Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: திருவள்ளுவர் கூறும் வாழ்க்கை நெறிமுறைகளும் தத்துவவுண்மைகளும்


Guru

Status: Offline
Posts: 7329
Date:
திருவள்ளுவர் கூறும் வாழ்க்கை நெறிமுறைகளும் தத்துவவுண்மைகளும்
Permalink  
 


 திருவள்ளுவர் கூறும் வாழ்க்கை நெறிமுறைகளும் தத்துவவுண்மைகளும்

தமிழ் மக்களது வாழ்வியற் கூ றுகளாகிய ஒழுக்கநெறி, கலை, நாகரிகம், பண்பாடு, மெய்ந்நூற்கொள்கை என்பன பிற மொழியாளரிடமிருந்து பிரித்துணர்தற்குரிய தனிச்சிறப்பு வாய்ந்தன என்பது, தொல்காப்பியம், பத்துப்பாட்டுப்பாடல், எட்டுத்தொகை முதலிய தொன்னூல்களால் நன்குணரப் படும். ஆசிரியர் தொல்காப்பியனார் காலத்திலும் அவர்க்குப் பின் கடைச்சங்க காலத்திலும் தமிழகத்திற் குடியேறிய வடமொழியாளர் தொடர்பினால் அன்னோர் தம் வேத நெறியானது, தமிழ்வேந்தர்களது ஆதரவுடன் தமிழ்நாட்டில் வேரூன்றித் தமிழர்சமுதாயத்திலும் இடம்பெற்று வளர்வ தாயிற்று என்பதற்குரிய குறிப்புகளும் தமிழ்த் தொன்னூல் களில் ஆங்காங்கே காணப்படுகின்றன. வடநாட்டில் வடமொழியாளர் மேற்கொண்ட வேத வேள்வி பற்றிய வைதிகநெறியினை யெதிர்த்து அந்நாட்டில் தோன்றிய புத்த சமண சமயங்களின் தாக்குதலால் வைதிகநெறியின் வளர்ச்சி தடைப்பட்டமையாலும் வேதத்தையே பற்றுக்கோடாகக் கொண்டுள்ள அந்நெறியானது தமிழகத்தில் மக்களது ஆதரவின்றித் தனித்துப் படர்தற்குரிய பற்றுக்கோடில்லாமை யாலும் தமிழ்மக்களால்போற்றப்பெறும் தொன்மைவாய்ந்த கடவுட்கொள்கையாகிய சிவநெறியின் சார்பினைப் பெற்றுத் தமிழகத்தில் நன்கு வேரூன்றி நிலைபெறுவதாயிற்று. இந்நிலையில் வைதிக நெறிக்கு மாறாக வேதவேள்விகளை எதிர்க்கும் நோக்குடன் வடநாட்டில் தோன்றி வளர்ந்த சமண பெளத்த சமயங்களும் சங்ககாலத்தில் தமிழகத்தில் நுழைந்து தமிழ்மக்களின் நன்மதிப்பினைப் பெற்றுத் தமிழகத்தில் நிலைகொள்வனவாயின. இவ்வாறு ஒன்றோடொன்று முரண்பாடுடையனவாகிய பல்வேறு சமயங்களும் தமிழகத்தில் இடம்பெற்றுப் பரவிவரும் சூழ்நிலையிலேதான் தெய்வப்புலவர் திருவள்ளுவர் தமிழகத்தில் தோன்றினார். தமிழ்நாட்டில் தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாத அயலவர் நுழைவினாற் பரவி வளரும் பல்வேறு சமயக்கொள்கைகளும் தம்முள் முரண்பட்டு மோதித் தமிழகத்தின் பொதுவாழ்விலே பல்வேறு குழப்பங்களை உண்டுபண்ணாதபடி பல்வேறு சயங்களின் தாக்குதல்களால் விளையும் முரண்பாடுகளை முன்னுணர்ந்து விலக்கக்கருதிய திருவள்ளுவர் எல்லாச் சமயத்தாரும் நன்றென விரும்பியேற்றுக்கொள்ளும் வண்ணம் உலகமக்கள் அனைவரும் அன்பினால் ஒன்று பட்டு வாழ்தற்கு இன்றியமையாத மெய்ம்மையான ஒழுக்கநெறியினை அறிவுறுத்தும் முறையில் வாழ்வியல் நூலாகிய திருக்குறளை இயற்றியருளினார் என்பது திருக்குறளைப்பற்றிய வரலாறாகும்.

மக்களது நல்வாழ்வுக்கு உறுதியளிப்பனவாக உயர்ந்தோரால் உணர்த்தப் பெற்றவை அறம் பொருள் இன்பம் என்னும் மூன்றுமேயாகும். மக்கட்குலத்தார் தமது வாழ்க்கைக் கடமைகளில் ஈடுபட்டு உழைக்கும்போது தம்மாற் பிறர்க்கு எத்தகைய தீங்கும் நேராதபடி தம்முடைய மனம் மொழிமெய் என்னும் முக்கரணங்களையும் ஒரு நெறிப்படச் செலுத்தும் நல்லொழுக்க நெறியே 'அறம்' எனப்படும். இத்தகைய அறநெறியில் நின்று பொருளைச் சேர்த்து அப்பொருளைக்கொண்டு இன்பம் நுகர்தலே நன்றுந்த்தும் பகுத்துனரும் மனவுணர்வுடைய நன்மக்களின் வாழ்க்கை முறையாகும். இம்முறையினை மூன்றன்பகுதி' என்ற பெயராற் குறிப்பிடுவர் தொல்காப்பியர். தொல்காப்பியனார் குறித்தவண்ணம் அறம் பொருள் இன்பம் என்னும் மூன்று பகுதிகளாக அமைந்த மக்களது நல்வாழ்க்கை முறையினை மூன்று பால்களாக விளக்கும் நோக்குடன் திருவள்ளுவர் அருளிச்செய்த அறநூல் திருக்குறள். அறிவுநலம் வாய்ந்த புலவர் பெரு மக்களால் இயற்றப்பெறும் இலக்கியங்கள் யாவும் வாழ்க்கைக்கு அடிப்படையாகிய அறம் பொருள் இன்பம் என்னும் உறுதிப்பொருள்கள் மூன்றனையும் தம்மகத்தே கொண்டு அமைதல் வேண்டும் என்பது தமிழ் இலக்கிய மரபம் கும்.

எல்லாவுயிர்களாலும் விரும்பி நுகரப்படுவது இன்பம். இன்ப நுகர்ச்சிக்குச் சாதனமாக மக்களால் ஈட்டப்படுவது பொருள். அவ்வாறு பொருளை யீட்டுங்கால் பிறவுயிர்க்குத் தீங்கு நேராதவாறு மாசற்ற மனத்தாலும் தீமையில்லாத சொல்லாலும் செயலாலும்பொருள் செய்தொழுகும் நெறிமுறையே உயர்ந்தோரால் அறம் எனச் சிறப்பித் துரைக்கப்படும். ஏனைய பொருளும் இன்பமும் போல் இவ்வுலக வாழ்வில் மட்டும் பயன்தருமளவில் நின்று விடாமல் பிறப்புத்தோறும் உயிரொடு தொடர்ந்து சென்று இம்மை மறுமை வீடு என்னும் மும்மை நலங்களையும் ஒருங்கே தருதற்குரிய ஆற்றல் வாய்ந்தது அறம் ஒன்றேயாகும். எனவே பொருள் இன்பம் என்னும் இரண்டினும் அறமே வலியுடையது என்பதனைத் திருக்குறளில் அறன்வலியுறுத்தல் என்னும் அதிகாரத்தில் திருவள்ளுவர் தெளிவாக வலியுறுத்தியுள்ளார். தமிழ் மூவேந்தருள் சோழன் நலங்கிள்ளியின் வெண்கொற்றக்குடையானது சேரன் பாண்டி யன் என்னும் ஏனையிருவர் குடைகளினும் முற்பட்டு உயர்ந்து விளங்கும் தோற்றத்திற்கு, அறம் பொருள் இன்பம் என்னும் உறுதிப்பொருள் மூன்றனுள் ஏனைப்பொருளும் இன்பமும் பிற்பட அறம் ஒன்றே முற்பட்டு விளக்குந் திறத்தினை உவமையாக எடுத்துக்காட்டும் முறையில் அமைந்தது,

“சிறப்புடை மரபிற் பொருளும் இன்பமும் அறத்து வழிப்படுஉந்தோற்றம் போல இருகுடை பிற்பட ஓங்கிய வொருகுடை உருகெழுமதியின் நிவந்து சேண் விளங்க (புறம் 31)

என வரும் புறப்பாடலாகும். அறமுதலாக எண்ணப்படும் இறுதிப்பொருள் மூன்றனுள் மன்னுயிர்களுக்கு நிலைபெற்ற ஆக்கத்தை வழங்கவல்ல வன்மையுடையது அறம் ஒன்றுமே என்பதும் ஏனைய பொருளும் இனபமும் முற்கூறிய அறத்தின் துணையினைக்கொண்டு பயனளித்தற் குரியன என்பதும் மேற்குறித்த கோவூர் கிழார் வாய்மொழியால் நன்கு புலனாகும்.

மக்களது மனத்திற்படிந்துள்ள அழுக்காறு, அவா, வெகுளி என்னும் குற்றங்களையும் இன்னாச்சொல் முதலிய மொழிக்குற்றங்களையும் அகற்றிய நிலையில் நிகழ்வதே மெய்ம்மையான அறம் எனப்படும். நல்லறங்கட்கெல்லாம் நிலைக்களமாகத் திகழ்பவன் அறத்தின் கடலாகவும் அருளாளனாகவும் விளங்கும் இறைவன் ஒருவனே. அம்முதல்வனது திருவருள்நெறியாகிய ஒழுக்க நெறியின் வழுவாது ஒழுகுவோரே அறவோர் எனப்போற்றப்பெறும் சிறப்புடையோராவார் என்பன அறத்தின் தொடர்பாகத் திருவள்ளுவர் அறிவுறுத்திய கருத்துக்களாகும். அறத்திற்குப் பற்றுக்கோடாகிய இறைவனது அருள்வழி யடங்கிநின்று மாசற்றமனமும் தீமையில்லாத சொல்லும் உடையராய்ச் செய்யும் நற்செயல்களே அறமெனப்படும் என்பது திருவள்ளுவர் அறிவுறுத்திய அறத்தின் இலக்கணமாகும்.

அறத்தைப்பற்றிய நல்லுணர்வு, மக்களினத்தாரில் தனியொருவடைய கல்வி அறிவு செல்வம் செயல்திறன் முதலியவற்றால் மட்டும் உலகியல் வாழ்வில் நிலை பெறுதற்குரிய சுருங்கிய எல்லையுட்பட்டு அடங்குவதன்று; மக்கள் ஒவ்வொருவரும் தாம்தாம் வழிபட்டுப்போற்றும் இறைவனது அருளால் ஒன்றுகூடிப் பெறுதற்குரிய விரிந்த பரப்பினையுடையது அறமாகும். சுருங்கக்கூறின் உலக முதல்வனாகிய இறைவனது பேரருளும் அவ்வருளால் மக்கள் மனத்தகத்தே ஊற்றெடுத்துப் பெருகும் பேரன்பும் ஒருங்கு இணைந்த சமுதாய அமைப்பிற் கருக்கொண்டு நிலை பெறுவதே அறம் எனக்கூறுதல் மிகவும் பொருத்த முடையதாகும்.

ஆசிரியர் திருவள்ளுவனார், 'அறமுதலாகியமும் முதற்பொருள் எனத் தொல்காப்பியனார் குறித்தவண்ணம் மூன்றன்பகுதியாக (முப்பால்களாக)த் தம் நூலை இயற்றி யுள்ளார். தொல்காப்பியனார் வாழ்ந்த காலத்திற்கும் திருவள்ளுவர் வாழ்ந்த காலத்திற்கும் பிறப்பட்ட காலத்தில் வாழ்ந்த பெருமக்கள் அறமுதலாக முன்னோர் எண்ணிய உறுதிப்பொருள் மூன்றனுள் இன்பத்தினைச் சிற்றின்பம் எனவும், பேரின்பம் எனவும் இரண்டாகப் பகுத்தனர். இப்பகுப்பு சிற்றின்பம் மற்றின்பம் (பேரின்பம்) எனத் திருவள்ளுவர் பகுத்த முறையினை அடியொற்றியதாகும். சிற்றின்பம் என்றது ஐம்புலன்களால் இவ்வுலகில் நுகர்தற்குரிய இம்மையின்பத்தினை மற்றின்பம் (பேரின்பம்) என்றது பிறப்பற்ற நிலையிற் பெறுவதற்குரிய வீடுபேற்றினை. இவற்றுள் முன்னதனை இன்பம் என்றும் பின்னதனை வீடு என்றும் பெயரிட்டு அறம் பொருள் இன்பம் வீடு என உறுதிப்பொருள்கள் நான் கெனக் கொண்டனர் பின் வந்தோர். இங்ங்னம் பிற்காலத்தில் நான்காவதாகப் பிரித்துரைக்கப்படும் பேரின்பமாகிய வீடுபேறு தொல்காப்பியனார் முதலிய முன்னைத் தமிழ்ச் சான்றோரால் மூன்றவதாகச் சுட்டப்பட்ட இன்பத்துள்ளேயே அடங்கும் என்பது,

“சிற்றின்பம் வேண்டி அறனல்ல செய்யாரே

மற்றின்பம் வேண்டுபவர்” (திருக். 175)

எனவும்,

"இன்பம் இடையறாது, ஈண்டும் அவாவென்னும்

துன்பத்துட்டுன்பங்கெடின்” (திருக். 369)

எனவும் வரும் திருவள்ளுவர் வாய்மொழிகளால் இனிது விளங்கும். என்வே வையத்து வாழ்வாங்கு வாழும் வாழ்க்கை நெறியினை அறிவுறுத்த எண்ணிய திருவள்ளுவர் தாம்கூற எடுத்துக்கொண்ட அறம் பொருள் இன்பம் என்னும் உறுதிப்பொருள்களை அறிவுறுத்தும் முப்பாலிலே பிற்காலத்தில் நான்காவதாகப் பகுத்துரைக்கப்படும் வீடுபேற்றின்பமும் அடங்கவே திருக்குறளை இயற்றியுள்ளார் என்பது ஆன்றோர் துணியாகும். இது பற்றியே முப்பாலில் நாற்பால் மொழிந்தவர் (திருவள்ளுவமாலை 19) எனவும், “அறம் பொருள் இன்பம் வீடென்னும் இந்நான்கின் திறந்தெரிந்து செப்பிய தேவு”(திருவள்ளுவமாலை 8) எனவும் திருவள்ளுவரைப் புலவர் பெருமக்கள் பலரும் உளமுவந்து போற்றியுள்ளார்கள். எனவே திருக்குறளின் அறம் பொருள் இன்பம் என்னும் மும்முதற் பொருள்களே விரித்துரைக்கப் படினும் அம்முப்ப்ொருள்களின் வாயிலாக முடிந்த பேரின்ப நிலையாகிய வீடுபேற்றியல்பும் தெரிவிக்கப்பெற்றுள்ளமை  பெறப்படும். இந்நுட்பம்,

'அறனறிந்தேம் ஆன்ற பொருளறிந்தேம் இன்பின்

திறனளித்தேம் வீடு தெளிந்தேம்”

(திருவள்ளுவமாலை 5.0)

எனவரும் திருவள்ளுவமாலையால் இனிது புலனாதல் காணலாம்.

மேற்குறித்த உறுதிப்பொருள் நான்கினுள் இறுதிக் கண்னதாகிய வீடுபேற்றுநிலை, திருக்குறளில் கடவுள் வாழ்த்து, வான்சிறப்பு, நீத்தார் பெருமை, அறன்வலியுறுத்தல் என்னும் நான்கதிகாரங்களிலும் துறவற இயலில் அருளுடைமை, நிலையாமை, துறவு, மெய்யுணர்தல், அவாவுறுத்தல் என்னும் ஐந்து அதிகாரங்களிலும் தெளிவாக உணர்த்தப் பெற்றுள்ளன. இந்நுட்பத்தினைத் தெளிய வுனர்ந்த சைவசமய சந்தான ஆசிரியர் நால்வருள் ஒருவராகிய உமாபதி சிவாசாரிய சுவாமிகள், தெய்வப் புலமைத் திருவள்ளுவர் அருளிய திருக்குறளின் மெய்வைத்த சொற்பொருள் நுட்பங்களை விரித்து விளக்கும் நோக்குடன் வீட்டு நெறிப்பாலாகத் திருவருட் பயன் என்னும் சைவ சித்தாந்த நூலை அருளிச் செய்துள்ளார். தொல்காப்பியம் முதலிய பண்டைத் தமிழ் நூல்களால் அறிவுறுத்தப்பெறும் தெய்வங்கொள்கையில் உறுதியான நம்பிக்கையுடைய புலமைச்செல்வர் திருவள்ளுவர் என்பதும் அவர் இயற்றி யருளிய திருக்குறள் மெய்யுணர்வினால் உணர்ந்துரைத்த பேருண்மைகளைத் தன்னகத்தே கொண்டு விளங்கும் தமிழ் மறையென்பதும்,

"தனியறிவை - முன்னந் தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி வலைப்பட்டார் மற்றையவரென்று - நிலைத்தமிழின் தெய்வப் புலமைத் திருவள்ளுவர் உரைத்த மெய்வைத்த சொல்”

(நெஞ்சு விடுதூது.கண்ணி 23-25)

எனவரும் உமாபதி சிவாச்சாரியார் வாய்மொழியால் நன்கு தெளியப்படும்.__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
RE: திருவள்ளுவர் கூறும் வாழ்க்கை நெறிமுறைகளும் தத்துவவுண்மைகளும்
Permalink  
 


கடவுள் உயிர் உலகம் என்னும் முப்பொரு ளுண்மையினை வற்புறுத்தும் சைவ சித்தாந்தத் தத்துவக் கொள்கை செந்தமிழ் நாட்டில் வாழ்ந்த திருமூலர், மெய்கண்டார் முதலிய அருளாசிரியர்களால் அறிவுறுத்தப் பெற்றதென்பதும், தமிழ்நாட்டிற்கே சிறப்புரிமையுடையதாக உருவாகி வளர்ந்துள்ள இத்தத்துவக் கொள்கைக்குரிய வேர்கள் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் முதலிய தமிழ்த் தென்னூல்களில் ஆங்காங்கே ஆழ்ந்து ஊன்றிப்பரவி இடம் பெற்றுள்ளன என்பதும் தொல் காப்பியம் திருக்குறள் முதலிய பண்டைத் தமிழ் நூல்களையும் சைவத் திருமுறைகளையும் அவற்றின் பயனாகத் தோன்றிய சைவசித்தாந்த சாத்திரங்களாகிய மெய்கண்டநூல்கள் பதினான் கினையும் ஒப்பிட்டு ஆராய்வார்க்கு இனிது விளங்கும். மெய்கண்ட் நூல்கள் பதினான்கனுள் ஒன்றாகிய திருவருட்பயன் என்பது, சைவசமய சந்தான ஆசிரியர் நால்வருள் ஒருவராகிய உமாபதி சிவாச்சாரியாரால் இயற்றப்பட்ட எட்டு நூல்களுள் ஒன்றாகும். இந்நூல் தெய்வப் புலவர் திருவள்ளுவர் அருளின தமிழ் மறையாகிய திருக்குறளை அடியொற்றி இயற்றப்பெற்றதென்பது இதன்கண் உள்ள குறள் வெண்பாக்களின் சொற்பொரு ளமைப்பாலும், பத்துக்குறள் கொண்ட து ஒர் அதிகாரமாக அமைந்த அதிகாரத்தொடர்பாலும் இந்நூலின் முதற்கண் உள்ள பதிமுதுநிலை என்னும் அதிகாரம் திருக்குறளின் முதலதிகாரமாகிய கடவுள் வாழ்த்தினைச் சொற்பொருட் கூறுகளால் அவ்வாறே அடியொற்றியமைந்திருத்தலாலும் திருவள்ளுவர் அகரமுதல’ எனத் திருக்குறளைத் தொடங்கியது போலவே இந்நூலாசிரியரும் அகர வுயிர்போல்’ என இந்நூலைத் தொடங்கியிருத்ததலாலும் நன்கு துணியப்படும்.

திருவள்ளுவர் தாம் இயற்றிய திருக்குறளில் வீடு பேறடைவார் உணர்ந்து கொள்ளுதற்குரிய மெய்யுணர். வுண்மைகளை ஆங்காங்கே குறித்துள்ளமையுணர்ந்த உமாபதி சிவாச்சாரியார், சைவசித்தாந்தத் தத்துவத்திற்கு அடிப்படையாக அமைந்த அவ்வுண்மைகளை விரித்து விளக்கும் நோக்குடன் திருவருட்பயன் என்னும் சைவ சித்தாந்த மெய்ந்நெறிப்பயனை இயற்றியுள்ளமை இங்கு சிறப்பாகக் குறிப்பிடத்தகுவதாகும். மெய்கண்டார் அருளிய சிவசித்தாந்தத் தனிமுதல் நூலாகிய சிவஞானபோதத்தின் சார்புநூலாக உமாபதி சிவாசாரியாரால் இயற்றப்பெற்றது சிவப்பிரகாசம் என்பதாகும். அந்நூலில் விரித்துரைக்கப் பெறும் சைவ சித்தாந்தவுண்மைகளைக் கற்றுனர விரும்புவோர் அப்பொருளைச் சுருக்கமாகவும் தெளிவாகவும் முதற்கண் புரிந்து கொள்ளும் முறையில் உமாபதி சிவாச்சாரியாரால் இயற்றப்பெற்றது திருவருட்பயன் என்பதாகும். இறைவனது திருவருள் ஞானம் பெற்ற திருமுறையாசிரியர்களால் அருளிச் செய்யப்பெற்ற மெய்ப் பொருளியல்பாகிய நற்பொருட்பயன்களைச் சிறப்புமுறையில் விளக்க எழுந்த திருவருட்பயன் என்னும் இந்நூலானது உலகு உயிர் கடவுள் என்னும் முப்பொருளுண்மையினை வற்புறுத்தும் பொதுநிலையில் உலகப் பொதுமறையாகிய திருக்குறளின் யாப்பினையும் சொற்பொருளமைப்பினையும் அவ்வாறே அடியொற்றிச் செல்கின்றது. இவ்வுண்மை,

"எழிலிரைந்தும் வழுவறப்புணர்த்தித்

தெள்ளுசீர்ப்புலமை வள்ளுவன் தனக்கோர் நற்றுணையுடைத்தெனக்கற்றவர் களிப்ப அருட்பயனென்னா அதற்கொருநாமந் தெருட்படப்புனைந்து செந்தமிழ்யாப்பிற் குறளடி வெள்ளை ஒரு நூறியம்பினன்”

எனவரும் நிரம்பவழகிய தேசிகர் உரைப்பாயிரத்தால் இனிது புலனாதல் காணலாம்.

“யாதானும் நாடாமல் ஊராமல்’ (திருக். 397) என்றபடி உலக மக்கள் அனைவரும் ஒருநாட்டார் ஒரூரார் ஒரு குடும்பத்தார் என்னும் ஒருமையுணர்வுடன் அன்பினால் அளவளாவி இனிது வாழ்தல் வேண்டும் என்னும் உயர்ந்த ஒழுகலாற்றினை வற்புறுத்தும் முறையில் வாழ்வியல் நூலாகத் திகழ்வது திருக்குறள். உலகத்தில் எல்லா மக்களும் இன்பமாக வாழ்தல் வேண்டும் என்னும் உயர்ந்த குறிக்கோளையுடைய திருவள்ளுவர், உலகில் மன்னுயிர்களின் வாழ்வுக்கு அடிப் படையாகவுள்ள பொருள்களின் தன்மைகுறித்துத் தம்முள் மாறுகோளுரை பகரும் சமயவாதிகளின் கருத்தின் வழியே சார்ந்து நின்று அவர்களுள் ஒருதிறத்தார்க்குரிய கொள்கை யினை மட்டும் வற்புறுத்தும் நிலையில் ஒருபாற் சாயாமல், உலகமக்கள் எல்லோர்க்கும் உரிய இவ்வுலக வாழ்வின்ை அடிப்படையாகக் கொண்டு உயிர்கட்குச் சார்பாக எக்காலத்தும் மாறாதுள்ள செம்பொருளுண்மையினை உள்ளத்திற்கொண்டு உலகத்தார் உய்திபெறும் வண்ணம் வையத்து வாழ்வாங்கு வாழ்தற்குரிய நெறிமுறைகளை அறிவுறுத்தும் நிலையில் வாழ்வியல் நூலாகிய திருக்குறளை இயற்றியுள்ளார், இச்செய்தி,

'சமயக்கணக்கர் மதிவழி கூறாது

உலகியல் கூறிப்பொருளிது வென்ற வள்ளுவன்’ (கல்லாடம் 14)

எனவும்,

ஒன்றே பொருளெனின் வேறென்ப வேறெனின் அன்றென்ப ஆறு சமயத்தார் - நன்றென எப்பாலவரும் இயைபவே வள்ளுவனார் முப்பால் மொழிந்த மொழி' (திருவள்ளுவமான்ல 9)

எனவும் வரும் ஆன்றோர் வாய் மொழிகளால் இனிது புலனாகும்.

பல சமயத்தவரும் தத்தமக்குரிய மறைநூலாக மதித்துப்போற்றும் நிலையில் உலக வாழ்க்கையில் அனைவர்க்கும் பயன் தரும் நல்லறங்கள் எல்லாவற்றையும் நடுநிலையில் நின்று அறிவுறுத்தும் பொதுநூலாக விளங்குவது திருக்குறள் என்னும் உண்மையினைச் சமயவேறுபாடின்றி எல்லோரும் ஏற்றுக்கொள்கின்றனர். எனினும் இப்பொதுமையுணர்வொன்றினையுமே கருதி ஒன்றோடொன்று முரண்பட்ட சமயக்கொள்கைகள் யாவும் திருக்குறள் நூலாசிரியராகிய திருவள்ளுவர்க்கு உடன் பாடாவனவே எனக் கூறத்துணிவார் எவரும் இலர். சமயவாதிகளுள் கடவுள் உண்டு என்னும் கொள்கை யுடைவர்களும் கடவுள் இல்லை என்னும் கொள்கை யாளர்களும், உயிர்கள் உள என்பாரும் இல என்பாரும், காணப்படும் உலகம் மெய் என்பாரும் வெறும் பொய்த் தோற்றமே என்பாரும், உயிர்கட்கு மறுபிறப்பும் இருவினைப் பயன்களும் உள என்பாரும் இல்லை என்பாரும் எனத் தம்முள் முரண்பட்ட கொள்கைகளையுடையராதலை அவரவர் சமய நூல்களால் அறிந்து கொள்ளலாம். இவ்வாறு பலசமயத்தாரும் தம்முள் மாறுகொண்டு கூறும் பல்வேறு முடிவுகளுக்கும் இடந்தரும் நிலையில் திருவள்ளுவர் திருக்குறளை இயற்றியிருத்தல் இயலாது. இங்ங்னம் பலதிறத்தாலும் முரண்பட்ட கொள்கையினவாகிய சமயங்கள் பலவற்றுள் ஏதேனும் ஒரு சமயத்தினைச் சார்பாகக் கொண்டு தமது நூலை இயற்றாமல் உலகமக்கள் அனைவரது வாழ்க்கையிலும் காணப்படும் இன்பத் துன்பங்களாகிய நுகர்ச்சிகளையும் அவற்றுக்குக் காரணமாய் மக்கள் செய்யும் நல்வினை தீவினைகளையும் அடிப்படை யாய்க் கொண்டு நல்லதன் நலனும் தீயதன் தீமையும் இவையெனப் பகுத்துணர்ந்து தீவினையைத் தவிர்த்து நல்லனவே செய்தொழுகுதலாகிய அறநெறியினை உலக மக்கள் மேற்கொள்ளும்படி அறநூலாகிய திருக்குறளைத் திருவள்ளுவர் இயற்றியுள்ளார் என்பதும், நல்லதன் நலனும் தீயதன் தீமையும் ஆகிய இருவினைப்பயனும், அவை காரணமாக வரும் மறுபிறப்பும் இல்லையெனச் சாதிக்கும் இன்மைக் கொள்கைக்குத் திருக்குறளிற் சிறிதும் இடமில்லை யென்பதும் இந்நூலைக் கற்போர் உளங்கொளத்தக்கனவாம்.

திருவள்ளுவர் திருக்குறளிலே ஐயத்திற்கிடனின்றி அறிவுறுத்திய கருத்துக்களிற் பெரும்பாலன அவர்க்குமுன் நெடுங்காலமாகத் தமிழகத்தே வாழ்ந்த சான்றோர்கள் தமது வாழ்க்கை நுகர்ச்சியிற் கண்டு அறிவுறுத்திய தொன்மை யுடையனவே. தமிழ்நாட்டில் இடைக்காலத்திற் குடியேறிய அயலவர் கூட்டுறவால் பரவிய புதிய கொள்கைகளை ‘எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும் அப்பொருள், மெய்ப்பொருள் காண்பதறிவுட் திருக். 423) எனத்தெளிந்த சிந்தனையுடன் நடுவுநிலையில் நின்று ஆராய்ந்து அவற்றுள் நல்லனவற்றை உடன்பட்டு ஏற்றுக்கொண்டும், இந்நாட்டில் நெடுங்காலம் நிலைத்துள்ள பழைமையுடையனவாயினும் தீமையுடையனவற்றைக் கண்டித்து அறவே விலக்கியும் மக்களுக்கு நற்பயன்தரும் ஒழுக்கநெறியினை அறிவுறுத்தும் முறையினைத் திருவள்ளுவர் தம் நூலில் மேற் கொண்டுள்ளார். எனவே திருக்குறள் உலகப்பொதுமறை எனப் போற்றப்பெறுவதாயிற்று. உலகமக்கள் அனைவர்க்கும் பயன்படும் வகையில் பொதுநூலியற்றத் திருவுளங்கொண்ட திருவள்ளுவர், தாம் ஒரு நாட்டிற்கோ ஒரு மொழிக்கோ ஒரு சமயத்திற்கோ ஓரினத்திற்கோ உரியவர் என்ற நிலையில் தம்முடைய உள்ளத்தை ஒரு குறிப்பிட்ட சிறிய எல்லைக்குள் சுருக்கிக்கொள்ளாமல் 'யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்றாங்கு உலகிற் பலதிறப்பட்ட கொள்கையாளர்களின் கருத்துக்களுக்கும் விரிந்து இடங்கொடுக்கும் விசும்புதோய் உள்ளத்தினராய், உலகத்தார் உள்ளியதெல்லாம் நுனித் துணர்ந்து அறிவுறுத்தும் முறையில் திருக்குறளை இயற்றியுள்ளார். இதுபற்றியே எல்லாப் பொருளும் இதன் பாலுள இதன்பால், இல்லாத எப்பொருளும் இல்லையால். (திருவள்ளுவமாலை) எனப் புலவர் பெருமக்கள் திருக்குறளைப் பாராட்டிப் போற்றியுள்ளார்கள்.

உலகப்பொது மறையாகத் திகழும் திருக்குறளில் தமிழ்நாட்டில் தொன்மைக் காலத்தே தோன்றி நிலைபெற்று வளர்ந்துள்ள சைவம் வைணவம் முதலிய தெய்வ வழிபாட்டு மரபுக்ளையும் தமிழர் கண்ட தத்துவவுண்மைகளையும் புலப்படுத்தும் குறிப்புக்களும் வடநாட்டில் தோன்றியனவாய் இடைக்காலத்தே தமிழகத்தில் வந்து பரவிய வைதிகம் சமணம் பெளத்தம் முதலிய சமயங்களுக்குரிய கருத்துக் களையும் கொள்கைகளையும் புலப்படுத்தும் குறிப்புக்களும் இடம் பெற்றிருத்தல் காணலாம். பன்னெடுங்காலமாகத் தமிழகத்தில் வாழும் சைவர் வைணவர் சமணர் பெளத்தர் முதலிய பல சமயச் சான்றோர்களும் திருவள்ளுவர் அருளிய திருக்குறளைத் தத்தம் சமயத்திற்கு அரண்செய்யும் பொதுமறையாகவே மதித்துப் போற்றி வந்துள்ளார்கள். இச்செய்தி இதுவரை தமிழ்நாட்டில் தமிழ்மொழியில் தோன்றி வழங்கும் பல்வேறு சமய நூல்களால் நன்கு புலனாகும்.__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

 இவ்வாறு திருக்குறளானது பல்வேறு சமயத்தவ ராலும் பல்வேறினத்தவர்களாலும் மதித்துப் போற்றப்பெறும் பொதுநூலாகக் கருதப்படினும் பன்னெடுங்காலமாகத் தமிழ் மக்கள் தம் வாழ்க்கையிற் கடைப்பிடித்தொழுகும் தெய்வக் கொள்கையினையும் அதனொடு தொடர்புடைய மெய் யுணர்வுக் கொள்கையினையும் ஐயத்திற்கிடனின்றித் தெளிவு படுத்தும் முறையில் இந்நூல் அமைந்துள்ளமை இங்குச் சிறப்ப்ாகக் குறிப்பிடத்தக்கதாகும். தமிழ்நாட்டின் தொன்மைச் சமயங்களாகிய சைவ வைணவ சமயங்கட்குச் சிறப்புரிமையுடையனவாகவுள்ள நம்பிக்கைக்கும் தொன்மைச் செய்திகட்கும் வழிபாட்டு நெறிக்கும் தத்துவ வுண்மைக்கும் ஆதாரமாகிய பொருட் குறிப்புக்கள் பல திருக்குறளில் இடம் பெற்றுள்ளன.

கடவுள் உயிர் உலகு என்னும் முப்பொருள்களும் தோற்றமில் காலமாக (அநாதியே) உள்ள பொருள்கள் என்பது சைவ சித்தாந்தத் தத்துவநெறியின் அடிப்படைக் கொள்கையாகும். இக்கொள்கைக்கு நிலைக்களமாகத் திருக்குறள் அமைந்துள்ளது. இறைவன் மன்னுயிர், உலகு எனத் திருக்குறளில் வழங்கும்சொல்லாட்சியினைக் கூர்ந்து நோக்குங்கால் இம்மூன்று பொருள்களும் தோற்றமில் காலமாகவுள்ள உள்பொருள்களேயென்பது ஆசிரியர் திருவள்ளுவர் கோட்பாடாதல் நன்கு தெளியப்படும். திருக்குறளில் கடவுள் வாழ்த்து என்னும் முதலதிகாரத்தில் இறைவனாகிய பதியின் உண்மையும், வான்சிறப்பு என்னும் இரண்டாம் அதிகாரத்தில் உலகமாகிய பாசத்தின் உண்மையும் நீத்தார்பெருமை என்னும் மூன்றாம் அதிகாரத்தில் உயிர்களாகிய பசுவின் உண்மையும் முறையே உணர்த்தப்பெற்றன.

திருவள்ளுவர் அருளிச்செய்த திருக்குறளும் நான்மறைமுடிபாகிய உபநிடதங்களும் திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசர் சுந்தரர் என்னும் மூவர் அருளிய தேவாரமும் திருவாதவூர் முனிவர் அருளிய கோவை திருவாசகமும் திருமூலர் அருளிய திருமந்திரமும் மேற்குறித்த முப்பொரு ளுண்மையினை அறிவுறுத்தும் திறத்தில் ஒத்த கருத்துடைய மெய்ந் நூல்களாகும். இவ்வுண்மையினை,

"தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்

மூவர்தமிழும் முனிமொழியுங் - கோவை

திருவா சகமும் திருமூலர் சொல்லும்

ஒருவா சகமென் றுணர்”

என வரும் பாடலில் ஒளவையார் விளக்கியுள்ளமை கானலாம். பன்னிரு திருமுறைகளிலும் திருக்குறள் பலவிடங்களிலும் எடுத்தாளப்பெற்றுள்ளது. திருமுறைகளின் பயனாகவமைந்த சைவ சித்தாந்தத் தத்துவ வுண்மைகளை விளக்கத் தோன்றிய திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார் சிவஞானபோதம் முதலிய மெய்கண்ட நூல்களிலும் திருக்குறளின் பாடல்களும் தொடர்களும், சொற்களும் கருத்துக்களும் ஆங்காங்கே இடம் பெற்றுள்ளன. இவ்வாறு தமிழ்மறையாகிய திருக்குறளோடு சைவத் திருமுறைகள் பன்னிரண்டும் சைவ சித்தாந்த நூல்கள் பதினான்கும் நெருங்கிய தொடர்புடையனவாக அமைந்திருத்தலை உற்று நோக்குங்கால் மேற்குறித்த சைவத் திருமுறைகளாலும் மெய்கண்ட நூல்களாலும் அறிவுறுத்தப்பெறும் சைவ சித்தாந்தத் தத்துவங்கள் பலவற்றுக்கும் ஆதாரமாகத் திகழ்வது திருவள்ளுவர் அருளிய உலகப் பொதுமறையாகிய திருக்குறளே என்னும் உண்மை நன்கு புலனாகும்.

இவ்வுலக நிகழ்ச்சியைக் கூர்ந்து நோக்குங்கால் காணப்படும் உலகம் ஒர் ஒழுங்கு நிலையாகிய ஆணைக்கு உட்பட்டு நின்று செயற்படுதல் நன்கு புலனாகும். இத்தகைய நியதியொடு பொருந்திய உலகின் இயக்கத்திற்கு வினை முதலர்ய் உடனின்று இயக்கி நிற்கும் பேரறிவும் பேராற்றலும் பேரருளும் வாய்ந்த முழுமுதற் பொருள் ஒன்று உலகுயிர் கட்குச் சார்பாய் இருத்தல் வேண்டும் என்பது அறிஞர் பலர்க்கும் ஒப்பமுடிந்த உண்மையாகும். இங்ங்னம் எல்லார்க்கும் புலனாகும் நிலையிற் காணப்படும் உலக நிகழ்ச்சியாகிய காரியத்தை அடிப்படையாகக் கொண்டு இக்காரியத்திற்குரிய வினை முதலாய் உலகுயிர்களை உடனின்று இயக்கியருளும் முழுமுதற் பொருளாகிய கடவுளது உண்மையினை உணர்த்தக் கருதிய திருவள்ளுவர்.

“அகர முதலவெழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே யுலகு” (திருக். 1)

எனக் காண்டற்கரிய கடவுளின் உண்மையினைக் கருத லளவையால் நிறுவிப்போந்தார். ‘எழுத்துக்கள் எல்லாம் தம்மை உடனிருந்து செலுத்தும் அகரவொலியினைத் தமக்கு முதலாகவுடையன. அதுபோல உலகமும் தன்னை உடனிருந்து இயக்கி நிற்கும் ஆதி பகவனாகிய இறைவனைத் தனக்கு முதலாகவுடையது” என்பது இதன்பொருள்.

இங்கு உலகு என்றது, உடம்பொடு காணப்படும் உயிர்த்தொகுதியினை. ஓர் வரையறையுடன் காணப்படும் இவ்வுலக இயக்கமாகிய காரியத்தினைக் கொண்டு இதற்கு நிமித்த காரணமாகிய பொருள் ஒன்று உண்டு எனத் துணிய வேண்டியிருத்தலால் ‘உலகு ஆதி பகவனை முதலாக வுடையது என உலகின் மேல் வைத்துக் கடவுளது உண்மை யினைப் புலப்படுத்தினார் ஆசிரியர். ஆயினும் தனக்கு முதல்வனாக ஆதிபகவனைத் தேர்ந்து கொள்ளும் உணர் வுரிமையும் உடைமைத்தன்மையும் உலகிற்கு இன்மையால், ‘உலகிற்கு முதல்வன் ஆதிபகவன் என்பதே இத்திருக்குறளின் கருத்தாகக் கொள்ளுதல் வேண்டும்’ என விளக்கம் கூறினார் பரிமேலழகர். ஆசிரியர் தொல்காப்பியனாரும்,

“எழுத்தெனப் படுப, அகர முதல” (நூன்மரபு 1)

எனவும், மெய்யின் இயக்கம் அகரமொடு சிவனும் (மொழி. 13) எனவும் வரும் நூற்பாக்களில் எழுத்துக்கள் எல்லாவற்றின் இயக்கத்திற்கும் காரணமாய் நிற்கும் அகரம் முதன்மை யுடையதாதலைத் தெளிவாகக் குறித்துள்ளார். "அகரம் தனியே நிற்றலானும் பல மெய்க்கண்நின்று அவ்வம் மெய்கட்கு இசைந்த ஒசைகளைப் பயந்தே நிற்றலாலும் வேறுபட்டதாக ஒன்றேயாயும் பலவேயாயும் நிற்பதோர் தன்மையுடைத்து என்று கோடும் (கொள்ளுதும்), இறைவன் ஒன்றேயாய் நிற்குந்தன்மையும் பல்லுயிர்க்குந்தானேயாய் நிற்குந்தன்மை போல” எனவும் "இறைவன் இயங்குதினைக் கண்ணும் நிலைத்தினைக் கண்ணும் பிறவற்றின் கண்னும் அவற்றின் தன்மையாய் நிற்குமாறு எல்லார்க்கும் ஒப்ப முடிந்தாற் போல அகரமும் உயிர்க்கண்ணும் தனிமெய்க் கண்ணும் கலந்து அவற்றின் தன்மையேயாய் நிற்கும் என்பது சான்றோர்க்கெல்லாம் ஒப்பமுடிந்தது. அகர முதல’ என்னுங் குறளால் அகரமாகிய முதலையுடைய எழுத்துக்க ளெல்லாம், அதுபோல இறைவனாகிய முதலையுடைத்து உலகம் என வள்ளுவர் உவமை கூறியவாற்றானும், கண்ணன் ‘எழுத்துக்களில் அகர மாகின்றேன் யானே எனக் கூறிய வாற்றானும் பிற நூல்களானும் உணர்க’ எனவும் தொல் காப்பிய முதற் சூத்திர வுரையில் நச்சினார்க்கினியர் அகரத்தைப் பற்றிக்கூறிய கருத்துக்கள் திருக்குறள் முதலதி காரத்தின் முதற்குறளில் விளக்கமாக அமைந்திருத்தல் காணலாம்.

இத்திருக்குறளைத் திருமூலர் முதலிய திருமுறை யாசிரியர்களும் மெய்கண்டார் முதலிய சைவ சித்தாந்த நூலாசிரியர்களும் தாம் வழிபடும் சிவபரம் பொருளுக்குரிய சிறப்பியல்பினை அறிவுறுத்தும் நிலையில் மேற்கோளாக எடுத்தாண்டுள்ளார்கள். திருவள்ளுவர் அருளிய திருக்குறளில் கடவுள் உயிர் உலகம் என்னும் முப்பொருள் களைப் பற்றிக் கூறப்பெற்றுள்ள தத்துவவுண்மைகளை அடியொற்றிச் சைவசித்தாந்த மெய்ந் நூற்பொருளை விரித்துரைக்கும் முறையில் அமைந்தது உமாபதி சிவாச்சாரியார் இயற்றிய திருவருட்பயன் என்னும் நூல் என்பது முன்னர்க் கூறப்பெற்றது. இந்நூல் திருக்குறளைப் போன்று பத்துக் குறளைத் தன்னகத்தே கொண்டது ஒர் அதிகாரமாகப் பதிமுது நிலைமுதல் அனைந்தோர் தன்மையிறாகப் பத்ததிகாரங்களையுடையது. திருவள்ளுவர் அகரமுதல’ எனத் தொடங்கியது போலவே இந் நூலாசிரியரும்,

“அகரவுயிர் போல் அறிவாகி எங்கும்

நிகரிலிறை நிற்கும் நிறைந்து”

என இந்நூலைத் தொடங்கியுள்ளார். அகரம் நாத மாத்திரையாய் எத்தகைய விகாரமுமின்றி இயற்கையில் தோன்றுவதாய் எழுத்துக்கள் தோறும் நிறைந்து முதன்மை யுற்று நிற்ப, ஏனைய எழுத்துக்களெல்லாம் அவ்வகரத்தின் இயக்கத்தால் வெவ்வேறு முயற்சியிற்றோன்றித் திரிபுடைய வாய் நிலவுதல்போல, ஆதிபகவனாகிய இறைவன் இயற்கை யுணர்வினாய் முற்றுனர்ந்துயாண்டும் நீக்கமற நிறைந்து முழுமுதல்வனாக விளங்கி உலக வுயிர்கள் யாவும் அவனது ஆணைக்குள் அடங்கி வினைக்கீடாக உலக உடல் கருவி நுகர்வினைப் பெற்றுத் திரிபுடையனவாய் நிலவா நின்றன என்பதாம். எழுத்துக்கள் எல்லாவற்றினும் நிறைந்து அவற்றிற்கெல்லாம் முதலாய் நிற்கும் பொதுவியல்புபற்றி அகரத்தை இறைவனுக்கு உவமையாகக் கூறினும் அப் பரம்பொருள் அறிவேயுருவாய் உலகப்பொருளனைத்தும் தனக்கு உடைமையாகக் கொண்ட தன்னேரில்லாத் தலைவனும் ஆதலால், உண்மையாக ஆராய்ந்து பார்க்குங்கால் அம்முதல்வன் தன் உடைமைப் பொருள்க ளாகிய பசுபாசங்கள் ஒன்றினோடும் உவமிக்கப்படுபவ னல்லன் என்பதே திருவள்ளுவர் கருத்தென்பது அறிவுறுத்துவார், 'அறிவாகி எங்கும்நிகிரிலிறை நிற்கும் நிறைந்து என்றார். அகரவுயிர்போல் 'அகர முதல’ என்னும் முதற் குறளையும் அறிவாகி என்பது வாலறிவன் என்னும் இரண்டாம் குறளின் தொடரையும், 'நிகரிலிறை என்பது 'தனக்குவமையில்லாதான்’ (திருக். 7) என்னும் தொடரையும் ‘எங்கும் நிறைந்து நிற்கும்’ என்பது, ‘இறைவன் (திருக் 5, 10) பெயர்க் காரணத்தையும் விளக்கும் முறையில் அமைந்திருத்தல் ஒப்புநோக்கியுணரத்தகுவதாகும்.

எழுத்துக்கள் உயிர், மெய் என இருதிறத்தனவாய் அகரமுதல ஆதல் போன்று, உலகமும் உணர்வுடைய வுயிர்கள் உணர்வில்லாத உயிரல் பொருள்கள் என இரு திறத்தினதாய் ஆதிபகவனை முதலாகவுடையது என்று அறிவுறுத்துவது திருக்குறளின் முதற்குறளாகும். உயிரெழுத்து ஆன்மாவுக்கும் மெய்யெழுத்து தத்துவப் பிரபஞ்சத்திற்கும் அகரம் ஆதிபகவானாகிய இறைவனுக்கும் உவமை. ஆதிபகவன் என்பது இருபெயரொட்டுப் பண்புத்தொகை என்பர் பரிமேலழகர். அவர் கருத்துப்படி இத்தொடர் 'ஆதியாய பகவன் என விரியும்; முதற்கடவுள் என்பது இதன்பொருளாகும். இனி, ஆதிபகவன் என்னும் இத்தொடர்க்கு ஆதியொடு கூடியபகவன்’ எனப் பொருள் கொள்வர் ஆளுடையபிள்ளையார். இங்கு ஆதி என்றது, எப்பொருள்களையும்தோற்றுவிக்கும் அன்னையாகிய சக்தியை. உலகத்தோற்றத்திற்குக் காரணமானவள் என்ற பொருளில் ஆதி என்னும் சொல் சக்தியாகிய அன்னையைக் குறிக்கும் காரணப் பெயராயிற்று. ஆதி என்ற சத்தியை ஒருபாகத்திற்கொண்டவன் இறைவன் என்பார் ஆதிபகவன்’ என்றார் திருவள்ளுவர். சத்தியுள் ஆதியோர் தையல் பங்கன் (1-115-4) எனவரும் திருஞான சம்பந்தர் தேவாரத்தொடர் ஆதிபகவன் என்னும் திருக்குறள் தொடரின் விளக்கமாக அமைந்துள்ளமை அரியத்தகுவதாகும். எல்லாம் வல்ல இறைவனை அம்மையுடன் அமர்ந்த அப்பனாகப் பெண்னொரு பாகனாகக் கருதிப்போற்றும் முறை தமிழ்நாட்டில் தொன்று தொட்டு நிலவி வரும் தெய்வ வழிபாட்டு மரபாகும். இம்மரபு

"நீலமேனி வாலிழை பாகத்து

ஒருவன்” (ஐங்குறுநூறு,கடவுள் வாழ்த்து)

எனவும்,

“பெண்ணுருவொரு திறனாகின்று அவ்வுரு

தன்னுளடக்கிக் கரக்கினும் கரக்கும்”

(புறநானுாறு.கடவுள்வாழ்த்து)

எனவும்,

"ஊர்ந்தது ஏறே, சேர்ந்தோள் உமையே’

(அகநானுாறு.கடவுள் வாழ்த்து)

எனவும் வரும் சங்கச் செய்யுட்களிலும் இடம்பெற்றுள்ளமை காணலாம். இயல்பாகவே பாசங்களின் நீங்கிய முற்றுணர்வின னாகிய இறைவன் உலகப்பொருள்களில் தோய்வின்றித் தானே திகழொளியாய்த் தனித்துநிற்கும்நிலையில் சிவம் (அப்பன்) எனவும் உலகெலாமாகி வேறாய் உடனுமாய் இவ்வாறு உலக உயிர்களொடு கலந்து நிற்கும் நிலையில் சத்தி (அம்மை) எனவும் ஒருமையின் இருமையினாய (தாதான்மிய சம்பந்தத்தால் இருதிறப்பட்டு) உலகினை இயக்கி நிற்றல் பற்றி அம் முதல்வனை ஆதிபகவன் (அம்மையப்பன்) எனத் திருவள்ளுவர் குறித்துள்ளார் எனக் கொள்ளுதல் பெரிதும் ஏற்புடையதாகும். இறைவன் அம்மையப்பனாய்ப் பிரிவற நின்றே உலகினைப் படைத்துக்காத்து அழித்து மறைத்து

அருள் புரிகின்றான் என்பது

"தன்னிற்பிரிவிலா எங்கோமான்' (திருவெம்பாவை)  எனவும்,

“எத்திறம் நின்றான் ஈசன் அத்திறம் அவளும் நிற்பள்”

(சிவஞான சித்தியார் சுபக். 165)

எனவும்,

“சிவனெனும் பொருளும் ஆதிசத்தியொடு

சேரில் எத்தொழிலும் வல்லதாம்” (செளந்தரியலகிரி)

எனவும் வரும் ஆன்றோருரைகளால் இனிதுனரப்படும்.

இறைவன் தனது அருவாகிய சிற்சத்தியுடன் வேறாதலும் (பேதமாதலும்) ஒன்றாதலும் (அபேதமாதலும்) இன்றி அவ்விரண்டற்கும் பொதுவாய் (தாதான்மிய சம்பந் தத்தால்) நீக்கமின்றி எங்கும் விரிந்து நிற்பன் என்பார் “ஆனையின் நீக்கமின்றி நிற்பன் (சிவஞானபோதம், இரண்டாம் சூத்திரம்) என்றார் மெய்கண்டார். எந்த எந்தப் பொருள் யாண்டும் விரிந்து நிற்கின்றதோ அந்த அந்தப் பொருள் ஒன்றாதலும் இரண்டாதலும் இன்றி அவ்விரண்டற்கும் பொதுமையில் நிற்கும், தன் எல்லை யளவும் விரிந்து பரவிநிற்கும் ஞாயிறு தன்னொளிக்கதிரோடு நீக்கமின்றி நிற்றல் போலும் என்னும் ஏதுவால் இறைவன் தானும் தன்சத்தியும் என இருதிறப்பட்டுத்தனது ஆணையாகிய சிற்சத்தியுடன் நீக்கமின்றி நிற்றலை வலியுறுத்தும் நிலையில் அமைந்தது 'ஆதிபகவன் என்னும் இத்திருப்பெயர் என்பதும் இது மாதொருகூறாகிய அம்மை யப்பரைக் குறித்த பெயரென்பதும் நன்கு துணியப்படும்.

"அம்மையப்ப ரேயுலகுக் கம்மையப்பர் என்றறிக

அம்மையப்பர் அப்பரிசே வந்தளிப்பர் - அம்மையப்பர்

எல்லா வுலகுக்கும் அப்புறத்தார் இப்புறத்தும்

அல்லார்போல் நிற்பர் அவர்” (திருக்களிற்.1)

எனவரும் திருக்களிற்றுப்படியார் முதற்பாடல், ஆதிபகவன் முதற்றேயுலகு என்னும் திருக்குறள் தொடருக்குரிய விளக்கவுரையாக அமைந்துள்ளது.

உலகமெலாம் ஒடுங்கிய ஊழிக்காலத்தே, "பெண்ணுரு ஒரு திறனாகின்று அவ்வுருத் தன்னுளடக்கிக் கரக்கினுங் கரக்கும்’ (புறநானூறு, கடவுள் வாழ்த்து) என்றபடி அம்மையின் வடிவினைத் தன்னுள் அடக்கி மறைத்துக் கொண்டு ஒருவனாக நின்ற இறைவன், உலகத்தை மீளத்தோற்றுவிக்கும் படைப்புக் காலத்தே உயிர்களின் வினைப்பயன்களை நுகர்வித்துக் கழித்தற்பொருட்டும், உயிர்களைத் தோற்றமில் காலமாகப் பிளிைத்துள்ள அக விருளாகிய ஆணவமலம் கழலும் பக்குவத்தை யடைதற் பொருட்டும் தன்னுள் அடக்கிய சத்தியினை மீண்டும் தன்னுருவில் வெளிப்படச்செய்து அம்மையப்பாகவிருந்து ஒடுங்கிக்கிடந்த மன்னுயிர்களை உலகு.உடல் கருவி நுகர் பொருள்களுடன் மீளவும் தோற்றுவித்தருள்வன் என்பார், 'அம்மையப்பரே உலகுக்கு அம்மையப்பர் என்றறிக’ என்றார். இதனால் எல்லாவற்றையும் ஒடுக்குதற் கருத்தாவாகிய இறைவனே மீளவும் படைத்தற்குரியவன் என்பதனையும் புலப்படுத்தியவாறு. பல்லுயிர்க்கும் தாயுந் தந்தையுமாகிய இறைவர் மன்னுயிர்த்தொகுதிகளின் இயல்புக்குத் தக்கவாறு தன்மைக் கண்ணும் முன்னிலைக் கண்ணும் படர்க்கைக் கண்ணும் எழுந்தருளிவந்து நற்பொருளையறிவுறுத்தி ஆட்கொண்டு அருள்புரிவார் என்பார் அம்மையப்பர் அப்பரிசே வந்தளிப்பர்’ என்றார். இங்ங்ணம் உயிர்கட்கு அருள்புரிதல் வேண்டி இவ்வுலகத்துத் திருமேனி கொண்டு எளிவந்து அருள்புரிவாராயினும் நிலமுதல் நாதமுடிவாக வுள்ள தத்துவங்களைக் கடந்து அப்பாற்பட்டு விளங்கும் அவ்விறைவரது உண்மையியல்பு யாவராலும் உணரவியலாத அருமையுடையது என்பார் எல்லாவுலகுக்கும் அப்புறத்தார் என்றார். இவ்வாறு அண்டங்கடந்து அப்புறத்தாராயினும் தம்மின் வேறல்லாத அருள் என்னும் சத்தியாலே எல்லா வுலகங்களும் தொழிற்பட்டு இயங்கும் வண்ணம் உலகுயிர் களிற் பிரிவறக் கூடியிருந்தே அவற்றின் தன்மை தம்மைப் பற்றாதவாறு அவற்றுள் சிறிதும் தோய்வின்றி நிலைத் துள்ளார் என்பார், இப்புறத்தும் அல்லார்போல் நிற்பர் அவர் என்றார்.

அம்மையப்பராகிய இறைவர், தன்னிற்பிரிவிலா அருளாகிய சத்தியால் உலகுயிர்களோடு இரண்டறக்கலந்து நின்று ஐந்தொழில் நிகழ்த்தியருளுதலாகிய பொதுவியல்பும், இவ்வாறு உலகுயிர்களோடு பிரிவறக்கலந்து நிற்பினும் அவற்றின் தன்மை தான்எய்தலின்றி இவை யெல்லா வற்றையுங் கடந்து சிந்தனைக்குரிய சிவமாகித்தனித்து மேற்பட்டு விளங்கும் தன்னுண்மையாகிய சிறப்பியல்பும் ஒருங்குனர்த்துவது திருக்களிற்றுப்படியார் முதற்பாட லாகும். இது திருக்குறள் முதற்பாடலிலமைந்த 'ஆதிபகவன் முதற்றேயுலகு என்னுந் தொடரால் உணர்த்தப்படும். இறைவனது பொதுவும் சிறப்புமாகிய இருவகை இலக்கணங் களையும் நன்கு புலப்படுத்தும் நிலையில் அமைந்துள்ளமை இங்கு ஊன்றி நினைக்கத்தகுவதாகும்.

திருக்குறளின் முதலதிகாரமாகிய கடவுள் வாழ்த்தில் ஆதிபகவன், வாலறிவன், மலர்மிசையேகினான், வேண்டுதல் வேண்டாமையிலான், இறைவன், பொறிவாயில் ஐந்தவித்தான், தனக்குவமையில்லாதான், அறிவாழியந்தனன், எண்குணத்தான் என்பன எல்லாம்வல்ல கடவுளுக்குரிய திருப்பெயர்களாகக் குறிக்கப்பெற்றுள்ளன. இவற்றுள் எண்குணத்தான் என்ற பெயர் இறைவனுக்கே சிறப்புரிமை யுடைய குணங்கள் எட்டு என்பதனைப் புலப்படுத்துவதாகும். "எண்குணங்களாவன தன்வயத்தனாதல், தூயவுடம்பின னாதல், இயற்கையுணர்வினனாதல், முற்றுமுணர்தல், இயல்பாகவே பாசங்களின் நீங்குதல், பேரருளுடைமை, முடிவிலாற்றலுடைமை, வரம்பிலின்பமுடைமை என இவை. இவ்வாறு சைவாகமத்துக் கூறப்பட்டது” எனப் பரிமேலழகர் தரும் முதல் விளக்கம் எண்குணத்தான் என்ற திருப்பெயர் சிவபெருமானுக்குச் சிறப்புரிமையுடையது என்பதனை நன்கு வலியுறுத்துவதாகும்.__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

 எல்லா நூல்களையுங் கற்றவர்க்கு அக்கல்வியறிவினா லாய பயன் ஞானமேயுருவாகிய இறைவன் திருவடிகளைத் தொழுது போற்றுதலேயாகும் எனவும், மெய்ந் நூல்கள் பல கற்றுணர்ந்தும் கடவுள் திருவடியினைத் தொழாதார்க்கு அவர்கற்ற கல்வியறிவினாற் சிறிதும் பயனில்லை எனவும் அறிவுறுத்தும் முறையில் அமைந்தது,

“கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்

நற்றாள் தொழாஅ ரெனின்” (திருக். கட. வா. 2)

எனவரும் திருக்குறளாகும். எல்லாவற்றையும் இருந்தாங்கே உணரவல்ல முற்றுணர்வு ஞானமே திருமேனியாகவுடைய இறைவனொருவனுக்கேயுரிய தனிப்பண்பு என்பதனை "வாலறிவன்’ என்ற தொடராலும் உலகத்து உடம்பொடு கூடி வாழும் மக்கள் முதலிய உயிர்கள் யாவும் பிறர் அறிவித்தால் அறியும் சிற்றறிவுடையனவாதலின் மக்கள் தாம் பெற்ற கல்வியறிவாற்பயன் பேரறிவுப் பொருளாகிய இறைவன். திருவடிகளை வணங்கி அறிவினால் நிறைவு பெறுதலே என்பதனை 'இறைவன் நற்றாள் தொழாஅரெனின் கற்ற தனாலாய பயன் என் கொல்’ என்ற தொடராலும் திருவள்ளுவர் புலப்படுத்திய திறம் உய்த்துணரத் தகுவதாகும்.

அன்பினாற் கசிந்துருகிப் போற்றும் அடியார்களின் நெஞ்சத்தாமரையிலே சோதிப்பொருளாய்ச் சுடர்விட்டுத் தோன்றுதல் இறைவனது அருளின் நீர்மையாதலின் எல்லாம் வல்ல முதல்வனுக்கு மலர்மிசையேகினான்’ என்பது ஒரு திருப்பெயராயிற்று. நினைப்பவர் நெஞ்சத்தினைக் கோயிலாக் கொண்டெழுந்தருளிய இறைவனது நல்ல திருவடிகளை இடைவிடாது நினைந்து போற்றுவார் எல்லாவுலகிற்கும் மேலாகிய வீட்டுலகின்கண்ணே எக்காலத்தும் அழிவின்றி வாழ்வார் என அறிவுறுத்துவது,

"மலர்மிசையேகினான் மாணடி சேர்ந்தார்

நிலமிசை நீடுவாழ் (திருக். கட. வா. 3)

எனவரும் திருக்குறளாகும். உயிர்க்குயிராய்ப் பிரிவின்றி (இரண்டறக்கலந்து) நிற்றல் இறைவனது இயல்பு என்பதனை 'மலர்மிசை யேகினான்’ என்னும் இத்தொடரால் திருவள்ளுவர் உய்த்துணர வைத்துள்ளமை உணர்தற் குரியதாகும். இறைவன் உலகுயிர்களோடு இரண்டறக்கலந்து நிற்கும் இப்பெற்றியை அத்துவிதம் என்ற சொல்லால் வழங்குதல் சைவசித்தாந்த மரபாகும்.

குறைவிலா நிறைவாகிய முதல்வனுக்கு ஒன்றை விரும்புதலும் வெறுத்தலும் ஆகிய குற்றங்கள் இல்லை. வேண்டுதலும் வேண்டாமையும் இல்லாதவனாகிய இறைவன் திருவடியைச் சேர்ந்தார்க்கும் விருப்புவெறுப்பு என்னும் அவ்விருகுற்றங்களும் இல்லாதொழிதலால் அவை காரணமாக வரும் பிறவித்துன்பங்களும் அவர்கட்கு எக்காலத்தும் உளவாகா என்பர்,

“வேண்டுதல் வேண்டாமை யிலானடி சேர்ந்தார்க்

கியாண்டும் இடும்பை யில’ (திருக் கட. வா. 4)

என்றார் திருவள்ளுவர்.

இறைவனது பொருள் சேர்ந்த புகழ்த்திறங்களை எக்காலத்தும் விரும்பிப் போற்றுவார்க்கு அகவிருளாகிய ஆணவத்தைப் பற்றிவரும் நன்றும் தீதும் ஆகிய இரு வினைகளும் உண்டாக மாட்டா என அறிவுறுத்துவது,

"இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்

பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு’ (திருக் கட. வா. 5)

எனவரும் திருக்குறளாகும். இதன்கண் இருள்” என்றது அவிச்சையாகிய மயக்கத்தை எனவும் பொருள்” என்றது மெய்ம்மையை எனவும் கொண்டு, "மயக்கத்தைப் பற்றி வரும் நல்வினை தீவினையென்னும் இரண்டு வினையும் உளவாகா, இறைவனது மெய்ம்மை சேர்ந்த புகழை விரும்பினாரிடத்து” எனப் பரிமேலழகர் உரை வரைந்துள்ளார். “இன்ன தன்மைத் தென ஒருவராலுங் கூறப்படாமையின் அவிச்சையை 'இருள்” என்றும் நல்வினையும் பிறத்தற்கு ஏதுவாகலான் இருவினையுஞ்சேரா என்றும் கூறினார். இறைமைக்குனங்கள் இலராயினாரை உடையர் எனக்கருதி அறிவிலார் கூறுகின்ற புகழ்கள் பொருள் சேராவாகலின் அவை முற்றவும் உடைய இறைவன் புகழே பொருள் சேர் புகழெனப்பட்டது. புரிதல் - எப்பொழுதுஞ் சொல்லுதல்”  என்பது மேற்குறித்த குறளுக்குப் பரிமேலழகர் எழுதிய விளக்கவுரையாகும்.

உலகப்பொருள்கள் கட்புலனாகாதவாறு கண் னொளியைத் தடைசெய்து நிற்கும் புறவிருளும் அது போலவே நுண்பொருள்களை உள்ளம் உணராதவாறு உயிரின் அறவினைத் தடைசெய்து நிற்கும் அகவிருளும் என இருளை இருவகையாகப் பகுத்துரைப்பர் பண்டைத் தமிழ்ச்சான்றோர். 'இருள் தூங்கு விசும்பு' (நற்றிணை 261) எனப் புறவிருளும் 'இருள்நீங்கியின்பம் பயக்கும் (திருக்குறள் 52) இருள்தீர்காட்சி (பெரும்பாண். 443) என அகவிருளும் குறிக்கப்பெற்றுள்ளமை காணலாம். உலகிற் புறத்தே காணப்படும் இருள் ஞாயிற்றின் ஒளிக்கதிர்களால் நீங்குமாறு போலவே, மக்களின் உள்ள்த்தே அறிவினைத் தடைசெய்து நிற்கும் அகவிருளானது உயிர்க்குயிராய்த் திகழும் இறைவனது அருளொளியாகிய மெய்யுணர்வினால் நீங்கும் என்பது, "இறைவன் பொருள் சேர்புகழ் புரிந்தார் மாட்டு இருள்சேர் இருவினையும் சேரா” எனவரும் திருவள்ளுவர் வாய்மொழியால் நன்கு தெளியப்படும்.

சைவசமய சந்தானகுரவருள் ஒருவராகிய உமாபதி சிவாச்சாரியார் தோற்றமில் காலமாக (அநாதியாக) நிலைத்துள்ள பொருள்களை,

“எகன் அநேகன் இருள்கருமம் மாயையிரண்டு

ஆக இவை.ஆறு ஆதியில்” (திருவருட்பயன் 5)

என ஆறாகப் பகுத்துக் கூறியுள்ளார். “உலகிற்கு முதல்வ னாகிய இறைவனும் எண்ணிறந்தனவாகிய உயிர்த் தொகுதியும், அவற்றின் அறிவை மறைத்து நிற்கும் ஆனவ மலம் எனப்படும் இருளும், உயிர்கள் மீளப்பிறத்தற்குக் காரணமாகிய கன்மமும் சுத்தம் அசுத்தம் எனப்படும் மாயை இரண்டும் ஆக இவை ஆறும் அநாதியே (தோற்றமில் காலமாக) உள்ள உள்பொருள்களாகும்” என்பது இக் குறட்பாவின் பொருளாகும். ஆன்மாக்களின் அறிவாற்றலைத் தடைசெய்து நிற்கும் அகவிருளை ஆணவம் எனவும் மலம் எனவும் வழங்குதல் சைவசித்தாந்த மரபாகும். ஆணவம் என்பது எண்ணிறந்த உயிர்கள் தோறும் கூடிநின்று அவற்றின் அறிவை மறைத்தும் தான் ஒன்றேயாயிருப்பது உயிர்களது வினை நுகர்ச்சியாகிய பக்குவம் இன்மை ஆகியவற்றுக்கு ஏற்ப அவரவர் இடங்களிலே அறிவைமறைத்து நின்று அந்தந்த ஆன்ம போதங்களின் மீட்சியிலே நீங்குவதாயிருக்கிறதன் செயல் வகையாகிய எண்ணிறந்த ஆற்றல்களையுடையது, செறிந்த இருளும் வெளியென்று சொல்லுமளவுக்கு மொய்த்து இருண்டு உயிர்களின் அறிவைப்பிணித்து நின்று மறைத்தலைச் செய்வது செம்போடு கூடிய களிம்பானது அந்தச் செம்பு உள்ளபொழுதே அதனை உள்ளும்புறம்பும் கலந்து அதன்வெட்டு வாய்தோறும் கூடிநின்றாற்போல உயிரறிவோடும் கலந்து மறைந்து நிற்கிற அழியாத அநாதிமலமாய் உயிர்களின் விழைவு அறிவு செயல் என்னும் மூவகை யாற்றலும் சிறிதும் நிகழாதபடி மறைத்து நிற்பது எனச் சைவசித்தாந்த மெய்ந்நூல்கள் ஆணவ மலத்தின் இயல்பினை விரித்துரைக்கின்றன. உயிர்களின் அகக்குற்ற மாகிய இவ்வாணவமலம் திருக்குறளிலும் சைவத்திருமுறை களிலும் 'இருள்” எனவே குறிக்கப்பெற்றுள்ளது. இந் நுட்பத்தினைத் தெளியவுனர்ந்த உமாபதி சிவாசாரியார் திருக்குறளை அடியொற்றித் தாம் இயற்றிய திருவருட்பயன் என்னும் சைவசித்தாந்த நூலில் இருள் என்பதனை ஆணவமலம் என்ற பொருளில் ஆள்கின்றார். ஆணவமலத் தின் இலக்கணத்தினை விரித்துக்கூறும் அதிகாரத்திற்கு 'இருள்மலநிலை என அவர் பெயரிட்டமைக்கு 'இருள்சேர் இருவினையும் சேரா எனவரும் தொடரில் திருவள்ளுவர் 'இருள்” எனக்குறித்தது ஆணவமலம் எனத் தெளிய வுணர்ந்தமையே காரணமாகும்.

"இருள் நீங்கியின்பம் பயக்கும் மருள்நீங்கி

மாசறு காட்சியவர்க்கு” (திருக். 351)

எனவரும் குறளில் மயக்கத்தினை மருள்' என்ற சொல்லாற் குறித்த திருவள்ளுவர், மருளின் வேறாக இருள் என்றதோர் பொருளுண்மையினையும் உடன்குறிப்பிடுகின்றார். எனவே 'இருள்சேர் இருவினை எனவரும் தொடரிலுள்ள 'இருள்” என்பதற்குப் பரிமேலழகர் கூறுமாறு மயக்கம் எனக் கொள்ளுதல் பொருத்தமுடையதாகத் தோன்றவில்லை.

இவ்வுலகிற்புறத்தே காணப்படும் பூத இருளானது, ஒருபொருளையும் காண முடியாதபடிக் கண்களை மறைத்து நிற்பது. இவ்வாறே உயிர்களின் அகத்தே அறிவுக்கண்ணினை மறைத்து நிற்பதாகிய இருளொன்று உண்டெனவும், அகவிருளாகிய அது தன் தன்மையிதுவென உயிர்கள் உணராதவாறு உயிர்களது அறிவினை மறைத்து நிற்றலால், ஆன்மாவாகிய பொருளையும் காட்டாது அதனை மறைத்துள்ள தன்னையும் காட்டாது நிற்குந்தனித் தன்மையுடையதெனவும் சைவசித்தாந்த மெய்ந்நூல்கள் கூறும்.

o: - w - - -

ஒருபொருளுங் காட்டா திருளுருவம் காட்டும் இருபொருளுங் காட்டா திது" (23)

என்பது திருவருட்பயன். உலகத்திற் புலனாகும் பூதவிரு ளாகிய புறவிருளும் உயிர்களின் அகத்தே விரவி நிற்கும் ஆணவ மலமாகிய அகவிருளும் மறைத்தற்றொழிலால் தம்முள் ஒக்குமாயினும் பூதவிருளானது பண்ட பதார்த்தங்கள் எல்லாவற்றையும் மறைத்தாலும் மறைத்து நிற்பதாகிய தன்னை வெளிக்காட்டி நிற்கும், ஆனவ மலமாகிய அகவிருளோ ஆன்மாவாகிய பொருளை மறைத்தலோடு இன்ன தன்மைத்தென ஒருவரும் உணராதவாறு தன்னையும் மறைத்து நிற்கும் தனித்தன்மை யுடைய தென்பதனை மேற்குறித்த திருவருட்பயனில் உமாபதிசிவாசாரியார் தெளிவாகப் புலப்படுத்தியுள்ளமை காணலாம்.

அறியுந்தன்மையுடைய உயிர்களின் அறிவாற்றல்லத் தடைசெய்து உயிர்கட்கு ஊனத்தை விளைத்து நிற்கும் 'இருள்” என்பதொரு மலம் அநாதியேயுண்டென்பதும், அவ்விருள்நீக்கத்திற்கு இறைவன் அருளும் சிவஞானமாகிய பொருளையே துணையாகக்கொண்டு இறைவனது புகழ்த் திறங்களைப் புகழ்ந்து போற்றி வழிபடுதல் இன்றியமையா தென்பதும் “ஊனத்திருள் நீங்கிட வேண்டில்

ஞானப்பொருள் கொண்டடி பேணும்’ (1-38-3)

எனவரும் ஆளுடையபிள்ளையார் வாய்மொழியால் அறியப்படும்.

ஆன்மாக்களை ஆணவ இருளாகிய திரை அநாதியே மறைத்து நிற்றலால் மெய்ஞ்ஞானமாகிய பெரும் பொருளை யுனருந்தகுதி வாய்ந்த அறிவாகிய கண்ணின் ஒளியினை யிழந்து நுகர் தற்குரிய பொருள் எதனையும் அடையப் பெறாது, அதனை நாடிப் பெறுதற்குரிய உபாயத்தினையும் இழந்து ஒன்றும் புரியாத குருடர்களாய் மன்னுயிர்கள் தம்மை அணுத்தன்மைப்படுத்தி மறைத்து நிற்கும் ஆணவவிருளில் அழுந்தித்தடுமாறிய கேவல நிலையில் இருந்தன. பேரருளாள னாகிய இறைவனது திருவடியெனப்பெறும் திருவருட் சத்தியானது உயிர்களது இடர்நிலைக்கு இரங்கி, கொடிய நரகமெனப்படும் அவ்விருளாகிய துன்பக்குழியில் துயருறும் அவ்வுயிர்களைத் தன் அருளாகிய கையினைக் கொண்டு பற்றியெடுத்து ஈறிலாப்பேரின்பவாழ்வாகிய இன்பக்கரையிலே ஏற்றி உய்வித்தருள்கின்றது. இறைவன் மன்னுயிர்கட்குச் செய்யும் அருளுபகாரமாகிய இந்நிகழ்ச்சியை,

"இருள்தரு துன்பப்படல மறைப்பமெய் ஞானமென்னும்

பொருள்தரு கண்ணிழந்துண் பொருள்நாடிப் புகலிழந்த குருடருந் தம்மைப் பரவக்கொடு நரகக்குழிநின் றருள்தருகை கொடுத்தேற்றும் ஐயாறன் அடித்தலமே”

எனவரும் திருவிருத்தத்தில் திருநாவுக்கரசர் விரித்து விளக்கியருள்கின்றார்.

இத்திருவிருத்தத்தின் சொற்பொருளமைதியைக் கூர்ந்து நோக்குங்கால், திருவள்ளுவர் கூறிய 'இருள்சேர் இருவினை என்ற தொடரில் 'இருள் என்றது, மெய்யுனர் வினைப் பெறவொட்டாது உயிர்களின் அறிவுக்கண்னை மறைத்து அணுத்தன்மைப்படுத்தி நிற்கும் ஆணவம் எனப்படும் இருள் மலத்தினையே என்பதும்,தோற்றமில் காலமாக உயிர்களைப் பிணித்துள்ள அவ்விருள்படல மறைப்பினாலேயே உயிர்கள் தாமேயறியுந்தன்மையையிழந்து அல்லற் படுகின்றன என்பதும், பொருள் சேர் புகழ்' என்ற தொடரிற் பொருள்' என்றது, இறைவனது திருவருள் ஞானத்தையே என்பதும் இறைவனது புகழ் அவன் அருள் புரியும் மெய்ஞ்ஞானத்தின் துணை கொண்டே உணர்தற் குரியதாதலின் அதனைத் திருவள்ளுவர் பொருள்சேர் புகழ்' என அடைகொடுத்தோதினார் என்பதும் நன்கு புலனாகும்.

ஆணவம் எனப்படும் அகவிருள் நீங்க நோக்கும் ஞான நாட்டம் உயிர்கட்கு இயல்பாக அமைந்ததன்று என்பதும், அநாதிமறைத்துள்ள அவ்விருளைநீக்கி உயிர்கட்கு மெய்யுணர்வும் பேரின்பமும் அளிக்கவல்ல பேரருளும் முற்றுணர்வும் முடிவிலாற்றலும் ஒருங்குடைய முதல்வன் இறைவன் ஒருவனே என்பதும் சிவநெறிச்செல்வர்கள் துணிபாகும். இந்நுட்பம்,

"இருளறுத்துநின்று, ஈசன் என்பார்க்கெல்லாம்

அருள்கொடுத்திடும் ஆனைக்கா அண்ணலே (5.31.8)

எனவும்,

"இருளாயவுள்ளத்தின் இருளை நீக்கி

இடர்பாவங் கெடுத்து”

எனவும் அப்பர் அருள்மொழிகளால் இனிது புலனாதல் கானலாம்.

மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்பொறி களின் வழியாக நிகழும் ஊறு, சுவை, ஒளி, நாற்றம், ஓசை என்னும் ஐம்புல நுகர்ச்சிகளிலும் விருப்புற்றுத் தம்முனர் வின்றித் தாழும் தன்மை மக்களது மனத்தியல்பாகும். ஐம்பொறிகளையும் அடக்கும் வன்மையின்றி ஐயுணர்வுகளின் வழியே செல்லும் மக்களது மனத்தினைத் திருத்தி அவ்வைந்தினையும் அடக்கியாளவல்ல ஆற்றலை வழங்குதல் இறைவனது அருளியல்பாகும். நல்லொழுக்க நெறி நிற்பார்க்கு இன்றியமையாத புலனடக்கத்தையும் பொய்மையே பெருக்கும் பாசப்பிணிப்பின் நீக்கத்தையும் அளித்தற்பொருட்டு எல்லாம்வல்ல இறைவன் உயிர்க்குயிராய் உள்நின்றுணர்த்திய மெய்ந்நெறியே பொய்த்ர் ஒழுக்க நெறியாகும். உயிர்க்குயிராய் உள்நின்றுணர்த்தும் இறைவனது திருவருட்குறிப்புணர்ந்து அம்முதல்வன் அறிவுறுத்திய மெய்ம்மையான ஒழுக்கநெறியில் நிற்போர் பிறப்பிறப்பின்றி எக்காலத்தும் ஒரு தன்மையராய் நெடிது வாழ்வார் என்பர் பெரியோர். இவ்வுண்மை,

“பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க

நெறிநின்றார் நீடு வாழ்வார்” (திருக். 5)

எனவரும் திருவள்ளுவர் வாய்மொழியால் இனிது புலனாம். ஈண்டு இறைவனைப் பொறிவாயில் ஐந்தவித்தான் என்றது, இறைவன் தனக்கு ஐம்பொறிகளுடைய யாக்கை யமைந்திருந்து அவற்றின் வாயிலாக நிகழும் அவாக்கள் ஐந்தினையும் தன் ஞானத்தால் அடக்கி வென்றான் என்ற கருத்திற் கூறப்பட்டதன்று. இறைவன் ஏனைய உயிர்களைப் போன்று மாயையின் சம்பந்தமுடைய உடம்பினையுடைய பாசத்துள் அகப்பட்டவன் அல்லன் என்பது அவன் துய மெய்யுணர்வினையே தன் மேனியாகக் கொண்டவன் என்பதும் வாலறிவன்’ என்ற தொடரால் உணர்த்தப் பட்டன. ஐம்புல அவாக்களால் உந்தப்பட்டு எத்தகைய பொருள்களையும் விரும்புதலும் வெறுத்தலும் இறைவனுக்கு இல்லை என்பது வேண்டுதல் வேண்டாமையிலான்’ என்ற தொடரால் முன்னரே வலியுறுத்தப்பட்டது. அருளே திருமேனியாகவுடைய இறைவனுக்கு ஐம்பொறிகள் இல்லை. எனவே ஐம்பொறிவாயிலாக நிகழும் ஐயுணர்வு இறைவனுக்கு இல்லாமையும் அவை இல்லையாகவே அவற்றையடக்குதல் வேண்டாமையும் நன்கு விளங்கும். விருப்பு வெறுப்புடைய உயிர்கள் ஐயுணர்வுகளால் மயங்கி அவற்றை யடக்க மாட்டாது அல்லற்படுத் துன்பநிலையிலே அருளாளனாகிய இறைவன் பொறிவாயில் ஐந்தினையும் அடக்கியாளும் மெய்ம்மையான ஒழுக்கநெறியினை அகத்தே அவர்தம் உள்ளத்திலிருந்து உணர்த்தியும் புறத்தே குருவாக எழுந்தருளி வந்து அறிவுறுத்தியும் நலஞ்செய்கிறான் என்பதும், இயல்பாகவே பாசங்களின் நீங்கிய இறைவ்னாலன்றி ஏனைப் புலனுணர்விலகப்பட்ட மாந்தர்களால் எடுத்துரைக்கப்படும் அவர்கள் சூழ்நிலைக்கேற்பக் குறுகிய வரம்புட்பட் டமைவனவன்றி.உலகவுயிர்கள் எல்லாவற்றுக்கும் மனநிறைவு தரும் மெய்ம்மை வாய்ந்த ஒழுக்கநெறியாக அமைதல் இயலாதென்பதும் இத்திருக்குறளால் அறிவுறுத்தப்படும் அரிய வுண்மைகளாகும். ஆகவே "பொறிவாயில் ஐந்தவித்தான்’ என்னும் திருக்குறள் தொடர், 'தன்பாலுள்ள ஐம்பொறிகளையும் அடக்கினான்’ என்ற பொருளில் வழங்கப்பெறவில்லையென்பதும் "தன்னை அன்பினால் வழிபடும் அன்பர்கட்கு அன்னோர் தம் ஐம்புலன்களையும் அடக்கி வெல்லும் நல்வழியினை அறிவுறுத்தினான்’ என்ற பொருளிலேயே தெய்வப்புலவரால் ஆளப்பெற்றதென்பதும்,

经线

வறிதே நிலையாத இம்மண்ணுலகில் நானாக வகுத்தனை நான்நிலையேன் பொறிவாயில் இவ்வைந்தினையும் அவியப் பொருது உன்னடியேபுகும் சூழல் சொல்லே" (7.3.3)

எனவரும் நம்பியாரூரர் வாய்மொழியால் நன்கு தெளியப்படும். 'பொய்தீர் ஒழுக்க நெறி நின்றார் என்ற தொடரைப் பொய்யிலா மெய்ந்நெறிக்கே தக்கிருந்தார்’ (2.42.1) என ஆளுடைய பிள்ளையார் விரித்துப்பொருள் அருளிச்செய்துள்ளமையும் இங்கு நினைக்கத்தகுவதாகும்

தன்னின் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத தனி முதல்வனாகத் திகழும் இறைவனுடைய திருவடிகளை நினைந்து வழிபடும் இயல்புடையவர்களே, தம்மனத்தின்கண் நிகழுந் துன்பங்களாய கவலைகளை மாற்றவல்லவர் எனவும், இறைவன் திருவடியினை நினையாதார் காமவெகுளி மயக்கங்களாகிய மனமாசுகளை நீக்கமாட்டமையால் அவற்றால் வரும் துன்பங்களுள் அழுந்திக் கவலையுறுவர் எனவும் அறிவுறுத்துவது,

“தனக்குவமை யில்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்

மனக்கவலை மாற்ற லரிது.” (திருக். 7)

என வரும் திருக்குறளாகும். எவ்வகையாலும் தனக்கு ஒப்பாரும் மிக்காருமின்றி உயர்வறவுயர்ந்தோன் இறைவன் ஒருவனேயாதலின் அம்முதல்வனைத் தனக்குவமை யில்லாதான் எனக் குறித்தார் திருவள்ளுவர். 'தனக்குவமை யில்லாதான் என்னும் இத்தொடர்ப் பொருளை விளக்கும் முறையில் அமைந்தது,

“பெருமைக்கும் நுண்மைக்கும் பேரருட்கும்பேற்றின்

அருமைக்கும் ஒப்பின்மை யான்” (திருவருட் 3)

எனவரும் திருவருட்பயனாகும். மிகப்பெரிய அண்டங்கள் அனைத்தும் தனது பரந்த விரிவுக்குள் அடங்கத்தான் அவை யெல்லாவற்றையும் கடந்து மேலாக விளங்கும் பெருமையி னாலும் மிகமிகச் சிறிய அணுக்கள்தோறும் ஊடுருவி யாண்டும் நீக்கமறக் கலந்து நிற்கும் நுண்மையினாலும், உயிர் தோறும் உயிர்க்குயிராய் நின்று பொருள்களைக் காட்டியும் கண்டும் அருள் சுரக்கும் பெருங்கருனைத் திறத்தாலும் உயிர்களின் முயற்சியாற் சென்றடையமுடியாத திருவாகிய வீடுபேற்றின்பத்தை மன்னுயிர்களின் அறிவெல்லைக்கு அப்பாற்பட்டு நின்று வழங்கும் அருமைத் திறத்தினாலும் தன்னையொப்பார் ஒருவருமில்லாத தம்முதல்வன் இறைவன் என்பது இதன் பொருளாகும். தனக்கு உவமையில்லா தான் (ஒருவாற்றானுந் தனக்கு ஒப்பில்லாதவன்) இறைவன் எனவே அம் முதல்வன் முற்றுணர்வும் அளவிலாற்றலும் பேரருளும் சுதந்திரமும் முதலிய உயர்வறவுயர்ந்த குணங்களையுடையன் என்பதும் பெறப்படும். இவ்வாறு இறைமைக்குணங்களாகிய இலக்கணத்தால் ஒருவாற்றானும் வேற்றுமையில்லாத நிலையில் அவ்வியல்புடைய பரம்பொருள் பலவாக இருத்தல் இயலாது, ஒன்றேயாய் இருப்பது என அறிவுறுத்துவார் அதனை 'ஒன்றலா ஒன்று (சிவஞான போதம் சூ.2 அதிகரணம் 3) என்றார் மெய்கண்டார். ஒன்றலா ஒன்று - ஒப்பற்ற பரம்பொருள்.

தனக்குவமையில்லாத இறைவன் திருவருள் வழி நின்று தற்போதம் நீங்கிய அடியார்கள் கதிரவன் எங்கே தோன்றினாலும் எமக்கு ஆவதென்ன என்று எத்தகைய

மனக்கவலையுமின்றி இனிதிருப்பார்கள் என்பது,

‘எங்கெழிலென் ஞாயிறு எளியோ மல்லோம்.__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
திருவள்ளுவர் கூறும் வாழ்க்கை நெறிமுறைகளும் தத்துவவுண்மைகளும்
Permalink  
 


ஒருவனாகவும் இறைவனருள் பெற்ற அறவோர்களாகிய நீத்தாரை அந்தனர் என்போர் அறவோர் (திருக்.) எனப் பலராகவும் குறித்துள்ளமை இறைவன் ஒருவன் உயிர்கள் பல என்னும் தமிழ் முன்னோரது தத்துவக்கொள்கையினைப் புலப்படுத்துதல் காணலாம்.

எண்குணங்களையுடையவன் இறைவன் எனவும் எண்குணத்தானாகிய அம்முதல்வனுடைய திருவடிகளை வனங்காத தலைகள் தமக்குரிய புலன்களையுனரும் ஆற்றலில்லாத பொறிகளைப் போலப் பயன்படாதனவே எனவும் அறிவுறுத்துவது,

“கோளில் பொறியிற் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத்தலை” (திருக் கட. வா. 9)

எனவரும் திருக்குறளாகும்.

“எண்குணங்களாவன தன்வயத்தனாதல், தூய வுடம்பினனாதல் இயற்கையுணர்வினனாதல், முற்றுணர்தல், இயல்பாகவே பாசங்களின் நீங்குதல், பேரருளுடைமை, முடிவிலாற்றலுடைமை, வரம்பிலின்பமுடைமை என இவை. இவ்வாறு சைவாகமத்துக் கூறப்பட்டது. அணிமாவை முதலாகவுடையன எனவும் கடையிலா அறிவை முதலாக வுடையன எனவும் உரைப்பாருமுளர்” எனப் பரிமேலழகர் தரும் விளக்கம், சிவாகமத்துக் கூறப்படும் எண்குணங்களே இறைவனுக்குச் சிறப்புரிமையுடைய குணங்களாம் என்பதனை நன்கு புலப்படுத்துவதாகும். அன்றியும் அனிமா முதலியன எட்டும் யோகிகளால் முயன்று பெறுதற்குரிய எண்வகைச் சித்திகள் எனப்படுவனவல்லாது கடவுளுக்கே யுரிய சிறப்புடைக் குணங்களாகாமையும் ஆருகதர் கூறும் கடையிலா அறிவு (அநந்த ஞானம்) முதலிய எட்டினுள் அநந்தஞானம்,அநந்த வீரியம், அநந்ததரிசனம், அநந்தசுகம் என்னும் நான்குமே குனங்களாகக் கொள்ளத்தக்கன. நாமமின்மை, கோத்திரமின்மை ஆயுளின்மை அழியாவியல்பு என்னும் நான்கும் உயிர்க் குணங்களின் மறுதலை யெனப்படுவனவன்றி ஒரு பொருளின் பண்பெனப் படாமையானும் சிவபெருமானுக்குரிய சிறப்புடைப் பண்புகளாகச் சிவநெறிச் செல்வர் கூறும் எண்குனங் களையே இறைவனுக்குச் சிறப்புரிமையுடைய எண்குணங்க ளாக முதற்கண் எடுத்துரைத்தார் பரிமேலழகர். இனி திருவள்ளுவர் கூறும் கடவுள் வாழ்த்து எல்லாச் சமயத்தார்க்கும் பொதுவாக அமைந்ததாதலின் இதன்கண் கடவுளுக்குரிய பெயர்களாக ஆளப்பெற்ற ஆதிபகவன், வாலறிவன், மலர்மிசை யேகினான், வேண்டுதல் வேண்டாமையிலான், இறைவன், பொறிவாயில் ஐந்தவித்தான், தனக்குவமையில்லாதான், அறவாழியந்தனன், எண்குனத்தான் என்னும் ஒன்பது திருப்பெயர்களுள் முதற்கண் உள்ள எட்டுப்பெயர்களால் அறிவுறுத்தப்பட்ட எட்டுக் குனங்களையே ஒன்பதாவது குறளில் எண்குணத்தான் என்ற பெயரால் திருவள்ளுவர் தொகுத்துக் கூறினார் எனக் கொள்ளுதல் ஏற்புடையதாகும்.

எண்குனத்தானாகிய இறைவனை வழிபட்டுப் பாசப்பினிப்பறுத்து வீடுபெறுதற்கென்றே அமைந்தது இம்மக்கட்பிறவியாகும். மனிதப்பிறவியின் நோக்கத்தினை யுனர்ந்து இறைவன் திருவடிகளைத் தலையால் வணங்கிப் போற்றாதாரது வாழ்வு பயனுடையதன்று எனத் திருவள்ளுவர் எதிர்மறைவாய் பாட்டாற்கூறிய இக் கருத்தினை உடன்பாட்டு முகத்தால் அறிவுறுத்துவதாக அமைந்தது திருநாவுக்கரசர் அருளிய தலையே நீவனங்காய்' என்னும் திருஅங்கமாலைத் திருப்பதிகமாகும்.

காரணகாரியத் தொடர்ச்சியாய்க் கரையின்றி வருவது பிறவிப்பிணிப்பாதலின் அது பிறவிப்பெருங்கடல் என உருவகித்துக் கூறப்படும். இறைவன் அடியாகிய புணையைப் பற்றினோர் பிறவியாகிய பெருங்கடலை எளிதின் நீந்திக் கடப்பர். இறைவன் திருவடியாகிய புனையின் துணை பெறாதார் அப்பெருங்கடலை நீந்தமாட்டாது அதனுள் வீழ்ந்து அழுந்துவர் என்பார்,

“பிறவிப்பெருங்கடல் நீந்துவர் நீந்தார்

இறைவனடிசேரா தார்” (திருக். கட வா. 10)

என்றார் திருவள்ளுவர். உலகியல்பை நினையாது இறைவனடியையே நினைப்பார்க்குப் பிறிவியாதலும், இறைவனடியை நினையாது உலகியல்பையே நினைவார்க்குப் பிறவி ஆறாமையும் இக்குறளால் நியமிக்கப்பட்டன.

காணப்படும் இவ்வுலகம் ஆதிபகவனை முதலாக வுடையது எனவே உலகியற்கு முதல்வன் இறைவன் ஒருவனே என்பது பெறப்படும். அம்முதல்வன் தூய மெய்யுணர்வே தன் திருமேனியாகவுடையவன் எனவே அவன் இயல்பாகவே பா சங்களின் நீங்கிய இயற்கை யுணர்வினன் என்பதும் பெறப்படும். உயிர்களின் நெஞ்சத் தாமரையில் எழுந்தருளியவன் இறைவன் எனவே அம்முதல்வன் உயிர்களோடு பிரிவின்றிக் கலந்துள்ளான் என்பதும் கூறினாராயிற்று. வேண்டுதல் வேண்டாமை யிலான் இறைவன் எனவே குறைவிலா நிறைவாகிய அவனுக்குப் பகையும் நட்பும் இல்லையென்பது பெறப்படும். உலகு உயிர்கள் ஆகிய எல்லாப்பொருள்களிலும் நீக்கமறத் தங்கியிருத்தல் கடவுளிலக்கனமாதலின் இறைவன் என்பது கடவுளுக்குரிய காரணப்பெயராயிற்று. இறுத்தல் என்னும் வினையடியாகப் பிறந்த பெயர் இறை என்பதாகும். இறை - பொருள்கள்தோறும் நீக்கமறத் தங்கியிருப்பது. இறைவ னுடைய பொருள் சேர் புகழ்த் திறங்களை இடை விடாது புகழ்ந்து போற்றுவார்க்கு இருள்சேர் இருவினையும் சேரா எனவே இருவினைத் தொடக்குடையவை உயிர்கள் என்பதும் அவ்விருவினைத் தொடக்கினின்றும் இயல்பாகவே நீங்கி விளங்கிய முற்றறிவினன் இறைவன் என்பதும் உய்த்துணர வைத்தாராயிற்று. பொறிவாயில் ஐந்தவித்தான் எனவே ஐம்புலன்களையும் அடக்கவல்ல அறிவாற்றலை உயிர்கட்கு வழங்கவல்லவன் உயிர்க்குயிராகிய இறைவனே என்பதும் அவனருள் வலியின் துணைகொண்டு ஐம்புல வுணர்வின் நீங்கி மெய்ப்பொருளை யுணர்ந்து உய்தி பெறுதற்குரிய நெறியே பொய்தீர் ஒழுக்க நெறியெனப் போற்றப்படும் என்பதும், அந்நெறியில் நிலைநின்றொழுகு வார் எக்காலத்தும் அழிவின்றி வாழ்தலாகிய பேரின்ப நிலையைப் பெறுவர் என்பதும் அறிவுறுத்தியவாறாகும். ஒப்பாரும் மிக்காரும் இன்றி எல்லாவுயிர்கட்கும் ஒப்பற்ற தலைவனாகத் திகழ்தலே இறையியல்பாதலின் கடவுளாகிய முழுமுதற்பொருள் ஒன்றேயென வலியுறுத்துவது 'தனக்குவமையில்லாதான் என்ற தொடராகும். ஒருவன் என்னும் ஒருவனாகிய முதல்வனே பல்வகைப் பிறவியுட்பட்டு அல்லலுறும் மன்னுயிர்களின் மனக்கவலைகளை மாற்றி வாழ்வளிக்க வல்லவன் என்பது இக்குறளால் அறிவுறுத்தப் படும் தத்துவவுண்மையாகும். அறத்தின் கடலாகவும் அருள் வடிவினனாகவும் திகழ்வோன் இறைவன் என்பது 'அறவாழியந்தனன் என்ற பெயராற் புலனாகும். மன்னுயிர் களின் பொருட்டு உலகினைப் படைத்து வாழ்வளிக்கும் வினைமுதலாகவுள்ள முழுமுதற்பொருள் ஒரு குணமும் இல்லாத் வெறும் அறிவாக மட்டும்இருத்தல் இயலாது. அன்புடைய உயிர்களால் எண்ணிப் போற்றுதற்குரிய எல்லா நற்பண்புகளும் ஒருங்கே அமைந்த நல்ல குனிப்பொருளே என்று அறிவுறுத்துவார், இறைவனை எண்குணத்தான் என்ற பெயராற் குறித்தார் திருவள்ளுவர். இவ்வாறு திருக்குறள் முதலதிகாரத்தில் இறைவனைக் குறித்து வழங்கப்பெற்ற பெயர்கள்ாகிய தொடர்கள் யாவும் இறைவனது பொது வியல்பும் உண்மையியல்பும் ஆகிய இலக்கணங்களைச் சுருக்கமும் தெளிவும் பொருந்த விரித்துரைக்கும் நிலையில் அமைந்துள்ளமையும் இங்குத் திருவள்ளுவர் விரித்துக் கூறிய கடவுள் இலக்கணமே சைவ சித்தாந்த மெய்ந்நூல்கள் கூறும் பதியிலக்கணமாக அமைந்துள்ளமையும் திருக்குறளின் முதற்கண் அமைந்த கடவுள் வாழ்த்து என்னும் இவ்வதி காரத்தையும் உமாபதி சிவாசாரியார் இயற்றிய திருவருட்பயனின் முதற்கண் அமைந்த பதிமுதுநிலை என்னும் அதிகாரத்தினையும் ஒப்புநோக்குவார்க்கு நன்குபுலனாகும்.

தாம் கூறக்கருதிய அறங்களுக்கெல்லாம் நிலைக் களமாகத் திகழும் முழுமுதற் கடவுளை முதற்கண் வாழ்த்தி வனங்குதல் இன்றியமையாதென அறிவுறுத்திய திருவள்ளுவர் நம்மனோர் கண்கட்குப் புலனாகாது அருவாய்த் தத்துவங் கடந்து நிற்கும் தனி முதற்பொருளாகிய இறைவனது அருளின் நீர்மையாக வெளிப்பட்டுக் கைம்மாறு கருதாது உலகிற்குப் பயன்படி மழையினைப் பொழியும் வானத்தில் சிறப்பினையுணர்த்தும் பகுதி திருக்குறளில் உள்ள  'வான்சிறப்பு’ என்னும் இரண்டாம் அதிகாரமாகும். உலகத்துப் பயிர்கள் வளரப்பொழியும் மழையானது பல்லுயிர்க்கும் அருள் சுரக்கும் இறைவனது திருவருள்

வண்ணமாகத் திகழும் சிறப்புடையதாகும். இவ் வுண்மையினை மன்னானவன் உலகிற்கொரு மழை யானவன்’ (1.15.6) எனவும், சொரிவிப்பார் மழை (5.15.3)

எனவும், 'காக்கின்ற மழையாய்ப் பொழிவானை’ (7.59.3) எனவும், முன்னியவள் நமக்கு முன் சுரக்கும் இன்னருளே என்னப்பொழியாய் மழையே லோரெம்பாவாய்' (திருவெம் பாவை 16) எனவும் வரும் திருமுறைத்தொடர்கள் நன்கு விரித்துரைத்தல் காணலாம். கடவுளது அருளின் நீர்மையதாய்ப் பயிர்முதலிய பல்லுயிர்களையும் உடம்பொடு கூடி வாழ்தற்கு நிலைக்களமாகத் திகழும் ஐம்பெரும் பூதமுதலிய தத்துவங்களின் திரட்சியாகிய உலகின் உண்மையினையும் உடன் உணர்த்துவதாக அமைந் துள்ளமை இங்கு மனங்கொள்ளத் தகுவதாகும்.

இறைவனது திருவருள் நீர்மையையுணர்ந்து அவனது திருவருளின் துண்ைகொண்டு ஐம்புலன்களையும் வென்று விருப்புவெறுப்பின்றி வாழும் அறவோர் ‘நீத்தார்’ எனப் போற்றப்பெறுவர். யான் எனது என்னும் இருவகைப் பற்றினையும் நீத்த பெரியோர்களாகிய அவர்தம் பெருமையினை விரித்துரைப்பது திருக்குறளில் உள்ள 'நீத்தார் பெருமை’ என்னும் மூன்றாம் அதிகாரமாகும். பொறிவாயில் ஐந்தவித்தா னாகிய இறைவன் அருளிய மெம்மையான ஒழுக்கநெறியில் வழுவாதொழுகி யான் எனது என்னும் இருவகைப் பற்றுக்களையும் அறுத்தவர்க ளாகிய நீத்தாரது பெருமையினையே விழுமிய பொருள்கள் பலவற்றுள்ளும் விழுமியது என எல்லாச் சமயநூல்களும் பாராட்டும் என்பார்,

“ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து

வேண்டும் பனுவற்றுணிவு” (திருக். நீத்தார். 1)

என்றார் திருவள்ளுவர். இங்கு ஒழுக்கம் என்றது, பொறி வாயில் ஐந்தவித்தான் அருளிய ஒழுக்கநெறியினை. அந்நெறியில் நின்று துறத்தலாவது, மெய்ம்மையான ஒழுக்க நெறியில் வழுவாதொழுக அறம் வளரும். அறம் வளரத் தீவினை தேயும். தீவினை தேய அறியாமை நீங்கும். அறியாமை நீங்கவே நிலையுடையன நிலையற்றனவாகிய பொருள்களது வேறுபாட்டுணர்வும் அழியுந்தன்மையன வாகிய இம்மை மறுமையின்பங்களில் உவர்ப்பும் பிறவித் துன்பங்களும் தோன்றும். அவை தோன்றவே வீடு பெறுதலில் விருப்பம் உண்டாகும். அஃதுண்டாகப் பிறவிக்குக் காரணமாகிய பயனில்லாத முயற்சிகளெல்லாம் நீங்கி வீடுபேற்றிற்குக் காரணமாகிய யோகமுயற்சி யுண்டாகும். அஃதுண்டாகவே மெய்யுணர்வு பிறந்து புறப்பற்றாகிய எனதென்ப தும் அகப்பற்றாகிய யான் என்பதும் விட்டு நீங்கும். ஆதலால் இவ்விருவகைப் பற்றுக்களையும் இம்முறையே உவர்த்து நீத்து விடுதலே முற்றத்துறத்தலாகும் என விளக்குவர் பரிமேலழகர்.

"துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்

திறந்தாரை யெண்ணிக்கொண் டற்று” (திருக். 22)

எனவரும் திருக்குறள், இருவகைப் பற்றுக்களையும் நீத்தாரது பெருமையினை அளவிட்டுரைத்தல் இயலாது என்பதனை அறிவுறுத்துவதாகும். "இருவகைப் பற்றினையும் விட்டாரது பெருமையினை என்னாற் கூறி அறிவிக்கத் தொடங்கின் அளவுபடாமையால் இவ்வுலகத்துப் பிறந்திறந்தார் இத்துணையர் எனக் கூறியளவிட்டுரைத்தாற் போலும் (முடியாத செயலாம்)” என்பது இதன்பொருளாகும். இதன் கண் துறந்தார்’ என்றது, யான் எனது என்னும் இருவகைப் பற்றுக்களையும் விட்டொழிந்து வீடுபேற்றின்பத் தின்ை நுகர்தற்குரிய சான்றோர்களை. பெருமை - மிகுதி. இறந்தார் என்றது, இப்பிறப்பிற் பற்று நீங்காது மீளவும் இவ்வுலகிற் பிறந்து வீடுபெறும் நோக்கத்துடன் இருவகைப் பற்றும் நீங்கத் துறவறத்தினை மேற்கொள்ள வேண்டிய பாசப்பிணிப்புடைய உயிர்களை. துறந்தார் பெருமைகூறும் முகத்தால் உயிர்கள் எண்ணிலவா தலையுணர்த்துவது இத்திருக்குறளாகும். இதனடியொற்றி உயிர்களது உண்மையினையும் அவை எண்ணிலவாதலையும் கூறுவது,  'பிறந்தநாள் மேலும் பிறக்குநாள் போலும்

துறந்தோர் துறப்போர் தொகை” (திருவருட் 11)

எனவரும் திருவருட்பயனாகும். இக்குறளின் ஈற்றிலுள்ள தொகை என்பதனைப் பிறந்த நாள் பிறக்கும் நாள், துறந்தோர், துறப்போர் தொகை மேலும் பிறக்கும் நாள் தொகை போலும் எனவும், நிரனிறைப்பொருள் கொள்க. பிறந்தநாள் - உலகம் தோன்றியது முதல் இதுவரை உயிர்கள் பல்வகைப் பிறவிகளுட்பட்டுத் தோன்றிய நாள்கள். மேலும் பிறக்கும் நாள் இனிமேலும் உயிர்கள் பிறவியுட்பட்டுப் பிறத்தற்கு உளவாகும் நாள் துறந்தோர் - பிறவிப் பிணிப்பினின்றும் விடுபட்டு இருவகைப்பற்றினையும் நீத்து இறைவனடியைத் தலைப்பட்டு இன்புறும் உயிர்கள், துறப்போர் இனிமேலும் இறைவனருளால் பிறவிப் பிணிப்பிலிருந்தும் விடுபட்டு உய்திபெறுதற்கு உரியராக இப்பொழுது பாசப்பிணிப்புடன் கூடிப்பிறந்து துறவினை மேற்கொள்ளும் நிலையினரான உயிர்கள், “ஆன்மாக்கள் முன்பு பிறந்த நாளுக்கும் இனிமேல் பிறக்கப்போகிற நாளுக்கும் தொகை கூறமுடியாதவாறு போல இதுவரை தேகப் பிரபஞ்சத்தைத் துறந்து வீடுபெற்ற உயிர்களுக்கும் இனிமேல் துறந்து வீடடையப்போகிற உயிர்களுக்கும் தொகை அளவிட்டுக் கூறமுடியாது” என்பது இதன் பொருளாகும். படைப்புக்காலந்தொட்டுப் பலவகைப் பிறப்புக்களிற் பிறந்து வடுப்பெற்ற உயிர்களையும் இனிமேலும் பிறந்து இருவகைப் பற்றுக்களையுந் துறந்து வீடு பெறுதற்கு உரியனவாய்ப் பாசப்பிணிப்புடன் கூடியுள்ள ஏனைய உயிர்களையும் இத்துணையர் என அறிந்து கணக்கிட்டுக் கூறவதென்பது, உலகந்தோன்றியது முதல் இதுவரை எத்தனை நாட்கள் கழிந்தன, இனிமேல் வரக்கூடிய நாட்கள் எத்தனை என எண்ணித் தொகை கூறவொண்ணாதது போல இயலாத செயலாம் என்றவாறு. எனவே இதுவரை பாசப்பிணிப்பொழிந்து வீடுபெற்ற உயிர்களும் வீடுபெறாத நிலையிற் பாசப்பிணிப்புடன் கூடியுள்ள உயிர்களும் அளவற்றனவாம் என அவற்றின் மிகுதி கூறினாராயிற்று. துறந்தார், வையத்து இறந்தார் எனத் திருவள்ளுவர் பகுத்துக்கூறிய இருவகைவுயிர்களையும் துறந்தோர் துறப்போர் என முறையே உமாபதி சிவாசாரியார் குறித்துள்ளார். இதனால் உயிர்கள் எண்ணற்றன எனச் சைவசித்தாந்தம் கூறும் கொள்கை திருக்குறளில் முன்னமே இடம் பெற்றுள்ளமை காணலாம்.

ஐம்பொறிகளாகிய கருவிகளின் துணையின்றி உலகப்பெருள்கள் எதனையும் உணர முடியாத நிலையில் அறிவினாற் குறைபாடுடைமை உயிர்களது இயல்பாகும். உயிர்களின் அறிவு வளர்ச்சிக்குச் செவி முதலிய பொறிகள் இன்றியமையாதன என்பதும் அவற்றின் துணையின்றி எதனையும் உணரமுடியாத அறிவுக்குறைபாடுடையன ஆன்மாக்கள் என்பதும் கோளில் பொறியிற்குணமிலவே' எனவரும் திருக்குறள் தொடராற் குறிப்பால் உணர்த்தப் பெற்றன. இக்குறிப்பினை விரித்துரைக்கும் முறையில் அமைந்தது,

“பொறியின்றி யொன்றும் புணராத புந்திக்

கறிவென்ற பேர்நன்றற” (திருவருட் 15)

எனவரும் திருவருட்பயனாகும். "செவி முதலிய கருவிகளின் துணையில்லாமல் யாதொரு பொருளையும் உணரமாட்டாத உயிர்களுக்கு நூல்வல்லோர் அறிவுடையன (சித்து) என்று இட்டு வழங்கும் பெயர் மிகவும் அழகிது என்பது இதன் பொருளாகும். 'அறிவு என்ற பேர் அறநன்று என்ற தொடர் இங்கு இகழ்ச்சிக் குறிப்பாய் நின்று உயிர்கள் அறிவினாற் குறைபாடுடையன என்பதனைப் புலப்படுத்தி நிற்றல் காண்க. இறைவன் தூய அறிவேயுருவாகத் திகழ்வோன் என்னும் உண்மையினை வாலறிவன்’ என்ற பெயராற் புலப்படுத்திய திருவள்ளுவர் அம்முதல்வனியல்புக்கு வேறான உயிர்த் தொகுதிகள் அறிவும் அறியாமையும் விரவப்பெற்றன என்னும் உண்மையினை,

"அறிதோ றறியாமை கண்டற்றால்காமஞ்

செறிதோறுஞ்சேயிழை மாட்டு” (திருக். 1110)

எனவரும் திருக்குறளில் உவமை வாயிலாகப் புலப்படுத்து கின்றார். அன்புடைய காதலியைப் பெற்றோர் அறியாதவாறு உடன்போக்கில் அழைத்துக்கொண்டு செல்லும் தலைவன், தலைவியொடு கூடிச் செல்லுதலால் தனக்கு மேன்மேலும் உளவாம் இன்பமிகுதியினைத் தனக்குள்ளே சொல்லிக் கொள்வதாக அமைந்தது மேற்குறித்த திருக்குறட் பாடலாகும். 'நூல்களாலும் நுண்ணுணர்வாலும் பொருள் களை ஆராய்ந்து அறியுந்தோறும் அதுவரை அவ்வுண்மை யினை யறிந்து கொள்ளாத தனது அறியாமை புலப்படுமாறு போல், செவ்விய அணிகலன்களையுடையளாய இவளை இடை விடாது செறியுந்தோறும் இவள்மாட்டு முன்னர் அறியப் படாத காதலின்பம் காணப்படாநின்றது” என்பது இதன் பொருளாகும். "அறிவிற்கு எல்லையின்மையால் மேன்மேல் அறிய அறிய முன்னைய அறிவு அறியாமையாய் முடியுமாறு போலச் செறிவுக்கு எல்லையின்றி மேன்மேற் செறியச் செறிய முன்னைச் செறிவு கெறியாமையினாய் முடியா நின்றது எனத் தலைவன்) தன் ஆற்றாமை கூறியவாறு" என இக்குறட் பாவுக்கு விளக்கம் தருவர் பரிமேலழகர். இவ்விளக்கம் மாந்தர் பொருள்களை அறியுந் தோறும் பெறும் அறிவு தாம் அதற்குமுன் அப்பொருள் களைப் பற்றி அறிந்திருந்த அறிவினைக் குறைபாடுடையதாகக் காட்டுதலால் உயிர்களது அறிவு குறைபாடுடையது என்னும் உண்மையினை நன்கு புலப்படுத்தல் காணலாம்.

பாசப்பிணிப்புடைய ஆன்மாக்கள் முற்றுனர்

வுடைய இறைவனைப் போன்று எல்லாம் அறிந்தனவு மாகாமல் உலகத்தொகுதியாகிய உணர்வில்லாத கடப் பொருள்கள் போன்று ஒன்றும் அறியாதனவும் ஆகாமல் உணர்வுடைய பொருளைச் சார்ந்த நிலையில் உணர்வு விளக்கம் பெறுவனவும் உணர்வில்லாத பொருள்களைச் சார்ந்த நிலையில் உணர்வு விளக்கம் பெறாதனவாகவும் ஆக அவ்விருதிறப்பொருள்களிலும் தோய்ந்து சார்ந்ததன் வண்ணமாய் நின்றுனருந்தன்மையனவாகும் என்பது சைவ சித்தாந்த மெய்ந்நூல்கள் கூறும் ஆன்ம விலக்கணமாகும். ஆன்மாவின் உண்மையியல்பாகிய சிறப்பிலக்கணம் குறித்த இம்முடிவிற்கு ஆதாரமாக அமைந்தது.

"நிலத்தியல்பால் நீர்திரிந்தற்றாகும் மாந்தர்க்

கிணத்தியல்பதாகும் அறிவு (திருக், 452)

 __________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
RE: திருவள்ளுவர் கூறும் வாழ்க்கை நெறிமுறைகளும் தத்துவவுண்மைகளும்
Permalink  
 


ன வரும் திருக்குறளாகும். "நீரானது தான் சார்ந்த நிலத்தினது இயல்பினாலே தன் தன்மை திரிந்து அந்நிலத்தின் தன்மையினைப் பெறுவதாகும். அதுபோல மாந்தர து அறிவும் தான் சேர்ந்த இனத்தினது இயல்பினாலே தன் தன்மை திரிந்து அவ்வினத்தின் தன்மையினைப்பெறும்” என்பது இதன் பொருள். இதன்கண் மாந்தர்க்கு அறிவு இனத்து இயல்பது ஆகும் எனக்குறித்த பொதுவகை முடியிலிருந்து உய்த்துணர்ந்து கொள்ளப்பெற்றது உயிர்கள் யாவும் சார்ந்ததன் வண்ணமாந்தன்மையன என்னும் இச்சிறப்பு வகை முடிபாகும். ஆகவே உயிர்கள் முற்றுனர் வுடைய இறைவனைப் போன்று தாமே எல்லாம்அறிந்தனவும் ஆகாமல், உலகத்திலுள்ள அறிவில்லாத பொருள்களைப் போன்று ஒன்றும் அறியவியலாதனவுமாகாமல், அறிவுடைய பரம்பொருளைச் சார்ந்த வழி அறிவுடையனவர்கவும், அறிவில்லாத சடப்பொருள்களைச் சார்ந்த வழி அறிவில்லாதனவாகவும் அதுவது வாய்ச் சார்ந்ததன் வண்ணமாந் தன்மையெனச் சைவசித்தாந்தம் கூறும் ஆன்ம விலக்கணம் பற்றிய முடிவுக்கு மேற்காட்டிய திருக்குறள் ஆதாரமாயமைந்து அரண்செய்தல் இங்கு மனங்கொளத் தகுவதாகும்.

காணப்படும் உலகம் உள்ளபொருளாய்ப் பல்வேறு நுண்பொருள்களால் தத்துவங்களால் இயன்றது என்பது சாங்கியம் முதலிய தத்துவ நூலார் கண்டுணர்த்திய உண்மை முடிபாகும். உலகம் உள்பொருள் என்னும் இம்முடிவு தொல்காப்பியம் முதலிய தமிழ்த்தொன்னூல்களிலேயே இடம் பெற்ற தொன்மையுடையதாகும். உலகம் உள் பொருள் என்பது முப்பொருளுண்மை கூறும் சைவ சித்தாந்தக் கொள்கைக்கு ஏற்புடையதேயாகும். உலகினைப் பருப்பொருள்களாகப் பகுத்து ஆராயுமிடத்து நிலம், நீர், தீ, வளி, விசும்பு எனப்படும் ஐவகைப் பொருளின் திரட்சியே இவ்வுலகம் என்னும் உண்மை எளிதிற் புலனாகும். பருப்பொருள்களாகத் தோன்றும் நிலமுதலிய ஐம்பெரும்

பூதங்களுக்கும் முதற்காரணமாய் நுண்ணிய நிலையில்

உள்ளவை முறையே நாற்றம், சுவை, ஒளி, ஊறு, ஓசை என்னும் ஐந்துமாகும். ஐம்பெரும் பூதங்களுக்கு முதலாகவுள்ள இவற்றைத் தன் மாத்திரை என வழங்குவர் தத்துவ நூலார். நுண் பூதங்களாகிய இவ்வைந்தினையும் கூர்ந்து ஆராயவல்ல மெய்யறிவினர்க்கு இவற்றிற்குக் காரணமாய் இவற்றினும் நுண்ணியவாகிய தத்துவங்கள் பலவுள்ளன என்பது இனிது புலனாகும். உலகின் நுண் கூறுகளாகிய தத்துவ வகையினைப் பகுத்துனரவல்ல துண்ணுணர்வு என்பது இனிது புலனாகும். உலகின் நுண்கூறுகளாகிய தத்துவ வகையினைப் பகுத்துனரவல்லது நுண்ணுனர் வுடையோர் பொறிவாயில் ஐந்தவித்தானாகிய இறைவன் அறிவுறுத்திய ஒழுக்க நெறியில் வழுவா தொழுகுபவராய் ஐம்புலவுணர்வுகளையும் புறத்தே செல்லவொட்டது தம் அறிவின் திறத்தால் அடக்கி யாளவல்ல செம்புலச்செல்வர் களாய் யான் எனது என்னும் இருவகைப் பற்றுக்களையும் அறவே நீக்கிய அருளாளர்களே என்பதனை அறிவுறுத்துவது,

“சுவை யொளியூறோசைநாற்றமென்றைந்தின்

வகைதெரிவான் கட்டே யுலகு”

எனவரும் திருக்குறளாகும். சுவையும் ஒளியும் ஊறும் ஓசையும் நாற்றமும் என்று சொல்லப்படும் தன் மாத்திரைகள் ஐந்தின் கூறுபாட்டினையறிதலாவது ஒசை ஊறு ஒளி சுவை நாற்றம் என்னும் இவை ஐந்தும் முறையே விசும்பு, வளி, தீ, நீர், நிலம் என்னும் ஐம்பெரும் பூதங்கட்கும் முதற் காரணமாயின எனவும், நுண்பதங்களாகிய தன் மாத்திரை களிலிருந்தே மெய் வாய் கண் மூக்கு செவி என்னும் அறிவுப்பொறிகள் (ஞானேந்திரியம்) ஐந்தும் வாக்கு, கால், கை, எருவாய், கருவாய் என்னும் தொழிற்கருவிகள் (கன்மேந்திரியம்) ஐந்தும் தோன்றுவன எனவும் இவற்றைப் பகுத்துணரும் உணர்வுடையாரை வகைதெரிவான்’ என்று உடன்பட்டுரைத்தமையால் ஆன்மா எனப்படும் அறிவுடைய பொருள் உண்டெனவும், பகுத்துணர்தற்கருவிகளாகிய புத்தி அகங்காரம் மனம் ஆகிய அகக்கருவிகளும் அவற்றிற்கு மூலமாகிய மூலப்பகுதியும் உண்டு எனவும் ஆராய்ந்து அறிதலாகும்.

‘வகைதெரிவான் கட்டேயுலகு எனத் திருவள்ளுவர் கூறுதலால் ஐம்பெரும் பூதங்கள் தன் மாத்திரைகள் முதலிய தத்துவக்கூறுகளாக உலகினைப் பகுத்தாராய்ந்து பயன் கொள்ளும் உணர்வுரிமையுடைய உயிர்கள் உள்பொரு ளாதலும் இங்ங்னம் வகைப்படுத்து ஆராய்தற்குரிய செயப்படு பொருளாகிய உலகம் உணர்வில்லாத உள்பொருளாதலும் தமிழ் முன்னோர் கண்ட தத்துவவுண்மைகளாதல் நன்கு தெளியப்படும்.

காணப்படும் இவ்வுலகம் கடவுளால் தோற்றுவிக்கப் பட்ட உள்பொருளேயென்பது சைவ சித்தாந்தம் கூறும் தத்துவக்கோட்பாடாகும். உலகிலனப் படைத்த முதல்வன் ஒருவன் உண்டென்பது,

"இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டிற் பரந்து

கெடுக வுலகியற்றி யான்” (திருக். 1062)

எனவரும் திருக்குறளில் "உலகியற்றியான்’ என்ற தொடரால் உணர்த்தப்பட்டது. "உலகினைப் படைத்த இறைவன் இவ்வுலகின்கண் வாழ்வார்க்கு முயன்று தொழில்புரிந்து வாழ்தலையன்றிப் பிறர்பாற் சென்று இரந்து (யாசித்து) ஏற்று உயிர்வாழ்தலையும் ஒரு தொழிலாக விதித்திருப்பா னாயின் அக்கொடுந்தொழிலை விதித்த அவனும் இரப்போரைப் போன்று எங்கும் திரிந்து கெடுவானாக” என்பது இதன் பொருளாகும். இரத்தலின் இழிவினையும் வேறுதொழில் செய்யாது இரந்தே உயிர் வாழ்வோம் என்று வாழும் இரவலர் படுந்துயரத்தினையும் கண்டு வருந்திய திருவள்ளுவர், இவ்விழி நிலைக்கு இடனாக இவ்வுலகினைப் படைத்த இறைவனை வெகுண் டுரைப்பது போன்ற, மானங்கெட வரும் இரத்தலின் அச்சத்தைப் புலப்படுத்துவது இத்திருக்குறளாகும். இதன்கண் இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் என்ற தொடரிலுள்ள வேண்டின்’ என்னும் வினையெச்சம் உலகியற்றியான் அங்ங்னம் வேண்டுவான் அல்லன் என்பதனையும் மக்கள் முயன்று தொழில்செய்து அறிவு திருவாற்றல்களால் உயர்வுபெறுதலே இறைவனது படைப்பின் நோக்கம் என்பதனையும் மக்கள் ஒரு தொழிலையுஞ் செய்யாது இரந்து உயிர்வாழ்வோம் என்று எண்ணும் இழிநிலை உலகினைப் படைத்த இறைவனது திருவுளக்குறிப்பிற்கு முரண்பட்ட தென்பதனையும் வற்புறுத்துங் குறிப்பினதாதல் ஆய்ந்துணரத் தகுவதாகும்

திருவள்ளுவர் உலகு, உயிர், கடவுள் என்னும் முப்பொருளுண்மையுடன் பட்டநிலையிலேயே வாழ்வியல் நூலாகிய இத்திருக்குறளை இயற்றியுள்ளார். இச்செய்தி, உலகு மன்னுயிர், இறைவன் ஆகிய முப்பொருள்களையும் உள்பொருளாகக் கொண்டு தாம் கூற எடுத்துக்கொண்ட அறம் பொருள் இன்பம் என்னும் உறுதிப்பொருள்களைத் திருவள்ளுவர் தம் நூலில் வற்புறுத்தலால் நன்கு தெளியப் படும். நல்லறிவுடைய சான்றோர் பலராலும் தம் வாழ்க்கை நுகர்ச்சிகளின் பயனாக உள்பொருள்களெனத் தெளிந் துரைக்கப்படும் கடவுளுண்மை, உயிருண்மை, இருவினைப் பயனுண்மை, மறுபிறப்புண்மை முதலிய உண்மைகளைத் தத்தம் சிற்றறிவுக்குப் புலனாகாமை காரணமாக இல்லை யென மறுத்துரைப்போர் திருவள்ளுவர் காலத்திலும் இருந்தாரெனத் தெரிகிறது. சிறுபான்மையினராகிய அன்னோர் மக்களினத்தினராய் வாழ்ந்தாலும் உலகத்து வாழும் பெரும்பாலோர் தம் வாழ்க்கை நுகர்ச்சியின் பயனாக உண்டெனத் தெளிந்த உண்மைகளைத் தம் சிற்றறிவுக்குப் புலனாகாமை யொன்றே கொண்டு இல்லையென மறுத்துரைக்கும் முகமாக உலகமாந்தர் பலரொடும் முரண் பட்டுத் திரிதலின் அன்னோர் மக்கள் வடிவிற்கானப்படினும் உலகிற்பலரும் கண்டு அஞ்சத்தக்க பேய் வடிவினராகவே கருதப்படுவர் என்பதும் அவர்கள் வற்புறுத்தும் இன்மைக் கொள்கையினை உலகமக்கள் பலரோடும் ஒத்துவாழும் நல்லுணர்வுடைய பெருமக்கள் ஒரு பொருளாக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதும் தெய்வப்புலவர் கருத்தாகும். இக்கருத்து,

"உலகத்தா ருண்டென்பதில்லென்பான் வையத்(து)

அலகையா வைக்கப்படும்” (திருக். 850)  எனவரும் திருக்குறளில் இடம் பெற்றுள்ளமை காணலாம்.

உலக மக்களுக்கு ஆக்கந்தரும் உறுதிப்பொருள் களுள் முதலாவதாக அறத்தினைக் கூறவே அறவுணர்வுக்கு நிலைக்களமாய அறவாழியந்தன னாகிய இறைவனது உண்மையும் அடுத்து உயிர்களது நுகர்ச்சிக்குக் காரணமாகிய பொருள்கூறவே அந் நுகர்ப்பொருள்களின் திரட்சியாகிய உலகின் உண்மையும், மூன்றாவதாக இன்பம் கூறவே அவ்வின்பத்தினை நுகர்தற்குரிய உயிர்களது உண்மையும் உடன் கூறினாராயிற்று.

திருக்குறளில் முதற்கண் அமைந்த கடவுள் வாழ்த்து என்னும் அதிகாரம் உலகுயிர்களை இயக்கியருளும் கடவுள் ஆகிய முழுமுதற் பொருள் உண்டு என்னும் உண்மையினைக் கருதலளவையால் (அனுமானப் பிரமானத்தால்) வலியுறுத்தி இறைவனது பொதுவியல்புடன் தன்னியல்பும் ஆகிய இருவகையிலக்கணங்களையும் சுருக்கமும் தெளிவும் பொருந்த விரித்து விளக்குந்திறன் முன்னர் எடுத்துக்காட்டப் பெற்றது. முதலதிகாரத்திற்கு அமைந்த கடவுள் வாழ்த்து என்னும் பெயர் "கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே” (தொல். பொருள். புறத்)என்னும் தொடரை அடியொற்றி யமைக்கப் பெற்றதாகும். இறைவனுக்கு வழங்கும் பெயர்கள் பலவற்றுள் கடவுள் என்ற பெயர் திருக்குறளில் இடம் பெறவில்லை. ஆயினும் கடவுளைக்குறித்துப் பலராலும் வழங்கப்பெறும் இறைவன் என்ற பெயர் இவ்வதிகாரத்தில் இருமுறை ஆளப்பெற்றுள்ளமை காணலாம். இறைவன் என்னும் தமிழ்ச்சொல் உலகுயிர்கள் தோறும் நீக்கமறத் தங்கியுள்ளவன் என்ற பொருளிற் கடவுளைக்குறித்து வழங்கும் காரணப் பெயராகும். இறுத்தல் - தங்குதல் உயிர்ப்பொருள் உயிரல் பொருள் ஆகிய எல்லாப் பொருள்களிலும் நீக்கமறத்தங்கியிருத்தல் கடவுளது இயல்பாதலின் இறைவன் என்ற சொல் கடவுளுக்குரிய காரணப்பெயராயிற்று.

உலக முதல்வனாகிய கடவுளுக்கேவுரிய இப்பெயர் அவனருளால் உலகத்தையாளும் உரிமை பெற்ற மன்னர்க்குரிய பெயராகவும் தொன்னூல்களில் ஆளப் பெற்றுள்ளது. முன்னுயிர்களாற் செய்யப்படும் நன்றும் தீதும் ஆகிய இருவினைகட்கேற்ப அவற்றின் பயனாகிய இன்ப துன்பங்களை வினைசெய்த உயிர்க்ளே நுகரும்படி நடுநிலையில் நின்று முறைசெய்தல் இறைவனுக்குரிய இயல்பாகும் என்பது பால்வரை தெய்வம் என்னும் தொல்காப்பியத் தொடர்க்குப் பொருள் காண்புழி முன்னர் விளக்கப்பெற்றது. வேண்டுதல் வேண்டாமையின்றி நடுநிலையில் நின்று எல்லாவுயிர்களையும் அவற்றின் இருவினைப் பயன்களையருத்தி முறை செய்து காப்பாற்றும் இறைமைத் தன்மையாகிய முறைமை, மலர்தலையுலகுக்கு உயிரெனச் சிறந்த மன்னனிடத்தும் அமைந்திருத்தல் கொண்டு மன்னனையே கடவுளாக மதித்து இறைவன் என உயர்த்துப் போற்றுதலும் தமிழ்மரபாயிற்று. இறைவன் என்ற பெயர் கடவுள் ஒருவர்க்கேயுரிய காரணப்பெயரென்பதும் அப்பெயரால் மன்னனைக் குறித்தல் உபசார வழக்கென்பதும் ஆகிய இவ்வுண்மையினை,

"முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்

கிறையென்று வைக்கப்படும்” (திருக். 388)

எனவரும் திருக்குறளில் திருவள்ளுவர் தெளிவாக விளக்கிய திறம் கூர்ந்துணரத் தகுவதாகும். தான் முறைசெய்து பிறர் நலியாமற் காத்தலையுஞ்செய்யும் அரசன் பிறப்பினால் மனிதனேய்ாயினும் செயலால் மனிதர்க்குக் கடவுள் என்று உயர்த்துப் போற்றப்படுவான்’ என்பது இத்திருக்குறளின் பொருளாகும். 'இறை என்னாது 'இறையென்று வைக்கப்படும்’ எனத்தெரிந்து மொழிதலால் இறை என்பது கடவுளுக்கேயுரிய பெயரென்பதும் மன்னனை இறையென உயர்த்துக் கூறுதல் உபசார வழக்கென்பதும் நன்கு தெளியப்படும்.

உயிரும் உடம்பும் தம்முள் கலப்பினால் ஒன்றாயும் பொருட்டன்மையால் வேறாயும் உள்ள இருவேறு பொருள்கள் என்பது ஆசிரியர் தொல்காப்பினார் காலத்துக்கு முற்பட்ட காலம் முதல் இன்றுவரை தமிழகத்தில் நிலைபெற்றுவரும் தத்துவக் கொள்கை யென்பது முன்னர் விளக்கப்பட்டது. உடம்பும் உயிரும் பொருட்டன்மையால் வேறாவன என்பது யாவரும் அறிந்ததே. உடம்பு உருவுடையது, நிலையின்றி அழியு மியல்பினது, அறிவில்லாதது, உயிரோ காணாமரபினதாய் அருவாயுள்ளது, என்றும் அழிவின்றி நிலைபெற்றுள்ளது, அறிவுடையது. அருவாய் அழிவில்லாததாய் அறிவுடையதாய் உள்ள உயிர்க்கும் உருவாய் அழிவுடையதாய் அறிவில்லாததாய் உள்ள உடம்புக்கும் ஏற்பட்ட தொடர்பு அன்பு என்னும் உயிர்ப்பண்பினை வளர்த்தற்பொருட்டு ஏற்பட்டதாகும் என்பார்.

"அன்போ டியைந்த வழக்கென்ப ஆருயிர்க்

கென்பொ டியைந்த தொடர்பு” (திருக். 73)

என்றார் திருவள்ளுவர். காணுதற்கரிய அருவாகிய உயிர்க்கு உருவாகிய எற்புச் சட்டமாகிய உடம்போடு உண்டாகிய தொடர்ச்சி அன்பு என்னும் உயிர்ப்பண்பினோடு பொருந்துதற்கு வந்த நெறியின் பயன் என்று சொல்லுவர் அறிந்தோர்’ என்பது இதன் பொருளாகும். அருவாகிய உயிர்கள் உருவாகிய உடம்பொடு கூடியல்லது அன்பு செய்யலாகாமையின் அன்பினை வளர்த்தற் பொருட்டே உயிர்க்கு உடம்பொடு கூடிய இத்தொடர்ச்சியுளதாயிற்று என்பதாம். ஆகவே உயிர் உடம்பினைப் பெற்றதன் பயன் அன்புடைமை என்பது கருத்து. ஆருயிர்க்கு என்போடு இயைந்த தொடர்பு அன்போடு இயைந்த வழக்கு என்ப" எனச் சான்றோர் கூறுவர். எனவே மன்னுயிர்கள் எற்புச் சட்டமாகிய உடம்பின் தொடர்ச்சி பெறாது இருள்நிலையி லிருந்த காலமும் உண்டு என உய்த்துணர வைத்தாராயிற்று. உயிர்கள் உடம்பின் தொடர்ச்சி பெறாது தனித்திருந்த இருள்நிலையினைக் கேவலநிலை எனச் சைவசித்தாந்த நூல்கள் கூறுகின்றன.

உயிர்கள் உடம்ப்ொடு கூடி உலக நுகர்ச்சியைப் பெற்று வாழும் நிலையினைச் சகலநிலை எனச் சைவ சித்தாந்தம் கூறும். இந்நிலை உயிர்வேறு உடம்பு வேறு எனப் பிரித்துணராதவாறு உடம்பும் உயிரும் ஒன்றிவாழும் நிலையாகும். இந்நிலையில் உயிருக்கும் உடம்புக்கும் அமைந்த தொடர்பினை,

"உடம்போ டுயிரிடை யென்னமற் றன்ன

மடந்தையோ டெம்மிடை நட்பு” (திருக். 1122)

என வரும் திருக்குறளில் ஆசிரியர் உவமை முகத்தால் விளக்கியுள்ளார். தலைமகன் தலைவியெனத் தனக்குள்ள காதன்மிகுதியைக் கூறுவதாக அமைந்தது இத்திருக்குறள். 'உடம்போடு உயிரிடையுளவாகிய நட்புக்கள் எத்தன்மையன அத்தன்மையன, இம்மடந்தையொடு எம்மிடையுளவாய நட்புக்கள்’ என்பது இதன்பொருள். உடம்போடு, உயிர்க்கு உளவாகிய நட்புக்களாவன, உடம்பும் உயிரும் வேற்றுமை யின்றி இரண்டும் ஒன்றேயென எண்ணும்படி கலந்துவருதல், இன்பத் துன்பங்களை ஒக்க அனுபவித்தல், ஒன்றையொன்று இன்றியமையாமை என்பனவாம். இதனால் உயிர் உடம்புடன் கூடி வாழும் சகலநிலை விரித்துரைக்கப்பட்டது. உயிரும் உடம்பும் பொருட்டன்மையால் வேறாயினும் இன்ப துன்பங்களை நுகருந்திறத்தில் ஒன்றற்கொன்று இன்றியமை யாத கலப்பினால் ஒன்றாகவே கருதப்பட்டு வருதல் உலகியலிற்கண்டது. இத்தகைய கலப்பினை இருமையின் ஒருமை (அத்துவிதம்) என்றால் பொருந்தும். இவ்வுலகத்தில் ஒத்த அன்பினராய் இல்வாழ்க்கைக்கண் ஒழுகி மனையோடும் மக்களோடும் சுற்றத்தோடும் கூடி வாழ்ந்தவர்கள் பிறப்புப் பிணிப்பு நீங்கப்பெறும் சிறந்த பேரின்பத்தினை அன்புடைய ராய் இல்லறத்தில் ஒழுகிய நெறியின் பயன் என்று கூறுவர் பண்டைத்தமிழ்ச் சான்றோர். இவ்வுண்மை,

"அன்புற்றமர்ந்த வழக்கென்பவையகத்

தின்புற்றார் எய்துஞ் சிறப்பு” (திருக். 75)

எனவரும் திருக்குறளில் விரித்துரைக்கப் பெற்றுள்ளமை காணலாம். ஈண்டுச்சிறப்பு என்றது எல்லாப் பேற்றினும் சிறந்த வீடுபேறாகிய இந்நிலை உயிர்களின் சுத்தநிலை எனப்படும். வீடுபயக்கும் உணர்வாகிய ஞானப்பகுதி திருக்குறளில் நிலையாமை, துறவு, மெய்யுணர்தல் அவாவறுத்தல் என்னும் நான்கதிகாரங்களில் விரித்துரைக்கப் அவற்றுள் நிலையாமையாவது, உலகில் لقيَ سلاسلالا தோற்றமுடையனவாய்க் கானப்படும் எல்லாப் பொருள்களும் என்றும் ஒருபெற்றியனவாய் நிலையுத லிலவாந்தன்மை. காணப்படும் உலகம் உள்பொருளாயினும் என்றும் ஒருபெற்றியதாய் நில்லாது மாறுந்தன்மையாதலின் 'நில்லாவுலகம் என்றார் தொல்காப்பியனாரும். பிறப்பற்ற நிலையே வீடுபேறென்பதும் பிறவா நிலை பெறுதற்குத் தன் உடம்பின் கண்னும் ஏனைய உலகப்பொருளின் கண்ணும் வைத்த அவாவை அறவே துறத்தல் வேண்டுமென்பதும், புறமாகிய செல்வத்தின் கண்ணும் அகமாகிய உடம்பின் கண்ணும் உளதாம்பற்றின்ன அவற்றது நிலையின்மை நோக்கி அறவே விட்டொழித்தலே துறவுநிலையாம் என்பதும் ஆசிரியர் திருவள்ளுவர் அறிவுறுத்தும் தத்துவவுண்மை களாகும்.

“மற்றுந்தொடர்ப்பா டெவன்கொல் பிறப்பறுக்க

லுற்றார்க் குடம்பும் மிகை” (திருக். 345)

என்பது திருவள்ளுவர் வாய்மொழி. இதனால் பிறவா நிலையாகிய வீட்டினையடைதலே அறிவுடைய நன்மக்களின் நோக்கமாதல் வேண்டும் என்பதும் வீடுபேற்றுக்குச் சாதனமாவது இருவகைப் பற்றுக்களையும் அறவே விட்டு நீங்குதலாகிய துறவறமே என்பதும் நன்கு புலனாகும். "உடம்பு என்ற பொதுமையான் உருவுடம்பும் அருவுடம்பும் கொள்ளப்படும். அவற்றுள் அருவுடம்பாவது, பத்துவகை இந்தியவுணர்வோடும் ஐவகை வாயுக்களோடும் காமவினை விளைவுகளோடும் கூடியமனம். இது நுண்ணுடம்பு எனவும் படும். இத்துன்பங்களால் உயிரோடு ஒற்றுமைப்படுதலின் இவ்வுடம்புகளும் யான் எனப்படும்” என்பார் பரிமேலழகர்.

அகம் புறம் என்னும் இருவகைப்பற்றினையும் இறுகப் பற்றிக் கொண்டு அப்பற்றினை விடாதவர்களைப் பிறவித் துன்பங்கள் இறுக்கப்பற்றிக் கொண்டு நீங்காமல் வருத்துவன. இப்பற்றுக்களை அறவே விட்டொழித்தவர்களே வீடு பேற்றினைத் தலைப்பட்டவர்கள். அங்ங்னம் துறவாதவர்கள் மயங்கிப் பிறப்பாகிய வலையுட்பட்டு வருந்துவர் என்பார்.

“தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி

வலைப்பட்டார் மற்றை யவர்” (திருக். 348)

என்றார் திருவள்ளுவர். முற்றத்துறந்தார் வீட்டினைத் தலைப்பட்டார். அங்ங்னம் துறவாதார் மயங்கிப் பிறப்பாகிய வலையுட்பட்டோராவார் iன்பது இதன் பொருள். தீரத் (முற்றுத் துறத்தலாவது பொருள்களையும் (உரு.அரு என்னும்) இருவகையுடம்பினையும் உவர்த்துப் பற்றறவிடுதல், ஈண்டுத் தலைப்படுதல் என்றது இறைவனது திருவருள் ஞானத்தை எய்தப்பெறுதல், இருவகைப்பற்றினையும் விட்டொழித்தவர்க்கே இறைவனது பற்றாகிய திருவருள் ஞானம் கைகூடும் என்னும் தெய்வப்புலவர் வாய்மொழி யினை,

"தனியறிவை முன்னந் தலைப்பட்டார் தீரத்துறந்தார் மயங்கி வலைப்பட்டார் மற்றையவரென்று நிலைத்தமிழின் தெய்வப் புலமைத் திருவள்ளுவர் உரைத்த மெய்வைத்த சொல்” (நெஞ்சுவிடுதூது, கண்ணி23-25)

என உமாபதி சிவாசாரியார் தாம் இயற்றிய சித்தாந்த நூல்கள் எட்டினுள் ஒன்றாகிய நெஞ்சு விடு துதில் எடுத்தாண் டுள்ளமை சைவசித்தாந்தத் தத்துவ வுண்மைகளுக்குத் திருக்குறள் நிலைக்களமாக விளங்குதலை நன்கு வற்புறுத்துவதாகும்.

ஒருவர்க்கு இருவகைப் பற்றும் அற்ற பொழுதே அப்பற்றறுதி அவரது பிறப்பையறுக்கும். பற்று அறாத பொழுது அவற்றாற் பிறந்திறந்து வருகின்ற நிலையாமை காணப்படும் என்பார்,

“பற்றற்ற கண்ணே பிறப்புறுக்கும் மற்று

நிலையாமை காணப்படும்” (திருக், 349)

என்றார் திருவள்ளுவர்.

பிறப்புக்குக் காரணமாகிய இருவகைப் பற்றும் நீங்கிய பொழுதே அவற்றின் காரியமாகிய பிறப்பும் அற்றதாம் முறைமைபற்றிப் பற்றற் கண்ணே பிறப்பறுக்கும்’ என்றார். “அற்றது பற்றெனில் உற்றது வீடு' என்பது நம்மாழ்வார் அருளிச்செயல்.

எல்லாப் பொருளையும் பற்றி நின்றே தனக்கென்று ஒருசார்பில்லாதவன் இறைவன். பற்றற்றானாகிய அம்முதல்வன் ஒதிய வீட்டுநெறியினை இதுவே நன்னெறி யென்று மனத்துட் கொள்ளுதல் வேண்டும். அங்ங்னம் கொண்டு அதன்கண் உபாயமாகிய தியானச் சமாதிகளை மனத்தாற் செய்தல் வேண்டும். அங்ங்னம் செய்தால் அநாதியாய் வரும் உடம்பின் பற்றுத் தானே நீங்கிவிடும் என அறிவுறுத்துவது,

"பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்

பற்றுக பற்று விடற்கு” (திருக். 350)

எனவரும் திருக்குறளாகும். எல்லாவற்றுக்குஞ் சார்பாய் நின்று தனக்கென்று ஒரு சார்பு வேண்டாதவன் இறைவன் எனப் பகுத்துணர்த்துவார் அம்முதல்வனைப் பற்றற்றான்' என்றார். துறவற நெறியினை மேற்கொள்ளுதற்கும் அநாதியே வந்த உடம்பின் பற்றினை விட்டொழித்தற்கும் இறைவன் திருவருளே துணை செய்வதாகும் என்பதும், அம்முதல்வனது அருளின்றி இருவகைப் பற்றுக்களையும் விட்டொழித்தலாகிய துறவறப்பயன் கைகூடாதென்பதும் ஆகிய உண்மைகள் இத்திருக்குறளில் நன்கு வலியுறுத்தப் பெற்றுள்ளமை மனங்கொளத் தகுவதாகும்.

மன்னுயிர்கள் பாசப்பினிப்பிற் பட்டுப் பிறத்தலும் அப்பிணிப்பின் நீங்கி வீடு பெறுதலும் ஆகிய இருமை வகையினையும் அவற்றின் காரணங்களையும் ஐயந்திரியின்றி உள்ளவாறுணர்தல் மெய்யுணர்தலாகும். இதனை வடநூலார் தத்துவ ஞானம் என்பர். திருக்குறளில் மெய்யுணர்தல் என்னும் அதிகாரம் தமிழ் முன்னோர் கண்டுணர்ந்த தத்துவ ஞானத்தினைச் சுருங்கச் சொல்லி விளங்கவுணர்த்தும் முறையில் அமைந்துள்ளமை காணலாம்.

என்றும் நிலைபேறுடைய மெய்ப் பொருளல்லாத வற்றை நிலையான மெய்ப்பொருள் என்று பற்றுச்செய்யும் (விபரீதவுணர்வாகிய) மயக்கவுணர்வானே இன்பமில்லாத பிறப்பு உண்டாவது என அறிவுறுத்துவது,

“பொருளல்ல வற்றைப் பொருளென்றுனரும்

மருளானாம் மாணாப் பிறப்பு” (திருக். 351) 

என வரும் திருக்குறளாகும். விபரீதவுணர்வாவது, மறுபிறப்பும் இருவினைப் பயனும் கடவுளும் இல்லை யெனவும் மற்றும் இத்தன்மையவுஞ்சொல்லும் மயக்கநூல் வழக்குகளை மெய்ந்நூல் வழக்கெனத் துணிதல். குற்றியை மகவென்றும் இப்பியை வெள்ளியென்றும் இவ்வாறே ஒன்றனைப் பிறிதொன்றாகத் துணிதலும் அது. மருள், மயக்கம், விபரீதவுணர்வு, அவிச்சையென்பன ஒருபொருட் கிளவி. நரகர், விலங்கு, மக்கள், தேவர் என்னும் நால்வகைப் பிறப்பினும் உள்ளது துன்பமேயாகலின் மானாப்பிறப்பு என்றார். இதனாற் பிறப்புத்துன்பம் என்பதும் அதற்கு முதற்காரனம் அவிச்சையென்பது உம் கூறப்பட்டன” என்பர் பரிமேலழகர்.

மயக்கவுணர்வின் நீங்கி மெய்யுணர்வுடைய ராயினார்க்கு அம்மெய்யுணர்வு எல்லாத் துன்பத்திற்குங் காரணமாயுள்ள ஆணவம் என்னும் அகவிருள் நீங்க வீட்டினைக் கொடுக்கும் என அறிவுறுத்துவது,

"இருணிங்கியின்பம் பயக்கும் மருணிங்கி

மாசறு காட்சியவர்க்கு” (திருக். 352)

எனவரும் திருக்குறளாகும். ஈண்டு இருள் என்றது, உயிர்கள் அடையும் எல்லாத் துன்பத்திற்கும் காரணமாயுள்ள ஆணவவல்லிருளை. 'இருளாயவுள்ளத்தின் இருளை நீக்கி’ என்பது அப்பரருள் மொழி. மருள் என்றது மயக்க வுணர்வினை. மாசறு காட்சியென்றது. மெய்ப்பொரு ளுணர்வினை. வீடென்பது உயர்வறவுயர்ந்த பேரின்பநிலை யென்பதும் அதனைப் பெறுதற்கு நிமித்த காரணம் மெய்ப்பொருளுணர்வென்பதும் இதனால் கூறப்பட்டன. இனி, இங்கு இருள் என்றது நரகத்தினையெனவும் அஃது ஆகுபெயராய் அதற்குக் காரணமாகிய பிறப்பின் மேல் நின்றதெனவும் கூறுவர் பரிமேலழகர். ஆசிரியர் திருவள்ளுவர் இருள் என்ற சொல்லினை ஆணவம் என்னும் அகவிருள் என்ற பொருளிலும் மருள் என்ற சொல்லினை மயக்கவுணர்வு என்ற பொருளிலும் ஆண்டுள்ளார் என்பது இருள்சேர் இருவினையுஞ்சேரா, "இருணிங்கியின்பம் பயக்கும்', 'மருளானாம் மாணாப் பிறப்பு எனவரும் திருக்குறள் தொடர்களை ஒப்புநோக்கி ஆராய்வார்க்கு இனிது விளங்கும்.

ஐயத்தினின்றும் நீங்கி மெய்ப்பொரு ளுண்மையை யுனர்ந்தார்க்கு அவர்கள் எய்தி நின்ற நிலவுலகத்தினும் இனி எய்து தற்குரிய வீட்டுலகம் மிகவும் அணிமைக்கண் நெருங்கியுள்ளது என்பார்.

“ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்

வானம் நணிய துடைத்து” (திருக். 353)

என்றார் திருவள்ளுவர். ஐயமாவது ஒருபொருளைக் குறித்துப் பலவேறாக எண்ணி அவற்றுள் ஒன்றிலுந்துணிவு பிறவாது நிற்றல். ஒருவாற்றாற் பிறர் மதங்காைந்து தமது மதத்தினை நிலைநாட்ட முயலுதல் எல்லாச் சமய நூல்கட்கும் இயல்பாதலின் அந்நூல்கள் கூறுகின்றவற்றுள் யாது மெய் என நிகழும் ஐயத்தினை யோக முதிர்ச்சி யுடையார் தமது அனுபவத்தால் நீக்கி அதன் மெய்மையை யுனர் வராதலின் அத்தகைய மெய்ப்பொருள் பயிற்சி யுடையோரை 'ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்’ என்றார். மெய்ப்பொருளைத் தெளிந்தார்க்கு அவ்வனுபவவுணர்வு பயின்று மேற்படிப் பண்டையுலகியலுணர்வு துர்ந்து மறையுமாதலின் இவ்வுலகியல் தொடர்பினும் வீட்டியல் தொடர்பே அவர்க்கு மிக நெருக்கமுடையதாய் வரும் என்பார் வையத்தின் வானம் நனியதுடைத்து என்றார்.

மெய்ப்பொருளாகிய இறைவனையுணர்ந்து போற்றாதார்க்குப் புறத்தே செல்லுதற்குரிய புலன்களின் வேறுபாட்டால் ஐந்தாகியவுணர்வுடைய மனம் புலனடக்கத்தால் அவற்றை விட்டு நீங்கித் தம்வயத்ததாய வழியும் சிறிதும் பயனில்லையென்பது,

'ஐயுணர் வெய்தியக் கண்ணும் பயமின்றே

மெய்யுணர் வில்லாதவர்க்கு (திருக். 354)

எனவரும் திருக்குறளால் வலியுறுத்தப்பட்டது. 

 __________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

 ஐயுணர்வுஐந்தாகிய உணர்வு என்றது ஐம்புலவுணர்வுடைய மனத்தினை எய்துதலாவது, புறத்தே செல்லாது மடங்கி ஒருநிலைப்பட்டு அடங்கித்தாரணைக்கண் நிற்றல். மெய்யுணர்வு - மெய்ப் பொருளாகிய இறைவனையுணரும் உணர்வு செம்பொரு ளாகிய இறைவனைச் சிந்தித்துப் போற்றாதார்க்கு மனம் ஐம்புலன் வழிச் செல்லாது அடங்கி நின்றாலும் அதனாற் சிறிதும் பயனில்லையெனவே தெளிந்த மெய்ப்பொருட் சிந்தனையுடையார்க்கே வீடுபேறாகிய பேரின்பநிலை எய்தும் என்பது பெறப்படும். உலகத்து யாதொரு பொருள் யாதோரியல்பிற்றாய்த் தோன்றினும் தோன்றிய அவ்வெளித் தோற்றத்தைக் கண்ட அளவில் அமைந்துவிடாது அப் பொருளின் உள்நின்று இயக்கும் மெய்ப்பொருளைக் (இறைவனைக் கண்டுனர்வதே உண்மையான அறிவாகும் என்பர் சான்றோர். இந்நுட்பம்,

“எப்பொருள் எத்தன்மைத்தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு" (திருக். 355)

என வரும் திருக்குறளில் வலியுறுத்தப்பெற்றுள்ளமை காணலாம். இதன்கண் எப்பொருள் என்றது புறத்தே காணப்படும் மாறுந்தன்மையதாய உலகப்பொருள்களை. அப்பொருள் மெய்ப்பொருள் என்றது, அவ்வுலகப் பொருள்களின் உள்நின்றியக்கும் மாறாவியல்பினதாகிய செம்பொருளை.

"யாதொரு பொருள் யாதோரியல்பிற்றாய்த் தோன்றினும் அத்தோன்றியவற்றைக் கண்டொழியாது அப்பொருள்களினின்று மெய்யாய பொருளைக் காண்பதே மெய்யுணர்வாவது” எனப் பொருள் வரைந்து இதனை மெய்யுணர்வது இலக்கணங் கூறியதாகக் கூறினார் பரிமேலழகர். பொருள்தோறும் உலகத்தார் கற்பித்துக் கொண்டு வழங்குகின்ற கற்பனைகளைக் கழித்து நின்ற வுண்மையைக் காண்பதே மெய்யுணர்வு என்றவாறு, "அஃதாவது சோச்சேரமான் யானைக்கட்சேஎய் மாந்தரஞ் சேரலிரும்பொறை என்றவழி அரசன் என்பதோர் சாதியும் சேரமான் என்பதோர் குடியும் வேழநோக்கினையுடையான் என்பதோர் வடிவும், சேஎய் என்பதோர் இயற்பெயரும், மாந்தரஞ் சேரலிரும்பொறை என்பதோர் சிறப்புப்பெயரும் ஒரு பொருளின்கட் கற்பனையாகலின் அவ்வாறு (உலகத்தார் கற்பித்துக் கொண்ட கற்பனையினை மெய்ம்மையென) உணராது நில முதல் உயிரீறாகிய தத்துவங்களின் தொகுதியெனவுணர்ந்து அவற்றை நில முதலான காரணங்களுள் ஒடுக்கிக் கொண்டு சென்றாற் காரண காரியங்கள் இரண்டுமின்றி முடிவாய் நிற்பதனை யுனர்தலாம். எப்பொருள் என்ற பொதுமையான் இயங்கு தினையும் நிலைத்திணையுமாகிய பொருள்களெல்லாம் இவ்வாறே யுணர்ப்படும். இதனால் மெய்யுணர்வினது இலக்கணம் கூறப்பட்டது” எனப் பரிமேலழகர் தரும் விளக்கம் சாங்கிய நூலார் கொள்கையினை அடியொற்றி யமைந்ததாகும். மெய்யுணர்தல் என்ற தொடர், மெய்மையான் (ஒரு பொருளை ஆராய்ந்து) உணர்தல் என்ற பொருளுடைய அதிகாரத் தலைப்பாகும். சொல்லின் முடியும் இலக்கணத்ததாகிய மெய்யுணர்தல் என்ற தொடர் மெய்ம்மையான் ஒன்றனை ஆராய்ந்துணர்தல் என்ற பொதுப்பொருளோடு மெய்ப்பொருளாகிய இறைவனை இடைவிடாது சிந்தித்துணர்தல் என்ற சிறப்புப் பொருளையும் தருவதாகும். அத்தகைய சிறப்புப்பொருளை விரித்துரைக்கும் நிலையிலமைந்தனவே இவ்வதிகாரத்தில் நான்கு முதல் ஒன்பது முடியவுள்ள குறள்கள். ஐந்தாங் குறளாகிய இதன்கண் புறத்தே காணப்படும் பொருள்களையெல்லாம் எப்பொருள் என்ற வினாவில் அடக்கியும் அங்ங்னம் அடக்கியவற்றை அப்பொருள் எனச் சுட்டி அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு” என அவற்றை உள்நின்றியக்கும் செம்பொருளைக் கண்டு தெளிதலே மெய்யுணர்வின் சிறப்பியல்பாகும் என்று ஆசிரியர் வலியுறுத்தினார் எனக் கொள்ளுதலே ஏற்புடையதாகும்.

இம்மக்கட்பிறப்பின் கண்னே அருளனுபவமுடைய ஆசிரியனிடத்தே உபதேசமொழிகளைக் கேட்டு அதனால் மெய்ப்பொருளையுனர்ந்தவர் மீண்டும் இப்பிறப்பின்கண் வாராத நெறியை எய்துவர் என்பது,

“கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்

மற்றீண்டு வாரா நெறி” (திருக். 356)              எனவரும் திருக்குறளால் உணர்த்தப்பட்டது.

கற்றலாவது பலரிடத்தும் பலகாலும் நற்பொருளைக் கேட்டுப் பயிலுதல். மெய்ப்பொருள் காணுதலாவது, என்றும் மாறாத மெய்ப்பொருளாகிய முழுமுதற் பொருளை உள்ளத்திற் சிந்தித்துப் போற்றுதல். ஈண்டு வாரா நெறி - இவ்வுலகத்து மீண்டும் வந்து பிறவாமைக்கு ஏதுவாகிய வீட்டு நெறி. மீண்டு வாரா வழியருள் புரிபவன்’ (திருவாசகம்) எனவும் வாராவுலகருளவல்லான்’ (திருத்தாண்டகம்) எனவும் வரும் திருமுறைத் தொடர்கள் இத்திருக்குறள் தொடருடன் வைத்து ஒப்பு நோக்கத்தக்கன. மெய்ப் பொருளை யுணர்தற்கரிய கேட்டல் சிந்தித்தல் தெளிதல் என்னும் உபாயம் மூன்றனுள் கேட்டல் இதனாற் கூறப்பட்டது

ஆசிரியன்பாற் கேட்ட உபதேச மொழிகளை உள்ளமானது அளவைகளாலும் பொருந்து மாற்றானும் தெளிய ஆராய்ந்து அதனால் என்றும் உள்ளதாகிய முழுமுதற்பொருளையுனருமானால் அங்ங்ணம் உணர்ந்த உயிர்க்கு மீண்டும் பிறப்புளதாக நினைக்கவேண்டா என்பார்,

“ஒர்த்துள்ளம் உள்ள துணரின் ஒருதலையாய்ப் பேர்த்துள்ள வேண்டா பிறப்பு” (திருக். 357)

என்றார் திருவள்ளுவர். இதன் கண் உள்ளம் என்றது ஆன்மாவை. உள்ளது என்றது என்றும் மாற்ாது உள்ளதாகிய சத்தாகிய முழுமுதற் பொருளை. உள்ளம் ஒருதலையாய் ஒர்த்து உணரின் பேர்த்துப்பிறப்பு (உளதாக) உள்ள வேண்டா என இசையும். ஆன்மாவை உள்ளம் என்றும் முழுமுதற் பொருளை உள்ளது (சத்து) என்றும் வழங்கும் சைவசித்தாந்தச் சொற்பொருள் மரபு இத்திருக்குறளில் இடம்பெற்றுள்ளமை கூர்ந்துணரத் தகுவதாகும். இத்திருக்குறளின்படி உள்ளது எனப்படும் முழுமுதற் பொருளைத் தெளியவுணர்ந்து வழி படாதவர்கள் சமணர்கள் என்ற செய்தியை ஒர்த்துள்ளவாறு நோக்கி யுண்மையையுனராக் குண்டர் வார்த்தையை மெய் யென்றெண்ணி மயக்கில் வீழ்ந்தழுந்து வேனை' எனவரும்   திருநேரிசையில் திருநாவுக்கரசர் குறித்துள்ளமை காணலாம். இதனால் இறைவனைச் சிந்தித்தலாகிய உபாயம் கூறப்பட்டது.

பிறப்பிற்குக் காரணமாகிய பேதைமைகெட வீட்டிற்கு நிமித்த காரணமாகிய செவ்விய முழுமுதற் பொருளைக் கண்டு தெளிவதே ஒருவர்க்கு மெய்யுணர்வாகும் என அறிவுறுத்துவது,

“பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னுஞ்

செம்பொருள் காண்ப தறிவு” (திருக். 358)

எனவரும் திருக்குறளாகும்.

'பிறப்பென்னும் பேதைமை எனவும் சிறப்பென்னுஞ் செம்பொருள்” எனவும் காரியத்தைக் காரணமாக உபசரித்தார். ஐவகைக் குற்றங்களுள் அவிச்சை ஏனைய நான்கிற்குங் காரணமாதலுடைமையின் அச்சிறப்புப் பற்றி அதனையே பிறப்புக்குக் காரணமாக்கிக் கூறினார். எல்லாப் பொருளினுஞ் சிறந்ததாதலால் வீடு சிறப்பெனப்பட்டது. தோற்றக்கேடுகளின்மையின் நித்தமாய், நோன்மையால் தனியென்றுங் கலத்தலின்மையின் துய்தாய்த் தான் எல்லாவற்றையுங்கலந்து நிற்கின்ற முதற்பொருள் விகாரமின்றி எஞ்ஞான்றும் ஒரு தன்மைத்தாதல் பற்றி அதனைச் செம்பொருள் என்றார். மேல் மெய்ப்பொருள் எனவும் உள்ளது எனவும் கூறியது உம் இது பற்றியென வுணர்க. அதனை (செம்பொருளை)க் காண்கையாவது உயிர் தன் அவிச்சை கெட்டு அதனோடு ஒற்றுமையுற இடை விடாது பாவித்தல்; இதனைச் சமாதியெனவும் சுக்கிலத் தியானம் எனவும் கூறுவர். உயிர் உடம்பின் நீங்குங்காலத்து அதனால் யாதொன்று பாவிக்கப்பட்டது அஃது அதுவாய்த் தோன்றும் என்பது எல்லா ஆகமங்கட்கும் துணிபாகலின் வீடெய்து வார்க்கு அக்காலத்துப் பிறப்பிற்கேதுவாகிய பாவனை கெடுதற்பொருட்டுக் கேவலப் பொருளையே பாவித்தல் வேண்டுதலால் அதனை முன்னே பயிறலாகிய இதனின் மிக்க உபாயம் இல்லையென்பது அறிக. இதனாற் பாவனை கூறப்பட்டது என இத்திருக்குறளுக்குப் பரிமேலழகர் தரும் விளக்கும் சைவசித்தாந்தக் கோட் பாட்டிற்கு ஒத்ததேயாகும். பரிமேலழகர் இங்குக் கேவலப் பொருள் என்றது முதற்பொருளாகிய செம்பொருளாகிய சிவமென லாமே (திருமந்திரம்) என வரும் திருமூலர் வாய்மொழியாலும் 'செம்பொருட்டுனிைவே (திருவாசகம்) எனவரும் திருவாதவூரடிகள் வாய்மொழியாலும் நன்கு தெளியப்படும்.

ஒருவர் எல்லாப் பொருட்குஞ் சார்பாகிய செம் பொருளையுணர்ந்து தம்மைச் சார்வனவாகிய இருவகைப் பற்றும் அறஒழுகவல்லராயின் அவரை முன்னர்ச் சாரக் கடவனவாய் நின்ற துன்பங்கள் அவர்தம் உணர்வொழுக்கங் களையழித்துச் சாரமாட்டா என்பார்,

"சார்புணர்ந்து சார்பு கெடவொழுகின் மாற்றழித்துச்

சார்தரா சார்தரு நோய்” (திருக். 359)

என்றார் தெய்வப்புலவர். இத்திருக்குறளில் முதற்கண் உள்ள சார்பு என்பது உலகுயிர்களாகிய எல்லாப் பொருட்கும் சாரும் நிலைக்களமாகத் திகழும் செம்பொருளையும் அடுத்து நின்ற சார்பு என்பது உயிர்களைச் சார்வனவாகிய இருவகைப் பற்றுக்களையும் உணர்த்தின. ஆகுபெயர் சைவனாரவர் சார்பலால் யாம் சார்பிலோம் நாங்களே என்பது ஆளுடைய பிள்ளையார் அருளிச் செயல். இத்திருக்குறளில் சார்புணர்தல் என்றது எல்லாப் பொருட்குஞ் சார்பாய் நின்ற முழுமுதற் பொருளை இடைவிடாது உணருந் தியானத்தை யும் சார்புகெடவொழுகல் என்றது சமாதியையுங் குறிப்பன. இத்திருக்குறட்பொருளை விரித்துரைக்கும் நிலையில் அமைந்தது,

"சார்புணர்ந்து சார்பு கெடவொழுகின் என்றமையான்

சார்புணர்தல் தானே தியானமுமாம் - சார்பு கெடவொழுகின் நல்ல சமாதியுமாம் கேதப் படவரு தில்லைவினைப் பற்று”

எனவரும் திருக்களிற்றுப்படியார் வெண்பாவாகும்.

“சாரக்கடவனவாய் நின்ற துன்பங்களாவன : பிறப்பு அனாதியாய் வருதலின் உயிரான் அளவின்றி ஈட்டப்பட்ட வினைகளின் பயன்களுள் இறந்த உடம்புகளான் அனுபவித்தனவும் பிறந்தவுடம்பான் முகந்து நின்றனவும் ஒழியப்பின்னும் அனபவிக்கக் கடவனவாய்க்கிடந்தன. அவை விளக்கின் முன் இருள்போல் ஞானயோகங்களின் முன்னர்க் கெடுதலான், அழித்துச் சார்தரா என்றார். . . . . . பிறப்பிற்குக் காரணமாகலான் நல்வினைப் பயனும் நோயெனப்பட்டது. மேல் மூன்று உபாயத்தானும் பரம்பொருளையுணரப் பிறப்பறும் என்றார். அஃது அறும் வழிக்கிடந்த துன்பங்களெல்லாம் என்செய்யும் என்னும் கடாவை ஆசங்கித்து, அவை ஞானயோகங்களின் முதிர்ச்சியுடைய உயிரைச் சாராமாட்டாமையானும் வேறு சார்பின்மையானும் கெட்டுவிடும் என்பது இதனாற் கூறப்பட்டது” எனப் பரிமேலழகர் தரும் விளக்கம். மெய்யுணர்தல் என்னும் இவ்வதிகாரத்திற் கூறப்படும் கருத்துக்கள் யாவும் கடவுள், உயிர், உலகம் என்னும் முப்பொருளுண்மையை வற்புறுத்தும் சைவ சித்தாந்தக் கொள்கையினர்க்கே முற்றிலும் பொருந்துவனவாதலை நன்கு புலப்படுத்துகின்றது.

மேற்கூறியவாறு சார்புணர்ந்து சார்புகெட வொழுகுதலாகிய ஞானயோகங்களின் முதிர்ச்சி யுடையார்க்கு விழைவு, வெறுப்பு, மயக்கம் என்னும் இக்குற்றங்கள் மூன்றனுடைய பெயருங்கூட அறவே கெடுதலால் அவற்றின் காரியமாகிய வினைப்பயன்கள் அவர்க்குச் சிறிதும் உளவாகா என அறிவுறுத்துவது,

44 - * - - s

காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன் நாமங் கெடக்கெடும் நோய்” (திருக். 360)

எனவரும் திருக்குறளாகும்.

மக்கள்பால் அமைந்த காமம் வெகுளி மயக்கம் என்னும் முக்குற்றங்களுள் ஏனையிரண்டிற்கும் அடிப்படை யாகஅமைந்தது மயக்கம். இது ஒன்றும் அறியாமையாகிய பேதைமை எனவும், தான் சிற்றறிவினனாயிருந்தே தன்னைப் பேரறிவினனாக மதித்துப் பெரியோரை அவமதித்தொழுகும் புல்லறிவாண்மையும் என இருவகைப்படும். இவ்விரண்டினையும் இரண்டதிகாரங்களில் திருவள்ளுவர் விரித்துரைத்தலால் சிற்றறிவுடைமை உயிர்களது இயல்பு என்பதனைத் திருவள்ளுவர் அறிவுறுத்தினாராவர்.

“அநாதியாய அவிச்சையும், அதுபற்றி யான் என மதிக்கும் அகங்காரமும், அதுபற்றி எனக்குஇதுவேண்டும் என்னும் அவாவும், அதுபற்றி அப்பொருட்கட் செல்லும் ஆசையும் அதுபற்றி அதன் மறுதலைக்கண் செல்லும் கோபமும் எனவடநூலார்க் குற்றம் ஐந்து என்றார். இவர் அவற்றுள் அகங்காரம் அவிச்சைக்கண்ணும் அவாவுதல் ஆசைக்கண்ணும் அடங்குதலான் மூன்று என்றார். இடையறாத ஞானயோகங்களின் முன்னர் இக்குற்றங்கள் மூன்றும் காட்டுத்தி முன்னர்ப் பஞ்சுத் துய்ப்போலு மாகலின் அம்மிகுதி தோன்ற இவை மூன்றன் நாமம் கெட என்றார் . . காரணமாய அக்குற்றங்களைக் கெடுத்தார் காரியமாகிய இருவினைகளைச் செய்யாமையின், அவர்க்கு வரக்கடவ துன்பங்களும் இல்லை என்பது இதனாற்கூறப்பட்டது. முன்கிடந்த துன்பங்களும் மேல் வரக்கடவதுன்பங்களும் இல்லாதல் மெய்யுணர்வின் பயனாகலின் இவையிரண்டு பாட்டும் இவ்வதிகாரத்தவாயின. இவ்வாற்றானே மெய்யுணர்ந்தார்க்கு நிற்பன எடுத்தவுடம்பும் அது கொண்ட வினைப்பயன்களுமேயென்பது பெற்றாம்” என இக்குறளுக்கு விளக்கங்கூறுவர் பரிமேலழகர். மெய்யுணர்ந்தாராகிய சிவஞானிகளுக்கு ஒதுகன்மும் இல்லை என்பது,

“என்ற வினையுடலோ டேகும் இடையேறும் வினை

தோன்றில் அருளே சுடும்” (திருவருட்பயன் 98)

எனவரும் சித்தாந்த நூலால் நன்கு தெளியப்படும்.

உயிர்களால் முன்னர் ஈட்டப்பட்டு நுகர்ச்சிக்கு எடுத்துக் கொள்ளப்படாது சேர்ந்துள்ள பழவினையைச் சஞ்சிதம் எனவும், அவற்றுள் இப்பிறப்பில் நுகர்தற்கென உடம்பினால் முகந்து கொள்ளப்பட்ட நுகர்வினையைப் பிராரர்த்தம் எனவும், பிராரர்த்தம் நுகரும் பொழுதே அந் நுகர்ச்சியினுடன் தோன்றும் விருப்பு வெறுப்புக் காரணமாகப் புதியனவாய் வந்து ஏறும் வினையினை  ஆகாமியம் எனவும் வழங்குதல் சைவசித்தாந்த மரபு. சஞ்சிதவினை ஆசிரியன் செய்யும் தீக்கையினாற் கெட்டொழியும், ஆகாமியம் சிவஞானத்தினால் வெந்தொழியும் என்பர். இப்பிறவியில் எடுத்தவுடம்பில் நுகர்தற்குரிய பிராரர்த்தமும் அது காரணமாக வந்தேறும் ஆகாமியமும் அற்றொழியப் பிறவாநிலை வந்தெய்தும். எனவே இனிவரும் பிறவிக்குரியனவாகிய சஞ்சிதம் கெட்டொழியும் என்பது கூறாமலேயே விளங்கும். இம்மூவகை வினைக்கும் சார்புணர்ந்து சார்புகெட வொழுகும் மெய்ஞ்ஞானிகளைச் சாராமாட்டா என்பார் ‘சார்தரும் நோய் சார்தரா எனவும் 'நாமங்கெடக்கெடும் நோய் எனவும் கூறினார் திருவள்ளுவர்.

யோகஞானங்களையுடையராய் முன்னும் பின்னு முள்ள வினைத்தொடர்பு அறுத்தார்க்கு அவர்தம் உடம்பும் அதுமுகந்து கொண்ட வினைப்பயன்களும் எஞ்சி நின்றமையின் வாதனை பற்றி ஒரோவழி முன்னர்த் துறக்கப்பட்ட புலன்கள் மேற்பழைய பயிற்சி வயத்தால் நினைவு செல்லுதல் உண்டு. அந்நினைவும் மருள் (அவிச்சை) எனப்படும் மாணா பிறப்பிற்கு வித்தாகும். அம்மயக்கத்தினை இடைவிடாத மெய்ப்பொருளுணர்வினால் அறுத்தல் வேண்டும் என அறிவுறுத்துவது அவாவறுத்தல் என்னும் அதிகாரமாகும். எல்லாவுயிர்க்கும் பிறப்பிற்குக் காரணம் அவாவே என்பதனையும், அத்தகைய அவா அறவே பிறவாமைதானே வரும் என்பதனையும் விளங்க அறிவுறுத்துவது,

"அவாவென்ட எல்லாவுயிர்க்கும் எஞ்ஞான்றும் தவா,அப்பிறப்பினும் வித்து" (திருக். 361)

எனவரும் திருக்குறளாகும்.

உடம்பு நீங்கிப் போங்காலத்து அடுத்தவினையும் அது காட்டுங்கதி நிமித்தங்களும் அக்கதிக்கண் அவாவும் உயிரின்கண் முறையே வந்து உதிப்ப, அறிவை மோகம் மறைப்ப, அவ்வுயிரை அவா அக்கதிக்கண் கொண்டு செல்லும் ஆகலான் பிறப்பினும் அவா என்றார். தேவகதி,  மானுடகதி, விலங்குகதி, நரககதி என்னும் பிறப்வுவகையான் உளதாய உயிர் வேறுபாட்டினும் அவை தம் தன்மைதிரியும் வளர்காலம் தேய்காலம் எனும் காலவேறுபாட்டினும் அவா பிறவிக்கு வித்தாதல் வேறுபடாமையின் எல்லாவுயிர்க்கும் எஞ்ஞான்றும் என்றார். பிறவிக்கு வித்தாவது அவா என்னும் இக்கொள்கை எல்லாச் சமயங்கட்கும் ஒத்தலால் என்ப எனப் பொதுப்படக் கூறினார். இதனால் அவா பிறப்பிற்கு வித்தாதல் கூறப்பட்டது. பிறப்புத்துன்பமாதல் அறிந்தவர் ஒரு பொருளை வேண்டுவராயின் பிறவாமையை வேண்டிப் பெறுதல் வேண்டும். அங்ங்ணம் வேண்டப்பெறும் பிறவாமை தானும் ஒருபொருளையும் அவாவாமையை வேண்ட அவர்க்குத் தானேயுண்டாகும் என்பார்,

“வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது

வேண்டாமை வேண்ட வரும்” (திருக். 362)

என்றார் திருவள்ளுவர். தோற்றமில் காலமாகத் தாம் பிறப்பு பிணி மூப்பு இறப்புக்களால் துன்பமுற்று வருகின்றமையை யுணர்ந்தவர்க்கு ஆசை இன்பத்தின் கண்ணே யாகனான் 'பிறவாமையை வேண்டும்’ என்றார். இவ்வுலகிற்குச் சிற்றின்பங்கருதி ஒரு பொருளை அவாவின் அவாவானது பிறப்பினும் வித்தாய்ப் பின்பும் முடிவில்லாத துன்பமே விளைத்தலின் பிறவாமையாகிய அப்பேறு ஒன்றையும் வேண்டாமையாகிய அவாவின்மையை வேண்டத் தானே வரும் என்றார். இத்திருக்குறட்பொருளைப் பகுத்து விளக்கும் முறையில் அமைந்தது,

“வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை என்மையால் வேண்டின தொன்றுமே வேண்டுவது வேண்டினது வேண்டாமை வேண்டவரும் என்றமையால் வேண்டிடு வேண்டாமை வேண்டுமவன்பால்”

(திருக்களிற்றுப்படியார் 40)

எனத் திருக்கடவூர் உய்யவந்த தேவநாயனார் அருளிய திருக்களிற்றுப்படியார் பாடலாகும்.

“வேண்டுவார் வேண்டுவதே பீந்தருளும் இறைவன் பால் ஒன்றை விரும்பி வேண்டுங்கால் பிறவாமையாகிய பேறொன்றுமே வேண்டத்தகுவதாகும் எனத் திருவள்ளுவ நாயனார் அறிவுறுத்தினமையால் பிறவாமையாகிய அஃதொன்றுமே வேண்டிப் பெறுதற்குரியதாகும். பிறவாமையாகிய அப்பேறுதானும் உலகப்பொருள்களில் வைத்த அவாவையறுத்தலாகிய வேண்டாமையினை வேண்டத்தானேவரும் என்ற திருவள்ளுவர் வாய்மொழி யினால் யாவரும் விரும்பி வேண்டத்தக்க முதல்வன்பால் பிறவாமைக்குக் காரணமாகிய அவாவறுத்தல் ஒன்றுமே விரும்பிவேண்டத்தகுவதாகும்” என்பது மேற்காட்டிய பாடலின் பொருளாகும்.

அவாவின்மையே உயிர்களைத்தோற்றமில் காலமாகப் பற்றியுள்ள மலமாசினை நீக்கித் தூய்மையுடைய துறவறமாகிய வீட்டு நெறியினை நல்கி ஆன்மாவைத்துய்மை செய்வதாதலின் இத்தைைகய அவா வறுத்தலாகிய மனத்துய்மை வாய்மைப்பொருளாகிய இறைவனை இடைவிடாது சிந்தித்தலாலேயே பெறுதற்குரியதாகும். இவ்வுண்மையினை,

'தூஉய்மை யென்பதவாவின்மை மற்றது

வாஅய்மை வேண்டவரும்” (திருக். 364)

எனவரும் திருக்குறளில் திருவள்ளுவர் குறிப்பிட்டுள்ளார். உயிர் அநாதியே தன்னைப் பற்றியுள்ள மலமாகிய மாசு நீங்குதலே வீடாதலின் அவ்வீடுபேற்றினைத் 'து உய்மை’ என்றும் திரிபின்றியுள்ள மெய்ப்பொருளாகிய இறைவனை 'வாஅய்மை என்றும் கூறினார் திருவள்ளுவர். து உய்மை யாகிய வீடுபேறு அவாவின் மைக் காரணமாகப் பெறுதற்குரியது என்பார் 'தூஉய்மை’ என்பது அவாவின்மை எனக் காரணத்தைக் காரியமாக உபசரித்தார். வாய்மை என்றது மெய்ப்பொருளாகிய இறைவனை வேண்டுதல் - இடைவிடாது நினைத்துப் போற்றுதல், இதனால் அவாவறுத்தல் என்பது வீடடைதற்கு வழிமுறையானன்றி நேரே ஏதுவென்பதும், அத்தகைய அவாவறுத்தல் தானும் இறைவனை இடைவிடாது நினைந்து போற்றுதல் வாயிலாகவே ஒருவர்க்குக் கைகூடும் என்பதும் இத் திருக்குறளில் வலியுறுத்தப் பெற்றுள்ளமை கூர்ந்துணரத் தகுவதாகும்.

அவாவினை முற்ற அறுத்தவனுக்குச் செய்தன வெல்லாம் தவமாம். அவா இல்லாதார்க்கு வரக்கடவதொரு துன்பமுமில்லை. அவாவே துன்பத்திற்குக் காரணமாகும். அவா என்று சொல்லப்படுகின்ற மிக்க துன்பம் ஒருவர்க்குக் கெடுமாயின் அவர் வீடுபெற்ற பின்னர் என்பதின்றி இவ்வுலகத்து உடம்பொடு கூடிநின்ற நிலையிலும் இன்பம் இடையறாது என்பார்,

“இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னும் துன்பத்துட்டுன்பங்கெடின்” (திருக். 369)

என்றார் திருவள்ளுவர். "அவா என்னும் துன்பத்துள் துன்பம் கெடின் ஈண்டும் இன்பம் இடையறாது என இயைத்துப் பொருள் கொள்வர் பரிமேலழகர், துன்பத்துள் துன்பமாவது வாழ்க்கையில் நேரும் பிறதுன்பங்களெல்லாம் இன்பம் என்று எண்ணுமாறு வரும் மிக்க துன்பம். ஈண்டு - இவ்வுலகத்து உடம்பொடு கூடியுள்ள நிலையிலும், அவாவறுத்தார்க்கு மனமானது உலகப்பொருள் மேற் சிறிதும் பற்றின்மையால் தடுமாற்றமின்றி நிறைவு பெற்று நிற்றலால் இடையறாத இன்ப நிலையினையுடையதாயிற்று என்பார். இன்பம் இடையறாது’ என்றார். அவாவறுத்தார் இவ்வுலகில் உடம்பொடு கூடிவாழும் நிலையிலேயே மெய்ப் பொருளாகும் இறையொடு கலந்து வீடுபேற்றின்பத்தினை நுகர்வர் என்னும் சைவசித்தாந்தக் கொள்கைக்கு இத்திருக்குறள் அரண்ச்ெய்தல் அறியத்தகுவதாகும்.

நம்மிடத்து உள்ளது போதும் எனும் மன நிறைவினைத் தராத இயல்பினதாகிய அவாவினை ஒருவர் அறவே நீக்குவராயின் அத்தகைய நீத்தல், அவர்க்கு அப்பொழுதே எக்காலத்தும் திரிபின்றி ஒரு நிலையராம் வீடுபேற்றியல்பினைக் கொடுக்கும் என்பார்,

"ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே

பேரா இயற்கை தரும்” (திருக். 370)__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

 "ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே

பேரா இயற்கை தரும்” (திருக். 370)                 என்றார் தெய்வப்புலவர். ஆராமையாவது நமக்கு உள்ளது போதும் என மனம் நிரம்பாமை. தாமேயன்றித் தம்பயனும் நிலையாமை வேண்டாதனவாய பொருள்களை வேண்டி மேன்மேல் வளர்தல். பெற்றது போதும் என மனம் நிரம்பாது பெறாத பொருளின் மேற் பற்றுவைப்பதே அவா எனப்படும் என அதன் இயல்பினைப் புலப்படுத்தும் முறையில் அமைந்தது, 'ஆராவியற்கை அவா என்னும் தொடராகும். "பேரா வியற்கை என்றது என்றும் மாறாது அழியாவின்ப நிலையினதாகிய வீடு பேற்றினைக் களிப்புக்கவற்சிகளும் பிறப்புப் பினிமூப்பு இறப்புக்களும் முதலாயின இன்றி உயிர் நிரதிசய (உயர்வறவுயர்ந்த இன்பத்ததாய் நிற்றலின், வீட்டினைப் பேராவியற்கை’ என்றும், அஃது அவா நீத்தவழிப் பெறுதல் ஒருதலை (உறுதி)யாதலின் அந்நிலையே தரும்” என்றும் கூறினார்.

'நன்றாய் ஞானங்கடந்து போய்நல்லிந்திரிய மெல்லா மீர்த் தொன்றாய்க்கிடந்த அரும் பெரும் பாழ் உலப்பிலதனை

யுணர்ந்துணர்ந்து சென்றாங்கின்ப துன்பங்கள் செற்றுக் களைந்து

பசையற்றால் அன்றே அப்போதே விடும் அதுவே வீடு வீடாமே”

(திருவாய்மொழி 78.5)

என்பதும் இக்கருத்தேபற்றி வந்தது. இந்நிலைமை யுடையவனை வடநூலார் சீவன் முத்தன் என்ப எனப் பரிமேலழகர் தரும் விளக்கம் தெய்வத் திருவருளால் வீடு பேற்றின்பம் உளதாம் என்னும் கடவுட் கொள்கையுடைய சமயங்கட்கெல்லாம் ஏற்புடையதாகும். இவ்வாறு உடம்பொடு கூடியுள்ள நிலையிலேயே அவா வறுத்து வீட்டின்ப நிலையெய்திய சீவன் முத்தர்களைப் பராவு.சீவர் (தேவாரம் 3.67.6) எனவும் நடமாடுங்கோயில் நம்பர்’ (திருமந்திரம் 1857) எனவும் போற்றுதல் சைவசித்தாந்தத் தமிழ் மரபாகும்.

இவ்வுலகில் உடம்புடன் கூடிவாழும் விழிப்பு நிலையிலேயே உலகப்பொருள்களின் அவாவை முற்றக் களைந்து உலக வாழ்க்கையில் சிறிதும் தோய்வின்றிச் செம்பொருளாய சிவத்துடன் கூடி நின்று தன் செயலறச் சிவமே தாமாகத் திகழும் திருவருள் நலம் வாய்க்கப்பெற்ற சீவன் முத்தர்களை,

‘சாக்கிரத்தே அதீதத்தைப் புரிந்தவர்கள் உலகிற்

சருவசங்க நிவிர்த்தி வந்த தபோதனர்கள் இவர்கள் பாக்கியத்தைப் பகள்வது என்இம்மையிலே உயிரின் பற்றறுத்துப் பரத்தையடை பராவுசிவரன்றோ"

எனப் போற்றுவர் அருணந்தி சிவாசாரியார். பராவுதல் சஞ்சரித்தல் மக்கள் வடிவினை மேற்கொண்டு உலகிற் சஞ்சரிக்கும் சிவ பரம் பொருள்களாகத் திகழ்பவர் என்னும் கருத்தில் சிவஞானிகளுக்கு வழங்கும் பெயர் பராவுசிவர், நடமாடுங்கோயில் நம்பர் என்பனவாகும்.

இம்மை மறுமை வீடு என்னும் மும்மைப் பயன் களையும் ஒருங்கே பயக்கும் பொருளும் இன்பமும் கூறத்தொடங்கி அவற்றிற்குக் காரணமாகிய ஊழின் வலிமையினை 'ஊழ் என்னும் அதிகாரத்திற் கூறியுள்ளார். ஊழைப்பற்றித் திருவள்ளுவர் கூறியுள்ளவற்றைத் தொகுத்து நோக்குவோமாயின் சைவசித்தாந்தக் கொள்கையின் வேர்கள் இவ்வதிகாரத்திற் கால்கொண்டுள்ளமை இனிது புலனாகும்.

உயிர்கள் செய்த நன்றுந்தீதுமாகிய இருவினைப் பயன்கள் அவ்வினை செய்த உயிர்களையே சென்றடையு மாறு அமைந்த முறைமையே ஊழ் எனப்படும். பால்முறை, உண்மை, தெய்வம், நியதி, விதி என்பன ஊழினைக்குறித்து வழங்கும் மறுபெயர்களாகும். அறத்தொடு நெருங்கிய தொடர்புடையதாய்ப் பொருள் இன்பங்கட்கு ஏதுவாதலின் அறத்துப்பாலின் இறுதிக்கண் ஊழைப் பற்றிய அதிகாரம் வைக்கப்பட்டது.

உலக வாழ்க்கையில் ஒருசாரார் இடைவிடாமுயற்சி யுடையவராகவும் மற்றொரு சாரார் சோம்பர்களாகவும் இருக்கக் காண்கிறோம். முயற்சி ஆக்கத்திற்கும் சோம்பல் (மடி) அழிவிற்கும் காரணம் என்பது யாவரும் அறிந்த உண்மை. மக்கள்பால் அசைவின்மை - தளரா முயற்சி தோன்றுதற்கும் அவர்கள்பால் மடி - சோம்பல் குடி கொண்டிருத்தற்கும் ஊழ் காரணம் என்பதும் முயற்சிக்குக் காரணமாகிய ஊழ் ஆகூழ் எனவும் சோம்பற்குக் காரணமாக ஊழ் போகூழ் எனவும் ஊழ் இருவகைப்படும் என்பதும்,

"ஆகூழாற் றோன்றும் அசைவின்மை கைப்பொருள்

போகூழாற் றோன்றும் மடி’ (திருக். 371)

எனவரும் இவ்வதிகாரத்து முதற்குறளால் விளக்கப்பெற்றன. ஆகூழ் ஆகுஊழ் - பொருளும் இன்பமும் அதற்குக் காரணமாகிய ஊழ், பொருள் இன்பம் ஆகியவற்றின் ஆக்க அழிவுகட்குத் துணைக்காரணமாகிய தளராமுயற்சியும் சோம்பலையும் ஒருவர்க்கு ஊழ் காரணமாகவே அமைவன என்பது இதனால் வலியுறுத்தப்பட்டது. மக்களது வாழ்விலே புறத்தே வெளிப்படும் முயற்சி சோம்பல் என்பனவற்றுக்கேயன்றி அகத்தே தோன்றும் இயற்கை யறிவின் தொழிற்பாட்டிற்கும் அவ்வறிவு விரிவடையாத நிலையாகிய பேதைமைக்கும் ஊழே காரணமாவது என்பார்,

"பேதைப்படுக்கும் இழஆழ் அறிவகற்றும்

ஆகலூழ் உற்றக் கடை” (திருக். 372)

என்றார் திருவள்ளுவர். ஒருவர்க்கு எல்லா அறிவும் உளவாயினும் கைப்பொருளிழக்கும் இழஆழ்வந்தவிடத்து அவ்வூழ் அவரது அறிவைப் பேதைமைக்கு உட்படுத்தும். ஆகலூழ் வந்தவிடத்து அவரது அறிவு சுருங்கிய நிலையின தாயினும் அவ்வறிவை விரிவடையச் செய்யும் என்பது இதன் பொருளாகும். ஒருவர்க்கு இயற்கையானாய அறிவினை வேறுபடுத்தும் வன்மையுடையது ஊழென்பது இதனால் வலியுறுத்தப்பட்டது. ஒருவர் நுண்ணிய பொருள்களை யுணர்த்தும் நூல்கள் பல கற்றாராயினும் பேதைமைப் படுத்தும் ஊழ்வந்துற்றவிடத்து அவர்க்குத் தாம் முன்கற்ற கல்வியறிவு வெளிப்படாது பின்னும் தம் ஊழினாலாகிய பேதைமையறிவே வெளிப்பட்டுத் தோன்றும் என்பார்,

"நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்

உண்மை யறிவே மிகும்” (திருக். 373)                          என்றார். இயற்கையறிவையேயன்றிச் செயற்கையானாகிய கல்வியறிவையுங் கீழ்ப்படுத்து மேற்படுந் தன்மையது ஊழ் என்பது இதனால் வலியுறுத்தப்பட்டது.

உலகத்து ஊழினாலாகியஇயற்கை இரண்டுபடும். ஆதலாற் செல்வமுடையராதற்குக் காரணமான ஊழ் வேறு, அறிவுடையராதற் காரணமான ஊழ் வேறு என ஊழினை வகைப்படுத்துரைப்பது,

&« இருவேறுலகத் தியற்கை திருவேறு

தெள்ளியராதலும் வேறு” (திருக். 374)

எனவரும் திருக்குறளாகும். செல்வத்தினை ஈட்டுதலும் அதனைக் காத்தலும் அறிவுடையார்க்கல்லது இயலா தல்லவா? அங்ங்ணமாயினும் அறிவுடையார் வறியராகவும் அறிவிலார் செல்வராகவும் உலகியலிற் காணப்படுதலால் அறிவுடையராதற்குக் காரணமான ஊழ் செல்வ முடைமைக்குக் காரணமாகாமையும் செல்வமுடைய ராதற்குக் காரணமான ஊழ் அறிவுடைமைக்குக் காரண மாகாமையும் நன்கு தெளியப்படும் என்பார் திருவேறு தெள்ளியராதலும் வேறு என்றார். எனவே உலகிற் பொருளிட்டுதற்கு அறிவாகிய துைைணக்காரணமும் வேண்டப்படாது ஊழே காரணமாம் என்பது வலியுறுத்தப் التي ساسافا

உலகிற் பொருளிட்டுதற்கு நல்ல துனைக் காரணங்களாகக் காலம், இடம், கருவி, தொழில் முதலாயின என்ப்தும் பலரும் அறிந்த உண்மையாகும். இவையெல்லாம் நல்லனவாய்த் திருந்தும் மூலகாரனமாயுள்ள ஊழ் துணை செய்யாது இழவூழாயவழி நல்லவை யெல்லாம் தீயவாய் முடியும். மேற்குறித்த காலம், இடம், கருவி, தொழில் முதலிய துணைக்காரணங்கள் தியனவாயினும் ஆகலூழ் உற்றவழித் தீயனவும் நல்லனவாய் முடியும் என்பார்.

“நல்லவை யெல்லாஅந் தீயவாம் தீயவும்

நல்லவாம் செல்வஞ் செயற்கு” (திருக். 375)

என்றார். ஊழால் என்பது அதிகாரத்தால் வந்து இயைந்தது. அழிக்கும் ஊழ் உற்றவழிக்காலம் இடம் முதலியன நல்லனவாயினும் எடுத்தசெயல் பயன் தராது அழியும். ஆக்கும் ஊழ் உற்றவழி காலம் முதலிய துணைக்காரணங்கள் தீயன வாயினும் ஆக்கம் உண்டாகும். ஆகவே காலம் முதலிய துணைக் காரணங்களையும் வேறுபடுத்தும் வன்மை ஊழுக்கு உண்டென்பது இதனாற் பெறப்படும்.

ஊழ்வயத்தால் தமக்குத் தொடர்பில்லாத பொருள்களை ஒருவர் எத்துணை வருந்திக் காத்தலும் அப்பொருள்கள் அவரிடத்துநில்லாது ஒழிந்து போகும். ஊழ் வயத்தால் தமக்கேயுரியவாய பொருள்களைக்காவாது புறத்தே கொண்டு போய்ச் சொரிந்தாலும் அவை அவர்களை விட்டு நீங்கமாட்டா. இவ்வுண்மை,

“பரியிலும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்

சொரியினும் போகாதம” (திருக். 375)

என்ற குறளில் வலியுறுத்தப்பெற்றது. பரிதல் வருந்திக் காத்தல். பால் அல்ல ஊழால் தம்மொடு தொடர்பில்லாதன. தம - ஊழால் தம் நுகர்ச்சிக்கு உரியவாய பொருள்கள் உய்த்துச்சொரிதல் வீட்டிற் பாதுகாப்பாக வையாது புறத்தே கொண்டு போய்க்கொட்டுதல். மக்களிடத்தே பொருள்கள் நிலைத்துத் தங்குதற்கண் தங்காது அழிந்து போவதற்கும் முறையே அவற்றைக் காத்தலும் காவாமையும் காரணமாத லின்றி அவரவர்தம் ஊழ்வினையே காரணமாம் என்பது இதனால் உணர்த்தப்பட்டது.

இவ்வாறு பொருளின் ஆக்கத்திற்கும் அழிவிற்கும் ஊழ்தானே மூலகாரனமாதலை விளக்கிய திருவள்ளுவர் பொருள்களை ஈட்டுதற்கேயன்றி அவற்றை நுகர் தற்கும் ஊழின் துணை இன்றியமையாதது என்பதனை,

"வகுத்தா ன் வகுத்த வகையல்லாற் கோடி

தொகுத்தார்க்குந்துய்த்த லரிது’ (திருக். 377)

எனவரும் குறளில் தெளிவாகக் குறித்துள்ளார். “இறைவன் ஒவ்வோருயிர்க்கும் வகுத்தருளிய ஊழ்முறைமையானன்றிக் கோடிக் கணக்கான நுகர்பொருள்களை முயன்று தொகுத்தார்க்கும் அவற்றை நுகர்தல் என்பது இயலாது” என்பது இதன் பொருளாகும். ஒருயிர் செய்த வினையின் பயன் பிறிதோறுயிரின் கட்செல்லாமல் (வினைசெய்த) அவ்வுயிர்களே வகுத்து நுகர்வித்தல் இறைவன் ஆணை யாதலின் அங்ங்ணம் வகுத்தளிக்கும் இறைவனை வகுத்தான்' என்ற பெயராற் குறிப்பிட்டார் திருவள்ளுவர். ஒருவரது வினையின் பயனாகிய ஊழ்வினை தானே யுருவெடுத்து வினைசெய்தாரைப் பற்றி நுகர்விக்கும் உணர்வும் ஆற்றலும் உடையதன்றென்றும் உலகினையும் உலகத்து எல்லாப் பொருள்களையும் ஒழுங்குபெற வகுத்து இயக்கியருளும் இறைவன் உயிர்கள் செய்த இருவினை கட்கேற்ப வகுத்த முறைமைதானே ஊழ் எனப்படு மென்றும் தெளிவுபடுத்தக் கருதிய திருவள்ளுவர் "வகுத்தான் வகுத்த வகை’ என்ற தொடரால் ஊழ்வினையாவது இதுவென விளக்கியுள்ளார். இத்தொடரில் வகுத்தான் என்னுஞ்சொல் இறைவனைக் குறிப்பதாகும். வகுத்தவகை என்றது இறைவனால் வகுக்கப்பட்ட நியதியாகிய ஊழினைக் குறிப்பதாகும். பகுத்தது பால் என வழங்கினாற்போல வகுத்தது வகை யென்றாயிற்று. தெய்வத்தின் இயல்பினைப் புலப்படுத்தக் கருதிய தொல்காப்பியனார் அதனைப் ‘பால்வரை தெய்வம்' என்ற தொடராற் சுட்டினமையும் தொல்காப்பியனார் கருத்துப்படி ஊழின் இயல்பினை விளக்கக்கருதிய திருவள்ளுவர் அதனை வகுத்தான் வகுத்தவகை' என்ற தொடராற் சுட்டினமையும் தெய்வத்தைக் குறித்தும் ஊழினைக் குறித்தும் முறையே தொல்காப்பியனாரும் திருவள்ளுவனாரும் கூறிய கருத்துக்கள் முன்னர் விளக்கப்பெற்றன.

வகுத்தான் வகுத்த வகை எனவரும் இத்தொடர்ப் பொருளைக் கூர்ந்து நோக்கின், இருவினைகளைச் செய்யும் உயிர்களும் அவ்வுயிர்களாற்செய்யப்படும் வினைகளும் அவ்வினைப் பயன்களாக உயிர்கள் நுகர்தற்குரிய இன்ப துன்பங்களாகிய நுகர்ச்சிகளும், இருவினைப்பயன்களை வினைசெய்த உயிர்களே பிறழாது நுகரும்படி நியமித்து நுகர்விக்கும் முதல்வனாகிய இறைவனும் என நான்கு  


பொருள்கள் மெய்ந்நூற் கொள்கையினாற் குறிக்கொண்டு கருதத் தக்கனவாம் என்பது நன்கு புலனாகும். மேற்குறித்த நான்கு பொருள்களையும் சிவநெறியாளர்கள்தம் சமயத்துக் குரிய சிறப்புடைப் பொருள்களாகக் கொண்டுள்ளனர். இப்பொருள் நான் கினையும் சைவ சமயத்துக்கேயுரிய சிறப்புடையனவாகச் சாக்கிய நாயனார் தெளிந்துணர்ந்த திறத்தினை,

"செய்வினையும் செய்வானும் அதன்பயனும் சேர்ப்பானும்

மெய் வகையால் நான்காகும் விதித்தபொருள்

எனக்கொண்டே இவ்வியல்பு சைவ நெறியல்லவற்றுக் கில்லையென உய்வகையாற் பொருள்சிவ மென்றருளாலே

யுணர்ந்திருந்தார்” (பெரிய, சாக்கிய 5)

எனச் சேக்கிழார் நாயனார் வகுத்து அருளிச் செய்துள்ளமையும் அவர் அருளியவண்ணமே சைவசமய சந்தான ஆசிரியருள் ஒருவராகிய உமாபதி சிவனாரும் இந்தப் பொருள்களையும்,

"செய்வானுஞ் செய்வினையும் சேர்பயனும் சேர்ப்பானும் உய்வான் உளனென்றுணர்” (திருவருட்பயன் 5)

எனச் சைவசமயத்தத்துவ நுண்பாருள்களாக எடுத் தாண்டுள்ளமையும் திருக்குறள் கூறும் தத்துவ நெறியினை அடிப்படையாகக் கொண்டது சைவசித்தாந்தத் தத்துவ நெறி என்னும் உண்மையை நன்கு தெளிவுபடுத்துதல் காணலாம்.

உயிர்கள் முன்செய்த வினையின் பயனாகிய ஊழினால் உறுதற்பாலனவாகிய இன்பத் துன்பநுகர்ச்சிகளை ஊழ்ஊட்டாது கழியுமானால் உலகில் வறுமை காரணமாக நுகர் தற்குரிய பொருள்கள் இல்லாதவர்கள் இவ்வுலக வாழ்வைத் துறக்குங் கருத்துடையராவர் என்பார்,

"துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பால

ஊட்டா கழியுமெனின்’ (திருக். 378)            என்றார் திருவள்ளுவர். இவ்வுலகத்து நுகர்பொருள் வாய்க்கப்பெறாத வறியோர்களும் குடும்பத் தொடர்பினை மேற்கொண்டு பண்டை நல்வினைப் பயனால் உண்டுடுத்து இனிது வாழக்காண்கின்றோமாதலின் இன்பதுன்ப நுகர்ச்சிக்கு நேரே காரணமாவது அவர்தம் முன்வினைப் பயனாகிய ஊழேயன்றிச் செல்வ வறுமைகள் காரணமல்ல என்பது இக்குறளால் வலியுறுத்தப்பட்டது.

மக்கள் தாம் முன்னர்ச் செய்த தீவினையும் நல்வினையும் காரணமாகவே நல்வினைப் பயனாகிய இன்ப நுகர்ச்சியும் தீவினைப் பயனாகிய துன்பநுகர்ச்சியும் ஊழால் ஊட்டப்படுகின்றன என்னும் உண்மையையுணரப் பெறுவீர்களாயின் 'தீதும் நன்றும் பிறர்தரவாரா என்னும் தெளிவுடையராய்த் தம்மையடைந்த இருவினைப் பயன்க ளாகிய இன்பதுன்பங்களை விருப்பு வெறுப்பின்றி ஒப்ப நுகரும் உணர்வுடையராதலே மெய்யுணர்வுடையார் இயல்பாதல் வேண்டும். ஒன்றில் விருப்பும் ஒன்றில் வெறுப்புமாதலின்றிப் புண்ணியபாவம் இரண்டிலும் அவற்றின் பயன்களிலும் ஒப்ப உவர்ப்பு நிகழ்ந்து அவ்வினைத்தொடர்பினை விடுவோனது அறிவின்கண் அவ்விருவினையும் அவ்வாறு ஒப்பநிகழ்தலே இருவினை யொப்பு என்பார் சைவசித்தாந்திகள். மெய்த்திரு வந்துற்றாலும் வெந்துயர் வந்துற்றாலும் ஒத்திருக்கும் உள்ளத்துரனுடைமையாகிய இவ்விருவினையொப்பு மெய்யுணர்வுடையார்க்கு இன்றியமையாதது என வற்புறுத்துவது,

“நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்

அல்லற் படுவதெவன்” (திருக். 379)

எனவரும் திருக்குறளாகும். தாம் செய்த நல்வினை முதிர்ந்து இன்பமாகிய பயனைத் தரும்பொழுது அதனை இனிது எனவிரும்பி நுகர்பவர்கள், தாம் செய்த தீவினை முதிர்ந்து துன்பமாகிய பயனைத்தரும்பொழுது அதனையும் அவ்வாறு நுகர முற்படாது வெறுத்து அதனை அகற்ற முயன்று அல்லற்படுவது எற்றுக்கு? என்பது இதன் பொருளாகும்.__________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

நன்று ஆங்கால் நல்லவாக்காணுதல் போலவே அன்று ஆங்காலும் அல்லற்படாது அனுபவித்தல் வேண்டும் என்பது கருத்து. காணுதல் - அனுபவித்தல். மக்கள் தாமே முன்செய்துகொண்டன இருவினையாதலாலும் அவை தத்தம் பயன்களாகிய இன்பதுன்பங்களை ஊட்டாது கழியமாட்டா ஆதலாலும், இருவினைப்பயன்களாகிய இன்பம் துன்பம் என்னும் இரண்டுமே வினைசெய்த மக்களால் மனம் பொருந்தி நுகரத்தக்கனவாகும். அங்ங்னமாகவும் அவற்றுள் நல்லதன் பயனாகிய இன்பத்தை மட்டும் உளம் இயைந்து அனுபவித்துத் தீயதன் பயனாகிய துன்பத்திற்கு உளம்பொருந்தி நுகராது வெறுத்து வருந்துதல் அறிவுடையார் செய்கையன்றாம் என ஆசிரியர் இத் திருக்குறளால் அறிவுறுத்தியுள்ளமை கானலாம். இறைவனது திருவருட்பதிவால் இருள் மலந்தேயும் நினையினராகிய மெய்யுணர்வுடையார்க்குரியதாகச் சைவசித்தாந்தம் கூறும் இருவில்னையொப்பின் இயல்பு இத்திருக்குறளில் இடம் பெற்றுள்ளமை நுணுகி நோக்கற்பாலதாகும்.

உலகத்துவாழும் உயிர்கள் நுகர் தற்குரிய இன்ப துன்பங்களாகிய நுகர்ச்சிகள் எல்லாம் அவ்வவ்வுயிர்கள் செய்த இருவினைகளின் மேலிட்டு அவற்றின் பயனாய் ஊழ்வழியாக வருதலுடைமையின் மன்னுயிர்கள் செய்யும் பல்வேறுவகை முயற்சியினைவிட ஊழே மிகவும் வலிமை வாய்ந்தது என்பதனை அறிவுறுத்துவார்,

“ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று

குழினுந் தான்முந்துறும்” (திருக். 380)

என்றார் திருவள்ளுவர். ஊழாகிய தன்னை விலக்குதற் பொருட்டுத் தனக்கு மறுதலையாவதோர் உபாயத்தை ஆராய்ந்தாலும் அச்சூழ்ச்சியின் வழியாகவோ அன்றிப் பிறிதொன்றன் வழியாகவோ முற்பட்டு நிற்பது ஊழ்வினை யாகும். அதனால் ஊழ்போல் வலிமையுடையனயாவை என ஊழின் வன்மையினை வற்புறுத்திக்கூறும் நிலையில் அமைந்தது இத்திருக்குறளாகும். 

வேண்டுதல் வேண்டாமையிலானாகிய கடவுளைக் குறித்து வழங்கும் 'இறை என்னும் சொல் நல்லார்க்கும். பொல்லார்க்கும் நடுநின்று நீதிவழங்கும் இறைவனது தன்மையாகிய நடுவுநிலைமை என்ற பொருளிலும் ஆளப்பெறுதல் உண்டு. இந்நுட்பம்,

"ஓர்ந்துகண்ணோடா திறைபுரிந்தியார்மாட்டும்

தேர்ந்துசெய்வஃதே முறை” (திருக். 544)

எனவரும் திருக்குறளாலும், “நடுவுநிற்றல் இறைக்கு இயல்பாதலின் அதனை 'இறை என்றும்”, எனவரும் பரிமேலழகர் உரைவிளக்கத்தாலும் இனிது புலனாம்.

உயிர்கள் இயல்பாகவே அறிவுடையனவாயினும் தோற்றமில் காலமாகத் தம்மைப் பற்றியுள்ள பாசப் பிணிப்பினால் மறைக்கப்பட்டு அறியாமையில் அகப் பட்டுள்ளன என்பதும் தோண்டத்தோண்ட மணற்கேணி நீர் ஊறுமாறு போன்று மக்கள் இடைவிடாது கல்வி பயிலுந்தோறும் அவர்தம் அறிவு மேம்பட்டு விளங்கும் எனவும் ஒரு பிறப்பிற் கற்ற கல்வியறிவு அவர் பெறும் எழுபிறப்புக்களிலும் தொடரும் எனவும் மக்கள் ஒவ்வொரு பொருளையும் பற்றி அறியுந்தோறும் அதற்கு முன் அப்பெர்ருளைப் பற்றியறியாதிருந்தமை அவர்க்குப் புலப்பட்டு மேலும் மேலும் பொருள்ையறிதற்கு முற்படும் அறிவுநாட்டம் தோன்றி அவர்கட்கு இன்பம் தரும் என்பதும் அறனறிந்து மூத்த அறிவுடையாராகிய சான்றோர்கள் பிறர் உற்ற நோய்களை நீக்கி அந்நோய்கள் மீண்டும் வந்தடையாதவாறு தடுத்து நிறுத்தும் தகைமையுடையார் என்பதும் அத்தகைய சான்றோரினத்திற் சார்ந்தால் மக்கள் உயர்வு பெறலாம் என்பதும்,

"தொட்டனைத் துறும் மணற்கேணி மாந்தர்க்குக்

கற்றனைத் தூறும் அறிவு” (திருக். 396) "ஒருமைக்கண் தான்கற்ற கல்வி யொருவற்

கெழுமையும் ஏமாப்புடைத்து” (திருக். 398)

'அறிதோ றறியாமை கண்டற்றால்’ (திருக்.11.10)

'அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை

திறனறிந்து தேர்ந்து கொளல்” (திருக், 441)

"உற்றநோய்நீக்கியுறாஅமை முற்காக்கும்

பெற்றியார்ப் பேணிக் கொன்ல்’ (திருக். 442)

எனவரும் திருக்குறளால் உணர்த்தப்பட்டன.

சேர்ந்தாரது அறிவைத் திரித்து இம்மை மறுமை யின்பங்களைக் கெடுக்கும் காமம் வெகுளி மயக்கம் ஆகிய சிறுமை,யியல்பினரைச் சேர்தலாகாது என அறிவுறுத்துவது திருக்குறளிலுள்ள சிற்றினஞ்சேராமையென்னும் அதிகார மாகும். பெரியாரைத் துணையாகக் கொள்ளுதலால் வரும் நன்மையினை அறிவுறுத்திய திருவள்ளுவர் அவர்க்கு மாறாகிய சிற்றினத்தைச் சேர்தலால் உளவாகும் தீமையினைச் சிற்றினஞ்சேராமை யென்னும் அதிகாரத்திலும் விரித்துரைக் கின்றார். விசும்பின கண்ணே மழையுருவில் தன் தன்மைய தாய் நின்ற நீரானது நிலத்தொடு சேர்ந்தபொழுது தனது நிறம் சுவை முதலிய தன்மைகள் திரிந்து வேறுபட்டாற்போன்று தனிநிலைமைக்கண் தன்தன்மைத்தாய உயிரினது அறிவு பிறவினத்தோடு சேர்ந்த பொழுது அவ்வினத்தின் சார்பால் பண்பு தொழில் முதலிய வேறுபடும் என்பது திருவள்ளுவர் உயிரின் சிறப்பியல்பாகக் கண்டுனர்த்திய தத்துவ வுண்மையாகும். இந்நுட்பம்,

"நிலத்தியல்பால் நீர்திரிந்தற்றாகும் மாந்தர்க்

கினத்தியல்பதாகும் அறிவு” (திருக். 452)

எனவும், 'இனத்தான் ஆம் இன்னான் எனப்படுஞ் சொல்'(திருக், 453) எனவும், இனத்துளதாகும் அறிவு (திருக். 454) எனவும், மனந்துய்மை செய்வினை தூய்மை யிரண்டும், இனந்துய்மை தூவா வரும் (திருக், 455) எனவும் வரும் திருவள்ளுவர் வாய்மொழிகளால் நன்கு தெளியப்படும்.

மக்கள் உயிர்வாழ்க்கையினை இம்மை (பிறப்பு), மறுமை (மறுபிறப்பு), அம்மை (பிறப்பறுநிலை) என மூவகையாகப் பகுத்துரைப்பர் அறிஞர். வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன்’ (திருக். 50) என்ற தொடரால் இம்மை வாழ்வைக் குறித்தார். இவ்வுலகிற் பிறந்தோர். நன்றுந்தீதும் ஆகிய இருவினைகளைப் புரிதலும் நல்லதன் பயனாகிய இன்ப நுகர்தற்குத் தேவருலகினையும் தீயதன் பயனாகிய துன்ப நுகர்தற்கு நரகத்தினையும் அடைந்து எஞ்சிய வினை காரணமாக மீளவும் பிறத்தலும் உடையர் என்பது இப்பரத கண்டத்தில் பன்னெடுங்காலமாகச் சான்றோர் அனைவரும் உடன்பட்டு வரும் தத்துவக் கொள்கையாகும். இன்பமே நுகரும் தேவருலகினைப் ‘புத்தேளிர் வாழும் உலகு (திருக்.58), புத்தேளுலகு (திருக். 213, 234), அவ்வுலகம் (திருக். 247) எனவும் துன்பமே நுகரும் நரகருலகினை 'இருள்சேர்ந்த இன்னாவுலகம் (திருக். 243), ‘ஆரிருள் (திருக்.121) எனவும் வானோர்க்குத் தலைவனாகிய இந்திரனை அகல் விசும்புளார் கோமான் இந்திரன்’ (திருக். 25) எனவும் திருவள்ளுவர் குறித்துள்ளார். உயிர்கள் தாவரம், ஊர்வன, நீர்வாழ்வன, விலங்கு, பறவை, மனிதர், தேவர் என்னும் எழுவகைப் பிறப்புக்களிலும் வினை வயத்தால் தொடரும் எழுமை முறையினவாய்ப் பிறப்பன என்பது, ‘எழுமை எழுபிறப்பும் (107) எழுபிறப்பும் தீயவைதீண்டா' (62) எனவும் வரும் திருக்குறள் தொடர்கள் பிறப்பு வகையினையும் வினைத்தொடர்பால் உளதாம் எழுமை யினையும் புலப்படுத்துவன.

'மற்றுந் தொடர்ப்பா டெவன்கொல் பிறப்பறுக்க

லுற்றாக்குடம்புமிகை’ (திருக். 345) ‘பற்றற்ற கண்ணே பிறப்பறு க்கும் மற்று

நிலையாமை காணப்படும்’ (திருக். 349) 'வீழ்நாள் படாஅமைநன்றாற்றின் அஃதொருவன்

வாழ்நாள் வழியடைக்குங்கல்’ (திருக். 38)

'யானெனெ தென்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க்

குயர்ந்த வுலகம் புகும்' (திருக். 346), வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது

வேண்டாமை வேண்ட வரும்’ (திருக். 362)

என்புழிப் பிறப்பறுநிலையே பேரின்பமாகிய வீடுபெறுதலும்  அந்நிலையடைதற்கு அவா வறுத்தலே சாதனமாதலும் குறிக்கப்பெற்றுள்மை காணலாம். பேதைமை காரணமாக நிலையுதலிலாவாகிய பொருள்களில் வைத்த பற்றுக்களே பிறப்பிற்குக் காரணமாம் என்பது,

"பொருளல்லவற்றைப்பொருளென் றுணரும்

மருளானாம் மாணாப்பிறப்பு (திருக். 351)

'பொருளானாம் எல்லாமென்றிய திவறும்

மருளானாம் மாணாப் பிறப்பு' (திருக். 1002)   என்பவற்றாற் புலப்படுத்தப்பட்டது.

மெய்யுணர்வினால் உளதாம் அவாவறுதியே வீடு பேற்றுக்குக் காரணமாம் என்பதும் அத்தகைய அவாவை அறுத்தற்குரிய துறவுநிலையாகிய உறுதிப்பாடு தூயதாகிய

முழுமுதற் பொருளை இடைவிடாது சிந்தித்தலினாலே உளதாகும். என்பதும்

'தூஉய்மை என்பதவாவின்மை மற்றது

வாஅய்மை வேண்ட வரும்’ (திருக். 364)

‘பற்றுக பற்றற்றான் பற்றினை யப்பற்றைப்

பற்றுக பற்று விடற்கு (திருக். 350)    என்பவற்றால் விரித்துரைக்கப்பெற்றன.

உயிர்கள் எண்ணிறந்தன என்பதும், உலகமக்கள் தாம்தேடியவுணவைத் தாமே தனித்துண்ணாது இல்லாதார் பலர்க்கும் பகுத்துக்கொடுத்து உண்டுவாழ்தலே முன்னைச் சான்றோர் வகுத்த உலகியல் அறம் (திருக். 322) என்பதும், கொல்லாமையொன்றே சிறப்புடைய அறம் (திருக். 321, 323) எனவும், கொல்லா அறத்தினை மேற்கொண்டோரே இருவகைப் பற்றினையும் நீத்தாருள் தலையாயவர் (திருக். 325) என்பதும், கொல்லா அறத்தினை மேற்கொண்டோர்பால் உயிருண்ணுங்கூற்று செல்லாது (திருக். 326) எனவும், தனது உயிர் உடம்பினின்று நீங்கும் நிலையேற்பட்டாலும் பிறிதொன்றன் உயிரை நீக்குத்ல் கூடாது (திருக். 327) எனவும், தேவர்பொருட்டு வேள்விக்கண் பிறவுயிரைக் கொன்றால் இன்பமிகும் செல்வம் பெரிதாகும் என்று இல்வாழ்வார்க்கு வேதத்துட் கூறப்பட்டதாயினும் துறவால் அமைந்தோர்க்கு ஒருயிரைக் கொல்லுதலால் வரும் செல்வம் இழிவாம் (திருக். 328) என்பதும் கொலைத்தொழிலையுடைய மாந்தர் அதன் புன்மையை அறியாராயினும் மெய்யுணர்ந்தார் நெஞ்சத்து அன்னோர் புலைத்தொழிலராகவே இழித் தொதுக்கப்படுவர் (திருக். 329) என்பதும் அருவருக்கும் உடம்பினராகவும் இழிதொழில் வாழ்க்கையினராகவும் இவ்வுலகில் வறுமை நிலையிற் காணப்படுவோர் முன்னைப் பிறப்பில் உயிர்களை அவை நின்ற உடம்பினின்றும் நீக்கியவர் (திருக், 330) என்பதும் திருக்குறளிற் கொல்லாமை என்னும் அதிகாரத்தில் விரித்துரைக்கப்பட்டன.

உயிரின் அறிவு இருள்மலத்தின் சேர்க்கையால் மயக்கமும் வஞ்சனையும் உடையதாய்ப் பிறர்பொருளைக் களவிற்கவர்தல், பிறவுயிர்களைக் கொல்லுதல் முதலிய தீச்செயல்களுக்குக் காரணமாதல் பற்றிக் களவென்னுங் காரறிவு” என்றார் திருவள்ளுவர். இங்கு இருள் மலத்தின் காரியத்தினைக் காரணமாகவுபசரித்தார் ஆசிரியர். பிறர் பொருளைக் கவர என்னும் களவு பற்றிய கருத்தும் தனக்குரிய பொருள்களையெல்லாம் பற்றுக்களையும் துறவுபற்றிய எண்ணமும் இருளும் ஒளியும் போலத் தம்முள் மாறுபட்டன வாகும.

'தன்னெஞ்சறிவது பொய்யற்க பொய்த்தபின்

தன்னெஞ்சே தன்னைச் சுடும்’ (திருக், 293)

GTলাGম্Lo,

'உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்

உள்ளத்து ளெல்லா முளன்’ (திருக், 294)

எனவும் வரும் பாக்களில் நெஞ்சு, உள்ளம் என்பன இடவாகுபெயராய் உயிருணர்வையும் அவ்வுணர்வுக் குனர்வாய் எவ்வுயிர்க்குஞ் சான்றாயுள்ள முழு முதற் பொருளையும் குறித்து நின்றன. “எவ்வுயிர்க்குஞ் சான்றாம் ஒருவனை என்பது அப்பர் அருள்மொழி.

 __________________


Guru

Status: Offline
Posts: 7329
Date:
Permalink  
 

“கண்டவர் இல்லென உலகத்துள் உணராதார்

தங்காது தகைவின்றித் தாஞ்செய்யும் வினைகளுள் நெஞ்சறிந்த கொடியவை மறைப்பினும் மறையாவாம்

நெஞ்சத்துக்குறுகிய கரியில்லையாதலின்’

(நெய்தற்கலி 3)

எனவரும் கலித்தொகைத் தொடரிலும் நெஞ்சு என்பது நெஞ்சத்தில் நிலைபெற்றுள்ள முழுமுதற் பொருளைக் குறித்து நிற்றல் ஒப்பு நோக்கற்பாலதாகும்.

செல்வத்தையும் அதற்கு ஏதுவாகிய நன்முயற்சி யையும் நல்கும் தெய்வம் செந்தாமரை மலரில் வீற்றிருந் தருளும் திருமகள். திருமகள் சிவந்த திருமேனியுடைய தெய்வம் என்பதும் அகமலர்ச்சியுடையராய் விருந்தோம்பு வோர் வீட்டில் திருமகள் விரும்பித் தங்குவாள் என்பதும்,

'அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து

நல்விருந்தோம்புவான் இல்' (திருக். 34)

எனவரும் திருக்குறளிற் குறிக்கப்பெற்றன. பிறர் செல்வங் கண்டு பொறாமைப்படுகின்றவனைத் திருமகள் தானும் பொருளாய்த் தனக்கு மூத்தாளாகிய மூதேவிக்கு இடமாகக் காட்டிவிட்டுத்தான் நீங்கிவிடுவாள் என்பார்,

'அவ்வித்தழுக்காறுடையானைச் செய்யவள்

தவ்வையைக் காட்டி விடும்’ (திருக். 167)

என்றார் திருவள்ளுவர். செய்யவள் - திருமகள், தவ்வை - தமக்கை, என்றது மூதேவியை. கரியவளாகிய மூதேவி மெய்ம் முயற்சியில்லாத சோம்பரிடத்தே தங்குவாள். அவள் தங்கையாய்ச் செந்தாமரை மலரில் வீற்றிருக்குந்திருமகள் சோம்பலில்லாதானது முயற்சியின்கண்னே தங்கியிருப்பாள் என்பார்,

'மடியுளாள் மாமுகடி யென்ப மடியிலான்

தாளுளாள் தாமரையி னாள்' (திருக். 617)

என்றார் தெய்வப்புலவர். மடி - சோம்பல், தாள் - முயற்சி. மாமுகடி - கரிய நிறத்தாளாகிய மூதேவி, சேட்டை. தாமரையினாள் - திருமகள், இங்கு எடுத்துக் காட்டிய குறள்களால் மக்கள் நன்முயற்சியாலடைதற்குரிய செல்வத் திற்குத் தெய்வம் திருமகள் என்பதும் சோம்ப லடைதற்குரிய வறுமைக்குத் தெய்வம் திருமகளின் தமக்கையாகிய சேட்டை என்பதும் திருவள்ளுவர் காலத்திற்கு முற்றொட்டுவரும் நம்பிக்கையாதல் நன்கு விளங்கும்.

சோம்பல் இல்லாத மன்னன் மண்ணுலகும் வானுலகும் ஆகிய உலகம் முழுவதனையும் தனது ஆட்சியின் கீழ் வைத்து ஆளும் ஆற்றலையும் சிறப்பினையும் பெறுவான் என மடியின்மை சோம்பலின்மையாகிய இடையறா முயற்சியின் பெரும்பயனை வற்புறுத்துவது,

‘மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்

தாஅயதெல்லாம் ஒழுங்கு (திருக். 610)                                  எனவரும் திருக்குறளாகும். சோம்பல் இல்லாத மன்னன் தன் அடியின் அளவினாலே எல்லாவுலகங்களையும் தாவி அளந்த இறைவனாகிய திருமால் கடந்து பெற்ற உலகப் பரப்பு முழுவதனையும் பெறுவான்’ என்பது இதன் பொருள். இதன்கண் அடியளந்தான் என்றது, 'மூவுலகும் ஈரடியால் முறை நிரம்பாவகை முடியத்தாவிய சேவடி யுடையனாகிய திருமாலை. தாஅயது என்றது, அம்முதல்வன் குறளுரு வாகிய வாமனவடிவாய் மாவலி என்னும் அசுரமன்னன் பாற்சென்று தன் காலடியால் மூவடிமண் இரந்து பெற்று, யாவர்க்கும் அடங்காத பெருவன்மை படைத்த மன்னனைத் தன் அடிக்கீழ் அடக்கிக் கவர்ந்து கொண்ட மூவுலக மரபினை. காத்தற்கடவுளாகிய திருமால் உலகவுயிர்களை உய்வித்தல் கருதித் தன்னருளால் மேற்கொண்ட அருட்பிறப்புக்கள் பத்தினுள் ஒன்றாகிய வாமனாவதாரமாகிய புராணச்செய்தியினை இத்திருக்குறளில் திருவள்ளுவர் குறித்துள்ளமை காணலாம்.

திருக்குறள் காமத்துப்பாலில்,

‘தாம்வீழ்வார் மென்றோட்டுயிலின் இனிதுகொல்

தாமரைக் கண்ணான் உலகு" (திருக்.1103)            எனவரும் திருக்குறள், உயர்வற வுயர்ந்த பேரின்பத்தை யடைதற்கு முயலவேண்டிய நீ பெண்ணொருத்தியை விரும்பிக் களவொழுக்கமாகிய இச்சிற்றின்பத்திற்கு முயலுதல் தகாது’ எனக்கூறிய பாங்கனை நோக்கித் தலைவன் ஒருவன் கூறுவதாக அமைந்ததாகும்.

“ஐம்புலன்களையும் நுகர்வார்க்குத் தம்மால் விரும்பப் பெறும் மகளிரின் மெல்லிய தோளின்கண் துயிலும் துயில் போல, ஐம்புல நுகர்ச்சிகளைத் துறந்த தவயோகிகள் எய்தும் செங்கண்மாலுலகம் வருந்தாமல் எய்துதற்குரியதாமோ” என்பது இதன் பொருளாகும். தாமரைக்கண்ணனாகிய செங்கண் மாலுலகம் உயர்வறவுயர்நல முடையனாகிய திருமால் வீற்றிருந்தருளும் நிலையில் அவன்பால் மெய்யன்புடைய அடியார்களாகிய அயர்வறும் அமரர்கள் அவனது திருமேனியழகில் இடைவிடாது திளைத்துமகிழும் நிலையில் அம் முதல்வனைக் கண் ணிமையாது கண்டு இன்புறும் இயல்பினதென்பதும், உறக்கத்தைவிட்டுத் தவயோகங்களால் வருந்திய பெருமுயற்சியுடைய பெரு மக்களே அதனைப் பெறுதற்குரியார் என்பதும், அத்தகைய இன்பம் உலகவாழ்க்கையில் திளைத்து மகிழும் ஏனையோரால் எளிதில் அடையத் தக்கதன்றென்பதும் இதனால் புலனாம். ஒத்த அன்புடைய தலைவியின் காதலின்பத்தில் திளைத்த தலைவன், அவன்பால் வைத்துள்ள இன்ப அன்பின் திறத்தைப் புலப்படுத்தும் நிலையில் தலைமகள் மென்றோளில் உறங்கிப்பெறும் காதலின்பத் தினும் செங்கண்மாலுலகத்து விழித்துப்பெறும் பேரின்பம் அத்துனைச் சிறந்ததாமோ எனச் செங்கண் மாலுலக இன்பத்தினை உவமையாகக் காட்டித்தான் பெறும் இம்மை யின்பத்தினை உயர்த்துக்கூறும் முறையில் திருமாலுலகத்து நித்திய சூரிகளாகிய அடியார்கள் பெறும் பேரின்ப நிலையினைத் திருவள்ளுவர் அத்திருக்குறளிற் சுட்டி யுள்ளமை கூர்ந்துணரத்தக்கதாகும். இனி இக்குறளில் “தாமரைக்கண்ணான் உலகு என்பதற்கு இந்திரனுலகு எனப் பொருள் கூறுவர் மனக்குடவர். வானோர் வேந்தனாகிய இந்திரன் ஐம்புலன்களிற் செல்லும் அவாவை அடக்கும் வலியற்றவனாய்க் கோதமமுனிவர் மனைவி அகலியையினை வஞ்சனையாற்கூடி அம்முனிவரால் வெகுண்டு சபிக்கப்பட்டு உடல் முழுவதும் அருவருக்கத்தக்க ஆயிரம் புண்களை யுடையனாய்ப் பின்னர் அம்முனிவர் தம் அருளால் அப்புண்கள் தாமரைமலர் போலும் அழகிய கண்களைப் பெற்று ஆயிரங்கண்ணோன் ஆனான் என்பது இராமாயணத்தில் வரும் ஒரு கதை. இக்கதையை எடுத்துக்காட்டாகக் கொண்டமைந்தது,

'ஐந்தவித்தா னாற்றல் அகல்வiசும்பு எார்கோமான்

இந்திரனே சாலுங்களி' (திருக். 25)

எனவரும் திருக்குறளாகும். நீத்தார் பெருமையுணர்த்தும் இக்குறள் ஐம்புலன்களிற் செல்லும் அவாவையடக்காமல் அவற்றையடக்கிய கோதம முனிவனது சாபமும் அருளும் பெற்று நிறைமொழிமாந்தருள் ஒருவனாகிய அம்முனிவனது ஆற்றலை உலகம் உணரச் செய்தவன் வானோர் வேந்தனாகிய இந்திரனாதலின் அவனே ஐந்தவித்த நீத்தாரது ஆற்றிற்குச் சான்றாயினான் என்பார் இந்திரனே சாலுங்கரி என்றார். கரி - சான்று சாட்சி.

ஒத்த காதலர் இருவருள்ளத்தே காமவுணர்வினைத் தோற்றுவிக்கும் காமன் (199) என்னுந் தெய்வத்தையும், வினைவயத்தாலாய உடம்பில் வாழும் உயிரினை வினை நுகர்ச்சி முடிந்த காலம் பார்த்து உடம்பினின்றும் பிரிக்கும் கூற்றம் (269, 765, 894, 1085) என்னும் தெய்வ ஆற்றலையும் திருவள்ளுவர் திருக்குறளிற் குறிப்பிட்டுள்ளார்.

இதுகாறும் எடுத்துக்காட்டியவற்றால் தெய்வப் புலமைத் திருவள்ளுவர் தம்காலத்தில் நிலவிய தெய்வங் கொள்கையினையும் தமிழ் முன்னோர் தமது வாழ்க்கையில் பெற்ற முதிர்ந்த அறிவின் திறத்தால் உண்டென நம்பிய புத்தேளிர் வாழும் உலகு, இருள் சேர்ந்த இன்னாவுலகம், வானோர்க்கு உயர்ந்தவுலகம், தாமரைக்கண்ணான் உலகு ஆகியவற்றையும் பிறவிப் பெருங்கடலில் வீழ்ந்து அல்லற் படும் மாந்தர்கள் மீண்டும் பிறவாநிலையாகிய வீடுபேற்றினை யடைதற்குச் சாதனமான தவமும் ஞானமும் ஆகிய மெய்ந் நெறி முறைகளையும் அந்நெறியினால் மக்கள் அடைதற்குரிய பேராவியற்கையாகிய பேரின்பநிலை யினையும் அதனையடைதற்குத் துணைபுரியும் முழுமுதற் பொருளாகிய இறைவனது இயல்பினையும் தாம் இயற்றிய உலகப் பொது மறையாகிய திருக்குறளில் சுருக்கமுந் தெளிவும் பொருந்த விளக்கியுள்ளமை ஒருவாறு விரித்துரைக்கப் பட்டது. சமயங்கடந்த நிலையில் நின்ற திருவள்ளுவர் விளக்கிய இறைவனியல்பு சைவசித்தாந்தம் கூறும் பொதுவும் உண்மையும் ஆகிய பதியிலக்கணத்துடன் பெரிதும் ஒத்து நிற்றலும் ஒருவாறு உணர்த்தப்பட்டது.

திருவள்ளுவர் ஆன்மாவை உள்ளம் எனவும் பரம் பொருளை உள்ளது (சத்து) எனவும் குறித்து வழங்கியுள்ளார் (திருக். 357). இம்மரபு சைவசித்தாந்த நூல்களிலும் தொடர்ந்து இடம் பெற்று வந்துள்ளது. திருவள்ளுவர் “செம்பொருள்” என்ற சொல்லால் வழங்கிய பரம் பொருளையே சைவசித்தாந்திகள் சிவம் என்னும் செந்தமிழ்ப் பெயராற் பரவிப் போற்றுகின்றனர் என்பது, செம்பொரு ளாய் சிவமெனலாமே (2573) எனவரும் திருமந்திரத்தாலும், “செம்பொருட்டுனிவே சிவபெருமானே’ (திருவாசகம்பிடித்தபத்து) என்னும் திருவாசகத் தொடராலும் நன்கு வலியுறுத்தப்பெற்றது. திருக்குறள் கடவுள் வாழ்த்தில்.

'மலர்மிசையேகினான் மாணடி சேர்ந்தார்’ (திருக். 3) ‘வேண்டுதல் வேணடாமையிலானடி சேர்ந்தார்க்கு”

(திருக். 4)

'தனக்குவமை யில்லாதான் தாள்சேர்ந்தார்க்கு (திருக்:7) 'அறவாழி யந்தனன் தாள்சேர்ந்தார்க் கல்லால்

பிறவாழி நீந்த லரிது’ (திருக். 8)

என்றாங்கு வலியுறுத்தப்படும் இறைவனடி சேர்தலே வீடுபேறு என்னும் அடிசேர்முத்தியே சைவசித்தாந்தக் கொள்கையினரது முடிந்த முடிபாக அமைந்துள்ளமையும் இங்கு மனங்கொளத்தகுவதாகும். எனவே தென்னாட்டின் சிறப்புடைய தத்துவக்கொள்கையாகத் திகழும் சைவ சித்தாந்தக் கொள்கைகளுக்கு நிலைக்களமாகத் திகழ்வது  தமிழ் மறையாகத் தெய்வப்புலவர் அருளிய திருக்குறள் என்று கூறுதல் பெரிதும் ஏற்புடையதாகக் காணலாம். மேலை நாட்டுக் கிறித்துவப் பாதிரியாராகிய ஜி.யூ. போப்பையர் அவர்கள் 'திருவள்ளுவர் தாம் கூறும் அறநெறியை (சைவசித்தாந்தம் கூறும் பதி பசு பாசம் என்னும்) மாண்புடைய முப்பொருளுண்மையை அடியாகக் கொண்டு வகுத்துள்ளார் எனத்தம் துணிவினைப் புலப்படுத்தியுள்ளார். டாக்டர் ஜி.யூ. போப்பையர் அவர்கள் 'திருக்குறள் நுதலும் அறம்’ என்ற தலைப்பில் ஆற்றிய விரிவுரையில் இக்கொள்கை வலியுறுத்தப்பட்டது என்பதனை ஜே. எம். நல்ல சாமி பிள்ளையவர்கள் திருக்குறளிலுள்ள "மெய்யுணர்தல்” என்னும் அதிகாரத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த் தெழுதிய கட்டுரையொன்றில் மேற்குறித்த போப்பையர் கருத்தை வெளியிட்டதுடன் 'உண்மையில் திருவள்ளுவர் கொள்கை புத்தர் சமனர் கொள்கைகளைப் போல் கடவுளின்மைக் கொள்கையன்று. இவ்வகையில் திருக் குறளுக்கும் நாலடிக்கும் வேறுபாடுளது (ஆங்கில நூல் பக்கம் 147) என எழுதியுள்ளமை இங்கு ஒப்பு நோக்கி யுணரத்தகுவதாகும்.__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard