Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 017 அழுக்காறாமை அதிகாரப் பாடல்களின் சாரம்


Guru

Status: Offline
Posts: 7471
Date:
017 அழுக்காறாமை அதிகாரப் பாடல்களின் சாரம்
Permalink  
 


அதிகார விளக்கம் 
அழுக்காறாமை 
அழுக்காறில்லாத இயல்பை ஒழுக்காறாகக் கொள்க.
குறள் திறன்-0161 குறள் திறன்-0162 குறள் திறன்-0163 குறள் திறன்-0164 குறள் திறன்-0165
குறள் திறன்-0166 குறள் திறன்-0167 குறள் திறன்-0168 குறள் திறன்-0169 குறள் திறன்-0170

openQuotes.jpgஅழுக்காறாமையாவது, பிறர் செல்வம் கண்டு, 'இவனுக்கு இந்தப் பாக்கியம் வந்ததே' என்று சொல்லும் மன அழுக்கை விடுக என்றவாறு.
- பரிதி

 

அழுக்காறாமை அதிகாரம் பொறாமைப்படாதிருத்தலைச் சொல்லுவது. பொறாமை என்பது மன அழுக்கு அதாவது ஒருவனது உள்ளத்திலுள்ள மாசு குறித்தது. பிறர்க்குக் கிடைக்கும் பேறு கண்டு தாங்கிக் கொள்ள முடியாமை அழுக்காறாகும். பொறாமைக்குணம், மற்றக் குற்றங்கள் நிகழ வழி வகுப்பதால், அது முற்றிலும் களையப்பட வேண்டிய ஒன்றாகும். அழுக்காறு உடையவனை அக்குணமே அழித்துவிடும். அவனுக்கு நல்வாழ்வு இருக்காது; அவனைவிட்டுச் செல்வம் விலகிச் செல்லும்; அவனது சுற்றமும் அவனின்று நீங்கும்; உணவும் உடையும் இல்லாமல் போவான்; பொறாமை அவனை இருட்டுக்குத்தான் இட்டுச் செல்லும் என்பன இவ்வதிகாரச் செய்யுள்கள் தரும் செய்தி. பொறாமைக்காரனும் நன்றாகத்தானே இருக்கிறான், பொறாமையில்லாதவன் தேய்ந்தும் போகிறானே அதற்கு என்ன செய்வது? இதற்கு வள்ளுவர் கூறும் பதில்: கூட்டிக்கழித்துப் பார்த்தால் பொறாமையுடையார் செல்வம் பெருக்கியதும் இல்லை; அழுக்காறு இல்லாதவர் வளர்ச்சியில் குன்றியதாகவும் இல்லை என்பது. மாந்தர் அழுக்காறு இல்லாத இயல்பை ஒழுக்க வழியாகக் கொள்ள வேண்டும் என்பது இவ்வதிகார அறிவுரை.

அழுக்காறாமை

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம் (குறள் எண்: 35) என்று குறளின் பாயிர அதிகாரத்துள் ஒன்றான அறன் வலியுறுத்தலில் கூறினார் வள்ளுவர். அழுக்காறு மற்ற எல்லாத் தீமைகளுக்கும் இடமாக விளங்குவதினால்தான் வள்ளுவர் தவிர்க்க வேண்டுவனவற்றுள் அழுக்காற்றுக்கு முன்னிடம் தருகின்றார். பெருமைமிக்க மனிதனாகத் திகழ்வதற்கு வேண்டிய அறப்பண்புகளுள் இன்றியமையாததாக விளங்குவது அழுக்காறின்மை. இவ்வதிகாரம் பிறராக்கம் கண்டு தன்உள்ளத்தில் கோணல்கள் அதாவது தீய எண்ணங்கள் தோன்றாமற் செய்தலை அறிவிக்க வந்தது.
அழுக்கறு என்னும் கூட்டுவினை அழுக்காறு என நீண்டு தொழிற் பெயரானது எனக் கூறுவர். அழுக்கறாமை என்னும் எதிர்மறைத் தொழிற்பெயர் அழுக்காறாமை என நீண்டு வழங்குகின்றது. இது வராமை தராமை என்பன வாராமை தாராமை என நீண்டது போன்றது. அழுக்காறாமை என்பதற்குப் பொறாமைப்படாதிருத்தல் என்பது பொருள்.
புகழ், அறிவு, வலி, வெற்றி, பொன், நல்லூழ், நுகர்ச்சி, அழகு, பெருமை, துணிவு, நோயின்மை, போன்ற பேறுகளைக் கண்டு பொறுத்துக்கொள்ளாத இழிகுணம் பொறாமை. இவற்றை மற்றவர்கள் பெற்று விளங்குவதைக் கண்டு மனம் பொறுக்கமாட்டாமலும் அவற்றைப் பெறத் தமக்கு ஆற்றல் இல்லாமையாலும் தோன்றுவது அழுக்காறு. அழுக்காறுடையர் இவற்றிற்குக் குற்றம் குறைகளைக் கற்பித்து களங்கப்படுத்தவும் செய்வர்.
'கல்வி, புகழ், தொழில் போன்றவற்றில் அழுக்காறு கொள்ளலாம்' என்று சிலர் விதிவிலக்கு வகுக்கின்றனர். ஆனால் பொறாமை என்பது வேறு; பிறரை ஒப்பீடு செய்து அவரினும் மிஞ்சவேண்டும் என நினைக்கும் போட்டி மனப்பான்மை வேறு. போட்டி மனப்பான்மை ஊக்கம் பெறுவதற்காக எழுவது; பொறாமை, கொண்டவனது அழிவுக்கே வழிகோலும். பொறாமையாளன் நம்பிக்கை அற்றவன். பிறர் முன்னேறிவிட்டால் தான் தோற்றுவிடுவோம் என எதிர்மறையாக நினைப்பான். பிறரின் நலனில் மனம் புழுங்குவான். மற்றவர் அடைந்துள்ள பேறுகளைச் சிதைக்க, தட்டிப் பறிக்க, அல்லது பழி தூற்றச் செய்யும் முயற்சிகள் மேற்கொள்வான். அவனுக்கு முன்னேற்றம் இருக்காது. போட்டியாளன் பொறாமை அற்றவன். எனவே அவனுக்கு ஆக்கத்தில் குறைவு இல்லை.
பிறர் கொடுப்பதையும் பொறுக்காமல் தடுக்கும் கடையாயவனுக்கு வள்ளுவர் வழங்கும ஒறுப்பு மிகக் கடுமையானது. அவன் சுற்றம் இழந்து உண்ணவும் உடுக்கவும் இன்றி கெட்டலைவான் என்கிறார்.
பொதுவாகப் பொறாமைக் குணத்தையும் ஆக்கம் பெறுதலையும் தொடர்புபடுத்தியே பேசுகிறது குறள். இங்குள்ள பாடல்களிலும் மிகுதியாக ஆக்கம் அல்லது செல்வம் பெருகுதல் இவற்றுடனே அழுக்காறு இணைத்துச் சொல்லப்பட்டுள்ளன. பொறாமை நெஞ்சம் கொண்டு வளம் பெருக்கியவரும் இல்லை; அழுக்காறு இல்லாதவர்களாய் இருந்தவர்கள் தாழ்ந்து போனதும் இல்லை என்பது வள்ளுவர் துணிபு.

அழுக்காறாமை அதிகாரப் பாடல்களின் சாரம்

 

  • 161 ஆம்குறள் ஒருவன் தன் நெஞ்சத்தில் பொறாமைக் குணம் இல்லாததைத் தான் ஒழுக வேண்டிய நெறியாகக் கொள்வானாக என்கிறது.
  • 162 ஆம்குறள் எவரிடத்தும் பொறாமை இல்லாமல் நடப்பதைப் பெற்றால் விழுமங்களுள் அதற்கு ஒப்பானது வேறொன்றும் இல்லை எனச் சொல்கிறது.
  • 163 ஆம்குறள் அறவாழ்வு வேண்டாம் என்பவனே பிறன் பெற்ற நலங்களைக் கண்டு பொறாமைப்படுவான் என்கிறது.
  • 164 ஆம்குறள் இழிந்த வழியில் சென்றால் துன்பம் உண்டாதலை உணர்ந்து, பொறாமை வழிப்பட்டு அறமல்லாதவற்றை ஒருவர் செய்யமாட்டார் என்று சொல்கிறது.
  • 165 ஆம்குறள் பொறாமைக் குணம் கொண்டவருக்குப் பகைவர் கேடுண்டாக்கத் தவறினாலும் அவரது பொறாமையே தவறாமல் கெடுத்துவிடும். கெடுதி செய்ய வேறொருவர் வேண்டியதில்லை என்கிறது.
  • 166 ஆம்குறள் பிறருக்குக் கொடுக்கப்படுவது கண்டு பொறாமை கொள்பவன் சுற்றமும் உடுக்கவும் உண்ணவும் இல்லாமல் அழிந்துபோவான்.
  • 167 ஆம்குறள் பொறாமைப்படுபவனைத் திருமகள் வஞ்சனை கொண்டு தன் அக்காளுக்குக் காட்டி அவனிடத்தில் வறுமை புகுமாறு செய்துவிடும் எனக் கூறுகிறது.
  • 168 ஆம்குறள் பொறாமை என்னும் பெரும் பாவம் அக்குணம் கொண்டவனின் செல்வத்தை அழிப்பதுடன் தீய இடங்களிலும் அவனைக் கொண்டு சேர்த்துவிடும் என எச்சரிக்கிறது.
  • 169 ஆம்குறள் பொறாமைக் குணம் கொண்டவன் இடத்துள்ள செல்வமும் நேரான நெஞ்சம் உள்ளவனிடமுள்ள வறுமையும் ஆராயப்படவேண்டும் எனக் கூறுகிறது.
  • 170 ஆவதுகுறள் பொறாமையால் வளம் பெருக்கியவரும் இல்லை; பொறமை இல்லாமல் வளர்ச்சியில் சுருங்கியோரும் இல்லை எனக் கூறுகிறது.

 

அழுக்காறாமை அதிகாரச் சிறப்பியல்புகள்

ஒருவனை மோசமாக இழித்துரைக்க வேண்டுமென்றால் 'சோறு தண்ணி இல்லாமல் போகட்டும்' எனத் திட்டுவர். வள்ளுவர் இன்னும் வெறுப்புடன் 'சுற்றமும் போய் உண்ணவும் உடுக்கவும் இன்றிக் கெடட்டும்' என வசை பாடுகிறார். யாரைப் பார்த்து இப்படிச் சொல்கிறார்? ஒருவன் இழிவென்று பாராமல் 'ஈ'யெனச் சொல்கிறான். அவனுக்கு ஒன்றும் கொடுக்கவிடாமல் பொறாமைக்காரன் ஒருவன் தடுக்கிறான். அவன் வாங்கி வாழ்ந்துவிடக் கூடாதாம்! எனவே பொறாமை கொண்டு கொடுப்பதைத் தடுக்கிறான். அந்த அழுக்காறுடையானை நோக்கியே கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம் உண்பதூஉம் இன்றிக் கெடும் (குறள்: 166) என வெஞ்சினம் உரைக்கிறார்.

அறமல்லாதவற்றுள் முதன்மையாக அழுக்காற்றை வள்ளுவர் கருதுவதால் அதைப் பாவி என்று உருவகித்துக் குறிப்பிடுகின்றார். அழுக்காறு வேறு-பாவி வேறல்ல என்ற கருத்தை விளக்குவதற்காக 'என ஒரு பாவி' என்றும் சொல்கிறார். இங்கு அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத் தீயுழி உய்த்துவிடும் (குறள்: 168) என மிகுந்த வெறுப்புடனே அழுக்காறு குணத்தைப் 'பாவி' எனக் கூறினார்.

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான் கேடும் நினைக்கப் படும் (குறள்: 169) என்ற குறளில் ஒரு புறம் பொறாமைக் குணம் கொண்ட தீயவர்கள் நன்றாக வாழ்வதும் மறுபுறம் பொறாமை இல்லதவர்கள் கேடுறுவதுமான அறத்திற்கு முரணான நிலைமை ஆராயப்படவேண்டும் என்று சொன்னது அறிவியல்துறையில் உள்ளது போன்ற ஓர் புதிய அணுகுமுறை என்பார் வ செ குழந்தைசாமி.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard