Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 021 தீவினையச்சம் அதிகாரப் பாடல்களின் சாரம்


Guru

Status: Offline
Posts: 7478
Date:
021 தீவினையச்சம் அதிகாரப் பாடல்களின் சாரம்
Permalink  
 


அதிகார விளக்கம் 
தீவினையச்சம் 
தீயவை தீயினும் அஞ்சப்படும்.
குறள் திறன்-0201 குறள் திறன்-0202 குறள் திறன்-0203 குறள் திறன்-0204 குறள் திறன்-0205
குறள் திறன்-0206 குறள் திறன்-0207 குறள் திறன்-0208 குறள் திறன்-0209 குறள் திறன்-0210

openQuotes.jpgஇதுகாறும் விலக்கப்பட்ட தீயனவற்றையும், அவற்றுள் அடங்காது எஞ்சி நின்றவற்றையும் தொகுத்து விலக்கக் கருதித் தீய செய்தற்கு அஞ்சுதல் என்றார். ஆறு சென்றவழி மிதவை போலவும், நாண் சென்றவழிக் காசு போலவும், மனம் போனவழிப் போவது செயலாதலின், மனம் அடங்கின் தீ வினை நிகழாது ஆதலின், தீவினை அச்சம என மனத்தின் தொழிலாகக் கூறினார்
- நாகை சொ தண்டபாணியார்

 

தீவினையச்சம் என்பது தீய செயல்களைச் செய்வதற்கு அஞ்சுதல் எனப்பொருள்படும். தீவினை நிகழ்தல் உடலின் தொழில்; தீவினைக்கு அஞ்சுதல் மனத்தின் செயல்; தீவினையச்சம் என்பது செயலின் தீமை நிகழாமல் தடுத்தல் பொருட்டுத் தீய எண்ணங்கள் உள்ளத்தில் உண்டாவதைத் தடுக்க வேண்டும் என்பதைச் சொல்வதாகிறது எனத் தெளியலாம். அஞ்சுவது அஞ்சாமை பேதைமை - பயப்படவேண்டியதிற்குப் பயப்படவேண்டும். தீயசெயல் அஞ்சப்படவேண்டும். விழுப்பங்களை (மதிப்புகளை) வேண்டுவோர் தீவினை செய்ய அஞ்சுவர். தீவினைப் பயன்கள் அதைச் செய்தவனை விடாமல் துரத்திக்கொண்டே இருக்கும். தீய நெறியில் நழுவிச் செல்லாதவன் கேடு இல்லாதவன் என அறியலாம். இவை இவ்வதிகாரப் பாடல்கள் தரும் செய்திகள்.

தீவினையச்சம்

காலிங்கர் உரை இவ்வதிகாரத்துப் பொருண்மையை நன்கு உணர்த்துகிறது. அவர் ஒருவன் ஒன்றை முயலும்போது மனத்தினால் கருதி, வாக்கினால் உரைத்து உடலால் செய்வர். அவற்றுள் அடக்கமுடைமை, வெஃகாமை எனப் பலவாறான மனக்கருத்தின் அறஇயல்பு உணர்த்தி, பின்பு புறங்கூறாமை, இனியவை கூறல் எனப் பலவற்றால் வாய்மொழியின் அறஇயல்பு உணர்த்தி, மற்று இனித் தீவினைஅச்சம், ஒப்புரவறிதல், ஈகை, புகழ் என்பனவற்றால் உடம்புச் செய்தியின் அறத்தியல்பு உணர்த்துவான் எடுத்துக்கொண்டார்; அவற்றுள் முதலில் தீவினைக் குற்றம் அறிவிக்கின்றது' என்ற பொருள்பட மொழிகிறார்.
தண்டபாணி தேசிகர் 'தீவினை செய்தல் மெய்யின் செயலும், அதற்கு அஞ்சுதல் மனத்தின் தொழிலுமாக இருத்தலின் உள்ளம் உள்ளியதையன்றி உடல் நிகழ்த்தாதாதலின் ஒற்றுமை நயம்பற்றி அதன் செயலாகக் கொள்ளினும் இழுக்காது என்க' என இவ்வதிகாரம் பற்றிக் கருத்துரைப்பார்.

தீவினை பழக்கத்தால் செய்யப்படுகிறது. இச்செயலைச் செய்தால் பழி வருமே என்று தெரிந்தும் செய்யப்படுவதும், இச்செயலால் ஏற்படும் தீய விளவுகளைப் புறக்கணித்துச் செய்யும் செயலும் தீவினை என அறியப்படும்.

உலக இயக்கம் உயிர்களின் செயற்பாட்டில் அதாவது வினைசெய்தலில் அமைந்து கிடக்கிறது. தீய வினை தீமை தரும். தீமையின் பக்கம் ஒருவன் சாயாமல் இருப்பதற்கு அதன்மேல் அச்சம் கொள்ளவேண்டும். நெருப்பினுள் நுழைய அஞ்சுவது போல் தீவினைகள் என்ற பகுதிக்குள் செல்ல அஞ்சவேண்டும். மேன்மையான குணம் கொண்டோர் தீமை செய்ய நடுங்குவர். தீய செயல்களில் ஈடுபடற்கு, இல்லாமை ஒரு காரணமாக இருக்கக் கூடாது. தீய செயல்களைச் செய்வாரை அவற்றின் விளைவுகள் தாமாகவே தொடர்ந்து பின் சென்று வருத்தும், அவர்கள் அதன் விளைவுகளிலிருந்து தப்பமுடியாது.
அறக்கடவுள் ஒருவனது தீய செயல்களைக் கண்காணித்து உரிய காலத்தில் ஒறுக்கும் என்பது வள்ளுவரது உறுதியான நம்பிக்கை. மு வரதராசன் 'ஊழால் இன்ப துன்பங்களும் அமைகின்றன. புறவாழ்வில் செல்வம் நுகர்வு முதலியவற்றை அமைப்பது போலவே அகவாழ்வில் பிறர்க்கு நன்மை செய்தோர் நன்மை அடையுமாறும் தீமை செய்தோர் தீமை அடையுமாறும் ஊழே அமைகின்றது. அகவாழ்வில் அறத்தைப் போற்றி வளர்க்க உரிமை கொடுத்த ஊழ் அதற்கு ஏற்ப நன்மை தீமை விளையும் முறை பிறழாமல் ஆட்சி புரிந்து வருகின்றது. அதாவது அறநெறி போற்றி வாழ்ந்தால் நன்மை விளையுமாறும், அறநெறி புறக்கணித்து வாழ்ந்தால் தீமை விளையுமாறும் அமைந்திருக்கின்றது. அறத்தைப் போற்றவும் புறக்கணிக்கவும் மக்களுக்கு உரிமை இருக்கின்றதே அல்லாமல் அதனால் விளையும் நன்மை தீமையை மாற்றிவிட உரிமை இல்லை. இந்தக் கருத்தையே திருவள்ளுவர் இவ்வதிகாரக் குறள்களிலும் அறிவித்துள்ளார்' என்பார்.
தீவினை என்பதற்குப் பாவம் என்ற பொருளைப் பல உரையாளர்கள் கொள்வர்.

தீவினையச்சம் அதிகாரப் பாடல்களின் சாரம்

 

  • 201 ஆம்குறள் தீச் செயல்களைச் செய்தல் என்னும் செருக்கு கொடியதொழிலார் அஞ்சாது செய்வர்; மேலோர் செய்ய அஞ்சுவர் என்கிறது.
  • 202 ஆம்குறள் கொடிய செயல்கள் தீமைகளையே தருவதால், தீயினும் அஞ்சப்படும் எனச் சொல்கிறது.
  • 203 ஆம்குறள் கொடிய செயல்களைத் தம்மை வருத்தியவரிடத்தும் செய்யாதொழிதல் அறிவுடைமை எல்லாவற்றுள்ளும் சிறந்தது என்று சொல்வர் என்கிறது.
  • 204 ஆம்குறள் பிறனுக்குத் தீமை பயக்குஞ் செயல்களை மறந்தும் எண்ணாது ஒழிக; எண்ணினால் எண்ணுபவனுக்குக் கேடு செய்ய அறக் கடவுள் எண்ணும் என்று சொல்கிறது.
  • 205 ஆம்குறள் இல்லாதவன் என்பதற்காகத் தீய செயல்களைச் செய்யவேண்டாம்; செய்வானாயின் மறுபடியும் மிகையாக வறியவனாக நேரிடும் என்கிறது.
  • 206 ஆம்குறள் துன்பப் பகுதிகள் தன்னை நெருங்குதலை விரும்பாதவன் தீமையானவற்றைத் தான் பிறருக்குச் செய்யாது ஒழிக எனச் சொல்கிறது.
  • 207 ஆம்குறள் எவ்வளவு பெரிய பகையிலிருந்தும் தப்பிப் பிழைக்க வழியுண்டு; தீச்செயலாகிய பகை விலகாது தொடர்ந்து சென்று கொல்லும் எனக் கூறுகிறது.
  • 208 ஆம்குறள் தீயசெயல்கள் செய்தவர் கேடுறுவர் என்பது ஒருவனுடைய நிழல் விடாது அவனது அடிக்கீழ்த் தங்குவது போன்றது என்கிறது.
  • 209 ஆம்குறள் தன் நலத்துக்காக என்றாலும் ஒரு சிறுதும் தீய செயல்களின் பக்கம் செல்லாதே எனக் கூறுகிறது.
  • 210 ஆவதுகுறள் நேர்வழியிலிருந்து விலகிச்சென்று தீமைகளைச் செய்யவில்லையானால் கேடு இல்லாதவன் என அறியலாம் என்கிறது.

 

தீவினையச்சம் அதிகாரச் சிறப்பியல்புகள்

தொட்டால் தீ உறுதியாகச் சுடும். இன்னும் அதனை நெருங்கிச் சென்றால் எரித்துச் சாம்பலாக்கிவிடும். அதைப்போன்றே தீயன பக்கம் நழுவிச்சென்று விட்டால் அழிவு உறுதி என்ற கருத்தைத் தருவது தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப் படும் (குறள் 202) என்ற பாடல். தீயாவது பல நன்மைகளைச் செய்ய உதவும். ஆனால் தீயவை என்றென்றும் செய்தவனுக்குத் தீமையை மட்டும்தான் விளைவிக்கும் என்பதையும் உணர்த்துகிறது இது.

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின் அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு (குறள் 204) என்ற பாடல் அறம் என்ற இறைச்சட்டம் பிறர்க்குத் தீங்கு செய்த எண்ணுபவனை ஒறுக்கத் திட்டமிடும் என்கிறது. ஒருவன் தீச்செயலை எண்ணிய அளவிலேயே இறைஆற்றல் தன் கடமையைச் செய்ய ஆயத்தமாகிவிடும் என்பது இதன் கருத்து.

நாம் எங்கெங்குச் சென்றாலும் நமது நிழலும் நம்முடனே தொடர்ந்து வரும். அது நம்மை விட்டு ஒரு பொழுதும் பிரிவதில்லை. அதுபோல, நாம் செய்த வினை நம்மைவிட்டு ஒரு சிறுதும் விலகாமல் நம்மைத் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும் என்னும் கருத்தை தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை வீயாது அடிஉறைந் தற்று (குறள் 208) என்ற குறள் கூறுகின்றது. தன்னால் விளைந்தது என்பதையும் தன்னை விட்டு விலகாதது என்பதையும் உணர்த்த, தீவினைக்கு ஒரு பொருளின் கீழ் அதனையே தொடர்ந்து செல்லும் நிழல் உவமையாகக் கூறப்பட்டது. இது தீயசெயல் செய்தவர் எந்நிலையிலுள்ளவரே யாயினும் எத்தன்மை வாய்ந்தவரேயாயினும் தாம் செய்த செயலின் பயனினின்றும் தப்பிப் பிழைக்க முடியாது என்ற கருத்தைப் படிப்போர் மனதில் நன்கு பதியவைப்பதாகும். .



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard