சிலப்பதிகாரக் காப்பியத்தில் ஊழ் எனப்படும் விதி, தகுந்த ஒர் இடத்தைப் பெற்றுள்ளது உண்மைதான். ஆனால் பதிகத்தில் கூறியுள்ளபடி ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும் என்பதைக் காட்டுவதற்காக இக்காப்பியம் தோன்றிற்று என்று கூறுதல் காப்பிய இலக்கணம் அறியாதார் கூற்றேயாகும். ஆசிரியரே மூன்று காரணங்களை அடுக்கி சூழ்வினைச் சிலம்பு காரணமாக நாட்டுதும் யாம் ஒர் பாட்டுடைச் செய்யுள்’ (பதிகம்)-என்று கூறியுள்ளாரே என்ற ஐயம் எழுந்தால் அதற்கு விடை இறுத்தல் எளிதாகும். அதற்குரிய விடை பதிகத்திற்கும் இளங்கோவிற்கும் எவ்விதமான தொடர்பும் இல்லை என்பதேயாகும். காப்பியத்தை நன்கு கற்ற பிற்காலப் புலவர் ஒருவர் இக் காப்பியத்தில் அறியக் கிடக்கும் இம் மூன்று உண்மைகளையும் அடுக்கி இவ்வாறு பதிகம் என்ற பெயரில் இதனைப் புனைந்திருத்தல் வேண்டும். ஆனால் காட்சிக் காதையில் தண் தமிழ் ஆசான் சாத்தன்” (66) எனவரும் அடியும் சிந்திக்கற்பாலது. சிலம்பும், மணிமேகலையும் ஏறத்தாழ ஒரே காலத்துத் தோன்றியவை என்ற கதையும், இவற்றை இயற்றிய இருபெரும் புலவரும் சமகாலத்தவர் என்ற கதையும் பெரிதும் ஆராயப்பட வேண்டியவை. இக் கட்டுரையாளரைப் பொறுத்தவரை இவ்விரண்டு காப்பியங் கட்கும் இடைவெளி 200 ஆண்டுகளாவது இருக்கும் என்பதே முடிவு.
புகார்க் காண்டம், மதுரைக் காண்டம் என்ற இரண்டு காண்டங்களிலும் ஊழ்வினை என்ற சொல் இருமுறையும், வினை என்ற சொல் இருமுறையும் பயின்றுள்ளன. இந்நான்கு இடங்களையும் ஆழ்ந்து சிந்தித்தால் அடிகள் ஊழ்பற்றிக் கொண்ட தெளிவான கருத்தை ஒருவாறு ஊகிக்கமுடியும்.
முதலாவதாக ஊழ் என்ற சொல் கானல்வரியில் பயிலப் பெறுகிறது. கோவலன் வரிப்பாட்டைக் கேட்ட மாதவி யாழை வாங்கி மன்னும் ஒர் குறிப்புண்டு இவன் தன் நிலை மயங் கினான் என..தானும் ஒர் குறிப்பினன் போல் (கானல் வரி - 24) வரிப்பாட்டிசைத்தாள். அப் பாடலைக் கேட்டுக் 'கானல் வரி யான் பாடத் தான் ஒன்றின்மேல் மனம் வைத்து மாயப் பொய் பல கூட்டும் மாயத்தாள் பாடினாள்'எனக் கருதிய கோவலன், உவவு உற்ற திங்கள் முகத்தாளைக் கவவுக்கை நெகிழ்ந்தனனாய்” மாதவியை எழச் சொல்லி உடன் எழாமல் ஏவலாளர் உடன் குழ்தரத்"தான்மட்டும் சென்றுவிட்டான்.
இதனைக் கூறவந்த அடிகளார், அவளை மாயத்தாள் பாடினாள்” எனக் கோவலன் கருதிவிட்டான் என்று கூறும் நேரத்தில் ஊழைத் துணைக்கு அழைக்கின்றார்.
யாழ் இசைமேல் வைத்து, தன் ஊழ்வினை வந்து உருத்தது ஆகலின் எழுதும் என உடன் எழாது (கானல், வரி 52) கோவலன் போய் விட்டான் என்று கூறுகிறார்.
மாதவியிடம் மனம் மாறுபட்ட கோவலன் சில நேரம் கடைத் தெருவில் தங்கி மாதவி அனுப்பிய காதற் கடிதத்தை வாங்க மறுத்து நடு யாமம் கழிந்து சில நாழிகை கழிந்தபின் தன் வீடு சென்றான். கண்ணகி, சிலம்பைக் காட்டி கொள்க’ எனக் கூறியவுடன் அவனுக்கு அதுவரை இல்லாத புதியதோர் எண்ணம் பிறந்தது. அந்த எண்ணத்தை ஆர அமர ஆராய்ந்து அதன் குறைவு நிறைவுகளைத் தீரத் தெளியாமல் உடனே செயற்படுத்த முனைந்துவிட்டான்.
சிலம்பைக் கண்டவுடன்
"சேயிழை கேள் இச்
சிலம்பு முதலாகச் சென்ற கலனோடு
உலந்த பொருள் ஈட்டுதல் உற்றேன் மலர்ந்தசீர்
மாடமதுரை அகத்துச் சென்று என்னோடு இங்கு
ஏடு அலர் கோதாய் எழுக” (கனா. உரை. கா. 75–79)
என்று கூறினான்
ஆய்ந்து ஒய்ந்து பாராமல் இம்முடிவுக்கு வந்தான்; வந்தவன் கண்ணகியையும் உடன் வருமாறு செய்துவிட்டான்; இவை அனைத்தையும்விட அன்று விடியற்காலமே புறப்பட்டும் விட்டான். இதனைக் கூறவந்த ஆசிரியர்
"வினைகடைக் கூட்ட வியங்கொண்டான் கங்குல்
கனைசுடர் கால்சியாமுன்” (கனா. உரை. கா 79)
என்று பேசுகிறார்.
அடுத்து பாண்டியன் பொற்கொல்லனிடம் பேசுகின்ற நேரத்தில் ஆசிரியர் விதியைத் துணைக்கு அழைக்கிறார். ஒருவன் திருடிவிட்டான் என்று மற்றொருவன் கூறினவுடன். திருடன் எனக் குற்றம் சாட்டப்பெற்றவனை விசாரிக்காமல் அவனுக்குக் கொலைத் தண்டனை வழங்கிவிட்டான் பொற்கைப் பாண்டியன் மரபில் வந்த மற்றோர் பாண்டியன், இந்நிலையில் அடிகள்
“வினைவிளை காலம் ஆதலின், யாவதும் சினைஅலர் வேம்பன் தேரானாகி ஊர்காப் பாளரைக் கூவி, ஈங்கு என் தாழ்பூங் கோதைதன் காற் சிலம்பு கன்றிய கள்வன் கையது ஆகின் கொன்று, அச் சிலம்பு கொணர்க ஈங்கு” (கொலை. கா. 148-153) என்ற கூறுகிறார்.
இனி இறுதியாக வினைபற்றிப் பேசப்பெறுகின்ற இடம் கோவலன் வெட்டுண்ட பொழுதாகும்.
இந்த நான்கு இடங்களில் அடிகள் ஊழைக் கூறவேண்டிய காரணம் என்ன என்று ஆராய்வது பயனுடையதாகும். முதலாவ தாக உள்ள வரிப்பாடற் பகுதியை எடுத்துக் கொள்ளலாம்.
"யாழ் இசைமேல் வைத்து, ஊழ்வினை வந்து உருத்தது” என்று கூறும் இடம் நம் கவனத்தைக் கவருகின்ற அதே நேரத்தில் இதன் பின்னணியையும் நன்கு அமைத்துக் காட்டுகிறார் ஆசிரியர், கடற்கரைக்கு வருகின்ற நேரத்திலேயே கோவலன் தன்னிலையில் இல்லை என்பதை அறிவிக்கின்றார். கடற் கரைக்குச் செல்லவேண்டும் என்ற விருப்பம் மாதவிக்கு மட்டும் இருந்தது என்பதையும் அவள் விரும்பியதற்காகவே கோவலன் வந்தான் என்பதையும்,
"மடல்அவிழ் கானல் கடல் - விளையாட்டுக்
காண்டல் விருப்பொடு வேண்டினள்” (கடலா. 113-14)
என்ற அடிகளில் ஆசிரியர் கூறிவிட்டார்.
கடற்கரையில் சென்று தங்கியவுடன் யாழ் மீட்டிப் பாட வேண்டும் என்ற எண்ணம் கோவலனுக்கு இருந்ததாகத் தெரியவில்லை. வசந்தமாலை என்ற தோழியிடம் இருந்த யாழை மாதவி தானே வாங்கிச் சுருதி சேர்த்து,
“கோவலன்கை யாழ் நீட்ட அவனும்
காவிரியை நோக்கினவும், கடல்கானல் வரிப்பாணியும்
மாதவிதன் மனம் மகிழ, வாசித்தல் தொடங்குமன்” (கா. வரி 1) என்று பாடுகிறார்.
அவன் வாசிக்கத் தொடங்குகின்ற வரையில் அவனுடைய மனமாறுபாட்டை அறியாதிருந்த மாதவி அவன் பாடி முடித்த வுடன் இவன் நிலை மயங்கினான்’ எனப் புரிந்துகொண்டாள். கற்றறிவும் கலையறிவும் உடைய மாதவி கோவலன் தன் நிலை மயங்கினான் என்றுமட்டும் உணர்ந்தாளே தவிர எவ்வளவு ஆழமாக அவன் மனம் உளைந்துள்ளான் என்பதை அறியத் தவறிவிட்டாள். இதனை அறிந்திருந்தால் உறுதியாக அவள் எதிர்ப்பாட்டுப் பாடி இருக்கமாட்டாள்.
உறுதியான மனநிலை படைக்காதவன் கோவலன் என்பதை அவனுடன் அத்துணை ஆண்டுக் காலம் பழகி ஒரு குழந்தையையும் பெற்றுவிட்ட மாதவி நன்கு அறிந்திருந்தாள். அடிக்கடி அவன் பொறுமை இழந்து, சினங்கொள்வதும், சில நாட்கட்கு அஞ்ஞாத வாசம் செல்வதும் அவள் அறிந்த ஒன்றுதான். எனவே வழக்கம்போல அவன் பிணங்கிக் கொண்டுள்ளான் என்று கருதிய அந்தப் பேதைப் பெண் அவனுடன் போட்டிபோடுகின்ற மனப்பான்மையில் பாடத் தொடங் கினாள். கோவலனுடைய மனம் குழம்பி இருந்த காரணத்தால் அவன் பாடல் பிறரால் அனுபவிக்கத் தக்க வகையில் அமைய வில்லை. மாதவிமட்டுமே அதனை ரசித்தாள் என்பதை ஆசிரியர் மாதவிதன் மனம்மகிழ வாசித்தல் தொடங்குமன் (கா.வரி - 1 என்று கூறிக் குறிப்பால் உணர்த்திவிட்டார்.
இதன் எதிராக மாதவியின் மன நிலையில் எவ்விதக் குழப்பமும் இல்லை. எனவே அவள் பாடல் சுருதியுடன் கலந்து அமிழ்த தாரையாக வெளிப்பட்டதாம். அந்த இனிய இசையைக் கேட்ட பூமிதேவி வியந்தாளாம்; உலகில் வாழும் பிறர் மனம் மகிழ்ந்தார்களாம். யாழையும் அவளுடைய தொண்டையையும் வேறுபடுத்திக் காணமுடியவில்லை என்பதை ஆசிரியர் கலத்தொடு புணர்ந்து அமைந்த கண்டத்தால் பாடினாள்' (கா.வரி - 24) எனக் கூறுகிறார்.
இருவரும் ஒப்பற்ற இசைவாணர் ஆயினும் அன்றைப் பொழுதில் இருவருடைய பாடும் வகையிலும் இருந்த வேறு பாட்டைக் காட்டுவதன் மூலம் இருவருடைய மனநிலையையும் ஆசிரியர் தெளிவாக்கிக் காட்டிவிடுகிறார்.
மாதவியின் பாடலைக் கேட்டுக் கோவலன் மனம் மாறு பட்டான். ஆனால் அந்த மாறுபாடு தெளிந்த மனநிலையில் அறிவு பூர்வமாக ஆராய்ந்து செய்யப்பெற்ற முடியன்று கலங்கிய மனத் துடன் திடீரென்று செய்யப் பெற்ற முடியாகும். கோவலன் பண் பாடு மிக்கவன், கடகளிறு அடக்கிய கருனை மறவன்; (அடை. 53) யாரோ ஒருவர் குடும்பத்தைப் பல்லாண்டு புரந்த இல்லோர் செம்மல் (அடை. 90) கல்வி அறிவும் கலைஞானமும் இசை அறிவும் நிரம்பப் பெற்றவன். கவுந்தி அடிகளாகிய துறவிகூடத்தம் நிலை மறந்து உறையூர்க் காட்டில் கயவர் இருவரைப் பார்த்துச் சினங்கொண்டு சபிக்கத் தொடங்கியபொழுதுகூட அவர்களிடம் சினம் கொள்ளாமல், 'நெறியின் நீங்கியோர் நீரல் கூறினும், அறியாமை என்று அறியல் வேண்டும் செய்தவத்திர் நாடு கா. 237-239) என்று கூறும் பண்பாட்டினன் கோவலனாவான். அவனை மதுரை செல்லும் வழியிற் கண்ட மாடல மறையோன் 'இம்மைச் செய்தன யான் அறி. நல்வினை’ (அடை கா. 91) என்று கூறுகிறான்.
இந்த அடிப்படையில்தான் நாம் கோவலனையும் அவனுடைய செயல்களையும் எடைபோட வேண்டும். கோவலன் மாதவியிடம் கொண்டிருந்த உறவை யாரும் குறை கூறவில்லை. ஏன்? அன்றைய சமுதாயத்தில் அதனை யாரும் தவறு எனக் கருதிலர் வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டும் இலக்கணத்தில் கூட மருதத் தினை என்ற ஒன்றை ஏற்படுத்தி அதில் காதற் பரத்தை, இல் பரத்தை, சேரிப் பரத்தை என்ற நுண்மையான பிரிவுகளை ஏற்படுத்திக் கணித்த இத் தமிழ்ப் பெருமக்கள் கோவலன் வாழ்வில் எவ்வாறு தவறு காணமுடியும்? மாதவியிடம் கோவலன் சென்றதில் தவறு காணவில்லை. இச் சமுதாயம். ஆனால் தன் மனையை அறவே மறந்துவிட்டு மாதவியுடன் அவன் வாழ்ந்தது தான் தவறு என்று கருதிற்று.
இவற்றைக் கொண்டு கோவலனுடைய பண்பு நலன்களை ஆராயப்புகுந்தால் அவன் அனைத்துப் பண்புகளும் ஒருங்கே நிரம்பப் பெற்ற சான்றோன் என்று கூறத்தடை இல்லை. இத்தகை யவன் மாதவியுடன் பல்லாண்டுக் காலம் வாழ்ந்தான்; அவளிடம் ஒர் அற்புதமான பெண்மகளைப் பெற்றான். அவள் குலத்தைப் பற்றிக் கவலைப்படாமல் தன் குல தெய்வமாகிய மணிமேகலா தெய்வத்தின் பெயரையே அக் குழவிக்கும் இட்டான். இந்த நிலையில் மாதவியைப் பற்றியோ அவள் பண்பு நலன்கள் பற்றியோ, அவளுடைய குலம் பற்றியோ, அவளுடைய விருப்பு வெறுப்புக்கள் பற்றியோ அவள் பாடிய கானல்வரிப் பாடலின் மூலம் புதிதாக இவன் அறிந்துகொள்ளக்கூடிய பகுதி எதுவும் இல்லையே அப்படி இருக்கத் திடீரென்று யாரும் எதிர்பாரா வகையில் கொடுஞ்சொற்களை அள்ளிவீசுகிறானே?
'கானல்வரி யான்பாடத் தான்ஒன்றின்மேல்
மனம்வைத்து மாயப்பொய் பலகூட்டும் மாயத்தாள் பாடினாள்” (கா. வரி 52)
கற்புநிலையில் எவ்விதத்திலும் கண்ணகிக்குக் குறைவு படாத மாதவியைப் பார்த்து, இவ்வளவு பெரிய அடாப்பழியைச் குட்டிவிட்டானே! அதுவும் பல்லாண்டுகள் தன்மனையகம் மறந்து. (அரங்-175) மாதவியுடன் வாழ்ந்த பிறகு பேசுவது முறையா? ஒருவேளை பேசினவன் கயவனாக இருந்திருப்பின் அவன் அப்படித்தான் பேசுவான் என்று சமாதானம் செய்துகொள்ளலாம். ஆனால் பண்புடையார்கட்கெல்லாம் தலைமகனாகிய கோவலனல்லவோ இவ்வாறு நினைத்துவிட்டான்.
பண்புடையவன் இவ்வாறு நினைத்தபோதும் அவளுடைய கற்பு மேம்பாடு அவன் மனத்தின் அடித்தளத்தில் இருந்து கொண்டுதான் இருக்கிறது என்பதை அவன் கூறிய சொற்களே காட்டிவிடுகின்றன. தான் ஒருவன்மேல் மனம் வைத்து” என்று கூறாமல், தான் ஒன்றின்மேல் மனம்வைத்து” என்றுதான் அத்தனை மன மாறுபாட்டிலும் அவனால் பேச முடிகிறது.
ஒருவர் பேசிக்கொண்டிருக்கும்பொழுது எதிரில் உள்ளவர் வேறு ஏதாவது ஒன்றை நினைத்துக் கொண்டு இவர் பேசு வதைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் இருப்பதை இன்றும் உலகிடைக் காணமுடியும். இவ்வாறு நடைபெற்றால் இதனை மன்னிக்கமுடியாத குற்றம் என்றோ, மாயப் பொய் வாழ்க்கை உடைமையின் இவ்வாறு செய்தனர் என்றோ யாரும் கூறுவதில்லை. அப்படி இருக்கக் கோவலன் இந்த முடிவுக்கு வந்தான் வந்ததுடன் நில்லாமல் அதனைச் செயற்படுத்தவும் துணிந்தான். எழுதும் என்று அவளை உடன்எழச் சொல்லாமல் தன் ஏவலாளர் உடன் குழ்தரக் கோவலன் போய்விட்டான்.
என்றோ நிகழ்ந்த இந்த நிகழ்ச்சியையும் இதில் பங்கு கொண்ட இருவரையும் அவர்கள் வாழ்க்கையையும் தம் மனக்கண் முன் கொண்டுவருகிறார் அடிகள், மாதவியைப் பார்த்தா இவ்வாறு பேசினான் என்ற வியப்பு ஒருபுறம்! கோவலனா இவ்வாறு பேசினான் என்ற மலைப்பு ஒருபுறம் இவை இரண்டையும் அவருடைய அறிவு ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. ஆனால் நடந்தது உண்மை! எனவே இதற்குரிய காரணத்தை அடிகள் ஆராய்ந்து பார்க்கிறார் எத்துணைத் துரம் தன் அறிவைச் செலுத்தினாலும் இதற்குச் சமாதானம் கூற முடியவில்லை. எனவேதான் விதியைத் துணைக்கு அழைக்கிறார். யாழ் இசைமேல் வைத்துத் தன் ஊழ்வினை உறுத்தது. எனவே தான் அந்த நேரத்தில் அவ்வாறு பேசினான் என்கிறார்.
மாயப் பொய் பலகூட்டும் மாயத்தாள்'என்ற மாதவி பற்றிய கணிப்பு அறிவுகொண்டு ஆராயும் பொழுது ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லை. ஆனால் திடீரென்று இப்படியோர் எண்ணம் கோவலன் மனத்தில் தோன்றியது என்னவோ உண்மை. இதற்கு என்ன காரணத்தைக் காட்டுவது? எனவே அடிகள் ஒரு சம்பந்தமும் இல்லாத யாழிசையை நுழைவாயிலாகக் கொண்டு ஊழ்வினை கோவலனுடைய வாழ்க்கையில் புகுந்து இத்தகைய ஒர் எண்ணத்தை அவன் ஆழ்மனத்திலும் புறமனத்திலும் உண்டாக்கி விட்டது என்று கூறுகிறார்.
பதிக ஆசிரியர் கூறுவதுபோல, சிலம்பை நுழைவாயிலாகக் கொண்டு ஊழ்புகுந்தது என்பது அவ்வளவு பொருத்தமுடையது அன்று. காப்பியத்தை ஆழ்ந்து கற்பார்க்கு, ஊழ்வினை யாழிசையை நுழைவாயிலாகக் கொண்டு புகுந்தது. புகுந்த தோடல்லாமல், மின்னல் வேகத்தில் பணிபுரியத் தொடங்கிற்று. இங்கே உட்புகுந்த ஊழ், கோவலனை எழுதும் என அவளை உடன்கூட்டிக் கொண்டு செல்ல வொட்டாமல் தடுத்தது. நேரே கண்ணகியின் வீட்டிற்கு அவனை அனுப்பிற்று. சிலம்பை காட்டு மாறு அவளைச் செய்தது. மதுரைக்குச் செல்லவேண்டும் என்ற எண்ணத்தை அவனுக்குள் தோற்றுவித்தது. மதுரை சென்ற அன்று இரவே, சிலம்பை விற்கத் தூண்டிற்று நின்சீறடிச் சிலம்பின் ஒன்று கொண்டு யான்போய் மாறி வருவன், மயங்காது ஒழிக"(கொலை கா. 93) என்று அவனைச் சொல்லச் செய்தது. இரவென்றும் பாராமல் பெருமதிப்புள்ள சிலம்பைக் கொண்டு சென்று விற்கத் துரண்டியது. பொற்கொல்லனை எதிரே வரச் செய்தது. பொற்கொல்லன் உடன் வந்த காவலாளருள் ஒருவன், "வெள்வாள் எறிந்தனன், விலங்கூடு அறுத்தது” (கொலை -213). கோவலன் கதை முடிந்தது எழுதும் என்று கூற வேண்டிய இடத்தில் கூறாமல் புறப்பட்டான். தான் கள்வன் அல்லன் என்று கூற வேண்டிய இடத்திலும் கூறாமலே வெட்டுண்டான்,
இவ்வளவு விரைவாகக் கோவலனுடைய வாழ்க்கையை முடிக்க வந்த ஊழ் கொடுமை நிறைந்த அந்த ஊழ், கோவலன் வாழ்க்கையில் எவ்வித முன்னறிவிப்பும் படாடோபமும் இல்லா மலே துழைந்து விட்டது. முன்னர் பின்னர் நிகழாத ஒரு புதிய நிகழ்ச்சி நடைபெற்றது. அதன்பயனாக, கோவலன் வாழ்க்கையில் இம்மாபெரும் மாறுதல் ஏற்பட்டது என்று சொல்வதற்குக் கூட வழியில்லை. அதுதான் கொடுமையிலும் கொடுமை, கோவலன் மாதவி என்ற இருவருமே மாபெரும் இசைக் கலைஞர்கள். அவர்கள் வாழ்வு முழுவதும் இசையும் சுருதியும் போல இனைந்தே இருந்தது. இரவுபகல் எந்நேரத்திலும் இசை யிலேயே தம் வாழ்நாளைக் கழித்த அவ்விருவர் வாழ்க்கையிலும் அந்த இசையே எமனாகப் புகுந்தது அதிர்ச்சிதரும் விஷயமாகும். ஆனாலும் நடந்தது என்னவோ அதுதான். கோவலனுடைய இந்த மன மாற்றத்திற்கு வேறு காரணமே கூறுமுடியாத நிலையில் அடிகள் ஊழ்வினையைத் துணைக்கு அழைக்கிறார்.
அறிவினால் ஆராய்ந்து விடை காணமுடியாத பொழுது மட்டுமே அதற்கு ஊழ் என்று பெயரிட்டனர் நம் முன்னோர். மற்றொன்று சூழினும் தான் முந்துறும் என்ற சொற்களால் ஊழின் வருகையை அணைபோட்டுத் தடுக்க முடியாது என்ற கருத்து வலியுறுத்தப்படுகின்றது. பதின்மூன்று ஆண்டுகளாக நாள் தோறும் பயிலப்பட்ட யாழிசையில் இவர்கள் இருவர் இடையே எத்தனை முறை போட்டிகள் நடந்திருக்கும்? கற்பனா சுரங்கள் வாசிப்பதில் ஒருவரையொருவர் மிஞ்சும் வகையில் யாழ் வாசித்து இருக்க வேண்டும். அதுபோல்தானே இன்றும் நடைபெற்றது. அவன் ஒரு வரிப்பாடலைப் பாடினான். அதில் ஒரு குறிப்பு இருப்பதாகக் கருதினாள் அவள். எனவே அதற்குப் போட்டியாகத் தானும் ஒர் குறிப்பை வைத்து யாழ் வாசித்துப் பாடினாள். இரண்டுபேரும் சிரித்து மகிழ்ந்திருக்க வேண்டிய நேரம், உன் பாடலுக்கு என் பாடல் தோற்கவில்லை என்று கூறி, சிரித்து இருக்கவேண்டிய நேரம் எவ்வளவு எளிமையாக எவ்வித ஆடம்பரமும் இன்றி, பல்லாண்டு பழகிய யாழிசையையே தனக்குக் கருவியாகக் கொண்டு ஊழ்வினை புகுந்த கொடுமையைக் காண்கிறோம்.
ஒரு கையினால் சப்தம் உண்டாக்க முடியாது. இரண்டு கைகள் ஒன்றுடன் ஒன்று மோதினால்தான் சப்தம் உண்டாகும் என்று கூறுவர். யாழ் இசை மேல் வைத்து கோவலன் வாழ்க்கையில் புகுந்த ஊழ் சப்தம் உண்டாக்க வேண்டுமானால் மற்றொருவர் வாழ்க்கையிலும் புகவேண்டும். பண்புடைய கோவலன் வாழ்க்கையில் புகுந்த ஊழ், அவனுடைய வாழ்க்கைப் பாதையை மாற்ற வழக்கமாக அவன் மாதவியிடம் சொல்லும் ஒரு சொல்லைச் சொல்லாமல் செய்துவிட்டது. கானல் வரி முடிந்த வுடன் எவ்வளவு கோபமாக இருப்பினும் எழுதும் என்று கூறி யிருப்பானேயானால் மாதவியும் உடன் சென்றிருப்பாள், வரலாறு வேறுவிதமாகச் சென்றிருக்கும் எழுதும் என்று சொல்ல வேண்டிய இடத்தில் அவன் வாயை அடைத்து, சொல்லாமல் செய்த ஊழ் தேவையில்லாத மற்றோர் இடத்தில் இதே சொல்லை அவன் சொல்லுமாறு செய்கிறது. சிலம்பைக் கொண்டு மதுரைக் குச் சென்று இழந்த பொருளையெல்லாம் ஈட்டப் போகிறேன் என்று சொல்ல வந்த அவன் ஒரு காரணமும் இல்லாமல் தேவை யும் இல்லாமல், வணிகர் மரபுக்கு விரோதமாக கண்ணகியைப் பார்த்து ஏடலர் கோதாய் எழுக” என்று கூறினான். அவனை இவ்வாறு கூறச் செய்ததும் ஊழே ஆகும்.
என்ன கொடுமை, மாதவியிடம் எழுதும் என்று சொல்லி இருந்தால் கதையே மாறுபட்டிருக்கும் கண்ணகியிடம் எழுக タ என்று சொல்லாமல் இருந்திருந்தால் கதையே மாறுபட்டிருக்கும் சொல்ல வேண்டிய இடத்தில் சொல்லாமலும், சொல்லவேண்டாத இடத்தில் சொல்லியும் தன் வாழ்வை முடித்துக் கொள்ளுமாறு செய்தது ஊழே ஆகும்.
இந்த இடத்தில் யாழ் இசையை நுழை வாயிலாகக் கொண்டு ஊழ்வினை வந்து உருத்திற்று. அவ் உருத்தல் காரண மாக கோவலன் இதுவரை செய்யாத ஒரு செயலைச் செய்தான். மாதவியோடு பழகிய பதின்மூன்று ஆண்டுகளிலும் அவர்கள் கருத்தொருமித்தே வாழ்ந்தனர். ஒரிடத்தைவிட்டுப் புறப்பட வேண்டுமென்றால் கோவலன்நாமிருவரும் புறப்படுவோம் என்ற பொருளில் எழுதும் என்று சொல்வதே வழக்கமாகக் கொண்டிருந்தான். அவன் அந்த வார்த்தையைச் சொல்லவில்லை யானால் மாதவி அந்த இருக்கையை விட்டு எழ மாட்டாள். இந்த உளப்பாட்டுத் தன்மைப் பன்மை வினைச் சொல் கோவலன் வாழ்க்கையில் மாபெரும் பூகம்பங்களை உண்டாக்கிவிட்டது என்பதை அறிகிறோம். சொல்ல வேண்டிய இந்த இடத்தின் எழுதும் என்று அவன் சொல்லாமல் விட்டுவிட்டான். அதன் பயனாக பதிமூன்று வருஷ இணை பிரியா வாழ்க்கை பிளவு பட்டு விட்டது.
இதனை அடுத்து விதிபற்றிப் பேசப்படும் இடம் கோவலன் கண்ணகியுடன் மதுரைக்குப் புறப்படும் போதாகும். மாதவியை விட்டுவந்த கோவலன் மதுரை செல்லவேண்டும் என்றோ, அங்குச் சென்று வாணிகம் செய்யவேண்டும் என்றோ நினைத்த தாகத் தெரியவில்லை. சிலநாட்கள் ஊரில் சுற்றிக் கொண்டிருந்து விட்டுத் தன் வீட்டினுள் புகுந்தான். எதிர்கொண்டு அழைத்த கண்ணகி நலங்கேழ் முறுவல் நகைமுகங் காட்டிக் சிலம்புஉள கொண்ம்"(கனா. கா 72-73) எனக் கூறினாள். அந்தச் சிலம்பு அவளுடைய பழைய சிலம்புதான். திருமணமான பின்னர்ச் சிலம்பு அணியும் வழக்கம் இல்லையாதலின் அப் பெருமாட்டி உள்ளே இருந்த சிலம்பைக் கையிற் கொணர்ந்து அவன் முன் காட்டினாள் போலும் மிக நீண்ட காலமாக அவனால் காணப் படாத அந்தச் சிலம்பைக் கண்டவுடன் 'குலந்தரு வான்பொருள் குன்றம் தொலைத்த இலம்பாடு நானுத்தரும்”(கனா. கா. 70-71) என்று கூறிக்கொண்டு உள்நுழைந்த கோவலனுக்குப் புதியதோர் எண்ணம் தோன்றலாயிற்று. சிலம்பைக் கண்டவுடன்
'சேயிழை கேள்,
இச் சிலம்பு முதலாகச் சென்ற கலனோடு
உலந்த பொருள் ஈட்டுதல் உற்றேன் - ம
லர்ந்த சீர் மாடமதுரை அகத்துச் சென்று” (கனா. கா 74-76)
என்று கூறவந்தான். ஆனால் அவ்வாறு கூறும்பொழுது முன் பின் யோசித்து ஆராய்ந்து இந்த முடிபுக்கு அவன் வந்ததாகவும் கூற முடியவில்லை. -
கடற்கரையிலிருந்து தனியே வந்துவிட்ட கோவலன் கடைவீதியில் சில நாட்கள் கழித்தான் என்று நாம் கருதும் படியாக அடிகள் வேனில் காதையை இடையில் வைக்கின்றார். கோவலன் மனநிலையை நன்கு அறியாத மாதவி, வசந்தமாலை என்ற தோழியின் மூலம் திருமுகம் ஒன்று அனுப்புகிறாள். கடைவீதியிலிருந்த கோவலனிடம் வசந்தமாலை அதனை எடுத்துச் செல்கிறாள். கோவலன் அதனை வாங்க மறுத்ததுடன் 'ஆடல் மகளே ஆதலின்பாடு பெற்றன. அப்பைந்தொடி தனக்கு” (வேனில் 109-110) என்று மறுபடியும் மாதவியை இழித்துப் பேசிவிடுகிறான்.
இவ்வளவு வெறுப்புற்றமையின், மறுபடியும் ஊரில் இருந் தால் மாதவி தொடர்புகொள்ள முயலுவாள் என நினைந்து ஊரை விட்டே சிலகாலம் சென்றுவிட வேண்டும் என்று கருதினானா என்பதும் தெரியவில்லை. எது எவ்வாறாயினும் கண்ணகி சிலம்பைக் காட்டியபொழுதுதான் அவனுக்கு இந்த எண்ணம் தோன்றிற்று என்பதைக் காட்டவே கவிஞர் இச் சிலம்பு முதலாக...” என்று கூறுகிறார். இச் சிலம்பை முதலாகக் கொண்டு என்றதில் இந்த என்ற அடை கொடுத்தது.அவனுடைய எண்ணத் தோற்றத்தை அறிவுறுத்தவேயாகும்.
எது எவ்வாறாயினும் ஒரு பெரு வாணிகன் மகன், புதிதாக ஒர் ஊருக்குச் சென்று மனைவியின் கால் சிலம்பையே முதலாக வைத்து வாணிகம் தொடங்கி இழந்த பொருள் அனைத்தையும் மறுபடியும் சேர்க்க வேண்டும் என்று நினைப்பவன் அதுபற்றி எத்தனை நாட்கள், எத்தனை பேருடன் கலந்து எப்படி முடிவு எடுக்கவேண்டும்? புதிய ஊர், புதிய தொழில், புதிய முதல் என்றால் எந்த வாணிகனும் திடீரென்று ஒரு முடிவுக்கு வரமாட் டான். ஆனால் கோவலன் ஒரு வினாடியில் முடிவு செய்து விட்டான்! அதைவிடக் கொடுமை ஒன்றுமறியாத பேதைப் பெண்ணாகிய கண்ணகியை விளித்து ஏடுஅலர் கோதாய் என்னோடு ஈங்கு எழுக” (கனா, 77) என்று கட்டளை வேறு இட்டுவிட்டான். இவை இரண்டும் ஒரே வினாடியில் நடைபெற்று விட்டன. சாதாரண மனிதன்கூடப் புது இடத்திற்குச் செல்வ தாயின் முதலில் தான் மட்டுஞ் சென்று இடம் முதலியவற்றைப் பார்த்துப் பிடித்தமான பிறகு குடும்பத்தை அழைத்துச் செல்வான். ஆனால் ஒரு கோடீசுவரன் மகளை, வீட்டு வாயிற்படியைத் தாண்டியறியாத ஒருத்தியை, தான்கூட முன்பின் பார்த்திராத ஊருக்கு உடன் அழைத்துச் செல்பவன் பைத்தியக்காரனாகத் தான் இருத்தல் வேண்டும். ஏன் இவ்வாறு செய்தான் என்று எவ்வளவு சிந்தித்துப் பார்த்தாலும் விடை காண முடியவில்லை. எனவேதான் அடிகள் அறிவின் துணைகொண்டு விடுவிக்க முடியாத இந்தப் புதிரை விளக்குவதற்கு விதியைத் துணைக்கு அழைக்கின்றார். அவன் பெயரில் எவ்விதக் குற்றமும் கூறமுடிய வில்லை. மிக நீண்டதாகிய ஒரு முன்னேற்பாட்டுடன் வினை அவர்களை முன்னர் நின்று அழைத்த காரணத்தால் சூரியன் உதயமாவதற்கு முன்னரே புகாரைவிட்டு மனைவியுடன் புறப் பட்டுவிட்டான் என்று கூறுகிறார் ஆசிரியர் - “நீடிய வினை கடைக்கூட்ட வியங் கொண்டான் -கங்குல் கனைசுடர் கால் சீயா முன்” (கனா. கா. 79-80) இதனை வினைநீடிக் கடைக்கூட்ட' என்றும் நீடி'என்ற வினை யெச்சத்தை நீடிய' என்ற பெயரெச்சமாக மாற்றி நீடிய வினை கடைக்கூட்ட' என்றும் பொருள் கொள்ளலாம்.
இனி மூன்றாவதாக அடிகள் ஊழை அழைக்கின்ற இடம் பாண்டியன் கள்வனைக் கொன்று அச் சிலம்பைக் கொணர்க’ என்று கூறிய பொழுதாகும். - அரசியின் அந்தப்புரஞ் செல்லும் அரசனைக் கண்டு பொற்கொல்லன் கோயில் சிலம்பு கொண்ட கள்வன். என்சில்லைச் சிறுகுடில் அகத்து இருந்தோன்'(கொலைகா 145) என்றான்.
உடனே மன்னவன்
“ஊர் காப்பாளரைக் கூவி, ஈங்கு என்
தாழ்பூங் கோதைதன் கால் சிலம்பு
கன்றிய கள்வன் கையது ஆகின்
கொன்று அச் சிலம்பு கொண்ர்க ஈங்குஎன” (கொலை 148)
ஆணையிட்டுவிட்டான். ஒரு திருடன் தேவியின் சிலம்பைத் திருடமுடியுமா என்பதையும், அப்படியே திருடி இருப்பினும் அரசனுடைய தலைமைப் பொற்கொல்லன் வீட்டில் சென்று தங்குவானா என்பதையும் சாதாரனப் பகுத்தறிவு உடையவன் கூடச் சிந்தித்துப் பார்ப்பானே! அப்படி இருக்க ஒரு பேரரசன் இவ்வாறு செய்யலாமா என்ற எண்ணம் நம் மனத்திலும் தோன்றுகிறது எனின் அடிகட்கு அது தோன்றாமல் இருந் திருக்குமா? தோன்றினால் என்ன விடை கூறமுடியும்? அறிவினால் எத்துணைத் தூரம் ஆராய்ந்து பார்த்தாலும் பாண்டியனுடைய இந்தச் செயலுக்கு விடையோ சமாதானமோ கூற முடியாதுதான். எனவேதான் அடிகள் இத்தகைய சந்தர்ப் பத்தில் வழக்கமாகக் கூப்பிடும் ஊழைத் துணைக்கு அழைக் கின்றார்.
என்பன காப்பிய வரிகள், ஆனாலும் ஒரு பெரிய உண்மையையும் இவ்வரிகளில் அடிகள் அறிவிக்கின்றார். மழைக்கால இருட்டாக இருப்பினும் மந்தி கொம்புவிட்டுக் கொம்பு தாவாது” என்பது இந் நாட்டு முதுமொழி. எனவே எவ்வளவு விதியின் சூழ்ச்சி இருப்பினும் பாண்டியன் பெரிய தவற்றைச் செய்துவிடவில்லை என்கிறார் ஆசிரியர்
கள்வரை விசாரிப்பதும் களவாடப்பட்ட பொருள் அவன்பால் உள்ளதா என்று ஆராய்வதும் அரசனுடைய அன்றாட அலுவல் களல்ல. அவற்றைச் செய்ய நீதி மன்றங்களும், ஊர்க் காவற்படைகளும் உள. ஆனால் அரசனுடைய கடமை யாது? இதனை இதனால் இவன் முடிக்கும் என்று ஆய்ந்து அதனை அவன் கண் விடல்” (குறள் 517) என நீதி நூல் கூறுகிறது. திடீரென்று கோவலனைக் கொல்க என அரசன் கட்டள்ை இடவில்லை. "தேவியின் சிலம்பு கள்வன் கையில் இருந்தால் அவனைக் கொன்று அச் சிலம்பைக் கொணர்க” என்றுதான் கட்டளை இட்டான். இக் கட்டளை முறையானதுதான் எனினும் கள்வன் கையில் இருப்பது யாருடைய சிலம்பு? அது தேவியின் சிலம்பு தானா என்பதைப் பரிசோதித்து உண்மையை அறியவேண்டிய பொறுப்பைத் தக்கார் ஒருவரிடம் ஒப்படைக்காமல் ஊர்க் காப் பாளரிடம் இவ்வளவு பெரிய பொறுப்பை ஒப்படைத்ததுதான் அவன் செய்த பிழை. எனவே அதனை நன்கு இயற்ற வகையற்ற ஊர்க் காப்பாளர் பொற்கொல்லன் சொல்லையே வேதவாக்காக எடுத்துக்கொள்ள வேண்டிய பரிதாபமான நிலை ஏற்பட்டுவிடப் பாண்டியன் வழி செய்துவிட்டான். இதுதான் அவன் செய்த பிழை. பொற்கைப் பாண்டியன் மரபில் வந்தவன் இத்தகைய பிழையைச் செய்யக் காரணமாக அமைந்தது ஊழ் என்கிறார் அடிகள்,
"வினைவிளை காலம் ஆதலின் யாவதும்
சினைஅலர் வேம்பன் தேரானாகி......”
வினை விளைகாலம் என்ற ஆட்சி அற்புதமாக அமைக்கப் பெற்றுள்ளது. விளைகாலம்' என்ற வினைத் தொகை, பாண்டியன், கோப்பெருந்தேவி, கண்ணகி, மாதவி, மணி மேகலை முதலியவர்களைப் பொறுத்தமட்டில், வினை இனி விளையப்போகின்ற காலமாகவும் ', கோவலனைப் பொறுத்த மட்டில் “விளைந்துவிட்ட காலமாகவும்” பொருள் தந்து நிற்றலைக் காணலாம். இந்த அழகை நாம் கவனியாமல் விட்டு விடுவோமோ என்று கருதிய ஆசிரியர் அடுத்த அடியில்,
'தீவினை முதிர்வலைச் சென்று பட்டிருந்த -
கோவலன் தன்னை ....... 33 (கொலை. கா. 156)
என்று விவரிக்கின்றார். எனவே பாண்டியனுக்கு வினை விளைவதற்கு முன்பேகடிடக் கோவலனுக்கு அது விளைந்து முதிர்ந்து பயன்தரும் நிலையில் இருந்தது என்பதையும் நாம் உணரவைக்கின்றார். இதனால் ஒருவனுக்கு ஏற்படும் முடிவுக்கு மற்றவன் வினை நேரடிக் காரணமாகத் தேவை இல்லை.
இவ்வாறு கூறுவதில் ஆழ்ந்த கருத்தும் ஒன்றுண்டு. பாண்டியன் தவறிழைக்காவிடினும் கோவலன் தன் தீவினையின் பயனை அனுபவிக்க வேண்டிய கட்டத்திற்கு வந்துவிட்டான். பாண்டியன் நிமித்த காரணமாக அமைந்துவிட்டானே தவிர அவன் இன்றியும் கோவலன் தன் வினையை அனுபவித்தே இருப்பான். அன்றியும் கன்றிய கள்வன் கையது ஆகில்.” என்று அரசன் ஆணை இட்டிருத்தலின் கோவலன் கையி விருந்தது அரசியினுடையதா, அன்றா என்பதை அறிய வேண்டிய பொறுப்பு ஊர்க்காவலரையும், பொற்கொல்லனையும் சேர்ந்ததாகிவிட்டது. அவர்கள் தத்தம் கடமையிலிருந்து வழுவினால் அதற்கு அரசனை முழுப் பொறுப்பாக ஆக்கவும் முடியாது. தக்கவர்களைத் தேடிக் கடமையை ஒப்படைக்காத சிறு தவறே அரசன் செய்தான். அது கருதியே இறுதியில் கண்ணகிப் பெருமாட்டி விண்ணிடைத் தோன்றித்
‘தென்னவன் தீதிலன் தேவர்கோன்தன் கோயில்
நல்விருந்து ஆயினான்; நான் அவன்தன் மகள்" (வாழ்த்து 10)
என்று கூற முடிந்தது. இந்தச் சிறு பிழையை மன்னவன் செய்ததற்கும் காரணம் வினையே என்றும் அந்த வினைதானும், கோவலனைப் பற்றி அவனைக் கொல்வித்தற்குப் பாண்டியனை ஒரு கருவியாகவே கொண்டது என்றும் அடிகள் நம்மை உய்த் துணர வைக்கின்றார். -
இந்த அளவில் பாண்டியனை எளிதாக நாம் விடுவிப்பதானால் வினை விளைகாலம் என்று அவனுக்கு அடைமொழிகளை அடிகள் கூறியதன் கருத்தென்ன என்ற வினா எழலாம். மன்னன் இவ்வாறு கூறி முடித்த இருபத்து நான்கு மணி நேரத்திற்குள் அவன் தன் உயிரை இழக்க வேண்டிய சூழ்நிலை உருவாகப் போகின்றது. அவன், தானே தன் உயிரைப் போக்கிக் கொள்ள வேண்டிய அவலநிலை உருவாகின்றது என்பதைக் குறிப்பால் உணர்த்தவே வினை விளையப்போகின்ற காலம்” என்ற எதிர்காலப் பெயரெச்சப் பொருளும் கொள்ளும்படிக் கூறினார். முடிவு செய்வதில் சிறு தவறுதான் பாண்டியனு டையதே தவிரக் கோவலன் கொலைக்கு அவன் நேரான காரணமல்லன் என்பதே அடிகளின் தெளிந்த முடிவாகும். ஆனால் மேலோட்டமாகப் பார்க்கின்றவர்கள் கொலைக்கு நேர்க்காரணமாகப் பாண்டியனைப் பழித்துக் கூறுவர். அது அவ்வளவு சரியன்று என்று காட்டவே அடிகள் இத்துனைப் பாடுபடுகின்றார். அரசன் ஆணையிட்டவுடன் பொற்கொல்லன் சேவகர்களை அழைத்துக் கொண்டு கோவலனிடஞ் சென்றான் என்று கூறும் பொழுதேகூட தீவினை முதிர்வலை சென்று பட்டிருந்த கோவலன்' என்று அடிகள் கூறுவதன் நோக்கம் பாண்டியன் மேல் வரும் அடாப்பழியின் அளவைக் குறைக்கவே யாகும்.
இனி இறுதியாக அடிகள் வினைபற்றிப் பேசுவது கோவலன் வெட்டுண்டு வீழும் பகுதியிலாகும். தண்டனை வழங்கவந்த ஊர்க்காவ்லருள் அறிவுடையவர்களும் இருந்தனர் என்பதை ஆசிரியர் குறிப்பால் உணர்த்துகிறார். கோவலனைக் கண்ட சேவகன் ஒருவன் இலக்கணமுறைமையின் இருந்தோன், ஈங்கு இவன் கொலைப்படுமகன் அலன்”என்று கூறுகிறான். (கொலை 112) இவ்வாறு ஒருவன் கூறியவுடன் பொற்கொல்லன் அஞ்சிவிட்டான். தன்திருட்டு வெளியாகிவிடுமோ என்று அஞ்சிய அவன், கட்டுக் கதைகள் பல பேசிக் காவலர் மனத்தில் குழப்பத்தை உண்டாக்கிவிட்டான். என்றாலுங்கூட வந்த காவலர் கோவலனைக் கொல்லத் துணியவில்லை. இந்நிலையில் தீவினைமுதிர்வலை வேலை செய்யத் தொடங்குகிறது. அதுவே வந்த காவலருள் கல்லாக் களி மகன் ஒருவனைப் பற்றிக் கொண்டது. உடனே அக் களிமகன் தன் வாளால் கோவலனை வெட்டினான். கோவலன் வீழ்ந்து இறந்தான் என்று கூறவந்த ஆசிரியர்,
“மண்ணக மடந்தை வான்துயர் கூர,
காவலன் செங்கோல் வளைஇய வீழ்ந்தனன்
கோவலன் பண்டை ஊழ்வினை உருத்து”. (கொலை. 215.)
என்று கூறுவதைச் சற்று நின்று நிதானித்துப் பார்க்க வேண்டும். கோவலன் பண்டை ஊழ்வினை உருத்தலின் வீழ்ந்தனன் என்பதால் அவன் இறப்பிற்கு அவனுடைய பழமை யான ஊழே காரணமாயிற்று என்பதை அறிய வைக்கின்றார். பாண்டியன் தவறுதான் இந்நிலைக்குக் காரணமாயிற்றோ என்று ஐயுறுவார் உண்டாயின் அவர்கட்கு விடை கூறுமுகமாகப் பண்டை ஊழ்வினை உருத்தலின் கோவலன் வீழ்ந்தனன்’ என்றார். எனவே பாண்டியன்மேல் முழுப் பழி சுமத்துவது பொருந்தாச் செயலேயாம்.
'எய்தவனிருக்க அம்பை நோதல் ஆகாது’ என்னும் முதுமொழி நினைவிற்கு வரவேண்டிய நேரம் இது. அம்புதான் கொன்றது என்றாலும் எய்தவனே முழுக் காரணமாவான் வெறும் கருவியாக நின்று எய்தவனின் கருத்தை நிறைவேற்றி விட்டு அம்பு கொன்றது என்ற வீண் பழியையும் சுமக்கின்றது அம்பு. அதுபோல இப்பொழுது பாண்டியன் கருவியாக நின்று வீண்பழி சுமக்கின்றான். அவன் நேரடிக் காரணமாக இல்லாவிடினும் இப்பழி அவனை வந்து அடைவதே வினை விளை காலமாயிற்று” மன்னனுக்கு அந்த வினைவிளை காலம்'மற்றோர் எதிர்பாராத காரியத்தையும் செய்துவிட்டது. பொற்கைப் பாண்டியன் மரபில் வந்த ஒருவனுடைய செங்கோல் வளைந்தது என்ற பழியையும் வாங்கித் தந்துவிட்டது. இதனையே அடிகள் காவலன் செங்கோல் வளைஇய வீழ்ந்தனன்' என்கிறார். வளைஇய என்ற வினையெச்சம் செய்யிய'என்ற வாய்பாட்டினடியானது ஆகலின் வளையும்படியாக'(வளைவான் வேண்டி) என்ற பொருள்களைத் தந்து நிற்கின்றது.
இளங்கோவடிகள் ஊழை அழைக்கும் இந்த நான்கு இடங்களையும் விரிவாகக் கண்ட இந்நிலையில் எந்த அடிப் படையில் ஊழைப் பயன்படுத்துகிறார் என்பதை ஒருவாறு அறிந்து கொள்ள முடிகின்றது. மனிதனுக்குப் பகுத்தறிவு என்று ஒன்று தரப்பெற்றுள்ளது. எனவே அதனைப் பயன்படுத்திச் செய்யத் தகுவன எவை, தகாதன எவை என்பதை அவன் அறிதல் வேண்டும். தகாதவற்றைச் செய்தால் அவற்றிற்குரிய தண்டனையை அல்லது பயனை அனுபவித்தே தீரல் வேண்டும். விஷம் உயிரைப் போக்கும் என்று அறிந்த ஒருவன் அதனை உண்டால் உயிர்போவது உறுதி. ஒன்று நஞ்சா இல்லையா என்பதை அறிய மனிதனுடைய அறிவு உதவுகிறது. இந்த அறிவு இல்லாத விலங்குகள் உற்றுணர்வின் மூலமே தங்கட்கு ஆகாத வற்றை அறிந்து கொள்கின்றன. மனிதனைப் பொறுத்தவரை இந்தப் பகுத்தறிவு அதிகச் சிறப்பைத் தருவதுடன் அதிகப் பொறுப்பையும், அதிகக் கடமையையும் தந்துவிடுகிறது. எனவே அவன் அறிவைப் பயன்படுத்தித் தீது ஒரீஇநன்றின்பால் உய்க்க (குறள் 422) வேண்டிய பொறுப்பு அவனுடையதாகிறது.
அவனுடைய உணர்ச்சிகள் அறிவு அறிவுறுத்துவதற்கு எதிர்மாறானவற்றை விரும்புவதும் உண்டு. அத்தகைய சந்தர்ப்பங் களில் உணர்வுகளை அடக்கி அறிவு காட்டும் பாதையில் செல்ல வேண்டியது மனிதன் கடமையாகிறது. ஆனால் எல்லாராலும் எல்லாக் காலங்களிலும் இவ்வாறு செய்ய இயலுவதில்லை. இத்தகைய சந்தர்ப்பங்களில் இரண்டு வகையில் நிகழ்ச்சி நடை பெறுகிறது. அனைத்து அறிவும் உடைய ஒருவன் உணர்ச்சிகளால் உந்தப்பெற்று அறிவு தொழிற்படாமல் போகின்ற அளவு சென்று - விடுகிறான். இத்தகைய நேரங்களில் அவனுடைய கல்விஅறிவு, கேள்வி அறிவு, பட்டறிவு ஆகிய எதுவும் அவனுக்குக் கை - கொடுக்க முன்வருவதில்லை. சினம், பொறாமை முதலிய உணர்ச்சிகள் தம் அளவில் அதிகம் தலைதூக்கும்பொழுது ஏனைய கருனை, அன்பு, இரக்கம் முதலிய உணர்ச்சிகள்கூட விடைபெற்றுக் கொள்கின்றன. கோவலன் கானல்வரியின் பின்னர் நடந்துகொண்ட முறை இவ்வகையின் பாற்படும். அவனுடைய நூலறிவு, கேள்வி அறிவு என்பவை பயன்படாமற். போனதுடன் இதுவரை மாதவியுடன் வாழ்ந்து, அவள் பண்பாடு மிகுதியும் உடையவள் என்பதை அறிந்திருக்கக் கூடிய பட்டறிவும் பயன்படவில்லை. அறிவு தொழிற்படாமற்போனது ஒரு புறம். இரக்க உணர்ச்சி அல்லது அன்பு முதலிய யாதேனும் ஒர் உணர்ச்சி வெளிப்பட்டிருந்தாற்கூட மாதவியை இவ்வாறு தண்டிக்க மனம் ஒருப்பட்டிருக்கமாட்டான். திடீரென்று மாதவி பாடிய பாட்டின் மேல் ஏற்பட்ட வெறுப்பினால் இவ்வாறு செய்து விட்டான் என்று கொள்ளவும் முடியவில்லை. திடீரென்று தோன்றும் சினம் அல்லது வெறுப்பு ஒரு நாள் முழுவதும் இருந்து மறுநாளும் நீடிக்கும் என்று கூற முடியாது. வசந்தமாலை கொணர்ந்த கடிதத்தை வாங்க மறுத்ததுடன் சுடு சொற்களால் ஏசியும் விட்டான். கானல்வரிப் பாட்டைக் கேட்டவுடன் என்ன சொற்களால் ஏசினானோ அதே சொற்களை அதாவது அவள் பொதுமகள் என்பதை மறுமுறையும், ஆடன்மகளே ஆகலின் பாடு பெற்றன. அப் பைந்தொடி தனக்கு'(வேனி, கா. 10) என்ற முறையில் பேசிவிட்டான். எனவே அவனுக்கு நேர்ந்த மனமாற்றம் திடீரென்று தோன்றிய வெறுப்புணர்ச்சியன்று.
ஆழமாகப் பதிந்துவிட்ட இந்த வடுவிற்கு மாதவி எவ்விதத் திலும் காரணமில்லை என்பதை நாம் அறிவோம்
காட்டில் மனைவியுடன் செல்லும்பொழுது கோசிகமாணி கொணர்ந்த ஒலையைப் பார்த்தவுடன் முதலில் கோவலனுக்குத் தோன்றிய எண்ணம் அவனைக் காட்டிக் கொடுத்து விடுகிறது. உடன் உறைகாலத்து உரைத்த நெய்வாசத்துடன் (புறம் 83) கூடிய அவள் ஒலையைப் பார்த்தவுடன் அவனுக்கு உடனடியாகத் தோன்றிய எண்ணம் தன் தீது இலள்" (புறம்.94) என்பதாகும். எனவே அவன் சினம் இந்த இடைவெளி நாட்களில் தணியவில்லை என்று தெரிகிறது.
இத்துணைக் குரோத மனப்பான்மை வருவதற்கு அவள் என்ன குற்றஞ் செய்தாள் என்று அவன் ஆராய்ந்து பார்த்ததாகத் தெரியவில்லை. கற்றறிவுடைய ஒருவன் ஏன் இவ்வாறு செய்தான்? இந்த வினாவிற்கு இன்றாவது நம்மில் யாரேனும் தகுந்த காரணம் கூற முடியுமா? பல்லாண்டுகள் ஒருத்தியுடன் வாழ்ந்து, அவளிடம் ஒரு குழந்தையையும் பெற்றுவிட்டு அதற்குத் தன் குல தெய்வத்தின் பெயரையும் வைத்துவிட்டுத் திடீரென்று கானல்வரிப் பாடலைக் கேட்டவுடன. மாயப் பொய் பலகூட்டும் மாயத்தாள்’ (கா.வரி 52) என்ற முடிவுக்கு வந்தால் என்ன செய்வது? ஏன் இந்த முடிவிற்கு வந்தான்? எவ்வாறு வந்தான்? அறிவால் ஆராய்ந்து வந்தானா?அனுபவத்தால் நாள்தோறும் கண்டு இம்முடிவிற்கு வந்தானா? பிறரிடம் இதுபற்றி ஆலோசித்து வந்தானா? இந்த வினாக்கள் ஒன்றனுக்காவது அன்றும், இன்றும் என்றைக்குமே யாரும் விடை கூறமுடியாது. இத்தகைய ஒரு குழ்நிலையில்தான் அடிகள் ஊழை இழுத்து வருகின்றார்.
கானல்வரி இன்றேனும் இது நடந்திருக்கும் என்பதைக் குறிப்பால் உணர்த்துவதற்காக யாழ் இசைமேல் வைத்துத் தன் ஊழ்வினை வந்து உருத்த தாகலின்” (கா.வரி 52) என்று கூறுகிறார். அவனுடைய விதி அவனை மதுரைக்கு அழைத்து விட்டது. ஏதாவது ஒரு நொண்டிக் காரணம் வேண்டுமே. அந்தக் காரணத்திற்கு யாழ் இசை பயன்பட்டது என்று அறிகிறோம். ஊழ் வேலை செய்யும் வகைகளில் ஒன்றைக் காணும் வாய்ப்பை இளங்கோவடிகள் இந் நிகழ்ச்சியில் தந்துள்ளார்.
அடுத்துள்ள ஒரு நிகழ்ச்சி விதியின் வலிமையை அறிவுறுத்துவதாகும். விதியின் செயலைத் (inexorable fate) தடுத்து நிறுத்தல் சாதாரன மக்கட்கு இயலாத காரியம். எந்த வினாடியில் தொடங்குகிறதோ அதிலிருந்து அக்காரியம் முடிகின்றவரை விதியினால் உந்தப் பெறுபவர்கள் செயல்கட்கு அவர்கள் பொறுப்பாவதில்லை. மனைவி சிலம்பைக் காட்டியவுடன் அதையே முதலாகக் கொண்டு மதுரை சென்று பொருளிட்ட வேண்டும் என்ற எண்ணத்தை அவனுக்கு உண்டாக்கியதே விதிதான்.
அடுத்துள்ள நிகழ்ச்சியில் வினை வேறு விதமாக விளை யாடுகிறது. மரணத்தை நோக்கிக் கோவலனைப் பிடர் பிடித்து உந்திச்செல்லும் விதி பாண்டியன் மரணத்தையும் பின்னுகிறது. முன்பின் ஒருவரை ஒருவர் பார்த்திராத கோவலனும் பாண்டியனும் ஒருவர் மரணத்திற்கு மற்றொருவர் காரணமாகின்றனர். அதைவிட விந்தை யாதெனில் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளாமலே மடிகின்றனர். பாண்டியன் அவசரத்தால் கோவலன்மடிகிறான். குற்றமற்ற கோவலன்மரணம் அவசரக்கார மன்னனுடைய மரணத்திற்கு நேர் காரணமாகிறது, யான் 'கன்றியகள்வன் கையில் என் தேவியின் சிலம்பு இருந்தால் அவனைக் கொன்று, கொணர்க என்றுதான் கட்டளையிட்டேன். அது தேவியின் சிலம்பா இல்லையா என்று பார்க்கத் தவறியது காவலர் பிழையேதவிர என் பிழையன்று” என்று பாண்டியன் எதிர் வழக்காடி இருக்கலாம். ஒருவேளை அவன் இவ்வாறு கூறி யிருந்தால் கண்ணகியின் கட்சி வலுவிழந்திருக்கும். ஆனால் பாண்டியனை அவ்வாறு நினைக்கக்கூட விடவில்லை விதி. பொன் செய் கொல்லன் தன் சொற்கேட்ட யானே கள்வன்'(வழ. கா 75) என்று கூறிக்கொண்டவுடன் அவன் மரணமடைகிறான். விதி சிரிக்கின்றது! அவன் மரண தண்டனை பெறவேண்டிய குற்றம் என்ன செய்தான்? கோவலன் மரணத்திற்குக் காரணம் கூறமுடியாததுபோல் பாண்டியன் மரணத்திற்கும் வேறு காரணம் கூறமுடியாது. அதனைக் காட்டவே அடிகள் வினை விளை காலம் என்றார்.
இந்தக் கொடுநாடகத்தில் எப்பங்கும் பெறாத கோப்பெருந் தேவி ஏன் உயிரிழக்கவேண்டும்? 'வினை விளைகாலம்”என்ற பொதுச் சொற்கள், கோவலன், பாண்டியன், கோப்பெருந்தேவி, கண்ணகி என்பவருடன் நில்லாமல் இடையர்குலக் கொடி மாதரி முதல் பலரையும் பற்றி நிற்கக் காண்கிறோம். காவிரிப்பூம் பட்டினத்திருந்த கோவலன் தாய், தந்தையர், மாமன், மாமியர், அவன் மனைவியாகவே வாழ்ந்த மாதவி அவள் மகள் மணி மேகலை ஆகிய அனைவரையும் அச்சொற்கள்பற்றி நிற்கின்றன. இத்துணை பேருக்கும் வினை விளைந்து பயன்தரும் நிலையில் இருந்தது. அனைவருக்கும் ஒருசேரப் பயன்தர ஏதாவது ஒன்று காரணமாக அமையவேண்டும். யாரைப்பற்றினால் இத்தனை பேரையும் அழிக்க முடியும் என்று விதி ஆராய்ந்து பார்த்து இறுதியாக முடிவு எடுத்ததுபோலும்!
என்ன அற்புதமான முடிவு எடுத்தது! ஒரு சில சொற்கள் கூறினான் பாண்டியன். ஆம் ஆராயாமற் கூறியவைதாம் அச்சொற்கள். சினை அலர் வேம்பன் தேரான் ஆகி"என அடிகளும் அதனைச் சுட்டுகிறார். ஏன் தேர்ந்து சொல்லவில்லை? மரண தண்டனை வழங்க முற்படும் ஒருவன் ஒரு வினாடியில் முடிவுக்கு வரலாமா? இப்படி முன்பின் ஆராயாமல் முடிவெடுப் பவன் எவ்வாறு அரசனாக இருக்கமுடியும் என்று வினாவத் தோன்றுகிறதா? அதற்காகவே அடிகள் இத்தனை பேருக்கும் வினை விளைகாலம் வந்துவிட்டதாகலின், அந்த வினைகள் ஒன்றுகூட முன்பின் யோசியாமல் அவனைப் பேசச் செய்து விட்டன என்கிறார்.
இறுதியாக உள்ள பகுதியில் விதியின் மற்றோர் விளை யாட்டைக் குறிக்கிறார் அடிகள். மன்னன் செங்கோலை வளைப் பதற்காகவே கோவலன் வெட்டுண்டான் போலும் என்று நாம் கருதும் வகையில் வளைஇய வீழ்ந்தனன் என்றார். ஆனால் உண்மை அதுவன்று என்கிறார் அடிகள். கோவலன் பண்டை ஊழ்வினை உருத்தலினால் வீழ்ந்தனன்” என்ற அடிகளால் இத்தவறான எண்ணம் வாராமல் தடுக்கிறார். அப்படியானால் அவன் மரணத்திற்கும் செங்கோலின் வளைவிற்கும் தொடர் பில்லையா எனில், காக்கை ஏறப் பனம்பழம் வீழ்ந்தது என்ற அளவில்தான் தொடர்பு என்று கொள்ளவேண்டும்.
செய்ய என்ற வாய்பாட்டிற்குச் செய்வான் வேண்டி என்ற பொருளுங் கூறலாம். அவ்வாறாயின் செங்கோலை வளைப்பான் வேண்டி வீழ்ந்தான் போலும் என்று நாம் எண்ணுமாறு செய்து விட்டது விதி தன் ஊழ்வினை உருத்தலின் வீழ்ந்தான் என்பது உண்மை. ஆனால் காண்பவர் செங்கோலை வளைப்பதற்காகவே வீழ்ந்தான் என்று சொல்லும்வண்ணம் நிகழ்ச்சி அமைந்து விட்டது. நிகழ்ச்சி தானாகவே அவ்வாறு அமைந்து விட்டதா? இல்லை. வினை விளைகாலத்தின் கோலம் இது எனக் குறிப்பால் உணர்த்துகிறார் அடிகள்.
இதுகாறும் கூறியவற்றைக் கருத்திற்கொண்டு பார்த்தால் சில அடிப்படைகள் நன்கு விளங்கும் அர்த்தமற்ற சாதாரணச் செயல்கட்கும் அறிவினால் ஆராய்ந்து பார்த்துக் காரணகாரிய விளக்கம் தரக்கூடிய நிகழ்ச்சிகட்கும் இளங்கோ ஊழைக் காரணம் காட்டவில்லை. மனித அறிவின் எல்லையில் நின்று ஆராய்ந்து பார்த்தாலும் காரணகாரியத் தொடர்போ விளக்கமோ தரமுடியாத நிகழ்ச்சிகளைக் கூறும் பொழுதுதான் விதி அழைக்கப்படுகிறது. கணிதநூலர் காட்டும் (Law of Probability) க்கும் அப்பாற்பட்டதையே விதி என அடிகள் குறிக்கின்றார் என்பதை அறிய முடிகிறது. சிலம்பில் ஊழ் பலகாலம், பலகாலும் சிந்தித்துத் தெளிவு பெறவேண்டிய ஒரு பகுதியாகும்.