Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து அலகையா வைக்கப் படும்


Guru

Status: Offline
Posts: 7329
Date:
உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து அலகையா வைக்கப் படும்
Permalink  
 


உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து
அலகையா வைக்கப் படும்

(அதிகாரம்:புல்லறிவாண்மை குறள் எண்:850)

பொழிப்பு (மு வரதராசன்): உலகத்தார் உண்டு என்று சொல்வதை இல்லை என்று கூறுகின்ற ஒருவன், உலகத்தில் காணப்படும் ஒரு பேயாகக் கருதி விலக்கப்படுவான்.



மணக்குடவர் உரை: உலகத்தார் உண்டு என்று சொல்வதை இல்லை என்று கூறுகின்ற ஒருவன், உலகத்தில் காணப்படும் ஒரு பேயாகக் கருதி விலக்கப்படுவான்.
இஃது உயர்ந்தோர் உண்டு என்பதனை இல்லை என்றல் புல்லறிவு என்றது.

பரிமேலழகர் உரை: உலகத்தார் உண்டு என்பது இல் என்பான் -உயர்ந்தோர் பலரும் உண்டு என்பதோர் பொருளைத்தன் புல்லறிவால் இல்லை என்று சொல்லுவான்; வையத்துஅலகையா வைக்கப்படும் - மகன் என்று கருதப்படான்,வையத்துக் காணப்படுவதோர் பேய் என்று கருதப்படும்.
(கடவுளும், மறுபிறப்பும், இருவினைப் பயனும் முதலாக அவர் உள என்பன பலவேனும், சாதி பற்றி உண்டு என்றும், தானே வேண்டியகூறலால் ஒப்பும், வடிவால் ஒவ்வாமையும் உடைமையின் தன் யாக்கை கரந்து மக்கள் யாக்கையுள் தோன்றுதல்வல்ல 'அலகை' என்றும் கூறினார். இவை நான்கு பாட்டானும்உறுதிச்சொல் கொள்ளாமையது குற்றம் கூறப்பட்டது.)

வ சுப மாணிக்கம் உரை: உலகம் கூறும் உண்மையை மறுப்பவன் காணும் பேயாகக் கருதப் படுவான்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
உலகத்தார் உண்டு என்பது இல் என்பான் வையத்து அலகையா வைக்கப்படும்.

பதவுரை: உலகத்தார்-உலகோர்; உண்டு-உளது; என்பது-என்று சொல்லப்படுவது; இல்-இல்லை; என்பான்-என்று சொல்லுபவன்; வையத்து -உலகத்தில்; அலகையா-பேயாய்; வைக்கப்படும்-கருதப்படுவான்.


உலகத்தார் உண்டு என்பது இல் என்பான்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: உலகத்தார் உண்டு என்று சொல்வதை இல்லை என்று கூறுகின்ற ஒருவன்;
பரிப்பெருமாள்: உலகத்து அறிவுடையார் பலரும் உண்டு என்பதொரு பொருளை இல்லை என்று சொல்லுமவன்;
பரிதி: பெரியோர் உள்ளதென்று சொல்லுமதை இல்லை என்று சொல்பவன்;
காலிங்கர்: திருந்திய கேள்வியின் உயர்ந்தோர் தெரிந்து உண்டு என்னும் மெய்ப்பொருளை அஃது இல்லை என்று கழறுவான் யாவன் ஒரு புல்லறிவாளன்; [திருந்திய கேள்வி-நன்றாகத் தெரிந்து அறிந்த நூலறிவினை யுடையார்; கழறுவான் - இடித்துரைப்பான்]
பரிமேலழகர்: உயர்ந்தோர் பலரும் உண்டு என்பதோர் பொருளைத்தன் புல்லறிவால் இல்லை என்று சொல்லுவான்;

'உலகத்தார்/பெரியோர்/உயர்ந்தோர் உண்டு என்று சொல்வதை இல்லை என்று கூறுகின்ற ஒருவன்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'உலகத்தார் உண்டு என்று சொல்வதை இல்லை என்று கூறுபவன்', '(புல்லறிவாளன்) உலகத்தார் உண்டு என்று சொல்லுவதை இல்லையென்று மறுப்பான்', 'உயர்ந்தோர் உண்டென்று அறிந்து கூறுவதை இல்லை என்று கூறுகின்றவன்', 'உலகத்தார் உண்டு என்று கூறும் உண்மைகளை அறியாமையால் இல்லையென்பான்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

உலகோர் உண்டு என்று கூறுவதை இல்லை என்று சொல்பவன் என்பது இப்பகுதியின் பொருள்.

வையத்து அலகையா வைக்கப்படும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: உலகத்தில் காணப்படும் ஒரு பேயாகக் கருதி விலக்கப்படுவான்.
மணக்குடவர் குறிப்புரை: இஃது உயர்ந்தோர் உண்டு என்பதனை இல்லை என்றல் புல்லறிவு என்றது.
பரிப்பெருமாள்: இவ்வுலகின் கண்னே ஒரு பேய் என்று எண்ணப்படும் என்றவாறு.
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது உயர்ந்தோர் உண்டு என்பதனை இல்லை என்றல் புல்லறிவு என்றது.
பரிதி: பூமியில் பிசாசாய்த் திரிவன் என்றவாறு.
காலிங்கர்: அவனை ஈண்டு ஒரு மகன் என்று கருத அடாது; பின்னை என் எனின் பேய்களுடன் இவனும் ஒரு பேயாக வைத்து எண்ண அடுக்கும் என்றவாறு. [அடாது - பொருந்தாது; அடுக்கும்-பொருந்தும்]
பரிமேலழகர்: மகன் என்று கருதப்படான், வையத்துக் காணப்படுவதோர் பேய் என்று கருதப்படும்.
பரிமேலழகர் குறிப்புரை: கடவுளும், மறுபிறப்பும், இருவினைப் பயனும் முதலாக அவர் உள என்பன பலவேனும், சாதி பற்றி உண்டு என்றும், தானே வேண்டியகூறலால் ஒப்பும், வடிவால் ஒவ்வாமையும் உடைமையின் தன் யாக்கை கரந்து மக்கள் யாக்கையுள் தோன்றுதல்வல்ல 'அலகை' என்றும் கூறினார். இவை நான்கு பாட்டானும் உறுதிச்சொல் கொள்ளாமையது குற்றம் கூறப்பட்டது. [உறுதிச்சொல் - நன்மை பயக்கும் சொல்]

'உலகத்தில் காணப்படும் ஒரு பேயாகக் கருதி விலக்கப்படுவான்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். பரிதி 'பிசாசாகவே திரிவான்' என்றார்.

இன்றைய ஆசிரியர்கள் 'உலகத்தில் அஞ்சத்தக்க பேயாகக் கருதப்படுவான்', 'அவன் உலகத்தை மருட்டும் ஒரு பேயாகக் கருதப்படத்தக்கவன்', 'உலகத்தாரால் பேயனாகக் கருதப்படுவான்', 'உலகத்தில் பேயாக (அஞ்சத் தக்கதாக)க் கருதப்படுவான்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

உலகத்துக் காணப்படும் ஒரு பேயாகக் கருதப்படுவான் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
உலகோர் உண்டு என்று கூறுவதை இல்லை என்று சொல்பவன் உலகத்துக் காணப்படும் ஒரு அலகையா கருதப்படும் என்பது பாடலின் பொருள்.
'அலகை' என்பது என்ன?

தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள் என்று சொல்லிக்கொண்டே இருப்பான் புல்லறிவாளன்.

உலகோர் 'உண்டு' என்று கூறும் ஒன்றை 'இல்லை' என்று சொல்லும் ஒருவன் வையத்துக் காணப்படுவதோர் பேயாகக் கருதப்படுவான்.
'நமக்குச் சிறந்த அறிவு உள்ளது' என்று தன்னைத் தானே பெரிதாக மதிக்கும் செருக்கு உள்ளது புல்லறிவாகும். அதனால் புல்லறிவாளன் யார் எத்துணை எடுத்துரைத்தாலும் சரியானதை ஏற்கமாட்டான், அவன் தானாகவும் அறியமாட்டான்; பிறர் சொன்னாலும் கேட்கமாட்டான்; ஆயினும் எல்லாம் அறிந்தான் போலக் காட்டிக் கொள்வான்; உலகியல் எண்ணான்; மற்றவர்களிடம் பழகிடும் முறை பற்றி அறியான். இத்தகைய சிற்றறிவுடைய ஒருவன் உலகத்தில் ஒரு பேயாகக் கருதப்படுவான்.

செருக்குடன் திரியும் புல்லறிவாளன் கடுமையான மொழியில் இங்கு இகழ்ந்துரைக்கப்படுகின்றான். உலகத்து மக்கள் சொல்கின்ற உண்மையை அவன் இல்லை என்று திரும்பத் திரும்ப மறுத்துச் சொல்வான். பால் வெண்மை நிறம் என்றால் புல்லறிவாளன் இல்லை என்று மறுத்துக்கொண்டே இருப்பான். அவனை அலகையாக வை என்று மிக வெறுப்புடன் வள்ளுவர் கூறுகிறார். உலகம் கூறும் உண்மையை மறுக்கும் புல்லறிவாளனின் சிறுமையை உணர்த்தும் நோக்கில் அவன் காட்சிதரும் பேயாகக் கருதப்படுவான் என்று சொல்வது இக்குறள்.
உலகத்தார் உண்டென்று கூறும் பொருள்கள் கடவுள் அல்லது சமயம் சார்ந்த நம்பிக்கைகளான மறுபிறப்பு, பிறவிச்சுழற்சி, வினைப்பயன்கள், வீடு, தீயுழி (நரகம்) போன்றன எனச் சிலர் கூறினர். ஆனால் இவை புல்லறிவாண்மையில் சொல்லப்படவேண்டிய பொருள்கள் அல்ல. உலகப் பொருள்களைப் பொதுவகையால் கூறுவதே பொருத்தம்.
புல்லறிவாளவனைக் கண்டால் பேயைப் பார்த்ததுபோல் அஞ்சி விலகிச்செல்வர் என்று பலர் உரை செய்தனர். பேய் பற்றிய பயம் மாந்தர்க்கு உண்டு; ஆனால் சிற்றறிவு உடையவனைப் பார்த்து யாரும் அஞ்சுவதில்லை. எனவே அஞ்சுவர் என்று கூறுவதினும் 'பேய்பிடித்தவன்போல பிதற்றுகிறான் பார்' என்று இழிவாகக் கூறப்படுவதாகக் கொள்வது பொருத்தமாகும்.
'அலகை உலகத்தோடு ஒத்துப் பேசாமையேயன்றித் தன்வாழ்விற்காகப் பிறரைப் பிடித்து நலிவிக்கும் பிடிவாதம் உடையது. அதுபோல இவனும் பிறரை நலிவிக்கும் பிடிவாதகுணம் உடையவனாவன் என்பதாம்' என்பார் ச தண்டபாணி தேசிகர்.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும் (இல்வாழ்க்கை 50 பொருள்: உலகத்தில் வாழவேண்டிய முறையில் வாழ்கின்றவன், வானுலகத்தில் உள்ள தெய்வநிலையில் வைத்து மதிக்கப்படுவான்.) என்ற பாடல் எப்படி நெறிப்பட வாழ்பவனைப் புகழ்கிறதோ அதுபோல, இக்குறள் உலகம் உண்டு என்பதனை இல்லை என்று சொல்லும் செருக்குள்ள அறிவுக்குறையுடையவனை இகழ்வதாகக் கொள்வர்.

'அலகை' என்பது என்ன?

பேய், பிசாசு என நாம் அறிந்து கொண்டுள்ளது அலகையாகும். பேய் என்பது அச்ச உருவெளித் தோற்றத்தின் உருவகம் அதாவது அச்சமூட்டும் உருவமில்லாத பொருளைக் குறிக்கும். பேயாவது தனக்கு விதித்த வாழ்நாள் முடியும் முன்னர் துயரச் சாவு எய்தியவர்கள் வாழாத மிச்ச நாட்களை உருவமின்றி, அலமந்து, பயனின்றித் திரிந்து கழிக்கும் என்பது மக்களின் பொதுவான நம்பிக்கை. பேய் என்ற சொல்லைக் கேட்டதுமே அச்சமும் அருவருப்பும் உண்டாகும். அது உலகத்தை மருட்டும் தன்மை கொண்டது. பேய்களை யாரும் பார்த்ததில்லை. ஆனால் மக்கள் பேய்களை வெறுக்கின்றனர்.
உலகமுழுதும் ஒருமுகமாக உண்டு என்று சாதிப்பின், அதனை இல்லை என்று பேசுபவன் உலகத்தில் ஒரு மனிதன் அல்லன்; அவன் அலகையாக வைக்கப்படும் என்கிறது பாடல். அலகையா வைக்கப்படும் என்று சொல்லப்பட்டுள்ளதால் அலகை போன்றது என்பது பொருளாகிறது. பேய் போல்வான் என்பது இகழ்ச்சிக் குறிப்பாகும்; உலக வழக்கில் வசைமொழியாகவும் பழித்துரைப்பதற்கும் (சாபம் கொடுப்பதற்கும்) பயன்படுத்தப்படும் இழி சொல்லாக 'அலகை' உள்ளது.

உலகோர் உண்டு என்று கூறுவதை இல்லை என்று சொல்பவன் உலகத்துக் காணப்படும் ஒரு பேயாகக் கருதப்படுவான் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

புல்லறிவாண்மை இகழப்பட வேண்டியது.

பொழிப்பு

உலகத்தார் கண்ட உண்மைகளை இல்லை என்பவன் பேயாகக் கருதப்படுவான்.



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
RE: உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து அலகையா வைக்கப் படும்
Permalink  
 


ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்

வானம் நணிய துடைத்து.         குறள் 353: மெய்யுணர்தல்

மு.வரதராசனார் உரை: ஐயத்திலிருந்து நீங்கி மெய்யுணர்வு பெற்றவர்க்கு அடைந்துள்ள இவ்வுலகை விட அடைய வேண்டிய மேலுலகம் அண்மையில் உள்ளதாகும்.

ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே

மெய்யுணர்வு இல்லா தவர்க்கு.         குறள் 354:மெய்யுணர்தல்

மு.வரதராசனார் உரை: மெய்யுணர்வு இல்லாதவர்க்கு ஐந்து புலன்களின் வேறுபாட்டால் வளர்ந்த ஐந்து வகை உணர்வும் முற்றப்பெற்ற போதிலும் பயன் இல்லை.

கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்

மற்றீண்டு வாரா நெறி.                      குறள் 356: மெய்யுணர்தல்

மு.வரதராசனார் உரை: கற்க வேண்டிய வற்றைக் கற்று இங்கு மெய்ப் பொருளை உணர்ந்தவர் , மீண்டும் இப்பிறப்பிற்கு வராத வழியை அடைவர்.

ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப்

பேர்த்துள்ள வேண்டா பிறப்பு.  குறள் 357:மெய்யுணர்தல்

சாலமன் பாப்பையா உரை: பெரியவர்களிடம் கேட்டவற்றை மனத்துள் முழுமையாகக் கொண்டு, இடைவிடாமல் மெய்ப்பொருளை உணர்பவருக்குத் ‌திரும்பவும் ஒரு பிறவி இருக்கும் என்று எண்ண வேண்டா.

பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்

செம்பொருள் காண்பது அறிவு.         குறள் 358:மெய்யுணர்தல்

மு.வரதராசனார் உரை: பிறவித்துன்பத்திற்கு காரணமான அறியாமை நீங்குமாறு முக்தி எனும் சிறந்த நிலைக்குக் காரணமான செம் பொருளைக் காண்பதே மெய்யுணர்வு.



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

எவ்வது உறைவது உலகம் உலகத்தோடு
அவ்வது உறைவது அறிவு

(அதிகாரம்:அறிவுடைமை குறள் எண்:426)

பொழிப்பு (மு வரதராசன்): உலகம் எவ்வாறு நடைபெறுகின்றதோ, உலகத்தோடு பொருந்திய வகையில் தானும் அவ்வாறு நடப்பதே அறிவாகும்.

மணக்குடவர் உரை: யாதொருவாற்றா லொழுகுவது உலகம். அதனோடு கூடத்தானும் அவ்வாற்றா னொழுகுதல் அறிவாவது.
அறிவாவாது எத்தன்மைத்து என்றார்க்கு முற்பட உயர்ந்தாரோடு பொருந்த ஒழுகுதல் அறிவு என்றார்.

பரிமேலழகர் உரை: உலகம் எவ்வது உறைவது - உலகம் யாதொருவாற்றான் ஒழுகுவதாயிற்று, உலகத்தோடு அவ்வது உறைவது அறிவு - அவ்வுலகத்தோடு மேவித் தானும் அவ்வாற்றான் ஒழுகுவது அரசனுக்கு அறிவு.
('உலகத்தையெல்லாம் யான் நியமித்தலான் என்னை நியமிப்பாரில்லை,' எனக் கருதித் தான் நினைத்தவாறே ஒழுகின், பாவமும் பழியும் ஆம் ஆகலான். அவ்வாறு ஒழுகுதல் அறிவு அன்று என விலக்கியவாறு ஆயிற்று. இவை ஐந்து பாட்டானும் அதனது இலக்கணம் கூறப்பட்டது.)

இரா சாரங்கபாணி உரை: உலகம் எவ்வழியில் ஒழுகுகின்றதோ அவ்வழியில் உலகத்தோடு ஒத்து நடப்பது அறிவு.

பொருள்கோள் வரிஅமைப்பு:
உலகம் எவ்வது உறைவது உலகத்தோடு அவ்வது உறைவது அறிவு.

பதவுரை: எவ்வது-எவ்வாறு, எந்த வகையால்; உறைவது-வாழ்வது, உறுதியாவது, ஒழுகுவது; தங்குவது; உலகம்-உலகம். உலகத்தோடு-உலகத்துடன்; அவ்வது-அவ்வாற்றால், அவ்வழியில், அந்த வகையால்; உறைவது-உறுதிபடுவது; அறிவு-அறிவு..


எவ்வது உறைவது உலகம்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: யாதொருவாற்றா லொழுகுவது உலகம்.;
பரிப்பெருமாள்: யாதொருவாற்றா லொழுகும் உலகம்;
பரிதி: பெரியோர் எப்படி நடந்தார்; அந்த ஒழுக்கத்திலே நடப்பது அறிவு என்றவாறு.
காலிங்கர்: இவ்வுலகத்து நீதிப்பொருள் உடையராகிய நாற்பெருங் குலத்தோர் எவ்வகையது ஆகிய நயத்தோடு ஒழுகுவது;
பரிமேலழகர்: உலகம் யாதொருவாற்றான் ஒழுகுவதாயிற்று,

'உலகம் எவ்வாறு ஒழுகுகிறதோ' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். உலகம் என்பதற்குப் பரிதி பெரியோர் என்றும் நற்பெருங் குலத்தோர் என்று காலிங்கரும் பொருள் கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'எங்ஙனம் போகின்றது உலகம்', 'உயர்ந்தோர் எவ்வாறு வாழ்கின்றார்களோ', 'உலக நன்மையைக் கருதி வாழ்வது அறிவுடைமையாகும். உலகம் நன்மையை நாடி எவ்வாறு வாழ்கின்றதோ', 'அப்போதைக்கு உலகப் போக்கு எப்படி யிருக்கிறதோ' என்றபடி உரை தந்தனர்.

எவ்வாறு உலகம் வாழ்கிறதோ என்பது இப்பகுதியின் பொருள்.

உலகத்தோடு அவ்வது உறைவது அறிவு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அதனோடு கூடத்தானும் அவ்வாற்றா னொழுகுதல் அறிவாவது.
மணக்குடவர் குறிப்புரை: அறிவாவாது எத்தன்மைத்து என்றார்க்கு முற்பட உயர்ந்தாரோடு பொருந்த ஒழுகுதல் அறிவு என்றார்.
பரிப்பெருமாள்: அவரோடு கூடத்தானும் அவ்வாற்றா னொழுகுதல் அறிவாவது.
பரிப்பெருமாள் குறிப்புரை: அறிவென்பது எத்தன்மைத்து என்றார்க்கு முற்பட உயர்ந்தாரோடு பொருந்த ஒழுகுதல் அறிவு என்றார்.
பரிதி: அந்த ஒழுக்கத்திலே நடப்பது அறிவு என்றவாறு.
காலிங்கர்: மற்று அவ்வகை(யதாகவே)என்றும் குறிக்கொண்டு நடப்பதே அறிவாவது என்று கூறப்பட்டது.
பரிமேலழகர்: அவ்வுலகத்தோடு மேவித் தானும் அவ்வாற்றான் ஒழுகுவது அரசனுக்கு அறிவு.
பரிமேலழகர் குறிப்புரை: 'உலகத்தையெல்லாம் யான் நியமித்தலான் என்னை நியமிப்பாரில்லை,' எனக் கருதித் தான் நினைத்தவாறே ஒழுகின், பாவமும் பழியும் ஆம் ஆகலான். அவ்வாறு ஒழுகுதல் அறிவு அன்று என விலக்கியவாறு ஆயிற்று. இவை ஐந்து பாட்டானும் அதனது இலக்கணம் கூறப்பட்டது. [நியமித்தலான்-ஒழுங்கு படுத்தி யாளுதலால்]

'உலகத்தோடு பொருந்த ஒழுகுவது அறிவு' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். மணக்குடவரும் பரிப்பெருமாளும் தங்களது கருத்துரையில் உலகத்தோடு என்பதற்கு உயர்ந்தாரோடு என்று பொருள் கொண்டனர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அங்ஙனம் ஒட்டி வாழ்வதே அறிவுடைமை', 'அவ்வாறே அவரோடு கலந்து வாழ்தல் அறிவுடைமைக்கு அடையாளம் ஆகும்', 'அவ்வாறு அந்த உலக நன்மைப் பொருந்த நாமும் வாழ்வதே அறிவுடைமையாகும்', 'அதை அனுசரித்து பொதுமக்களுடன் ஒட்டி நடந்து கொள்வது அறிவுடைமை' என்றபடி பொருள் உரைத்தனர்.

உலகத்தாரோடு அவ்வாறு பொருந்தி வாழ்வது அறிவுடைமையாகும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
எவ்வாறு உலகம் வாழ்கிறதோ உலகத்தாரோடு அவ்வாறு பொருந்தி வாழ்வது அறிவுடைமையாகும் என்பது பாடலின் பொருள்.
இக்குறள் ஆள்வோர்க்குக் கூறப்பட்டதா?

உலக நடைமுறைக்குத் தக ஒழுகுக.

உலகம் எவ்விதம் நடக்கின்றதோ அந்த வகையில் உலகோர்க்கு பொருந்தும் வகையில் நடந்து கொள்வதே அறிவு.
உலகப் போக்கு எவ்வாறு இருக்கிறதோ அதற்குத்தகத் தன்னை மாற்றி அமைத்துக்கொள்ளக்கூடிய திறன்பெறுவது அறிவாம். அதாவது உலகம் செல்லும் முறைமையில் தாமும் சென்று அந்நெறியில் படிந்து உறுதிபடவாழ்வது அறிவுடைமை.
உறைவது என்ற சொல்லுக்கு பல பொருள் உண்டு. இங்கு இச்சொல் இருமுறை பெய்யப்பட்டுள்ளது. முதலில் உள்ள 'உறைவது' வாழ்வது என்ற பொருளில் அதாவது 'உலகம் எந்த முறையில் வாழ்கிறதோ' என்ற கருத்துடன் அமையும். இரண்டாவது உறைதல் கெட்டியாவது (பனி உறைதல் போல) அல்லது உறுதிப்படுவது என்ற பொருளில் 'ஒருவர் வாழ்க்கை அவ்வாறே உறையவேண்டும்' என்ற கருத்தில் சொல்லப்பட்டது என்று தோன்றுகிறது.
உலகில் நல்லோரும் இருக்கின்றனர் தீயோரும் இருக்கின்றனர். பொதுவாகச் சமுதாயத்தின் இயல்பு நல்லதெனவே வள்ளுவர் கருதுவதால் அவர் உலகத்தோடு அமைந்து வாழக் கூறுகிறார்.
உலகம் என்பதற்கு உயர்ந்தோர், பெரியோர், சான்றோர், பண்பாளர், நல்லவர் என்று பொருள் கூறினர். உலகத்தோடு என்பது உலகத்தாரோடு என மக்கட்தொகுதியைப் பொதுமையிற் குறிப்பது என்று கொள்வதே பொருத்தம்.

மனிதன் சமுதாயத்தைச் சார்ந்தே வாழ்கின்றவன். அவன் தன் மனத்திற்குத் தோன்றுமாறோ, தான் கற்ற நூல் அறிவு கொண்டு மட்டுமோ உலகில் வாழ்க்கையை அமைத்துக்கொள்ளல் இயலாது; அது அறிவுடைமையும் ஆகாது. உலக வாழ்விற்கு வேண்டுவது உலகியல் அறிவு. அவனது தனி முயற்சி ஒரு புறம் அவனுக்குத் துணை நின்றாலும் தன்னைச் சுற்றியுள்ள உலகில் நிகழும் வளர்ச்சிக்கும் மாற்றத்துக்கும் ஈடுகொடுத்து ஏற்புத்திறனுடன் நடந்து கொண்டால் மட்டுமே அவன் ஆக்கம் பெறமுடியும். ஒன்றிய சூழ்நிலையொடு ஒத்துப்போனால் பயன் விரைந்தும் மிகுந்தும் வரும். உலகமும் நன்மை அடைய இயலும். இல்லாவிடில் ஒழுங்கமைவும் கெடும்.
கால நடப்புகளுக்கேற்ப உலகச் சிந்தனைகள் மாறிக்கொண்டே இருக்கும். எனவே உலகத்தாரிடை ஏற்படும் மாற்றங்களுக்குத் தக்கவாறு தன்னை மாற்றி அமைத்துக்கொள்ளக்கூடிய திறன் வளர்த்துக் கொள்வது அறிவுடைமை; அந்த நெகிழ்ச்சி இல்லாத மனிதன் வளர்ச்சியின்றி தேக்கமுறுவான். வாழ்வுமுறைகள், பழக்க வழக்கங்கள், உடை, எண்ணங்கள் இவை போன்ற அனைத்துக்கும் இது பொருந்தும்.
அவ்வப்போதைய உலகம் எங்ஙனம் இயங்குகிறதோ அதன் இயல்புக்கேற்றவாறு தம்முடைய வாழ்க்கையை மாற்றி அமைத்துக் கொள்ளுதல் அறிவுடைமை என்பது இக்குறள் கூறும் செய்தி.

அவ்வது என்றதற்கு அவ்வாறு அல்லது என்பது பொருள். அவ்வது எனும் சொல்லாட்சி புதுமையானது என்பர்.
இப்பாடலை உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும் கல்லார் அறிவிலா தார் (ஒழுக்கமுடைமை 140 பொருள்: உலகத்தோடு பொருந்த ஒழுகத் தெரியாதவர் பல கற்றிருந்தும் அறிவு இல்லாதவரே) என உலகத்தோடு ஒட்டி வாழும் ஒழுக்கமுறையைக் கூறும் குறட்கருத்தோடு ஒப்பு நோக்கத்தக்கது.

இக்குறள் ஆள்வோர்க்குக் கூறப்பட்டதா?

'உலகத்தோடு அவ்வது உறைவது அறிவு' என்ற தொடர்க்குப் பொருள் கூறும்போது 'அவ்வுலகத்தோடு மேவித் தானும் அவ்வாற்றான் ஒழுகுவது அரசனுக்கு அறிவு' என்று அரசனுக்குரிய அறிவின் இலக்கணம் சொல்வதாக இக்குறளைப் புரிந்துகொள்கிறார் பரிமேலழகர். மேலும் அவர் ''உலகத்தையெல்லாம் யான் நியமித்தலான் என்னை நியமிப்பாரில்லை' எனக் கருதித் தான் நினைத்தவாறே ஒழுகின், பாவமும் பழியும் ஆம் ஆகலான். அவ்வாறு ஒழுகுதல் அறிவு அன்று என விலக்கியவாறு ஆயிற்று' என விளக்கவுரையும் தந்தார். அவரைப் பின்பற்றி வேறு சில உரையாளர்களும் அக்கருத்தை ஒட்டியே பொருள் கூறினர். இக்குறள் 'உலகப் போக்கை எதிர்த்து நிற்கும் எந்த அரசும் வாழ முடியாது' என்றும் 'ஆள்வோர்க்கு உலக நடப்பை உணர்ந்து கொள்ளும் அறிவு வேண்டும். உலக நடப்போடு இணைந்து நடக்கும் திறமை வேண்டும். உலகப் போக்கை மதிக்காத மனப்பான்மை சர்வாதிகார அரசிடம்தான் இருக்கும். இது அறிவுடைமை ஆகாது' என்று இவர்கள் விளக்கம் செய்தனர். இவை அனைத்தும் மிகச் சிறந்த கருத்துக்கள்.
ஆனால் இப்பாடல் வாழ்வுமுறை மாறுதல்களை மக்கள் எவ்விதம் ஏற்றுகொண்டு நெகிழ்ச்சியுடன் வாழவேண்டும் என்பதை வலியுறுத்துவது. உலகம் பொல்லாதது என்று பழித்துக்கொண்டு ஒதுங்கியிருக்காமல் காலம் மாறுவதை அறிந்து தக்க மாறுதல்களைச் செய்து வாழ்பவன் அறிவுடையவன் ஆவான் என்பதைச் சொல்வது. எனவே இக்குறள், அரசர்க்கான அறிவின் இலக்கணம் மட்டும் சொல்வது என்றல்லாமல், மக்கள் அனைவருக்குக்குமான அறிவின் மற்றொரு இலக்கணம் கூறுவது எனக் கொள்வதே பொருத்தம்.

எவ்வாறு உலகம் வாழ்கிறதோ உலகத்தாரோடு அவ்வாறு பொருந்தி வாழ்வது அறிவுடைமையாகும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

கூட்டத்தில் இணைந்து கொள்வதே அறிவுடைமை.

பொழிப்பு

உலகம் எவ்வாறு வாழ்கிறதோ உலகத்தாரோடு அவ்வாறு பொருந்தி வாழ்வது அறிவு.



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

 

உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்

(அதிகாரம்:ஒழுக்கமுடைமை குறள் எண்:140)

பொழிப்பு (மு வரதராசன்): உலகத்தாரோடு பொருந்த ஒழுகும் முறையைக் கற்காதவர், பல நூல்களைக் கற்றிருந்த போதிலும் அறிவில்லாதவரே ஆவர்.



மணக்குடவர் உரை: அறிவிலாதார் பல நூல்களைக் கற்றாலும் உயர்ந்தாரோடு பொருந்த ஒழுகுதலை அறியார்.
இஃது ஒழுக்கமாவது உயர்ந்தாரொழுகின நெறியில் ஒழுகுதலென்பதூஉம் அவ்வொழுக்கம் கல்வியினும் வலி யுடைத்தென்பதூஉம் கூறிற்று.

பரிமேலழகர் உரை: உலகத்தோடு ஒட்ட ஒழுகல் கல்லார் - உலகத்தோடு பொருந்த ஒழுகுதலைக் கல்லாதார், பல கற்றும் அறிவிலாதார் - பல நூல்களையும் கற்றாராயினும் அறிவிலாதார்.
(உலகத்தோடு பொருந்த ஒழுகுதலாவது, உயர்ந்தோர் பலரும் ஒழுகிய ஆற்றான் ஒழுகுதல். அறநூல் சொல்லியவற்றுள் இக்காலத்திற்கு ஏலாதன ஒழிந்து, சொல்லாதனவற்றுள் ஏற்பன கொண்டு வருதலான் அவையும் அடங்க 'உலகத்தோடு ஒட்ட' என்றும் அக்கல்விக்குப் பயன் அறிவும், அறிவிற்குப் பயன் ஒழுக்கமும் ஆகலின், அவ்வொழுகுதலைக் கல்லாதார் 'பல கற்றும் அறிவிலாதார்' என்றும் கூறினார். ஒழுகுதலைக் கற்றலாவது, அடிப்படுதல். இவை இரண்டு பாட்டானும், சொல்லானும், செயலானும் வரும் ஒழுக்கங்கள் எல்லாம் தொகுத்துக் கூறப்பட்டன.)

இரா சாரங்கபாணி உரை: உலகத்தோடு பொருந்த ஒழுகுதலைக் கல்லாதவர் பல நூல்களைக் கற்றிருந்தாலும் அறிவில்லாதவரே.


பொருள்கோள் வரிஅமைப்பு:
உலகத்தோடு ஒட்ட ஒழுகல் கல்லார், பல கற்றும் அறிவிலாதார்.

பதவுரை:
உலகத்தோடு-உலகத்துடன்; ஒட்ட-பொருந்த; ஒழுகல்-நடந்து கொள்ளுதல்; பலகற்றும்-பலவற்றைக் கற்றுத் தேர்ந்திருந்தாலும்; கல்லார்-அறியார்; அறிவிலாதார்-அறிவில்லாதவர்கள்.


உலகத்தோடு ஒட்ட ஒழுகல் கல்லார்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: உயர்ந்தாரோடு பொருந்த ஒழுகுதலை அறியார்;
பரிதியார்: பல கல்வியைக் கற்றும் ஒழுக்கத்தைக் கல்லார் அறிவிலார்க்கு நிகராம்;
காலிங்கர்: உயர்ந்தோராகிய அந்தணர் முதலாக எண்ணப்பட்ட பெருமரபினருள் ஒருவன் இவ்வில்லற மரபினனாகலான் மற்றிவன் தானொழிந்த உயர்ந்தோர் கருத்தோடு பொருந்தத் தன் மன ஒழுக்கத்தை ஒழுகுதல் சிறந்தது;
பரிமேலழகர்: உலகத்தோடு பொருந்த ஒழுகுதலைக் கல்லாதார்;
பரிமேலழகர் குறிப்புரை: உலகத்தோடு பொருந்த ஒழுகுதலாவது, உயர்ந்தோர் பலரும் ஒழுகிய ஆற்றான் ஒழுகுதல்.

இப்பகுதிக்கு மணக்குடவர் 'உயர்ந்தாரோடு பொருந்த ஒழுகுதலை அறியார்' என்று உரை செய்தார். பரிதி 'ஒழுக்கத்தைக் கல்லார்' என்று கூறினார். காலிங்கர் உரை மக்களை உயர்ந்தோர், இல்லறத்தோர் என இரு பகுதியாக்கி இல்லறத்தாரை உயர்ந்தோர் கருத்தோடு ஒட்டுதல் வேண்டும் என்கிறது. பரிமேலழகர் 'உலகத்தோடு பொருந்த ஒழுகுதலைக் கல்லாதார்' என்றபடி உரை நல்கினார்.

இன்றைய ஆசிரியர்கள் 'உலகத்தோடு ஒட்டி ஒழுகத்தெரியாதவர்', 'உலகத்தோடு பொருந்த ஒழுகுதலைக் கல்லாதவர்', 'உலகப் போக்கை ஒட்டி நடந்து கொள்ளத் தெரியாதவர்கள்', 'உலக நன்மைக்குப் பொருந்த ஒழுகுதலைக் கல்லாதார்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

உலகத்தோடு பொருந்த ஒழுகத்தெரியாதவர் என்பது இப்பகுதியின் பொருள்.

பல கற்றும் அறிவிலாதார்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அறிவிலாதார் பல நூல்களைக் கற்றாலும்.
மணக்குடவர் குறிப்புரை: இஃது ஒழுக்கமாவது உயர்ந்தாரொழுகின நெறியில் ஒழுகுதலென்பதூஉம் அவ்வொழுக்கம் கல்வியினும் வலி யுடைத்தென்பதூஉம் கூறிற்று.
பரிதியார்: எப்படி என்றால், பலநூல் கற்றும் அதன் பயன் கொள்ளாதபடியினாலே என்றவாறு.
காலிங்கர்: மற்று அதனையும் அறிவிக்கின்ற மறை முதலாகிய நூல்கள் பலவற்றையும் கற்றறிந்தும் தம் ஒழுக்கத்தை அறியாதார் உலகத்தறிவு கேடு என்றவாறு.
பரிமேலழகர்: பல நூல்களையும் கற்றாராயினும் அறிவிலாதார்.
பரிமேலழகர் குறிப்புரை: அறநூல் சொல்லியவற்றுள் இக்காலத்திற்கு ஏலாதன ஒழிந்து, சொல்லாதனவற்றுள் ஏற்பன கொண்டு வருதலான் அவையும் அடங்க 'உலகத்தோடு ஒட்ட' என்றும் அக்கல்விக்குப் பயன் அறிவும், அறிவிற்குப் பயன் ஒழுக்கமும் ஆகலின், அவ்வொழுகுதலைக் கல்லாதார் 'பல கற்றும் அறிவிலாதார்' என்றும் கூறினார். ஒழுகுதலைக் கற்றலாவது, அடிப்படுதல். இவை இரண்டு பாட்டானும், சொல்லானும், செயலானும் வரும் ஒழுக்கங்கள் எல்லாம் தொகுத்துக் கூறப்பட்டன.

'அறிவிலாதார் பல நூல்களைக் கற்றாலும்' என்று மணக்குடவரும் 'பலநூல் கற்றும் அதன் பயன் கொள்ளாதபடியினாலே' என்று பரிதியும் 'மறைநூல்கள் கற்றிருந்தும் தம் ஒழுக்கத்தை அறியாதார் உலகத்தறிவு கெட்டவர்கள்' என்று காலிங்கரும் இப்பகுதிக்கு உரை கூறினர். 'பல நூல்களையும் கற்றாராயினும் அறிவிலாதார்' என்று பரிமேலழகர் உரைத்தார்.

இன்றைய ஆசிரியர்கள் 'பல கற்றிருந்தும் அறிவு இல்லாதவரே', 'பல நூல்களைக் கற்றிருந்தாலும் அறிவில்லாதவரே', 'எவ்வளவு படித்திருந்தாலும் அறிவில்லாதவர்கள்', 'பல நூற்களைக் கற்றிருந்தாரேனும் அறிவில்லாதவரே' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

பல கற்றிருந்தும் அறிவு இல்லாதவரே என்பது இப்பகுதியின் பொருள்.



நிறையுரை:
உலகத்தோடு ஒட்ட ஒழுகல் தெரியாதவர் பல கற்றிருந்தும் அறிவு இல்லாதவரே என்பது பாடலின் பொருள்.
'உலகத்தோடு ஒட்ட ஒழுகல்' என்பது என்ன?

என்னதான் கற்றிருந்தாலும் உலகத்தாரோடு பொருந்த ஒழுகத் தெரியாதவர் அறிவு இல்லாதவரே.
இக்குறளில் உலகத்தோடு ஒட்ட ஒழுகல் என்ற உலகியல் நடைமுறை சார்ந்த ஒழுகுமுறை உயர்த்திச் சொல்லப்படுகிறது. அவ்வொழுக்கம் நூற்கல்வி, கேள்வியறிவு போன்றவற்றால் பெறப்படும் ஒழுக்கநெறிகளைவிட சிறந்தது என்கிறது. உலகத்தோடு பொருந்த ஒழுகலைத் தெரிந்து கொள்ள வேண்டும் எனவும் அதைப் பயிலாதவன் 'பல கற்றோம் யாம்' என்று செருக்கித் திரிந்தாலும் அவன் மூடனே என்பது இக்குறள் கூறவரும் செய்தி.

ஒழுகல் என்பது தனிமனித விழுப்பங்கள் பற்றியது மட்டுமல்ல; தான் வாழும் சமுதாய மக்களுடன் ஒத்திசைந்து வாழும் முறைமையயும் அது குறிக்கும்.
எது நல்லொழுக்கம் எது தீயொழுக்கம் என்ற ஐயப்பாடு எல்லோருக்கும் எழுவது உண்டு. இதைத் தீர்க்கப் பழம் நூல்களில் எழுதி வைக்கப்பட்டுள்ளனவற்றைப் பின்பற்றினால் போதும் என்று நினைப்பவர்களுக்கு. 'அது தவறு; காலம் மாறிக்கொண்டே இருக்கும்; அந்தந்த காலத்திற்கு ஏற்றவாறு உலகத்தோடு பொருந்த ஒழுகுவதே அறிவுடைமை' என்று அறிவுரை கூறும் வண்ணம் இக்குறள் அமைந்துள்ளது. 'பழையன கழிதலும் புதியன புகுதலும் குற்றம் அல்ல, கால வேற்றுமை அது ஆதலால்' என்று நன்னூல் (உரியியல், 462) கூறும். மணவாழ்க்கை என்பது 'ஆயிரங்காலத்துப் பயிர்' என்றும் திருமணம் ஆன ஆணும் பெண்ணும் மனம் ஒன்றியிருந்தாலோ இல்லாவிட்டாலோ சாகும்வரை ஒரே இல்லத்திலே இருக்கவேண்டும் என்னும் இறுக்கமான ஒழுக்க நெறி மாறி இன்று மனங்கள் இணங்கவில்லையானால் மணம் முறியலாம் என்பது ஒத்துக் கொள்ளப்பட்ட நடைமுறையாக மாறியிருக்கிறது. இது உலகத்தோடு ஒட்ட ஒழுகல் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு. இது போலவே, கருத்தடை, கருக்கலைப்பு, செயற்கை மரணம் போன்றவற்றில் இன்று ஏற்படுகின்றனபோல் ஒழுக்க நெறி மாற்றங்கள் காலத்துக்குத் தக்கவாறு உண்டாகிக் கொண்டே இருக்கும். உலகத்தின் பொதுநடையைத் தெரிந்து பின்பு அதனை ஒட்டியே ஒழுகல் வேண்டும் என்பதைப் புரிந்துகொண்டு வாழ்க்கையை வாழக் கற்றுகொள்ளவேண்டும் என்கிறது பாடல்.

அறிவுடைமை அதிகாரத்தில் உலகம் தழீஇயது ஒட்பம்... (அறிவுடைமை 425 பொருள்: உலகத்தோடு ஒத்து வாழ்வது கெட்டிக்காரத்தனம்...) என்றும் எவ்வது உறைவது உலகம் உலகத்தோடு அவ்வது உறைவது அறிவு (அறிவுடைமை 426 பொருள்: உலகப் போக்கு எவ்வாறு இருக்கிறதோ அதற்குத்தகத் தன்னை மாற்றி அமைத்துக்கொள்ளக்கூடிய திறன்பெறுவது அறிவுடைமை) என்றும் உலகத்தோடு ஒத்து ஒழுகுதலை வலியுறுத்துவார் வள்ளுவர்.

'உலகத்தோடு ஒட்ட ஒழுகல்' என்பது என்ன?

உலகத்தோடு ஒட்ட ஒழுகல் என்பது 'ஊரோடு ஒத்து வாழ்' அதாவது பெரும்பான்மை மக்கள் எப்படி நடக்கிறார்கள் அதன்படி ஒழுகுவது' என்றும், 'உயர்ந்தோர் வகுத்தவழி செல்வது அதாவது நூல்களில் சொல்லியிருக்கிறபடி வாழ்தல்' என்றும், 'உலக மக்களோடு கலந்து பழகி ஒழுகுதலே ஒட்ட ஒழுகல்' என்றும் வேறுவேறு வகையாக விளக்கப்பட்டது.

உலகம் என்று சொன்னதற்குப் பெரும்பான்மை மக்களின் வழி என்று பொருள் கொள்ள வேண்டும் என்று சிலர் கூறுவர். இவர்கள் உலகத்தோடு ஒட்ட ஒழுகுதல் என்பதற்குத் தாம் வாழும் காலத்தின் சமுதாயத்தின் போக்கோடு இயைந்து போவது என்பார்கள். இது ஒருவகையில் மக்களாட்சிக் கோட்பாட்டைத் தழுவியது. ஆனல் இதை ஏற்க மறுப்பவர்கள் 'ஒரு பகுதியிலே வாழும் மக்களின் இயல்பென்பது அப் பகுதிச் சூழலுக்கான இசைவின் அம்சம். அதனோடு ஒட்டுறவு கொண்டிருத்தலே சரியான வாழ்வு முறைமை என்பது புரிந்து கொள்ளக் கூடியதே. ஆனால் ஊர்மக்கள் தவறான ஒழுக்க நெறி கூறினால் என்ன செய்வது? சில பகுதிகளில் குழந்தை மணம் இன்றும் நடைபெறுகிறது. ஊரார் கண்டு கொள்வதில்லை. கையூட்டு வாங்குதல் என்பது எங்கும் பரவி அமைப்புமுறை ஆக்கப்பட்டு உள்ளது. இவை போன்ற நெறி வகைகள் ஏற்கக்கூடியனவா? இவற்றையெல்லாம் நியாயப்படுத்தும் உலகத்தோடு எப்படி ஒத்து வாழ்வது? உலகம் என்ற சொல் பெரும்பான்மையர் என்ற அடிப்படையில் குறளில் ஆளப்பட்டிருக்க முடியாது என்பர் இப் 'பெரும்பான்மை மறுப்பாளர்கள்'.
இப்பாடலில் உள்ள உலகம் என்றதற்கு உயர்ந்தவர்கள் என்று பலர் உரை கண்டனர். இவர்கள் உலகம் என்பது உயர்ந்தோர் மேற்றே.... (தொல்காப்பியம், பொருள், மரபியல் 96) என்கிற சூத்திரத்தை மனதிற்கொண்டு பொருள் கூறியிருக்கலாம். இவர்கள் சொல்லும் உயர்ந்தோர் கூற்று என்பது அவ் உயர்ந்தோர் வகுத்த ஒழுக்க நெறியையேயாகும். இது அறநூல்கள் சொல்லியவற்றைக் குறிப்பதாகலாம். இன்றைய காலகட்டத்தில், சட்டங்கள் கூறும் விதிமுறைகளையும் நீதிமன்றங்கள் தெரிவிக்கும் கருத்துக்களையும் உயர்ந்தோர் கூற்றாக நாம் கொள்ள முடியும். ஆனால் இவற்றைக் கருத்துப் பிறழ்வாக உணர்ந்துகொண்டால் ஒழுக்கமுறைகள் மாறுபட்டுத் தோன்றும்.
உலகத்தோடு ஒட்ட ஒழுகல் என்பதை இன்னொரு வகையிலும் விளக்குவர். உலகவாழ்வில் காலப்போக்கில் நிகழும் மாற்றங்களை விரும்பாதவர்கள் 'உலகம் கெட்டுவிட்டது' என்று கூறிக்கொண்டு பிறரைப் பழித்து அந்த 'கெட்ட உலகத்தி'னின்றும் விலகி தனித்து வாழும் போக்கைக் கடைப்பிடித்து ஒழுகுவர். மேலும் சிலர் மேலும் தமக்குத்தாமே ஏதோ ஒரு வகையில் பொய்ம்மையான உயர்வு (Snobbery) கண்டு உடன்வாழும் மாந்தரோடு ஒட்டாமல் இருப்பர், இப்பாடல் இப்படிப்பட்ட மனிதர்களை நோக்கியே பாடப்பட்டது என்பர் இவர்கள்.

ஒழுக்கம் சமூகத்துடன் இணைந்து வாழும் ஒழுகுமுறையாகவே இருக்க வேண்டும். தான் வாழும் சமுதாயத்தோடு இயைந்து வாழவேண்டும் என்பது மட்டுமன்றி, பலதிறப்பட்ட மக்களுடன் கலந்து பழகக் கற்றுக்கொள்ளவேண்டும் என்ற செய்தியும் இக்குறளில் உள்ளது. ஒழுகுதல் என்பது பலரோடு பழகுதல், பலநிலை மாந்தரோடு உறவாடத் தெரிதல், அந்தந்தக் காலத்தில் வாழும் சமுதாயத்தின் உணர்வுகளை அறிந்து கொள்ளுதல் போன்றவற்றையும் உள்ளடக்கியது. நூலறிவு மட்டுமே வாழ்வுக்குத் துணையாகாது. 'உலகத்தோடு ஒட்ட ஒழுகல்' என்பது உலகத்தோடு இயைந்தும் கலந்தும் நடக்கும் அறிவைக் குறிக்கும்.

உலகத்தோடு பொருந்த ஒழுகத் தெரியாதவர் பல கற்றிருந்தும் அறிவு இல்லாதவரே என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

வாழும் காலத்தில் உள்ள உலகத்தோடு ஒன்றி இசைந்து வாழும் ஒழுக்கம் உடைமையே அறிவார்ந்தது என்று சொல்லும் பாடல்.

பொழிப்பு

உலகத்தோடு ஒட்டி ஒழுகத்தெரியாதவர் பல கற்றிருந்தும் அறிவு இல்லாதவரே.



__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்

(அதிகாரம்:ஒப்புரவறிதல் குறள் எண்:214)

பொழிப்பு (மு வரதராசன்): ஒப்புரவை அறிந்து போற்றிப் பிறர்க்கு உதவியாக வாழ்கின்றவன் உயிர்வாழ்கின்றவன் ஆவான்; மற்றவன் செத்தவருள் சேர்த்துக் கருதப்படுவான்.

மணக்குடவர் உரை: ஒப்புரவறிவான் உயிர்வாழ்வானென்று சொல்லப்படுவன். அஃதறியான் செத்தவருள் ஒருவனாக எண்ணப்படுவன்.
இஃது ஒப்புரவறியாதார் பிணத்தோ டொப்ப ரென்றது.

பரிமேலழகர் உரை: உயிர் வாழ்வான் ஒத்தது அறிவான் - உயிரோடு கூடி வாழ்வானாவான் உலக நடையினை அறிந்து செய்வான், மற்றையான் செத்தாருள் வைக்கப்படும் - அஃதறிந்து செய்யாதவன் உயிருடையானே யாயினும் செத்தாருள் ஒருவனாகக் கருதப்படும்.
(உயிரின் அறிவும் செயலும் காணாமையின், 'செத்தாருள் வைக்கப்படும்' என்றார். இதனான் உலகநடை வழு வேத நடை வழுப்போலத் தீர்திறன் உடைத்து அன்று என்பது கூறப்பட்டது.)

சி இலக்குவனார் உரை: தம்மைப் போன்று பிற உயிர்களையும் கருதி உதவுபவனே உண்மையாக உயிர் வாழ்வோனாவான். அங்ஙனம் உதவாதவன் உயிருடையனாயினும் செத்தவருள் ஒருவனாகக் கருதப்படுவான்,

பொருள்கோள் வரிஅமைப்பு:
உயிர்வாழ்வான் ஒத்தது அறிவான்; மற்றையான் செத்தாருள் வைக்கப்படும்.

பதவுரை:
ஒத்தது-உலகநடை; அறிவான்-தெரிபவன்; உயிர்-உயிர்; வாழ்வான்-உயிரோடு கூடி வாழ்பவன்; மற்றையான்-பிறன்; செத்தாருள்-இறந்தவருள்; வைக்கப்படும்-கருதத்தகும்.


ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஒப்புரவறிவான் உயிர்வாழ்வானென்று சொல்லப்படுவன்;
பரிதி: ஒப்புரவு செய்வான் உயிருடன் வாழ்வான்;
காலிங்கர்: நெஞ்சை எரிப்பது ஒத்ததாகிய ஒப்புரவு அறிகின்றவன் யாவன்? மற்றவனே உயிர்வாழ்கின்றவனாவன்;
பரிமேலழகர்: உயிரோடு கூடி வாழ்வானாவான் உலக நடையினை அறிந்து செய்வான்;

'ஒப்புரவு அறிவான் உயிர்வாழ்வானென்று சொல்லப்படுவன்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். மணக்குடவரும் பரிதியும் ஒத்தது என்றதற்கு ஒப்புரவு எனப் பொருள் கொள்ள பரிமேலழகர் 'உலகநடை' எனக் கொண்டார்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஒத்த பொதுநலத்தை அறிந்தவனே வாழ்பவன்', 'ஒப்புரவு (பொதுநலத் தொண்டு) செய்பவனே உயிரோடு கூடி வாழ்பவனாவான்', 'தனக்கு ஒத்தது மற்றவர்களுக்கும் என்ற அறிவுள்ளவன்தான் உயிரோடிருப்பவன்', 'உலகத்தவர்க்குச் செய்யவேண்டிய கடமையை அறிந்து செய்பவன் உயிரோடு கூடி வாழ்பவன் ஆவான்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

ஒப்புரவு அறிந்தவன் உயிரோடு கூடி வாழ்பவனாவான் என்பது இப்பகுதியின் பொருள்.

மற்றையான் செத்தாருள் வைக்கப்படும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அஃதறியான் செத்தவருள் ஒருவனாக எண்ணப்படுவன்.
மணக்குடவர் குறிப்புரை: இஃது ஒப்புரவறியாதார் பிணத்தோ டொப்ப ரென்றது.
பரிதி: ஒப்புரவு அறியான் செத்தாரோடு ஒப்பன் என்றவாறு.
காலிங்கர்: மற்றையான் செத்தாருள் ஒருவனாக வைத்து எண்ணப்படுவது.
காலிங்கர் குறிப்புரை: எங்ஙனம் எனின் பிறர் முகமறிந்து உபசரிக்கும் அன்றே அதனால் அஃது இல்லாதானும் உயிரும் உணர்வும் உடையான் ஒருவன் அல்லன்; வெறும்நடைப்பிணமே என்று பொருளாயிற்று என்றவாறு.
பரிமேலழகர்: அஃதறிந்து செய்யாதவன் உயிருடையானே யாயினும் செத்தாருள் ஒருவனாகக் கருதப்படும்.
பரிமேலழகர் குறிப்புரை: உயிரின் அறிவும் செயலும் காணாமையின், 'செத்தாருள் வைக்கப்படும்' என்றார். இதனான் உலகநடை வழு வேத நடை வழுப்போலத் தீர்திறன் உடைத்து அன்று என்பது கூறப்பட்டது.

'அஃதறிந்து செய்யாதவன் செத்தாருள் ஒருவனாக எண்ணப்படுவன்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அறியாதவன் செத்தவரைச் சேர்ந்தவன்', 'அதனைச் செய்யாதவன் இறந்தவர்களுள் ஒருவனாகக் கருதப் பெறுவான்', 'அது இல்லாதவன் செத்த பிணத்துக்குச் சமானம்', 'அதனை அறிந்து செய்யாதவன் செத்தவர்களில் ஒருவனாகக் கருதப்படுவன்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

அதனை அறியாதவன் செத்தவர்களில் ஒருவனாகக் கருதப்பெறுவான் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
ஒத்தது அறிவான் உயிரோடு கூடி வாழ்பவனாவான் அதனை அறியாதவன் செத்தவர்களில் ஒருவனாகக் கருதப்பெறுவான் என்பது பாடலின் பொருள்.
'ஒத்தது அறிவான்' யார்?

பிறர்க்கு உதவுதல் செய்வதைத் தெரிந்தவனே உயிரோடு வாழ்பவனாவான்; அந்த உணர்வு இல்லாதவர்கள் செத்தவர்களாகவே கருதப்படுவர்.
மனிதன் சமுதாயத்தோடேயே இணைந்து வாழ்ந்து கொண்டிருப்பவன். அதனால் அச்சமூகத்திற்கு என்ன தேவை, அதற்குத் தன் பங்களிப்பு என்ன என்பதனை அவன் உணர்ந்து செயற்பட வேண்டும். தன்னை ஒத்த உயிர்களின் வாழ்க்கை நிலையை அறிந்து வாழ்பவன் ஒத்தது அறிவான். அப்படி வாழ்பவனே உண்மையாக வாழுகின்ற பெற்றியுடையவன். இல்லையென்றால் அவன் 'செத்தான்' என்று கருதப்படுவான் என்கிறார் வள்ளுவர்.
சமுதாயக் கூட்டு வாழ்க்கைக்கு உரிய சிறந்த பண்புகளில் ஒன்று ஒப்புரவு அறிதல். 'ஒருவர் எல்லாருக்காகவும் எல்லாரும் ஒருவருக்காகவும்' என்பதே ஒப்புரவின் சாரம். உலகமெல்லாம் ஒரு குடும்பமாய் ஒத்து இயங்கும் தன்மையை ஒருவன் அறிந்திருக்க வேண்டும். தனக்கு ஒத்தது பிறர்க்கும், என்று ஒத்திசைவுடன் வாழுகின்ற மனிதனே வாழ்பவன், தான் உண்டு தனது பணி உண்டு என்றிராமல் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது. தான் சார்ந்த உலகமக்களின் தேவைகள் என்ன என்று உணராமல் இருப்பவர் உளரெனினும் இல்லாரோடு ஒப்பர். இவ்வாறு உலகிற்கு உதவும் நற்பண்புகள் கொண்டவனாக வாழவேண்டும் என அறிவுரை தருவது இப்பாடல். யாருக்கும் உதவாது வாழ்கின்றவனை உலகம் 'நடைப்பிணம்' என்ற கணக்கில் மட்டுமே சேர்த்துக் கொள்ளும். அப்படிப்பட்டவனை ஒப்புரவு இல்லானை, நாட்டுக்கு ஒத்த செயலை அறிந்து செயல்படாதவனை, “செத்தான்” என்று மிகவும் இழிவான சொல் கொண்டு தூற்றுகிறார் வள்ளுவர், உயிர்க்குரிய இயல்பும் உணர்வும் இல்லாமையால் செத்தார் என்றார்.

'ஒத்தது அறிவான்' யார்?

'ஒத்தது அறிவான்' என்றதற்கு ஒப்புரவறிவான், ஒப்புரவு செய்வான், ஒப்புரவு அறிகின்றவன், உலக நடையினை அறிந்து செய்வான், லோக வாழ்க்கையை அறிந்து செய்கிறவன், உலக இயற்கையை அறிந்து நடக்கின்றவன், உலக நடை அறிந்து ஒப்புரவு செய்வான், ஒப்புரவை அறிந்து போற்றிப் பிறர்க்கு உதவியாக வாழ்கின்றவன், தனக்குப் போலப் பசிக்குணவும் அறிவுக்குக் கல்வியும் இருக்க இடமும் நோய்க்கு மருந்தும் பிறர்க்கும் வேண்டுமென அறிபவன், சமநிலை அறிபவன் (சமநிலை என்பது இங்குப் பொருளியல் சமத்துவத்தைக் குறிக்கும்), உலக நடையை அறிந்து உதவிகள் செய்து பலரொடு கூடி வாழ்கிறவன், உலகியல்பு அறிந்து ஒப்புரவு செய்து வாழ்வோன், தனக்கு ஒத்தது பிறனுக்கும் என்ற அறிவுடையவன், பொது நலங்கருதி வாழ்பவன், உலகத்தவர்க்குச் செய்யவேண்டிய கடமையை அறிந்து செய்பவன், தம்மைப் போன்று பிற உயிர்களையும் கருதி உதவுபவன், மற்ற மாந்தரின் மகிழ்வையும் துயரையும் தனக்கு நேர்ந்தது போல் ஒன்றுபடுத்தி உணர்பவன், உலக நடைக்கேற்ற அறங்களை அறிந்து பிறர்க்கு உதவி செய்து வாழ்பவன், (நாட்டுக்கு) ஒத்த செயலைச் செய்பவன் எனப்பலவாறாக உரை கூறினர்.

'தன்னைப் போல் பிறரை நினை' என்ற அறவுரை கூறுவது போல, தனக்கு நலம் பயப்பனவெல்லாம் மற்றவர்க்கும் ஆம் என்று அறிந்து செய்தல் ஒத்ததறிதல் எனலாம். தன்னைச் சுற்றியுள்ள உலகத்தின் பொதுநலத்தை அறிந்து செயல்படுபவன் ஒத்ததறிவான். ஒத்தது அறிவான் என்பது தானே வலிய முயன்று அறிந்து செய்தலைக் குறிக்கும். இங்கு ‘ஒத்தது’ என்பது ஒப்புரவைக் குறிக்குமாதலால் 'ஒத்தது அறிவான்' என்ற தொடர்க்கு பொதுநன்மைக்கு ஒத்த செயலைச் செய்வான் என்பது பொருத்தமான பொருள்.

ஒப்புரவு அறிந்தவன் உயிரோடு கூடி வாழ்பவனாவான் அதனை அறியாதவன் செத்தவர்களில் ஒருவனாகக் கருதப்பெறுவான் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

ஒப்புரவறிதல் ஆற்றல் உள்ளவரே வாழ்கின்றவர் ஆவார்.

பொழிப்பு

பொதுநலம் அறிந்தவனே உயிரோடு கூடி வாழ்பவன்; அதனை அறியாதவன் இறந்தவராகக் கருதப் பெறுவான்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard