Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: மெய்யுணர்தல் அதிகாரப் பாடல்களின் சாரம்


Guru

Status: Offline
Posts: 7329
Date:
மெய்யுணர்தல் அதிகாரப் பாடல்களின் சாரம்
Permalink  
 


அதிகார விளக்கம் 
மெய்யுணர்தல் 
உலகியல் வாழ்க்கையின் இயல்பை அறிதல்.
குறள் திறன்-0351 குறள் திறன்-0352 குறள் திறன்-0353 குறள் திறன்-0354 குறள் திறன்-0355
குறள் திறன்-0356 குறள் திறன்-0357 குறள் திறன்-0358 குறள் திறன்-0359 குறள் திறன்-360

openQuotes.jpgபொறியுணர்வால் உணரப்பட்ட உலகமும், பொறியுணர்வால் உணரப்படாது மன உணர்வால் உணரப்படும் இறைவனும், பொறியுணர்வும் மனவுணர்வுங் கொண்டு உலகையும் இறைவனையும் உணரும் உயிருமாய், இம்மூன்றையன்றி யறியலான பொருள் வேறில்லை யன்றோ? இம்முப்பொருளுண்மையினை மன உணர்வான் உணர்தலே ஈண்டு மெய்யுணர்தல் எனப்பட்டது.
- நாகை சொ தண்டபாணியார்

 

உயிர் வாழ்க்கைத் தத்துவம் அறிதலை மெய்யுணர்தல் எனலாம். இதை 'மெய்ப்பொருள் காண்பது' எனக் குறிக்கிறது இவ்வதிகாரம். 'மெய்ப்பொருள்' என்பது கல்வி, கேள்வி, பட்டறிவு இவற்றின் துணையால் பகுத்தறிந்து, மனம் பலவகையானும் ஓர்த்து (ஆராய்ந்து) 'உள்ளதை'க் காண்பது அது; பிறவிவாழ்க்கை பற்றிய அறியாமை நீங்கியபின், எங்கும் நிறைந்த இறைஒளி வீச்சில் 'சிறப்பென்னும் செம்பொருள்' உணரப்படும். மெய்ப்பொருள் கண்டவர் மெய்யுணர்வு பெற்றவராகிறார். மெய்யுணர்வு பெறுவதற்கு துறவு வாழ்வு மேற்கொள்ளவேண்டும் என்றில்லை.

மெய்யுணர்தல்

உலகியல் உண்மைகளை உள்ளவாறே உணர்வது மெய்யுணர்தல். அதாவது, உலகியல் வாழ்க்கையின் இயல்பை அறிதலாகும். மெய்யுணர்தல் பெறுவதன் நோக்கம் என்ன? மு வரதராசன் 'ஓர் ஊர்க்கு நடந்து செல்ல விரும்புகின்றவன் கண் மூடிச் சென்றால் இடர் இல்லாத இடமெல்லாம் இடராகத் தோன்றும்; இடர் உள்ள இடமெல்லாம் தடைப்பட்டுத் துன்புற நேரும். அது போல் வாழ்க்கையில் அறியாமையும் போலியறிவும் உள்ள வரையிலும் இல்லாத துன்பமெல்லாம் இருப்பதாகக் கொண்டு கவலையும் அச்சமும் மிகுந்து வருந்த நேர்கின்றது; உள்ள துன்பத்தைப் போக்கிக் கொள்ள வழி அறியாமல் திகைக்கவும் நேர்கின்றது. ஆகையால் நல்வாழ்க்கைக்கு மெய்யுணர்வு வேண்டும்; மயக்க உணர்வு நீங்க வேண்டும்' என மெய்யுணர்தலுக்கு விளக்கம் தருவார். இந்த விளக்கம் எளிதில் புரிந்துகொள்ளக்கூடியதாக உள்ளது.

இந்த உலகில் உயிர்கள் ஏன் பிறக்கின்றன? பிறப்பின் நோக்கம், பயன் என்ன? முடிவில் எங்கே போகின்றன? என்ற வினாக்கள் அவ்வப்போது நம்முள் வந்து செல்வன. இவற்றில் ஏன் பிறப்பு எடுத்தோம், இறந்தபின் எங்கே போகிறோம் என்பவற்றிற்கான விடையை இதுவரை யாரும் கண்டுபிடிக்கவில்லை. இனியும், எக்காலத்தும், அது விளங்க முடியாததாகவே இருக்கும். அது இறைவனுக்கே தெரிந்த மறையாகும். ஆனால் உயிர்களின் வாழ்வுக் கூத்தின் பின்னேயிருந்து அதை இயக்கும் ஒரு பொருள் உள்ளது என்பதை உணர முடிகிறது. அதுதான் இறை. அந்த இறைஇயக்கத்தை உணர்ந்து கொள்ளல் நம்மைத் துன்பத்திலிருந்து காக்கும். பேருலகம், உயிர், இறை ஆகிய மூன்றின் தன்மைகள், அவற்றிற்கு ஒன்றுடன் மற்றொன்றிற்குள்ள தொடர்புகள் இவை பற்றி ஆய்ந்து வாழ்வியலில் தெளிவு பெறுதல் மெய்யுணர்தலாம். இக்கோட்பாடு ஏற்கத்தக்கதாக உள்ளது.

மெய்யுணர்தலில் வள்ளுவரின் பார்வை என்ன? உலகாயத வாதிகள் மகிழ்ச்சியான வாழ்க்கையையும் உடல் இன்பமும் தங்கள் குறிக்கோளாகக் கருதுவர்; அரசியல் மெய்யியலார் பொருளையே மனித வாழ்வின் உண்மையான பொருள் என்பர்; அறநூலார் மனித வாழ்க்கையின் குறிக்கோள் அறம் ஒன்றுதான் என்பர். வேறு சில மெய்யியலார் வீட்டை மட்டும் முக்கியமான இலக்காகக் கருதுவர்.
இவை தவிர்த்து, இந்த உலக வாழ்க்கையை மேன்மையாக்கும் பொருட்டு, அதன் அன்றாடச் சிக்கல்களுக்குத் தீர்வு காணும் வழிவகைகளைத் தேடும் குறிக்கோளுடன் செய்யப்படும் உலகியல் ஆய்வும் உள்ளது. அதுவும் மெய்யியல் ஆய்வே ஆகும். இவ்வுலகம், இங்கு வாழும் உயிர்கள், மாந்தர் வாழ்க்கை, அதன் புதிர்கள், அதன் சிக்கல்கள், இங்குள்ள துன்ப ஊற்றுக்கள், துன்பம் நீக்கும் வழிகள் போன்ற இவற்றின் உண்மைகளை ஆய்வதும் மெய்யியல் பார்வையே ஆகும். வள்ளுவர் அப்படிப்பட்ட ஓர் அணுகுமுறையைத்தான் கையாள்கிறார். அவர் நடைமுறையைச் சார்ந்தவர்; உலக வாழ்க்கையில் நிகழ முடியாதவற்றை வற்புறுத்துபவரல்லர்; அதேநேரத்தில் இலக்கு கொண்டவராகவும் இருப்பவர்.
வள்ளுவரின் மெய்யுணர்தலிருந்து பெறப்படுவன: ஒரு பொருள் எதுவாக இருந்தாலும் வெளித்தோற்றம் எப்படி இருந்தாலும் அதன் உண்மைப்பொருளை அறியவேண்டும்; பொய்ப்பொருளை மெய்ப்பொருளாகக் கொள்ளும் தவற்றைச் செய்யக்கூடாது. மயக்கம் களைந்து தெளிவான பார்வை கொண்டவர் இன்பமடைவர். உண்மையான அறிவும் தெளிவான காட்சியும் இல்லாவிட்டால் பொறிகள் நன்கு இயங்குவதாகத் தோன்றினாலும் பயனில்லை. வாழ்வியல் தத்துவங்களை நன்கு கற்று உணர வேண்டும். பிறப்பு ஆராய்ச்சியில் ஈடுபடும் அறியாமையாலிருந்து விலகிச் சிறப்பாகிய செம்பொருளைத் தேடவேண்டும். அப்பொழுது ஒருவனின் உண்மையான இருப்பு உணரப்படும். அங்கே விருப்பம், வெறுப்பு, மயக்கம் எதுவும் இருப்பதில்லை; துன்பம் என்ற ஒன்றுமிராது. மெய்யுணர்தலின் நோக்கம் இறுதியில் துன்பம் இல்லாத வாழ்வைக் காண்பதற்கான வழிவகைகளைத் தேடுவதுதான்.

பக்குடுக்கை நன்கணியார் என்னும் சங்கப்புலவர் பாடிய பாடல் இவ்வேளை நினைக்கத்தக்கது:
ஓர் இல் நெய்தல் கறங்க, ஓர் இல்
ஈர்ந் தண் முழவின் பாணி ததும்ப,
புணர்ந்தோர் பூ அணி அணிய, பிரிந்தோர்
பைதல் உண்கண் பனி வார்பு உறைப்ப,
படைத்தோன் மன்ற, அப் பண்பிலாளன்!
இன்னாது அம்ம, இவ் உலகம்;
இனிய காண்க, இதன் இயல்பு உணர்ந்தோரே 
(புறநானூறு 194 ) இப்பாடல் தரும் காட்சியானது: ஒரு வீட்டில் சாப்பறை முழங்கிற்று. கணவனை யிழந்து வருந்துகிறாள் பெண்ணொருத்தி. கொஞ்சம் தள்ளி இன்னொரு இடத்தில் மணத்திற்குக் கொட்டும் மிகக்குளிர்ந்த முழவினது ஓசை மிக ஒலிப்ப பலரும் வாழ்த்தத் திருமணம் ஒன்று நடக்கிறது. இக்காட்சிகளைப் பார்த்த புலவர் 'இன்னாதம்ம இவ்வுலகம்' அதாவது 'கொடிது இவ்வுலகினது இயற்கை' என முதலில் எண்ணினார். பின்னர் 'இவ்வுலகம் இன்னாமை யொன்றையே யுடையதாயின் இதன்கண் வாழ்ந்து அறஞ்செய்தலும், பொருளீட்டலும், மனையறம் நிகழ்த்தலும் ஆகிய உலகியற் கடமைகள் யாவும் பயனில்லாத முயற்சியாகவன்றோ முடியும்' எனத் தெளிவு பெற்று 'இவ்வுலகம் வாழ்வதற்குரிமையுடையதே' எனக் கூறுகிறார். 'இன்னாதம்ம இவ்வுலகம்' என முன்னர் தாம் கொண்ட துணிவினை மறுத்தற்குரியதாகக் கொண்டவர், துன்பம் நிரம்பியதாகிய இவ்வுலகியலை நன்கு அனுபவித்துக் கொண்டே, இனிமை தருவதாகச் செய்து கொள்ள வேண்டும் என்னும் மெய்ம்மையினை 'இனிய காண்க, இதன் இயல்பு உணர்ந்தோரே' என்ற சொற்களால் அறிவுறுத்துகிறார்.
இது போன்ற வாழ்க்கைத் தத்துவத்தை உணர்வதுதான் மெய்யுணர்தல்.

மனச்சோர்வை உண்டாக்குகின்ற வாழ்வியலுக்கு அப்பால், உலகியல் சார்பில்லாத 'வீடு' போன்ற ஒன்றை அடைவதற்கான முயற்சியே மெய்யுணர்வு பெறுதல் என்று பல உரையாசிரியர்கள் மெய்யுணர்தலுக்கு விளக்கம் தந்துள்ளனர். தியான முறையில் பயிற்சி பெறுவது, சடங்குகள் சில நிறைவேற்றுவது, அல்லது சில மந்திரங்களைத் திரும்பத் திரும்பச் சொல்வது இவற்றின் வழி அதனைப் பெற்றிடலாம் என்ற கருத்தை வேறு சிலர் முன்வைக்கிறார்கள். வீடு என்பது சொற்களுக்கும் மனத்திற்கும் அப்பாற்பட்டது. எனவே அதைச் சார்ந்த விளக்கங்கள் ஏற்குமாறு இல்லை. குறளின் மெய்யியல் சூழலமைப்புக்கு அவை பொருந்தி வரவில்லை.

மெய்யுணர்தல் அதிகாரப் பாடல்களின் சாரம்

 

  • 351 ஆம்குறள் பொருள்கள் அல்லாதனவற்றை பொருள்கள் என்று அறியும் மயக்கத்தினால் உளதாம் மாட்சிமையற்ற வாழ்க்கை என்கிறது.
  • 352 ஆம்குறள் மயக்கத்திலிருந்து நீங்கிய குற்றமற்ற தெளிவானவர்க்கு அறியாமை நீங்கி இன்பம் உண்டாகும் எனச் சொல்கிறது.
  • 353 ஆம்குறள் ஐயத்தினின்றும் நீங்கித் தெளிவடைந்தவர்களுக்கு மண்ணுலகத்தைவிட விண்ணுலகம் அண்மையில் உள்ளது என்கிறது.
  • 354 ஆம்குறள் ஐம்புல உணர்ச்சிகளை முற்றப்பெற்ற போதிலும், மெய்யுணர்வு இல்லாதவர்களுக்கு அதனால் பயன் இல்லை எனக் கூறுகிறது.
  • 355 ஆம்குறள் எந்த ஒரு பொருளும் எத்தன்மையதாக இருப்பினும் அப்பொருளின் உண்மையை உணர்வதே அறிவாகும் எனக் கூறுகிறது.
  • 356 ஆம்குறள் இவ்வுலகின் மெய்ப்பொருளைத் தெளிவாக உணர்ந்தவர், பின் வாழ்க்கைத் துன்பங்கள் இங்கு தோன்றாத வழிகளை அடைய முற்படுவர் எனச் சொல்கிறது.
  • 357 ஆம்குறள் உள்ளம் ஆராய்ந்தறிந்து உயிர்வாழ்க்கைப் பொருளை உறுதியாக உணருமானால், பிறப்பின் இயல்பை பின்னும் ஆராயவேண்டியதில்லை என்கிறது.
  • 358 ஆம்குறள் பிறப்பு பற்றிய பேதைமை நீங்குமாறு சிறப்பாகிய செம்பொருளைக் காண்பது அறிவு எனச் சொல்கிறது.
  • 359 ஆம்குறள் செம்பொருளை உணர்ந்து, பொய்ப் பற்றறும்படி, அப்பொருளோடு ஒன்றி நின்று ஒழுக வல்லனாயின், அவனைச் சாரக்கூடிய துன்பங்கள் அவன் உணர்வினை அழித்துச் சாரமாட்டா எனக் கூறுகிறது.
  • 360 ஆவது குறள் பெருவிருப்பம், வெறுப்பு, மயக்கம் என்றிவை மூன்றனுடைய பெயரும் கெடவே துன்பம் நீங்கும் என்கிறது.

 

மெய்யுணர்தல் அதிகாரச் சிறப்பியல்புகள்

கடவுள் வாழ்த்து அதிகாரப் பாடல்களை உருவாக்கியது போன்று தன் கவிதை ஆற்றலை மிகுவித்து இவ்வதிகாரத்தைப் படைத்துள்ளார் வள்ளுவர். மெய்யியலுக்கேயன்றிப் உலகியலுக்கும் பொருந்துமாறு, மெய்யுணர்தல் பாடல்கள் அமைந்துள்ளன. 'மெய்யுணர்வு' அதாவது நன்னெறி சார்ந்த உலகு பற்றிய பெரிய உண்மையைக் 'கற்று', 'ஓர்த்து', 'சிறப்பென்னும் செம்பொருளோ'டு இணைத்து அறியவேண்டும் என்கிறார்.
வீடு என்பது சிந்தையும் மொழியும் செல்லா நிலைமைத்து என்பதை அறிந்தவர் ஆதலின் அதுபற்றி அவர் இங்கு சொல்லவில்லை; உலக வாழ்க்கையை மறுக்கிற தத்துவங்களுக்கிடையில் உலக வாழ்க்கையை வற்புறுத்துவது குறள், அதில் பிறப்புத்துன்பம், வினைப்பயன், மறுபிறப்பு, பல்பிறப்பு, பிறவிச்சுழற்சி போன்ற கோட்பாடுகளுக்கு இடமில்லை, வையத்தில் வாழ்வாங்கு வாழ்ந்து வான் உறையும் தெய்வத்திற்கு ஒத்த நிலையை வையத்திலேயே காண வழி வகைகளை வகுத்தவரேயன்றி, வீடு செல்வதற்கு வழிகாண முயன்றவர் அல்லர் வள்ளுவர். வீட்டுநெறியைக் குறிப்பது போன்று சில பாடல்கள் தோற்றம் தருகின்றனவேயன்றி அவை வீடு பற்றிச் சொல்பவையல்ல,

பலராலும் நன்கு போற்றப்பட்ட எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு (355) என்ற பாடல் இவ்வதிகாரத்தின்கண் உள்ளது. இக்குறள் நடை போன்றே அமைந்தது பொருட்பாலில் உள்ள எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு (அறிவுடைமை 423) என்னும் புகழ்பெற்ற பாடல். முன்னது பொருள்களின் தன்மைகளைக் கண்டறிவதைச் சொல்வது; மற்றது பிறர் கூறுவதில் உள்ள உண்மைகளைக் கண்டறிவது பற்றியது. ஆராய்ந்து பாராது நம்பிக்கையடிப்படையில் எதையும் ஏற்பதை தான் ஆதரிப்பவரல்லர் என்பதை இவ்விரண்டு குறள்களின் மூலம் தெளிவாகக் கூறுகிறார் வள்ளுவர்.

கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர் மற்றீண்டு வாரா நெறி(356), ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப் பேர்த்துள்ள வேண்டாப் பிறப்பு (357), பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும் செம்பொருள் காண்பது அறிவு (358) ஆகிய மூன்று குறள்களும் மெய்யுணர்தல் பெறும் முறைமையை நன்கு விளக்கின.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard