தொல்காப்பியனார் காலத்திலே மாயோன், சேயோன், இந்திரன், வருணன் ஆகிய நானிலத் தெய்வங்களின் வழிபாடும் கொற்றவை வழிபாடும் நில வெல்லையினைக் கடந்த பொதுமை நிலையிற் சிவ வழிபாடும் நிலைபெற்று வழங்கின என்பது முன்னர் விளக்கப்பெற்றது. இவ்வழிபாடுகள் யாவும் பலதிறமக்களும் தம் தம் சூழ்நிலைக்கும் தாம்தாம் உள்ளத்திற் கருதிய தெய்வத் தோற்றத்திற்கும் ஏற்ப மேற்கொண்டுள்ள தெய்வ வழிபாடுகள் என்ற பொதுமை நெறி என்ற அளவில் நிகழ்ந்தனவேயன்றிப் பிற்காலத்திற் போன்று குறிகளாலும் அடையாளங்களாலும் வேறுபட்ட தனிக் கொள்கையினை யுடைய சமயங்களாக அவை வழங்கப்பெறவில்லை. அதனால் மக்களின் ஒற்றுமையைக் குலைக்கும் நிலையில் அவை வேறுபட்டுக் காணப்படவில்லையென்பதும் இங்கு மனங்கொள்ளத்தகுவதாகும்.
இனி, கடைச் சங்க காலத்தையடுத்துத் தோன்றிய சிலப்பதிகாரம், மணிமேகலை என்னுங் காப்பியங்களில்தான் சிவ வழிபாடு, திருமால் வழிபாடு, கொற்றவை வழிபாடு, செவ்வேள் வழிபாடு என்னும் இவ்வழிபாடுகளும் இவற்றின் வேறாகச் சமனமும் புத்தமும் வேதநெறிபற்றிய கொள்கைகளும் தத்துவ அளவில் தனித் தனிச் சமயங்களாக வேறுபடுத்துப் பேசப்படுகின்றன. சிவ வழிபாடு, திருமால் வழிபாடு, கொற்றவை வழிபாடு, செவ்வேள் வழிபாடு என்னும் நான்கும் தம்முள் உறவுமுறைத் தொடர்புடையன வாகவும் இவற்றுட் சிவவழிபாடொன்றுமே தலைமைச் சிறப்புடையதாகவும் திகழ்ந்தமை இவையன்றி ஞாயிற்று வழிபாடு, திங்கள் வழிபாடு, மழை வழிபாடு, இந்திரவிழா, காமவேள்விழா என்பன அக்காலத் தமிழ் மக்களால் கொண்டாடப் பெற்றன என்பதும் தெய்வச் சிறப்புடைய ஊரைப் போற்றுதலும் தீதுநீர் வையை கங்கை ஆறாட்டும் கடலாட்டும் ஆகிய வழிபாட்டுச் சடங்குகளும் அக்கால மக்களால் மேற்கொள்ளப்பெற்றன என்பதும் சங்கத் தொகை நூல்களாலும் சிலப்பதிகாரம், மணிமேகலை என்னும் இவ்விருகாப்பியங்களாலும் நன்குனரப்படும்.
வடநாட்டில் வைதிக நெறிக்கு எதிராகத் தோன்றிய சமனபுத்த சமயங்கள், தத்தம் கொள்கைகளைப் பரப்பும் நோக்குடன் தமிழகத்தில் சங்ககாலத்தில் வேரூன்றின. வேரூன்றிய பின்னர்த் தம் சமயக் கொள்கையைப் பரப்பும் அளவில் அமைந்துவிடாது, இங்குள்ள தெய்வங் கொள்கையினையும் புறம்பழிக்கத் தொடங்கின என்பது, சிலப்பதிகாரத்தில் மாங்காட்டு மறையோன் கூற்றைப் புறக்கணித்துப் பேசிய கவுந்தியடிகள் கூற்றால் உய்த்துணரப்படும். சிலப்பதிகாரத்தையடுத்து மணிமேகலைக் காப்பியம் இயற்றப் பெற்ற காலத்தில், தமிழகத்திற் பல்வேறு சமயவாதிகளும் மக்கள் பேரவையிலே தத்தம் சமய வுண்மைகளைக் குறித்து உறழ்ந்து பேசுதற்கேற்ற வாய்ப்பு காவிரிப்பூம் பட்டினம் முதலிய தமிழகப் பேரூர்களில் நிகழும் இந்திரவிழா முதலிய திருவிழாக்காலங்களில் நாடாள் வேந்தரால் அளிக்கப்பெற்றதென்பது,
"ஒட்டிய சமயத்துறுபொருள் வாதிகள்
பட்டி மண்டபம் பாங்கறிந்தேறுமின்”
என வரும் மணிமேகலைத் தொடரால் இனிது புலனாகின்றது. கி. பி. இரண்டாம் நூற்றாண்டிலிருந்து முன்னர் இல்லாத சமயப் பகுப்புக்களும் மத மாறுபாடுகளும் இததென்றமிழ் நாட்டிலே தோன்றித் தமிழ் மக்களது ஒற்றுமையுணர்வைச் சிதைத்து அவர்களை ஒருவரோ டொருவர் மாறுபடச் செய்து அலைக்கழிக்கலாயின.
அசோகவேந்தன் காலந்தொடங்கிக் கி. பி. முதல் நூற்றாண்டு வரையில் ஏறக்குறைய முந்நூறாண்டுகள் தமிழகத்தில் குடியேறி இந்நாட்டு மக்களோடு ஒன்றி அமைதியாய் வாழ்ந்த புத்த சமணத துறவிகள், பாண்டிய நாட்டிலும் சோழ நாட்டிலும் தமிழ் வேந்தரது அரசுநிலை குலையத் தொடங்கிய நிலயில் தமிழ் நாட்டின் மேற் படையெடுத்துவந்த அயலவராகிய கருநட மன்னர் முதலியோரது துனைகொண்டு தம் சமயக்கொள்கைகளை மிக முயன்று தமிழகத்திற் பரப்பும பணியில் ஈடுபடலாயினர்; தமது கொள்கைக்கு இனங்காத தமிழ் மக்களையெல்லாம் தம்மதங்களில் திருப்புதற்கு அரசியற் சார்பு பெற்றுத் தீய முறைகளையெல்லாம் கையாள்வாராயினர். இதனால் தமிழாசிரியர்க்கும் சமன புத்த சமயத்தார்க்குமிடையே வழக்குகளும் எதிர் வழக்குகளும் அடுத்தடுத்து நிகழ்ந்தன. அதனால் ஒருசார் கொள்கையினையுடையார் பிறிதொரு கொள்கையாளரிடமிருந்து தம்மை வேறுபடுத்துத் தம்மை உயர்த்திக் கோடற்கும் தம் கொள்கையினை யுடன்படாத பிறரைத் தம்மினின்று வேறுபிரித்துக் காட்டுதற்கும் சைவர், வைணவர், புத்தர், சமணர், வைசேடிகர், நியாயவாதிகள், உலகாயதர், மாயாவாதிகள் என்றாங்கு வெவ்வேறு குழுவினர்க்கு வெவ்வேறு சமயப் பெயர் கொடுத்து வழங்கும் நிலை சமயவாதிகளிடையே நிலைபெற வேரூன்றலாயிற்று. சமயம், மதம் என்ற பெயர்களும் அப்பெயர்களாற் பகுத்துரைக்கப்படும் பிரிவினைகளும் இன்றி எல்லோரும் ஒன்றுபட்ட பொதுமையுணர்வினராய், எல்லாம் வல்ல ஒரு முழுமுதற் கடவுளையே பல்வேறு வடிவிற் பல்வேறு பெயர்களில் வணங்கிக் கொண்டு அமைதி நிலையில் வாழ்ந்த தமிழ் மக்களிடையே வடக்கிருந்து வந்து நிலைபெற்ற சமன. புத்த சமயத்தவர்களாலும் அவர்களோடு முரண்பட்டு வந்த வைதிகக் குழுவினராலுமே பல்வேறு மதங்களும் மதப் போர்களும் இந்நாட்டிற் கிளைத்து வளர்ந்தன. இவ்வாறு இந்நாட்டில் முரண்பட்டு வளர்ந்துள்ள பல்வேறு மதங்களும் வடக்கிருந்து தமிழகத்திற் குடியேறின. அயலவர்களாலேயே பல்கின என்பதற்கு, அம்மதங்கள் பலவும் வடமொழிப் பெயர் கொண்டு உலவுதலும், அம்மதங்களைப் பற்றிய நூல்களெல்லாம் வடமொழியில் எழுதப்பெற்றிருத்தலுமே உறுபெறுஞ்சான்றாகும். இதனை நன்குனர்ந்த சுவாமி விவேகானந்தர் மதச்சண்டைகளும் சாதி வேற்றுமைக் கலகங்களும் பல்குதற்கு ஒருபெருங் கருவியாய் அமைந்தது வடமொழியே எனவும், அம்மொழி நூல்கள் தொலைந்துபோகுமானால் இப்போராட்டங்களும் தொலைந்து போகும் எனவும் வருந்திக் கூறியுள்ளார்." பழைய தமிழ் நூல்களிற் சமயப் போருக்காவது சாதிச்சண்டைக்காவது இடமில்லை என்பதனைச் சங்க இலக்கியங்களால் நன்குணரலாம்.
சிவலிங்க வழிபாடு இன்னவுரு இன்னநிறம் என்று அறிய வொண்ணாத இறைவனைத் துணுருவில் நிறுத்தி வழிபடும் அருவுருவ வணக்கமாதலின், அவ்வணக்கம் பண்டைக்காலத்தில் சமய வேறுபாடில்லாத பொதுமை வாய்ந்த கடவுள் வழிபாடாகவே கருதப் பெற்றுவந்ததெனக் கருதவேண்டியுள்ளது.
39. மணிமேகலை, 160 - 61.
40. மறைமலையடிகள், தமிழர் மதம், ப. 22.