Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: வாழ்க்கைத்துணை நலம் அதிகாரப் பாடல்களின் சாரம்


Guru

Status: Offline
Posts: 7471
Date:
வாழ்க்கைத்துணை நலம் அதிகாரப் பாடல்களின் சாரம்
Permalink  
 


அதிகார விளக்கம் 
வாழ்க்கைத்துணை நலம் 
இல்வாழ்க்கைக்குத் துணையாகும் இல்லாள், இல்வாழ்வான் ஆகியோர் அழகு கூறுவது
குறள் திறன்-0051 குறள் திறன்-0052 குறள் திறன்-00053 குறள் திறன்-0054 குறள் திறன்-0055
குறள் திறன்-0056 குறள் திறன்-0057 குறள் திறன்-0058 குறள் திறன்-0059 குறள் திறன்-0060

openQuotes.jpgவாழ்க்கைத்துணை என்றதனால், மனைவி மணாளனது வாழ்க்கையில் அறத்திற்குத் துணையாகின்றாள். பொருளுக்கும் துணையாகின்றாள்; இன்பத்திற்கும் துணையாகின்றாள் என்பதுதானே போதருகின்றது. இதற்கு மேலும் பெண்களுக்கு உரிமை கொடுத்தவர் யாரே என அறிய விரும்புகின்றோம்.
- தெ பொ மீனாட்சி சுந்தரனார்

 

இல்வாழ்க்கை பொலிவு பெறத் துணை நிற்பவள் மனைவி. அவளே வாழ்க்கைத்துணை. அவளால் இல்லமும் கணவனும் பெறும் நலம் கூறப்படுகிறது. இல்லாளாகிய வாழ்க்கைத் துணையினால், இல் வாழ்க்கைக்குக் கிடைக்கும் நன்மைகளைச் சொல்வதாலேயே ‘வாழ்க்கையின் துணை நலம்‘ எனப்பட்டது என்பர். இவனுக்கு அவள் துணையும் அவளுக்கு இவன் துணையும் என்னும் ஒப்புரிமைப் பட்டதே “வாழ்க்கைத்துணை நலம்” என்பதாம். ஆனாலும் இல்லத்தரசியாய் குடும்பத்தை ஆட்சி செய்பவள் இல்லாளே. எனவே மனைவீயின் அழகு குறித்ததாகவே ஏறக்குறைய அதிகாரத்து அனைத்துப் பாடல்களும் உள்ளன. மனைவி மாட்சிமை உடையவளாக இருக்க வேண்டும் என்று அதிகாரம் தொடங்குகிறது, மனைவி ஆற்றவேண்டிய கடமைகளையும் பொறுப்புக்களையும் சொல்லி, குணம் நிறைந்த பெண்ணை அடைந்த கணவனது பேற்றைக் கூறி, நல்ல கணவனை அடைந்தவள் பெறும் பேரின்பத்தையும் சொல்கிறது, இருவரும் குடும்பத்தை எப்படிப் பொலிவாக்குகிறார்கள், எவ்விதம் நல்ல மக்களைப் பெற்று அதற்கு மேலும் அழகு சேர்க்கிறார்கள் என்று சொல்லி நிறைவு பெறுகிறது வாழ்க்கைத்துணை நலம் அதிகாரம்.

வாழ்க்கைத்துணை நலம்

முந்திய அதிகாரத்தில் 'இல்வாழ்க்கை' நடத்தப்படும் முறை கூறப்பட்டது. இங்கு வாழ்க்கைத் துணையான மனைவிக்குரிய மாட்சிமைக் குணங்கள் குறிக்கப்பெறுகின்றன.

வாழ்க்கை என்ற நெடிய பயணத்தில் மணம் என்னும் சடங்குவழி ஆணும் பெண்ணும் ஊரறிய இணைகின்றனர். ஒருவர்க்கொருவர் துணையாக இல்லறம் தொடங்குகிறது. இல்வாழ்க்கை மனைவி என்ற பெண்ணைச் சுற்றியே நகர்கிறது. இல்லப் பொறுப்பு பெண்ணைச் சார்ந்தது என்றவாறாயிற்று. இல்வாழ்வுக்கு மாண்பு, மங்கலம் என்ற விழுமங்களைச் சேர்ப்பவள் அவளே.
இல்லத்தைப் பொறுத்தவரையில் கணவனைவிட மனைவிக்கே சுமை மிகுதி. குடும்ப ஆட்சி செம்மையுற இல்லறத்திற்கேற்ற நற்குணநற்செய்கைகள் அவளுக்கு இன்றியமையா முதன்மைத்து என இங்கு வலியுறுத்தப்பெறுகிறது. இக்குணங்களை மனைமாட்சி என்னும் சொல்கொண்டு அழைக்கிறார் வள்ளுவர். இல்வாழ்க்கை நடத்துவதற்கான மாட்சிமையும், அக்கறையும், திறனும் படைத்திருக்க வேண்டியவள் மனைவி என்கிறது இப்பகுதி.
வாழ்க்கைத்துணை நலம் இவ்விதம் பாடப்பெறுகிறது:
மனைவியின் செயற்பாடுகள் கணவனுக்கும் குடும்பத்துக்கும் புகழ் சேர்ப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது. இல்லறக் கடமைகள் செய்வதில் அவள் எப்போதும் சோர்வடைவதில்லை; கணவனிடம் பேரன்பு செலுத்தும் பெண் பெறும் பேராற்றலும் குறிப்பிடப்படுகிறது; கற்பொழுக்கம் பேணும் பெண்ணை மனைவியாக அடைந்தவன பேறு பெற்றவன்; அரண் அமைத்துக் கொழுநனின் பாலியல் ஒழுக்கத்தைக் காக்க முடியாது; அவளது நிறையால் காக்க இயலும்; புறம்போகா ஆடவன் கணவனாகக் கிடைத்தால் அவளது இல்வாழ்வு சொர்க்கலோகமாக அமையும்; குணம் நிறைந்த மனைவியால் கணவன் மிடுக்குடன் நடமாடமுடியும்; மனைமாட்சி விளங்கிய இல்லம் பொலிவுடன் திகழ்கிறது. அவர்கள் உருவாக்கும் நன்மக்கள் அதற்கு மேலும் அழகு சேர்ர்ப்பர்.

வாழ்க்கைத்துணை நலம் அதிகாரப் பாடல்களின் சாரம்:

 

  • 51 ஆம்குறள் இல்லறமாட்சி காத்து குடும்பத்தின் பொருள்நிலையை மேலாண்மை செய்பவள் வாழ்க்கைத்துணை என்னும் பாடல்.
  • 52 ஆம்குறள் எவ்வளவு வளங்கள் இருந்தாலும் இல்லாளிடம் குடும்ப வாழ்க்கைக்குரிய பண்பு இல்லாவிடில் அது இல்வாழ்க்கை ஆகாது என்னும் பாடல்.
  • 53 ஆம்குறள் இல்லறத்துக்கு இன்றியமையாது வேண்டப்படுவது இல்லாளின் பெருமைக் குணங்கள் என்பதை வலியுறுத்தும் பாடல்.
  • 54 ஆம்குறள் கற்பு நெறியில் உறுதியுடன் நிற்கும் மனைவியைப் பெற்றதைவிடப் பெருமை மிக்கது வேறொன்றும் இல்லை எனச் சொல்லும் குறள்.
  • 55 ஆம்குறள் கணவனிடம் பேரன்பு பாராட்டுபவள் பெறும் பெரும் ஆற்றலைச் சொல்கிறது.
  • 56 ஆம்குறள் தன்னைக் காத்தும், தன் கணவனது நலனில் அக்கறை செலுத்தியும், இருவரது புகழ் காத்தும் சுறுசுறுப்புடன் இருப்பவளே மனைவியாவாள் என்னும் பாடல்.
  • 57 ஆம்குறள் சிறையால் காப்பதினும் பெண்கள் தம்நிறையால் காப்பதே தலை சிறந்த காவல் என்று சொல்லும் பாடல்.
  • 58 ஆம்குறள் தனக்கே உரியவனாகக் கணவனை அடைந்த பெண் சொர்க்க உலகில் உலவுவது போல உணர்வாள் என்று சொல்கிறது.
  • 59 ஆம்குறள் மாட்சிமை பெற்ற இல்லத்திலுள்ளோர் வீறு கொண்ட நடை போடுவர் என்னும் பாடல்.
  • 60 ஆவதுகுறள் மனையறத்துக்கு பொலிவு சேர்த்து நல்ல மக்களைப் உருவாக்கி அதற்கு அணி சேர்ப்பர் வாழ்க்கைத்துணையானவர்கள் எனப் போற்றுவது.

 

தவறான புரிதல்கள்:

இவ்வதிகாரத்தில் கற்பு பற்றி மிகையாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது என்றும் பெண்ணடிமை பேசும் கருத்துக்கள் இதில் உள்ளன என்றும் பெண்ணியம் பேசுபவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். குறட்பாக்கள் சொல்லவரும் கருத்துக்கள் பற்றிய தவறான புரிதல்களாலேயே இக்குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.

கற்பு:
குறள் 54லிருந்து குறள் எண் 59வரையான ஆறு பாடல்கள் வழி பெண்ணுக்குக் கற்பு 'அளவுக்கதிகமாக' வெளிப்படையாக வலியுறுத்தப்படுகிறது என்று குறை சொல்கின்றனர்.
'கற்புடைய பெண்' யார்? பொதுவாக இது 'தான் மணந்த ஆடவனுக்கு உண்மையுடையவளாயிருக்கும் பெண்'ணைக் குறிக்கும் சொல். வள்ளுவர் இத்தகைய பெண்களை ஒருமைமகளிர் என்று அழைப்பார். பதிவிரதா தர்மம் மேற்கொள்ளும் பெண்ணும் கற்புடையவளே. பதிவிரதை என்பவள் ஒருமனப் பெண்ணாக இருப்பதுடன் கணவனே தெய்வம் என்று அவனைத் தொழுது வாழ்பவள் ஆவாள்.
குறள் 54 - கற்பென்னும் திண்மை கொண்ட பெண்ணைப் பெற்ற பேற்றைவிட பெருந்தக்க யாவுள என அவள் கணவன் வினவுவதாக உள்ள பாடல். இது கற்பு என்னும் மனஉறுதி கொண்ட பெண்ணை வெகுவாகப் போற்றுவதான பாடல். பெண்ணைப் போற்றுதல் எவ்விதம் தவறு ஆகிறது? எல்லாப் பெண்களும் அவ்வாறே வாழவேண்டும் என்று அறிவுரை சொல்லப்படவில்லை.
குறள் 55 - தெய்வம் தொழாமல் கணவனைத் தொழுதெழும் பதிவிரதை பற்றியது. இக்குறட்கருத்து பற்றித் தனியே கீழே பேசப்பட்டுள்ளது.
குறள் 56 - தன்காத்து, தன் கணவன் நலம் பேணி, சொல்காத்துத் தளராமல் இருப்பவளே மனைவி என்கிறது. இதில் தற்காத்து என்பதும் சொல்காத்து என்பதும் பெண்ணின் கற்பு பற்றியது என்கின்றனர். தன்காத்து என்பதற்குப் பொருள் தன்னைக்காத்து என்பது இது உள்ளம், உடல் காத்து என்பதைக் குறிக்கும். உள்ளம் காப்பதில் கற்பும் ஒன்று. ஆனால் அது ஒன்று மட்டும் அல்ல. அதுபோல்சொற்காத்து என்பது குடும்பத்துக்கான நற்பெயர் காத்து என்பதுதான் பொருள். கற்புநெறி மீறல் பற்றிய சொல் என்பது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டது.
குறள் 57 - கணவன் புறம்போகாது அவனைச் சிறை செய்து கட்டுப்படுத்திக் காப்பதினும், மகளிர் தன் குணங்களால் அவனைப் போகாத வண்ணம் காத்தல் தலையாய கடமையாம் என்கிறது ஓர் புத்துரை. இதன்படி இக்குறளில் அவளது கற்பு பேசப்படவில்லை என்பது தெளிவு..
குறள் 58 - பெற்றார்ப் பெறின் என்று தொடங்கும் பாடலுக்குச் சரியான பொருள்: 'புறம்போகாத கணவனை அடையப் பெற்ற பெண் பேரின்பப் பெருபெருவாழ்வு வாழ்கிறாள்' என்பதே. ஆனால் 'பெண்டிர் தம்மை எய்திய கணவனை வழிபடுதல் பெறுவராயின்' என்று சில உரையாளர்களால் தவறுதலாகப் பொருள் கூறியதால் சிக்கல் எழுந்தது. உண்மையில் கற்பில் மன உறுதி கொண்ட கணவன் பற்றியது இக்குறள; பெண்கற்பு பேசுவதல்ல.
குறள் 59 - இப்பாடலிலுள்ள 'புகழ் புரிந்த இல்' என்ற தொடர்க்குப் புகழ்விரும்பிய இல்லம் என்றும் புகழ்விரும்பிய இல்லாள் என்றும் பொருள்கொள்ள வகையுண்டு. பெண்ணுக்கும் கணவனுக்கும் குடும்பத்துக்கும் புகழ் குறைவதற்கு எவ்வளவோ வழிகள் உண்டு. ஆனால் சிலர் 'புகழ் புரிந்த இல் இல்லோர்' என்பதற்குப் 'புகழ் இல்லாதவள்' அதாவது 'பாலியல் ஒழுக்கம் இல்லாதவள்' என்று பொருள் கொண்டு உரை செய்ததால் இப்பாடல் குறைகூறுவார்க்கு இடமாயிற்று.
மேற்சொன்ன விளக்கங்களால் கற்பு இருபாலர்க்கும் பொது என்பதே வள்ளுவர் கொள்கை என்பதும் கற்பு பெண்ணுக்குக் கட்டாயம் இருக்கவேண்டிய குணம் என்று எங்கும் வற்புறுத்தப்படவில்லை என்பதும் 'அளவுக்கதிகமாக' அறிவுரை சொல்லப்படவில்லை என்பதும் தெளிவாகும்.

பெண்ணடிமை:
கற்பென்னும் திண்மை உண்டானால் மட்டுமே பெண் பெருமைக்குரியவள் என்று இவ்வதிகாரத்துப் பாடல் ஒன்று சொல்கிறது என்று கூறி ஆண் பெருமை கூறும்போது இது போன்ற நிபந்தனை எதுவும் இல்லையே எனச் சிலர் வினவுவர்.
மேலும் பெண்ணிற் பெருந்தக்கார் யாருளர் என்று கூறாமல் பெண்ணிற் பெருந்தக்க யாவுள என்று கூறியிருப்பதும், தற்கொண்டான் என்ற சொல்லாட்சி பெண் ஒருவனது உடைமைப் பொருள் என்று கொள்ளும்படி ஆகிறது.
இவற்றால் ஆணுக்குப் பெண் அடங்கி வாழவேண்டும் என்பதே குறளின் கோட்பாடு; வள்ளுவர் ஒரு ஆணாயில்லாமல் பெண்ணாயிருந்து இக்குறளை எழுதியிருப்பாரானால் இம்மாதிரிக் கருத்துக்களைக் காட்டியிருப்பாரா? என்ற கேள்விக் கணைகளை வீசுகின்றனர்.

மேற்சொல்லப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்துக் கூறப்பட்ட கருத்துக்கள் இவை:
பெண்ணை உடைமைப் பொருளாகவே வள்ளுவர் கருதியிருந்தால் அவளை வாழ்க்கைத் துணை என்று அழைப்பாரா? மனைமாட்சி பெண்ணாலேயே அமைகின்றது என்றும், மனைமாட்சி அவள்பால் இல்லையென்றால் இல்வாழ்க்கையில் எச்சிறப்பும் இல்லை என்றும் கூறியிருப்பாரா?
பிறன் மனைவியை விரும்பும் ஆடவனை ‘அறிவிலி’, ‘செத்தவன்’ ‘பழிஅடைபவன்’ என்றெல்லாம் கடுஞ் சொற்களால் வசைபாடும் வள்ளுவர், பெண்ணைப் பற்றிப் பேசும்போது மட்டும் ‘பெண்ணிற் பெருந்தக்க யாவுள’ என்று உடன்பாட்டுப் போக்கில் பெருமைப்படுத்திப் பேசுவதிலிருந்து பெண்டிர் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு எழுதப்பட்ட நூல் என்பது புலனாகிறது. ஆடவருக்கு அறிவுரை கூறும்போது மிகக் கடிந்து கூறும் வள்ளுவர் பெண்ணுக்கு அறிவுரை கூறும்போது மிகக் கனிந்து கூறுவது அவர் பெண்ணினத்தின்பால் கொண்ட பெருமதிப்பு என்பது புலனாகிறது.
இந்தப் பொது அதிகாரத்தில், கற்பு குறித்து ஓரிரு குறள்களோடு நின்றுகொண்ட வள்ளுவர், ஆண்களுக்கான கற்பு இலக்கணமாக அதிகாரமே படைத்துள்ளார்.
மகளிர் பிறரால் அடக்கப்படாமல் உரிமையுடன் வாழவேண்டும் என்பதே வள்ளுவரின் நோக்கம். குறள் ஆணின் ஆண்மையையும் பெண்ணின் பெண்மையையும் பிரித்துச் சமன்நிலை வாழ்வு பற்றி பேசுகிறது. காதல் நெறியைத் தூய்மைப்படுத்திக் கற்பை, ஆண், பெண் இருபாலர்க்குமும் உரிமையாக்கிய பெருமை வள்ளுவருக்கே உரியதாகும். முதன்முதலாக வள்ளுவர் காலத்தில்தான் ஆணுக்குப் பாலியல் ஒழுகுமுறை அறம் கூறப்பட்டது. ஆனால் தற்காலப் பென்ணியமோ ஆண்மையில் பெண்மையும், பெண்மையில் ஆண்மையும் சேர்ந்த ஓர் கலப்பினை உருவாக்கி குழப்பமுறுகிறது.

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்

இவ்வதிகாரத்தில் குறள் எண் 55-இல் இத்தொடர் எப்படி இடம் பெற்றது என்பதைப் புரிந்துகொள்ள கடினமாகவே உள்ளது. வள்ளுவரா தெய்வம் தொழாமை பற்றி பேசுகிறார்? துயில் எழும்போது கொழுநனை ஏன் மனைவி தொழவேண்டும்? இக்கேள்விகளுக்குச் சரியான விடை இதுவரை கிடைக்கவில்லை.

ஒரு பெண் தன் கணவனுக்கு உண்மையாயிருத்தலைக் கற்பு நெறியின் முதல் நிலையாகக் கொள்ளலாம்.
கற்பு நெறியின் முதல் படிநிலையைத் தாண்டிக் கொண்டானை விடச் சிறந்த தெய்வம் பெண்ணுக்கு இல்லை என்பது வடவரின் பதிவிரதா தர்மத்தின் அடிப்படைக் கோட்பாடு. பதிவிரதா தர்மத்தின் கூறுகளாவன:
'பெண் கணவனைத் தெய்வமாகப் பேணவேண்டும்; அவளுக்கு ஐம்பெரு வேள்வி, நோன்பு இன்னபிற தருமங்களில் தனிஉரிமை இல்லை; கணவனுக்குப் பணிவிடை செய்வதாலேயே அவள் துறக்கத்தில் பெருமை அடைகிறாள்; பதீவிரதா தர்மத்திற்குப் பதிவிரதையே முதற் பொறுப்பு. அந்த நோன்பை அவள் முழுவதுமாகக் கடைப்பிடிக்கும் வரை தர்மத்திற்குக் கேடு வராது; பதிவிரதா தர்மத்தின் படிநிலையில்- கணவனைத் தெய்வமாக வழிபடுவதால் பதிவிரதைக்கு இயற்கை மீறிய பேராற்றல் பெறுகிறாள்; பத்தினித் தெய்வம் என்ற நிலைக்கு உயர்கிறாள்.'
கணவனைத் தெய்வமாக வழிபடுவதால் மட்டுமே ஒரு மனைவி தன் பாலியல் ஒழுக்கத்தில் மீறல் வராதவாறு கட்டுப்படுத்த முடியும் அதாவது கணவனைத் தெய்வமாக வழிபடுவதால் அவளது கற்பு காப்பாற்றப்படுகிறது என்பது உட்கிடக்கை.
நளாயினியை அடிக்கடி பதிவிரதைக்கு எடுத்துக்காட்டாகக் கூறுவர். அவள் தொழுநோயாளியான கணவனுக்கு எல்லாப் பணிவிடைகளையும் செய்து அவன் விரும்பியவாறு பரத்தையின் வீட்டுக்கும் அவனைச் சுமந்து செல்வாள். ஒருமுறை போகும் வழியில் இன்னொரு முனிவன் சாபத்துக்கு ஆளாகிறான் கணவன். அவனை அச்சாபத்திலிருந்து காப்பாற்ற 'பதிவிரதை நான் என்பது உண்மையானால் நாளை சூரியன் உதிக்காமல் போகட்டும்' என்று வானத்தை நோக்கி முழக்கம் வேறு செய்பவள் அவள்.

இக்குறள் பற்றி ராஜ் கௌதமன் குறிப்பது: 'தெய்வத்தைத் தொழாமல் கணவனையே தெய்வமாகத் தொழும் மனைவி 'பெய்' என்றால் மழை பெய்யும் என்று கூறியதால் மனைவியைப் 'பதிவிரதை'யாக, பத்தினியாக, அவளது இல்லற தர்மத்தைப் பதிவிரதா தருமமாக வள்ளுவர் நோக்கியது புரியும்..... வள்ளுவர் வாழ்க்கைத் துணை நலத்தில், தமிழ் மரபுக்கு ஒத்துப் போகிற விதத்தில் பதிவிரதா தருமத்தை எடுத்துக் கூறியமை புரியும்.'
பதிவிரதா தர்மத்தின் கோட்பாடுகளில் கணவனைத் தெய்வமாகப் பேணுதலையும் அதனால் அவள் பெறும் ஆற்றலையும் இக்குறளில் கொண்டுவந்துள்ளமை தெரிகிறது.
நம் மரபு கற்பு நெறியின் முதல் படிநிலையைத்தான் ஏற்றுக் கொண்டிருக்கிறது. பதீவிரதா தர்மம் பெண்ணுக்குக் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து அவளது கற்பு நிலையை பேதைமையின் விளிம்பு வரை எடுத்துச் செல்வது. கற்புடைய பெண் பேராற்றல் பெறுகிறாள் என்பதை ஒத்துக்கொள்ளலாம். ஆனால் தெய்வம் தொழாமல் கணவனைத் தொழுதெழும் பெண் என்னும் கருத்து ஏற்புடையதல்ல. இதுவே இப்பாடலின் குறைபாட்டுக்குக் காரணமாக அமைந்தது.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard