Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இல்வாழ்க்கை அதிகாரப் பாடல்களின் சாரம்


Guru

Status: Offline
Posts: 7474
Date:
இல்வாழ்க்கை அதிகாரப் பாடல்களின் சாரம்
Permalink  
 


இல்லில் மனைவியோடு கூடி வாழும் வாழ்க்கை இல்வாழ்க்கை ஆகும். இது குடும்ப வாழ்க்கை என்றும் அறியப்படும். இல்வாழ்க்கை அதிகாரம் இல்வாழ்வார் வாழும் திறன் கூறுவது. அவரது கடமையும் பொறுப்பும் அறிவுறுத்தப்பட்டுள்ளன. இல்வாழ்க்கையின் சிறப்பும் இல்வாழ்வார் மாண்பும் சொல்லப்படுகிறது.

இல்வாழ்க்கை

இல்வாழ்க்கை அதிகாரம் மனைவி மக்களோடு குடும்பம் நடத்தி, அறம் செய்யும்முறையை விளக்குகிறது. இல்லறமானது மற்ற எவ்வகைப்பட்ட அறங்கட்கும் ஆதாரமானது என்கிறது. இல்வாழ்க்கையானது இல்வாழ்தல் என்ற அளவில் நில்லாது இல்வாழ்தலின் சிறப்பையும் கூறுவது.

இல்வாழ்க்கை குடும்பத்திற்காக வாழும் வாழ்க்கை எனவும் உலகுக்காக வாழும் வாழ்க்கை எனவும் இரு வகைப்படும். குடும்ப வாழ்விலிருந்து முகிழ்ப்பதே உலக வாழ்க்கை. இல்லறத்தை நடத்துவது இன்ப நுகர்ச்சிக்காக மட்டும் அன்று, அது பலருக்கும் துணையாக நின்று உதவுதற்குரிய அறம் செய்வதற்கும் ஆகும். மாந்தர் தாம், தமக்கு எனத் தன்னலவாழ்வு வாழாமல் துணைவி, பிள்ளைகள், பெற்றோர், சுற்றம், விருந்தினர், வறியர், ஆதரவு நாடுவோர் முதலானோருக்காக மேற்கொள்ளும் அறவாழ்வே குடும்ப வாழ்க்கை அல்லது இல்லறம் எனப்படுவது.

அதிகாரத்தின் முதல் மூன்று பாடல்கள் இல்வாழ்வார் கடமைகளைச் சொல்கின்றன. நான்காம் பாடல் அவரது பொறுப்புகளைப் பேசுகிறது. ஐந்தாவதும், ஆறாவதுமாக அமைந்த குறள்கள் அறத்துக்கும் இல்வாழ்க்கைகுமுள்ள சிறந்த தொடர்புகளை விளக்குகின்றன. ஏழாம் பா இல்வாழ்வானது முயற்சியையும் எட்டாம் பா அவன் உறும் துன்பங்களைச் சொல்கிறது. ஒன்பதாம் பாடல் அறமே இல்வாழ்க்கைதான் என்று சொல்ல இறுதிக் குறள் இல்வாழ்க்கை வாழ்வான் தெய்வமாகவும் உயர்வான் என்று பகர்கிறது.

 

சில புரிதல்கள்

காமத்துப்பாலில் சொல்லப்பட்டதும் ஆண் பெண் இருவரது வாழ்க்கை பற்றியே என்றாலும் அது ஒருவர்க்கொருவர் செலுத்தும் அன்பு பற்றியது. அறத்துப்பாலின் இல்வாழ்க்கை அந்த இருவரும் மனம்ஒருப்பட்டு அவரது மக்கள், மாற்றார் முதலானவர்களுக்காக விட்டுக்கொடுத்து நடத்தும் அறம் சார்ந்த வாழ்க்கை பற்றியது.

வடநூலார் வாழ்வுநெறியை நான்காகப் (பிரம்மசரியம், கிருகஸ்தம், வானப்பிரஸ்தம், சந்நியாசம்) பகுத்துக் காண்கின்றனர். இவற்றுள் சந்நியாசத்தை மிகவும் உயர்த்திக் கூறுவர்.
வள்ளுவர் இல்நிலை-துறவு நிலை என்ற இரண்டு பகுப்பினையே பேசுகிறார். துறவினும் இல்லறத்தாலே பிறர்க்குப் பயன் மிகுதி என்பதால் இல்லறமே சிறந்தது என்பதை இவ்வதிகாரத்தில் விளக்கியுள்ளார்.

அறஞ் செயல்முறையாக வடவர் கூறிய இஷ்டம், பூர்த்தம், தத்தம் இவற்றையே இல்வாழ்க்கை அதிகாரம் சொல்கிறது என்றும் இயல்புடைய மூவர் (குறள் 41) என்போர் நால்வகை ஆசிரமங்களில் கிருஹஸ்தர் தவிர்த்த ஏனைய மூன்று ஆசிரமத்தார் ஆவர் என்றும் 'ஐம்புலத்து ஆறு ஓம்பல் தலை' (குறள் 43) என்ற பாடலில் நேரடியாகவே கிருஹதர்ம சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட 'பஞ்சமஹா யக்ஞம்' கருத்துக்கள் ஆளப்பட்டுள்ளன என்றும் சிலர் கூறினர். இந்த அடிப்படையில் அதிகாரக் குறட்பாக்கள் நோக்கப்பட்டதாலே பல உரையாசிரியர்கள் பிழையான உரை கண்டனர். உலகப் பொருள் எல்லாம் எடுத்தோதப்பட்ட குறளில் வாய்ப்பாக இங்கொன்றும் அங்கொன்றும் சில கருத்து ஒற்றுமை இருப்பதாகத் தோன்றலாம். ஆனால் வள்ளுவர் வழி எப்பொழுதும் தனிச் சிறப்பானது. இந்தப் புரிதல் இருந்தால்தான் குறட்பொருளை அவர் அணுகிய நோக்கில் நன்கு புரிந்துகொள்ள முடியும்.
தவம், துறவு, அவற்றிற்கான மெய்யியலும் நம் மண்ணின் மரபிலிருந்து வேறுபட்டவை என்பதுவும் கருத்திற் கொள்ள வேண்டியவை.

இல்வாழ்க்கை அதிகாரப் பாடல்களின் சாரம்:

 

  • 41 ஆம்குறள் அறம் குடும்பத்திலிருந்து தொடங்குகிறது என்பதைச் சொல்வது.
  • 42 ஆம்குறள் துறவியர், வறுமையாளர், ஆதரவற்றோர் ஆகியோர்க்கு இல்வாழ்வான் உதவ வேண்டும் என்கிறது.
  • 43 ஆம்குறள் குடும்பத்தை மேம்படச் செய்யும் ஐந்து கடமை நெறிகள் பற்றிக் கூறும் பாடல்.
  • 44 ஆம்குறள் பழி வராமல் பார்த்துக்கொள்வதும், பிறருடன் பங்கிட்டு உண்பதும், குடும்பம் நடத்துவனது பொறுப்புக்களாகும்.
  • 45 ஆம்குறள் அன்பும் அறமும் உடைய இல்லறவாழ்வு தன்மையும் பொருளும் கொண்டது என்னும் பாடல்.
  • 46 ஆம்குறள் அறவழியில் நடத்தப்படும் இல்வாழ்க்கை மற்ற எந்தவொரு வாழ்வு முறையினும் மேம்பட்டது என்னும் பாடல்.
  • 47 ஆம்குறள் இயல்பான வாழ்வு நடத்தும் இல்லறத்தான் வெற்றி வாழ்க்கைக்கு முயல்வோருள் சிறந்தவன் என்னும் பாடல்.
  • 48 ஆம்குறள் இல்வாழ்க்கை தவத்தினும் நோவுமிக்கது என்று சொல்லும் குறள்.
  • 49 ஆம்குறள் இல்லறமே நல்லறம் என்று கூறும் குறள் இது.
  • 50 ஆவதுகுறள் வாழும் முறைப்படி வாழும் இல்வாழ்வான் தெய்வமாக உயர்வான் எனக் கூறுவது.

 

இல்வாழ்க்கை அதிகாரச் சிறப்பியல்புகள்

இன்பம் நோக்கிய இல்வாழ்க்கை, அன்பால் தூண்டப்பட்டு அறத்தில் மலர வேண்டும் என்று எண்ணிய வள்ளுவர் "அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை" என்று இல்வாழ்க்கையை இல்லறமாக்கினார். குடும்ப வாழ்க்கை குறிக்கோள் மிக்க வாழ்க்கை ஆனது.

வாழ்க்கை வாழ்வதற்கே என்ற விருப்புடன் இயல்பான வாழ்வு நடத்தினால் அதுவே இல்லறத்தான் வெற்றி வாழ்க்கைக்கு வழிவகுக்கும் என்கிறது இவ்வதிகாரத்துப் பாடல் ஒன்று.

இல்வாழ்க்கையை அறவழியிற் செய்பவனுக்கு, அறத்தாற்றிற்குப் புறமான துறவு வழியில் சென்று வாழ்வதால், என்ன பயன் கிடைக்கப் போகிறது என்று வினவியது அவரது காலத்தை எண்ணிக்கொண்டாலும் சரி இன்றைக்குள்ள சிந்தனையானாலும் சரி அது புரட்சிக் கருத்து ஆகும்.

குற்றமற்ற இல் வாழ்வு ஒன்றே போதுமானது; குடும்பச் சூழலில் வாழ்ந்தே, பொருளுரிமை ஏற்றும் இன்ப நுகர்ச்சி கொண்டும் மிக உயர்ந்த நிலையை ஒருவர் அடையலாம். தெய்வநிலை எய்துவது என்பது இயற்கை நிலைக்கு அப்பால் இருந்து பெறப்பட வேண்டியது அல்ல. இல்வாழ்க்கை மேற்கொண்டொருக்கும் அது முடிந்த ஒன்றே என்ற சீரிய சிந்தனை வேறெங்கும் காணாதது ஆகும்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard