Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கடவுள் வாழ்த்து அதிகாரப் பாடல்களின் சாரம்


Guru

Status: Offline
Posts: 7387
Date:
கடவுள் வாழ்த்து அதிகாரப் பாடல்களின் சாரம்
Permalink  
 


அதிகார விளக்கம் 
கடவுள் வாழ்த்து 
கடவுள் உள்ளார்; அவரை நினைந்து வாழ்த்தி வணங்குதல் வேண்டும்
குறள் திறன்-0001 குறள் திறன்-0002 குறள் திறன்-0003 குறள் திறன்-0004 குறள் திறன்-0005
குறள் திறன்-0006 குறள் திறன்-0007 குறள் திறன்-0008 குறள் திறன்-0009 குறள் திறன்-0010

openQuotes.jpgஇந்நூலின் கடவுள் வாழ்த்திற்கும் ஏனைய நூல்களின் கடவுள் வாழ்த்திற்கும் வேறுபாடு உண்டு. ஏனைய நூல்களில் எடுத்துக்கொண்ட நூல் இனிது நிறைவேறுதற் பொருட்டும், நின்று நிலவுதற் பொருட்டும் கவிஞர் கடவுளை வாழ்த்துவர். இந்நூலில் கடவுளின் பொது இயல்பும், சிறப்பு இயல்பும் கூறி அவரை வாழ்த்துதலின் பயனும் கூறப்படுகின்றன. இதனை ஊன்றி ஆராயின் கடவுளை வாழ்த்துதலும் தலையாய அறம் அல்லது ஒழுக்கம் என்பது உணர்த்தப் பெற்றதேயன்றி ஏனைய நூல்களைப் போலப் பயன் கருதிக் கடவுளை வாழ்த்தவில்லை.
- ச தண்டபாணி தேசிகர்

 

கடவுள் ஒருவர் உள்ளார்; அவரை நினைந்து வாழ்த்தி வணங்க வேண்டும் என்ற கருத்துப்பட அமைந்தது 'கடவுள் வாழ்த்து' என்னும் முதல் அதிகாரம். ஆதிபகவன், வாலறிவன், மலர்மிசை ஏகினான், வேண்டுதல் வேண்டாமை இலான், இறைவன், தனக்கு உவமை இல்லாதான், அறவாழி அந்தணன், எண்குணத்தான் என்ற அடைகளால் இறைவன் பாடப்படுகின்றான். கடவுளை நினைப்பவர் நன்கு வாழ்வர்; அவர்கள் துன்பங்களை உணரமாட்டார்கள்; அவர்களிடம் நல்வினை தீவினை தாக்கம் இல்லை; அவர்கள் நெடிது வாழ்வர்; அவர்களது தீராக் கவலைகளுக்கு மாற்றல் கிடைக்கும்; குற்ற உணர்ச்சிகளிலிருந்து மீட்சி பெறுவர்; வாழ்க்கை என்னும் கடலைக் கடந்து கரை சேர்வர் போன்ற பயன்களும் கூறப்படுகின்றன.

கடவுள் வாழ்த்து:

கடவுள் என்ற அழகிய சங்கச் சொல் எல்லாவற்றையும் கடந்து நிற்பது என்ற பொருள் தருவது. எல்லாவற்றிலும் நீக்கமறக் கலந்து நிற்பதையும் குறிக்கும்.
வாழ்த்து என்பது வாழ்த்துதல் பொருளில் அன்றி நினைத்தல், போற்றல், வணங்கல் ஆகிய உள்ளம், சொல், மெய் ஆகியவற்றின் செயல்களை உணர்த்தும் வகையில் இங்கு ஆளப்படுகின்றது. அதிகாரத்துப் பத்து குறள்களில் ஏழு பாடல்கள் 'அடிசேர்ந்தார்' 'தாள்சேர்ந்தார்' என்றபடியான தொடர்கள் கொண்டு யாக்கப்பட்டுள்ளன. 'அடி' என்பது 'இறைவன் அருள்' என்னும் பொருள்பட அமைந்துள்ளது. 'சேர்தல்' என்ற சொல்லுக்குப் பரிமேலழகர் இடைவிடாது நினைத்தல் எனப் பொருள் கூறுவார். எனவே அடி சேர்ந்தார் என்பது இறைவன் அருள் வேண்டி இடையறாது அவனை நினைத்தல் என்பதாகும். "புகழ் புரிந்தார்" எனச் சொல்லால் போற்றுதலை ஒரு பாடல் குறிக்கிறது. வணங்குதல் என்ற உடல்சார்ந்த செயல் மற்றொரு பாடலில் குறிக்கப் பெறுகிறது.
ஒருமையில் அடி என்று சொல்லப்பட்டுள்ளதால் ஓர்அடி (ஒற்றைத் தாள்) கொண்ட அருவ (உருவமற்ற-ஒளி, காற்று போன்ற) நிலையில் உள்ள ஒரு தெய்வமே கடவுள்வாழ்த்து அதிகாரக் குறட்பாக்களில் கூறப்படுகிறது எனலாம். ஒருவர் எண்ணிய குணங்களின் உருவாக இறைவனை வழிபடலாம் என்ற கருத்துப்படவும் ஒரு பாடல் அமைந்துள்ளது.
கற்றவனும் கடவுளை நினைக்க வேண்டும் என்று ஒருபாடலும் கடவுளை வணங்காதவர் அறிவில்லாதவர் என்று மற்றொரு பாடலும் கூறுகின்றன.

கடவுள் வாழ்த்து அதிகாரப் பாடல்களின் சாரம்:

 

  • முதல் குறள் உலகம் ஆதிபகவனை முதலாக உடையது என கடவுள் இயல்பையும் கடவுளுக்கு உலகோடுடைய தொடர்பையும் கூறுகிறது.
  • 2 ஆம்குறள் என்ன கற்றிருந்தாலும் இறைவனை நினையாமல் இருக்கக் கூடாது என அறிவுறுத்துவது.
  • 3 ஆம்குறள் கடவுளின் திருவடியை நினைப்பவர் இந்நிலவுலகின்கண் நன்கு வாழ்வர் என்கிறது.
  • 4 ஆம்குறள் சார்பற்ற இறைவனை நெஞ்சில் தாங்கியவர் எந்தச் சூழ்நிலையிலும் துன்பங்களை உணரமாட்டார் என்பதைச் சொல்வது.
  • 5 ஆம்குறள் கடவுளின் பெருமை அறிந்து வாழ்த்துபவருக்கு நல்வினை தீவினை எதுவுமே தாக்கத்தை ஏற்படுத்தாது என்கிறது.
  • 6 ஆம்குறள் ஒழுக்கத்தின்வழி நின்று கடவுள் வணக்கம் செய்க என அறிவுறுத்துவது.
  • 7 ஆம்குறள் எல்லாம்வல்ல இறைவனால் மட்டுமே தீராக் கவலைகளுக்கு மாற்றல் தர முடியும் என்று சொல்கிறது.
  • 8 ஆம்குறள் அருள் வடிவினனான இறைவனின் தாளை இடைவிடாது நினைந்தவர் குற்ற உணர்ச்சிகளிலிருந்து மீள வழியுண்டு எனச் சொல்வது.
  • 9 ஆம்குறள் இறைவனை திருவடியை வணங்காதவர் தலை இருந்தும் இல்லாதது போல்தான் எனக் கூறுகிறது.
  • 10 ஆவதுகுறள் இறைவன் அருள் இருந்தால் மட்டுமே நாம் வாழ்க்கை என்னும் கடலைக் கடக்க முடியும் என்கிறது.

 

கடவுள் வாழ்த்தும் சமயங்களும்:

கடவுள் வாழ்த்தில் வள்ளுவர் எந்தச் சமயக் கருத்துக்களைக் கூறுகிறார் என்ற தேடுதல் காலம்காலமாக நடைபெற்றுவருகின்றது.

பரிப்பெருமாள் என்ற பழைய உரையாசிரியர் குறள் 9-க்குக் கூறிய உரையில் ''இவ்வதிகாரத்திற் கூறிய கடவுட் பெயர் எல்லாம் ஒரு சமயத்தார் கூறும் பெயரன்றி, வேறு வேறாகப் பலசமயத்தார் கூறும் பெயராகத் தோன்றா நின்றது எனச் சொல்கிறார். இவரது கூற்று வள்ளுவர் பலசமயப் பெயர்கள் தோன்றுமாறு விரும்பியே இவ்வதிகாரப் பாடல்களை யாத்தாரா? என்ற ஐயத்தை உண்டாக்குகிறது. எல்லாச் சமயங்களும் மெய்ப்பொருளான முழுமுதற்கடவுளை நோக்கித்தான் செல்வன என்பதை உணர்த்துவதற்காக பலசமயப் பெயர்கள் தோன்றுமாறு பாடல்களை இயற்றி இருக்கலாம். குறள் படிப்போர்க்கெல்லாம் அவரவர் தம் சமயங்களையும், கோட்பாடுகளையும் உணர்த்துவதாக அமைந்துள்ளதால் இந்நூல் சமயம் கடந்த நிலையை உறுதிப்படுத்துகிறது என்பதும் விளங்கும்.

கடவுள் குறித்த வள்ளுவரின் விளக்கங்கள் ஸ்ரமணத்தின் (சமண-புத்த-ஆசீவக) சமண சமயக் கடவுளுக்கும் பௌத்த சமய போதிசத்துவருக்கும் பெரிதும் பொருந்துகின்றன என்று சமண, புத்த சமயத்தினர் கூறுவர். ஆதிபகவன், வாலறிவன், மலர்மிசை ஏகினான், வேண்டுதல் வேண்டாமை இலான், இறைவன், பொறிவாயில் ஐந்தவித்தான், தனக்கு உவமை இல்லாதான், அறவாழி அந்தணன், எண்குணத்தான் என்பன சமண/புத்தப் பெரியோர்களையே குறிப்பன என்று கூறி அதற்குத் தங்கள் சமய நூல்களிலிருந்து சான்றும் கூறுவர்.
கடவுள் வாழ்த்தில் முதல் குறள் மூன்றையும் முறையே சிவன், மால், அயன் என்ற வரிசையில் மறைமுகமாகக் குறித்து இருக்கிறார் என்று தோன்றுவதாகவும் ஆதிபகவன் என்பது அரனையும், வாலறிவன் என்பது மாலவனையும், மலர்மிசை ஏகினோன் என்பது அயனையும் சுட்டுவது என்பதாக வைதிகர்கள் சொல்கின்றனர். இவர்களுள்ளும் முதல் அதிகாரப்பாக்கள் சைவத்தையே குறிக்கும் என்று சைவர்களும் வைணவைத்தையே சொல்கிறது என்று வைணவர்களும் ஆதாரங்களைத் தேடித் தருவர்.

பொதுவாக சமய நூல்களில் கடவுள் விரும்பித் திட்டமிட்டு உலகையும் பிறவற்றையும் படைத்ததாகக் கூறி இறையாற்றலைப் போற்றுவர். அது போன்ற கருத்துக்கள் குறளகத்து இல்லை; வள்ளுவர் நீண்ட இசைப் பாடல்களை எழுதவில்லை; பொழிவுகள், கடவுள் தொடர்பான நெடிய விளக்கங்கள் குறளில் பதிவாகவில்லை; பெரும்பான்மைச் சமயங்கள் அவதாரம் அதாவது கடவுள் மக்களில் ஒருவராகப் பிறந்து, வாழ்ந்து, மறைதல் பற்றி பேசுகின்றன. கடவுள் வாழ்த்து அதிகாரமும் ஆற்றல்மிகு அறிஞர்கள், சான்றோர்கள், பேரா இயற்கை எய்தியவர்கள், குருமார் ஆகியோரை மனத்தில் இருத்தித்தான் வள்ளுவர் படைத்தார் என்று கூறுவோரும் உளர். ஆனால் வள்ளுவர் காட்டும் கடவுள் மூலமும் முதலுமாய முழுமுதற்பொருள் ஆகும். அது அவதாரம் அல்ல.
கடவுள் உள்ளமையில் நம்பிக்கை கொண்டு, உலகப் படைப்பின் உட்பொருளை உணர்ந்து ஒழுகும் வாழ்க்கை நெறியைப் 'பொய்தீர் ஒழுக்கநெறி' எனக் குறள் 6 குறிக்கிறது என்பர் ஆய்வாளர்கள். இது ஏதேனும் ஒரு சமய நெறியையே சொல்கிறது என்பர் சமயக்கணக்கர். ஆனால் ஒழுக்கநெறிகள் பல உள்ளன என்பதாகவும் அவற்றுள் மெய்யான ஒழுக்க நெறி எதுவென்பதைத் தெளிந்து, அந்நெறியில் நின்று ஒழுகுக என்றுதான் இக்குறள் (6) அறிவுறுத்துகிறது. பொய்தீர் ஒழுக்கநெறி என்பது சமயநெறியைக் குறிப்பதாகக் கொண்டாலும் வெவ்வேறு சமயங்கள் வெவ்வேறு நெறிகளை, இறைவன் பெயரால் அல்லது இறை தொடர்பானவற்றால் கூறி வருகின்றன என்பதால் அவற்றுள்ளும் மெய்யான ஒழுக்க நெறி அறிந்து அதன்படி ஒழுக வேண்டும் என்பது வள்ளுவர் அறிவுரையாகும்.
ஆயினும் கடவுள் வாழ்த்திலோ குறளில் மற்ற எவ்விடத்திலுமோ குறிப்பிட்ட எந்தச் சமயக் கருத்துக்களும் இடம்பெறவில்லை.
குறள் ஒரு சமயத்திற்காகத் தோன்றிய நூலன்று; இதில் சமயம் தேடுதல் பயனற்றது.

முரண் களைதல்:

கடவுள் வாழ்த்தில் முரண்கள் உள்ளதாகச் சுட்டிக் காட்டுவர். ஆனால் அவை முரண் ஆகா என்பதை அறிஞர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர். முரண்களும் அதற்குரிய விளக்கங்களும் கீழே தரப்பட்டுள்ளன:
1. கடவுளைப் பால், திணையுள் அடக்கிக் கூறப்பட்டுள்ளது:
ஆதிபகவன், வாலறிவன், தனக்குவமையில்லாதான், எண்குணத்தான் என்றபடி ஆண்பால் வடிவினனாகவும் உயர்திணை வகையாகவும் கடவுள் தோற்றமளிப்பதாக இருந்தாலும், உருவமில்லாக் கடவுளே கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் காட்டப்படுகிறது. படிப்போர் உள்ளத்தில் உணர்த்தும் பொருட்டே திணையோடு சேர்த்துக் கூறப்படுகிறது. இது இறை இயல்பை மீறுவதாகாது.
2. மெய்ப்பொருளுக்கு அடி (தாள்) உண்டா?
முகமே உருவத்தை அடையாளம் காட்டக்கூடியது. முதல் அதிகாரத்தில் எங்கும் முகம் விவரிக்கப்படவில்லை. அடி ஒன்றே கூறப்பட்டுள்ளது. அதுவும் அடிகள் என்னாமல் ஒருமையில் அடி எனச் சொல்லப்பட்டுள்ளது. அடி என்பது 'இறைவன் அருள்' என்னும் பொருள்படவே ஆளப்பட்டுள்ளது. அது உறுப்பல்ல. எனவே முரணாகாது.
3. கடவுளுக்கு ஏது குணம்? எப்படி அவன் எண்குணத்தான் ஆவான்?
எண்குணத்தான் என்றதற்கு எட்டுக் குணங்கள் என்ற பொருள் மட்டும் அல்லாமல் 'எண்ணிய குணம் கொண்டவன்; என்ற பொருளும் 'எளிய குணம் கொண்டவன்' என்ற பொருள்களும் உண்டு. அன்பர் எண்ணிய குணம் கொண்டவன் எனக் கொள்வதால் இம்முரணும் நீங்கும்.
4. 'ஏகினான்' என்று எங்கும் நிறைந்திருக்கும் இறைவனை வினையொடு படுத்திக் கூறலாமா?
மலர்மிசை ஏகினான் என்பதற்கு அன்பர்கள் உள்ளமலர்களில் புகுந்தவன் என்ற பரிமேலழகர் உரையை நோக்கினால், இந்த முரண் களையப்படும்.
5. பொறியும் புலனுமற்ற இறைவன் எப்படி ஐந்தவித்தான் ஆகமுடியும்?
மக்கள் ஐந்தவித்தான் (ஆகி) ஒழுக்கநெறியின் வழுவாது நிற்பாராயின் நீடுவாழ்வார் என்பது அப்பாடல் (குறள் 6) கூறும் கருத்து. ஐந்தவித்தான் என்பது இறைவனைக் குறியாது மாந்தரையே கூறுவதால் முரண் என்ற கேள்விக்கு இடமில்லை.

கடவுள் வாழ்த்து அதிகாரச் சிறப்பியல்புகள்:

கடவுள் வாழ்த்துப் பாக்கள் அனைத்திலும் வள்ளுவர் தன் கவிதைப் பேராற்றலை வெளிப்படுத்தியுள்ளமையைத் தெற்றெனக் காணமுடிகிறது.
செய்யுளில் பொருட்செறிவு என்பது கவிஞன் கருதியமைத்த பொருளோடு குறிப்பும் உள்ளுறையுந்தோன்ற நிற்றல் என இலக்கண நூல்கள் கூறும். இப்பொருட்செறிவு கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் மேலோங்கி நிற்கிறது.
எல்லா சமயத்தினரும் அவரவர்களின் முரண்பட்ட கடவுள் கோட்பாட்டுக்குக் குறள் பொருந்துவதாக உரிமை கொண்டாடுகின்றனர். இவ்வாறு முரணைக் கடந்து செல்வதைத்தான் வள்ளுவர் விரும்பினார் என்று தோன்றுகிறது. வெவ்வேறாகப் பலசமயத்தார் பெயர் தோன்றும்படி கூறி, முடிவில், பயில்வோர் மனதில், பொதுமைக் கடவுள் தோன்றும்படி செய்துவிடுகிறார் வித்தகக் கவிஞரான வள்ளுவர்.

இறைவனை 'அறவாழி அந்தணன்' என வள்ளுவர் குறிப்பிடுவதிலிருந்து அறத்துக்கும் இறைநிலைக்கும் தொடர்பு பெரிதானது என்பது பெறப்படும்.
இறைவனுடைய பண்புகளாக வள்ளுவர் தொகுத்துக் கூறியவை ஒரு அறக்கடவுளை நம்முன் நிறுத்துகிறது. முற்றறிவு பெற்ற இக்கடவுள் விருப்பு வெறுப்பு அற்றவர், தண்ணளி செய்பவர், அவர் அறக்கடலை உடையவர், உலக முதல்வனை- பொதுக்குணத்தவனை-ஒழுக்கத் தனி முதல்வனாக நமக்கு அறிமுகப்படுத்தியமையால், அவனை நினைவால் தொழும் நாமும் வாலறிவராக, பற்றற்றவராக, ஐந்தவித்தவராக, அறவாழி அந்தண்மையராக வளரல் வேண்டும் என்பது வள்ளுவம் என்பார் வ சுப மாணிக்கம். அறவழியில் மனிதர் உறுதியாக நிற்றலே நிறைந்த வழிபாடு என்பதும் சிறந்த இறைவாழ்த்தாகிறது. கடவுள் வாழ்த்துக்கும் அறங்களுக்கும் உள்ள இணைப்பு பற்றிய தண்டபாணி தேசிகர் கருத்து நினைக்கத்தக்கது: "அறங்கள் நிலைக்க வேண்டுமானால் கடவுள் உணர்ச்சி இன்றியமையாதது; கடவுள் வாழ்த்துதலும் ஓர் அறமாம் என்று கருதியே இவ்வதிகாரம் படைக்கப்பட்டது; "எங்கும் உளனொருவன் காணுங்கொல் என்று அஞ்சி அங்கங்குலைவது அறிவு" (பொருள்: எங்கும் நிறைந்த இறைவன் காண்கின்றானென்று நடுங்கி, உடல்பதறுவதே அறிவாகும்) என்று குமரகுருபர் கூறியதுபோல கடவுளுணர்வு இருந்தாற்றான் அறங்கள் யாவும் நின்று நிலவும் என்பதற்காகவே கடவுள் வாழ்த்தையும் முதலறமாகக் கருதுகிறார் வள்ளுவர். ஆகவே அறத்துப்பால் கடவுள் வாழ்த்திலிருந்தே ஒவ்வோர் அறமாக இயங்குகிறது."

வள்ளுவர் காட்டும் கடவுளும் வழிபாட்டு முறையும் புதியன.
கடவுள் பற்றிய விளக்கத்தை முதற்குறளில் சொல்லப்பட்ட ஆதிபகவன் என்ற தொடர் சுருக்கமாகவும் தெளிவாகவும் வெளிப்படுத்துகிறது. அலகிலா உலகனைத்துக்கும் ஆதியாய், முடிவிலா முதல்வனாய், தனக்குவமை இல்லாத ஒருவனான இறைவனையே கடவுள் வாழ்த்து அதிகார வழி வள்ளுவர் நமக்குக் காட்டுகிறார்.
பலதெய்வ வழிபாட்டையும் பலநிலை வழிபாடுகளையும் மேற்கொண்டிருந்த சமுதாயத்தினிடை வள்ளுவர் ஒரு-தெய்வக் கொள்கையை உடையவராய் இருந்தார் என்று தெரிகிறது.
நிலத்திற்கோர் தெய்வமென்பது பழங்கோட்பாடாக இருந்தது. முருகன், கொற்றவை, காமன், நடுகல் இவற்றின் வழிபாடு அன்றைய மக்களிடம் இருந்தது. வள்ளுவர் மேற்கூறிய எந்த தெய்வத்தையும் வழிபாட்டையும் குறளில் எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை.
சமயக் கூறுகளான நம்பிக்கைகள் மற்றும் சடங்குகள் கடவுள் வாழ்த்தில் பேசப்படவில்லை.
தெய்வங்களுக்கு விலங்குப்பலி, குருதிப்பலி கொடுக்கும் வழக்கம் இருந்தது; அவற்றிற்கு கள், மாமிசம் கலந்த சோறு, அவித்த பருப்பு, எள்ளுருண்டை முதலியனவும் படைக்கப்பட்டதாக வள்ளுவர் காலத்துக்கு முந்தைய நூல்கள்வழி அறிகிறோம். ஆனால் கடவுள் வாழ்த்தில் இவ்விதப் பலிகளோ, தீயை வணங்குதல், திசையை வணங்குதல், கோயில் முன்னே நின்று கும்பிடுதல் போன்றவையோ, படையல்களோ, பூசை முறைகளோ, சமய விழாக்களோ கூறப்படவில்லை.
குற்றங்களிலிருந்து மீளக் கழுவாய் (பிராயச்சித்தம்), அதற்கான வேள்வி, பாவமன்னிப்பு, அர்ச்சனை, ஆசாரச் சடங்குகள் போன்றவை சொல்லப்படவில்லை.
வழக்கில் இருந்த தெய்வ வழிபாட்டு முறைகள், சடங்குகள், விழாக்கள், போன்ற எல்லாவற்றிலிருந்தும் வள்ளுவர் மிகத் தள்ளி நின்றார் என்பது வெள்ளிடைமலை.
இறைவனே அனைத்துக்கும் மூலமும் முதலுமாய முழுமுதற்பொருள் என்றும், அம்முழுமுதற்பொருளின் உண்மை உணர்ந்து அதனை நினைத்து வழிபட்டுத் தன் வாழ்வை ஒழுங்குபடுத்திக்கொள்ளுதல் வேண்டும் என்பதே கடவுள் வாழ்த்து தரும் செய்தியாகும். சிந்தையும் புலனும் கடந்த பொருளுக்கு, மாந்தர் தம் அறிவுக்கும் உணர்வுக்கும் எட்டும் முகத்தான், குணநலன்கள் ஓதி அதனை அதன் உருவமற்ற தாளை இடைவிடாது நினைத்து புகழ்பாடி வணங்கச் சொல்கிறார். 'கடவுள் வாழ்த்து'ம் முறையில் இது ஒரு புதுமையாகும்.
'இறைவன் அடி சேர்தல்' அதாவது கடவுளை மறவாது நினைத்தல் என்பதை இறைவணக்கமாகச் சொன்னது வள்ளுவரின் சிறப்புப் பங்களிப்பு ஆகும்.
பிறநூற்களில் சொல்லப்பட்ட ஐம்புலனும் அறுபகையும் கடவாத, கடவுளரைப் போல் அல்லாமல், ஒரு தனித்த கடவுளையும்..ஒரு தனித்த வழிபாட்டு முறையையும் நமக்கு அறிமுகப்படுத்துகிறது வள்ளுவரின் முதல் அதிகாரம்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard