Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 013 அடக்கமுடைமை அதிகாரப் பாடல்களின் சாரம்


Guru

Status: Offline
Posts: 7471
Date:
013 அடக்கமுடைமை அதிகாரப் பாடல்களின் சாரம்
Permalink  
 


அதிகார விளக்கம் 
அடக்கமுடைமை 
ஐம்புலனடக்கல், நாவடக்கல், சினம் அடக்கல்
குறள் திறன்-0121 குறள் திறன்-0122 குறள் திறன்-0123 குறள் திறன்-0124 குறள் திறன்-0125
குறள் திறன்-0126 குறள் திறன்-0127 குறள் திறன்-0128 குறள் திறன்-0129 குறள் திறன்-0130

openQuotes.jpgஎண்ணத்தாலும் பேச்சாலும் செயலாலும் அறத்தைப் போற்றி வாழ வேண்டுமானால், மனம், மொழி, மெய் என்பவற்றைத் தன் ஆட்சியின் கீழ் வைத்திருக்கும் ஆற்றல் வேண்டும். அவ்வாறு மனம் முதலியவை அடங்கி ஒத்துழைக்கும் வாழ்வே சிறந்த வாழ்வு.
- மு வரதராசன்

 

அடக்கமுடைமையாவது மன மொழி மெய்களால் அடங்கி ஒழுகுதலைச் சொல்வது. இப்பண்பு ஐம்புலனடக்கம், நாவடக்கம். சினம் காத்தல் என்ற தன்மைகளை உள்ளடக்கியது. அடக்கம் என்பது ஒன்றும் செய்யாமல் வாளா இருப்பதன்று. நல்லன தீயன ஆய்ந்து புலன்களை இயக்கும் உணர்வகளைத் தீயனவற்றின் நீக்கி, நல்லனவற்றில் செல்லுமாறு அடக்கியாள்வதாகும் .இது அடங்கிய நிலையன்று; அடக்கிய நிலையே. அடக்கமான வாழ்வு என்பது ஆரவாரமற்ற, செருக்கில்லாத, வரம்புக்குட்பட்ட ஒழுகலாற்றைக் குறிக்கும்.

அடக்கமுடைமை

அடக்கமுடைமை என்னும் பண்பு பற்றி விரித்துரைக்கும் அதிகாரம் இது. மெய், மொழி, மனங்கள் தீய வழியில் செல்லாது அடங்குதல் உடையன்ஆதல். எனப் பரிமேலழகர் இதை விளக்குவார்.
பொறிபுலன்களை அடக்கநிலையில் மற்றவர்க்குத் தீங்கு செய்யா நிலையில் இயங்குதலைச் சொல்வது. ஐம்புலன்களையும் வேண்டியபோது தொழில் செய்யவிட்டு, வேண்டாதபோது ஆற்றலுடன் அடங்கியிருக்கச் செய்வது. ஆர்ப்பாட்டம், செருக்கு, தீச்சொல் உமிழ்தல், சினத்தோற்றம், போன்றவை அடக்கமின்மை வெளிப்படும் வாயில்கள். இவை வெளியே தோன்றாவண்ணம் உள்ளம், உரை, உடல் ஆகியவை அடங்கியிருத்தல் அடக்கமுடைமையாம்.
நாக்கு ஒர் கொடூரமான ஆயுதம் என்பதால் சொற்காத்தல் மிகவும் வலியுறுத்தப்படுகிறது. அதிகாரத்து மூன்று பாடல்கள் மொழியடக்கம் பேசுகின்றன. சினத்தை அடக்கியவனைத் தெய்வம் தேடிச் செல்லும் என்று கதம் காத்தவன் மிக உயர்த்திச் சொல்லப்படுகிறான்..
செல்வர்க்கு அடக்கம் இருக்காதென்பது உலகியல்பாகக் கருதப்படுவதால் அவர்களிடத்தில் காணப்படும் அடக்கம் அவர்களுக்கு மேன்மை தரும் எனச் சொல்கிறது ஒரு பாடல்.

அடக்கமுடைமை அதிகாரப் பாடல்களின் சாரம்

 

  • 121 ஆம்குறள் அடக்கம் ஒருவருக்கு இறப்பில்லாத வாழ்வு தரும்; அடக்கம் இல்லாமை என்றென்றும் இருளுக்குள் தள்ளி விடும் என்கிறது.
  • 122 ஆம்குறள் உயிர்கட்கு ஆக்கந் தருவது அடக்கம். அதனைச் செல்வமாகக் காக்க என அறிவுறுத்துகிறது.
  • 123 ஆம்குறள் அடக்கும் திறன் அறிந்து செயல்பட்டால் அது விழுப்பம் தரும் என்பதைச் சொல்கிறது.
  • 124 ஆம்குறள் தன்னிலை திரியாது உள்ளடங்கி நிலைத்தவன் காட்சி மலையினும் மிகப் பெரியதாகும்; அடக்கத்தை மாறாத குணமாகக் கொள்க என்று சொல்கிறது.
  • 125 ஆம்குறள் பணிவுடைமை என்னும் அடக்கம் செல்வர்க்குச் சிறப்பான செல்வமாக அமையும் என்கிறது.
  • 126 ஆம்குறள் ஒருவழிப்பட்ட உள்ளத்திலே ஆமைபோல் ஐம்புலன்களையடக்கித் தூய வாழ்க்கை வாழச்செய்யும் முயற்சி பலகாலம் தொடர்ந்து பயனளிக்கும் எனச் சொல்வது.
  • 127 ஆம்குறள் நாவை அடக்கியே ஆக வேண்டும் என்பதை வலியுறுத்துவது.
  • 128 ஆம்குறள் ஒரு சொல்லேயானாலும் பொருளால், பயனால் தீயன உண்டானால் மற்ற எல்லா நன்மைகளும் இல்லாதனவாக ஆகிவிடும் எனச் சொல்வது.
  • 129 ஆம்குறள் தீயினால் சுட்டபுண் ஆறிவிடும். நாவினால் சுட்டது மனத்துள் வடுவாகி நிற்கும் என்பதைச் சொல்வது.
  • 130 ஆவதுகுறள் சினம் காக்கப் பழகி ஒழுகுபவனைக் காண அறமே காத்துக் கிடக்கும் எனக் கூறுகிறது..

 

அடக்கமுடைமை அதிகாரச் சிறப்பியல்புகள்

தன் நிலை உயர்ந்தாலும் அதனால் தருக்காமல் அடக்கமாக உள்ளவனைக் காணும்போது வள்ளுவருக்கு நெடிதுயர்ந்த மலைதான் நினைவுக்கு வருகிறது. நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம் மலையினும் மாணப் பெரிது எனச் சொல்கிறார். அடக்கமானவன் என்றால் அடங்கி ஒடுங்கி இரங்கத்தக்கவனாக இருப்பான் என்று எண்ணிவிடவேண்டாம் எனக் காட்டும் வகையிலும் அவனுக்கு மலைத் தோற்றம் தருகிறார் எனலாம்.

தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு என்ற பாடலில் உள்ள புண், வடு என்ற ஒரே பொருள் தரும் சொற்களை இடத்திற்கேற்றவாறு வேறுபாடு தோன்ற அமைத்த சொல்லாட்சி நினைந்து இன்புறத்தக்கது.

அடக்கம் அமரருள் உய்க்கும் என்று பொதுவாக அடக்கமுடையவனைக் கூறிய அதிகாரம் சினம் காக்கும் அடக்கமுடையவனை அறக்கடவுள் தேடிச் செல்லும் என்ற பொருள்பட அமைந்த கதம்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து என்ற கவிதை அவனை மிக மிக உயரமான இடத்துக்கு எடுத்துச் செல்கிறது.

அமரருள் உய்க்கும், காக்க பொருளா, சீர்மை பயக்கும், மலையினும் மாணப்பெரிது, செல்வர்க்கே செல்வம் தகைத்து, சோகாப்பார், நன்றாகாதாகிவிடும், என்ற தொடர்கள் கருத்துச் செறிவுடன் உள்ளன.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard