Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 020 பயனில சொல்லாமை அதிகாரப் பாடல்களின் சாரம்


Guru

Status: Offline
Posts: 7329
Date:
020 பயனில சொல்லாமை அதிகாரப் பாடல்களின் சாரம்
Permalink  
 


அதிகார விளக்கம் 
பயனில சொல்லாமை 
சொல்லற்க சொல்லின் பயனிலாச் சொல்
குறள் திறன்-0191 குறள் திறன்-0192 குறள் திறன்-0193 குறள் திறன்-0194 குறள் திறன்-0195
குறள் திறன்-0196 குறள் திறன்-0197 குறள் திறன்-0198 குறள் திறன்-0199 குறள் திறன்-0200

openQuotes.jpgபயனில்லாத சொற்களைச் சொல்லிப் பழகுகின்றவன், கள்ளுண்பவனைப் போலவும் சூதாடுபவனைப் போலவும் காலத்தை வீணாக்கி, ஆற்றலையும் வீணாக்கி, கடமையையும் மறக்கின்றான். அதனால் அவன் அடையும் பயனோ பொய்யான இன்பம். தன்னைத் தானே ஏமாற்றிக்கொள்ளும் போலி இன்பம். அறத்தைப் போற்றி வாழ வேண்டியவன் இவ்வாறு வீண்வாழ்வு வாழக்கூடாது.
- மு வரதராசன்

 

பயனில சொல்லாமையாவது வீண்வார்த்தைகளைப் பேசாமலிருப்பது. இது பொதுவாக யாவரிடத்திலும் எந்தச் சூழலிலும் பயனற்ற பேச்சுகளைப் உரைக்காமல் இருப்பதைக் குறிக்கும். பயனில்சொல்வான் சீரும் சிறப்பும் இழப்பான் என்று சொல்லப்பட்டு, அவன் நயனிலன் என்றும் மனிதப்பதர் என்றும் இவ்வதிகாரத்தில் இகழப்படுகிறான். சான்றோர், அறிவினார், மாசறு காட்சியவர் போன்றோர் பயனில சொல்லமாட்டார்கள் என இங்கு கூறப்படுகிறது. இயல்பான வாழ்க்கையில் எல்லாமே கருத்தாழம் மிக்க பேச்சுக்களாக இருக்க முடியாது. அதில் அறியாமையுடன் கூடிய மகிழ்ச்சிச் சொற்களுக்கும் இடம் உண்டு. எனவேதான் பயனில சொல்லாமையை மிகப்பெரிய கொடிய குற்றமாகக் கருதாமல் இத்தொகுப்பில் வள்ளுவர் அறிவுரை வழங்கியுள்ளார் போல் தெரிகிறது. பல்லார்முன், பல்லாரகத்து என்ற தொடர்கள் வருவதால், பலபேர் கூடியுள்ள இடத்தில் வெற்றுரைகள் கூறவேண்டாம் என்பது வலியுறுத்தப்படுகிறது.

பயனில சொல்லாமை

பொய்மை, கடுஞ்சொல், புறங்கூறுதல் (குறளை), பயனில் சொல் ஆகிய நான்கு வகை பேச்சுக்களையும். மணிமேகலை சொற்குற்றங்களாகக் குறிப்பிடுகின்றது. வாய்மை, இனியவை கூறல், புறங்கூறாமை ஆகிய அதிகாரங்கள் மற்றவற்றைக் கூற பயனில் சொல்லைச் கடிவது இங்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. புறங்கூறத் தலைப்பட்டவன், வெற்றுரை பேசவும் பின்வாங்கமாட்டான் என்பதால் புறங்கூறாமை அதிகாரத்துக்குப் பின்னர் பயனிலசொல்லாமை அதிகாரம் வைக்கப்பட்டது.
தமக்கும் பிறர்க்கும் பயன்படாத சொற்களைப் பேசுதல் பயனில சொல்லுதல் ஆகும். இது இவ்வதிகாரத்தில் பொருள் தீர்ந்த அதாவது பொருளற்ற சொல் எனவும் குறிக்கப்பெற்றது. இதை வீண்பேச்சு, சோம்பல் பேச்சு, அற்பப் பேச்சு, சொற்பந்தல் போடுதல் எனவும் சொல்வர். பயனில பேசுவதால் பேசுபவனுடையதும் எதிரில் இருப்பவர்களதுமான காலமும் ஆற்றலும் வீணாகின்றன. வெறும் சொல்வன்மையைக் காட்டவோ, தான் எது சொன்னாலும் கேட்டுக் கொள்ள வேண்டிய நிலையிலே சிலர் உளர் என்ற நினைப்புடனோ, எந்தவிதமான பயனும் தராததைப் பேசுவர்கள் இதைக் குற்றமென்றே நினைப்பதில்லை. வாழ்க்கையில் நோக்கமில்லாதவர்கள், யாதொரு கடமையும் பொறுப்புடன் ஏற்றுக்கொள்ளாதவர்கள், பிறரை ஏமாற்றி வாழ்பவர்கள், நடுநிலைப் பண்பில்லாதவர்கள் ஆகியோர் வீண் அரட்டை, வம்புப் பேச்சுகளிலும், வெற்று ஆரவாரப் பேச்சுக்களிலும் ஈடுபடுவர்.
அறிவு, பண்பு, நீர்மை, மனிதத்தன்மை ஆகியவற்றிற்கு எதிரானதென்பதாகக் குறள் பயனில சொல்லைக் கடிகிறது.
'அற்பப் பேச்சானது பலரது சினத்தைத் தூண்டுவதால் அது பலராலும் இகழப்படும். அதிலிருந்து எவ்வித பயனும் கிடைப்பதில்லை. பயனில பேசுபவன் தனது சிறப்புகளையும் உயர்வுகளையும் இழப்பான். அறிவுக் கூர்மையும் உணர்வாற்றலும் கொண்ட பெரியவர்கள் அறத்தை விரும்புகிறவர்கள், வீண் வார்த்தைகளைப் பேசமாட்டார்கள். அவர்கள் தெளிவான காட்சி கொண்டவர்கள், பயனற்ற வார்த்தைகளைப் பேசுகின்றவர்களை மக்களுள் பதர் என்று அழை எனச் சொல்கிறார் வள்ளுவர்.

முன்னேற்றம் அடைந்த நாடுகளில் பயனின்றிப் பேசித்திரியும் பழக்கம் இல்லை; அதற்கான நேரமும் அவர்களிடம் இல்லை என்பது நினைக்கத்தக்கது. இன்று பயனற்ற செய்தி பரப்பும் ஊடகங்களையும், ஊடகங்கள் வழி தேவையற்றனவற்றைப் பேசுவோரையும் பயனில சொல் பாராட்டுபவர்களாகக் கொள்ளலாம்.

பயனில சொல்லாமை அதிகாரப் பாடல்களின் சாரம்:

 

  • 191 ஆம்குறள் பலரும் வெறுக்கப் பயனற்ற சொற்களைச் சொல்பவன் எல்லாராலும் இகழப்படுவான் என்கிறது.
  • 192 ஆம்குறள் வீண் சொற்களைப் பலர் முன் சொல்லுதல் விருப்பம் இல்லாத செயல்களை நண்பர்களிடத்தில் செய்தலினும் கெடுதியானது எனச் சொல்கிறது.
  • 193 ஆம்குறள் பயனில்லாதவற்றை விரித்துரைக்கும் ஒருவனது வெற்றுரை அவன் விளங்காதவன் என்பதனை அறிவிக்கும் என்கிறது.
  • 194 ஆம்குறள் பயனில்லாத பண்பற்ற சொற்களைப் பலரிடையே பேசுவது சிறப்பில்லாதவையாய் நன்மையடைவதிலிருந்து தடுக்கும் என்று சொல்கிறது.
  • 195 ஆம்குறள் இனிய இயல்புடையவர்கள் பயனில்லாதவற்றைச் சொன்னால் அவர்களது விழுப்பமும் சிறப்பும் நீங்கும் என்கிறது.
  • 196 ஆம்குறள் பயனற்ற வார்த்தைகளைப் பாராட்டுவானை மனிதன் என்று சொல்லற்க; மனிதருக்குள் பதர் என்று சொல்க எனச் சொல்கிறது.
  • 197 ஆம்குறள் சான்றோர் இனிமை இல்லாத சொற்களைச் சொன்னாலும் சொல்லட்டும்; வெற்றுரை சொல்லாதிருத்தல் நல்லது எனக் கூறுகிறது.
  • 198 ஆம்குறள் அரிய பயன்களை ஆராய்ந்து அடைய முயலும் அறிவுடையார், பெரிதும் பயனில்லாத சொல்லினைச் சொல்லார் என்கிறது.
  • 199 ஆம்குறள் மயக்கம் நீங்கிய குற்றமற்ற தெளிவினையுடையவர், பொருளல்லவற்றை மறந்தும் சொல்லமாட்டார் எனக் கூறுகிறது.
  • 200 ஆவதுகுறள் பேசும்போது பயனுடைய சொற்களையே சொல்லுக; சொற்களில் பயன் இல்லாத சொற்களைப் பேசாதீர் என அறிவுறுத்துகிறது.

 

பயனில சொல்லாமை அதிகாரச் சிறப்பியல்புகள்

மனிதன் பெற்றுள்ள சிறப்புகளுள் சொல்லும் ஒன்று. சொல்லாட்சி தோன்றியது பொருளை உணர்த்துவதற்குத்தான். பொருள் வழிப் பயன் பெறுதலும், தருதலுமே சொற்களின் நோக்கம். பயனுடைய சொற்களே சொல். பயனற்றவைகள் 'சொல்' ஆவதில்லை. மனிதனின் வழிவழிப்பட்ட முயற்சியாய் தோன்றும் சொற்கள் ஒருவருக்கும் பயனற்றவைகளாகப் போவதைப் பார்த்து வள்ளுவர் வருந்துகிறார். சொல்லே தனிச்சிறப்பாக மனிதனுடைய இயல்பு, குணம், பெருமை, சிறுமை, செயல் அனைத்தையும் குறிப்பிட்டுவிடும் என்பது உண்மையாதலின், சொற்களைப் பயனற்றனவாகப் பேசுபவன், தானும் பயனற்றவன் என்பதைத் தானே வெளிப்படுத்துபவனாய் விடுகிறான். ஆகையால் பயனற்ற சொற்களைப் பேசாதே என்று இவ்வதிகாரத்தில் கூறுகிறார்.

பண்புடையவர்கள் பயனில சொல்லக்கூடாது என்று எதிர்பார்க்கப்படுபவர்கள் என்பது வள்ளுவர் எண்ணம். சீர்மை சிறப்பொடு நீங்கும் பயன்இல நீர்மை உடையார் சொலின் என்னும் பாடல் (குறள் 195) இனிய குணமுடையார் பயனில்லாதவற்றைச் சொன்னால் விழுப்பமும் சிறப்பும் நீங்கும் என்கிறது.

பயனில்சொல் பாராட்டு வானை மகன்எனல் மக்கட் பதடி எனல். என்று 196 ஆம்குறள் வழி பயனற்ற வார்த்தைகளைப் பேசுகின்றவர்களைச் சாடுகிறார் வள்ளுவர். அவர்களை மனிதர்கள் என்றே அழைக்காதே; மனிதப் பதர் என்று சொல்லவேண்டும் என்கிறார். நெற்பதருக்கு மணி என்னும் உள்ளீடு இல்லை; அதுபோல பயனில பேசும் மனிதப் பதருக்கும் உள்ளீடு ஒன்றும் இல்லை என்பது இப்பாடலின் பொருள்.
இக்குறளுக்கு ஓர் சிறப்பு உண்டு - 'எனல்' என்ற சொல் இரண்டு இடங்களில் வருகிறது. அதில் முதலிடத்தில் 'சொல்லாதீர்' என எதிர்மறைப் பொருளிலும், அடுத்த இடத்தில் 'சொல்லுக' என உடன்பாட்டு நிலையிலும் ஆளப்பட்டு கவிதை இன்பம் நல்குகிறது.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard