Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 022 ஒப்புரவறிதல் அதிகாரப் பாடல்களின் சாரம்


Guru

Status: Offline
Posts: 7471
Date:
022 ஒப்புரவறிதல் அதிகாரப் பாடல்களின் சாரம்
Permalink  
 


அதிகார விளக்கம் 
ஒப்புரவறிதல் 
பொதுநலத் தொண்டு ஆற்றுதல்.
குறள் திறன்-0211 குறள் திறன்-0212 குறள் திறன்-0213 குறள் திறன்-0214 குறள் திறன்-0215
குறள் திறன்-0216 குறள் திறன்-0217 குறள் திறன்-0218 குறள் திறன்-0219 குறள் திறன்-0220

openQuotes.jpgநம்மிலே எவருக்கும் நாம் என்ன சாதிக்கிறோம், மனித குடும்பத்துக்கு நாம் என்ன வழங்குகிறோம் என்பது தெரிவதில்லை. நம்மிடமிருந்து அது மறைந்து நிற்கிறது. சில வேளைகளில் அந்தப் புதைபொருளின் சிறுபகுதியைத்தான் நாம் காண்கிறோம்.
- ஆல்பர்ட் சுவைட்சர் (Albert Schweitzer)

 

ஒப்புரவுஅறிதல் என்பது உலக ஒழுக்கத்தை அறிந்து ஒருவர்க்கொருவர் உதவி செய்து ஒத்துப்பழகுவதைக் குறிப்பது. இது தானே அறிந்து செய்யும் தன்மையதாதலால் ஒப்புரவு-அறிதல் எனப்பட்டது. அன்பின் அகத்தூண்டுதலால் விளைவது ஒப்புரவு. அது ஒருவன் தான் வாழும் சமுதாயத்தோடு தன்னை அடையாளம் கண்டு பொதுக்கொடை வழங்குவதும் பொதுநலத் தொண்டு ஆற்றுவதும் ஆம். தான் சமுதாயத்திற்கு இன்றியமையாது செய்யும் கடமை என்பதை உணர்ந்து ஒப்புரவாளன் ஊருணி, பயன்மரம், மருந்துமரம் இவை போல உலகத்துக்குப் பயன்படும் வகையில் நற்பணிகள் செய்வான் என்கிறது அதிகாரப் பாடல்கள்.

ஒப்புரவறிதல்

ஒப்புரவு என்பதற்கு பிறர்க்கு உதவிடும் இனிய ஒழுக்கம், இணைந்து (ஒத்து, இசைந்து, பொருந்தி) ஒழுகுதல், ஒத்துப்போகும் மெல்லியல்பு என அகராதி பொருள் தருகிறது. ஒ+புரவு எனப் பிரித்து 'மன்பதைக்கு ஒத்த நிலையில் கொடை செய்தல்' என்பார் வ சுப மாணிக்கம். 'ஒப்புரவறிதல் உலகநடையை அறிந்து செய்தல். உலகநடையறிதலாவது உலகம் நடைபெறுவது மக்கள் பலர்கூடி ஒருவர்க்கொருவர் உதவி வாழ்தலாற்றான் என்பதையறிதல்' என விளக்குவார் நாகை சொ தண்டபாணிப் பிள்ளை. இவ்வாறு ஒப்புரவு என்ற சொல்லுக்கு உதவி, வள்ளன்மை, உலகநடையறிந்து செய்தல் எனப் பொருள் கூறுவர்.
..........................................................உறுநர்
தாமே ஒப்புரவு அறியின், ''தேமொழிக்
கயல் ஏர் உண்கண் குறுமகட்கு
அயலோர் ஆகல்'' என்று எம்மொடு படலே! 
(நற்றிணை 220 பொருள்: ...இப் பெரிய மயக்கமுடையவர்கள் தாம் உலகநடை அறிந்திருப்பாரேயாயின், எம்மைச் சுட்டித் "தேன்போலும் மொழியையும் கயல் போன்ற மையுண்ட கண்ணையுமுடைய நம் இளமடந்தைக்கு இத்தோழிமார் அயலாந் தன்மையுடையர்" என்று எம்முடன் சொல்லாடல் எவ்வளவு வியப்புடையது?) என்ற சங்கப்பாடலில் ஒப்புரவு என்ற சொல் 'உலக நடையறிந்தவர்' என்ற பொருளிலே ஆளப்பட்டுள்ளது.

ஒப்புரவு என்பதை பொதுநன்மைக்காகச் செய்யும் பயன்கருதாத தொண்டு என விளக்கலாம். உலகமெல்லாம் ஒன்று எனக் கருதி ஒருவருக்கொருவர் உதவி வாழ்வது ஒப்புரவாகும். இது தொடர்புடையாளரிடம் செலுத்தும் அன்பு போன்றதோ அல்லது இரக்கப்பட்டு உதவுவது போன்றதோ அல்ல. உலகமெல்லாம் ஒரு குடும்பமாய் ஒத்து இயங்கும் தன்மையை அறிந்து கொண்ட மேலான அன்பின் உந்துதலால் எழும் உதவும் தன்மை ஆகும். மனித வாழ்க்கை இரு நிலைகளில் அமைகின்றது. ஒன்று, தான், தன் குடும்பம் என்ற ஒரு சிறு வட்டத்திற்குள் வாழ்வது; மற்றொன்று பொதுநலமுடையவனாக வாழ்வது. ஒப்புரவுச் செயல்கள் உலக நடப்பை அறிந்து, அவ்வப்போது அங்கங்கு செய்யப்படும் பொதுநலப் பணிகள் அனைத்தும் ஆகும். இவை காலத்தினாற் செய்தனவும், பயன் தூக்கார் செய்தனவும், செய்யாமற் செய்தனவும் ஆகத் தேவைக்கு இன்றியமையாமையன இயற்றப்படுவன. உதவியுள் பொருள் செலவிடுதல், சோறுஈதல் மட்டும் அன்று. காலம் ஒதுக்குதல், ஆற்றல் வழிச் செய்யும் பணிகள் போன்றவையும் அடங்கும்.

நம்மைச் சுற்றியுள்ளவர்களைப் புரிந்துகொண்டு கூட்டுறவான வாழ்வு தோன்றுகின்ற போது ஒப்புரவு நிகழ்கிறது. ஒப்புரவு செய்வதற்கு ஒருவர் செல்வம் படைத்தவராக இருக்க வேண்டும் என்பதில்லை. பொதுத்தொண்டு செய்ய ஒருவர் தனது நேரத்தையும் ஆற்றலையும் செலவழிக்க முன்வந்தாலே அவர் ஒப்புரவாளர் ஆகிறார். இக்காலத்தில் நிறுவன அமைப்புகளின் வழியும் நிறைய ஒப்புரவு பணிகள் நடைபெறுகின்றன. NGO (Non-Governmental Organization) என அறியப்படும் நிறுவனங்களில் விருப்பார்வத்தொண்டர் (volunteer) ஆக ஊதியம் எதுவும் பெறாமல் முழுநேர/பகுதி நேரப் பணியாகச் ஒப்புரவுகள் ஆற்றப்படுகின்றன. கழிவுகளை அகற்றி ஊரைத் தூய்மைப்படுத்துதல், குருதிக்கொடை போன்ற மருத்துவ முகாம்கள் நடத்துதல், ஆதரவற்றோர் இல்லங்களில் முதியோர், சிறுவர், ஊனமுற்றோர் இவர்களுக்குத் தேவைப்பட்ட உதவிகள் செய்தல். புயல், கடும்மழை, வெள்ளம், ஆழிப் பேரலை, தீ போன்ற இயற்கைப் பேரழிவுகளால் பாதிக்கப்பட்டோருக்கு காப்பு அளித்தல். நூலகம் கட்டுதல், கல்வி நிலையம், உடற்கழகம், தண்ணீர்ப்பந்தல். பூங்கா, விளையாடு களம் அமைத்தல் என்றின்னவை ஒப்புரவுப் பணிகளுக்குக் காட்டுக்கள்.

ஒப்புரவு வேறு. ஈகை வேறு. ஈகை என்பது ஒன்று தேவைப்பட்டவர் இரந்து கேட்க அதை அவர்க்குக் கொடுத்தல். ஒப்புரவு பொதுநல நோக்குடன் அனைவர்க்கும் செய்யப்படும் உதவி. அன்புடைமை, அருளுடைமை என இரு தனித்தனி அதிகாரங்கள் இருப்பதுபோல, ஒப்புரவு, ஈகை எனும் இரு பெயரால் அதிகாரங்கள் அமைக்கப்பட்டமையே, இச்சொற்கள் வேறுபட்ட பொருளின என்பதை அறியலாம்.

ஒப்புரவறிதல் அதிகாரப் பாடல்களின் சாரம்

 

  • 211 ஆம்குறள் மழைக்கு உலகம் மாற்று உதவி செய்ய முடியுமா என்ன? ஒப்புரவு பதில்உதவி எதிர்பார்க்காத கடப்பாடு ஆகும் என்கிறது.
  • 212 ஆம்குறள் ஒப்புரவாளன் முயற்சி செய்து கிடைத்த பொருளெல்லாம் தக்கவர்க்கு உதவி செய்வதற்காகவே செலவிடுவான் எனச் சொல்கிறது.
  • 213 ஆம்குறள் பொது நன்மை செய்வதினும் நல்லன வேறு, தேவருலகத்தும் இவ்வுலகத்தும் பெறுதல் இயலாது என்கிறது.
  • 214 ஆம்குறள் ஒப்புரவு அறிந்தவன் உயிரோடு கூடி வாழ்பவனாவான் அதனை அறியாதவன் செத்தவர்களில் ஒருவனாகக் கருதப்பெறுவான் என்று சொல்கிறது.
  • 215 ஆம்குறள் உலக நலம் விரும்பும் ஒப்புரவை நன்கு அறிவானது செல்வம், ஊருணியில் நீர் நிறைந்தாற் போன்றது என்கிறது.
  • 216 ஆம்குறள் பிறர்க்கு உதவும் நன்மையுடையான் இடத்து செல்வம் உண்டாகுமானால், பயன் தரும் மரம் ஊர் நடுவில் பழுத்துள்ளது போன்றது ஆகும் எனச் சொல்கிறது.
  • 217 ஆம்குறள் செல்வமானது பெருந்தன்மை யுடையவனிடத்து உண்டாகுமானால், அது எல்லோர்க்கும் கிடைக்கக்கூடிய மருந்து மரத்துக்கு ஒப்பாகும் எனக் கூறுகிறது.
  • 218 ஆம்குறள் ஒப்புரவுக் கடமையை உணர்ந்த அறிவுடையார் உதவும் வாய்ப்பு இல்லாத போதும் பொதுநலம் குறையார் என்கிறது.
  • 219 ஆம்குறள் செய்யத்தக்க பொதுநலப் பணிகளைச் செய்ய இயலாதநிலையில், ஒப்புரவு செய்யும் நன்மையை உடையான் வறியன் ஆகிறான் எனக் கூறுகிறது.
  • 220 ஆவதுகுறள் பொது நன்மைக்கு உதவுதலினால் கேடு வருமானால் அதை ஒருவன் விலை கொடுத்தும் ஏற்றுக் கொள்க என்கிறது.

 

ஒப்புரவறிதல் அதிகாரச் சிறப்பியல்புகள்

ஒப்புரவாளன் மாற்றுதவி எதிர்பாராமல் உதவுகிறான் எனச் சொல்லவந்த வள்ளுவர் அப்பண்பை மழைக்கு உவமித்து கைம்மாறு வேண்டாக் கடப்பாடு மாரிமாட்டு என்ஆற்றும் கொல்லோ வுலகு) என்ற பாடலில் (குறள் 211) கூறுகிறார். மேகத்தைவிட ஒப்புரவிற்கு வேறு என்ன சிறந்த எடுத்துக்காட்டு கூறமுடியும்?

தம்மைப் போன்று பிற உயிர்களையும் கருதி உதவுபவனே உயிர் வாழ்பவன்; மற்றவர் இறந்தவாரகவே எண்ணப்படுவர் என்று ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான் செத்தாருள் வைக்கப் படும் ஒரு பாடல் (குறள் 214) கூறுகிறது. பெரும்பான்மை மாந்தர் ஒப்புரவு பற்றி அறிந்திருக்கவில்லை என்பது உண்மை. அவர்களெல்லாம் நடைப்பிணம்தாம் என மனச்சான்றைக் கிளறி ஒப்புரவாற்றச் சொல்லுகிறார் வள்ளுவர்.

இவ்வதிகாரத்திலுள்ள 215, 216, 217 எண் கொண்ட மூன்று குறள்கள் ஒப்புரவின் படிநிலைகளைக் காட்டுவதாக அறிஞர்கள் கொள்வர். முதல் நிலையில் ஒப்புரவை நன்கு அறிந்தவன் ஊருணி (குறள் 215) போல் தான் சேகரித்ததைப் பொது நன்மைக்குக் கொடுப்பான். அடுத்த நிலையில் அன்புள்ளம் கொண்ட நயனுடையான் கனிந்த பழங்கள் கொண்ட மரம் (குறள் 216) போல தன்னில் ஒரு பகுதியைக் கொடுப்பான். மூன்றாவது நிலையில் ஒப்புரவின் எல்லை கண்ட பெருந்தகையான் அறிவு அன்பு என்பவற்றையும் கடந்து மருந்துமரம் போல (குறள் 217)அருள் வடிவாக நின்று தன்னிடம் சேர்ந்ததையும் தன்னில் ஒரு பகுதியையும் கொடுப்பதோடு தன்னையே முழுவதுமாகப் பிறர்க்குக் கொடுப்பான். இம்மூன்று உவமங்களும் ஒப்புரவு பயனளவில் வேறுபடுவது செல்வத்தின் அளவையும் ஒப்புரவாளரின் குறிக்கோளையும் பொறுத்ததாகும் என்பதைக் குறிக்க என்பர்.

ஒப்புரவுப்பணி செய்வதால் பல வசதிக் குறைவுகளும் ஏன் கெடுதிகளே உண்டாக வாய்ப்புக்கள் மிகைதான். இதன் காரணமாக பொதுநன்மை செய்வதைத் தவிர்க்காதே என்று சொல்வதற்காக 'உன்னை விற்றுக் கூட அக்கேடுகளைப் பெற்றுக் கொள்; ஆனால் ஒப்புரவு செய்வதை நிறுத்தாதே' என ஊக்கமளிப்பது ஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன் விற்றுக்கோள் தக்கது உடைத்து என்ற பா (குறள் 220). தன்னை விற்பது மிகவும் இழிவான செயல் என்றாலும் அந்த இழிவை ஏற்றுக்கொள் என்கிறார் வள்ளுவர். அரிச்சந்திரன் தன்னையே இடுகாட்டுக் காவலனுக்கு விற்றுக்கொண்டு உண்மைபேசுதல் என்ற ஒப்புரவு காத்ததுபோல், ஒப்புரவுக்காக இழிவை எதிர்நோக்கலாம். என்கிறது இப்பாடல்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard