5) ஆறுபுலன்களிலிருந்து பரிசம் உண்டாகிறது 
(சளாயதன பச்சயா பஸ்ஸோ)
(6) பரிசத்திலிருந்து வேதனை உண்டாகிறது
(பஸ்ஸ பச்சயா வேதனா)
(7) வேதனையிலிருந்து வேட்கை (அவா [3]) உண்டாகிறது
(வேதனா பச்சயா தண்ஹா)
(8) வேட்கையிலிருந்து பற்று உண்டாகிறது
(தண்ஹா பச்சயா உபாதானம்)
(9) பற்றினால் பவம் உண்டாகிறது
(உபாதான பச்சயா பவ)
(10) பவத்தினால் பிறப்பு உண்டாகிறது (பவம் என்பது உண்டாகும் தன்மை)
(பவ பச்சயா ஜாதி)
(11) பிறப்பிலிருந்து  (12) மூப்பு, பிணி, சாக்காடு, அவலக்கவலைக்கையாறு உண்டாகிறது.
(ஜாதி பச்சயா ஜராமரணம்)

    வாழ்வு தோன்றி நிலைத்து மறைகிறது. இந்தத் தொடரைப் பின்னோக்கிப் பார்த்தால், அவித்தை ஒழிந்தால் சங்கற்பங்கள் ஒழிகின்றன. சங்கற்பங்கள் ஒழிந்தால் விஞ்ஞானம் ஒழிகிறது ...பிறவி ஒழிந்தால் மூப்புப் பிணி சாக்காடு அவலக்கவலை முதலியன ஒழியும்.

    இந்த நிதானங்கள் ஒவ்வொன்றும் உபாதிக்கப் பட்டனவாகவும் (படிச்ச சமுப்பன்ன) எதிர்வருவதை உபாதிப்பனவுமாயிருக்கின்றன (படிச்சசமுப்பாத). அதனால் இவையெல்லாம் சார்புடையவை. பரஸ்பரத் தொடர்புடையவை. ஒன்றிலொன்று தங்கியிருப்பவை. எவை யேனும் சார்பற்றனவாகவும் தனிப் பட்டனவாகவுமில்லை. அதனால் மூலகாரணம் என ஒன்றை பௌத்தம் ஏற்றுக் கொள்வதில்லை. இந்தத் தொடர்பு சங்கிலித் தொடர்பன்று. வட்ட வடிவம் [4].

    ஊழ் கட்டுப்பாடற்ற தன் துணிபாற்றல் (அதாவது விதி, தலை விதி என்பதை ஒப்புக் கொள்ளாத தானே துணிந்து செய்யும் ஆற்றல்) என்ற கோட்பாடு மேனாட்டுத் தத்துவதரிசனங்களில் முக்கியமான இடம் வகிக்கிறது. படிச்ச சமுப்பாதக் கோட்பாட்டின்படி பௌத்தத்தில் இதற்கு இடமில்லை. வாழ்வு முழுவதும் சார்புள்ளதாயும், உபாதிக்குட்பட்டதாயும், பரஸ்பரம் தங்கியுள்ளதாயுமிருக்கும் போது சங்கற்பம் மாத்திரம் எவ்வாறு தனித்து நிற்க முடியும். சங்கற்பம் என்பது பஞ்சக்கந்தங்களில் சங்காரக் கந்தம். அது ஏனைய எண்ணங்களைப் போலவே சார்புள்ளது (படிச்சமுப்பன்ன). வேறொன்றின் ஆதாரமுடையது. இவ்வுலகிலே சுதந்திரம் என்று கூறப்படுவனவெல்லாம் சார்பற்ற சுதந்தரமன்று. அதுவும் உபாதிக்குட்பட்டுச் சார்புடையதாகவேயிருக்கிறது. உபாதிக்குட்பட்ட சார்புள்ள 'சுதந்திர சங்கற்பம்' ஒன்று உண்டெனலாம். ஆனால் அது தனிப்பொருளன்று. முற்றாகச் சார்பின்றியிருக்கும் சுதந்திரம் உலகிலே இல்லை. சட சம்பந்தமாகவோ, மனம் சம்பந்தமாகவோ சார்பற்ற ஒரு சுதந்திர பொருள் இல்லை. எல்லாம் உபாதிக்குட்பட்ட சார்புப்பொருள்களே. சுதந்திரமான சங்கற்பம் நிருபாதியானது. காரணகாரியத் தொடர்பற்றது என்போமானால் அப்படி ஒரு பொருள் இல்லை. சார்பின்றி சங்கற்பமோ வேறு எப்பொருளுமோ எவ்வாறு உண்டாகும்? வாழ்வு முழுவதும், சீவராசிகளெல்லாம் காரண காரியத் தொடர்புடையனவாய், சார்புள்ளனவாயிருக்கின்றன. தடையற்ற சங்கற்பம் என்ற கருத்து கடவுள், ஆன்மா, நீதி, தண்டனை வெகுமானம் என்பவற்றோடு மூலாதாரமாகச் சம்பந்தப்பட்டிருக்கிறது. சுதந்திர சங்கற்பம் சுதந்திரமற்றது. சுதந்திர சங்கற்பமென்ற கோட்பாடே உபாதிகட்குட்பட்டது.

    படிச்ச சமுப்பாதக் கோட்பாட்டின்படியும் பஞ்சக்கந்த ஆராய்ச்சியின்படியும் மனிதனகத்தோ, புறத்தோ நித்தியமான அழிவற்ற பொருள் கிடையாது. 'நான்' ஆத்மா, உயிர், அகம்பிரத்யய என்பனவெல்லாம் கற்பனையிலுள்ள போலி நம்பிக்கை. அனத்த என்ற பௌத்தக் கோட்பாடு இதுவே.

    உண்மை இரண்டு வடிவில் உண்டு. ஒன்று விவகார உண்மை. மற்றது பரமார்த்த உண்மை. உண்மை சம்முதி சச்ச (வடமொழியில் சம்விருதி சத்யம்) எனவும் பரமசத்தியம் பரமத்த சச்ச (வடமொழி பரமார்த்த சத்யம்) எனவும் பேசப்படும்.  தினசரிப் பேச்சிலே 'நான்', 'நீ', 'உயிர்', 'புட்கலன்' (தனிபட்டவன்) முதலிய பதங்களை உபயோகிக்கும் போது நாங்கள் இல்லாததைச் சொல்லவில்லை. உலக விவகாரம் பற்றிய சம்பிரதாயப்படி பேசுகிறோம். உண்மையில் இவ்வழக்கு ஆன்மாவையோ உயிரையோ குறிப்பதில்லை. இது லௌகீக சம்பிரதாயம். பரமார்த்தத்தில் நான் என்றும் ஆன்மாவென்றும் உண்மையில் ஒரு பொருள் இல்லை. மஹாயான சூத்திராலங்காரத்திலே பிரக்ஞப்தி மாத்திரையாகவே புட்கலன் இருப்பதாகக் கொள்கிறோம். இது விவகாரார்த்தம். பரமார்த்தத்தில் அப்படி ஒரு (திரவியம்) பொருள் இல்லை.

    அழிவற்ற ஆத்மா என்பதொன்றில்லை என்பது மகாயானத்துக்கும், ஹீனயானத்துக்கும் ஒப்ப முடிந்த கோட்பாடாகும். பௌத்த சம்பிரதாயமும் அதுவே. புத்தருடைய மூலப் போதனையிலிருந்து பௌத்த சம்பிரதாயம் விலகிவிட்டதென்று கூறுவதற்கு நியாயமில்லை.
    புத்த சமயத்தில் போக்குக்கு முற்றும் மாறாக சில ஆராய்ச்சியாளர்கள் ஆன்மா என்ற கொள்கையை புத்தர் போதனையுள் களவாகப் புகுத்தச் சமீபகாலத்தில் வீண் முயற்சி செய்தமை நூதனமாக இருக்கிறது. இவ்வாராய்ச்சியாளர் புத்த பகவானையும் அவர் போதித்த தர்மத்தையும் போற்றி  மதித்துப் பாராட்டுகின்றனர். புத்த தர்மத்தைப் பெரிதும் மதிப்பவர் புத்த பெருமான் தெளிவும் ஆழமுமுடைய சிந்ததணையாளர் என்பதை அவர் ஒப்புக் கொள்ளுகின்றனர். அப்படிபட்டவர் தமக்குப் பெரிதும் தேவைப்படும் ஆத்மா இல்லையெனக் கூறுவாரா என்பதை அவர்களால் கற்பனை செய்து கொள்ளக் கூட முடியவில்லை. தாம் நித்தியப் பொருளாயிருக்க வேண்டுமென்ற இந்தத் தேவைக்குத் தம்மையறியாமலே கீழான தனிப்பட்ட ஒரு சீவாத்மனை அவர்கள் தேடவில்லை. பரமாத்மனையே அவர்கள் தேடினர்.

    பரமாத்மனில் நாம் நம்புகிறோம் என்று நேரடியாகச் சொல்வது சிறந்தது. ஆத்மா இல்லையென்று புத்தர் சொன்னது முற்றும் தவறு என்று கூறிவிடலாம். ஆனால் புத்தர் ஒப்புக்கொள்ளாத ஆன்மக் கோட்பாட்டைப் பௌதத்தில் புகுத்த முயல்வது பொருந்தாது. மூலப் பிடகங்களில் ஆன்மா உண்டு என்று கூறப்பட்டதாக நாம் அறியவில்லை.

    இறைவன், ஆன்மா என்பவற்றில் நம்பிக்கையுள்ள சமயங்கள் இவ்விரு கோட்பாடுகளையும் மறப்பதில்லை. அவை அடிக்கடி திருப்பித் திருப்பி வாயார வெளிப்படையாய்க் கூறுகின்றன. சகல மதங்களும் போற்றும் இவ்விரு கோட்பாடுகளும் புத்தருக்குச் சம்மதமானவையாயிருந்தால் அதை வெளிப்படையாக அவர் விளம்பரப்படுத்தியிருப்பார். வேறு விஷயங்களைப் பற்றி அவர் பேசவில்லையா? இவற்றைத் தாம் இறந்து இருபத்தைந்து நூற்றாண்டுகட்குப் பின்னர் மக்கள் கண்டறியட்டுமென மறைத்து வைத்திருக்கமாட்டார்.

    ஆன்மா என ஒன்றில்லையென்று புத்தர் போதித்தபடியால் தம்மிடம் நிலவுதாக மக்கள் கற்பனை செய்து கொண்டிருக்கும் ஆன்மா அழிந்துவிடப் போகிறதென அவர்கள் அஞ்சினர். புத்தர் இதை அறிந்திருந்தார்.

    பிக்கு ஒருவர் பகவானை ஒருமுறை கேட்டார். 'தன்னுள்ளே நித்தியமான தொரு பொருளைக் காணாவிட்டால் அதற்காக ஒருவன் துன்பமடைந்த சந்தர்ப்பம் உண்டா, பிரபோ?'

    'ஆம், பிக்குவே, அத்தகைய சந்தர்ப்பம் உண்டு. மனிதன் ஒருவன் 'விஸ்வமே அந்த ஆத்மா, நான் இறந்த பின்னர் மாற்றமில்லாத நித்தியமான நிலையுள்ள, சாஸ்வதமான அந்தப் பொருளாவேன். அவ்வாறு நான் என்றும் நிலைத்திருப்பேன்' என்ற கொள்கையுடையவனாயிருந்தான். பின்னர் ததாகதரோ அவருடைய அடியார்களோ கற்பனை வாதங்களை முற்றாக நிர்மூலமாக்கும் முறையில் தர்மத்தைப் போதிக்கிறார்கள். வேட்கை ஒழிய வேண்டுமெனவும் பற்றற்ற நிலை உண்டாக வேண்டுமெனவும் வேட்கை ஒழிந்து நிர்வாணமடைய வேண்டுமெனவும் போதிக்கின்றனர். அதைப் கேட்ட அவன் 'நான் இல்லாமற் போய்விட்டேன், அழிந்து போவேன், மறைந்திவிடுவேன்' என்று எண்ணுகிறான். எனவே அவன் பிரலாபிக்கிறான், கவலைப் படுகிறான், துன்பமடைகிறான் மார்பிலடித்துக் கொண்டு அழுகிறான். அவனுக்கு மனக் குழப்ப முண்டாகிறது. இவ்வாறு ஓ பிக்குவே, நித்தியமானதொரு வஸ்து தன்னுள் இல்லையெனக் கண்டு துன்பப்பட்ட சந்தர்ப்பம் உண்டு.' வேறோரிடத்தில் பகவான் கூறுகிறார். ' ஓ பிக்குகளே, நான் இல்லாமற்போவேன், என்னுடையதென ஒன்று இலாமற் போகும் என்ற எண்ணம் அறிவில்லாத போது மக்களுக்கு அச்சத்தைக் கொடுக்கக் கூடியது.'

    பௌத்தத்தில் ஆன்மா உண்டெனக்காண முற்படுவோர் பின்வருமாறு வாதிப்பர்:  புட்கலனை, ரூபம், வேதனை, குறிப்பு, சங்கற்பம், விஞ்ஞானம் என்ற பஞ்சக்கந்தங்களாகப் புத்தர் பிரித்து ஆராய்ந்து இவை ஆன்மா அன்று என்று மாத்திரம் கூறுகிறார். ஆனால் மனிதனிடத்தோ வேறிடத்திலோ ஆன்மா இல்லையென்று கூறவில்லை. இந்தப் பஞ்சக்கந்தங்களில் இல்லை  யென்று மாத்திரமே கூறுகிறார். இந்த வாதம் இரண்டு காரணங்களுக்காக ஏற்றுக் கொள்ளப்படத்தக்கதன்று.

    ஒன்று, ஓர் உயிர் பஞ்சக்கந்தங்கள் மாத்திரமே. அதில் வேறு ஒன்றும் இல்லை என்பது இப்பஞ்சக்கந்தங்களுக்குப் புறம்பாக ஏதும் உண்டென்று அவர் யாண்டும் கூறவில்லை. இரண்டாவது காரணம் மனிதனகத்தோ, புறத்தோ, விசுவத்தில் வேறெந்த இடத்திலோ ஆத்மா என்ற வஸ்து இல்லையெனத் திட்டமாகப் பல இடங்களில் சந்தேகமின்றிக் கூறியிருக்கிறார். சில உதாரணங்களை ஆராய்வோம். தம்மபதத்திலே புத்தருடைய போதனைக்கு மிக அத்தியாவசியமான மூன்று பாசுரங்களுண்டு. அவை இருபதாம் அத்தியாயத்தில் காணும் 5ம், 6ம், 7ம் பாசுரங்களாகும். இவை 277, 278, 279 ஆம் பாசுரங்களெனவும் கொள்ளலாம். முதலிரண்டு பாசுரங்களும் காரணத்தில் தோன்றியவை எல்லாம் அநித்தியாமானவை (சப்பே சங்காரா அநிச்சா) , காரணத்தில் தோன்றியவையெல்லாம் துக்கமயமானவை (சப்பே சங்காரா துக்கா) என்கின்றன. மூன்றாவது பாசுரம் தம்மங்கள் எல்லாம் தான் அற்றவை (சப்பே தம்மா அனத்தா [5]). இங்கே முதல் இருபாசுரங்களில் காரணத்திலிருந்து தோன்றியவை எனப்பொருள் படும் சங்காரா என்ற சொல் உபயோகிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது பாசுரத்தில் சங்காரா வருமிடத்தில் தம்ம உபயோகிக்கிப்பட்டுள்ளது. இங்கேயும் சங்காரா என்ற சொல் ஏன் உபயோகிக்கப் படவில்லை? தம்ம என்ற சொல் எதற்காக உபயோகிக்கப்பட்டுள்ளது. இங்கே தான் தீர்வுத் திருப்பத்துக்குரிய காரணமுண்டு.

    சங்காரா [6] என்ற சொல் பஞ்சக்கந்தம் காரணத்திலிருந்து தோன்றிய பரஸ்பரம் தங்கியுள்ள, சார்புப் பொருளையும் சம்பந்தப்பட்ட உடல் மன நிலையையும் குறிக்கும். மூன்றாவது பாசுரம் (காரணத்திலிருந்து தோன்றியவை) எல்லாம் அனத்த என்று சொல்லியிருந்தால்,  காரணத்திலிருந்து தோன்றாதவற்றில் ஆன்மா உண்டெனவும், பஞ்சக் கந்தங்களுக்கு வெளியே ஆன்மா  உண்டெனவும் யூகிக்க இடமளிக்கும். இந்த மயக்கத்தைத் தீர்க்கவே மூன்றாவது பாசுரத்தில் தம்ம என்ற சொல் உபயோகிக்கப்பட்டது.

   



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

 தம்மா என்ற சொல் சங்காரா என்ற சொல்லைவிட விரிவான பொருள் உடையது. பௌத்தபரிபாஷையில் தம்ம என்ற சொல்லைப் போல விரிந்த பொருளுடைய சொல் வேறில்லை. இது உபாதிக்குட்பட்ட காரணத்திலிருந்து தோன்றிய பொருள்களையும் நிலைகளையும், உபாதியற்ற பரம்பொருளான நிர்வாணத்தையும் குறிக்கும். இந்த விஸ்வத்திலும் அதற்கு வெளியிலும் இச்சொல்லில் அடங்காதது ஒன்றுமில்லை. நல்லதும் கெட்டதும், காரணத்துக்குட்பட்டதும் அப்பாற்பட்டதும், சார்புள்ளதும் சார்பற்றதும் எல்லாம் இதில் அடங்கியதே. எனவே இக்கூற்றின் படி எல்லா தர்மங்களும் அனாத்மா என்பது தெளிவாகிறது. பஞ்சகந்தங்களில் மாத்திரமன்றி அவற்றுக்குப் புறம்பானவற்றிலும் ஆத்மா என்பதில்லை. [7]

    தேரவாதக் கோட்பாட்டின்படி புட்கலனிடத்தோ (ஆளிடத்தோ) தம்மத்திலோ ஆத்மா என்பதில்லை. மகாயான பௌத்தமும் இதே கொள்கையையேயுடையது. எவ்வித வித்தியாசமுமில்லை. அது தர்ம நைராத்மியம் தர்மம் ஆத்மாவற்றது புட்கல நைராத்மியம், புட்கலன் ஆன்மா அற்றவன் என்று வலியுறுத்துகிறது.

    மஜ்ஜிமநிகாயம் அலகத்தூபம சூத்திரத்தில், புத்தர் தமது சீடர்களை விழித்து: 'ஆன்மா உண்டென்ற அத்தவாதத்தை ஏற்கிறீர்களா? அப்படியானால் அவலக்கவலைக் கையாறு உண்டாக மாட்டாதா? பிக்குகளே இத்தகைய அத்த (ஆத்ம) வாதத்தில் துக்கம், விலாபம், துயர், கவலை, கையாறு ஏற்படமாட்டாவா?'     

    'நிச்சயமாக ஏற்படும் பிரபோ'

    'நல்லது ஓ பிக்குகளே, துக்கம், அவலம், கவலை, கையாறு உடையதே இந்த ஆத்மவாதம் என நானும் எண்ணுகிறேன்.' புத்தர் ஆத்மவாதத்தை ஏற்றிருப்பாரானால் அதை அவர் நிச்சயமாக இங்கே விளக்கியிருப்பார்.  ஏனெனில் துக்கம் உண்டாக்காத ஆத்மவாதத்தையே ஏற்றுக் கொள்ளுமாறு அவர் குறிப்பிட்டார். ஆனால் புத்தரின் கொள்கையின்படிஅத்தகைய துக்கத்தை உண்டாக்காத ஆத்ம வாதம் இல்லை. எவ்வளவு நுட்ப மானதும் மேதகு சிறப்புவாய்ந்ததுமான ஆத்மவாதமானாலும் அது போலியாகவும் கற்பனையிலுள்ளதாகவும், துயரம், அவலம், கவலை, கையாறுகளை உண்டாக்கும் பிரச்சினைகள் நிரம்பியதாகவுமேயிருக்கும்.

    இதே சூத்திரத்தில் இந்தத் தருமோபதேசத்தைத் தொடர்ந்து மேலும் புத்தர் கூறினார்:

    'ஆன்மாவையோ, ஆன்மா சம்பந்தப்பட்ட ஒன்றையோ யதார்த்தமாக உண்மையிற் கண்டு கொள்ள முடியாவிட்டால் "இந்த விசுவமே ஆத்மா, நிலையானதும் நித்தியமானதும், மாறுபாடற்றதும் சாஸ்வதமானதுமான அந்த ஆத்மாவாக மரணத்தின் பின்னர் நான் மாறிவிடுவேன், அவ்வாறு நான் நிரந்தமாக நிலைத் திருப்பேன்" என்ற கற்பனைக் கோட்பாடு முற்றாக முழுவதும் முட்டாள்தனமான தல்லவா?'

    ஆன்மா என்ற ஒரு பொருளை உண்மையில் யாண்டும் காணக் கிடையாது. அவ்வாறு ஒரு பொருளை உண்டென நம்புவது முட்டாள் தனமென புத்தர் தெளிவாக இங்கே கூறியிருக்கிறார்.

    புத்தர் போதனையில் ஆத்மாவைப் பற்றிக் கூறப்பட்டுள்ளதென அபிப்பிராயப்படுவோர் சில உதாரணங்களை எடுத்துக் காட்டி அவற்றைத் தவறாக மொழி பெயர்த்துத் தவறாகவிளக்குவர். அவற்றில் ஒன்று 'தம்ம பதத்தில்' 160 ம் பாசுரமாயுள்ள 'அத்தாஹி அத்தனோ நாதோ' என்பது. (இது 12 ஆம் அத்தியாயத்தில் நாலாம் பாசுரம்) இது 'சீவாத்மனுக்குத் தலைவன் பரமாத்மன்' என மொழி பெயர்க்கப்பட்டு சிறிய ஆத்மனுக்கு நாயகன் பெரிய ஆத்மன் என விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. [8]

    முதலில் இந்த மொழி பெயர்ப்புத் தவறு என்பதை அறிந்து கொள்ள வேண்டும். இங்கே 'அத்த' என்ற சொல் ஆத்மாவைக் குறிக்கவில்லை. பாளியில் அத்தா என்ற சொல் தற்சுட்டான மறு பெயர். அல்லது வரையறை செய்யா மறுபெயர். சில இடங்களில் மாத்திரம் நாம் முன் சுட்டிக் காட்டிய வாறு விசேடமாக, ஆத்மாவைக் குறிக்கும். ஆனால் பொதுப்படையாக தம்மபதம் 12 அத்தியாயத்திலே இந்த வரியிலும் வேறு பல இடங்களிலும் அது தற்சுட்டான மறு பெயராகவோ, வரையறை செய்யா மறு பெயராகவோ உபயோகிக்கப்படுகிறது. இதன் பொருள் நானாகவே, நீயாகவே அவனாகவே, தானாகவே முதலியனவாகும் [9]. அடுத்ததாக 'நாதோ', என்ற சொல் தலைவன் எனப் பொருள்படாது, சரணம், ஆதாரம், துணை, பாதுகாப்பு எனவே பொருள்படும் [10].

    ஆனபடியால் 'அத்தாஹி அத்தனோ நாதோ' என்றால் 'தாமே தமக்குச் சரண்' தாமே தமக்கு ஆதாரம்', 'தாமே தமக்குத் துணை' எனப் பொருள்படும். அத்த என்பதற்கு அத்யாத்மிக விளக்கமான ஆத்மா எனப்பொருள் கூறுவது பொருத்தமில்லை, நீ உன்னிலேயே தங்கியிருக்க வேண்டுமேயன்றி மற்றவர்களில் தங்கியிருக்கக் கூடாது என்பதே நேரடியான செம்பொருள்.

    புத்தருடைய போதனைகளூடே ஆத்மா எனற கருத்தைப் புகுத்த முயலும் முயற்சிக்கு மற்றொரு உதாரணம் 'அத்த தீபாவிஹாத, அத்தசரணா அனஞ்ஞசரணா' என்ற பிரசித்தமான கூற்று. இது மஹா பரிநிப்பாண சூத்திரத்திலுண்டு. இதனைச் சந்தர்ப்பத்தை நோக்காது பிரித்தெடுத்து மொழிபெயர்த்துள்ளனர். இச்சொற்றொடர் ,'உன்னையே உனக்கு ஆதாரமாகக் (தீவாக) கொண்டு வாழ், உன்னையே உனக்குச் சரணாக்கு, வேறெவரையும் உனக்குச் சரணாக்காதே'  [11] எனப்பொருள்படும். பௌத்தத்தில் ஆத்மவாதத்தைக் காண விரும்புவோர் 'அத்ததீபா' என்பதற்கு 'ஆன்மாவே தீபமாகவும்' என்றும் 'அத்த சரணா' என்பதற்கு 'ஆன்மாவைச் சரணாகவும்' எனப் பொருள் கொள்வர். [12]

    இது ஆனந்த தேரருக்கு புத்தபகவான் அருளுரை. இது  எந்தச் சந்தர்ப்பத்தில், என்ன பின்னணியில் கூறப்பட்டதென்பதை அறியா விட்டால் இதன் முழுக்கருத்தையும், உட்பொருளையும் அறிய முடியாது.

    பகவான் அப்போது பேலுவ என்ற கிராமத்தில் வசித்து வந்தார். அவர் பரிநிர்வாண மடைவதற்கு மூன்று மாதம்வரை இருந்தது. அப்போது அவருக்கு 80 வயது. மிகக் கொடிய நோயினால் பீடிக்கப்பட்டு மரணத்தறுவாயிலிருந்தார் (மரணாந்திக). ஆனால் தன்னுடைய அணுக்கத் தொண்டர்க்கு அறிவியாமல் இறந்து போவது நன்றல்லவென அவர் நினைத்தார். நிரம்பிய தைரியத்தோடும் மன உறுதியோடும் பிணியினாலுண்டான நோக்காடுகளைத் தாங்கிக் கொண்டு நோயைப் புறங் கண்டு சுகமடைந்தார். ஆனால் அவர் உடல்நிலை தளர்ச்சியடைந்தேயிருந்தது. சுகமானதும் அவர் ஒருநாள் தமது குடீரத்துக்கு வெளியே மர நிழலில் இருந்தார். அவருடைய நெருங்கிய தொண்டனான ஆனந்தர் அவரை அணுகி ஒரு புறத்தேயிருந்து கூறினார், 'பிரபோ, பகவானுடைய உடல் நலத்தைக் கவனித்து வந்தேன், நோயாயிருப்பதைக் கண்டபோது பார்வை கலங்கிற்று. புலன்கள் மயங்கின. ஆனால் சங்கத்தைப் பற்றி அறிவுரைகள் கூறாமல் பகவான் மறிந்து போகமாட்டார் என்ற ஆறுதல் மனத்தில் உண்டானது'.

    அப்போது பெருங் கருணையும் அனுதாபமுங் கொண்டபகவான் தம் அன்புக்குரிய அணுக்கத் தொண்டரை நோக்கி இனிமையான வார்த்தைகளால் கூறினார், 'ஆனந்த, சங்கத்தவர் என்னிடமிருந்து எதை எதிர்பார்க்கின்றனர்? சாதாரணக் கோட்பாடு விசேடக் கோட்பாடு என்ற வித்தியாசமின்றித் தருமத்தைப் போதித்தேன்.  தர்மத்தைப் பொறுத்த வரையில் என்னிடம் மறைபொருள் ஒன்றுமில்லை. மறைவாகக் கையிலே பொத்தி (ஆசார்யமுட்டி) எதையும் வைத்திருக்கவில்லை. எவராவது சங்கத்தைத் தான் நடத்த முடியு மென்று நினைத்தால்,  சங்கம் தன்னில் தங்கியிருக்க வேண்டுமென்று நினைத்தால் அவர் அறிவுரைகளைப் பொறித்து வைக்கட்டும். ததாகதருக்கு அத்தகைய எண்ணமில்லை. அப்போது சங்கம் பற்றி ஏன் அறிவுரைகளை அவர் வழங்க வேண்டும்? எனக்கு வயதாகிவிட்டது, ஆனந்த. எனக்கு இப்போது 80 வயது. உடைந்து போன வண்டியைத் திருத்தியே ஓடவிடவேண்டும். ததாகதருடைய உடலையும் திருத்தஞ் செய்துதான் இயங்கவிட வேண்டும் என எண்ணுகிறேன். ஆனபடி யால் ஆனந்த உன்னையே உனக்குத் தீவாக்கிக் கொண்டு வாழ்வாயாக. நீயே உனக்குச் சரண். வேறு எவரும் சரணில்லை. தர்மத்தையே உனக்கு ஆதாரமாக்கிக் கொள், தீவாக்கிக் கொள்.தர்மமே உனக்குச் சரண். வேறொன்றுஞ் சரணில்லை.' [13]

    புத்தர் ஆனந்தருக்குக் கூறவிரும்பியது தெளிவாயிருக்கிறது. ஆனந்தர் துக்கத்தினால் மனமடிவுற்றிருந்தார். குரு தேவர் இறந்த பின்னர் எல்லாரும் தனித்துத் துணையின்றி சரணின்றி தலைவரின்றி இருக்க நேரிடுமென்று ஆனந்தர் எண்ணினார். அதனால் புத்தர் அவருக்கு ஆறுதலும் தைரியமும் கூறி நம்பிக்கை பெறச் செய்தார். ஒவ்வொருவரும் தங்கள் தங்களில் நம்பியிருக்க வேண்டுமென்றும் தாம் போதித்த தர்மைத்தையே சரணாகக் கொள்ளவேண்டுமென்றும், வேறு எவரையோ, எந்தப் பொருளையோ சரணாகக் கொள்ள வேண்டியதில்லை யென்றும் உற்சாகப்படுத்தினார். இந்த இடத்தில் ஆத்மா பற்றிய விவாகாரத்துக்கோ அத்யாத்ம விசாரணைக்கோ இடமில்லை.

    ஒருவன் தனக்குத் தானே ஆதாரமாகவும், தீவாகவும், சரணாகவும் எவ்வாறு இருப்பது; தர்மத்தை எவ்வாறு தன் தீவாகவும் சரணாகவும் கொள்வான் என்பதை பகவான் ஆனந்தருக்கு விளக்கினார். காயம், வேதனை, மனம் மனவிஷயங்கள் என்பவற்றை விழிப்போடு கவனித்தல் என்னும் சதிபட்டான மென்னும் கடைப்பிடி மூலம் இதனை வளர்க்கலாம் என்பதை (நான்கு சதி பட்டானங்கள் [14]) பகவான் விளக்கினார். இந்த விளக்கத்தில் ஆத்மாவைப் பற்றிய பேச்சு ஏதுமில்லை.

    புத்த தர்மத்தில் ஆத்மனைப்பற்றிய விவகாரம் உண்டெனக் கூறுவோர் அடிக்கடி சுட்டிக் காட்டும் மற்றொரு சந்தர்ப்பம் உண்டு.


    வாராணாசியிலிருந்து ஊருவெலைக்குப் போகும் சமயம் பகவான் ஒரு காட்டிலே ஒரு மரத்தடியில் இருந்தார். அன்று முப்பது ராஜகுமாரர்கள் தம் மனைவியரோடு வினோதகாலப்போக்கை உத்தேசித்து இதே காட்டில் பிரவேசித்தனர். திருமணமாகாத ஒரு ராஜகுமாரன் ஒரு விலைமாதைக் கூட்டி வந்தான். மற்றவர்கள் களியாட்டில் ஈடுபட்டிருக்கும் சமயம் மதிப்புள்ள சில பொருள்களைக் களவாடிக்  கொண்டு அவள் மறைந்துவிட்டாள். அவளைத் தேடிப்போகும் போது புத்தர் மரநிழலில் இருப்பதை அரசகுமாரர் கண்டனர். ஒரு பெண் அந்த வழியாகப் போனதைக் கண்டீர்களா என்று அவர்கள் பகவானைக் கேட்டனர். என்ன சமாச்சாரம் என்று பகவான் விசாரித்தார். அவர்கள் விஷயத்தைச் சொன்னதும் பகவான்:  'வாலிபர்களே ஒரு பெண்ணைத் தேடிப்போவதா உங்களையே தேடுவதா எது சிலாக்கியமானது' என்று கேட்டார். இதுவும் எளிதான இயற்கையாக எழுக்கூடிய கேள்வி. இதில் ஆன்மா சம்பந்தமான நேரடித் தொடர்பில்லாத விவகாரத்தைப் புகுத்த வேண்டிய அவசியமில்லை. தம்மைப் பற்றியே தேடுவது உசிதமான தென அவர்கள் விடை கூறினர். 'உட்காருங்கள்' என்று சொல்லிப் பகவான் தர்மத்தை உபதேசித்தார். மூலபிடகத்திலே இந்த தருமோபதேசத்தில் ஆத்மனைப் பற்றி ஒரு வார்த்தை கூடக் காணப்படவில்லை.

    வச்சகொத்த என்ற பரிவிராஜகன் ஆத்மா என ஒன்று உண்டா என்று புத்தரைக் கேட்டான். புத்தர் பதில் கூறாது மௌனம் சாதித்தார். இதை பற்றி எவ்வளவோ ஆராய்ச்சிகள் எழுதப்பட்டுள்ளன. இதைப்பற்றிய வரலாறு பின்வருமாறு:
    வச்சகொத்த புத்தரை அணுகி கேட்கிறான். 'வணக்கத்துக்குரிய கோதமரே, ஆன்மா என்று ஒன்று உண்டா?'
    புத்தர் மௌனமாயிருந்தார். 'அப்படியானால் வணக்கத்துக்குரிய கோதமரே, ஆன்மா என்பது இல்லையா?' புத்தர் மறுபடியும் மௌனம் சாதித்தார்.
    வச்சகொத்த எழுந்து போகிறான்.
    வச்சகொத்த பரிவிராஜன் போனபின்னர், வச்சகொத்தனுடைய கேள்விக்கு ஏன் பதில் கொடுக்கப்படவில்லை என்று ஆனந்தர் பகவானைக் கேட்கிறார். புத்தர் விளக்கம் கொடுக்கிறார்.
    'ஆனந்த, பரிவிராஜகன் வச்சகொத்தன் 'ஆன்மா உண்டா?' என்று கேட்டதற்கு 'ஆன்மா உண்டு' என பதில் கூறியிருப்பேணானால், நான் சாஸ்வதவாதிகளான (அழியாப்பொருள் உண்டு என்னும்) தாபசர்களும் பிராமணர்களும் அடங்கியவர்களின் கட்சியை ஆதரிப்பவனாவேன் (சஸ்ஸதவாத).
    'ஆனந்த மேலும் பரிவிராஜகன் வச்சகொத்தன் ஆன்மா என்பது இல்லையா' என்று கேட்டதற்கு நான் 'ஆன்மா என்பது இல்லை' எனப் பதில் கூறினால் ஆன்மா உடலோடு அழியும்; என்று சொல்லும் தாபசர் பிராமணர் ஆகியோர் கட்சியை ஆதரிப்பவனாவேன் (உச்சேதவாதம் [15]). 'மேலும் ஆனந்த, "ஆன்மா உண்டா என்று" வச்சகொத்தன் கேட்டதற்கு நான் 'ஆன்மா உண்டு என்று கூறுவேனானால் எல்லா தம்மங்களும் ஆன்மா அற்றவை என்ற என் அறிவுக்குப் பொருத்தமுடையதாயிருக்குமா? [16]'
    'நிச்சயம் பொருத்தமற்றது பிரபோ.'
    'மேலும் ஆனந்த, பரிவிராஜகன் "ஆன்மா இல்லையா" என்று கேட்டபோது நான் "ஆன்மா இல்லை" என்று சொல்லியிருப்பேனானால் ஏற்கனவே குழப்பமடைந் திருந்த  வச்சகொத்தனுக்கு இது மேலும் பெரிய குழப்பத்தைக் கொடுத்திருக்கும் [17]. "முன்னர் எனக்கு ஆன்மா இருந்தது, இப்போது, ஆன்மா இல்லை" என்று எண்ணியிருப்பான்.'
    புத்தர் மௌனம் சாதித்தது ஏன் என்பது இப்போது தெளிவாகிறதென எண்ணுகிறோம். வினாக்களைக் கிளப்புவோரையும் எவ்வாறு மதித்தார், அவற்றின் முழுப் பின்னணி எத்தகையது என்பதை ஆராய்ந்தால், விஷயம் மேலும் தெளிவுபெறும். இப்பிரச்சினையை ஆராய்ந்தோர் இதனைச் சிறிதும் கருத்திற் கொள்ள வில்லை.

    புத்தர் கணக்குப் போடும் இயந்திரமென்று நினைக்கக் கூடாது. அவர் யார் என்ன கேள்வி கேட்டாலும், பிறர்நிலையைக் கருதாது பதில் கூறுபவரல்லர். அவர் காரியபூர்வமான ஓர் ஆசிரியர். நிறைந்த கருணையும், ஞானமும் உடையவர். தன் அறிவையும் விவேகத்தையும் காட்டுவதற்காகப் பதில்களைப் பக்குவப்படுத்தவில்லை. வினாவெழுப்புவர் உண்மையை உணர வேண்டுமென்ற ஆர்வமுடையவர். மக்களின் தகைமை, போக்கு, மன வளர்ச்சி, பண்பு குறித்த ஒரு பிரச்சினையைப் புரிந்து கொள்ளும் திறம் என்பவற்றையெல்லாம் மனத்திற் கொண்டே பேச்சை எடுப்பார் [18].

    ஒரு வினாவுக்கு நாலுவகையாக விடை கூறலாம் என்கிறார் பகவான். (1) சில வினாக்களுக்கு நேரான விடை கூறலாம், (2) வேறு சில வினாக்களை ஆராய்ச்சி செய்வதன் மூலம் விடை பிறக்கும். (3) வேறு சில எதிர் வினாக்கள் மூலம் விடை கூறலாம். (4) கடைசியாக சில வினாக்களுக்கு விடை கூறாமலே விட்டுவிடலாம்.

    விடை கூறாமல் ஒதுக்கிவிடும் முறைகள் பல உண்டு. ஒன்று இவ்வினாவுக்கு விடையில்லையென்று கூறிவிடுதல்.  இந்த உலகம் சாஸ்வதமானதா அல்லவா என்பது போன்ற பல கேள்விகளை வச்சகொத்தன் கேட்டபோது புத்தபகவான் பல முறை இவ்வாறு விடையிறுத்தார்.  இவ்வாறே மாலுங்கிய புத்திரர்க்கும் வேறு பலர்க்கும் விடையிருத்தார்.  ஆனால் ஆத்மா உண்டா இல்லையா என்ற கேள்விக்கு இவ்வாறு புத்தர் விடை கூற முடியவில்லை. இப்பிரச்சினைக்கு அவர் ஏற்கனவே விளக்கமளித்துப் பதில் கூறியுள்ளார். எல்லாத் தர்மங்களும் ஆத்மா இல்லாதவை என்ற அவருடைய கொள்கைக்கு மாறனபடியால், ஆத்மா   உண்டென அவரால் கூறமுடியவில்லை. ஆத்மா இல்லையென அவரால் கூறமுடியவில்லை. ஏனெனில் அது வச்சக்கொத்தனைக் குழப்பமடையச் செய்யும். அவ்வாறு முன்னொரு முறை மனக்குழப்பமடைந்ததாக அவனே ஒப்புக் கொண்டுள்ளான். அனத்த கோட்பாட்டைப் புரியும் பக்குவம் வச்சக்கொத்தனுக்கு இன்னும் உண்டாக வில்லை. எனவே அவனுடைய கேள்விக்கு விடைகூறாதிருப்பதே புத்தியுள்ள செயலாகும்.

    வச்சக்கொத்தன் நெடுங்காலமாக புத்தருக்குப் பழக்கமானவர். இந்தப் பரிவிராஜகன் பகவானைக் காண வந்தது இது தான்  முதல் முறையன்று. பெருங்கருணையும் சாதுரியமுமுள்ள ஆசிரியரான பகவான் இவனுடைய குழம்பிய மனநிலையையும் பக்குவத்தையும் நன்கு மதித்து அதற்கேற்றவாறு போதனை நடத்தினார். பாளி பிடகங்களில் பரிவிராஜகனான  இந்த வச்சகொத்தனைப் பற்றி பல இடங்களில் பேசப்படுகிறது. இவன் அடிக்கடி பகவானையும் அவருடைய சீடர்களையும் கண்டு தன் மனத்தைக் குழப்பிக் கொண்டிருந்த இந்தக் கேள்விகளை மேலும் கேட்டு வந்தான்.

    புத்தருடைய மௌனம் அவருடைய போதனையிலும் நாவன்மைமிக்க உரையாடலிலும் பார்க்கப் பெரிய தாக்குதலை அவன் மனதிலுண்டாக்கிற்று எனத் தெரிகிறது [19]. ஆன்மா என்பது மனம் அல்லது விஞ்ஞானம் எனச் சிலர் கருதுவர். மனம், சித்தம், விஞ்ஞானம் என்பன அடிக்கடி அல்லும் பகலும் உடலைக் காட்டிலும் (காயம்) வேகமாக மாறுவதால், உடலையே ஆத்மாவாக நினைத்துக் கொள்வது நல்லதென்றும், மனம், சித்தம் விஞ்ஞானத்திலும் பார்க்க காயம் தூலமானதால் வசதியென்றும் புத்தர் கூறுகிறார் [20]. 'நான்' என்ற மங்கலானதொரு உணர்ச்சியே ஆன்மா என்ற எண்ணத்தை உண்டாக்குகிறது. ஆனால் உண்மையில் அந்த எண்ணம் கற்பனையே. இந்த உண்மையை அனுபூதியாக்கினால் நிர்வாண சுகம் உண்டாகும். இது இலேசாகக் கைவரக் கூடியதன்று. சம்யுத்த நிகாயத்தில் இதைப்பற்றி விளக்கந்தரக் கூடியதொரு உரையாடல் உண்டு. கேமக என்ற பிக்குவுக்கும் வேறு சில பிக்குகளுக்குமிடையில் இந்த உரையாடல் நிகழ்கிறது.

    இந்த பிக்குகள் கேமகரை 'நீர் இந்தப் பஞ்சக்கந்தங்களிலே ஆன்மாவையோ, ஆன்மா சம்பந்தமான ஒன்றையோ காணுகிறீரா?' என்று கேட்டனர். கேமகர் 'இல்லை' என்று கூறினார். 'அப்படியானால் சகல கிலேசங்களும் நீங்கிய அருகத நிலையை அடைந்தீர்' என்று அவர்கள் கூறுகின்றனர்.  பஞ்சக்கந்தங்களிலே ஆன்மாவையோ அது சம்பந்தமான எதையுமோ தான் காணவில்லை என்று கேமகர் கூறுகிறார். 'நான் களங்கங்களிலிருந்து விடுதலை பெற்ற அருகதனல்லன். நண்பர்களே, உபாதானக் கந்தம் பற்றிக் கூறுமிடத்து 'நான் இருக்கிறேன்' என்ற உணர்ச்சியுண்டு. ஆனால் 'இது நான்; என்பதைத் தெளிவாகக் காணமுடியவில்லை.' பின்னர் கேமகர், 'நான் என்பது உருவமன்று, வேதனையன்று, குறிப்பன்று, சங்கற்பமன்று, விஞ்ஞானமன்று, அவையற்ற ஒன்று மன்று, பஞ்சக்கந்தங்கள் நானே என்ற உணர்ச்சியுண்டாகிறது. ஆனால் 'இதுவே நான்' என்பதை தெளிவாகக் காணமுடியவில்லை' என்று விளக்குகிறார் [21].

    அது பூவின் மணம் போன்றது. இதழின் மணமோ, நிறத்தின் மணமோ, மகரந்தத்தின் மணமோ அல்ல, ஆனால் பூவின் மணமே என்கிறார்.

    நிர்வாண சுகத்தின் ஆரம்பநிலைகளை அடைந்த ஒருவரிடம் கூட 'நான்' என்ற உணர்ச்சியுண்டு. ஆனால் மேல் நிலைக்குப் போகும் போது இந்த உணர்ச்சி மறைந்துவிடுகிறது. புதிதாக வெளுக்கப்பட்ட துணியில் அழுக்கு அகற்றப்பயன்படுத்தப்பட்ட ரசாயன திரவியங்களின் கந்தம், துணியைப் பெட்டியில் வைத்தபின் சிறிது காலத்தில் இல்லாமற்போவது போல, இவ்வுணர்ச்சி மறைந்து விடுகிறதென கேமகர் மேலும் விளக்குகிறார்.

    இந்த விவாதம் அந்த பிக்குகளுக்குப் பெரிதும் பயன்பட்டதெனவும், ஈற்றில் அவர்களெல்லாரும் கேமகரும் ஆசவங்கள் நீங்கி அருகத நிலையடைந்தனர் என்றும், 'நான்' என்ற  உணர்ச்சி அற்றுப் போய்விட்ட தென்றும் சூத்திரத்தின் இறுதியில் கூறப்பட்டுள்ளது.

    புத்தருடைய போதனையின்படி 'என்னில் ஆன்மா இல்லை' யென்று கூறிக்கொள்வது உச்சேதவாதம், அதுவும் தவறு. 'என்னில் ஆன்மா உண்டு' என்று கூறிக் கொள்வதும் (சஸ்ஸதவாதம்) தவறு. இரண்டும் பந்தங்களே. 'நான்' என்ற உணர்ச்சியிலிருந்தே இரண்டும் உண்டாகின்றன. ஆத்மா இல்லை (அனத்த) என்ற கோட்பாடு சம்பந்தமாக ஒருவர் மேற்கொள்ளக் கூடிய சரியான மனோநிலை எந்த விதமான அபிப்பிராயத்தையும் கைக்கொள்ளாதிருப்பதே. மனச்சார்பின்றி உள்ளதை உள்ளபடி புறநோக்காகப் பார்க்கவேண்டும். 'நான்' என்றும், சீவன் என்றும் கூறப்படுவனவெல்லாம் பஞ்சக்கந்தங்களின் சேர்க்கை. இவை நாமரூபங்கள். இவை பரஸ்பரம் ஒன்றிலொன்று தங்கிச் செயற்படுகின்றன. அப்போது கணபங்கமாகின்றன. இந்த மாற்றம் காரணகாரிய விதிக்கடங்கி நடக்கின்றன. நித்தியமான அழியாத மாற்றமில்லாத சாஸ்வதமான வஸ்து இந்தச் சீவராசிகளிடையே எதுவுமில்லை.

    இவ்விடத்தில் ஒரு வினா இயல்பாக உண்டாகும். ஆன்மா என்று ஒன்று இல்லாவிட்டால் கர்மபலனை அனுபவிப்பது யார்? இக்கேள்விக்குப் புத்தரே பொருத்தமான விடையைக் கொடுப்பார். பிக்கு ஒருவர் இக்கேள்வியை எழுப்பியபோது பகவான் 'காரணகாரிய ஏதுக்களைக் கருத்தில் கொள்ள வேண்டுமென்று, ஓ பிக்குகளே, நான் போதித்துள்ளேன். எங்கும் எல்லாப் பொருள்களிலும் இந்த ஏதுவை அறிய வேண்டும்.' என்று சொன்னார்.

    புத்தருடைய அனாத்மக் கோட்பாடு உச்சேத வாதம் எனக் கருதக்கூடாது. அது எதிர்மறைக் கருத்தன்று. நிர்வாணம் என்பது போல அது உண்மை. பரமார்த்தம். பரமார்த்தம் எதிர் மறையாயிருக்க முடியாது. இல்லாத கற்பனை மயமான ஆத்மாவில் கொள்ளும் போலி நம்பிக்கையே எதிர்மறையானது. அனத்தக் கோட்பாடு போலி நம்பிக்கைகள் என்னும் இருளைப் போக்கடிக்கிறது. ஞான ஒளியை உண்டாக்குகிறது. அது எதிர்மறையானதன்று. நைராத்மியம் என்னும் காரணி இருக்கிறது (நைராத்மியாஸ்திதா) என அரசங்கர் சரியாகக் கூறியுள்ளார்.

* * *

 



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 


[1] பின்னால் விளக்கப்படும்
[2] இதை இக்காலத்துக்கேற்ற முறையில் கூறுவதானால்
A இருந்தால் B இருக்கிறது.
A உண்டானால் B உண்டாகிறது.
A இல்லையானல் B இல்லை.
A ஒழிந்தால்  B ஒழியும்.

[3] மொ. ஆ. கு
அவா என்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்
தவாஅப் பிறப்பீனும் வித்து.  (திருக்குறள் - 361)
[4] இம்மிக முக்கியமான கோட்பாட்டை விரிவாக ஆராய இங்கு இடமில்லை. இவ்வாசிரியர் எழுதிவரும் புத்த தத்துவம் என்ற நூலில் ஒப்பியல் முறையில் இது ஆராயப்படும்.
[5] எப். எஸ். வுட்வாட் தம்ம என்பதற்குக் கூட்டமாய்ச் சேர்ந்த நிலைகள் - என்று மொழிப் பெயர்த்திருப்பது முற்றும் தவறு. கூட்டமாய்ச் சேர்ந்த நிலைகள் என்றால் சங்கார என்பதைக் குறிக்குமே யன்றித் தம்மா என்பதைக் குறிக்காது. (The Buddhas Path of Virtue, Adyar Madras, India 1929 பக் 69)
[6] பஞ்சக்கந்தங்களின் பட்டியலில் சங்கார என்ற சொல் சங்கற்பத்தைக் குறிக்கும். மனச்சங்கற்பங்களையும், மனச்சேட்டிதங்களையும் குறிக்கும். இங்கே காரணத்திலிருந்து தோன்றிய பஞ்சக்கந்தம் உட்பட்ட சேர்க்கைகளைக் குறிக்கும். சந்தர்ப்பத்துக்கேற்றபடி இச்சொல்லுக்குப் பொருள் கொள்ளவேண்டும்.
[7] 'சப்பேசங்காரா அநிச்சா', காரணத்திலிருந்து தோன்றியவை எல்லாம் அநித்தியம்.
'சப்பே தம்மா அனத்தா' எல்லா தருமங்களும் அனாத்மா.
[8]  இந்த பந்தியைக் குறித்து எஸ். ராதாகிருஷ்ணன் 'இந்திய தத்துவ ஞானம்' என்ற நூலின் முதற்பகுதியில் 'புத்தர் போலிக் கோட்பாடு எனக் கண்டிப்பது சிறிய ஆத்மாவையே. இச்சிறிய ஆத்மா தொடர்ந்து நிலைத்திருக்க வேண்டுமெனக்கூறும் கோட்பாடே இந்தப் போலிக் கோட்பாடாகும்." இது தவறான அபிப்பிராயம். புத்தர் இங்கே கண்டிப்பது சர்வகமான பரமாத்மனையே. புத்தர் எந்தவிதமான ஆன்மாவையும் சிறிய ஆத்மாவையோ பெரிய ஆத்மாவையோ ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை முன்னர் காட்டிய பந்தியினால் நிதர்சனப்படுத்தினோம். புத்தருடைய கொள்கைப்படி ஆத்மா பற்றிய எல்லாக் கொள்கைகளும் போலியே. கற்பனையே.
[9] "வேதாந்தமும் பௌத்தமும்" என்ற கட்டுரையில் H. Von Glasenapp என்பவர் இதைத் தெளிவாக விளக்குகிறார் (The Middle Way, February 1957)
[10] தம்மபதத்துக்கு எழுதப்பட்ட விளக்க உரையில் 'நாதோ தி பதிட்டா' 'நாத' என்பது ஆதாரம் (சரண், துணை, பாதுகாப்பு) என விளக்கப்பட்டுள்ளது.
தம்மபதம் பழைய சிங்கள உரை ஒன்று 'நாத' என்பதற்கு பொழிப்புரை கூறுமிடத்து 'நாதோ' என்பதற்கு 'பிஹிட்டவன்னேய' ஆதாரமாயிருக்கிறது (சரண், துணை) எனக் கூறுகிறது.
'நாதோ' என்பதன் எதிர்மறைச் சொல்லை ஆராய்ந்தால் இப்பொருள் மேலும் உறுதியாகிறது. 'அநாத' என்றால் தலைவனின்றி, தலைவனற்ற எனப் பொருள் தருவதில்லை. அது துணையற்ற, ஆதாரமற்ற, பாதுகாப்பற்ற, வறிய என்றே பொருள்தரும்.
லோகநாத என்ற சொல்லை 'உலகரட்சகர்' என மொழிபெயர்ப்பது பொருத்தமில்லை. இது கிறிஸ்தவ பரிபாஷை. புத்தர் ரட்சகரல்லர். லோக நாத என்றால் 'உலகுக்குச் சரண்' என்று பொருள்.
[11] ரீஸ் டேவிட்ஸ் (திக நிகாய மொழிபெயர்ப்பு) "உங்களுக்கு நீங்களே தீபமாயிருங்கள். நீங்களே உங்களுக்குச் சரணாயிருங்கள். புறத்தேயிருந்து எவ்வித சரணையும் தேட வேண்டாம்.
[12] தீப என்பதற்கு இங்கே விளக்கு (தீபம்) என்ற பொருள் பொருந்தாது. துவீபம், தீவு என்ற பொருளே பொருந்தும். தீக நிகாயத்துக்கெழுதிய பாஷியத்தில் தீப என்ற சொல்லை விளக்கும்போது 'மஹா சமுத்தகதம் தீபம் விய அத்தானம் தீபம் பதிட்டம் கத்வா விஹாத'
'உன்னை ஒரு தீவாக, ஆதாரமாக (தங்குமிடமாக) பெரிய சமுத்துரத்தில் தீவு போலச் செய்து கொண்டு இருப்பாயாக' சம்சாரம் சாதாரணமாக ஒரு பெருங்கடலுக்கே உவமிக்கப்படுகிறது. சம்சாரசாகரம், சமுத்திரத்தின் மத்தியில் பாதுகாப்பாயிருப்பதற்குத் தேவைப்படுவது திண்ணிய நிலத்தையுடைய தீவேயன்றி, விளக்கு அன்று.
[13] கடைசி வசனம் மாத்திரமே நேராக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. சம்பவத்தின் ஏனைய பகுதி மகா பரிநிப்பாண சூத்திரத்திலுள்ளபடி சுருக்கிக் கூறப்பட்டுள்ளது.
[14] சதிபட்டானம் பற்றிப் பாவனை என்ற ஏழாம் அத்தியாயத்தில் ஆராயப்படும்.
[15] மற்றொரு சந்தர்ப்பத்தில் புத்தபகவான் இதே வச்சகொத்தனுக்கு 'ததாகதர் எந்தத் தரிசனங்களையும் சாந்தவரல்லர். அவர் பதார்த்தங்களின் தன்மைகளை உணர்ந்தபடியால் அவருக்கு எவ்வித தரிசனத்திலும் சார்பு கிடையாது'. என்று கூறினார். இங்கேயும் அவர் எந்தத் தரிசனத்தையும் சாராத நிலை காணப்படுகிறது.
[16] சப்பே தம்மா அனத்தா. தம்மபதம் 20, 7 இல் உள்ள பாசுரத்தின் முதலடியில் காணப்படும் அதேவாக்கியங்கள். இதை முன்னர் ஆராய்ந்தோம். வுட்வேட் இதற்கு, 'எல்லாப் பொருள்களும் அநித்தியம்' என மொழி பெயர்த்திருக்கிறார். இம்மொழிப்பெயர்ப்பு முற்றும் தவறு.  அது கவலையீனத்தாலானதாய் இருக்கலாம். ஆனால் இது மிகப் பாரதூரமான தவறு. புத்தரின் மௌனம் பற்றி அவசியமற்ற பெரும்பாலான பேச்சுகளுக்கு இதுவே ஒரு காரணமாயிருக்கலாம். இங்கே வரும் மிக முக்கியமான அனத்த என்ற அனாத்மன் எனப் பொருள்படும் சொல் அநித்தியமானது என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. பாளி மூலக்கிரந்தங்களின் ஆங்கில மொழி பெயர்ப்புக்களில் இத்தகைய பெரும் பிழைகளும் சிறிய பிழைகளும் காணப்படுகின்றன. சில கருத்தின்மையாலும் கவலையீனத்தாலும் உண்டானவை. சில பாளி பாஷையில் திறமையின்மையால் ஏற்பட்டவை. எவ்வாறாயிருப்பினும் இத்துறையில் முன்னோடிகளாய் விளங்கிய நல்லறிஞர்க்கு மரியாதை செலுத்திக் கொண்டு அவர்கள் இழைத்த இத்தவறுகளே, மூலக்கிரந்தங்களைப் படிக்க வசதியற்றவர்களிடையே நிலவும் பௌத்தம் பற்றிய தவறான கருத்துக்களுக்கும் பொறுப்பாயிருந்தன என ஈண்டு குறிப்பிடுவது பொருத்தமுடையதாகும். பாளிக்கிரந்தச் சங்கத்தின் காரியதரிசியான சிறீமதி ஐ. பி. ஹோர்னர் புதிய திருத்திய மொழிபெயர்ப்புக்களை வெளியிட உத்தேசித்திருக்கிறார் என்பது மகிழ்ச்சிக்குரிய விஷயமாகும்.
[17]  மற்றொரு சந்தர்ப்பத்திலே - இச் சம்பவம் நடப்பதற்கு முன்னரென்றே கருத வேண்டும் - மரணத்தின் பின்னர் அருகதரானோர் எந்நிலை அடைவார் என்ற வச்சகொத்தனுடைய கேள்விக்கு புத்தர் விளக்கம் கொடுத்தபோது (இக்கேள்வி நுட்பமும் ஆழமும் வாய்ந்தது) வச்சகொத்தன்: 'வணக்கத்துக்குரிய கோதமரே, இங்கே எனக்கு விளக்கமுண்டாகவில்லை, மனக்குழப்பமடைந்துள்ளேன். வணக்கத்துக்குரிய கோதமரோடு நடத்திய இந்த உரையாடலின் ஆரம்பத்தில் இருந்த நம்பிகையும் இப்போது மறைந்துவிட்டது' என்று கூறினான். அதனால் பகவான் வச்சகொத்தனை மேலும் குழப்ப விரும்பவில்லை.
[18] புத்தரின் இந்தப்பண்பு இந்திரிய பரோபரியத்த ஞானம் எனப்படும்.
[19] சிலகாலத்துக்குப் பின் வச்சகொத்தன் பகவானை மறுபடியும் காண வந்தான். இம்முறை வழக்கம்போல அவன் கேளாமல் 'நான் வணக்கத்துக்குரிய கோதமரைக் கண்டு உரையாடிப் பல நாளாயிற்று. குசலாகுசலங்கள், நன்மை தீமைகளைப் பற்றி கோதம முனிவர் எனக்குச் சுருக்கமாக அறிவுரை வழங்க வேண்டும்' என்று கேட்டான். பகவான் நன்மை தீமைகளைப்பற்றிச் சுருக்கமாகவும் விரிவாகவும் விளக்கப் போவதாகக் கூறி அவ்வாறே செய்தார். ஈற்றில் புத்தருடைய சீடனாகி வச்சகொத்தன் அறவழிநின்று அருகத நிலையடைந்து நிர்வாண சுகம் பெற்றான். ஆத்மன் அனாத்மன் விவகாரங்களும் ஏனைய பிரச்சினைகளும் அவனைப் பின்னர் குழப்பவில்லை.
[20] மகாயானிகள் கூறும் ஆலய விஞ்ஞானம், ததாகத கர்ப்பம் என்பன ஆன்மாவுக்குச் சமமானவையென்று சிலர் நினைப்பர். ஆனால் இலங்காவதார சூத்திரம் அவை ஆன்மாவல்லவென்று திட்டமாகக் கூறுகின்றது.
[21] ஆத்மாவைப் பற்றி இன்றும் பெரும்பாலோர் இவ்வாறே கூறுவர்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard